துளி [சிறுகதை]

காலையிலிருந்தே கோபாலகிருஷ்ணன் திமிறி, தலையாட்டி, உறுமிக்கொண்டிருந்தான். அருகே சென்ற ராமன் நாயரின் தோளை தும்பிக்கையால் தட்ட அவர் நிலைதடுமாறி தின்று மிச்சம்போட்டிருந்த ஓலைமட்டைகளில் கால்வைத்து தென்னைமரத்தை பிடித்துக்கொண்டு நின்று”என்னடே ஆச்சு? டேய் என்ன? என்ன உனக்கு?”என்றார்.

கோபாலகிருஷ்ணன் ‘பர்ராங்!” என்றான்.

என்னருகே நின்றிருந்த கருப்பன் ‘வவ்! வவ்!” என்று வாலைச்சுழற்றி குதித்தது.

”வே, அந்த நீக்குபிடிச்ச நாய அந்தால கொண்டுபோவும். அதைக்கண்டாலே இவனுக்கு பிடிக்கல்ல” என்றார் ராமன் நாயர்.

“ரெண்டாளும் பிரண்டாக்குமே” என்றேன்.

“பின்ன என்ன மசுத்துக்கு அவன் இவனை குரைக்கான்?”

நான் கருப்பனைப் பார்த்தேன். அவர்களுக்குள் என்ன பிரச்சினை? உண்மையாகவே கருப்பன் கோபாலகிருஷ்ணனின் அருகே செல்லவில்லை. வழக்கமாக அவன் கோபாலகிருஷ்ணன்னின் கால்களுக்கு அடியில் நின்றிருப்பான். பிண்டம் தொப் தொப் என விழும்போதோ மூத்திரம் சடசடவென கொட்டும்போதோ திடுக்கிட்டு வெளியே ஓடிவந்துவிடுவான்.

நான்”ஆனைக்கு என்னமோ பிடிக்கல்ல”என்றேன்

“என்ன பிடிக்கல்ல? திருவிளா கூடின பிறவு அவனுக்கு என்ன கொறை? நேத்துமட்டும் நாப்பத்தெட்டு தேங்காயும் பதினாறு கருப்பட்டியும் தின்னிருக்கு. பச்சைமட்டை ஓலை வேறே. இதுக்குமேலே தின்னா ஊரு நாறீரும்”

“அதில்ல… அவன் மனசுக்கு என்னமோ பிடிக்கல்ல” என்றேன்

அவனை கூர்ந்து நோக்கிவிட்டு என்னைப்பார்த்த ராமன் நாயர்”எப்டி சொல்லுது பிள்ளே?” என்றார்

“அவன் தலைய குலுக்குதான்லா?”

“காதிலே வல்லதும் கேறியிருக்குமோ?”

ராமன் நாயர் அவன் காதை கூர்ந்து பார்த்தார். தன் உடலில் ஏதாவது பகுதி கூர்ந்து பார்க்கப்படுவது கோபாலகிருஷ்ணன்னுக்கு பிடிக்கும். ராமன் நாயர் அவன் குதத்திற்குள் எட்டிப் பார்ப்பதற்காக அரைமணிநேரம் வாலை தூக்கிப்பிடிக்கவோ, கீழே அமர்ந்து அவன் கலப்பையை பார்ப்பதற்காக பின்காலை தூக்கி மூன்றுகாலில் நிற்கவோ அவனுக்கு தயக்கமே இல்லை

“ஒண்ணுமில்லை… என்னமோ சும்மா கெடந்து அலப்பறை செய்யுதான்னு நினைக்கேன்”

அவர் கிளம்பியபோது கோபாலகிருஷ்ணன் தலையைக் குலுக்கி துதிக்கையைச் சுழற்றி”ப்பர்ராங்!” என்று ஓலமிட்டான். துதிக்கையால் மாறிமாறி முன் கால்களை தட்டிக்கொண்டான்.

“நீங்க இங்க நிக்கணும் பிள்ளே. எனக்கு சோலிகெடக்கு… இப்பம் வந்திருதேன்” என்றார் ராமன் நாயர்”தனியா நிக்க பயருதுண்ணு நினைக்கேன்”

“குளிப்பாட்டணும்லா?”என்றேன்

“ஆமா, திருவிளா சாயங்காலம்லா? பன்னிரண்டு மணிக்கு தொடங்கினா மூணுமணிக்குள்ள குளிப்பாட்டி பட்டம் கெட்டி ஒருக்கி நிறுத்திப்போடலாம்… கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”

“தென்னிமலை கேசவனை நீரு கண்டதுண்டா?”

“பின்ன? நான் எனக்க அப்பனுக்க கூடப்போயி அதுக்க பிண்டம் அள்ளியிருக்கேன். அது என்ன ஒரு ஆனை! என்ன ஒரு தலையெடுப்பு… அதுக்க மகன்னு பேரு. இந்நா நிக்கே, பச்சைப்பிள்ளை கையிலே வாளைப்பளத்தை கண்டாக்கூட கைய நீட்டிக்கிட்டு… ஆனைன்னா ஒரு கெம்பீரம் வேண்டாமா?”

ராமன் நாயர் போனபின் நானும் கோபாலகிருஷ்ணனும் தனிமையிலானோம். கருப்பன் ஆர்வமில்லாமல் வாய்திறந்து நாக்கு வளைய கொட்டாவி விட்டுக்கொண்டு அப்பால் சென்று அமர்ந்து பின்காலால் காதைச் சொறிந்துவிட்டு கால்நீட்டி படுத்துக்கொண்டான்.

கோபாலகிருஷ்ணன் கண்களை சுருக்கி சுருக்கி மூடினான். படகுபோல நிலைகொள்ளாமல் ஆடினான். உடலை தென்னை மரத்தில் உரசிக்கொண்டான். தென்னை ஓலைகளை சுருட்டி முன்காலில் அடித்து வாயிலிட்டு மென்று பாதிக்கூழாக்கி துப்பிவிட்டு”பிராங்க்?” என்றான்.

அவனுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. நான் அவன் அருகே சென்று நின்றேன். என் தோளில் கையை வைத்து”ர்ராங்!” என்றான். காதுகளை முன்னால் விடைத்து மீண்டும் ”ர்ராங்”

உடம்புக்கு ஏதாவதா? கண்களில் கண்ணீர் இல்லை. மூக்கின் நுனியில் சீழ் இல்லை. காலை மிகையாக தூக்கியிருக்கவுமில்லை. பிண்டத்தில் புளித்த வாடையும் இல்லை.

“டேய், அங்க என்ன செய்யுதே?” என்று வேட்டியை மடித்துக்கட்டியபடி ஓடிவந்த அப்பு அண்ணன் கூப்பிட்டார். ‘உனக்க அம்மை அங்க உன்னை விளிச்சிட்டிருக்காளே”

“ஆனை தனியா நிக்குதே”

“ஆனைக்கு நீ கூட்டாக்கும்.. போலே… வீட்டுக்குப்போ”

“ராமன்நாயரு…’

“அவரா நீயா பாகன்? வீட்டுக்குப்போ”

நான்”அண்ணன் இங்க நிக்கணும்… ஆனை தனியா நிக்காது” என்றேன்

“செரி நீ போ” என்றார் அப்பு அண்ணா

நான் வீட்டுக்கு ஓடினேன். அங்கே ராமக்கப்பள்ளி தேங்காய் தொலித்துக்கொண்டிருந்தார். ”அம்மை விளிச்சுதே, கேக்கல்லியா? எங்க இருந்துது?”

நான் உள்ளே சென்றேன். அம்மா குத்துவிளக்குகளை எடுத்து கொல்லைப்பக்கத்தில் அடுக்க தங்கம்மையும் எசிலியும் அவற்றை சாம்பல், புளி என எதையெதையோ போட்டு தேய்த்துக்கொண்டிருந்தார்கள். முற்றமெங்கும் பலவகையான பித்தளைச் சாமான்கள். சுற்றிவர மேயும் கோழிகள். மாமரக்கிளையில் காகங்கள்.

“எங்கடா போனே?”என்று அம்மா உள்ளிருந்து செம்புக்கலத்துடன் வந்தபடிச் சொன்னாள்

“ஆனை” என்றேன்

“ஆனை ஆனைய பாத்துக்கும். நீ ஆனை மேய்க்கவேண்டாம்… இந்த இந்த தட்டையும் கலத்தையும் கொண்டுபோய் கோயிலிலே குடுத்திட்டு ஓடிவா”

நான் அவற்றை எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றேன். அங்கே அலங்காரப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அப்பாவும் தங்கையா நாடாரும் வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தனர். தங்கையா நாடார் மூத்திரம் முகர்ந்த மாடு போல மேலுதட்டை வளைத்து மேலேதூக்கி என்னிடம் ”வே, பிள்ளை இங்கே வாரும்… என்ன அது?” என்றார்

“தட்டு” என்றேன். தங்கையா நாடார் என்னை மரியாதையாக அழைத்தாலும் அடிப்பதும் உண்டு, அப்பாவின் இளமைக்கால நண்பர். டீக்கனார் அடிப்பதில்லை, கோபம் வந்தால் தாயோளிக்கமோனே என்பார். அவரும் அப்பாவின் இளமைக்கால நண்பர்தான்.

“அங்கிண கொண்டு வச்சிட்டு வந்து இந்த குருத்தோலையை கெட்டும்”

”அம்மை விளிச்சாக… அங்க வரணும்னு..”

“அங்கயா உற்சவம்? சாமி எளுந்தருளுகது இங்கிணயாக்கும்…சொன்ன சோலியச் செய்யணும்” என்றார் தங்கையா நாடார்

அப்பா”அவன் ஆளொரு மண்ணனாக்கும்” என்றபின் வெற்றிலைச்சாற்றை காறிக்கொண்டார்.

கோயிலில் குருத்தோலை தோரணங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. சுப்ரமணியன், ஐயப்பன், தாணப்பன், சுருளன் குமார், தவளைக்கண்ணன் ஆகியோர் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். குருத்தோலை நுனிகளில் தாமரைமலர்கள் கட்டி தொங்கவிடப்பட்டன. தூண்களில் சளையோலைகள் கட்டப்பட்டன. வாசல்வளைவாக மூன்று ஏணிகளை கட்டி அவற்றைச் சளையோலையால் மூடியிருந்தனர். ஏற்றிக்கட்டவேண்டிய உலத்திக்குலை தடையில் கிடந்தது

கோயிலின் பெரிய திண்ணையில் இடுப்பளவு உயரத்திற்கு மலர்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றை சுற்றி அமர்ந்து நாணியம்மையும் கோலம்மையும் அப்புப் பாட்டாவும் பாச்சுப்பாட்டாவும் ஆரம் கட்டிக்கொண்டிருந்தார்கள். கைகள் மிகவேகமாக சுழல மலர்கள் நாரில் சென்று அமர்ந்து சுற்றிச்சுற்றி மாலையாக மாறி நீண்டு வளைந்துகொண்டிருந்தன. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர்.”அஞ்சுமாச கொறப்பிள்ளைக்கு அம்பிடு முடியிருக்குமாட்டீ? நாம காணாத கொறப்பிள்ளையா? என்னமோ போ. காலம் கலிகாலமாக்குமே…”

“சலையோலை கெட்டணும் கொச்சேமான்…” சுற்றுச்சுவர் மேலே நின்றிருந்த தவளைக்கண்ணனின் விரிந்த உள்நிஜாருக்குள் அவன் கொட்டைகள் தளர்வாகத் தொங்குவது தெரிந்தது.

“இந்த ஆனை எதுக்கு கிடந்து கீறுது?” என்றார் தங்கையா நாடார்

“அதுக்கு காலையிலே ஓலை வச்சிருக்கமாட்டான்” என்றார் அப்பா”டேய் ராமன் நாயர் எங்க?”

 ‘அவரு ஒரு சோலியாட்டு…”

“சோலி, அவன் எங்க போனான்னு எனக்கு தெரியும்…”

“ஆனைக்கு தீனி இருக்கா வே?”என்றார் தங்கையா நாடார்

“இருக்கு… தண்ணியும் குடுத்தாச்சு. அது அளுதுகிட்டே இருக்கு… என்னாண்ணு தெரியல்ல” என்று நான் சொன்னேன்

“வலி இருக்கோ?” என்றார் தங்கையா நாடார்

“இல்ல”

டீக்கனார் உள்ளே வந்து மேல்வேட்டியால் முகத்தை விசிறியபடி அமர்ந்து”என்னம்பா வெயிலு… ஏம்வே ஆனை கெடந்து நிலவிளிச்சுது?”என்றார்

“அதுக்கு என்னமோ மனசுக்குள்ள வெப்ராளம்…”

”நேத்து வெடிபொட்டிச்சதனால இருக்குமோ”

“அது கேக்காத்த வெடியா?” என்றார் அப்பா

நேற்றுத்தான் விழா தொடங்கியிருந்தது. அந்தியில் வெடிபோட்டு உலகறிவிப்பு செய்தார்கள். இன்று காலைமுதல் கொடியேற்று, உத்சவபூசை. அந்தியில் சாமி எழுந்தருளல். மகாதேவரும் தேவியும் சேர்ந்து ஊரைச்சுற்றி வருவார்கள். ஆற்றுக்குச் சென்று ஏதோ பூசைகள் செய்து திரும்ப கொண்டுவந்து முகமண்டபத்தில் வைப்பார்கள். அங்கே மீண்டும் பூஜை.நாளைக் காலை சரஸ்வதியாமத்திற்கு முன் மீண்டும் கருவறைக்குள் சாமிகளை வைத்துவிட்டு உஷத்பூஜை.

நாளை காலை முதல் மத்தியான்னம் வரை அன்னதானம். ஆயிரம் இலைவிழும். கோயிலை ஒட்டி துரப்பன் மாதவனின் தென்னந்தோப்பில் கொட்டகை போட்டு உருளிகளை இறக்கியிருந்தார்கள். மாட்டுவண்டிகளில் கோயில் முகப்பில் வந்து சேர்ந்த புளியம்விறகை ஏழெட்டுபேர் சுமந்து அங்கே கொண்டுசென்றுகொண்டிருதார்கள். கலவறையை ஒட்டி இன்னொரு கொட்டகையில் அரிசி, பருப்பு ,பயறு ,வெல்லம் எல்லாம் காலையிலேயே கொண்டு சென்று வைக்கப்பட்டிருந்தது. அங்கே நாணுநாயர் காவலுக்கு இருந்தார்.

காய்கறிகள் கருங்கல் சந்தையிலிருந்து நள்ளிரவில்தான் வந்துசேரும். தேங்காய் முழுக்க அப்பாவின் நன்கொடை. வெல்லம் டீக்கனாரின் நன்கொடை. தங்கையா பெருவட்டர் அரிசி. நெய் கோலப்பன்பிள்ளை. காலாயம்வீட்டிலிருந்து மளிகைச் சாமான்கள். எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டபடி வேட்டியை தூக்கி அக்குளில் இடுக்கிக்கொண்டு மாதேவன்பிள்ளை ஓடிக்கொண்டிருந்தார். எவரை எதை ஏவுவது என்று தெரியாமல் எதிர்ப்பட்ட எல்லாரையும் வசைபாடுவது அவருடைய வழக்கம்.

அப்பா ”ஆனையாக்கும் உச்சவத்திலே ஐசரியம்” என்றார்.”அதாவது சத்யையிலே பிரதமன் மாதிரி”

“உள்ளதாக்கும்” என்றார் டீக்கனார்

“ஆனை என்னத்துக்குடே நெலவிளிக்குது?”என்றபடி மாதேவன்பிள்ளை வந்தார்.

டீக்கனார்”ஆரு ஆருக்க மதிலு கேறிச்சாடினாலும் ஆனைக்கு தெரிஞ்சுபோடும்”என்றார்.

மாதேவன் பிள்ளை கண்களைச் சுருக்கி”வேதக்காரனுக கோயிலுக்குள்ள பேசப்பிடாது” என்றார்.

“வேதக்காரன் வேங்கித்தாற வெல்லம் வச்சில்லாவே உம்ம சாமிக்கு பாயசம்?”

மாதேவன் பிள்ளை ”சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?” என்றார்

 ‘எங்க ஏசு சாமியும் அப்ப அவருக்கு ஒருபிடி பிச்சை இட்டிட்டுண்டு”

“ஆரு வேலி கேறிச்சாடினது?”என்றார் தங்கையா நாடார் ஆவலாக.

“நீ வாயை மூடுலே… கோயிலிலே பேசுற பேச்சா இது? வார்த்தையிலே ஒரு கட்டுப்பாடு வேணும். அயோக்கியத் தாயோளிக, மட்டுமரியாதை இல்லாம பேசினா கோயிலுக்குள்ள சுண்ணியா வெளங்கும்?” என்றார் மாதேவன் பிள்ளை.

“ஆனை கெடந்து விளிக்குதது நல்ல லெச்சணமில்லை. அதுக்கு என்னமாம் குறி தெரிஞ்சிருக்கும்”என்றார் தங்கையா நாடார்.”மனுசனுக்கு ஆறறிவு. நாய்க்கு ஏளறிவு. ஆனைக்கு எட்டறிவுண்ணாக்கும் கணக்கு”.

“மத்த ஆனை எப்பம்லே வருது?” என்று அப்பா கேட்டார்.

“திற்பரப்பிலே இருந்து கெளம்பியாச்சு… இப்பம் வந்துபோடும்” என்றார் தங்கையா நாடார்.

“அவன் ஆனை… என்ன ஒரு தலையெடுப்பு… அவனுக்க அப்பன் கொச்சுகணபதியை நான் கண்டிட்டுண்டு. குடும்பத்திலே பிறந்தவனுக்க லெட்சணமுள்ளவன்… நின்னா தலை இப்டி நிக்கும். பூவு கண்டா பூத்த கொன்றை போலே”.

“அவன் திருவாதிரை நட்சத்திரமில்லா?”என்றார் மாதேவன் பிள்ளை.

“ஆமா, எட்டு சுளி, எட்டு சக்கரம்… அவனுக்க யோகம் வேற”.

”இவனுக்கு என்ன கணக்கு?”என்றார் டீக்கனார்

“இவனும் மோசமில்லை… இவன் ரோகிணி. கிருஷ்ணனுக்க நட்சத்திரம். கொஞ்சம் வெளையாட்டு உண்டு” என்றார் அப்பா.

நான்”என்னைய காவலுக்கு நிப்பாட்டிட்டாக்கும் ராமன்நாயரு போனாரு” என்றேன்.

“பின்ன எதுக்குடே நீ வந்தே?”என்றார் டீக்கனார்.

“என்னைய அப்பு அண்ணா போவச்சொன்னார். நான் அவர அங்கிண நிக்கச் சொன்னேன்”.

“வெளங்கீரும்…அப்புவ நான் இப்பம்தானே பாத்தேன்? நெய்கொண்டு வாறதுக்கு போனான்…”

அப்பா பதறி எழுந்து”ஏல, ஆனை தனியாட்டு நிக்காதுலே… சங்கிலிய அறுத்துப்போடும்லே” என்றார்.

வாசல் இருட்டாகியது. மொத்தக் கதவையும் நிறைத்தபடி கருமையாக நின்ற கோபாலகிருஷ்ணன்”பர்ராங்!”என்றான்.

“டேய் அவன் உள்ள வந்திரப்போறான், சந்து கிடைச்சா உள்ள கேறிருவான்…” என்றபடி அப்பா ஓடினார்

டீக்கனாரும் தங்கையா நாடாரும் அதை நோக்கி ஓடினார்கள். அப்பா அவன் மத்தகத்தை தட்டி”என்னடே? என்ன பிரச்சினை உனக்கு?” என்றார்.

“என்னமோ செய்யுது அவனுக்கு… நெலைகொள்ளல்ல”என்றார் டீக்கனார்.

”வெல்லம் வேணுமானா குடுத்து பாப்பமா?”என்றார் அப்பா.

“அதுக்கு தீனி வேண்டாம்… நம்மள கெட்டிப்பிடிக்க பாக்குது பாருங்க… என்னமோ துக்கம்”

கோபாலகிருஷ்ணன் அப்பாவையும் தங்கையா நாடாரையும் மாறிமாறி துதிக்கையால் தழுவினான். தலையை ஆட்டி பெருமூச்சு விட்டான்.

“அதுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை” என்றார் அப்பா”நல்ல எலைமணமாக்கும் மூச்சிலே வாறது”.

“சங்கிலிய அத்துப்போட்டே” என்ற மாதேவன் பிள்ளை”டேய் மக்கா வாடே… சங்கிலியிலே நில்லுடே… நீ நம்ம குட்டியில்லாடே?”என்று அவன் காதைப்பிடித்து அழைத்துச்சென்றார்.

கோபாலகிருஷ்ணன் என்னைப் பார்த்து ”நீயும் வாடே” என்றான்

வீட்டுக்குள் இருந்து முகவாயை நக்கியபடி வந்த கருப்பன் ”இவன் இங்க எப்பம் வந்தான்?”என்று கோபாலகிருஷ்ணனை சரித்துப் பார்த்தான்

அப்பு அண்ணா வெல்லச்சுமையோடு தோப்புக்குள் செல்ல தங்கையா நாடார்”டேய் அப்பு, நீ ஆனைய சும்மாவிட்டுட்டாடே போனே?”என்றார்

“நான் நாய நிப்பாட்டிட்டுல்லா போனேன்?”

”நாயை?. ஆனைக்கு காவலாட்டு?. நல்ல வெவரம்”

ராமன் நாயர் ஆற்றின் சரிவில் படியேறி ஓடிவந்து”அய்யோ ஏமான், நான் இந்தா இங்க போயிட்டு வாறதுக்குள்ள சங்கிலிய அத்துப்போட்டானே” என்றார்.

அவர் வாய் இருந்த விதமே அவருடைய பயணத்தின் நோக்கத்தை காட்டியது.

“டேய், நாறத்தண்ணிய குடிச்சுட்டா கோயில் ஆனைய மேய்க்குதே?” என்றார் டீக்கனார்.

“அய்யே, இது சும்மா ஒரு மடக்கு தசமூலாதி அரிஷடமாக்குமே… மக்கா வாடே… வந்து நில்லுடே”

கோபால கிருஷ்ணன் அவரை பிடித்து தள்ளிவிட அவர் தள்ளாடி விழுந்தார். கையூன்றி எழுந்து”குறும்பு” என்றார்

“அவனுக்கு இவன் மேலத்தான் கோவம்…நீ என்னடே செய்தே…”

“நான் என்ன செய்தேன்? நான் எனக்க பாட்டுக்கு…”

“பாத்து எடுத்து போ… தூக்கி காலிலே போட்டு சவிட்டீருவான்”

“ஆரு இவனா? ஒரு தவளைய சவிட்டிட்டு அளுது அலமுறையிட்டு ஒருவாரம் நடுங்கிட்டு கெடந்த சென்மம்லா? ஏமானே, இவன் ஆனையிலே அய்யராக்கும்”

மீண்டும் கொண்டுசென்று தளைத்தபோதுதான் தெரிந்தது ஏற்கனவே ராமன் நாயர் அவனைக் கட்டியிருக்கவில்லை என்று. வழக்கமாக சங்கிலியை சும்மா காலருகே கொண்டுபோய் அசைத்து ஒலியெழுப்பிவிட்டு அப்படியே விட்டுவிடுவதுதான் வழக்கம், சங்கிலியால் கட்டுவதைப்போன்ற அசைவும் ஓசையுமே கோபாலகிருஷ்ணனுக்கு போதும். அங்கேயே நின்றுவிடுவான். திரும்ப அந்த ஓசையை எழுப்பினால்தான் நகர்வான்.

“கெட்டேல்ல இல்லியா?” என்றேன்

“ஏமானே, அய்யர அடிச்சவன் ஆயி களுவி விடணும்னுட்டு சொல்லுண்டு கேட்டுதா? அவனுக பயந்தாக்குள்ளிகளாக்கும். இவன் அய்யருல்லா…”

 ‘கட்டிப்போடும்… அவன் நல்ல சொபாவத்திலே இல்ல”

”ஆமா, கெட்டீரவேண்டியதுதான்… குளிப்பாட்டணும்… ஏமான் வீட்டுக்குப்போயி அப்பாவுக்க பெட்டியிலே இருந்து ஒரு நல்ல பீடி எடுத்திட்டு வரணும்” என்றார் ராமன்நாயர் ‘இருந்தா ஒரு ரெண்டு ரூபா சக்கறமும் எடுக்கணும்… போயிலைக்கெல்லாம் தீவெலையாக்குமே”

கருப்பன் வந்து”என்னடே செய்யுதீக?”என்னும் பாவனையில் பார்த்தபின் படுத்தான்.”வேற சோலியில்ல” என்று கொட்டாவி விட்டு தன் விலாவை நறுநறுவென்று பல்லைக்காட்டி கடித்தான்.

“நேத்து ராத்திரி குரைச்சு தள்ளிப்போட்டு…. ”என்றார் ராமன் நாயர்

“வண்டி வந்தா குரைப்பான்”என்றேன்

கருப்பன் எழுந்து வாலை நீட்டி குரைத்தபடி பாய்ந்தோடினான். வேறுநாய்களின் ஓலங்கள் கேட்டன. மூலையம் வீட்டு டைகர்”அய்யோ ஆனையாக்குமே ! அய்யோ ஆனை வருதே!”என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான்.

“மத்தவன் வந்தாச்சு… திற்பரப்பு கொச்சுகேசவன்” என்றேன்

“அவனாக்குமா தேவிக்க திடம்பு கேற்றுகது?”

“ரெண்டிலே ஆருக்கு தலையெடுப்புன்னு பாத்து செய்வோம்னு அப்பா சொன்னாரு”

”தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை”

நான் ஓடிப்போய் பார்த்தேன். கொச்சுகேசவன் வந்துகொண்டிருந்தான். தலையெடுப்பு அதிகம்தான். கோபாலகிருஷ்ணன் முகத்தில் அந்த அளவுக்கு செம்பூவும் இல்லை. அங்கே பூமரம் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது

சூழ்ந்து குரைத்த நாய்கள் அழுது ஊளையிட்டு பின்னகர்ந்தன. கருப்பன் வாலை நீட்டியபடி எதிர்கொண்டு நின்றான். பின்னர் ஓடி என்னருகே வந்து என் பின்னால் நின்றுகொண்டு குரைத்தான்.

கொச்சுகேசவன் நிதானமாகவே வந்தான். தரையிலிருந்து கூழாங்கற்களைப் பொறுக்கி சுருட்டிய கையில் வைத்திருந்தான். அவனுடைய பாகன் அணைஞ்சபெருமாள் என்னிடம் ”பிள்ளை அப்பா உண்டுமா? பொகையிலைக்கு ஒரு ரெண்டுரூபா வேங்கித் தரணும்” என்றான்

“அப்பா உள்ள இருக்காரு”

ராமன் நாயர்”என்னடே அணஞ்சி, ஆனை மெலிஞ்சுபோட்டே” என்றார்

“மோனே ராமா, அப்டி நம்ம ஆனை மெலிஞ்சு உனக்க தொளுத்திலே கெட்டவேண்டாம் கேட்டியா?” என்ற அணஞ்சபெருமாள் அருகே வந்து முகம்சுளித்து மோப்பம்பிடித்து”டேய் எரிப்பனாடே?”என்றான்

அப்பா உள்ளிருந்து வந்தார்.”வாடே அணஞ்சி… எப்டிடே இருக்கான் கொச்சுகேசவன்?”

“வாறப்ப ஏமானை கேட்டுக்கிட்டேல்லா இருந்தான்… ” என்றான் அணஞ்சபெருமாள்.”எப்பம் ஆதாரமெளுத்தாப்பீஸ் வளியாட்டு போனாலும் அருமையாட்டு கேப்பான்…சாரு இருக்காரான்னு”

”கேப்பானே, எங்களுக்குள்ள இருப்புவசம் அப்டீல்லா? எப்டிலே இருக்கே? டேய் கொச்சுகேசவா”

அப்பா கொச்சுகேசவனின் மத்தகத்தை தட்டினார். அவன் அசைந்து துதிக்கையை அப்பாவின் மேல் வைத்தான்.

தங்கையா நாடார் டீக்கனார் இருவரும் பின்னால் வந்தனர்.”இவனாக்கும் ஆளு தலையெடுப்பு… மகாதேவரை இவன் கொண்டுபோனாபோரும்” என்றார் டீக்கனார்

“அவன் நிண்ணு களைப்பு மாறட்டும்… நல்ல ஓலை வெட்டி வச்சிருக்கேன். கொண்டு போடு… நாலு கருப்பட்டியும் எடுத்து வச்சிருக்கேன் குடு” என்றார் அப்பா

“நமக்கு போயிலைக்கு?” என்று அணஞ்சபெருமாள் இளித்தான்

“இந்தாடே… புகையிலைண்ணா புகையிலை…வேற வல்லதும்னா பிறவு வெளையாட்டு வேற ஆயிரும்”

 ‘அய்யே…நான் நிப்பாட்டியாச்சு”

”இங்க கெட்டு” என்று அப்பா தென்னையை காட்டினார்

அணஞ்சபெருமாள் அந்த தென்னைமரத்தடிக்குச் செல்ல கருப்பன் முன்னால் ஓடி”இந்நா இங்கதான்… நம்ம எடம்தான்” என்று தென்னை மரத்தடியில் நின்று தன்னைத்தானே சுற்றிக்கொண்டான்.

“ஏ தள்ளிப்போ… எங்கன்னாலும் சாடிக்கேறி நடுவிலே வந்து விளு… ” என்று அப்பா அவனை தள்ளினார்.

நான் கோபாலகிருஷ்ணனைப் பார்த்தேன். அவன் செவிகளை அசைக்காமல் மடித்து சேர்த்துவைத்து, துதிக்கையின் நுனியில் மூக்குமுழை நெளிந்துகொண்டிருக்க, அசையாமல் நிற்பதைப் பார்த்தேன். அவன் வால்வேறு சுழிக்கப்பட்டிருந்தது

ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டு நான் கொச்சுகேசவனைப் பார்த்தேன். கொச்சுகேசவன் துதிக்கை நீட்டி கோபால கிருஷ்ணனின் மணத்தை பிடித்தெடுக்க முயன்றான். கருப்பன் அவனருகே சென்று அவனைச் சுற்றிச்சுற்றி துள்ளி குதித்து ஒற்றைக்குரைப்பை எழுப்பினான். வாலைச்சுழற்றி வயிற்றைத்தாழ்த்தி காதுகளை மடித்தபடி நடனமாடி முனகினான்.

கொசுச்கேசவன் கருப்பனை நோக்கி “‘நீ ஆருடே மக்கா? நல்லவனா இருக்கியே?” என்று கேட்பதுபோல துதிக்கையை நீட்டிய தருணம் கோபால கிருஷ்ணன் பிளிறியபடி திரும்பி தலையை தாழ்த்தி கொம்புகளை முன்னால் நீட்டி கொச்சுகேசவனின் விலாவில் குத்த முயன்றான்.

கொச்சுகேசவன் அந்த ஒலிகேட்டு இயல்பாக விலகிக்கொள்ள அவன் கொம்புகள் அவன் முன்கால் அருகே  உரசிச் சென்றன. கொச்சுகேசவனும் உரக்கப் பிளிறினான். அவன் பயந்து போய்விட்டிருந்தான்.

ராமன் நாயர் பாய்ந்து அப்பால் ஓடி”ஆனை! ஆனை! அடங்கானை! ஆனை அடங்கு!” என்று கூவினார்.

கொச்சு கேசவன் விலகிச்சென்று மடப்புரை சுவரோடு உடல் ஒட்டி குறுகி நின்று நடுங்கினான். அவன் உடல் ஒரு மாபெரும் கால்பந்துபோல ஆகிவிட்டதாக தோன்றியது.

ஓசைகேட்டு திகைத்த கருப்பன் ”என்னவாக்கும்! என்னவாக்கும், சொல்லுடே” என்று கோபாலகிருஷ்ணனை நோக்கி வர,”போயிரு… கொன்னிருவேன்!” என்று கோபாலகிருஷ்ணன் கூச்சலிட்டு தலையை குலுக்கினான்.

“செரி இங்க நிக்கேன். நீ என்னன்னு சொல்லு” என்று வாலைச்சுழற்றி உடலை குழைத்தான் கருப்பன்.

அணஞ்சபெருமாள் கொச்சுகேசவனிடம்,”லே மக்கா… ஒண்ணுமில்லலே… நில்லு… ஒண்ணுமில்லை… நில்லுலே” என்று ஆறுதல்படுத்தியபடிச் சென்று அதன் மத்தகத்தைத் தொட்டான். அது உடல்நடுங்கி இன்னொருமுறை ப்ரீச் என்று பிளிறியது.

அப்பாவும் தங்கையா நாடாரும் டீக்கனாரும் பதறி பின்னால் சென்று கோயில் சுவர் அருகே நின்றனர்.”என்னலே இது, என்னலே” என்றார் அப்பா.

தங்கையா நாடார், ”ராமன் நாயரே, மதமொண்ணும் இல்லல்லா” என்றார்.

“ஒண்ணுமில்ல… ஆனை பயந்துபோனதாக்கும்… கொஞ்சநேரம் நிண்ணா செரியாயிடும்” என்றார் ராமன் நாயர்.

“அவனை அந்தால கூட்டிட்டுப்போலே… இவனுக்க பக்கத்திலே நிக்க வேண்டாம்… மேக்குவாசலுக்கு கொண்டுபோ… அங்க தேருமுக்கிலே நிக்கட்டும்” என்று அப்பா சொன்னார்.

அணஞ்சபெருமாள் கொச்சுகேசவனை, ”ஆனை எடத்தே” என்று இடப்பக்கமாக திருப்ப கோபாலகிருஷ்ணன்”பர்ரீங்” என்று ஓங்கி ஒலியெழுப்பி தலையை குலுக்கினான்.

கொச்சுகேசவன், ”எனக்க அப்போ…. எனக்க அம்மோ!” என்று முனகியபடி வாலை சுருட்டி உடலை குறுக்கி உதைபட்ட நாய் போல விலகிச் சென்றான்.

”என்னலே ஆச்சு இவனுக்கு? ஏல இண்ணைக்கு ரெண்டாளும் ஒப்பரம் நின்னு சாமியெடுக்க வேண்டியதாக்கும்” என்றார் அப்பா.

“ஏமானே, நான் சொல்லிப்பாக்குதேன்” என்றார் ராமன் நாயர்.

 ‘இவன் என்னமோ செய்திருப்பான்!” என்று தங்கையா நாடார் சொன்னார்.

“அம்மையாணே நாடாரே நான் நிரபராதியாக்கும்… ஒரு துடம் அரிஷ்டம் குடிச்சது உண்மை. அதும் கோரன் வைத்தியரு அம்பிடு அருமையாட்டு சொல்லுதாரேண்ணு பாத்தேன். கோரோயில் முருகன் மேலே ஆணை.. இந்நா மகாதேவரு மேலே ஆணை…”.

டீக்கனார்”உனக்கு இருக்குவே நாயரே” என்றார்.

“ஏசுவாணே, மாதாவாணே…” என்றார் ராமன் நாயர்.

“இனி வேணுமானா அல்லா மீதே ஆணைன்னு சொல்லுலே எரப்பாளி” என்று தங்கையா நாடார் கூவினார்

“அல்லா மேலே ஆணையாக்கும் நாடாரே” என்றார் ராமன் நாயர்.

தங்கையா நாடார் கடும் கோபத்துடன் முறைத்து ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்து தலையில் ஓங்கி அறைந்தார்.

“செரி இங்க நிக்கவேண்டாம்… போவோம். அவன் பாத்துக்கிடுவான்” என்றபின் அப்பா செல்ல பிறரும் கூடவே சென்றார்கள்

கோயிலின் மதில்மேலும் பக்கவாட்டிலும் அங்கிருந்த அத்தனைபேரும் முகங்களாக தெரிந்தனர். சுருங்கிய கண்கள். திறந்த வாய்கள். பெண்கள் வாய்மேல் விரல்வைத்திருந்தனர். ராஜம்மா கிழவி அப்பா கேட்க ”என்னம்பா செஞ்சுபோட்டுது… ஆதாரமெளுத்து ஏமான் இருக்காருண்ணு ஒரு நெனைப்பு உண்டுமா?” என்றாள்.

“என்னலே இங்க? ஏல, என்ன? போயி சோலியப்பாருங்கலே.. ஆனை பிளிறி கேட்டதில்லியோ? இனியிப்பம் ஆனைப்பிண்டத்த எடுத்து மோந்துபாப்பானுகள்னுல்லா தோணுது… போங்கலே” என்றார் டீக்கனார்.

ஒவ்வொருவராக விலகினர். நான் அலங்காரம் செய்பவர்களுடன் நின்றேன். அனைவரும் அமர்ந்தனர். அப்பா ஒரு வெற்றிலையை எடுத்து கிள்ளினார்

“என்னவாக்கும்? அவன் காலம்பறவே நின்னு கூவிக்கிட்டிருந்தான்” என்றார் தங்கையா நாடார்

“என்னமோ பயந்துபோட்டான்”

நான்”அவனுக்கு இன்னொரு யானை வந்தது பிடிக்கல்ல” என்றேன்

“என்னவே?”என்றார் தங்கையா நாடார்

“அவனுக்கு கொச்சுகேசவன் வந்தது பிடிக்கல்ல”

”அவன் காலம்பறவே கூவி விளிச்சிட்டிருந்தான்லா?”

“அவனுக்கு காலம்பறவே தெரியும்”

”அதெப்பிடி, அவன் இங்கிண உச்சவக் கம்மிட்டியிலே இருந்தானோ?”என்று அப்பா சொன்னார்.”போடா, வீட்டுக்குப்போ”

“அவரு சொல்லுகது நியாயமாக்கும். ஆனைக்கு அப்டி ஒரு அறிவு உண்டு… கொச்சுகேசவன் வந்தது அவனுக்குப் பிடிக்கல்ல” என்றார் டீக்கனார்.

“இப்பம் என்னடே செய்யுதது? ரெண்டும் எணங்கல்லேன்னா உச்சவம் கொமையும்லா?”

“ஒருத்தனை எறக்கவேண்டியதுதான்… கொச்சுகேசவன் போகட்டும். இவன் இடையுதான்லா?” என்றார் பெருவட்டர்

“அதெப்டிடே… இவன்லா மகாதேவனுக்க ஆளு. கொச்சுகேசவன் வரத்தன்லா?”

“என்ன எளவுண்ணு தெரியல்லியே” என்றார்  பெருவட்டர்

ராமன்நாயர் வந்து”அவன் நடுங்குதான்… ஓலையெடுக்க மாட்டேன்னு சொல்லுதான்” என்றான்

“அப்டியே நிக்கட்டும்…கொஞ்சநேரத்திலே செரியாயிருவான்”என்று அப்பா சொன்னார்.”அவனுக்கு கொச்சுகேசவன் வந்தது பிடிக்கல்ல… பொறாமையாக்கும்”

“இருக்கும்… போனமாசம் களியல் கிருஷ்ணன்கோயில் உச்சவத்திலே ரெண்டாளும் இருந்தாக… அண்ணைக்கு கொச்சுகேசவனாக்கும் தலைப்பத்துல நின்ன ஆனை…அப்ப இவன் என்னமோ நினைச்சிருக்கான்”

அணைஞ்சபெருமாள் வந்து”ஆனை நின்னு நடுங்குது… எட்டு மட்டம் மூத்திரம் போயாச்சு”

“நீ இருந்து எண்ணினியாக்கும்!” என்று அப்பா சீறினார்

ராமன்நாயர்”ஏமானே எனக்கு ஒரு ஐடியா” என்றார். ‘இப்பம் ஆம்பிளைங்க நடுவிலே சண்டையோ மற்றோ வந்தா என்ன செய்யுதோம்? அதைச் செய்தா என்ன?”

“என்ன?”

“ஒரு அரைக்குப்பிச் சாராயத்தை வாங்கி ஒரெடத்திலே இருந்து ஆளுக்குபாதியா குடிச்சா ரெண்டாளும் கெட்டிப்பிடிச்சு பிள்ளைபெறுத பருவம் ஆயிரும்லா?”

”அதுக்கு?”

“ஆனைன்னா ஒரு முளுக்குப்பி போரும்”

”ச்ச்சீ எரப்பாளி…கோயிலுக்கு உச்சவத்துக்கு வந்த ஆனைக்கு சாராயம் குடுக்கச் சொல்லுதியா… அடிச்சேன்னா… ஓடுலே”

“உள்ளது சொன்னா வெலையில்லை” என்றபடி ராமன்நாயர் திரும்பிச் சென்றார்

அணைஞ்சபெருமாள் மெல்ல”அவரு சொல்லுகதிலே காரியமுண்டு” என்றான்

“கொன்னிருவேன்… போ…”

அணைஞ்சபெருமாள்,”எனக்கென்ன… நம்ம ஆனைய இப்பம் அவுத்துவிட்டா நேர திற்பரப்புல போயி நிக்கும்” என்றான்

“என்னால முடியல்ல…நான் போறேன். என்னெளவோ செய்யுங்க” என்றார் அப்பா

“இரும்வே… இது என்ன உம்ம சர்க்காரு வேலைண்ணு நினைச்சீரா? பாப்பம்வே” என்றார் டீக்கனார்

அப்பா எழுந்து சென்று கொச்சுகேசவனைப் பார்த்தார். அவன் கண்ணீருடன் ஓலை எடுக்காமல் நின்றிருந்தான். இடது பின்னங்காலை சற்றே தூக்கியிருந்தான்

“ஏம்லே காலிலே அடிபட்டுதோ? நொண்டுதான்?”

“ஏமான் கண்ணால பாத்ததில்ல? எங்க அடிபட்டுது? வயித்திலேல்லா கோபாலகிருஷ்ணன் குத்தினான்? அதும் படேல்ல”

”பின்ன ஏன் இப்டி நிக்கான்?”

“சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப ஒருதடவை அந்தக் காலிலே மரம் விளுந்துபோச்சு… அப்பம் ஒரு ஆறுமாசம் வைத்தியம் பாத்தம்… அது செரியாகி பதினெட்டு வருசமாகுது. ஆனா இப்பமும் துக்கம் வந்தா எடதுகால இப்டி தூக்கிப்போடுவான்…”

அப்பா சென்று அவன் முன்னங்காலை தொட்டு”செரி போட்டுடே… போட்டுடே மக்கா” என்றார்

அப்பா அவனை தொட்டதும் மதில்களுக்கு அப்பால் கோபாலகிருஷ்ணன் ப்ரீங் என்று ஓலமிட்டான்

“டேய், அது எப்டிடே என்னை பாக்குது?”

“அங்க நின்னா எப்டி தெரியும்” என்றார் டீக்கனார்

“இல்ல, அது பாக்குது… இங்கபாரு”

அப்பா மீண்டும் கொச்சுகேசவனை தொட்டார். சுவர்களுக்கு அப்பால் கோபாலகிருஷ்ணன் பிளிறியது

“பாத்தியா?”

“ஆமால்ல’ என்ற தங்கையா நாடார் அவர் வந்து கொச்சுகேசவனைத் தொட்டார். சரியாக தொலைவில் கோபாலகிருஷ்ணன் பிளிறியது

டீக்கனார்”சாத்தானுக்க களி மாதிரில்லா இருக்கு!” என்றார்

இன்னொரு தடவை அப்பா தொட்டார். அதே பிளிறல்.

அப்பா சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்தார். கோயிலின் மிகப்பெரிய மதில்தான் தெரிந்தது.

“எப்டி அதுக்குத் தெரியுது?”

“இவன் வாறான்னு எப்டி தெரிஞ்சுது அதேமாதிரித்தான்”

அப்பா,”இவன் வாயிலே என்னடே போட்டிருக்கான்? என்றார்

“கல்லு… அது அவனுக்க பளக்கமாக்கும். கல்ல பெறுக்கி வாயிலே போட்டு வச்சிருப்பான்…

“நல்ல பளக்கம். பாக்கு போட பளக்கிராதே… வெலை ஏறிடும்”

அவர்கள் திரும்ப நடந்தனர். தங்கையா நாடார்,”ஆனைக்கு எட்டறிவாக்கும்”

“ஒம்பதாம் அறிவும் ஒண்ணு உண்டு கேட்டியா?”என்றார் அப்பா

“ஆனா இப்ப என்ன செய்யுதது? குத்தினவனுக்கும் ரோகம் குத்துபெட்டவனுக்கும் ரோகம்னா எப்டி சாமிய எடுக்கது?” என்றார் தங்கையா நாடார்

டீக்கனார்”நம்ம பாஸ்டரை விளிச்சு ஒரு ஜொவம் பண்ணிப் பாத்தா என்ன?”என்றார்

“கோயில் ஆனைக்கு ஜெபமா? ஆருலே இவன்?”

“கர்த்தாவுக்க வசனம் எல்லாருக்கும் உள்ளதாக்கும்”

“அத நீரு வச்சாப்போரும்…இனி நீரு வந்து ஆனைக்கு ஞானஸ்நானம் முக்கவேண்டாம்”

டீக்கனார்”ஏசுவே…” என முணுமுணுத்தார்

“பாவிகள மன்னிக்கச் சொல்லுதான்” என்றார் அப்பா

“வெட்டீருவேன்…ஆருலே பாவி? லே”

“நான் எனக்க சாமிக்க வசனத்தச் சொன்னேன்”

”அத நீ சிலுவையிலே தொங்கிட்டுச் சொல்லணும்லே”

“நீரு போவும்வே”

“இல்லேண்ணா தூக்கி மாமரத்திலே தொங்கவிடுதேன்…அங்க நிண்ணு சொல்லும்”

நான் வெளியே சென்றேன். ராமன்நாயர் பீடியை பிடித்தபடி தென்னைமட்டை மேல் அமர்ந்திருந்தார்

”என்னவே, அப்பா என்ன சொல்லுதாரு?”

“அவரும் டீக்கனாரும் சண்டைபோடுதாவ”

“மாறி மாறி குண்டியிலே மண்டையால குத்தச்சொல்லும்வே… சர்க்காரிலே இருந்துட்டு அஞ்சுரூவா சாராயத்துக்கு கணக்கு பாக்குதாவ… அந்த இந்திராகாந்திய வாரியலாலே அடிக்கணும்..”

”ஏன்?”

”அவதானே சர்க்காரு? மொட்டச்சி”

கருப்பன் மண்ணை பரபரவென நகங்களால் பிராண்டியபடி ஓடிவந்தான். யானையைச் சுற்றி ஓடியபடி. வாலைநீட்டி குதித்தான். கோபாலகிருஷ்ணன் அவனை நோக்கி துதிக்கையை வீசி உறுமினான். கருப்பன் தரையில் வயிற்றை அழுத்தி நீந்துவதுபோல முன்னால் சென்று கோபாலகிருஷ்ணனின் பின்காலை முகர்ந்தபின் பாய்ந்து விலகினான். மீண்டும் நீந்திச்சென்று இன்னொருகாலை முகர்ந்தான்.

“இந்த நாயி அடிவாங்கிச் சாவப்போகுது”

கருப்பன் கோபாலகிருஷ்ணனின் நான்கு காலையும் முகர்ந்தான். கோபாலகிருஷ்ணன் துதிக்கையை வீசினாலும் அதன்மேல் படவில்லை. கருப்பன் பாய்ந்து விலகி மறுபக்கம் ஓடினான். நான் அவன் பின்னால் சென்றேன்

மேற்கு முற்றத்தில் வண்டி வந்து நின்றிருந்தது. சமையற்பொருட்களை கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். அப்புப் பாட்டா இடையில் துணியைக் கட்டிக்கொண்டு எண்ணி கணக்கிட்டுக்கொண்டிருந்தார்

அங்கே தென்னையில் கட்டப்பட்டு நின்ற கொச்சுகேசவனை அணுகிய கருப்பன் அவனிடமும் அதே போல விளையாடினான். மண்ணில் தவழ்ந்து சென்று அவன் கால்களை முகர்ந்துவிட்டு தாவினான். ஒவ்வொருமுறை கருப்பனின் மூக்கு தன் காலில் பட்டதும் கொச்சு கேசவன் சிலிர்த்து உடல் குறுக்கினான்

“என்னவே செய்யுதான்?”

“மோந்து பாக்குதான்” என்றேன்

“அது தெரியுது…ஆனைய நாய் எதுக்கு மோந்து பாக்குதான்?” என்றான் அணஞ்சபெருமாள்.

அப்புப் பாட்டா”அணஞ்சீ அது நாயாக்கும். பெருமாள் சங்குசக்கரத்தோட வந்து முன்னால நின்னாலும் மோந்துதான் பாக்கும்” என்றார்

“சிவலிங்கம்னாக்க காலத்தூக்கி ஒண்ணுக்கடிக்கும்” என்றான் மூட்டை எடுக்க வந்த ஸ்டீபன்

“செருப்பால அடிப்பேன். வேதக்காரனுகளுக்கு என்னலே பேச்சு?”என்றார் அப்புப் பாட்டா .”இந்து தர்மத்தை தொட்டுகளிச்சா களி தீயாக்கும், பாத்துக்க”

கருப்பன் திரும்ப ஓடினான். நான் ஆச்சரியத்துடன் அதன்பின் ஓடினேன். மேற்குவாசலைக் கடக்கும்போது தங்கையா நாடார் குரல் ஓங்கி கேட்டது

“வேதக்கார நாயி வந்து எங்கிட்ட நாயம் சொல்லுதான்… இவனை வெட்டிப்போட்டுட்டு நானும் சாவுதேன்”

“ஏல வெட்டுலே வெட்டுலே பாப்பம்”

அப்பாவின் குரல் ஊடே புகுந்தது.”லே நில்லுலே…அடங்குலே”

“டேய் கரடி நீ போடே… இந்த நாய நான் இண்ணு நேத்துண்ணு சகிக்கல்ல… மூணாம்கிளாஸ் படிக்கிறப்ப எனக்க சிலேட்டை எடுத்து அவனுக்கதுன்னு சொன்னவனாக்கும் இந்த தாயளி”

“நீ எனக்க பைசாவ திருடினேல்லலே?”

“பைசாவ திருடினது உனக்க அப்பன் ரெசாலம்…”

“அப்பனச் சொல்லுவியாலே! அரிஞ்சுபோடுவேன்…ஏல அரிஞ்சுபோடுவேன்ல”

“அரிவே… லே வெட்டித் துண்டாக்கீருவேன்…”

“வெட்டுலே பாப்பம். ஏலே ஆம்புளைன்னா வெட்டுலே பாப்பம்”

“ஏலே என்னலே இது? ரெண்டாளும் உங்க நாடாப்புத்திய காட்டுதீக?”

“டேய், நீ ஆருலே? மகாராஜாவுக்க கோமணத்த அவுத்தா நீ பெரிய சாதியா? நீ அந்தால போலே”

”டீக்கனாரே நீராவது அந்தால போவும்”

“அவன் எனக்க எனவன்… அவன் சொல்லட்டும். நீரு நாயரு…நீர் எப்டிவே எனக்க சாதியச் சொன்னீரு?”

”சொன்னா என்னலே செய்வீரு?”

“வெட்டிப்போட்டுட்டு போவேன்… சாதியச் சொன்ன சின்னக்குடிப் பயக்கள இண்ணைக்கு வரை விட்டதில்லை”

நான் அதை சற்றே நின்று மாமரத்தின் அடியில் ஒளிந்தபடி கேட்டேன். மூவருமே மூச்சுவாங்கிக்கொண்டிருந்தனர். கைகளை வீசி கத்தினர். சொற்கள் குறைவுதான். பெரும்பகுதி வெறும் உறுமல்கள் காறித்துப்பல்கள்.

மாதேவன் பிள்ளை ஊடே புகுந்து”என்னடே இது? குடும்பக்காரங்கள மாதிரியா பேசுதீய?” என்றார்

“நீரு தள்ளிப்போவும்வே… நீரு ஆருவே? நீரு வெள்ளாம்புள்ளையில்லா? நாயருக்கு வெள்ளாம்புள்ளை சப்போட்டா? செத்தி அரிஞ்சுபோடுவேன்… போயிரு”

“நீ செத்துவே… செத்திப்பாருலே”

“போடா மயிரே… நீ எட்டாம்கிளாஸிலே எப்டி ஜெயிச்சேன்னு தெரிஞ்சவனாக்கும் நான்”

நடுவே தங்கையா நாடாரின் மனைவி பொன்னம்மை  உள்ளிருந்து வந்து”இஞ்சேருங்க, அஞ்சுரூபா குடுங்க” என்றாள். சண்டை நடப்பதை அவள் அறிந்ததாகவே தெரியவில்லை

தங்கையா நாடார் சண்டையிலிருந்து சற்றே அகன்று மடியிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்து கொடுக்க அவள்  வாங்கிக்கொண்டு அப்பாவிடம் புன்னகைத்து ”வாறேன்” என்றபின் மூவருக்கும் நடுவே நடந்து சென்றாள். ஒரு குருவி ஊடாகச் சென்றதுபோல தோன்றியது.

தங்கையா நாடார்”நாயர்மாரு எனக்க சூத்து மயிராக்கும்… ஒருத்தனையும் விடமாட்டேன்” என்றார்

“எறங்கிப்போலே, இது எங்க கோயிலாக்கும்”

“அத அங்க கச்சேரிலே போயி சொல்லும்…வாறான் யோக்கியன்”

“கைய நீட்டாதலே…ஏல கைய நீட்டி பேசாதே”

“கைய நீட்டினா நீ என்னலே செய்வே?”

நான் கோபாலகிருஷ்ணன் அருகே சென்றேன்

ராமன்நாயர்”சண்டையா?” என்றார்

“ஆமா”

“அது நாய்ச்சண்டையாக்கும்… கடி விளாது…என்ன சொல்லுதாக?”

“ஒண்ணாம்கிளாஸு கணக்குலே இருந்து தொடங்கி பேசுதாக”

ராமன்நாயர் கக் கக் என்று சிரித்தார்

கருப்பன் கோபாலகிருஷ்ணன் அருகே சென்று அதன் முன்னங்காலில் ஒருசொட்டு மூத்திரம் பெய்தான்

“என்ன செய்யுதான்?”என்றார் ராமன்நாயர்

“நாயி மூத்திரம் போறது நாம முத்திரப்பத்திரத்திலே ஒப்பு வைக்கிறமாதிரி…அப்பா சொன்னாரு”

“அப்பம் இனி ஆனை நாயிக்க சொந்தமா வேய்?”

கருப்பன் வாலைச்சுழற்றிக்கொண்டு ஓடினான்.

“எங்க போவுதான்?”என்றார் ராமன்நாயர்

“அந்த ஆனைக்க கிட்ட”

“ஓணத்துக்கு நடுவிலே அவனுக்க புட்டு ஏவாரம்”

நான் மேற்குவாயில் வழியாக தெற்குவாயிலுக்குச் சென்றேன். அங்கே கருப்பன் கொச்சுகேசவனின் முன்காலில் ஒரு சொட்டு மூத்திரம் பெய்வதைக் கண்டேன்

பின்னணியில்”கண்ணாம்வீட்டு சரோஜாவ கேளுலே…அவ சொல்லுவா உனக்க யோக்கியதைய… ஏலே போயி அவகிட்ட கேளுலே” என்று தங்கையா நாடார் கூவினார்

“ஆணுங்களுக்கு அப்டி ஆயிரம் இருக்கும்லே. நீ என்ன யோக்கியனா? இவன் யோக்கியனா?”

“என்னைய கர்த்தரு அறிவாரு”

“கர்த்தரு உம்மை உள்ளதாட்டு அறிஞ்சா எறங்கி வந்து சங்கப்பிடிப்பாரு.. த்தூ”

கடமை முடிந்தது என்ற பாவனையில் கருப்பன் வாலை சரிவாக தூக்கியபடி மீண்டும் கோபாலகிருஷ்ணன் அருகே சென்றான்.

“வாத்தியாரு கேட்டப்பம் இவன் நம்மள காட்டிக்குடுத்தான். அப்பமே வெசமாக்கும்”

“நீ வாத்தியாருக்க கோமணத்த பிடிச்சு பரிச்சையிலே மார்க்கு வாங்கின நாயில்லாலே?”

ராமன்நாயர், ”என்னவாக்கும் நாயிகூட ஓடிட்டு கெடக்கேரு?” என்றார்

“நாயி என்னமோ செய்யுது”

”என்ன செய்யுது?”

“அதான் பாக்குதேன்”

“அங்க போயி என்ன செய்யுதான்?”

“அங்கயும் சொட்டுவிட்டான்”

“அப்பம் ரெண்டு ஆனைக்க ஓனராக்கும்… பாத்தா சொல்லமுடியுமா? பாவமாட்டு இருக்கான்”

கோபாலகிருஷ்ணனின் துதிக்கை நாய் சொட்டுவிட்ட காலை முகர்ந்து முகர்ந்து தவித்தது

“மூத்திரம் பேய்ஞ்சு வச்சுப்போட்டே… இனி இவன் இதையே மோந்துட்டிருப்பானே”

“நாயி கொஞ்சமா மூத்திரம்போனா மணம் கூடுதலாக்கும்” என்றேன்

“குளிப்பாட்டி நிப்பாட்டீருவோம்… எப்டியும் ரெண்டு ஆனையிலே ஒண்ணுதான் சாமிய கேற்றப்போகுது”

ராமன்நாயர் கோபாலகிருஷ்ணனை கட்டு அவிழ்த்தார். அவன் தலையை உலுக்கினான். பெருமூச்சுவிட்டான்.”ஆனை எடத்தே…ஆனை எடத்தே” என்றார் ராமன்நாயர்

கருப்பன் வாலை ஆட்டி துள்ளி நடனமிட்டு சுழன்றான்

கோபாலகிருஷ்ணன் சங்கிலியை கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தான். அவன் உடலில் கரிய தசைகள் அலையிளகின.

மேற்குவாயிலில் அப்பா”இண்ணைக்கோட நம்ம பெந்தம் தீந்தாச்சு… நீ மனுசன்னா இனி எனக்க முகத்திலே முளிக்காதே…” என்றார்

“நீ வாங்கின பைசாவ குடுலே”

“அத வட்டியோட வாங்கிக்கோ… எனக்கு எந்த நாடானுக்க பைசாவும் வேண்டாம்”

கோபாலகிருஷ்ணன் நின்று சங்கிலியை கீழேபோட்டுவிட்டு துதிக்கை நீட்டி மோப்பம் பிடித்தான்.”ப்ரீம்?” என்று கேட்டான்

“ஆனை வெளித்தே”

கொச்சு கேசவன் ‘ப்ரீம்!”என்று ஏதோ சொன்னான்

கோபாலகிருஷ்ணன் துதிக்கை நீட்டியபடி செல்ல ராமன்நாயர்”ஆனை நில்லு….ஆனை நில்லு!” என்று கூவியபடி ஓடினார். அவருக்கு பின்னால் கோணலான வாலுடன் கருப்பன் ஓடினான்

“ஆனைய பிடியுங்க…ஆனையை பிடியுங்க…அய்யோ”

“அய்யோ ஆனை எளகிப்போச்சே… ஆனை எளகிட்டுதே”

“போயி ஆனையப் பிடியும்வே, நீரு படைநாயருல்லா?”

“பெருவட்டன்மாரும் ஆனைய பிடிக்கலாம்”

“போயி ஆனைக்கிட்ட செபியும்வே”

கோபாலகிருஷ்ணன் கொச்சுகேசவனை அணுகினான். துதிக்கை நீட்டியபடிச் சென்று அதன் முன்னங்காலில் கருப்பன் சொட்டுவிட்ட இடத்தை மெல்ல தொட்டு முகர்ந்தான். கொச்சு கேசவன் தன் துதிக்கையை நீட்டி கோபாலகிருஷ்ணனின் காலில் கருப்பன் சொட்டுவிட்ட இடத்தை முகர்ந்தான். இரு யானைகளும் பெருமூச்சுவிட்டன. துதிக்கை பிணைத்து தழுவிக்கொண்டன. இரு படகுகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் விலாக்கள் உராய்ந்து சென்றன. கோபாலகிருஷ்ணன் மெல்ல உறுமினான். கொச்சு கேசவனும் அதுபோலவே உறுமினான்

”என்னலே, எம்ஜியார் சரோஜாதேவி கணக்காட்டுல்ல இருக்கு?

அப்பாவும் டீக்கனாரும் வந்தனர். வேட்டியை நன்றாக அவிழ்த்துக் கட்டியபடி பின்னால் தங்கையா நாடார் வந்தார்

“என்னடே? எப்டி சமாதானமாச்சு?”

“ஈஸ்வர சங்கல்பமாக்கும்… மகாதேவர் விளிச்சா விளி கேக்குத தெய்வம்லா?” என்றார் அப்புப்பாட்டா

மாதேவன் பிள்ளை ”நான் அப்பமே நினைச்சேன்… மகாதேவரு எடபெடுவாருண்ணு… உச்சவம் அவருக்கில்லா…? ஒத்தை ஆனையிலே உச்சவம்னா மானக்கேடு அவருக்குத்தானே?”

“பின்ன?”

“ஏசுவானவரும் இதிலே எடபெட்டிட்டுண்டு” என்றார் டீக்கனார்

“என்னவானாலும் காரியம் மங்களமாச்சே” என்றார் அப்பா

“பாக்க நல்ல சேலுண்டு… ஆனையும் ஆனையும் இப்பிடி அன்பா நிக்குதது கண்டா மலைவெள்ளமும் மளைவெள்ளமும் ஆத்திலே ஒண்ணாச் சேருறதுமாதிரி இருக்கு”என்றார் தங்கையா நாடார்

அப்பா திரும்பி தங்கையா நாடாரைப் பார்த்தபின்”உள்ளதாக்கும்” என்று முகம் மலர்ந்தார்.

“இனி ஒண்ணுமில்ல…கர்த்தரே, ஏசுவே ரெட்சியும்” என்றார் டீக்கனார்

“அந்தோணியாருக்கு ஒரு மெளுகுதிரி ஏத்திப்போடுவோம் டீக்கனாரே…நான் நேந்துகிட்டேன்” என்றார் அப்பா

”நானும் ஒரு மெளுகுதிரி நேந்திட்டுண்டு” என்றார் தங்கையா நாடார்”உச்சவத்திலே ஒத்தை ஆனைண்ணா இனி மேக்கரையிலே முகம்காட்ட முடியுமா? மானக்கேடுல்லா?”

“எல்லாம் செரியாச்சுல்லா… ஈஸ்வர கிருபை…”

இரு யானைகளும் கொஞ்சிக்கொண்டிருந்தன. தும்பிக்கைகளை பின்னிப்பிணைத்து உருவி எடுத்தும் கொம்புகளை மெல்ல உரசிக்கொண்டும்

”குளிப்பாட்ட கொண்டுபோடே… நேரமாச்சுல்லா?” என்றார் அப்புப் பாட்டா

“பிடிச்சு வெலக்கி கொண்டுபோக முடியாதே” என்றார் ராமன்நாயர்

’ரெண்டாளையும் சேத்து கொண்டு போடே.. ஆருலே இவன்” .

அணைஞ்சபெருமாள் கொச்சுகேசவனை அவிழ்த்தான். கோபாலகிருஷ்ணனை ராமன்நாயர் தட்டி”ஆனை வலத்தே” என்றார்

இரு யானைகளும் விலா ஒட்டி உரச சங்கிலிகளை எடுத்தபடி ஆற்றுக்குச் செல்லும் சரிவில் இறங்கிச் சென்றன. இரு குறிய வால்களும் சுழன்றன. அவை குதித்துக் குதித்துச் செல்வதுபோல தெரிந்தது. கருப்பன் பின்னால் வாலைச் சுழற்றியபடி சென்றான்

நான் கோயிலுக்குள் சென்றேன். அப்பாவும் தங்கையா நாடாரும் டீக்கனாரும் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தனர். மூவர் முகமும் மலர்ந்திருந்தது.

“வே, நீரு மத்தவள பிறவு கண்டீரா?”என்றார் டீக்கனார்

“ஆரை?”என்றார் அப்பா, துண்டுப்பாக்கை வாயில்போட்டபடி

”கண்ணாம்வீட்டு சரோஜாவ?”

அப்பா மகிழ்ந்து சிரித்து”அவ ஆளு இப்பமும் கெஜகில்லில்லா?” என்றார் திரும்பி என்னிடம்”என்னடா?”

“அப்பா, ஆனைகளை சமாதானப்பெடுத்தினது கருப்பனாக்கும்”

அப்பா சுட்டுவிரலில் சுண்ணாம்புடன் என்னை கூர்ந்து பார்த்தார்

“ரெண்டு ஆனைக்க காலிலயும் ஓரோ சொட்டு மூத்திரம்…” என்றேன்

டீக்கனார்”அம்பிடுதான்வே… ஓரு சொட்டு”

‘நாம சும்மா நாம பயந்ததாக்கும்” என்றார் பெருவட்டர்

‘நீ அம்மைகிட்ட போயி நிலவிளக்கு தேய்ச்சாச்சான்னு கேளு” என்றார் அப்பா.

***

முந்தைய கட்டுரைஅங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12