“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆனையில்லா கதையை இணையத்தில் தேடினேன். இந்த வீடியோ அகப்பட்டது
கிருஷ்ணன் ஈரோடு
அன்புள்ள ஜெ
ஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அது ஒரு குறியீடு. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. கையாளமுடியாத பெரியது என்ற அர்த்ததிலே அங்கே அந்த சொல்லாட்சி உள்ளது
ஆனால் இணையத்திலே தேடினால் அந்த மாதிரி வீட்டுக்குள் யானை நுழைவதும் மாட்டிக்கொள்வதும் மிகச்சாதாரணமாக நடந்திருக்கின்றன. ஏராளமான போட்டோக்களும் வீடியோக்களும் உள்ளன. அனேகமாக எல்லா ஊரிலும் நடந்திருக்கும் என நினைக்கிறேன்
அது ஏன் என்று வாசித்தேன். யானைக்கு உண்மையிலேயே மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற கியூரியாசிட்டி உண்டு என்றும் ஆகவேதான் கட்டிடங்களுக்குள் புகுந்து இயல்பாக உலாவுகிறது என்றும் நகரங்களுக்குள் உலாவுகிறது என்றும் சொல்கிறார்கள்
இன்னொரு கருத்தும் உண்டு. யானையின் நாக்குக்கு மனிதர்கள் விரும்பும் பொருட்களே சுவையாக இருக்கின்றன. மாவு, வெல்லம் போன்றவை. சமீபத்தில் எங்கள் கோவைப்பக்கம் ஒரு யானை பரோட்டா கடையில் நுழைந்து சூடான பரோட்டாக்களை எடுத்து தின்னும் வீடியோ வந்தது. பிறகு பரோட்டா மாவையும் அள்ளி தின்றுவிட்டு போகிறது
சக்தி
பூனை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பூனை சிறுகதையை இந்த வரிசையில் வந்த ‘பெர்ஃபெக்ட்’ ஆன சிறுகதை என்று சொல்லலாம். எந்த பிரயாசையும் இல்லாமல் சூழலை, கதாபாத்திரங்களைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று நாம் யோசிப்பதற்குள் எல்லாமே நடந்து நாம் அதற்குள் இருக்கிறோம். கோயிலை நம்பி வாழும் நத்தானியேல். வயிறுபுடைக்கச் சாப்பிட்டாலே அவன் அடையும் போதை. அங்கே வரும் பெரியவீட்டு கேசவன் தம்பியின் பதற்றமும் பொருளாசையும்.
அப்படியே செல்லும் கதை புலியில் உச்சம்கொள்கிறது. அதன்பின் எல்லாமே அபத்தம். ஒருவாய் சோற்றுக்கு இல்லாதவனுக்கு அது புலி. பெரியமனிதர்களுக்கு பூனை. சின்னப்பையனுக்கு புலி. கிழவர்களுக்கு பூனை. புலியை பூனையாக ஆக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புலியாவது ஒன்றாவது.
அந்தச் சூழல் உரையாடல் வழியாகவே விரிவது அசாதாரணமான ஓர் அனுபவத்தை அளிக்கிறது. எனக்குத்தெரிந்து தி.ஜாதான் உரையாடலிலேயே கதையைக் கொண்டுபோவார். உரையாடலில் கதை நகர்வது ஒரு பெரிய அழகு. சரோயன், ஹெமிங்வே,ரேமண்ட் கார்வர் எல்லாரும் உரையாடலில் கதை கொண்டுசெல்பவர்கள். ஏனென்றால் சொன்னது மட்டும்தான் கதையில் இருக்கும். சொல்பவரின் மனநிலை. அந்த சந்தர்ப்பம் எல்லாமே வாசகனின் கற்பனையில் விரியும். அது ஒரு மிகச்சிறந்த உத்தி. குறிப்பாகச் சிறுகதைக்கு
எஸ்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
பூனை சிறுகதையை வாசித்தபோது எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. அந்தப் புலி இருப்பது அவர்களின் பழைய காலத்தில். இருண்ட தூசுபிடித்த காலத்தில். தலைக்குமேல் இருக்கும் புதைந்த காலம். அங்கிருந்துதான் அந்த குத்துவிளக்குகளை எடுத்தபின் திரும்பக்கொண்டு சென்று வைக்கிறார்கள். அந்த புதையலுக்குத்தான் மூன்று பூதங்களும் காவலிருக்கின்றன
அந்தப் புலி அவர்களுக்கு இன்றைக்கு பூனைதான். அதை அடித்தும் செம்பால் எறிந்தும் துரத்துகிறார்கள். அதற்கும் போக்கிடம் இல்லை. மற்றவர்களுக்கு அது புலி. அவர்களுக்கு அதை புலியாகப் பார்க்கவே முடியாது. ஒருவேளை அவர்கள் கனவுகண்டால் அதில் அது புலியாக வந்தாலும் வரும் இல்லையா?
மகாதேவன்