“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான்.
“ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய்.
“இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா நாம சோடா குடிக்க, இவரு ரம்மு குடிக்க மாதிரில்லாடே இருக்கு” என்றான் பிரபு.
“வெங்காயமும் கோக்கும் நல்ல காம்பினேஷன்… ஜிர்ர்னு இருக்கும்” என்றேன்
“இது இந்த ஐயர்மாரு கறி திங்கமாட்டேன்னு சொல்லி சீஸை தின்னு குசு விடுத மாதிரியாக்கும்” என்றான் மாணிக்கம்.
“ஆப்ரிக்காவிலே என்ன பிஸினஸ்?” என்றான் ராபின்ஸன்.
“விவசாயம்…” என்றான் சாம்
“விவசாயமா, ஆப்ரிக்காவிலேயா? என்னடே சொல்லுதே?” என்று பிரபு கேட்டான். “நீ இந்த ஆன்ம அறுவடைய உத்தேசிக்கல்ல்லா?”
“டேய், நான் சொன்னா உனக்கெல்லாம் நம்பிக்கை இல்லை. நெட்ல போயி தேடிப்பாரு. இந்த உலகத்திலே இதுவரை விவசாயம் செய்த நிலத்துக்க பாதி அளவு நிலம் ஆப்ரிக்காவிலே சும்மா கிடக்கு. சூடான், காங்கோ, ஜாம்பியா எல்லா நாட்டிலேயும். காட்டுநிலம் இல்ல. அருமையான புதர்நிலம், புல்வெளி. மண்ணில வளம் ஜாஸ்தி. தண்ணிக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை” என்று சாம் சொன்னான். “உலகத்திலே இருக்குத எல்லா உணவுப்பஞ்சத்தையும் அந்த நிலத்தை மட்டும் வைச்சு தீத்துப்போடலாம்”
“பின்ன எதுக்கு விவசாயம் பண்ணாம விட்டானுக?”.
“அவனுகளுக்கு தோணல்ல” என்றான் சாம் “அவனுக அப்டியே ஜீவிச்சு வந்திட்டானுக. இப்ப அங்க பட்டினி உண்டு. ஆனா அவனுகளுக்கு அதுவும் ஒரு ஜீவிதமாக்கும். நான் காங்கோவுக்கு போனது வேற ஒரு தொளிலுக்காக”.
“திருப்பூர் சட்டைய விக்கத்தானே? அது இவனுக்க ஏளாமத்தே தொளிலு” என்றான் ராபின்சன்
“டேய் சங்கில கொள்ளுத பேச்சு வேண்டாம் கேட்டியா?” என்று சாம் கோபமாகச் சொன்னான்
“தமாஷ் வேண்டாம்… அவனுக்கு பிடிக்காது” என்று நான் சொன்னேன்.
“டேய் என்னமாம் ஒரு பிஸினஸு செய்து ஜீவிக்கணும்னு நினைக்கது தப்பா? எனக்க அப்பா என்னைய பாஸ்டரா போலே, கர்த்தாவுக்க வார்த்தையை சாதிகளுக்கு கொண்டுட்டுப்போன்னு சொல்லுதாரு… நான் மானமா ஜீவிக்கணும்னு நினைக்கேன். அது தப்பா?”
“அவன் கெடக்கான், நீ சொல்லுடே” என்றன் ஸ்டீபன்
“நான் காங்கொவுக்கு போனப்ப அங்க எல்லாம் சுபிச்சம்னாக்கும் நினைச்சேன். நல்ல பச்சைப் பச்சைன்னு காடும் எள்ளுப்புண்ணாக்கு மாதிரி மண்ணும். செடியெல்லாம் என்ன செளிப்புங்குதே? ஆனா ஒருத்தனுக்கும் பனியன் வேண்டாம். எனக்க கிட்ட பனியன் வாங்கினவனை ஆளையே காணல்ல”
“தேடி பிடிக்கவேண்டியதுதானே?”
“காங்கோவிலே ஒருத்தன அவனே தேடிக் கண்டுபிடிச்சாத்தான் உண்டு” என்றான் சாம்
அதற்கு சிரிப்பதா என்று தெரியவில்லை. “எம்புடு பணம் போச்சு?”
“பனியனிலே பன்னிரண்டு லெச்சம்… மொத்தமா”
“உனக்க அப்பன் உன்னைய கொல்ல வந்திருப்பாரே?”
“அவருக்கு இன்னும் அந்தக் கணக்கு தெரியாது. அம்மை ஆறடி எஸ்டேட்டுக்க ஆதாரப்பத்திரத்தை எடுத்து தந்தா. அதை அடமானம் வச்சு அந்தப் பணத்தை எடுத்தேன். பேங்குகாரன் தேடி வாறதுக்குள்ள பணம் சம்பாதிச்சு பணத்தை திரும்ப வச்சுப்போடலாம்னு நினைச்சேன்”
“அப்டி இதுவரை எம்பிடுமட்டம் திரும்ப வச்சிருக்கே?” என்றான் மாணிக்கம்
“லே தாயோளி… எனக்க சராயத்தை குடிச்சிட்டு எனக்கே ஆப்பு வைக்குதியா? எந்திரிலே… ஏலே எந்திரிலே… வச்சி காச்சிருவேன்… வெட்டி புதைச்சிருவேன்”
“லே, லே, லே, அடங்கு… அடங்குலே…அவன் என்னமோ சொல்லுகான்… உனக்கென்ன? அவன் நம்மள மாதிரி பைபிள படிச்சவனா? விவரம் இருக்காதுல்லா… நீ இருடே… இந்த ஒரு மடக்கு குடி.. நான்லா சொல்லுதேன் குடிலே”
சாம் மிடறு குடித்துவிட்டு “அதும் போச்சு” என்றான்
“பொறவு?” என்றான் பிரபு
“பொறவென்ன? அப்டியே அங்கிண லாந்துறப்ப ஒரு ஏஜெண்டு அங்கிண ஒரு பிளான் இருக்கப்பட்டத சொன்னான்”
“பிளானுகள் உலகம் முளுக்க நிறைஞ்சிருக்கு. மக்கா இந்த பிஸினஸ் பிளானுண்ணு சொல்லுகது ஒருமாதிரி ஃபங்கஸாக்கும். நம்ம தொடையிடுக்குலே இம்புடுபோல ஈரமிருந்தா கேறி முளைச்சிரும். பின்ன சொறிஞ்சு சொறிஞ்சு புண்ணாக்கி..” என்றான் மாணிக்கம்
“லே இந்த நாயி போனாத்தான் நான் பேசுவேன்”
“அவன விடு… அவன் வெள்ளத்துக்க்குமேலே சொல்லுதான்… நான்லா கேக்குதேன்”
“அவன் சொன்ன பிளானாக்கும்”
“என்னது?”
“காங்கோவிலே ஒரு பிளான். நாம மண்ணு எம்பிடுவேணுமானாலும் எடுத்துக்கிடலாம்… ஏக்கருக்கு இந்திய ரூவாயிலே நாநூறுரூபா டேக்ஸ் கட்டினாப்போரும். விவசாயம் பண்ணலாம். லாபம் முளுக்க நாமே எடுத்துக்கிடலாம்… ஒத்தபைசா டேக்ஸ் இல்ல. ஒரு பைசா ஆருக்கும் குடுக்கவேண்டாம்”
“தண்ணி உண்டாலே அங்கே?”
“எல்லாம் உண்டு…”
“பின்ன?”
“ஒரு கண்டீசன்…அங்க உள்ள ஆளுகள வச்சு வேலைசெய்யணும்.. ”
“ஏன் அப்டி குடுக்கான்?”
“அவனுக்கு விவசாயம் செய்ய இன்வென்ஸ்ட்மெண்ட் இல்லலே”
“ஓ” என்று நான் சொன்னேன்
“நீ கேறிப்பிடிச்சுப்போட்டே”
“ஆமலே… நான் அப்டி சொப்பனம் கண்டேன்… எல்லா கடனையும் ஒட்டுமொத்தமா அடைச்சணும். கையிலே ஒரு நாலஞ்சு லெச்சம் மிச்சமானபிறவு வந்து நேசையன்பெருவட்டரிட்ட சூடா நாலு வார்த்தை கேக்கணும். தாயளி, என்னண்ணு துள்ளுதான். பெத்த அப்பன்தான், அதுக்காக? மட்டு மரியாதைன்னு ஒண்ணு வேண்டாமா? எப்பமாவது அந்த தாயளிய நான் மரியாதைகெட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டுண்டா? நீ சொல்லுலே”
“எங்க!” என்று ஸ்டீபன் சொன்னான்
“பிறவு என்னலே” என்றேன்
“நான் இங்க வந்து அம்மை காலை பிடிச்சேன். அவ நாலு வார்த்தை கேட்டா. செருபபலே அடிப்பேன்னு சொன்னா. சோறு திங்காம எட்டுநாள் கிடந்தேன். பிறவு இறங்கிவந்து திருவனந்தபுரம் வீட்டுக்க ஆதாரப்பத்திரத்தை தந்தா. வந்து கையெழுத்தும் போட்டா. அம்பதுலெச்சம் ரூபா… அப்டியே கொண்டு போனேன்”
“அம்பது லெச்சம்!” என்றான் மாணிக்கம் “காங்கோவுக்கு நாம நம்ம போன ஜென்மத்துக் கணக்கிலே குடுக்கவேண்டி இருந்திருக்கு…”
“சும்மா கெடலே”
”‘அமெரிக்காவுக்கு குடுத்திருந்தா நம்ம கடனுலே களிஞ்சிருக்கும்”
”நீ சும்மா இருப்பியா மாட்டியா?”
“ஏம்லே அம்பதுலெச்சம்?” என்றேன்
“லே ஒரு தொளிலுண்ணா பெரிசாட்டு செய்யணும்லா? நான் என்ன இருந்தாலும் நேசையன் பெருவட்டருக்க மகன்லா? கறுப்பனுக நம்மள பத்தி என்ன நினைப்பானுக”
“அது செரியாக்கும்” என்று முருகேசன் கொஞ்சம் ஊற்றிக்கொண்டான். “நாளைப்பின்ன பெண்ணு குடுக்க மாட்டனுகள்லா”
“நாநூறுஏக்கர் மண்ணு… புதிய கறுத்த மண்ணு. நடுவிலேயெ ரெண்டு ஓடையிலே நல்ல தண்ணி. ஒரு குளமும் உண்டு… நல்ல ஏத்தன்வாழை கொண்டுபோயி நட்டேன்.”
“வேலைக்கு அவனுக தானோ?”
“ஆமா… அவனுக வேலையெல்லாம் கணக்குதான்.. கூட்டமா வருவானுக. அம்பது நூறுன்னு.வாறப்பவே டான்ஸ் ஆடிட்டே வருவானுக. அதிலே பத்துபேரு வேலைசெய்வான். மத்தவன் படுத்து தூங்கிருவான். என்னமாம் வேட்டை கிடைச்ச அந்தாலே அப்டியே போயிடுவானுக. அடிபிடி வந்தாலும் போயிருவானுக. ஆனா சம்பளம் குடுக்கிறப்ப பாத்தா ஏளெட்டு மடங்கு ஆளுக நிப்பானுக… அந்த ஏரியாவிலே உள்ளவன் எல்லாரும் வந்திருப்பானுக. அத்தனைபேருக்கும் குடுக்கணும்”
“சம்பளமா?”
“ஆமா, அவனுகளுக்கு வேலைக்கும் சம்பளத்துக்கும் சம்பந்தம் உண்டுண்ணு தெரியாது… எல்லாருக்கும் ஒரே சம்பளம்… வேலை செய்தவனுக்கும் செய்யாதவனுக்கும் ,அந்தால நிண்ணவனுக்கும், அந்தவலியே போனவனுக்கும் எல்லாம்”
“அதெப்டிலே சமாளிச்சே?”
“என்ன செய்யுதது? பாதிவேலை டிராக்டர் புல்டோசர் வச்சு. ஆனா ஒண்ணு இவனுகளுக்கு சம்பளமா என்ன குடுத்தாலும் செரி…”
“செரி” என்றேன் “நட்டாச்சு”
“மத்தபடி ஒரு வேலை இல்லை. தண்ணி அதுவா பாயும். வாழை மேலே வந்தது.. ஏல நாநூறு ஏக்கர் வாளை… காடுமாதிரி… மேலே நின்னு பாத்தாம் நெஞ்சடைச்சுப்போகும். பச்சைப்பச்சேண்ணு… என்னா வாளை.. நல்லா மூடுபெருத்த மலையாளத்துக்குட்டி மாதிரி”
“உள்ளதா?”என்று பிரபு ஆவலாகக் கேட்டான்
“பின்னே?
பிரபு கிளுகிளுத்துச் சிரித்தான்.
“கொலை?” என்றேன்
“கொலைச்சுதே… ஓரோ காயும்…”
“நீ வர்ணிக்காண்டாம் கேட்டியா… சங்கதிய சொல்லு”
“நாநூறு ஏக்கர் நேந்திரங்கொலை…. ஏலே ஆயிரம் லாரியிலே ஏத்துற அளவு வாளைக்கொலை… நினைச்சுப்பாத்தா எனக்கு ராத்திரி உறக்கமில்லை.. நேசையன் பெருவட்டரை நேரிலே பாத்து சொல்லவேண்டியதை முளுக்க நூறுமட்டம் மனசுக்குள்ள சொல்லியாச்சு”
“என்ன கடைசியிலே? பைசா எப்ப்டி மண்ணாப்போச்சு? அதைச்சொல்லு” என்றான் மாணிக்கம் உற்சாகமாக.
“லேய், இந்த நாயை வெட்டிட்டு நானும் சாவேன்… ஒண்ணாப்படிச்சவன் எண்ணு பாத்தா… ஏறிட்டிருக்கான்…வெட்டீருவேன்”
“நீ சொல்லுடே… நீ எதுக்கு சத்யவேதம் இல்லாத்த நாயி பேச்ச கேக்குதே… நீயும் நானும் வேதக்காரனுகள்லா? கர்த்தாவை நினைச்சு நீ சொல்லு”என்றான் ராபின்சன்
“ஆமா” என்று சாம் சொன்னான் “ஏசுவே ராசாவே” என்று மீண்டும் ஊற்றிக்கொண்டான்
“அல்லேலூயா” என்றான் ராபின்சன்
சாம் “நான் அப்டி சொப்பனம் கண்டுட்டு இருக்கையிலே ஒருநாள் ராத்திரியிலே டொம்மு டங்கு டொம்மு டங்குன்னு ஒரு சத்தம்… என்னமோ ஆடுகானுகபோலண்ணு இன்னொரு லார்ஜை சாத்திட்டு மறுபடி தூங்கிட்டேன்… காலம்பற கண்ணு முளிக்கிறப்ப ஒம்பதேமுக்கால் மணி”
“அது மத்தியான்னம்லா?” என்றான் மாணிக்கம்
“நீ பேசாதே… நீ சாத்தானை கும்பிடுதவன்”
“நீ சொல்லுலே… நீ கர்த்தாவ நினைச்சு சொல்லு” என்றேன்
“நான் எந்திரிச்சு வெளியே போனா நம்ம தோட்டம் முளுக்க ஆளுங்க… ஆயிரம் ரெண்டாயிரம் ஐயாயிரம் ஆளுக… ஏலே சவேரியார் கோயில் திருவிளா மாதிரி கூட்டம்”
“எதுக்கு?”
“என்னாண்ணு தெரியல்ல.. நான் எறங்கி போனா நின்னு வெறச்சுட்டேன்”
“என்ன செய்யானுக?” என்று பிரபு ஆவலாக கேட்டான்
“மலையிலே இருந்து எறங்கி வந்திருக்கானுக… வந்திட்டே இருக்கானுக. இன்னும் ஆளு வரட்டும்னாக்கும் முரசுகளை அடிக்குதது… ஒருத்தன் மரத்துமேலே ஏறி நின்னு அடிக்கான்… கீள ஆணு பெண்ணு பிள்ளை குட்டி கிளம் வங்கிளம் எல்லாருமா சேர்ந்து உக்காந்து நேந்திரம்காய வெட்டி இட்டு தீயிலே சுட்டு திங்குதானுக. பெரிய பானைய கொண்டாந்து அவிச்சு திங்குதானுக… ”
“உனக்க வாளையையா?”
“ஏலே, அவனுகளுக்கு அப்டி வேறுபாடு இல்லை… வெளைஞ்சிருக்கு, திங்குதானுக… ”
“நீ என்ன செய்தே?”
“நான் என்ன செய்ய? பாத்துட்டு நின்னேன். அவனுகளுக்கு தீனி வெறி..”
“லே, நீ போலீஸை விளிச்சா என்ன?”
“போலீஸும் வந்து சட்டைய களட்டீட்டு இருந்து வாளைக்கா திம்பானுக… லே, அவனுகளுக்கு அதெல்லாம் தெரியாது”
“உனக்க கையிலே துப்பாக்கி உண்டுல்லா?”
“உண்டு…ஒரு ஸ்மித் ஆண்ட் வெசன் ஷாட் கன்னு… இன்னொண்ணு சாக்கோ டபிள்பேரல் ரைபிள்”
“வச்சு காச்சவேண்டியதுதானே நாயிங்கள?” என்று பிரபு சொன்னான்.
“லேய், கர்த்தருக்கு அடுக்காம பேசப்பிடாது… இவன் ஆருலே நாறப்பேச்சு பேசுதான்… லே அவனுக ஏதேன் தோட்டத்திலே இருக்கமாதிரி சந்தோசமா இருக்கானுக… மனுசனுக்கு திங்குறதிலே அப்டி ஒரு சந்தோசம் இருக்கும்னு நான் கண்டதில்லே கேட்டியா? அப்டி கொண்டாடுதானுக. ஏலே, வெறும் வாளைக்கா. உப்புகூட இல்ல.. திங்குதானுக திங்குதானுக அப்டி திங்குதானுக”
“ஆரானுக்க மொதலுல்லா, நல்ல ருசியாட்டிருக்கும்” என்றான் மாணிக்கம்
“நீ சொல்லுவே… ஏலே, நாம நட்டு வளத்தா நம்மால மனசறிஞ்சு குடுக்க முடியாது கேட்டியா? கணக்கு இருக்கும்… உளைச்ச கணக்கு, செலவாக்கின கணக்கு.நம்ம கணக்கிலே நாம செலவாக்கினது மட்டும்தான் வாளைக்க வெலை. மண்ணு குடுத்ததும் வானம் குடுத்ததும் கணக்கு வராது… அவனுகளுக்கு அதெல்லாம் இல்ல. எல்லாருக்கும் குடுக்கானுக. நாளைக்குன்னு ஒரு துண்டு எடுத்து வச்சுகிடல்ல. எடுத்து கொண்டுபோகல்ல. அங்கியே இருந்து திங்கியானுக.. ஒரு கிளவன் என்னையப்பாத்து மூஞ்சியெல்லாம் சுருங்கி கண்ண இடுக்கி சிரிச்சுட்டு வா வந்து இருந்து தின்னுன்னு விளிச்சான்… கையிலே ஒரு சுட்ட வாளைக்கா. அதை நீட்டி இந்நான்னு அருமையாட்டு சொல்லுதான்… நான் அப்டியே அளுதுபோட்டேம்ல மக்கா”
“நீ அதை தின்னியா?”
“பின்ன? நானும் இருந்து தின்னேன்.. நல்ல ருசியாக்கும் கேட்டியா?” என்றான் சாம் நாணத்துடன் புன்னகைத்து. “மொத்த வாளைக் காயையயும் தின்னு தீர்க்க எட்டுநாளாச்சு…”
“எட்டுநாள் நீயும் இருந்து தின்னியோ?”
“ஆமா, நேரம் போறதே தெரியல்ல. தின்னுகது டான்ஸ் ஆடுகது மறுக்கா திங்குதது, பிறவு உறங்கி எந்திரிச்சு மறுக்காவும் தீனி…. வாளைக்காய் மட்டும்தான்…”
“எட்டுநாள் பீச்சியிருக்குமே?”
“லே, இவனை நான் கொல்லுவேன்… தாயளி லே எனக்கை பைசாவிலே குடிச்சேல்ல? என் பைசாவ குடுலே.. ஏல இப்பம் குடுலே…”
“சாம், நீ அடங்குலே.. அவனை நீ என்ன மசுத்துக்கு செவிகுடுக்கே?” என்றேன்
”பிறவு?”
‘பிறவு என்ன? ஏலே அன்னன்னைக்குள்ள அப்பத்த எங்கிளுக்கு தாரும் ஆண்டவரேன்னு கேக்குதோம். வீட்டிலே பத்தாயம் நெறைய நெல்லும் பேங்கிலே அக்கவுண்டிலே பணமும் வச்சிருக்கவனுக்கு அப்டி கேக்க யோக்கியதை உண்டாலே?” என்றான் சாம் . ”அதைக் கேக்க யோக்கியதை உள்ளவனுக அவனுக மட்டுமாக்கும். அங்க நின்னா இந்தா இந்தாலே, ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து நிக்குதது மாதிரி இருக்கும்.கொஞ்சம் மேலே குதிச்சா அவர தொட்டுப்போடலாம்னு தோணும்”
”சரி கடைசியா நீ என்ன என்ன செய்தே?”
“கடைசியாட்டா? என்ன செய்ய? அம்பதுலெச்சம் வெடி… அந்தால திரும்பி வந்தேன்… இந்நா இருக்கேன். ஒரு பத்துநாளு காத்துபோன மாதிரி இருந்தேன். அம்மையாக்கும் அம்பதினாயிரம் ரூபாய எடுத்து தந்து இந்நா மக்கா போயி உனக்க கூட்டுகாரன்மார பாருண்ணு சொன்னா… அந்த பைசாவிலே குடிச்சுட்டு இவன் என்ன பேச்சு பேசுதான் பாத்தியா?”
“லே, வேதமில்லாத கூட்டம்லா? நீ இந்தா இத அப்டியே ஊத்திக்கோ…”
“சிக்கன் எங்க?”
“அத அப்பமே தின்னாச்சே”
“இனி வல்ல பிஸினஸ் பிளானும் உண்டாலே சாம்?” என்று மாணிக்கம் கேட்டான்.
“இனி உனக்க அம்மைய வச்சு பிஸினஸ் செய்வேன்…லே, எனக்க கிட்ட வெளையாட்டு வேண்டாம் கேட்டியா?”
“செரி விடுலே…”
“சாம், நீ உனக்க அப்பன் சொல்லுகது மாதிரி கர்த்தருக்க சோலிய செய்லே” என்றேன்.
“ஏம்லே?’ என்று அவன் ஏமாற்றமாகக் கேட்டான்
“கர்த்தரு உனக்க கிட்டக்க இருக்காருலே”
“போதகரா போனா..” என்றான் சாம்
“ஏன்” என்றேன்
“தண்ணியடிக்கப்பிடாதுல்லா?” என்றான் தயக்கமாக.
“அதெல்லாம் அடிக்கலாம்லே… விசுவாசிகளுக்கு தெரியாம நீ இங்க திருவனந்தபுரமோ நாகர்கோயிலோ வந்தா போரும்லா?”
“ஏசுவானவரு என்ன சொல்லுவாரு?”
“ஏல, அவருக்கும் ஒரு ஸ்மால ஊத்தி கையிலே குடுப்பம்… மனுசன தெரியாத சாமி உண்டுமா?”
‘ஜீஸஸ் இஸ் எ நைஸ் சாப்” என்றான் பிரபு. அவனுக்கு போதை ஏறிவிட்டால் இங்கிலீஷ்தான் வரும்.
“ஆனா பைபிளு..”
“லே, ஏசுவுக்கு பைபிளு தெரியுமா? அவர சிலுவையிலே அறைஞ்ச பிறவுல்லா பைபிளை எளுதினாவ? அதில உள்ளதை அவரு என்னத்தை கண்டாரு? சும்மா சலம்பிக்கிட்டு… ஏசுவானவரு நீ சொன்னா கேப்பாரு… அருமையானவராக்கும்”
“ஓ” என்று அவன் சந்தேகமாகச் சொன்னான்
“நீ என்ன சொல்லுதே? ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலே குடிச்சிருப்பாக” என்றேன்
“உள்ளதா?” என்றான் சாம்.
“பின்னே?”
“பைபிளிலே உண்டோ?”
உண்டுண்ணுதான் நினைக்கேன்… தேடிப்பாக்கணும்”
“உள்ளதச் சொன்னா நான் இதுவரை பைபிளை படிச்சதில்லே” என்றான் சாம்
“நீ என்னத்துக்கு அதை எல்லாம் படிக்கே?ஏசுவானவருக்கு என்னமாம் சொல்லுகதுக்கு உண்டும்னா உனக்க கிட்ட அவரு சொல்லட்டும்”
”ஆமா, அது மரியாதை” என்றான் மாணிக்கம் “ஆணுங்க பேச்சு ஆணுங்க நடுவிலே”
லே, நாணப்பனை விளிச்சு நாலு சிக்கன் ஃப்ரை சொல்லு மக்கா” என்று நான் சொன்னேன்
***