பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான நிலமும் இலைப்பரப்புகளும் மென்மையான ஒளியுடன் இருந்தன.
”நேரமாயிடும்னு சொன்னேனே” என்றான் செபாஸ்டியன். “வேண்டாம் வேண்டாம்னு சொன்னா கேக்கல்ல. வாகைமண்ணு வண்டல்மண்ணுண்ணு அனத்தினே”
“செரி, நேரமானா என்னடே? போ… “
“போறதுக்குள்ள இருட்டீரும்” என்று செபாஸ்டியன் சொன்னான். “வளியிலே வெளிச்சமும் இருக்காது. ரோட்டிலே ஆனை எறங்கி நின்னா ஒண்ணும் தெரியாது. நேராட்டு கொண்டு அதுக்க குண்டியிலே ஏத்திரவேண்டியதுதான்”
“ஆனை என்னத்துக்கு ரோட்டிலே நிக்கணும்?”
“டேய் நீ பாம்பே ஆளு… ஆனையப்பத்தி உனக்கு என்ன தெரியும்? மழைநேரத்திலே ஆனை காட்டுக்குள்ள மரத்துக்கு கீழே நிக்காது… ரோட்டிலே கொஞ்சம் சூடும் இருக்கும்”
“அது காட்டிலே இருக்கிற மிருகம்லா?”
“அடுத்த வளைவிலே நிக்கும். கிட்டத்திலே கொண்டு விடுதேன். நீயே சொல்லு, என்னத்துக்கு வளியிலே நிக்குதே, நீ காட்டுக்குள்ள இருக்கப்பட்ட மிருகமாக்கும்ணு… வாறானுவ கோலையும் தூக்கிட்டு”
“இருடே. இப்பம் என்ன? ராத்திரி பத்துமணிக்குள்ள கட்டப்பனை போகணும்… போலாம்ல?”
“ராத்திரி எந்நேரம் ஆகும்னு ஆரு கண்டா? இப்பம் வாகமண்ணுல புல்லு பாக்கல்லேண்ணா என்ன கொறவு?”
‘நீ சொல்லுவே…. நான் அதேமாதிரி ஒரு எடம் பாத்ததில்லை. அதிலயும் இந்த சாரல்மழையிலே பச்சைப் புல்லு அலையலையா கண்ணு நிறைய கிடக்குதத பாக்குறது… டேய் நான் அப்டியே அளுதுபோட்டேன்”
“ஏன் பம்பாயிலே புல்லு இல்லியா?”
“இல்ல”
‘அப்பம் என்னண்ணு பசு வளக்குதாக?”
“அதுக்கு பளைய பேப்பர் குடுப்பாகண்ணு நினைக்கேன்”
“தினத்தந்தியோ?
“இந்திப்பேப்பர்”
அவன் சிந்திப்பது தெரிந்தது. இந்திப்பேப்பர் தின்னும் பசு!
“பாலு நாத்தமடிக்குமோ?”
“பின்னே, இந்திக்கு ஒரு கெட்ட வாடை உண்டு பாத்துக்க” என்றேன்
“ஆமா’ என்றான்
இருபக்கமும் காடுகள் இருட்டாக ஆகிவிட்டிருந்தன. அவை கருமை என்று நினைத்தபோது கருமை. பசுமை என நினைத்தபோது பசுமையும்கூட. மலைச்சரிவுகளில் விழுந்த நீரோடைகள் வெள்ளிச்சரடுகளாக ஓளிவிட்டன
“பாம்புச்சட்டை கணக்காட்டுல்ல தொங்குது” என்றான் அருவிகளை பார்த்தபடி.
“பாம்புச்சட்டை இப்டித்தான் இருக்குமோ”
“பிளாஸ்டிக் உரச்சாக்கு உண்டுல்லா, அதுமாதிரி ஒரு மின்னுத வெள்ளை. மீனுக்க வாலுமாதிரி…”
நான் அதைக் கற்பனையில் பார்க்க முயன்றேன்
செபாஸ்டியன் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்த முயல அது ஈரச்சாலையில் வழுக்கி பக்கவாட்டில் சென்றது. தேயிலைத்தோட்டத்தின் வேலியை முட்டி நின்றது
“என்னது?”
“அங்கபாரு”
“என்ன அங்க”
“லே பாருலே”
நான் கூர்ந்து பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை
“என்ன?”
“உனக்கு கண்ணு என்ன சூத்திலயா இருக்கு.. ஆனைலே”
அந்தச் சொல் காதில் விழுந்ததுமே நான் யானையை பார்த்துவிட்டேன். சாலையில் நின்றிருந்தது.
“ஆனை!” என்றேன்
“ஒண்ணுல்ல, மூணு”
அப்பால் இரண்டு நின்றிருந்தன. தார்ச்சாலையை துதிக்கையால் துழாவிக்கொண்டிருந்தன
“என்ன செய்யுது?”
“ரோட்டிலே கிடக்குத டீசல் மணம் ஆனைக்கு பிடிக்கும்… நல்லா ரெசிச்சு இளுக்கும்”
யானை எங்கள் மணத்தை பெற்றுக்கொண்டு ”ர்ர்ரம்ம்பாய்!” என்றது
“அன்பாட்டுதான் சொல்லுது… ஆனா கிட்டக்க போக முடியாது…வெலகீருவோம்’
அவன் காலை உதைத்து உதைத்து பைக்கை பின்னால் தள்ளி ஓரமாக வந்தான்
“லாரி வல்லதும் வந்தா அதுவே ஒதுங்கி வளிவிடும்… அந்தால பின்னாடி நாமளும் போயிடலாம்”
“இந்நேரத்திலே ஏது லாரி? நாம இதுவரை ஒரு லாரியையும் பாக்கல்ல”
“பாப்பம்…” என்றான் செபாஸ்டியன்
“ஆரன் அடிச்சா என்ன?”
“சைடுகுடுக்க அது என்ன டாங்கரா? ஏல, ஆனையாக்கும். சில ஆரன் கேட்டா அதுகளுக்க பாசையிலே சண்டைக்கு வாலே சுண்டைக்கா பயலேன்னு அர்த்தம். கேறி வந்துபோட்டுன்னா பிறவு பீ கலங்கிப்போயிரும் பாத்துக்க”
“பாப்பம்”
“என்ன பாக்கிறது? மளை வந்திட்டிருக்கு”
“போயிடலாம்”
“கட்டப்பனை வரை ஒரு கடையோ திண்ணையோ இல்ல… நம்மகிட்ட மளைக்கோட்டும் இல்ல. நனைஞ்சு ஊறி செத்த மீனு கணக்கா ஆயிருவோம்…”
“நீ சும்மா பயமுறுத்தாதே”
“நான் சொன்னேன்லா? கட்டப்பனை தூரமாக்கும், வாகமண்ணுக்கு நாளைக்கு வரலாம்னு”
‘நாளைக்கு திரும்ப இந்தவளியா வரமாட்டோம்… அந்தால கேரளாவுக்கு எறங்கி திரும்பிரணும்… எனக்கு மத்தநாளு சாயங்காலம் ஃப்ளைட்டு”
“அம்மைய விளிச்சிட்டு வந்திருக்கலாமே”
“அம்மை மும்பைக்காரி… அவளுக்கு தெக்குமண்ணு பிடிக்கவே பிடிக்காது. அப்பன் இருந்தப்ப நாலேநாலு தடவை ஊருக்கு அவரு மட்டும் வந்திருக்காரு… அம்மை வந்ததே இல்லை. எங்களையும் வரவிட்டதில்லை”
“உனக்க அக்கா இப்பம் ஒருதடவை வந்தாள்லா?”
“அவளுக்க ஹஸ்பெண்ட் இரணியல் பக்கமாக்கும்… அவ நாலஞ்சு மட்டம் வந்திருக்கா. நான் இது முதல்தடவையாட்டு வாறேன்”
“இங்கிண என்னடே பாக்க இருக்கு? நாகருகோயிலே குப்பையும் கூளமுமாட்டு இருக்கு. அருமனையும் குலசேகரமும் வெறும் ரெப்பர் காடு…”
”ஆமா அதாக்கும் இங்க வந்திட்டு போலாம்னு நினைச்சேன்”
“சாமுவேல் மாமா இங்க இருந்திருக்காருல்லா?”
“ஆமா, அம்பது வருசம் முன்ன… அப்பாவுக்க அப்பா ஏசுவடியான் நாடாரு குலசேகரம் கல்லுபள்ளியிலே கோயில்குட்டியா இருந்தாரு. அவரு சாவுறப்ப எனக்க பாட்டிக்கு எட்டு பிள்ளைக. எனக்க அப்பனாக்கும் மூத்தவரு… எட்டாம்ம்கிளாஸ் படிச்சிட்டிருந்தாரு. பாட்டிய பெரியசாமியாரு கூப்பிட்டு கன்னியாமடத்திலே கஞ்சிவைக்குத வேலை குடுத்தாரு. எனக்க அப்பாவை செமினாரியிலே சேத்துப்போட்டாரு… அப்பன் அங்கதான் எட்டுவருசம் நின்னு படிச்சாரு. படிப்பு செரியாவல்ல. அதனால இங்க கட்டப்பனைக்கு பிரதர் வேலைக்கு அனுப்பிட்டாங்க”
“இவ்வளவு தொலைவுக்கா?”
“அப்பம் இங்க என்னமோ நோயி… மலேரியான்னு நினைக்கேன். இங்க யாருமே வரமாட்டாங்க. அப்பா வந்தாரு… இங்க ஒரு சர்ச்சிலே ரெண்டு வருசம் பிரதரா இருந்தாரு… அப்பம் இங்க பல சர்ச்சுகளுக்கு ஒரு பாதிரியாருதான்… மாஸ் நடத்துறது ஜெபிக்கிறது எல்லாமே பிரதர்மாருதான்…”
“போகுது” என்று செபாஸ்டியன் பைக்கை முன்னால் உந்தி உந்தி கொண்டுபோனான். ஆனால் யானை மெல்ல மீண்டும் வந்துவிட்டது. இன்னொரு யானை கீழே பள்ளத்திலிருந்து மேலேறியது
“இது இன்னும் பெரிசு… பிடியானைன்னு நினைக்கேன்”
“பிடிக்கு கொம்பு இருக்காதுல்லா?”
‘ஆகா, பிடியானைக்கு கொம்பு இல்லேன்னு தெரிஞ்சு போட்டே… பம்பாயிலே இதெல்லாம் சொல்லிக்குடுக்கானுகளா?”
“சும்மா இருடே”
”நல்லவேள குட்டி இல்ல… குட்டி இருந்தா கோவமா இருக்கும்”
“குத்துமா”
‘சேச்சே தலையிலே கைவச்சு இரவுநேர ஆசீர்வாத ஜெபம் செய்யும்…ஆருலே இவன்”
யானைகள் அங்கே நின்று ஒன்றையொன்று முதுகை தொட்டுக்கொண்டன. மத்தகங்களால் உரசிக்கொண்டன. ஒரு யானை மெல்ல உறுமியது
“சண்டை போடுதோ?”
“யானை சண்டைபோட்டா நீ இங்க நின்னுட்டிருப்பியாக்கும்? ஏரியா வெறைச்சுப்போடும்”
“நாம எவ்ளவுநேரம் இங்க நிக்கிறது?”
“இதுக போகணுமே”
“திரும்ப பீருமேட்டுக்கு போனா என்ன?”
“அதுக்கும் நாலுமணிக்கூர் ஆகும். நேரம் இப்ப ஏளு… அங்க ரூமும் காலி பண்ணியாச்சு”
“செரி பாப்பம்…”
“சட்டுன்னு காலி பண்ணி போயிரும்… ஒரு லாரி வந்தா போரும்…”
மழை தூற தொடங்கியது.
“குளிருது”
‘இங்க குளிரு ஜாஸ்தி. மழையிலே நல்லா குளிரும். எங்க அப்பா இங்க இருந்தப்ப ராத்திரி ரூமுக்குள்ள சட்டியிலே கரிபோட்டு கனல் உண்டாக்கி வச்சு சூடுபண்ணிட்டுதான் தூங்கணும்… ஒரு தடவை சொன்னாரு”
“அப்பா இங்க அதுக்குப்பிறகு வந்திருக்காரா?”
“இல்ல… கட்டப்பனையிலே இருந்து அப்பா பாம்பேக்கு கெளம்பினப்ப இருபத்திநாலு வயசு… அப்டியே வந்தவருதான். பம்பாயிலே ஒரு கடையிலே வேலைபாத்தாரு. கடை வச்சாரு… கரிக்கடைதான். அப்பல்லாம் பாம்பேயிலே அடுப்புக்கரிக்கு மார்க்கெட் இருந்தது. பிறவு நிலக்கரி. கடைசியா கேஸ் ஏஜென்ஸி…இப்பம் அதுதான் போகுது”
“அப்பா செமினாரியிலே இருந்திருந்தா சீனியாரிட்டி வந்திருக்கும்லா?. ஃபாதர் ஆகல்லேண்ணாலும் நல்ல போஸ்ட் இருந்திருக்கும்”
‘அப்பா என்னமோ பிரச்சினை ஆகித்தான் ஓடியிருக்காரு”
‘என்ன பிரச்சினை?”
“பொண்ணு விசயம்ணு நினைக்கேன்”
“பொண்ணுண்ணா?”
“அது அந்தக்காலம் தானே” என்றேன் “…பாவமன்னிப்புக்கு வந்த ஏதோ பொம்புளைக்க ரகசியத்த தெரிஞ்சு வச்சுகிட்டு மிரட்டியிருக்காரு… அவளை கூட்டி வச்சு பெலவந்தம் செய்திருக்காரு”
“சேச்சே, சாமுவேல் மாமாவா…ஏண்டே இப்டி சொல்லுதே?”
“டேய் மேக்காட்டு சொத்து விசயமா மாமாவுக்கும் அப்பாவுக்கும் கோர்ட்டுலே கேஸு நடந்துதுல்லா…”
“ஆமா ,அடிபிடி சண்டை ஆச்சே”
”அப்பம் மாமா விளிச்சுகூவிச் சொன்னாரு… அவரு அப்பாவை விட நாலுவயசு மூத்தவரு…அப்பதான் கேள்விப்பட்டேன்”
“அவரு சும்மா சொல்லியிருப்பாரு”
“இல்லடே, அப்பா செத்தபிறவு அம்மா சொன்னா”
“நடந்த கதைண்ணா?”
“ஆமா, அப்பாவே சொல்லியிருக்காரு. சாவுறதுக்கு முன்னால”
“ஓ” என்றேன்
”அவரு செத்த பிறவு ஒரு ஸ்பெஷல் மாஸ் கூட்டி பிரேயர் பண்ணணும்னு சொல்லியிருக்காரு…அதுக்குள்ள காசும் அவரு தனியா எடுத்து வச்சிருக்காரு. அம்மாவும் நானும் அதை நடத்தினோம்…”
“சாமுவேல் மாமா செத்து மூணுவருசம் இருக்கும்லா?”
“நாலு… நான் அப்பவே நினைச்சேன், கட்டப்பனை பக்கம் ஒருதடவை வரணும்னுட்டு”
“எதுக்கு?”
“சும்மா பாக்க… நம்ம மனசிலே ஒரு எடம் உண்டாகிப்போச்சுல்லா?”
“அந்தப் பெண்ணு என்ன ஆனா?”
“ஆரு?”
“சாமுவேல் மாமா கேஸிலே சிக்கினவ?”
“அவளை சந்தேகப்பட்டு பிடிச்சிட்டாக… அந்தப் பெண்ணு தூக்கிலே தொங்கிட்டா…”
“ஓ” என்றான் செபாஸ்டியன் “பாவம்லே”
“அது ஆச்சு அம்பது வருசம்… அப்பா அப்டியே மும்பைக்கு வண்டி ஏறிட்டார்”
யானை பிளிறியது.
“என்ன சொல்லுது?” என்றேன்
“என்னமோ சொல்லுது… யாருக்கோ நூஸ் குடுக்குது”
வளைவில் ஒரு வெளிச்சம். அது சுழன்று பாறைகளின் ஈர நனைவின்மேல் பளபளத்து அணுகியது
“லாரிதான்”
”அதுக லாரிக்கு வளிவிடுமா?”
“லாரிக்காரன் பயப்படமாட்டான்”
லாரி ஹாரன் அடித்தபடியே மேலேறி வந்தது. யானைகள் பிளிறின. ஒவ்வொன்றாகச் சரிவில் இறங்கிச் சென்றன
லாரி எங்கள் அருகே வந்தது. ஓட்டுநர் எட்டிப்பார்த்து “எங்க?” என்றார். தமிழ்நாட்டு லாரி.
“கட்டப்பனை”
“வழியிலே வேறொரு இடத்திலேயும் யானை நின்னிட்டிருந்தது. மறுபடியும் வந்தாலும் வரும்”
“பாத்து,போறோம்”
“லைட்டு ஹைபீம் போட்டுட்டு மொள்ள போங்க”
நாங்கள் சுழன்று இறங்கினோம். மழை முகத்தில் அறைந்தது. “வாகமண்ணு போகேல்லண்ணா இப்பம் கட்டப்பனையிலே இருப்போம்”
“அதைப்பத்தி இனிமே பேசவேண்டாம்” என்றேன்
“நீ விளிச்சதினாலே வந்தேன்… எனக்கு ரப்பர் வெட்டு தொடங்குத சீசனாக்கும்”
“மளையிலே என்னடே வெட்டு?”
“மளைக்கு இப்பம் பிளாஸ்டிக் கூடு உண்டுல்லா? மளையிலே நல்ல பாலு கிட்டும்”
எட்டாவது வளைவை கடக்கையில் கண்கூசும்படி மின்னல். சாலை ஒளியாக தெரிந்து அணைந்தது. கூரிருளுக்குள் இடி
“தலைக்கு மேலேல்லா இடிக்குது”
“மலையிலே இடி பக்கத்திலே நிக்கும்… ”
“தலையிலே விளுமோ?”
“ரோட்டிலே இடி விளாது. செல்போன் டவர் உண்டுல்லா?”
“காட்டிலே?’
“குன்றுமேலே நிக்கிற மரத்திலே விளும்… நான் ரெண்டுதடவை கண்டிருக்கேன். இடிவிளுந்த மரம் நின்னெரியும்”
“குன்றுமேலே தன்னந்தனியாக நின்றிருக்கும் மரம்போன்றவன் பாவி. அவன்மேல் கர்த்தரின் இடிமின்னல் இறங்கும். அவன் நெருப்பாக பற்றி எரிவான்”.
“என்னது இது?”
“பிரசங்கியார் சொன்ன வரியாக்கும். முன்ன எப்பமோ கேட்டது”
“நல்ல வரி என்றான் செபாஸ்டியன் “குன்றுமேலே தன்னந்தனியாக நின்றிருக்கும் மரம்போன்றவன்” என்று சொல்லிக்கொண்டான்
மீண்டும் மின்னல். இடியோசை சூழ ஒலித்தது
“என்னது எல்லா பக்கமும் கேக்குது?”
“வானத்திலே இடி ஒருக்கா. பிறவு மலையிலயும் காட்டிலயும் மாற்றொலி… ”
“ஆனை பிளிறுகதுபோல இருக்கு”
“மலை பிளிறுத சத்தம்னு சொல்லுகதுண்டு”
இன்னொரு மின்னலும் இடியும்
“எனக்கு ஒண்ணு தோணுது. இந்தமாதிரி மலைமேலே தனியா நிக்குதவன்லாடே நீதிமான்?” என்றென்
“பின்ன அவனுக்க மேலே ஏன் இடிவிளுது?” என்றான் செபாஸ்டியன்
“அப்டிக் கேட்டேன்னா, இப்பம் நீதிமான்மாருக்க மீதே தானேடே எப்பமும் இடி விளுந்திருக்கு… புனிதர்மாரும் காந்தியும் எல்லாம் நீதிமான்மாருல்லா?”
“காந்தியா?”
“சும்மா சொன்னேன்”
“ஆமா” என்றான் செபாஸ்டியன் “உள்ளதாக்கும்”
அதன்பின் அவன் ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரம் கழித்து நான் சொன்னேன். “நீதிமான் இடிவிளுந்து நின்னு எரியுத தீயிலே ஊருக்கெல்லாம் வெளிச்சம் கிட்டும்”
“ஆரு சொன்னது இது?”
“நான் நினைச்சுகிட்டேன்”
மழை சரேலென்று பெய்யத் தொடங்கியது. அறைந்து அறைந்து வீசியது
“லே, இனிமேலே போவ முடியாது…’
“முடிஞ்சவரை போவம்… இனி ஒண்ணும் செய்யுகதுக்கு இல்லேல்லா”
மிகமெல்ல மழை வழியாகச் சென்றோம். விளக்கொளியை மழைப்படலம் தடுத்தது
“வாகமண்ணுக்கு போயிருக்கப்பிடாது”
“நீ சும்மா வாறியா கொஞ்சநேரம்?”
அவன் மீண்டும் வண்டியை நிறுத்தினான்
‘என்ன?”
”ஆனை”
“எங்க?”
“கீள, ரோட்டிலே”
”அய்யோ”
‘இந்த மளையிலே இங்க எப்டி நிக்கிறது?”
“திரும்பி போகவும் முடியாது. அந்த யானைக்கூட்டம் அங்க நிக்கும்”
“என்னடே செய்ய?”
“இங்க எங்கியாம் தங்குவோம்”
“எளவு ,ஒரு கடைகூட இல்லியே”
“பாப்பம்… டீ எஸ்டேட்டிலே சிலப்பம் ஷெட்டுக கிடக்கும்”
அவன் பைக்கை திருப்பி மேலேற்றினான். அவ்வப்போது அதை நிறுத்தி முகப்பை சுழற்றி ஹெட்லைட்டை காட்டுக்குள் வீசிப்பார்த்தான்
“அந்நா ஒரு ஷெட்டு தெரியுது”
‘ஷெட்டா?”
“அங்க மேலே பாரு… ஒரு சின்ன ஷெட்டு…”
“விளக்கு இல்லியே”
“ஷெட்டிலே விளக்கா? அதுக்கு திண்ணை இருந்தா அதிலே நிப்போம்.. நனையாம ராத்திரிய தாண்டினாபோரும்”
பைக்கை தூக்கி மேட்டில் வைத்தோம். டீ எஸ்டேட் மாதிரி தெரிந்தது. நடுவே சிறிய பாதை மேலேறிச்சென்றது
“டீ எஸ்டேட்டா??” என்றேன்
“இல்லை, டீ எஸ்டேட்டா இருந்திருக்கலாம். இப்பம் அப்டியே காடா விட்டுபோட்டிருக்கானுக
“ஏன்?
“இங்க இப்பம் எஸ்டேட்டு தொளிலு பெரிய லாபம் இல்ல”
புதர்கள் நடுவே பல இடங்களில் சிக்கிக் கொண்டோம். என் கையை முட்கள் போல இலைநுனிகள் கிழித்தன.
“இது வளி இல்ல… மேலேருந்து தண்ணி இறங்குத ஓடையாக்கும்”
நீர்ப்பெருக்கின் வழியாக நடந்தோம். பல இடங்களில் கால் தடுக்கி விழப்பார்த்தோம் வேர்கள் காலை தடுக்கின. உருளைக் கற்கள் எங்கள் கால்பட்டு இடம்பெயர்ந்தன. ஒருகல் உருண்டு கீழே சென்றது
சிராய்ப்புகளுடன் மேலேறி அந்த சிறிய கொட்டகையை அடைந்தோம். அது ஓர் இடிந்த கொட்டகை. ஓட்டுக்கூரைபோட்ட உயரமான கட்டிடத்தின் ஒருபகுதி சுவர் சரிந்து கூரை விழுந்து நின்றிருந்தது. செடிகள் நான்குபக்கமும் முளைத்து உள்ளே நுழைந்திருந்தன. உள்ளேயும் செடிகள் முளைத்திருந்தன
“சர்ச்சுண்ணு நினைக்கேன்”
“சர்ச்சா?”
“இடிஞ்சு கெடக்கு… பளைய சர்ச்சாக்கும்…”
“போயிரலாமா?” என்றேன்
“ஒருபக்கம் கூரை இருக்கு… அது நல்லதாக்கும். நனையாம உள்ளே போயி இருக்கலாம். கதவு பூட்டியிருந்தா என்ன செய்யுததுண்ணு நினைச்சிட்டு வந்தேன்”
செபாஸ்டியன் சிறிய திண்ணையில் ஏறினான். அதில் தரையோடு உடைந்து எழுந்து நின்றது. நானும் ஏறிக்கொண்டேன். மழையின் பெருக்கிலிருந்து மேலேறி நின்றதுமே உடலில் மெல்லிய வெப்பம் வந்தது
“அடிக்குத காத்திலே அரைமணிக்கூரிலே துணி காஞ்சிரும்… ஒரு அஞ்சுமணிக்கூர் இங்க இருந்தா விடிஞ்சிரும்”
“விடிஞ்சா ஆனைபோயிருமோ”
“விடிஞ்சா என்னமாம் செய்லாம்டே”
நான் கதவை தொட்டேன். அது பூட்டப்படாமல் இருந்தது. ‘பூட்டல்லை”
“பொறத்தால இடிஞ்சு கிடக்கு.. இங்க எப்டி பூட்டியிருக்கும்” என்றான் செபாஸ்டியன் ‘கதவை தள்ளாதே… அப்டியே விளுந்துபோடும்”
நான் கதவை மெல்ல திறந்தேன். உள்ளே நல்ல இடமிருந்தது. நனையாத புழுதி
“உள்ள போலாமா… இங்கிண சாரல் அடிக்கே” என்றேன்
“உள்ள தூசியாக்கும்”
‘ஆனா நனையாத எடம்… அங்க திண்ணைமாதிரி இருக்கு.. உக்காந்திட்டிருக்கலாம்”
“அது செரி… படுக்க எடமிருக்கும்போல”
நாங்கள் உள்ளே நுழைந்தோம். புழுதியின் வாசனை
‘பளைய எடமாக்கும். அப்டியே விட்டுப்போட்டானுவ” என்றான் செபாஸ்டியன்
மின்னல் வெட்டி அணைந்தபோது நான் எதையோ பார்த்தேன்
“டேய்”
‘ஏம்லே”
‘இங்க இன்னொருத்தர் இருக்காரு”
“இங்கயா?”
“ஆமா, அங்க, மூலையிலே”
“ஆரு? ஆருவே?”
ஓசையில்லை
“வே, ஆருண்ணு கேட்டேன்”
ஓசை எழவில்லை
“நெழலாட்டு இருக்கும்லே… சும்மா பீதிய கெளப்பிட்டு”
மீண்டும் ஒரு மின்னலில் நான் தெளிவாகவே பார்த்தேன். அங்கே ஒருவர் இருந்தார். தாடி வைத்த முகம். மிகப்பழைய நீண்ட அங்கி. அது அழுக்காகி வெண்மையிழந்திருந்தது
“ஆரு?”என்றேன்
“ஈஸோ மிஸிஹாய்க்கு ஸ்துதி” என்று அவர் சொன்னார்.
“ஸ்துதி” என்று நான் சொன்னேன். “ஆராக்கும்?”
“தமிழா?”என்றார்
‘ஆமாம்” என்றேன்
“தமிழ்நாடு நல்லதாக்கும். காமராஜ் நாடார். சி.சுப்ரமணியம். பறம்பிக்குளம் ஆளியார்”
“நீங்க ஆரு?”
“ஏசு வாற நேரம்… மாதாவோட ஏசு வாற நேரம்… ஏசுவை கும்பிடுங்க. ரெக்ஷிக்கப்பெட்டவர்கள் பாக்கியவான்கள்”
“லே , ஆளு லூசாக்கும்” என்றான் செபாஸ்டியன்
“ம், இங்க வழக்கமா இருக்கிறவர்னு நினைக்கேன்”
“ஆமா, ஃபாதர் நாங்க இங்க இருக்கலாம்ல?’
“சினிமா பாக்காதே. ஓட்டலிலே சாப்பிடாதே. சில்க்சட்டை போடாதே”
”ஃபாதர் நாங்க வெளியூரு… மளைக்கு ஒதுங்கினோம்”
“சாத்தானுக்க வழிகள் அனந்தம். சாத்தானுக்க சக்தி அதீதம். ஈஸோ மிஸிஹாய்க்கு ஸ்தோத்திரம்… அல்லேலூயா”
“ஃபாதரா இருந்து அப்டியே ஸ்குரூ எளகியிருக்கு… ளோஹாயை பாத்தியா?”
அவருடைய அங்கியின் கீழ்ப்பகுதி கிழிந்து நார்நாராக தொங்கியது
செபாஸ்டியன் திண்ணையில் அமர்ந்தான். நான் அருகே நின்றேன்
நான் அவரிடம் ஃபாதர் “மளை நிக்கிற வரைக்கும் இங்க இருக்கோம்” என்றேன்
“கும்பஸாரம் எப்ப வேணுமானாலும் செய்யலாம் மகனே”
“கும்பஸாரம்னா?” என்று செபாஸ்டியனிடம் கேட்டேன்
“பாவமன்னிப்பு… போ போயி கேளு. ஃபஸ்டு பார்ட்டியாக்கும் அதுக்கு”
”சும்மா இருலே”
“கர்த்தர் எக்காள சத்தத்தோடு வானங்கள் மீது வருவார்… ஏசு கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பிறகு உயிரோடு இருக்கும் நாமும் கண்ணிமைப் பொழுதில் மேகங்கள் வழியாய் சென்றிடுவோம்”
“பளைய வசனமாக்கும்…நல்லா மனப்பாடம் செய்திருக்காரு”
“மேகங்கள் நடுவே தேவனைச் சந்திப்போம்; அவரோடு கூட நித்திய நித்தியமாய் வாழ்ந்திடுவோம்”
“ஏல, ராத்திரி முளுக்க இதைக் கேக்கணுமா? அதுக்கு பேய்மளையே நல்லதுண்ணுல்லா தோணுது” என்றான் செபாஸ்டியன்
“மனம்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள், சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை”
“இவரு ஃபாதரா ஆனபிறகு கிறுக்காகல்ல. கிறுக்கானபிறகு ஃபாதரா ஆயிருக்காரு”
”சகல விசுத்தருடேயும் சகல மரிச்சவருடேயும் திருநாள் தினங்ஙளில் கும்பஸாரிக்குக” என்று அவர் சொன்னார். இப்போது முகம் தெளிவாகவே தெரிந்தது. நீண்ட இருபுரித்தாடி. முன்வழுக்கை. தோளில் புரண்ட தலைமுடிகள். பித்துப்பிடித்து அலைபாய்ந்த கண்கள். “ஆத்மார்த்தமாயும் வியக்தமாயும் கும்பசாரிக்குக… ஏற்றுபறயுக! அல்லேலூயா!”
“என்னடா சொல்றார்?”
‘பாவமன்னிப்பு வாங்கிக்கன்னு சொல்லுதாரு… மனசறிஞ்சு உண்மையாட்டு வாங்கிக்கணுமாம். இது புனிதருக்கும் செத்தவருக்கும் உள்ள நாளுன்னு சொல்லுதாரு”
“இண்ணைக்கா?”
“நான் என்னத்த கண்டேன்? நான் கிறிஸ்மசுக்கும் நியூ இயருக்கும் கோயிலுக்கு போறவனாக்கும்”
நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மின்னல் துடித்து அடங்கியது.
“லேய் செபாஸ்டியன், நான் இவருகிட்ட பாவமன்னிப்பு கேட்டா என்னலே?”
“உனக்கென்ன கிறுக்கா? இது ஆருக்க ளோஹயையோ எடுத்து போட்டுட்டு திரியுத கிறுக்காக்கும்”
‘இல்லலே… பைபிள் தெளிவாட்டு சொல்லுதாரு”
“அதுக்காக, கிறுக்கனிட்டயா?”
‘லே, கிறுக்கானா என்ன? அவரு ஃபாதர்லா? ஒரு தடவை ஃபாதரா ஆனவரு சாவுறதுவரை ஃபாதர்தான்… செத்தாலும் புனிதர் மாதிரித்தான்… அவருக்கிட்ட பாவமன்னிப்பு கேக்கலாம்…”
“அப்ப போயி கேளு”
“நீ வெளியே போ”
“நல்ல ஆளு… ஆனா அவரைவிட நீ ஆளு கில்லாடி… கிறுக்கனுக்கு நீ சொல்லுத பாவம் ஒண்ணும் மனசிலே நிக்காதுன்னு கணக்குபோடுதே பாத்தியா?”
“நீ வெளியே போடே”
அவன் வெளியே சென்றான். நான் அவர் அருகே சென்றேன். “ஃபாதர் எனக்கு கும்பஸாரம் பண்ணணும்”
“கர்த்தாவின்றே நாமத்தில் முட்டுகுத்திக்கோளூ… ஈ விசுத்தமாய சபயில் சத்யங்கள் பிதாவின்றே முன்னில் ஏற்று பறஞ்ஞோளூ”
நான் முழந்தாளிட்டேன். சொல்ல தொடங்கினேன். அவர் நடுவே ஒன்றுமே சொல்லாமல் கேட்டார்
பின்னர் என் நெற்றிமேல் கையை வைத்து “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்ப்பட்டன. நீ பரிசுத்தவானாக ஆனாய். பிதாவின்றே அனுக்ரஹம் நின்றே ஒப்பம் உண்டு. நின்றே வழிகளில் கர்த்தாவாய ஏசு கிறிஸ்துவின்றே வெளிச்சம் உண்டாகட்டே. விசுத்தையான மாதாவின் காருண்யம் உன்னுடைய கண்ணீரையெல்லாம் துடைத்து உன்னை ஆறுதல்படுத்தட்டும்… எல்லா நன்மையும் கைகூடட்டும்… ஆமேன்” என்றார்
மேலும் சற்றுநேரம் நான் மெல்லிய விசும்பல்களுடன் அழுதுகொண்டிருந்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அங்கே இல்லாதவர் போலிருந்தார்
பின்னர் நான் அவருடைய் அங்கியின் நுனியை எடுத்து முத்தமிட்டுவிட்டு எழுந்தேன்.
வெளியே சென்றபோது செபாஸ்டியன் “பாவமன்னிப்பு முடிஞ்சாச்சா?” என்றான். “என்னமோ ரெண்டு பாசையும் கலந்து சொல்லீட்டிருந்தாரு?”
“ம்” என்றேன்
“என்ன சொன்னார்?”
நான் ஒன்றும் சொல்லவில்லை
“கிறுக்கன்கிட்ட பாவமன்னிப்புக்கு சபை அனுமதி உண்டுண்ணா கெளம்பி வந்து கூடிருவானுக…நம்மாளு பயப்படுதது ஃபாதரையில்லா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை
“சாமுவேல் மாமா அந்தக்காலத்திலே பாவமன்னிப்பு குடுப்பாரா?”
“இல்ல, ஆனா பாவமன்னிப்பு குடுக்கிற இடத்திலே நின்னிட்டிருக்கது உண்டு”
“அப்டியாக்கும் மத்தவளுக்க ரகசியத்தை பிடிச்சு எடுத்தது. அதை வச்சு அவளுக்கு ஆப்பு எறக்கினது”
நான் பேசாமல் மழையை பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளம் ஓய்ந்துகிடந்தது. ஒரு சொல் எழக்கூட அங்கே விசை எஞ்சியிருக்கவில்லை.
உள்ளே ஃபாதர் பாட ஆரம்பித்தார். “விஸுத்த குர்பானையுமாய் வந்நேன் என் தெய்வமே வினீதனாயி ஞான் நின்றே முன்னில்!”
“இது என்னடே பாட்டு? கேட்டா மலையாளம் மாதிரியும் இல்ல”
‘பழைய மலையாளம்னு நினைக்கேன்”
“பழைய சாக்குமாதிரில்லா இருக்கு”
மழை பெய்துகொண்டே இருந்தது. உள்ளிருந்தவர் அமைதியாகிவிட்டிருந்தார். இடியோசையும் மின்னலும் மழையின் ஓலமும் இருந்தபோதிலும்கூட நானும் செபாஸ்டியனும் தூங்கிவிட்டிருந்தோம்.
நான் முதலில் விழித்துக்கொண்டேன். எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தபோது முதலில் யாரோ எங்களை தூக்கிக் கொண்டு சென்று எங்கோ வீசியிருப்பது போல தோன்றியது. உடனே எல்லா நினைவுகளும் எழ நான் எழுந்து நின்றேன். ஆடைகள் காய்ந்திருந்தன. தலைமுடி பறந்தது. அந்தச்சூழலை சுற்றி கண்ணோட்டிப் பார்த்தேன்.
ஒரு பழைய தோட்டம் கைவிடப்பட்டு காடாகியிருந்தது. புதர்கள் பச்சைக்குவியல்களாகச் சூழ்ந்திருந்தன. பச்சைப்புடவையை சுற்றி முக்காடு போட்டதுபோல மரங்கள் இலைசெறிந்த கொடிகளால் மூடப்பட்டு நின்றன. மலைச்சரிவு மேலேறிச் சென்று ஒரு கரிய மொட்டைப்பாறையில் முடிந்தது. அதன்கீழ் அந்த இடிந்தபோன மாதாகோயில். அதன் மணிக்கூண்டு இடிந்து மணி இல்லாமல் பாதியாக நின்றது. முற்றம் முழுக்க சருகுகளும் செடிகளும் செறிந்து பரவியிருந்தன. அங்கே மனிதர்கள் வந்துபோகும் தடமே தெரியவில்லை. அந்தக் காட்டுக்குள்ளேயே எவரும் நடமாடுவதாகத் தோன்றவில்லை
“டேய் செபாஸ்டியன் எந்திரிடே.. டே..”
செபாஸ்டியன் எழுந்து “என்னடே” என்றான்
‘சாய குடிக்கணும்லா? எந்திரி”
“நாம எப்பம் வந்து சேந்தோம்?”
நான் “எங்க?” என்றேன்
அவன் பாய்ந்து எழுந்து ‘’அய்யோ” என்றான்
“ஏன்?”
“இங்கியாலே உறங்கினோம்?”
“ஏன்?”
“எளவு இடிஞ்சு பொளிஞ்சு பேயிருக்கப்பட்ட எடம் மாதிரில்லா இருக்கு” அவன் சுற்றிலும் பார்த்து “நான் கட்டப்பனை ரூமிலே உறங்குதாட்டு நினைச்சிட்டிருந்தேன். ரூமிலே ஏசுவுக்க படம் லைட்டு போட்டு வச்சிருந்தது… கர்த்தாவுக்க சிரிப்பை பாத்தேன்லே”
நான் ஃபாதரை நினைவுகூர்ந்து உள்ளே சென்று பார்த்தேன். அங்கே அவர் இல்லை. அவருடைய அங்கிமட்டும் திண்ணையில் கிடந்தது. கறையும் அழுக்கும் படிந்து புழுதியில் படிந்து பாதி மட்கிய அங்கி. அதை நான் இரவு முத்தமிட்டிருக்கிறேன். கழற்றிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாரா?
“போலாம்லே… மழை நின்னுட்டுது” என்றான் செபாஸ்டியன்
நான் உள்ளே பார்த்தேன். இடிந்த மாதாகோயிலுக்குள் முட்செடிகள் நிறைந்திருந்தன. ஆல்டர் அப்படியே விழுந்து மண்ணில் மட்கி, பாதி புதைந்திருந்தது
இறங்குவது கடினமாக இருக்கவில்லை. இருட்டுதான் நேற்றிரவு ஏறுவதை கடினமாக ஆக்கியிருக்கிறது. உருளைக்கற்களில் கால்வைத்து வேர்களை படியாக்கி இறங்கி சாலைக்கு வந்தோம்
எங்கள் பைக் சாலையோரமாக ஓடைக்குள் தூக்கி போடப்பட்டிருந்தது. அதன்மேல் ஓடைநீர் ஏறி சுழன்று ஓடியது
“லே, ஆனை வந்திருக்குலே”
சாலையில் புதிய யானைப்பிண்டங்கள் உருளை உருளையாக கிடந்தன. மழைநீரில் கரைந்து சாணியாக வழிந்திருந்தன
“என்னான்னு பாத்திருக்கு…”
“உடைஞ்சிருக்கா… டேங்க பாரு”
நல்லவேளையாக பைக் அப்படியே இருந்தது. ‘பெட்ரோல் இருக்கு மக்கா”
“நல்ல காலம்… கெளம்புடே”
அவன் அதை கிளப்பினான். நாலைந்து உதையில் உறுமி கிளம்பியது
“ராத்திரி இதிலே இங்கிண நின்னிருந்தா இப்பம் நம்ம சாணியாக்கும் இந்த ரோட்டிலே கரைஞ்சு ஓடிட்டிருக்கும்”
“சும்மா இருடே”
பைக்கில் ஏறிக்கொண்டு சாலையில் மெல்லச் சென்றோம்.
“வளியிலே ஆனை நிக்குதா?”
“இப்பம் நிக்காது… பல லாரிகள் போயிருக்கும்லா?”
ஒரு டீக்கடையை பார்த்தோம். ஓட்டுக்கூரைக்குமேல் நீலநிற பிளாஸ்டிக் தாளை போட்டிருந்தார்கள். பாய்லரிலிருந்து ஆவி எழுந்தது.
“இந்தக் குளிரிலே பாய்லர் ஆவிய பாத்தாலே சிலுக்குதுடே”
“புட்டு இருக்குன்னு நினைக்கேன்… கடலையும் இருக்கும்”
“பப்படமும் பளமும் இருந்தாக்கூட போரும்”
பைக்கை நிறுத்திவிட்டு “புட்டு உண்டா?”என்றான் செபாஸ்டியன்
“உண்டு… இரிக்கணம்… எவிடேயா?”
“நாகர்கோவிலு”
“ஓ பாண்டியா” என்றார் சேட்டன். ‘இங்க நெறைய நாகர்கோயில் ஆளுகள் உண்டு…எல்லாரும் வேதக்காரன்மாராக்கும்”
‘நாங்களும் வேதம்தான்… “ நான் பெஞ்சில் அமர்ந்தேன். கடையில் புட்டு கடலை டீ தவிர ஒன்றும் இல்லை. பொறைகூட
“எவிடேந்நா வரவு? கண்ணப்பாறை எஸ்டேட்டா?”
“இல்லை பீருமேடு”
“பீருமேடா? அங்கே எப்ப கெளம்பினீங்க? விடியறதுக்கு முன்னாடியா?”
“இல்ல, நாங்க நேத்து அஞ்சுமணிக்கே கெளம்பிட்டோம். வழியிலே வாகமண் போனோம். வாரப்ப நல்ல இருட்டிப்போச்சு. மழைக்கோட்டும் இல்ல”
“ரோட்டிலே ஆனை நின்னிருக்கே”
“ஆமா, அதனாலே அந்த மேட்டிலே பழைய சர்ச் இருக்குல்லா? அங்க ஏறி ஒதுங்கினோம்… ராத்திரி அங்கதான் இருந்தோம்”
அவர் திகைத்து கையில் டம்ளரும் ஃபில்டருமாக எங்களை பார்த்தார். டீ குடித்துக்கொண்டிருந்த நாலைந்துபேர் எங்களை பார்த்தனர்
“என்னவாக்கும்?” என்றேன்
“இல்ல, அங்கயா?”
“ஆமா, நல்ல காலம்… கீள பைக்கை நிறுத்தியிருந்தோம். ஆனை எடுத்து வீசியிருக்கு… மிரர் உடைஞ்சுபோச்ச்சு”
”அங்க மேலயா தங்கினீங்க”
“ஆமா”
“அது நல்ல எடமில்லியே”
“நனையாம நின்னோம்ல”
”அங்கயா?” என்று ஒருவர் கேட்டார்
”நீங்க பயப்படுறதப்பாத்தா அங்க பேய் உண்டுண்ணுல்லா தோணுது” என்றான் செபாஸ்டியன் நையாண்டியாக
“’உண்டு” என்றார் டீக்கடைச் சேட்டன்
“என்ன?” என்றேன்
“அங்க பேய் உண்டு… பத்து அம்பது வருசம் முன்னால அப்டியே கைவிட்ட சர்ச்சாக்கும். அங்க யாரும் போறதில்லை”
“ஏன்?” என்றேன்
“அது பளைய கதை. அப்ப இங்க நாலு சர்ச்சுக்கு ஒரே ஃபாதராக்கும். ஃபாதர் சாக்கோ குழப்பறம்பில்னு பேரு… நல்ல மனுஷன். அவருக்கு ஒரு கைமணிப் பையன்… பிரதர்னு சொல்லுவாங்களே”
“ஆமா’ என்றான் செபாஸ்டியன்
“அவன் இங்க ஒரு பொண்ணுமேலே கைய வச்சிட்டான். அவள மிரட்டி காரியம் நடத்தியிருக்கான். சங்கதி வெளியே தெரிஞ்சப்ப அவ தூக்கிலே தொங்கிட்டா. சாவுறதுக்கு முன்னாடி சர்ச்சிலே பாவமன்னிப்பு கேட்டத வச்சு மிரட்டி தன்னை கெடுத்திட்டதா எளுதி வச்சிருக்கா”
செபாஸ்டியன் ”இது கேட்ட கதை மாதிரில்லா இருக்கு” என்றான்
“அதைப்படிச்சுட்டு குடும்பக்காரங்க ஃபாதராக்கும் கெடுத்ததுண்ணு நினைச்சு அவரைப் பிடிச்சு இளுத்துக் கொண்டுவந்து மரத்திலே கட்டிவச்சு அடிச்சிருக்காங்க… அவருக்க அங்கியை எல்லாம் கிளிச்சு துணியில்லாம ஆக்கி ஒருநாள் முளுக்க கட்டி வச்சிருக்காங்க… அந்தப் பையன் அப்பமே ஆளு எஸ்கேப் ஆயிட்டான். சாயங்காலம் நாலாளை விசாரிச்ச பிறகாக்கும் அவனாக்கும் குற்றம்செய்ஞ்சதுண்ணு தெரிஞ்சது. ஃபாதரை அவுத்து விட்டுட்டு எல்லாரும் ஓடிப்போயிட்டாங்க. நியூஸ் கோட்டயத்துக்குபோயி அங்கேருந்து பிஷப்ப்புக்க ஆளுக இங்க வந்து சேந்தப்ப சர்ச்சு மூடியிருக்கு. தட்டிப்பாத்துட்டு கதவை உடைச்சு உள்ளபோனா ஃபாதர் தொங்கியிருக்காரு… திருசொரூபத்துக்கு நேர்முன்னால தொங்கி நிக்காரு… அங்கியோட… அதோட அந்தச் சர்ச்சை அப்டியே விட்டுட்டாங்க”
செபாஸ்டியன் பயந்துவிட்டான். எழுந்து நின்றபோது நடுங்கிக்கொண்டிருந்தான்
“என்னவாக்கும்?”என்றார் சேட்டன்
“நாங்க அங்க ஒரு ஆளைப்பாத்தம்… கிறுக்கன்னு நினைச்சோம்.. ஃபாதர் மாதிரி அங்கிபொட்டிருந்தாரு” என்றென்.
“அவருதான்… அய்யோ அவரேதான்.. பல ஆளுகளும் பாத்திருக்காங்க.. அவரு அங்கதான் இருக்காரு”
“ஏசுவே!” என்றான் செபாஸ்டியன் நிற்கமுடியாமல் பெஞ்சில் அமர்ந்தான்
டீ குடித்துக்கொண்டிருந்த ஓர் இளைஞன் “டேய் பாண்டி, பயப்படாம இருடே. அதொரு கிறுக்குக் கிளவனாக்கும். நான் நாலைஞ்சு தடவை கண்டிருக்கேன். மழைவந்தா மட்டும் அங்க ஏறி படுத்து தூங்குவான்…அவனையாக்கும் இவனுக பேய்ணு நினைக்குதது” என்றான்
“சகாவே, அந்த ஃபாதரை எனக்க அப்பன் கண்டிட்டுண்டு… அம்பது வருஷமா பலரும் கண்டிருக்காங்க”
“அது வேற ஆளா இருக்கும். ரோடு அருகிலே இப்டி ஒரு நனையாத எடமிருந்தா நாடோடிகள் வராம இருப்பாங்களா?”
‘நான் ஒண்ணும் சொல்லேல்ல. ஆனா அங்க நடமாட்டம் உண்டு. பாட்டும் ஜெபமும் பலரும் கேட்டிருக்காங்க”
“அச்சுதா, சகாவே, நான் ஒண்ணு கேக்கேன்’ என்று ஒருவர் எழுந்து வந்தார். “அங்க சர்ச்சிலே மணி உண்டா? மணிக்கூடுகூட இல்ல, இல்லியா?”
“ஆமா”
”அப்ப எப்டி மணிச்சத்தம் கேக்குது?” என்றார் அவர் “நேத்து ராத்திரி கேட்டுது மணி”
‘அதுவும் நம்ம செவிக்கு கேக்குததுதான். மழையிலே பாறையிலே அப்டி பல சத்தமும் கேக்கும்”
“அவனுக்கு பார்ட்டி சொல்லுகதை மட்டும்தான் நம்பி பழக்கம்’ என்றார் சேட்டன்
“நீங்க போங்க பாண்டி சகாக்களே.. இவனுகளுக்கு இதான் வேலை” என்றான் இளைஞன்
“புட்டு எடுக்கட்டா?” சேட்டன் கேட்டார்
நான் வேண்டாம் என்றேன். செபாஸ்டியன் ‘ஆமா வேண்டாம்…சாயா போரும்” என்றான்
இருவரும் டீயை பாதிதான் குடித்தோம். ஓடிப்போய் பைக்கில் ஏறிக்கொண்டோம்
“லே நீ அவருகிட்டயா பாவமன்னிப்பு கேட்டே?” என்றான் செபாஸ்டியன்
“ஆமா’ என்றேன்
“என்ன சொன்னாரு?”
“அவரு ஃபாதருல்லா? ஆசீர்வாதம் செய்யாம இருக்க முடியுமா?”
செபாஸ்டியன் என்னை திரும்பிப்பார்த்தான். சற்றுநேரம் கழிந்து “அது உள்ளதாக்கும்” என்றான்
சாலையில் வெயில் விழத்தொடங்கியது. மலைப்பகுதிகளில் மேகங்கள் வானில் நிறைந்திருக்கும்போது மட்டும் வரும் மஞ்சள்வெயில். அல்லது இளந்தவிட்டுநிற வெயில். சூழ்ந்திருந்த இலைகள் எல்லாம் கழுவப்பட்ட தூய்மையுடன் ஒளியில் துழாவி அசைந்தன. எதிர்க்காற்று நீராவியின் குளுமையுடன் இருந்தது. மூச்சை நிறைத்து நெஞ்சை விரியச்செய்தது.
“வேற ஒரு டீக்கடைய பாருடே… பசிக்குது” என்றேன்.
=======================================================