விலங்கு [சிறுகதை]

மார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன்.

“சக்கப்பாறையா? இங்கயா?” என்று கேட்டார் அங்கிருந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர்.

“இங்க எல்லா பாறையும் சக்கைப்பாறைதானேடே” என்றார் உள்ளிருந்த வயதான ஏட்டு.

“இங்க அப்டி ஓரெடமும் இல்ல” என்றார் போலீஸ்காரர்.

நான் “ஆளு ஆரையாவது அனுப்பினா நல்லது. செலவ பாத்துக்கிடலாம்” என்றேன்.

போலீஸ்காரர் திரும்பி ஏட்டை பார்த்தார். அவர் தலையசைத்தார். “இங்கிண சாயை, பேப்பர் மத்த சிலவுகளுக்கு மேலேருந்து ஒண்ணும் வாறதில்லை” என்றார் போலீஸ்காரர்.

நான் இரண்டாயிரம்ரூபாய் தாளை எடுத்து நீட்டி “இது இருக்கட்டும்… ஒரு அவசியத்துக்கு உண்டான பைசா தானே?” என்றேன்.

ஏட்டு முகம் மலர்ந்து  “சாருக்கு எந்த ஊரு?” என்றார்.

“நாகர்கோயில். ஆசாரிப்பள்ளம்”.

“நம்ம மச்சினன் ஒருவன் அங்க மெடிக்கல் காலேஜிலே கிளார்க்காக்கும்”

“நான் அங்கதான் டாக்டராட்டு இருக்கேன்”

அவர் “உள்ளதா?”என்றார். இரண்டாயிரம் ரூபாய் தாளை திரும்பத் தருவதா என்று அவர் தயங்குவது தெரிந்தது.

“என்ன அவசியமிருந்தாலும் வாங்க, அங்க நெல்சன் ஞானத்துரைன்னு சொன்னா நம்மள சொல்லுவாக”.

அவர் முகம் மலர்ந்து “நான் இடைக்கிடைக்கு வாறதுண்டு… நம்ம சில சொந்தக்காரங்களுக்கு அங்கிண ஆப்பரேசன் நடந்திருக்கு”என்றார். போலீஸ்காரரிடம் “டேய் சவரி, சிண்டனோ கூமனோ அங்கிண இருந்தா விளிலே” என்றார்.

நான் “வலிய உபகாரம்” என்றேன்.

“நம்ம பேரு எசாக்கியேல்ணாக்கும்… நெய்யூரிலே வீடு. பிள்ளைய அங்கிணதான் படிக்காவ”என்றார்.

சவரி என்னிடம் “வாங்க சார்” என்று கூட்டிச்சென்றார். “உள்ளதச்சொன்னா எங்களுக்கு இந்த ஊரிலே ஒரு மண்ணும் தெரியாது. இந்நா இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைய விட்ட்டு வெளியே போறதில்லை. எப்டி போவ? பச்சைக்காடுல்லா? நட்டுச்சைக்கு ஆனையெறங்கும் பாத்துக்கிடுங்க. இங்க எல்லாமே இந்த காணிப்பயக்கதான். சட்டம் ஒளுங்கு அரெஸ்டு எல்லாமே அவனுகதான். ஆனா இங்க அப்டி பிரச்சினைன்னு ஒண்ணு இல்ல. ரோட்ட பாத்துக்கிடணும், அம்பிடுதான்…டேய் முத்தா,மத்தவன் எங்கலே?”

மற்றவன் என்று சொல்லப்பட்டவன் ஒரு சிறுவன் என்று தொலைவில் பார்த்தபோது நினைத்தேன். பக்கத்தில் வந்தபோது தெரிந்தது, அவனுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். முகத்தில் ஏராளமான சிறு பருக்கள். ஓரிரு முடிகளே மீசை தாடி என இருந்தன. சுருட்டையான தலைமுடி. அகன்ற பெரிய உதடுகள். மின்னும் மான்கண்கள்.

“இவனாக்கும் இங்கிண காட்ட நல்லா தெரிஞ்சவன். கூமன்னு பேரு. டேய் கூமா, சார அவரு கேக்குத எடத்துக்கு கூட்டிட்டுப்போ”

நான் கூமனிடம் “பைசா தாறேன்” என்றேன்

“சில்லறை குடுத்தாபோரும் சார் இவனுகளுக்கு ” என்றான் சவரி

நான்  “செரி” என்றேன்

“அந்த ரெண்டாயிரத்திலே நமக்கு ஒண்ணும் கண்ணிலே காட்ட மாட்டாரு”

நான் அவனுக்கு ஐநூறு கொடுத்தேன். முகம் மலர்ந்து “இத அவரு அறியவேண்டாம்…” என்றான்

“செரி” என்றேன்

அவன் போனபின் நான் கூமனிடம் “நான் சக்கப்பாறைக்கு அந்தாலே மூளன்குந்நுக்காக்கும் போகணும்” என்றேன்

அவன் கண்களில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லை

“அங்க முட்டன்னு ஒருத்தரை பாக்கணும்… பூசாரியாக்கும்”

அவன் தலையசைத்தான்

“வளி தெரியுமா?”

அவன் அதற்கும் தலையசைத்தான்

நான் அவனுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தேன். அவன் அதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாங்கிக்கொண்டான்

“நடந்துபோலாம்ல?”

“தோனே நடக்கணும்”

“ஓ, எவ்ளவு தூரம்?”

“அந்தியாவும்”

“ஓ…அங்க தங்க முடியுமா?”

“குடியிலே தங்கணும்”

“அங்க காணிக்காரர் குடி இருக்கா?”

“இல்லை. பூசாரிக் குடி இருக்கு”

“செரி, அங்க தங்குவோம்” என்றேன். குடிநீர் என்னிடமிருந்தது. அவசியமான உணவும், படுப்பதற்கு துயில்பையும் போர்வையும் இருந்தன. காட்டுக்குள் இருக்கத் தேவையான எல்லாவற்றையும் பையில் வைத்திருந்தேன்

“கார் இங்க நிக்கட்டும்” என்றேன்

சவரி  “நிக்கட்டும்சார்… ஒண்ணுமில்லை” என்றான்

நான் கூமனுடன் நடந்தேன். அவன் என் பையை வாங்கிக்கொண்டான். அவன் மிக இயல்பாக மூச்சிளைக்காமல் நடந்தான். எனக்கு மூச்சு இறுகி நெஞ்சை அடைக்கச் செய்தது

மலைப்பாதை இருபக்கமும் செறிந்த பசுந்தழைகளுக்கு நடுவே ஈரமான மண்ணுடன் இருந்தது. இலைகளில் சிறிய சுண்டுபுழுக்கள் இருந்தன. பச்சைத்தழைகள் வெயிலில் வாடும் மணம். காடெங்கும் நீராவி நிறைந்திருந்தது. நள்ளிரவின் ரீங்காரம் உள்காட்டுக்குள் ஒலித்தது.

“இங்க அட்டை உண்டா?”

“இப்பம் இல்லை. மளையிலே வரும் ”

அவன் எனக்கு ஒரு இலையை பறித்துத் தந்தான். “தின்னா சீணம் மாறும்”

அதைப்பற்றி நான் கேட்டிருந்தேன். காணிக்காரர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் அதை மேஜிக் பச்சை என்பார்கள்.

அதை மென்று தின்றபோது வாய் முறுமுறுப்பாக இருப்பதுபோலிருந்தது. பச்சைவெற்றிலையை மென்றதுபோல. ஆனால் சற்றுநேரத்திலேயே களைப்பு குறைந்துவிட்டது. உண்மையிலேயே களைப்பு போய்விட்டதா, அல்லது என் மனமயக்கமா? என் மூச்சிளைப்பு நின்றுவிட்டதை உணர்ந்தேன்.

வழியில் ஒரு சரிவான பாறையில் அமர்ந்தோம். செம்மண் இறுகி உருவான பாறை தசைக்கதுப்பு போலிருந்தது. மேலிருந்து நீர் ஊறி அந்தப்பாறை வழியாக கசிந்து இறங்கி ஓடையாகி கீழே சென்று எங்கோ புதர்களுக்குள் அருவிபோல ஓசையிட்டு விழுந்தது. அங்கே வெயில் நன்றாக இறங்கி கண்களைக் கூசவைத்தது. சூழ்ந்திருந்த காட்டில் காற்று ஒழுகும் ஓசை.

ஒரு சிறுநரி அங்கே வந்து எங்களைப் பார்த்து பதுங்கியது. பெருச்சாளி போன்ற கண்களால் என்னைப் பார்த்தது

“குறுக்கன்” என்றான் கூமன்

“கடிக்குமா?”

“கடிக்காது”

நரி அதன் எல்லையை நாங்கள் கடப்பதை வந்து பார்த்துவிட்டுச் சென்றதா? காட்டின் கண்களாக பல்லாயிரம் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா? அல்லது அது நரிதானா?

‘அது நரியா இல்ல சாமியா?” என்றேன்

அவன் திரும்பி பார்த்துவிட்டு “நரி” என்றான்

அவனுடைய பதில்கள் மிக நடைமுறைத்தன்மை கொண்டிருந்தன. அவன் எழுந்தபோது நானும் எழுந்தேன். அவனிடம் பேசவேண்டும் என்று திட்டமிட்டேன்.

“இந்தவழியே ஆட்கள் வருவதுண்டா?”

”மேலே அயினிமூட்டுத்தம்புரான் கோயில் உண்டு”

“அங்கே என்னைப்போல ஊர்க்காரர்கள் போவதுண்டா?”

“இல்லை”

நான் அவனிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது என்ற எண்ணத்தை அடைந்தேன்.

“நான் முட்டன்பூசாரியை பாக்கணும்”

“அவரு மேலே உண்டு”

“அவர நீ பாத்ததுண்டா?”

“ஆமா”

“அவர தேடி என்னைமாதிரி ஆளுகள் வந்தது உண்டா?”

“இல்லை” என்றான்

நான் மேலும் அவனிடம் பேசவிரும்பினேன். ஆனால் என்ன கேட்பது என்று தெரியவில்லை.

“முட்டன்பூசாரி கிட்டே நீங்க போறதுண்டா?”

“இல்லை. முட்டன்பூசாரி எங்க குடிக்கு நிசித்தம்”

“ஏன்?”

“அவன் செங்கிடாய்க்காரனுக்க  பூசாரியாக்கும்..”

“அதனாலே?”

“செங்கிடா குடுப்போம். பிறவு போக மாட்டோம்”

இவனிடமிருந்து எதுவும் கிடைக்காது என்று புரிந்துகொண்டேன்

”முட்டன்பூசாரிக்கு எவ்ளவு வயது இருக்கும்?”

“நெறைய… பாறைமாதிரி வயசு”

“எவ்ளவு நாளா அங்க இருக்கார்?”

“மலையிலே பாறை இருக்குல்லா? அதை மாதிரி”

நான் பெருமூச்சு விட்டேன்

ஒரு மலையோடை குறுக்கே மிகவிரைவாக சென்றது. அதை நான் அவன் கையைப்பிடித்து கடந்தேன். பாசிபடிந்து வழுக்கும் செங்குத்தான பாறை ஒன்றின்மேல் தொற்றி மேலேறினேன். அதற்கு அப்பால் சரிவு. மீண்டும் ஒரு காடு. ஆனால் மிகச்செறிந்தது. பச்சை யானைப்பிண்டங்களைக் கண்டேன். ஒரு மான்கூட்டம் செவி விடைத்து இறுகப்பூட்டிய வில்லின் அம்புகள் போல நின்று எங்களைப் பார்த்தது. நான் ஒரு கல்லில் மிதித்து அது உருண்டபோது அம்புகள் பறந்தன

அவன் ஒரு பாறையைக் காட்டி  “அதாக்கும்”என்றான்.

அந்தப்பாறை செங்குத்தாக எழுந்து வளைந்து நின்றது. அதன்மேல் மண்படிவு, அதில் சிறிய மரங்கள் நின்றன. செம்மண்நிறமான பாறை. ஆற்றங்கரையில் நீர் அரித்த சேற்றுப்பரப்புபோல அதில் பலவகையான வழிவுகளின் வடிவங்கள். சிவப்புத்தீற்றல்கள். காவிப்பட்டைகள்..

‘என்ன?” என்றேன்

“அந்தக் குகை”

“குகையா? குடி என்றாய்?”

‘குகையும் குடிதான்… முட்டன் குடி அது”

”வா காட்டு”

‘இதுக்குமேலெ நிசித்தம்”

நான் அவனை பார்த்தேன். அவன் வற்புறுத்தினால் வரமாட்டான் என்று தெரிந்தது

“போகமுடியுமா?”

“வளி உண்டு”

நான் அவனிடம் “நீ நாளைக்கு காலை இங்கே வா” என்றேன். அதன்பின் என் தோள்பையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு நடந்தேன்.

கூமன் பின்னால் அங்கே நின்றிருக்கிறான் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே ஒருமுறை திரும்பிப் பார்த்தபோது அவன் இல்லை என்பது என்னை திடுக்கிடச் செய்தது. அதோடு என்னிடம் அச்சம் ஊறத்தொடங்கியது. அதுவரை அச்சமே இருக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எவ்வகையிலும் கற்பனைசெய்திருக்கவில்லை.

அந்தக் குகை மலைச்சரிவில் ஒரு தசைமடிப்பு போல தெரிந்தது. அல்லது மீனின் வாய்போல. அதற்குள் பெரிய தேன்கூடுகள் தொங்கின. மாட்டின் உடலில் உண்ணிகள் தொங்குவதுபோல. அங்கே எழுந்த தேனிக்களின் ரீங்காரம் கீழே கேட்டது.

மேலே செல்ல படிகள் இல்லை. தொற்றி ஏறவேண்டும். நான் கொஞ்சம் தயங்கினேன். ஆனால் ஏறியபோது பாறையின் சொரசொரப்பு நன்றாகவே என்னை பற்றிக்கொண்டது. காற்றில் அரித்தபாறை

மேலே சென்று நின்றபோது மூச்சுவாங்கியது. நான் நினைத்ததை விடப்பெரிய குகை. பத்து ஆள் உயரமிருக்கும். மேல் வளைவில் தேனீக்களின் ரீங்காரம். தரையில் பிய்ந்துவிழுந்த தேனீக்கூடுகள் மிதிபட்டு அரைந்து கிடந்தன. தேன்மெழுகின் மணம்

அங்கே எவரும் இருப்பதாகத் தெரியவில்லை

“சார்!” என்றேன். அதன் அபத்தத்தை உணர்ந்து “ஐயா!” என்றேன்.”சாமீ!” என்று மாற்றிக்கொண்டேன்

குகை மிக ஆழமானது என்று தெரிந்தது. இரு கிளைகளாக பிரிந்து இருட்டாக மடிந்து உள்ளே சென்றது. அதற்குள் மேலிருந்து கூம்புகளாக சுண்ணாம்புப்பாறை முனைகள் தொங்கின. குட்டிபோட்ட நாயின் முலைகள் போல.

“ஆரு?”

மிக அருகே குரல்கேட்டது. நான் திடுக்கிட்டு திரும்பினேன். “நான்…”என்றேன்

அவர் நான் எண்ணியதுபோல இல்லை. பழங்குடிப் பூசாரி என்னும்போது நம்மிடம் ஒரு பிம்பம் உருவாகிறது. அவர் சவரம் செய்திருந்தார், மூன்றுநாள் தாடிதான். பெரிய வளைவுமீசை. சாதாரணமான பாலியெஸ்டர் சட்டை, நீலச்சாயவேட்டி. காலில் ரப்பர் செருப்பு. கையில் எச்.எம்.டி வாட்ச்.தலையில் ஒரு சிவப்பு முண்டாசை காதுமறைய சுற்றிக் கட்டியிருந்தார். அது ஒன்றுதான் அவரை உள்ளூர்ச் சந்தையில் ஒரு சாதாரண வியாபாரியோ தரகரோ அல்ல என்று காட்டியது

அந்த தோற்றம் எனக்கு ஆறுதலூட்டியது. ‘என்பேரு நெல்சன். நான் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே நியூரோ டாக்டர். சைக்காலஜியும் உண்டு. நியுரோன்னா—”

‘நரம்புமண்டலத்தப்பத்தி… சைக்காலஜிக்கும் இப்பம் அதிலதானே எடம்?”

“நீங்க படிச்சிட்டுண்டா?”

”அங்க இங்க படிக்கதுதான்”

“முன்னாடி இங்க வந்த ஒருத்தர் உங்களைச் சந்திச்சதைப் பத்தி எழுதியிருக்காரு. அவருக்க ரிப்போர்ட்டை பாத்துத்தான் நான் அறிஞ்சேன்.. பாத்திடலாம்னு தோணிச்சு”

“தேடி வந்ததுக்கு சந்தோசம்…. உக்காருங்க” என்றார்

“இங்கயா இருக்கீங்க?”

“இது நல்ல எடம்தான். உள்ள கயித்துக் கட்டிலு போட்டிருக்கேன். நீங்க இண்ணைக்கு போக முடியாதுல்லா?”

“ஆமா, நான் ஸ்லீப்பிங் பேக் வச்சிருக்கேன்”

“இங்க இன்னொரு கம்பிளியும் நாடாக்கட்டிலும் உண்டு. மடக்கி வச்சிருக்கேன். சௌகரியமாட்டு இருக்கலாம்… இறைச்சி திம்பியளா?”

“சாப்பிடுவேன்”

“ஒரு காட்டுமுயலை பிடிச்சு கட்டிபோட்டிருக்கேன். சமைச்சு குடுக்கேன். கிளங்கும் இருக்கு. சுட்டிடலாம்… சௌகரியமா இருங்க”

நான்  “சௌகரியம்தான்” என்றேன், மேலே தேனீக்கூடுகளைப் பார்த்தேன்

“அது விளாத எடம் உள்ள இருக்கு… வாங்க”

உள்ளே உண்மையாகவே நல்ல பாதுகாப்பான இடம் இருந்தது. ஏதோ பழைய பள்ளிவாசலின் டோமுக்கு கீழே இருப்பதுபோல தோன்றியது. அங்கே தரையும் சமமாக இருந்தது

”நானே செத்தி சமமாக்கினதாக்கும்” என்றார்

நைலான் நாடாக்கட்டில் ஒன்று படுக்கை தலையணை விரிப்புடன் இருந்தது. இன்னொன்று சாற்றி வைக்கப்பட்டிருந்தது. அருகே சிவப்பு பிளாஸ்டிக் வாளி, கோப்பை. ஒரு பிளாஸ்டிக் குடுவையில் குடிநீர். ஒரு சின்ன டிரான்ஸிஸ்டர் ரேடியோ

“ரேடியோ எதுக்கு?

‘”மளையப்பத்தி சொல்லுதான்லா? நான் பாட்டும் கேப்பேன்”

“இங்க தனியா இருக்கேரா?”

‘தனியாட்டுண்ணா… தனிதான்”

நான் குகையின் உள்வழியை பார்த்தேன். ‘இந்தக்குகை எம்பிடுதூரம் போவுது?”

”அது போவுது ரொம்பதூரம்… ஒரு ராத்திரி போற தூரம்”

“ராத்திரிண்ணா?”

”குகைக்குள்ள எப்பமுமே ராத்திரிதான்…. ஆயிரம் வருச ராத்திரி. கோடிவருச ராத்திரி”

“முன்னாடி சண்முகதாஸ் வந்தப்ப உங்கள பாத்திருக்காரு”

“ஆமா, நல்ல மனுசன்… போயிட்டாரு இல்ல”

“ஆமா, எப்டி தெரியும்?’

“ஆரோ சொன்னாங்க”

“இங்க என்ன சாமி இருக்கு?” என்றேன்

“செங்கிடாய்க்காரன்னு ஒரு சாமி… பல எடங்களிலேயும் உள்ளதுதான். ஆனா அது ஒரிஜினலாட்டு காணிக்காரர் சாமியாக்கும். கந்தபுராணத்திலே நாரதர் வேள்வி செய்றப்ப மந்திரம் தவறிப்போச்சு. அப்ப யாககுண்டத்திலே இருந்து ஒரு செங்கிடா கெளம்பி வந்திச்சு. அதை ‘ஆடலந் தொழில் மேற்கொண்ட அனைவரையும் இரியச்செய்யும் மேடம் அஞ்சுறவே ஆர்த்து விரைந்துபோய்’னு கச்சியப்பர் சொல்லுதாரு”

“செங்கிடாய்னா?”

“கிடாதான். ஆடுதான்.. மேசம்னு சொல்லுதார்லா? மேசம் அக்னிக்க வாகனமாக்கும். அக்னிநெறம் உள்ளது. சுருண்ட கொம்பும் நீளக்காதும் தீமாதிரி பிடரிமயிரும்னு வர்ணனை…ஒரே சாமிதான். ஓரோ சாதியும் ஓரோ பெயரிலே கும்பிடுதானுக. பளைய எகிப்திலே க்ஹ்னும்னு பேரு. அராமிக்லே பாபோமெட்னு சொல்லுவாங்க. சம்ஸ்கிருதத்திலே அஜமுகன், நைகமேஷன்னு பல பேருகள் உண்டு” என்று அவர் சொன்னார். அதுக்கு இங்க ஆண்டுக்கொருமுறை காணிக்காரனுக செங்கிடாய பலிகுடுப்பாங்க”

“மத்தநாளிலே…”

“மத்த நாளிலே ஆரும் வாறதில்லை. நான் மட்டும்தான்”

நான் எழுந்த கேள்வியை எப்படி கேட்பது என்று எண்ணுவதற்குள் அவரே சொன்னார். “இங்க இருக்கதுக்கு நமக்கு ஒரு காரணம்  இருக்கு…அதை நான் சொல்லமுடியாது. இங்க இருக்கேன், அம்பிடுதான். உங்க கேள்விய கேளுங்க”

“நீங்க செங்கிடாய்க்காரனை உபாசனை பண்ணுதீகளா?”

“அதை கேட்கப்பிடாதுன்னு சொன்னேன்லா?”

“செரி” என்றேன். “உண்மையிலே நான் கேக்கவந்தது ஒடிங்குத வித்தையப் பத்தியாக்கும். இங்க படிப்பும் அறிவும் இல்லாத ஒரு வயசான பூசாரி இருப்பாருண்ணு நினைச்சேன்… நீங்க இருக்கதிலே சந்தோசம்”

“என்ன ஆராய்ச்சி? பிஎச்டியா?”

‘இல்லல்ல, நான் எம்டி வாங்கியாச்சு. இது ஒரு புக்குக்காக” என்றேன். “நான் பல சைக்காலஜி கேஸ்களை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறப்ப ஒண்ணு கண்டுபிடிச்சேன். மனுஷ மனசுக்கும் விலங்குகளுக்கும் ரொம்ப தொடர்பு இருக்கு. பல பேஷண்டுகள் அவங்களை ஏதாவது மிருகமா கற்பனைசெய்துகிடுதது உண்டு. ஆடு ,மாடு,நாயி,நரி இப்டி… இது ஏன்னு நான் ஆராய்ச்சி செஞ்சேன். அப்ப ஒரு கருத்து வந்தது. ஒவ்வொரு மிருகத்துக்கும் அதோட வடிவத்திலேயே ஒரு பேசிக் ஐடியா இருக்கு. அதாவது ஒவ்வொண்ணும் ஒரு ஆர்க்கிடைப்பு.. அதாவது…”

“ஒரு சாமி மாதிரி…”

“ஆமா… கதையிலேகூட அப்டித்தானே? நரி தந்திரமானது. புலி வீரமானது. குதிரை பலமானது. இப்டி… அந்த மாதிரி மனுஷன் கற்பனை செய்துகிட்டான்னு சொல்லலாம், ஆனா அப்டி கற்பனை செய்யுறதுக்குண்டான ஒரு அம்சம் அந்த மிருகங்களிலே இருக்கு. அதாவது அது வெறும் கற்பனை இல்லை. அந்த மிருகங்கள் உண்மையிலேயே அந்த குணாதிசயங்களோட உடம்புவடிவங்கள்தான்… நான் சொல்றத செரியா சொல்றேனா?”

“சொல்லுங்க… நான் வாற வரைக்கும் வாறேன்”

“மிருகங்கள் மனுஷ மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிட்டே இருக்கு. சொல்லப்போனா மனுஷமனசுங்கிறதே மிருகங்களோட பதிவுகளாலே உருவானதுதான்… பளைய குகை ஓவியங்களிலே எல்லாமே மிருகங்கள்தான் இருக்கு. மனுஷன் அதைப் பாத்துட்டே இருந்திருக்கான். அதையே வரைஞ்சிருக்கான். மிருகமா வேசம்போட்டு நடிச்சிருக்கான், ஆடியிருக்கான். இப்பகூட மனுசன் பண்ணிக்கிடுத அலங்காரங்களிலே முக்காவாசி மிருகங்களோட சில அம்சங்களை தனக்கும் சேத்துக்கிடுததுதான். கம்பிளிச்சட்டை போட்டுகிடுதது, குல்லா போட்டுக்கிடுதது… மனுஷனோட நடனம் நாடகம் எல்லாமே மிருகம் மாதிரித்தான். புலி சிங்கம் குதிரை மான்… அப்டி பலதும்…”

“ஆமா” என்று சிரித்தார் “பொண்ணையே மான் மயிலுண்ணுதானே வர்ணிக்கானுக”

“மிருகங்கள்தான் மனுஷமனசு… அதிலே எல்லா மிருகமும் இருக்கு. ஏதாவது ஒரு மிருக அம்சம் கூடுறப்ப அந்த மனுசன் அந்த மிருகமா ஆயிடறான்”

“சொல்லுங்க”

“அதுவரைக்கும் ஓக்கே. ஆனா நான் ஆராய்ச்சி செஞ்சப்ப அப்டி ஒரு மனுசன் ஒரு மிருகமா ஆயிட்டான்னா அவனோட நரம்பு சிஸ்டமும் அப்டியே கொஞ்சம் மாறிடுதுன்னு கண்டுபிடிச்சேன். அதாவது ஒரு மனுஷன் மூளையளவிலே கொஞ்சம் குதிரையா ஆகமுடியும்…ரொம்பக் கொஞ்சம்தான். ஆனா அது நடக்குது, அதை அடையாளம்காண முடியும்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை

“ஆனாஅதை நான் சொல்ல ஆரம்பிச்சப்ப என்னோட மதிப்பு போயிடுச்சு. எனக்கு சயன்ஸ் உலகிலே எடமே இல்லேன்னுட்டாங்க. ஆனா எனக்கு அங்க நிறுத்த முடியலை. மேலேமேலே ஆராய்ச்சி செஞ்சிட்டே இருந்தேன். அப்பதான் சண்முகதாஸ் எளுதின குறிப்புகள் கிடைச்சுது. அவரு அ.கா.பெருமாள் சாரோட ஸ்டூடண்ட். அ.கா.பெருமாள் சார்தான் அந்த பேப்பரெல்லாம் வாங்கி எனக்கு குடுத்தார். அதிலே உங்களைப்பத்தி சொல்லியிருந்தார்”

“உங்களுக்கு என்ன தெரிஞ்சுகிடணும்?”

“காணிக்காரங்களுக்க மந்திரவாதத்திலே ஒடீன்னு ஒரு மந்திரவாதம் உண்டு. ஒடி, மந்திரவாதி சில உபாசனைச் சடங்குகள் வழியாட்டு ஒரு மிருகமா ஆயிடுறது’

“ஆமா”

‘அப்டி ஒண்ணு உண்டா?”

“உண்டு” என்றார்

நான் காத்திருந்தேன்

அவர் ஒன்றும் சொல்லவில்லை. ”முயலை சமைக்கட்டுமா?” என எழுந்தார்

நான் அவர் குகைக்குள் சென்று முயலை கொன்று எடுத்து வருவது வரை காத்திருந்தேன். உரித்த முயல் அவர் கையில் ஒரு செந்நிற பிளாஸ்டிக் பை போல தெரிந்தது.

அவர் குகையின் ஓரத்தில் இருந்த அடுப்பில் எரியாது எஞ்சிய விறகை தட்டி கரி களைந்து அடுக்கினார். அதை பற்றவைத்து சிறிய கமுகுப்பாளை விசிறியால் விசிறி அனலெழுப்பினார். அதன்மேல் ஒரு கருங்கல்லை வைத்தார். அனலில் கல் சூடாகத் தொடங்கியது. அவர் முயல்மேல் உப்பும் மிளகுத்தூளும் பூசினார்

“இதெல்லாம் எங்க வாங்கிவீங்க?”

‘நான் வாரம் ஒரு தடவை கீளப்போவேன். அங்க ஒரு சின்ன கடை உண்டு..” என்றார் அங்க நமக்கு நெறைய ஃப்ரண்டு உண்டு”

அவர் முயலைக் கல்மேல் வைத்து இன்னொரு கல்லால் மூடினார். “அதுக்க நெய்யிலேயே வெந்திரும்” என்றார்

உள்ளிருந்து என் தொடை அளவு பெரிய இரு மரவள்ளிக்கிழங்குகளை எடுத்துவந்து மண்ணை தட்டிவிட்டு அனலருகே வைத்தார்.

நான் “நீங்க ஒடி வித்தை செய்யுகதுண்டா?” என்றேன்

“உண்டு”

“எப்டி?”

“உங்களுக்கு என்ன தெரிஞ்சுகிடணும்?”

“ஒடி எப்டி செய்வாக?”

“ஒடிய எல்லா மிருகத்துக்கும் செய்யமுடியாது. எந்த மிருகத்துக்கு ஒடி எடுக்கோமோ அதை உபாசிக்கணும். உபாசனைன்னா அதையே சாமியா கும்பிடணும்.வேற நினைப்பே இல்லாம இருக்கணும். மனசையும் உடம்பையும் முளுசா அதுக்கு குடுக்கணும்… அப்பம் அந்த மிருகமா அவன் ஆகத்தொடங்குவான். கொஞ்சம் கொஞ்சமாட்டு ஒடி கைவசப்பெடும்”

“நினைச்ச நேரத்திலே அந்த மிருகமா ஆயிடமுடியுமா?”

“அது அவனுக்க தபஸை பொறுத்தது… சிலபேரு ஒருவாரம்கூட மிருகமாட்டு இருந்திருக்கானுக. சிலபேரு ஒரு ராத்திரி…நாலஞ்சு மணிநேரத்திலே ஒடி கலைஞ்சுபோறதும் உண்டு…”

நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முயலைச் சமைப்பதிலேயே கவனமாக இருந்தார். முயல் நன்றாக வேகத் தொடங்கியது. உருகும் கொழுப்பு மணம். ஊன்வேகும் மணம்.

“நல்ல மூத்த முயலாக்கும். நெய் உண்டு” என்றார்

“ஒடிவித்தையிலே என்ன லாபம்?”

“எதிலே லாபம், எதிலே நஷ்டம்?”

‘செரி, இப்டி கேக்கேன். நீங்க ஒடி செய்யுததானா எதுக்காகச் செய்வீங்க?”

“பிள்ளே, மனுசனுக்கும் மத்த சீவனுக்கும் ஒரே வித்தியாசம்தான். மத்த சீவன் வேலிகேறிச் சாடாது. மனுசன் எல்லா வேலியும் கடந்து சாடுவான். மனுசனுக்க ஞானம்கிறது் அவன் சாடிக்கடந்த வேலிகளுக்க கணக்காக்கும்… மனுசன் ஏன் பறக்கான்? ஏன் துப்பாக்கியால வெடிவச்சுதான்? அவனுக்க உடம்புக்க வேலிய அதுவளியாட்டு சாடிக்கடந்து அந்தப்பக்கம் போவுதான், இல்லியா? இப்ப நான் மனுசனா இருக்கேன். இந்த உடம்பிலே இருந்து என்னால வெளியே போவ முடியாது. இந்த உடம்பாத்தான் நான் என்னைய நினைக்க முடியும்… அந்த வேலிய சாடிக் கடந்து அந்தால போவமுடிஞ்சா நல்லதுதானே?”

அவர் முயலை மெல்ல வெளியே எடுத்தார். அது உருகிச் சொட்டியது. ஊன் நன்றாகவே வெந்திருந்தது. அதை திருப்பி வைத்தார்

“நினைச்சுப்பாருங்க. நீங்க போயி உங்களை கண்ணாடியிலே பாக்குதீக. அங்க ஒரு காளைமாடு தெரிஞ்சா எப்டி இருக்கும்”

நான் அதிர்ந்துவிட்டேன். மெய்யாகவே எனக்கு கைகள் நடுங்கலாயின

”அப்டி ஒருத்தர் மாறினா அவருக்க மனசு எப்டி இருக்கும்? அவருக்க நியூரோ சிஸ்டம் எப்டி இருக்கும்? ஒரு சாம்பிள் கிடைச்சா நான் எல்லாத்தையும் நிரூபிச்சிருவேன்”

“என்னத்துக்கு நிரூபிக்கணும்? ஆருக்கு?”

நான் “அது ….சயன்ஸுன்னா…” என்றேன்

“அது உங்க அவசியம்… ஒடியனுக்கு அதிலே என்ன?”

நான் “அது சரிதான்” என்றேன்

அவர் மீண்டும் அனலை ஊதினார். கனல் சீறியது. ஊன் பொசுங்கும் மணம் எழுந்தது. குகைக்குள் எங்கோ ஏதோ ஓசை

“உள்ள என்னென்னமோ இருக்கு” என்றார்

“மிருகங்களா?”

“ஆமா” என்றார்

“உங்களுக்கு பயமில்லியா?”

“இப்பம் பயமில்லை”

“ஒடியோட லிமிட் என்ன? அதாவது எதுவரை போகமுடியும்?”

அவர் என்னிடம் “லிமிட்டுன்னா, அது தெய்வம்போட்ட லிமிட்டாக்கும். ஒடியன் முளுசாட்டு மிருகமா ஆக முடியாது. ஒரு உறுப்பு மனுசனா மிச்சமிருக்கும். ஒரு விரல், காதுக்க மடல் என்னமாம் ஒண்ணு”

“ஏன்?”

“ஏன்னா அவன் உடம்புதானே மிருகமாட்டு ஆகுது? அவன் மனசு மனுஷ மனசுதானே? அப்ப அவன் போடுதது ஒரு வேசம்தானே?” என்றார் அவர் ‘வேசம்னா வேசக்கொறையும் வேணும். பூர்ணவேஷம் அமைஞ்சா பிறவு திரும்ப வரமுடியாது… அந்தாலே போயிரவேண்டியதுதான்”

“அப்ப ஒடியனைக் கண்டுபிடிச்சிடலாம்” என்றேன்

“ஒடியன்னு சந்தேகம் வந்தா உடனே அந்த மிருகத்தை கூர்ந்து பார்த்தாப் போரும்…” என்று அவர் சொன்னார் “ஏதாவது ஒரு உறுப்பு மனுசனுடையதா இருக்கும்…” என்றார்

அதை நான் கேள்விப்பட்டிருந்தேன். ‘இது மாறாத ரூலா?’என்றேன்

“ஆமா, இந்த ரூல் தெய்வங்களுக்கும் உண்டு. இங்க மலைத்தெய்வங்கள் மனுஷவடிவமா வாரதுண்டு… காணிக்காரங்க இறைச்சியும் கள்ளும் வச்சு பூசைசெய்துட்டு ராப்பூரா டேன்ஸ் ஆடுவாங்க. அதிலே நல்ல அளகான குட்டிகள் இருந்தா மலைத்தெய்வங்கள் மனுசனா மாறி வந்து கூட்டத்திலே சேந்திரும்…”

“அதெப்டி?”

‘கதைல்லா?” என்று சிரித்தார். “எவனாவது ஒண்ணுக்குப்போவான். அவனை பிடிச்சு அந்தால கெடத்திப்போட்டு அவன் ரூபத்திலே உள்ளவந்திரும். ஆடிப்பாடி அவளை மயக்கி கூட்டிட்டுப்போயி சோலிய முடிச்சுட்டு மலையேறி போயிரும். அவ அவன் தன்னை செஞ்சான்னு நினைப்பா. அவனுக்கு ஒரு நினைவும் இருக்காது…”

“கந்தர்வர்கள் இப்டி வர்ரதா கேரளத்திலே கதை உண்டு” என்றேன்

“எல்லா ஊர்லேயும் இப்டி கதை உண்டு… கிரேக்க கதைகளிலே தெய்வங்கள் மனுஷவடிவிலே வந்திட்டே இருக்கு. சில ஊரிலே டால்ஃபின் இப்டி வர்ரதா கதை உண்டுன்னு ரேடியோவிலே சொன்னான்” என்றார். “அதனால இங்க காணிக்காரக் குட்டிகளிட்ட சொல்லிச் சொல்லி வைப்பாக. ஒருத்தன் அப்டி அணையவந்தா அவனை முளுசாட்டு பாத்திரு, எல்லா உறுப்பையும் தொட்டு பாத்திருன்னு” அவர் மேலும் சிரித்து “ஒருத்தி அப்டி எல்லாத்தையும் தொட்டுப்பாத்தா. ஒண்ணை மட்டும் தொட்டுப்பாக்கல்ல. ஆனா எல்லாம் தொடங்கினப்ப தெரிஞ்சுது வந்தது செங்கிடாய்க்காரன். அது செங்கிடாய்க்க வேராக்கும்…”

நானும் சிரித்தேன். அவர் முயலை எடுத்து அந்தக் கல்லோடு அப்பால் வைத்துவிட்டு அதில் கிழங்குகளை போட்டார்

“நீங்க உண்மையிலேயே ஒடி செய்யுகதுண்டா?”

“உண்டுண்ணு சொன்னேனே”

“நான் உங்களை டெஸ்ட் பண்ணலாமா?”

“அதுக்கு நான் எதுக்கு சம்மதிக்கணும்?”

”அப்பம் நீங்க பொய் சொல்லுறீங்க”

“செரி”

அவர் கிழங்குகளைச் சுட்டு எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிழங்குகள் வெடித்தபோது இனிய மணம் எழுந்தது

“சுட்டுத்தின்னா வாற மணம் வேறே எந்த சமையலிலயும் வாறதில்லை” என்றேன்

“ஆமா, அதுக்கு சுடப்பட்ட பொருட்கள் புதிசாட்டு இருக்கணும். மனுசன் மத்த சமையலை கண்டுபிடிச்சதே கெட்டுப்போனதை திங்கத்தானே? உப்பு, புளி ,காரம், எண்ணை, கருவேப்பிலை ,கொத்தமல்லி ,கடுகு எல்லாமே கெட்டுப்போன உணவுக்க மணத்தை மறைக்கிறதுக்குண்டான சாமானாக்கும்”

“நீங்க ஆரு? எதுக்கு இங்க இருக்கீய?”

“என்ன சொன்னா உங்களுக்கு நிறைவா இருக்கும்?” என்று சிரித்தார் “சாப்பிடுங்க”

அவர் கல்லில் பரப்பி வைத்த முயலையும் கிழங்கையும் சாப்பிட்டேன்.

“ஒருதுண்டு கிளங்கு கூட ஒரு துண்டு இறைச்சி சேத்து சவைக்கணும்… அதாக்கும் முறை” என்றார்

மெய்யாகவே அது சுவையாகத்தான் இருந்தது.சாப்பிட்டு நீர் அருந்தி கைகழுவினேன்

“படுக்கலாமில்ல?” என்றார்

நான் ஏமாற்றமாக உணர்ந்தேன்.

“நீங்க என்ன கேக்கணும்?” என்றார்

“ஒடி பத்தித்தான். ஒடி எடுக்கப்பட்டவருக்கு என்ன மாறுதல் வந்திருக்கும்? நரம்பிலே…”

அவர் சிரித்து “மாறுதல் வந்தா அது தெரியுத மாதிரி இருக்கணுமா என்ன?”

நான்  “செரி நீங்க யாரு? எதுக்கு இங்க இருக்கீங்க? சும்மா ஆளுகளை ஏமாத்துகதுக்கு சொல்லலாம்ன்னா இங்க ஆரும் வாறதில்லை. நீங்க தனியாட்டு இருக்கீங்க”

“செரி, வேற என்ன தோணுது”

“நீங்க செங்கிடாய்க்காரனுக்க உபாசனை எடுக்கிறீக…”

அவர் சிரித்தார்

“செங்கிடாய்க்காரனா ஆகிறீங்க”

அவர் அதே போல மீண்டும் சிரித்தார்.

“அதுதான் ஒரே பதில்” என்றேன்

அவர் “செரி, அப்டி வச்சுகிடுங்க” என்றார்

கட்டில்களை போட்டு படுத்துக்கொண்டோம். குகைக்குள் பெரிய குளிர் இல்லை. ஆனால் காற்றோட்டமாக இருந்தது.

”இந்த செங்கிடாய்க்காரன் மாதிரி சாமியெல்லாம் நான் சொன்னதுபோல மனுஷனிலே இருக்கிற மிருகத்துக்க வடிவம்தானே?” என்றேன்

“எப்டி?” என்றார்

“மனுசன் முதலிலே மிருகங்களை பாத்து வரைஞ்சான். பிறவு மிருகங்களா தன்னைய நினைச்சுகிட்டு வரைஞ்சான். பிறவு சாமிகளை மிருகங்களா நினைச்சுகிட்டான்…”

அவர் எழுந்து “வாங்க ஒரு விசயம் காட்டுதேன்” என்றார்

அவரிடம் டார்ச் லைட் இருப்பதை அப்போதுதான் கண்டேன். அதை இருட்டில் வீசி அடித்தபடி குகைக்குள் சென்றார்

“எனக்க பொறத்தாலே வாங்க…”

அவருடைய கால்பதிந்த இடங்களில் கால் வைத்து நடந்தேன். அவர் குகைக்குள் சென்றுகொண்டே இருந்தார். அவருடைய விளக்கின் வெளிச்சத்தில் குகையின் மேல்கூரையில் ஓவியங்களைப் பார்த்தேன். மிகமிகத் தொன்மையான குகை ஓவியங்கள். சிறியவை, வெள்ளை காவி நிறங்களில் வரையப்பட்ட விலங்குகளின் உருவங்கள். குகை ஓவியங்களின் வழக்கப்படி அவற்றில் மனித உடல்கள் மட்டும் தீக்குச்சிகளாக தலையும் கோடுகளுமாக இருந்தன. விலங்குகள் மிகமிக தெளிவாக அசைவுகளுடன் இருந்தன.

அவர்  “இதப்பாருங்க” என்றார்

அவர் காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஓவியம். உள்ளங்கையளவு. ஆனால் துல்லியமானது. நல்ல செங்காவி நிறத்தில் வரையப்பட்டிருந்தது. நீண்டதாடியும் சுருண்ட கொம்புகளும் விலகிய காதுகளும் கொண்ட ஆட்டுக்கிடா. ஆனால் உடல் மனிதனுடையது. கையில் ஒரு கோலுடன் அது பாறையில் அமர்ந்திருந்தது. அதைச்சூழ்ந்து ஏராளமான ஆடுகள் மேய்ந்தன

“இது?”என்றேன்

“இது செங்கிடாய்க்காரன்”

‘எப்ப வரைஞ்சது”

“இந்தகுகையிலேயே பழைய ஓவியம் இது… இதை அதிகமா யாரும் பாத்ததில்லை. இங்க பகலிலயும் இதேமாதிரி இருட்டு இருக்கும்”

நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்

“போலாமா?”

நாங்கள் திரும்பி நடந்தோம். நான் “இதெல்லாம் எப்டி மனுசனுக்கு முதல்ல தோணிச்சு?” என்றேன்

“தோணுதா? இல்லை இதெல்லாம் உள்ளபடியே இருக்கா?” என்றார்

“சும்மா பயமுறுத்தாதீங்க”

நாங்கள் திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தோம். நான் “நான் நம்பியிருப்பேன். ஆனால் நீங்க இப்டி ரிஸ்ட்வாச்சும் ரேடியோவுமா இருந்தா எப்டி நம்புறது?”என்றேன்

“சரி, நம்பவேண்டாம்”

“இது ராத்திரி… நாம மட்டும்தான். நீங்க ஒரு ஒடிவித்தையை காட்டுங்க பாப்பம்”

அவர் சிரித்தார்

“சிரிச்சு மளுப்பவேண்டாம்.. ஒரு வித்தைய காட்டுங்க”

அவர் படுத்துக்கொண்டு கால்களை நீட்டினார்

“சரி ,முளுசா  வேண்டாம்… ஒரு செகண்ட் போரும்”

அவர்  “எனக்கு அதிலே ஒண்ணுமில்லே” என்றார்

“எனக்கு ஒரு ஆதாரம் காட்டுங்க..”

“படுத்துக்கிடுங்க. காலம்பற நல்லா குளிரும்”

‘இல்லேன்னா வாங்க, எங்க லேபிலே உங்களை ஒடு டெஸ்ட் செய்யுதேன். உங்க நியூரோ ஸ்டக்சரை மட்டும் பாத்துக்கிடுதேன்”

அவர் ”தூங்குங்க” என்றார்

“ஒடீன்னு ஒண்ணு இல்லை” என்றேன்

“செரி”

‘ஒரு மனுசன் ஒரு மிருகத்தையே நினைச்சிட்டிருந்தா அந்த மிருகத்துக்க சில இயல்புகள் அவனுக்கு வந்திருது. பார்வை, உடலசைவுகள், சத்தம். சிலசமயம் அந்த உடம்போட சில சக்திகளும் வந்திடும். ஒரு மனுசனுக்கு குரங்கு அம்சம் வந்திரிச்சுன்னா அவனால மரத்திலே தாவமுடியும்… அதே மாதிரி”

“செரி”

“அப்பமும் அவன் மனுசன்தான். மனுசனாத்தான் இருப்பான். அந்த விலங்க அவன் உடம்பு நடிச்சுப்பாக்குது”

“நான் சொன்னதும் அதுதானே?”

“இல்ல, நீங்க சொன்னது மிருகமாட்டு மாறுததைப் பத்தி”

“அப்டியா?”

“வெளையாடுதீங்க… சொல்லுங்க. ஒடீன்னு ஒண்ணு உண்டுண்ணா ஒரு சின்ன ஆதாரம் காட்டுங்க”

“ஆதாரமே இல்லை… போருமா” என்றார்

நான் எரிச்சலுடன் கண்களை மூடிக்கொண்டேன். இந்த ஆசாமி என்னிடம் விளையாடுகிறார்.

”இங்க மிருகமாட்டு வாறது என்னவாக்கும்?” என்றார்

“புரியல்ல”

“இங்கிண தண்ணியாட்டு வாறது என்ன? தெய்வத்துக்க குளுமை. இங்க தீயாட்டு வாறது வானத்துக்க சூடு. அப்பம் மிருகமாட்டு வாறது என்ன?”

என்னால் பதில் சொல்லமுடியவில்லை

“அது இங்க வந்து இப்டி அதைக் காட்டுது. குருதையிலே வேகமா. ஆனையிலே பெலமா”

”ஆமா” என்றேன்

“அதைமாதிரி தானும் ஆகணும்னு நினைக்குதனாலத்தான் மனுசன் அதை வரையுதான். ஒடிவித்தை வளியாட்டு அதுவா ஆயிட்டு திரும்பி வாறான்”

“அது மனுசனாட்டு ஆகுமா?”

“மனுசனாட்டு வந்தது சம்மதிக்கணும்”

நான் அந்தப்பேச்சின் அர்த்தமின்மையால் சலித்து கண்மூடிக்கொண்டேன்

“இங்க ஒவ்வொண்ணும் இன்னொண்ணா ஆயிட்டே இருக்கு… ஒண்ணு அப்டி தோணுகது இன்னொண்ணுக்க மயக்கமாக்கும். அது அப்டி அங்க அவனுக்கு காட்டுது… தோற்றம்தான் இருக்கு. தோன்றுறது இருக்கிறதா என்ன? ரெண்டும் வேறல்ல?”

“ஆமா” நான் அச்சொற்களை தவிர்த்தேன். அப்படியே மனதை மூடிக்கொள்ளவேண்டும் என நினைத்தேன்

ஆனால் அவர் மேலும் பேசவில்லை. கண்களை மூடிக்கொண்டார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் போர்வையை போர்த்திக்கொண்டு குரட்டை விடத்தொடங்கினார்

நான் வெளியே ஒரு பெரிய திரைபோல தெரிந்த வானைப் பார்த்தேன். ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன.

வானையே பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய நட்சத்திரங்கள். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். நடுவே நன்றாக அசந்து தூங்கிவிட்டிருந்தேன். அந்த இடத்தில் தூங்கமுடிவதே ஆச்சரியம். ஆனால் அன்றைய நாளின் மலையேற்றம் அப்படி

என் அருகே கட்டிலில் அவர் இல்லை. நான் ‘ஐயா!” என்றேன்.

அவர் அங்கே இல்லை என்று தெரிந்தது. எங்கு சென்றிருப்பார்? ஒருவேளை செங்கிடாய் ஆக மாறி காட்டுக்குள் நுழைந்திருப்பாரோ?

அந்த எண்ணமே என்னை நடுக்கம் கொள்ளச் செய்தது. எழுந்து பார்த்தேன். கீழே காட்டுவிளிம்பில் நான்கு ஆடுகள் நின்றன. ஒன்று கிடா. அதையே கூர்ந்து நோக்கினேன். அதன் குளம்புகளை, வாலை, காதுகளை, மூக்கை. எங்கேனும் ஒரு மனித உறுப்பு தெரிகிறதா?

“தூங்கல்லியா?”என்று அவர் குரல் கேட்டது

நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். ‘உள்ளயா இருந்தீங்க?”

“ஆமா, சும்மா ஒரு வாய் தண்ணிகுடிக்க போனேன்” என்றபடி மீண்டும் அமர்ந்தார்.

“தூங்கலையா?”

“இப்பதான் முழிச்சேன்”

“பிரம்ம முகூர்த்தம் ஆயாச்சு” என்றார். ‘இப்பம் விடிய தொடங்கீரும்”

“ஒடி வித்தை காட்டுவீங்கன்னு நினைச்சேன்”

‘அவர் சிரித்து “பிரம்ம முகூர்த்தம் கடந்தாச்சுல்லா?”என்றார்

நான் மீண்டும் படுத்துக்கொண்டேன். இம்முறை தூக்கம் எடையுடன் வந்து கைகால்களை கட்டிலோடு அழுத்தியது.

மீண்டும் விழித்தபோது நல்ல வெளிச்சம். எழுந்தமர்ந்தேன். கண்கள் கூசின

“இங்க சாயை காப்பி இல்லை…” என்றார் அவர். அப்பால் ஒரு சிறு வேப்பம்குச்சியால் பல்விளக்கிக் கொண்டிருந்தார்

“நான் கிளம்பறேன்’ என்றேன் “கூமனை வரச்சொல்லியிருக்கேன்”

”நல்லது”

“வந்ததுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை..ஆனா ராத்திரி திரில்லா இருந்தது”

அவர் சிரித்து ‘இங்கிண வந்து என் கூட இருங்க.. த்ரில்லு போயிரும்” என்றார்

நான் எழுந்து சிறுநீர் கழித்தேன். வாய்முகம் கழுவி நீர் குடித்தேன்.

கூமன் வந்து நின்று “கூவே கூ!” என்று ஓசையிட்டான்

“உம்ம ஆளு வந்தாச்சு” என்றார்

“நான் வாறேன்”’ என என் பையை எடுத்துக்கொண்டேன்

“நேரம் கிட்டும்பம் வாங்க” என்றார்

“பாப்பம்” என்றேன்

நான் சரிவில் இறங்கி கூமனை அணுகினேன். அவன் என்னை உணர்ச்சியில்லாமல் நோக்கி “போலாமா?”என்றான்.

“சரி” என்றேன்

நாங்கள் நடந்தோம். சற்று தொலைவு சென்றபோதுதான் என் பையிலிருந்து இரவு பிளாஸ்கை எடுத்ததை நினைவுகூர்ந்தேன்

“இருடே கூமா… இந்தா வாரேன்”

நான் மீண்டும் வந்து சரிவிலேறி குகை முகப்புக்கு வந்தேன். அங்கே எவருமில்லை. ஐயா என்றுகூப்பிட நாவெழ அடக்கிக்கொண்டேன். ஏன் என்று எனக்கே தெரியவில்லை

ஏதோ ஓர் உணர்வு என்னை எதையோ எதிர்பார்க்கச் செய்தது. நான் குகைக்குள் மிகமிக மெல்லச் சென்றேன். என் காலடியின் ஓசையின்மை எனக்கே நான் இல்லை என உணரச்செய்தது

உள்ளே எவருமில்லை. கட்டில்கள் அப்படியே கிடந்தன. இன்னொரு சிறு குகைவாயிலுக்கு அப்பால் அவர் இருப்பதாக எனக்கு தோன்றியது. மிகமிக மெல்ல உள்ளே சென்றேன்

நான் நினைத்தது சரிதான். அவர் அங்கேதான் இருந்தார். அங்கே ஒரு சுண்ணாம்புப்பாறை நாற்காலிபோல குடையப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து கண்களை மூடியிருந்தார். சிலைபோலவே தோன்றினார். அவர் தலைப்பாகை கட்டியிருக்கவில்லை. ஆகவேதான் அதைக் கவனித்தேன். அவருடைய ஒரு காது ஆட்டுக்கிடாய்க்குரியது.

======================================================================

முந்தைய கட்டுரைஅங்கி, சக்திரூபேண- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதனிமைநாட்கள், தன்னெறிகள்.