புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

தனிமையின் புனைவுக் களியாட்டு

 

தனிமையின் புனைவுக் களியாட்டு அறிவிப்புக்குப் பின் இளம் வாசகர்கள் எழுதிய பல கதைகள் வந்தன. எல்லா கதைகளையும் வாசித்துவிட்டேன். நானே எழுதிக்கொண்டிருப்பதனால் எல்லாருக்கும் தனித்தனியாகப் பதில்களை விரிவாகப் போடவில்லை. எழுதவிருப்பவர்களுக்கும் சேர்த்து இந்தக்குறிப்பை பொதுவாக எழுதுகிறேன்.

 

அ. சிறுகதை ஒரு சவுக்குச் சொடுக்குபோல ஆரம்பிக்கவேண்டிய கதைவடிவம்

 

எனக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான கதைகள் மிகமிகத் தயக்கமாக ஆரம்பிக்கின்றன.“அவன் இப்படி நினைத்தான். இப்படித்தானோ என்று தோன்றியது. இப்படி நினைவுகூர்ந்தான்’ என்றவகையில் முதல் இருநூறு வார்த்தைகள் வரைக்கூட வெறுமே சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் ஆகியவை வருகின்றன. ஆசிரியரின் எண்ண ஓட்டங்கள் வரும் கதைகளும் உண்டு. ஒரு கதையை எப்படி வேண்டுமென்றாலும் தொடங்கலாம். ஆனால் அது என்ன விளைவை உருவாக்குகிறது என்ற எண்ணம் ஆசிரியனுக்கு வேண்டும். ஒரு சிறுகதையில் கதாபாத்திரங்களும் சூழலும் அறிமுகமாகாதபோது, வாசகன் அதற்குள் சென்று சேராதபோது வரும் சிந்தனைகளும் எண்ணங்களும் வெறும் சொற்களாகவே இருக்கும். வாசகனால் அவற்றுடன் தொடர்புகொள்ளவே முடியாது.

 

சிறுகதையில் கதை உடனடியாகத் தொடங்கப்படவேண்டும் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் அதில் வாசகன் உள்ளே வருவதற்கு அதிக இடம் இல்லை என்பதனால்தான். உள்ளே இழுக்கும் தொடக்கம் கதைக்கு முக்கியம். உள்ளே எப்படி இழுப்பது என்பது கலைஞனின் திறமை சார்ந்தது. கதையின் மையத்தையே சொல்லலாம். கதாபாத்திரத்தின் தனித்தன்மையைச் சொல்லலாம். கூரிய சொற்றொடரிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் இத்தனைதூரம் இதெல்லாம் பேசப்பட்டபின்னரும்கூட பல கதைகள் பல பக்கங்களுக்கு வெறும் எண்ணங்களாகவே தொடங்கி நீள்வது ஆச்சரியமாக இருக்கிறது. சிறுகதை முன்னோடிகளின் கதைகளை படியுங்கள். அவை எப்படி தொடங்கியிருக்கின்றன என்று பாருங்கள்.

 

ஆ. சிறுகதை சுருக்கமானது

 

பல சிறுகதைகளை பார்க்கையில் மிகநீளமான ஒரு கதையை சுற்றிச்சுற்றி அடுக்கியிருப்பது தெரிகிறது. சிறுகதை என்பது அதன் உச்சத்தை ஒரே புள்ளியில் குவிப்பது. அங்கேதான் உண்மையான கதை உள்ளது.அதை வலுவாகச் சொல்வதற்காகவே மற்ற பகுதிகள். ஆகவே அந்தப் பகுதிகள் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கவேண்டும். சுருக்கமாக சுவாரசியமாக. நாவலில் வருவதுபோல மீட்டிமீட்டி கொண்டுசெல்லக்கூடாது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பல நினைவுகள் பல துணைக்கதைகள் வரவேண்டியதில்லை.

 

இ. சிறுகதை என்பது ஒரு கதைதான்

 

ஒரு கதைக்குள் ஏன் அத்தனை கதைகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. கதைகளுக்குள் கதை என்பது ஓர் உத்தியாகச் சிலரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சிறுகதையின் இலட்சிய வடிவம் என்பது தேர்ந்த ஓவியன் மிகவிரைவாக வரையும் கோட்டோவியம்போன்றது. எளிதாக ஒரு கீச்சுபோல நிகழ்ந்தால்தான் அது அது அழகு. அப்படி இல்லை என்றால் அதற்கான நியாயம், தேவை இருக்கவேண்டும்.

 

இ. சிறுகதை என்பது இயல்பான மொழியால் ஆனது

 

வர்ணனைகள் விவரிப்புகள் கதைநிகழ்ச்சிகளைச் சொல்வது ஆகியவற்றின் வழியாக கதை ஓடலாம். ஆனால் அவையெல்லாம் இயல்பான, சரளமான மொழியால் ஆகியிருக்கவேண்டும். சிக்கலான சிடுக்கான மொழி சிறுகதையின் அழகை பெரும்பாலும் இல்லாமலாக்கிவிடுகிறது

 

உ. சிறுகதை நிகழ்வது, நினைவுகூரப்படுவது அல்ல

 

எனக்கு வந்த பாதிக்கதைகள் நினைவுகளில் நடக்கின்றன. பெரும்பாலான சம்பவங்கள் யாராவது ஒருவரின் நினைவில் நடக்கின்றன. என்று நினைத்துக்கொண்டான், என்று ஞாபகம் வருகிறது- என்றபாணியில். இது ஏன் என்றால் கதையை எழுதும் ஆசிரியன் அப்படி நினைவுகூர்வதை எழுத முயல்கிறான். ஆகவே அதே பாணியில் எழுதுகிறான். நினைவுகூரும் விஷயங்கள் கதையில் தகவலாகவே வரமுடியும். சுருக்கமாக. செய்தியாக. கதை நிகழ்வதுதான்

 

ஜெ

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7
அடுத்த கட்டுரை“ஆனையில்லா!” [சிறுகதை]