அங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்

அங்கி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

அடுக்கடுக்கான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு மைய ஓட்டமாக மானுடம் பற்றிய ஒரு நெகிழ்வு உள்ளது. அங்கி ஒரு பேய்க்கதை. இந்தக்கதையை நீங்கள் எங்கோ எழுதியோ சொல்லியோ இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நினைவில்லை. அல்லது உண்மையாகவே நிகழ்ந்த கதையாக இருக்கலாம். செய்தியா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.

 

அந்தக்கதையிலிருந்து ஒரு தாவல். பேயிடமே பாவமன்னிப்பு கேட்பது. அது பாவம் செய்தவனை விடுவிப்பது மட்டும் அல்ல. பேயாக ஆனவரையும் விடுவிப்பதுதான். அவர் அந்த பழியில்தான் சிக்கிக்கொண்டிருக்கிறர். அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். மேலே செல்கிறார்.

 

கதையின் அந்தப்பகுதி பேய்க்கதைகளுக்குரிய பயங்கரத்துடன் இருந்தாலும் நெகிழ்வாகவும் இருக்கிறது.ஃபாதர் உண்மையில் அவர்களை பாவமன்னிப்பு கேட்கத்தான் அழைக்கிறார். திரும்பத்திரும்ப அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் பழிவாங்கவில்லை. வன்மம் கொள்ளவும் இல்லை. செத்தாலும் அவர் பாதர்தான், புனிதர்தான் என்று சாமுவேலின் மகன் சொல்கிறான். அதைத்தான் அந்தக்கதையின் மையமாகச் சொல்வேன்

 

நெகிழ்ச்சியான நிறைவான கதை

 

ஆர்.ராஜசேகரன்

 

அன்புள்ள ஜெ

அங்கி கதையின் மையமான வரி மலைமேல் நின்றிருக்கும் தனிமரம் என்பதுதான். அதுதான் இடிமின்னலை அடையும். அது எரிந்து அழியும். ஆனால் அதை திரும்பச் சொல்லும்போது எரிந்தாலும் அதுதான் வெளிச்சமும் தருகிறது என்கிறான். அது முன்னரே வருவதனால் கதையில் பிறகு வரும் ஃபாதருடன் நம்மால் உடனடியாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால் மொத்தமாகக் கதையை நினைவில் ஓட்டும்போது அந்தச் சித்திரம் தெளிவாகியபடியே வருகிறது. தனிமரத்தைத்தான் இடி தாக்கும். உண்மையில் ஊர்மேல் விழவேண்டிய இடியை அது வாங்கிக்கொள்கிறது. ஊருக்கு வெளிச்சமும் ஆகிறது. அவர் ஃபாதர் தானே, அவரால் ஆசீர்வாதம்தானே பண்ணமுடியும் என்றவரியில் நெகிழ்ந்துவிட்டேன்

 

எம்.சந்திரசேகர்

 

 

சக்தி ரூபேண! [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சக்தி ரூபேண கதையையும் பலர் பல கோணங்களில் வாசித்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஒருதடவைதான் வாசித்தேன். ஆனால் இந்தக் கடிதங்கள் வழியாக பலகோணங்களில் பலமுறை நினைவிலேயே வாசித்துவிட்டேன். ஒவ்வொரு வாசிப்புமே சரி என்றுதான் நினைக்கிறேன்

 

இங்கே ஒன்று தோன்றியது. அங்கே வரும்போது எல்லா அவளை ஆண்கள் தொடக்கூடாது என்கிறாள். ஆனால் இப்போது அவளுடைய உடம்பு அங்கே இருக்கப்போகிறது. இனி அவளை வைத்துத்தான் அங்கே எல்லாவற்றையும் படிக்கப்போகிறார்கள். அவர்களால் இயல்பாக அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அவளை மறந்து அதை ஒரு உடல் மட்டும் என்று பார்க்கமுடியுமா?

 

அவன் அவள் உடலில் எல்லா நுட்பங்களையும் அடையாளப்படுத்துகிறான். அதை அவன் வலி வழியாக அறிந்திருக்கிறான். அவர்கள் காமம் வழியாக அறிந்திருக்கிறார்கள். அந்த டெக்னாலஜி சரியாக அவனிடமிருக்கும் உழிச்சில் ரகசியமாகவே இருக்கிறது. அவன் காலைமட்டுமே தொட்டு அறிந்த எல்லாமே அவள் உடலில் இருக்கின்றன. அவள் உடலை தொட்டால் அது நரம்புகளில் எதிர்வினை செய்கிறது. இனி அதுதான் எல்லாவின் உடல் என்றால் அவனுடைய ஞானமெல்லாம் அதில்தான் இருக்கிறது இல்லையா?

 

ரவிச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

நீண்ட இடைவேளைக்குப்பின்னால் எழுதுகிறேன். வெண்முரசு வாசிக்கிறேன். எழுதமுடியாத நிலை. வேலைச்சூழல். யா தேவி வெண்முரசின் உலகத்திற்குள் உள்ள கதை. குறியீடுகள் வழியாகவே பேசும்கதை. நுட்பமான விளையாட்டுக்கள் கண்டடைதல்கள் ரகசியங்கள் எல்லாம் உள்ள கதை

 

ஆனால் இந்தவகையான கதைகளில் நீங்கள் வேகமாக காட்டிச்செல்லும் மனிதர்களின் குணச்சித்திரங்களை நான் கவனிப்பதுண்டு. அந்த கூரியர் கொண்டுவரும் சகாவு ஒரு அழகான கதாபாத்திரம். பத்துரூபாய்க்கு சண்டைபோட்டு பூர்ஷ்வா என்று திட்டுகிறான். ஆனால் ஒரு பிரச்சினை என்று வந்தால் அவன்தான் கூடவே நிற்கிறான். அதுதான் கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் குணம். நான் நாலாண்டுகாலம் கொச்சினில் வேலைபார்த்திருக்கிறேன். இப்படி பலரை பார்த்திருக்கிறேன்

 

ஆனால் அவனுடைய தலைமை சகாவுக்கு பஞ்சாயத்துத் தேர்தலில் தோற்க இது காரணமாக ஆகிவிடுமா என்றுதான் கவலை. அதேபோல போலீஸ்காரர்கள் ஒரு புகார்வந்ததுமே சரியாக குற்றவாளிகளை ஊகித்துவிடுகிறார்கள். கடைவைத்திருப்பவர் எல்லாவை ஐஸ்வரியமான பெண் என்கிறார். இப்படி ஒரு பெரிய சமூகச்சித்திரமே வந்துவிடுகிறது

 

எஸ்.ரவிக்குமார்

 

 

 

 

காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்

அன்புள்ள ஜெ

காளான் ஒரு நல்ல முயற்சி. காளான் என்று சொன்னதுமே காளான் அளிக்கும் மாய உலகத்தை சொல்லி கனவு கலைந்தது என்று கதையை முடிப்பார் என்று எதிர்பர்த்தேன். அதுதான் வழக்கமான டெம்ப்ளேட். ஆனால் அதற்குள் அந்த மாய உலகுக்குள்ளும் ஒரு மாயமாக இருந்துகொண்டே இருக்கும் தேடலைச் சொன்னதும் அப்படித்தேடிச்சென்றவர்களைப் பற்றிய குறிப்பும் தேடிவந்தவர்களைச் சுட்டுவதுபோல இருப்பதும் கதையை ஆழமானதாக ஆக்குகின்றன. கன்ஸீவ் பண்ணியிருக்கும் விதம் சிறப்பு. மொழியும் நுண்ணிய விவரிப்புகளும் இன்னும் மேம்படலாம். வாழ்த்துக்கள்

ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ,

 

காளான் முதற்கதை என்றவகையில் சிறப்பான ஒரு படைப்பு. ‘அறிவின் கனி விலக்கப்பட்டது’ என்ற கிறிஸ்தவத் தொன்மத்தை காளானுடன் இணைத்திருக்கும் நுட்பம் அந்தக்கதையை அழகாக ஆக்குகிறது. அது ஈடன் தோட்டம். ஆனால் அங்கே ஞானத்தின் கனி, துக்கத்தின் கனி இருக்கிறது. இங்கே இன்றிருக்கும் ஞானத்தின் கனி காளான்தான். நல்ல கதை. விஷ்ணுகுமாருக்கு வாழ்த்துக்கள்

 

அருண் கோபிநாத்

முந்தைய கட்டுரைதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதுளி [சிறுகதை]