பழையது மோடை – கடிதங்கள்

பழையது மோடை- கோகுலரமணன்

அன்புள்ள ஜெ,

 

கோகுலின் பழையது மோடை கதை வாசித்தேன். மோடையை வெற்றிகரமாக ஒரு குறியீடாக இக்கதையில் அவரால் பயன்படுத்த முடிந்திருக்கிறது. ஒரு வகையில் பிராமண சமூகத்திற்கே உரிய பிரத்யேக சிக்கல்‌ . நூற்றாண்டுகளாக வெவ்வேறு எழுத்தாளர்களால் திரும்ப திரும்ப எழுதப்படுவதும் கூட‌. ரா. கிரிதரனின் தர்ப்பை கூட இவ்வரிசையில் உள்ள கதை தான். பழையது, வழிவழியாக கையளிக்கப்பட்டது, பிராமண குடும்பத்திற்கு வெளியே தேவையில்லாதது, வேறு எங்கும் பொருந்தாதது, பயன்படாது, புதிய இடத்திற்கு செல்லும்போது கொண்டு செல்ல விரும்பாது, இடத்தை அடைப்பது ஆனால் விட்டு விலகவும் முடியாதது, குற்ற உணர்வை கிளர்த்துவது. ஜோடியில் ஒன்றை ஒருவழியாக கொடுத்தாலும் இறுதியில் ஒன்றாவது எஞ்சும் என எண்ணும்போது இரண்டுமே அழிகிறது. மரபுக்கும் நவீனத்துக்குமான குறிப்பாக மரபை கைவிட்டு புதியதை ஏற்பதில் உள்ள சிக்கலை கோரா தொடங்கி இன்று கோகுல் வரை பேசியபடிதான் இருக்கிறார்கள். ஒரு வகையில் சென்ற தலைமுறையின் கதை என்பதை தவிற வேறு குறைகள் என எதையும் சொல்ல முடியவில்லை. வாழ்த்துக்கள்

 

சுனீல் கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

கோகுலரமணன் கண்டிப்பாக இலக்கியத்திற்கு புதுவரவு. முதற்கதை என்று தெரியவில்லை. அழகாக எழுதியிருக்கிறார்.சரியாகத் தொடங்கவும் அளவாகச் சொல்லவும் தெரிந்திருக்கிறது. கதையின் குறியீட்ட்டை விளக்காமல் குறிப்பாகச் சொல்ல முடிந்திருக்கிறது.

 

இரட்டையில் ஒன்றை பிரிக்கக்கூடாது, அது குடும்பத்திற்கு நல்லது அல்ல என்ற எண்ணம் எல்லா குடும்பங்களிலும் உண்டு. இரட்டைநாழி இரட்டை கோப்பை எதையும் பிரிக்கமாட்டார்கள். மோடையை பிரித்ததும் ஒன்று உடைந்துவிடுவது அழகான ஓர் இடம். நான் இன்னொன்றும் உடைந்துவிடும் என நினைத்தேன். ஆனால் முடிவு சொல்லப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த முடிவில் உள்ள மகிழ்ச்சியான அழைப்பு இனிமையான ஒரு முடிவையே காட்டியது. இன்னொரு மோடை வந்து ஜோடியாகிவிட்டது என்று எண்ணிக்கொண்டேன்

 

மகாதேவன்

 

 

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8
அடுத்த கட்டுரைசக்தி ரூபேண- கடிதங்கள்-1