அங்கி [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும். அதுதான் அங்கே நாம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.
அந்த கேரளத்துச் சாலையும் இருட்டும் மழையும் உண்மையான ஒரு அனுபவம் மாதிரியே இருந்தது. சாலையில் யானை நின்றிருக்கும் விதமும் அதை பார்ப்பதும் மிகமிகத் துல்லியமான வர்ணனைகள். இன்றைக்கு எழுதுபவர்களைப் பார்க்கிறேன். அவர்களுக்கு இந்த நுட்பம்தான் வரவில்லை. யானையை முதலில் பார்க்கமுடியவில்லை. சொன்னதும் சட்டென்று தெரிந்துவிடுகிறது. அதன்பிறகுதான் இன்னொரு யானை தெரிகிறது அவை அங்கே அமைதியாக ஏதோ செய்துகொண்டிருக்கின்றன. அந்த டீடெயிலில்தான் கலை உள்ளது.
என் வாசிப்பில் இத்தகைய அபாரமான, மென்மையான பேய்க்கதைகளை எடித் வார்ட்டன் எழுதியிருக்கிறார். அந்த சர்ச்சும் அந்தச்சூழலும்கூட எடித் வார்ட்டனின் கதைகளில் வருவதுபோலத்தான் இருந்தன.
எஸ்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
அங்கி கதையை வாசிப்பது இன்றைக்கு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் சூழலில் ஒரு நல்ல பயணம் சென்றுவந்ததுபோல இருந்தது. அந்த நிலத்துக்கே சென்றுவந்ததுபோல இருந்தது
ஆனால் அந்த ஃபாதரின் உள்ளத்தின் ஓலம் அந்த பைபிள் வரிகளில் வெளிப்படுவது மனதை உருக்கும் அனுபவமாக இருந்தது. அவர் சொல்லும் ஒவ்வொரு வரியும் ஆழமானவை. அவர் அளிக்கும் அந்த பாவமன்னிப்பு ஒரு நல்ல புனைவுத்தருணம்
சிவக்குமார் எம்
சக்தி ரூபேண! [சிறுகதை]
அன்பு ஆசானுக்கு,
நலம், நலமறிய ஆவல். என் முதல் வாசிப்பு அனுபவ கடிதம் இது.
சக்தி ரூபேண! – முந்தைய இரு கதைகளைவிட வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததெனவேச் சொல்வேன்.
உழிச்சில் வைத்தியத்திற்கு எல்லா வடிவப் பொம்மை உடல் தான் எத்தனை பொருத்தவுடல். எல்லா சொல்கிறமாதிரி லட்சிய உடலல்லவா அது? உயிருள்ள தெய்வமல்லவா அவள் கொள்ளை அழகு பொம்மை உடல்.
ஸ்ரீ பயப்படும்படியாக வைத்தியசாலையில் பொம்மை வடிவவுடலை தவறாக பயன்படுத்தவோ, திருடி போகவோ வாய்ப்புள்ளது என்னும் நிலை தான் எத்தனை கேவலமானமாக ஒன்றாக உள்ளது. “இங்குள்ள வழக்கம் அப்படி” – எப்படியான நிலை இங்கே!?
எல்லா தொலைந்து போய் ஸ்ரீ எல்லாயிடங்களுக்கும் தேடிச் செல்லச் செல்ல, மனம் உண்மையாகவே பதைப்பதைக்கிறது. எல்லாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்திடவேண்டுமென ஆசைகொள்கிறது. ஊரில் எத்தனைப் பேருக்குத்தான் அவளைத் தெரிந்திருக்கிறது. காமத்திற்காக அவள் உடலை அனுபவித்து கொன்றச் சிதைத்தாலும் எல்லாவுக்கு என்றும் அழிவில்லை. உயிருள்ள உணர்ச்சியாக தேவியானவள் அவள் சக்தி ரூபமாய் வேறு வடிவத்தில் உறைந்திருக்கிறாள், உறைந்திருப்பாள் என்றும்!
பின்குறிப்பு: கதைகளின் ஊடுருவலாக நரம்புப் புள்ளிகள் அழுத்தம், வியர்வை வெளியேற்ற வழிகள், உழிச்சில் வைத்தியமுறை, பாகன் மத மந்திரங்கள், தைலவகைகள், ஆன்மீக கதைகள் (நிறைய விடுபட்டிருக்கலாம் குறிப்பிட இங்கு – 3 கதை மறுவாசிப்புகள் தேவை எனக்கு :-)) என அநேக தகவல்களையும், நல்ல தமிழ்வார்த்தைகளையும் தொடர்ந்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து வருவதற்கு நன்றிகள் பல.
முத்து காளிமுத்து
அன்புள்ள ஜெ,
யாதேவி முதல் சக்திரூபேண வரையிலான கதைகளை வாசித்தேன். இந்தக்கதைகளை வாசிக்கையில் பொதுவான வாசகர்களுக்கு என்ன சிக்கல் வருகிறது என்று பார்த்தேன். முக்கியமான சிக்கல், கதை எங்கே என்ற கேள்வி. உரையாடல்கள் வழியாகச் சிலகுறிப்புகள் தரப்படுகின்றன. ஒரு சின்ன காட்சி கடைசியாக வைக்கப்படுகிறது. கதை என ஒன்றுமில்லை. ஆனால் சக்திரூபேண வலுவான டிவிஸ்ட் உள்ள கதையாக உள்ளது.
இந்தக்கதைகளை வாசிக்க உரையாடலில் தரப்பட்டுள்ள மதம்சார்ந்த, பண்பாடு சார்ந்த நுட்பமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஒருவகையான உருவகங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. சாதாரணமகா அதைச்செய்ய நம்மவர்களுக்குப் பழக்கமில்லை. என் நண்பர்கள் பலர் கதைகளை வாசித்துவிட்டு பொதுவான ஒரு அர்த்தமே எடுத்தார்கள். இப்படியெல்லாம் பார்க்கலாம் என்று சொன்னபோது அப்படியா என்றார்கள். ஆனால் நிறைய கடிதங்கள் வழியாக அந்த வாசிப்பு வந்தபடியே இருந்தபோது அவர்களால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
ஆனால் கதை பிடிகிடைக்கவில்லை என்பதனால் ஆரம்பத்திலே சொன்ன அந்த நிலைபாட்டையே அப்படியே மேலும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கதையின் விஸ்தாரம் அந்த குறிப்புகளைக்கொண்டு எழுப்பிக்கொள்ளும் கேள்விகளில் வாசகர்களிடம்தான் உள்ளது என்றும் ஒரு வாசகன் அப்படி கேள்விகளை எழுப்பிக்கொள்ளவில்லை என்றால் அவனுக்கு அதிலிருந்து ஒன்றுமே மிஞ்சாது என்றும் நான் சொன்னேன். முழுக்கமுழுக்க வாசகர்களே உருவாக்கிக்கொள்ளவேண்டிய கதைகள் இவை
சக்திவேல்