“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆனையில்லா கதையை அமர்ந்து நாலைந்து முறை வாசித்தேன். ஆபீஸில் இன்றைக்கு முக்கியமான வேலையே இதை வாசித்ததுதான். நீங்கள் எழுதியதிலேயே நல்ல பத்து கதைகளில் ஒன்று. தமிழின் தலைசிறந்த பத்து பகடிக்கதைகளில் ஒன்று. சுந்தர ராமசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன் எழுதிய பகடிக்கதைகளின் உச்சம் அனாயசமாக சாத்தியமாகியிருக்கிறது
நுணுக்கமான பல கதாபாத்திரங்கள். பலருக்கு குரல் மட்டும்தான். யானைக்கு எண்ணைபூசினால் புண்ணியம், க்ரீஸ் பூசினால் அது இல்லை என்று சொல்லும் ஒருவர். பொளிச்சு அடுக்குவதில் குறியாக இருக்கும் ஆசாரி. எப்போதுமே மனக்குறையுடன் இருக்கும் சந்திரி. யானைபுகுந்த வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட கிழவி. வந்துகொண்டே இருக்கிறார்கள்
பேசிப்பேசி யானையைச் சுருங்கவைத்தல் என்பதுதான் கதை. எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கவடிவுக்கு அல்லது வளராதவடிவுக்கு கொண்டுபோனால் சின்னதாகிவிடும். சைக்காலஜிக்கல் கௌன்சிலிங் என்பதே இதற்காகத்தான். காணி வந்து செய்வதே அந்த கௌன்சிலிங்தான். இயல்பாக யானையை உருவி பின்னால் எடுத்துவிட்டு கிளம்பிச் செல்கிறான். உலகிலுள்ள அனைத்தையும் சின்னதாக ஆக்கிவிடும் ஆற்றல்கொண்ட மந்திரவாதி அல்லவா அவன்?
எத்தனை நுட்பமானா உள்ளோட்டங்கள். யானையின் குண்டி கிரீசில் பளபளப்பதைக் காண்கையில் தந்தையரின் பூடகப்பேச்சு. நடுவே முழிக்கும் மகனின் இங்கிதமான அமைதி. “இதேபோல பல நாயர்மாரையும் வீடுகளில் இருந்து மீட்டிருக்கிறேன்” என்று சொல்லும் மந்திரவாதி அளிக்கும் குறிப்பு
சமீபத்தில் இப்படி ஒரு கொண்டாட்டமான கதை வாசித்ததில்லை
எம்.பி.சாரதி
அன்புள்ள ஜெ
கதையில் பல நுட்பங்கள். பலவற்றை நானே எண்ணி எண்ணி சிரித்தேன். குடைமாதிரி மடக்கிவிடலாம் என்று சொல்லும் ஆள்தான் கடைசியில் வெண்முரசு எழுதப்போகிறார். நல்லவேளை விளக்கு கொளுத்திவைத்தால் யானை மறைந்துவிடும் என்று சொல்லவில்லை
ஒரு சின்ன நுட்பம். அதை என் நண்பர்கள் கவனிக்கவில்லை. யானையை அந்த பொறியிலிருந்து விடுவித்த பூசாரியால் அவருடைய மூன்றையும் சேர்த்துப்பிடித்த பொறியிலிருந்து தப்பமுடியவில்லை. அது ஆண்களுக்கு ஒரு ஐஸ்வரியம் என்று ஒருவர் நியாயப்படுத்தவும் செய்கிறார்
எத்தனை வேடிக்கைகள். சொல்லிக்கொண்டே செல்லலாம்.
ஜெயராமன்