இலஞ்சிமூட்டு பகவதி கோயிலில் நாலடி கருணாகரன் நாயர் வீட்டு வகை பந்திருநாழி வழிபாடு. பன்னிரண்டுநாழி பச்சரிசி, எட்டு தேங்காய், வெல்லம், முழுவாழைக்குலை ஒன்பது. அவர்களின் மகளுக்கு பிறந்தநாள்.
ஒற்றைக்காளை வண்டியில் முத்தன் உருளியைக் கொண்டுவந்தபோதே நத்தானியேல் அதை வயல்வரம்பில் நின்றபடி பார்த்தான். நேராக வந்துவிட்டான். வழிபாடு முடியும்வரை அவன் வெளியே தென்னை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கோயிலுக்குள் பேச்சொலிகள், பாத்திரங்களின் ஒலிகள். பிறகு மணியோசை.சங்கொலி.
நாராயணன்போற்றி வெளியே வந்து “டேய் நத்து, வாடே” என்றார். அவன் பாய்ந்து சென்று கோயிலின் புறத்திண்ணையில் அமர்ந்தான் பெரிய வாழையிலை போட்டு அதில் சூடான வெள்ளைச்சோறு. கூட பிசைந்துகொள்ள இளந்தேங்காய்த் துவையல்.
அவன் முழுமூச்சாகச் சாப்பிடுவதைப் பார்த்து “லே பாயசம் இருக்குலே… பாயசம் குடிலே” என்றார் போற்றி.
“அது வேண்டாம் ஏமானே” என்றான். நெய்நாற்றம் அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தும்.வெல்லமும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் ஒவ்வொருமுறையும் போற்றி அவனை வற்புறுத்துவதுண்டு.
எழுந்தபோது கையை ஊன்றவேண்டியிருந்தது. திடீரென்று எடைகொண்டுவிட்ட வயிறு சமநிலை தடுமாறச் செய்தது. ”ஏலே, வயித்திலே பேனை வச்சு கொல்லலாம் மாதிரில்லா இருக்கு” என்று வாச்சர் சிவன்பிள்ளை சொன்னார்.
“இந்தாலே பளம் தின்னு” என்றார் போற்றி.
அவன் நாலைந்து பழங்களை வாங்கி கையில் வைத்துக்கொண்டான். அவற்றை பார்த்துக்கொண்டே இருந்தபோது வயிறு கொஞ்சம் அமுங்கியது. உடனே பழங்களை உரித்து தின்றுவிட்டான். தன் வயிற்றைப் பார்க்க அவனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. தொப்புள் பெரிதாகப் புடைத்த வயிறு பெரிய தவலை போல தெரிந்தது.
“கண்டியாட்டீ எனக்க வயிற? கல்லுபோல இருக்கு” என்று அவன் இலைக்கூடை எடுத்துப்போன குஞ்சத்தியிடம் சொன்னான்.
“அய்யே பயலுக்க வயித்திலே பிள்ளை இருக்கே” என்று அவள் சொன்னாள்.
அவனுக்கு நாணமாகிவிட்டது. ”போடீ கரிக்கட்டி…” என்றபின் கோயிலின் பெரிய திண்ணையில் ஏறி அமர்ந்து மசமசவென்று வெயில் ஏறத்தொடங்கியிருந்த முற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அறைக்கல் வீட்டு கேசவன் தம்பி வேகமாக வந்தார். வழக்கம்போல தோளில் துண்டு நீளமாக, விழப்போகும் நிலையில் கிடந்தது. வேட்டிநுனியை தூக்கி அக்குளில் இடுக்கியிருந்தார்.
அவனருகே வந்து வெற்றிலை நிறைந்த வாயை தூக்கி உதடுகளால் உள்ளிருந்த சாற்றை அணைகட்டி “போற்றி உண்டாலே உள்ள?” என்றார்.
“இருக்காரு” என்றான்.
“மயிரு, பிராமணன்னு பாவம் பாத்தா தலையிலேயே சவிட்டிக் கேறுதானுக” என்றபடி உள்ளே சென்றார்.
பகவதிக்குக் கொடையன்று திருவிளக்கு வழிபாட்டுக்காக எடுத்துக்கொண்டு வந்த குத்து விளக்குகள். இரண்டு மாதங்களாக அங்கேதான் இருந்தன. அதை கொண்டுசென்று கொடுக்க ஆளில்லை. கேசவன் தம்பி நாலைந்து முறை பல இடங்களில் வைத்து கேட்டுப்பார்த்துவிட்டு நேரில் வந்திருந்தார்.
கேசவன் தம்பி உள்ளே கூச்சலிடுவது கேட்டு அவன் எட்டிப்பார்த்தான். “தூக்கி வெலைபோட்டு வித்துட்டு போங்கலே… ஆரானுக்க முதலுண்ணா அம்மைக்க ஆமக்கனுக்க முதலுண்ணு நினைக்குத கூட்டம்லா!” என்றார்
ஸ்ரீகாரியம் கோலப்ப பிள்ளை “என்னத்துக்கு பெரிய பேச்சு பேசுதீரு? இந்தா இருக்கு உங்க விளக்கு. கொண்டு போங்க” என்றார்.
“அதை நான் கேக்குததுக்கு முன்னாடி குடுத்திருக்கணும்டே. அப்பம் நீ மானஸ்தன்… “ என்றார் கேசவன் தம்பி
போற்றியும் வாச்சர் வேலு நாயரும் விளக்குகளை ஊட்டறையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார்கள். மொத்தம் இருபத்துநாலு குத்துவிளக்குகள். எல்லாம் ஒரே அளவு.
“இந்நா இருக்கு உங்க சொத்து… கொண்டு போங்க. நாங்க இங்க நெலவிளக்கை வேவிச்சு திங்குத வளக்கமில்லை”என்றார் வாச்சர்.
ஸ்ரீகாரியம் கோலப்ப பிள்ளை “எண்ணிப் பாத்துக்கிடணும் தம்பிசாறே… பிறவு கணக்கு சொல்லப்பிடாது” என்றார்.
”எடுத்திட்டு வாறப்பம் ரெண்டு கையாலேயும் வாயும் சூத்தும் பொத்தத் தெரியுதுல்லா? ஆரு திருப்பிக் கொண்டு போறது?”என்று கேசவன் தம்பி கூச்சலிட்டார்.
“நான் வண்டிய வச்சு குடுத்தனுப்புதேன்… தம்பிசார் போகணும்… இந்நா வந்திரும்” என்று ஸ்ரீகாரியம் கோலப்ப பிள்ளை சொன்னார். “முத்தனுக்க வண்டி அந்தாலத்தான் போவுது… ஏத்தி அனுப்புதேன்”.
“நீ கொண்டு வந்து முற்றத்திலே எறக்குவே… ஆருலே மச்சிலே ஏத்துகது? வயசாம்காலத்திலே நான் சாகுததுக்கா?”
ஸ்ரீகாரியம் கோலப்ப பிள்ளை சுற்றிலும் பார்த்து நத்தானியேலைக் கண்டார். “லே, வண்டியிலே ஏமான்கூட போ. இந்த நிலைவிளக்குகளை மச்சிலே ஏத்தி வையி” என்றார்.
அவன் தலையை தடவினான். வாச்சர் வேலுநாயர் “ரெண்டுரூவா தாறேண்டே… கூலியாட்டு வேங்கிக்கோ” என்றார். அவன் தலையாட்டினான்
”இனி கொடையிருக்கு கூத்திருக்குண்ணு சொல்லிட்டு நெலைவெளக்கு கேட்டு வாருங்க, சொல்லுதேன்” என்று கேசவன் தம்பி கிளம்பிச் சென்றார்.
அவர் போவதைப் பார்த்தம்பி வேலு நாயர் “மக்களும் குட்டிகளும் ஒண்ணும் இங்க இல்ல. இருக்கது ரெண்டு கிளவியும் இந்த கடுவன்பூனையும்… ஆனா ஒத்த பைசாவ விடுகதில்லை. ஒம்மாணை ஓய், காலம்பற தோப்புல எறங்கி சுத்திச்சுத்தி வாறாளுக கிளவிக. ஒரு தேங்கா ஒரு தென்னமட்டை விளுந்திரப்பிடாது. அப்டியே இளுத்து கொண்டுட்டுப்போய் வச்சுகிடுதது… நிதி காக்குத பூதங்கள்லா!”
குஞ்ச நாடான் “ஏமான் அந்த வீட்டுக்குள்ள போயிட்டுண்டா? வீடில்ல அது, கொட்டாரம்லா. அம்பது அறை உண்டுண்ணாக்கும் பேச்சு. அதிலே ஒரு அறையிலே ரெண்டு கிளவிகள் கெடக்குதுக. முன்னால வலிய அறையிலே ஒரு தட்டுபடியிலே இவரு… பின்ன அடுக்களை, ஒரு வச்சுபூட்டு அறை. அம்பிடுதான். மத்த எல்லா அறையையும் மூடியாக்கும் போட்டிருக்கு… இருட்டு கேறி கறுத்த பசையா மாறியிருக்குன்னு அரிவைப்புகாரி காளி சொன்னார். அதை கொஞ்சம் தூத்துவாரி வைச்சா என்ன கேடு?” என்றான்
“என்னத்துக்கு? தூத்தா மறுபடியும் பொடி கேறும்லா? மனுசன் வாளுத எடத்திலே பொடி படியாது… மத்த இடத்திலே பொடியும் மாறாலையும் படியும்… அது மூதேவிக்க அடையாளமாக்கும். அங்க முறியிலே பல துர்த்தேவதைகள் உண்டுண்ணாக்கும் பேச்சு…”
“முறியிலயா?”
“பின்ன? அந்தக்காலத்திலே எம்பிடு ஆளை கொன்னிருப்பாக… அந்த ஆவியெல்லாம் வேற எங்க போகும்?” என்றார் ஸ்ரீகாரியம் கோலப்ப பிள்ளை.
விளக்குகளை எல்லாரும் சேர்ந்து முத்தனின் வண்டியில் ஏற்றினார்கள். நத்தானியேல் குத்துவிளக்குகளுடன் ஏறிக்கொண்டான். மண்சாலை வழியாக சென்றனர். அறைக்கல் வீடு ஊரிலிருந்து தள்ளி மிகப்பெரிய தோப்புக்கு நடுவே இருந்தது. அதை ஒட்டி இரண்டு பெரிய பலாமரங்கள். அவர்களின் தோப்புக்கு அப்பால் காப்ரியேல் பெருவட்டரின் தோப்பு. அதற்கு அப்பால் கரடிப்பாறை எழுந்து நின்றது.
நத்தானியேல் அங்கே முன்பு ஓரிருமுறை வந்ததுண்டு. முற்றம் பெரிதாக புல்படர்ந்து இருந்தது. பெரிய தொழுவங்களில் மாடுகள் இல்லை. தரைக்கற்கள் புழுதியுடன் பெயர்ந்து கிடந்தன. கிணற்றருகே அரிவைப்புகாரி காளி பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.
குத்துவிளக்குகளை முத்தனும் நத்தானியேல்லும் சேர்ந்து முற்றத்தில் இறக்கி வைத்தார்கள். முத்தன் “சோலிகெடக்கு ஏமானே, சந்தைக்கு போகணும்லா? வாறன்” என்று கிளம்பிவிட்டான்.
“டேய் ரெண்டுரெண்டா மேலே கொண்டு வாடா” என்றார் கேசவன் தம்பி.
இரண்டு இரண்டு குத்துவிளக்குகளாக சேர்த்து கட்டி தலையில் தூக்கிக்கொண்டு நத்தானியேல் படிகளில் ஏறினான். மொத்தம் முப்பத்தாறு படிகள். நடுவே படிக்கட்டு வளைவில் ஒரு பெரிய படி. அங்கே நின்று மூச்சுவாங்கிக்கொண்டான்.
அவனுக்கு முன்னால் கேசவன் தம்பி கையில் அரிக்கேன் விளக்குடன் ஏறிச் சென்றார். “பாத்துவாலே, ஒரு படிக்கு சொல்பம் எளக்கமுண்டு” என்றார்.
அவர் சொல்லி முடிக்கவும் அவன் அந்தப்படியிலேயே காலைவைத்தான். கடக் என்ற ஓசை. அவன் நிலைதடுமாறி சுவரில் வலத்தோள் முட்டிக்கொண்டான். தலையிலிருந்த பெட்டி சுவரில் மோதி ஓசையெழுப்பியது.
“லே கீள போட்டிராதே… பாத்து” என்றார் தம்பி.
அவன் மூச்சு வாங்க மேலேறி மச்சின்மேல் நின்றான். அத்தனைபெரிய மச்சு அவன் அதற்குமுன் பார்த்ததே இல்லை. இருட்டாக, ஒட்டடை நிறைந்து, தூசுமணத்துடன் இருந்தது. பெரியபெரிய பானைகள் குந்தி அமர்ந்திருக்கும் பூதங்கள் போல வரிசையாக இருந்தன. அவற்றுக்குமேல் உறிகளில் பலவகையான குலுக்கைகளும் குடுவைகளும் தொங்கின. உயரமான கால்பெட்டிகள் தூசுபடிந்து அமைந்திருந்தன. அவை சிறிய வீடுகள்போலிருப்பதாக அவனுக்கு தோன்றியது.
கீழே இடையில் கைவைத்து நின்றுகொண்டு அம்மச்சி “என்னடே எண்ணி எண்ணி நடக்குதே? கால எடுத்து வச்சு போடே” என்றாள். அவள் தலை பெரிய வெள்ளைப்பூவன் சேவற்கோழி போல இருந்தது. கைகள் தொங்க நன்றாக கூன்போட்டிருந்தாள். காதுகளில் பொன்னாலான காதோலைகள் தொங்கின. இரு சின்னக்குழந்தைகள் ஆலம்விழுதுகளைச் சேர்த்துக் கட்டி ஊஞ்சாலாடுவதுபோல. அவள் முலைகள் வற்றிப்போய் தேன்கூடு போல அசைந்தன.
அவன் கொண்டுவந்த குத்துவிளக்குகளை ஒவ்வொன்றாக வாங்கி கேசவன் தம்பி பெரிய பெட்டிக்குள் வைத்தார். அவன் மூச்சுவாங்கினான். “சீக்கிரம் போய் எடுத்துட்டுவாடே… சின்னப் பய நீ… உனக்கென்ன தீனம்?”
அம்மச்சி முட்டில் கைவைத்து ஒவ்வொரு படியாக ஏறிவந்தாள். “கேசவா, நிலைவிளக்குகளை துடைச்சுத்தானே உள்ள வச்சே?”
“ஆமா துடைச்சு குடுக்கானுக…திருப்பிகுடுத்ததே பெரிய காரியம்… கேட்டா என்னமோ அவனுகளுக்க அம்மைக்க ஆமக்கனுக்க சொத்த கேக்கேன்னுட்டு கோவம்”
“அந்தப் பூனைய வெரட்டுடே…”
“அது அங்கிண கெடக்கட்டும்… உன்னை அது என்ன செய்யுது? நீ இப்பம் எதுக்கு மேலே கேறி வந்தே? சுவாசம் முட்டு உண்டுல்லா உனக்கு?”
“அந்த பூனை கிடந்து ராத்திரியெல்லாம் சத்தம்போடுதே… நேர கீளயாக்கும் எனக்க முறி… சட்டியும் பானையுமாட்டு உருட்டுது…கிடந்து கண்ணமூட முடியல்ல… ”
“அதுக்கு நான் என்ன செய்ய? மச்சுண்ணா பூனை இருக்கும். பூனை இல்லேண்ணா எலி இருக்கும்”
“நீ எனக்கு படிப்பிக்கவேண்டாம் கேட்டியா.. டேய், உருளுத சாமான் வெங்கலப்பாத்திரமோ உருளியோ கிடந்தா எடுத்து பெட்டியிலே வைண்ணு சொன்னேன்… பூனை, இந்தா போ… பூனை கேறி வளந்துல்லா கெடக்கு”
“பின்ன வளராதா? எலி மலிஞ்ச மச்சாக்குமே”
கூரையின் கூம்புமடிப்பில் பலகை உடைந்து திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம் விழுந்து துணிவிரித்ததுபோல கிடந்தது. அப்பால் பெரிய தாய்ப்பலா மரம். அதன் கிளை ஒன்று வீட்டின்மேல் எழுந்து பரவியிருந்தது.
“அந்த பிலாமரக் கிளைய முறிக்கணும்டே… கூரை முளுக்க எலையா கெடக்கு. ஓடு அவிஞ்சுபோனா இந்தக்காலத்திலே மாத்த முடியுமா சொல்லு”
“எம்பிடுலே ஆச்சு?” என்றார் கேசவன் தம்பி.
நத்தானியேல் ‘பதினெட்டு” என்றான்
’போ போ ,சொடியா நடந்து கொண்டுவா”
“டேய் கேசவா, சொல்லுகதை கேளு கேட்டியா…இந்த வீடு இருக்கப்பட்ட வரைத்தான் நமக்கு பூமியிலே எடம் கேட்டுக்கோ… அந்தக்காலத்திலே தெக்கன் திருவிதாங்கூரிலே இதாக்கும் ரெண்டாமது பெரிய வீடு… மகாராஜா வந்தா இங்கதான் தங்குவாரு… அம்ம மகாராணி வந்து தங்கினது எனக்க ஞாபகத்திலே உண்டு”
அம்மச்சி ஒரு வெண்கலச் சட்டியை கையில் எடுத்தாள். “பூனை !போ பூனை…” என அதை எறிந்தாள். அது கணகணவென உருண்டது
“என்ன செய்யுதே நீ?”
“பூனைய விரட்டினேம்டே.. ஒருஅடி வச்சு குடுத்தப்பம் என்னமா பம்மி ஓடிப்போச்சு பாரு.. எடைக்கிடை வந்து இப்டி ஓரோ அடி குடுப்பேன்… ஓடீரும்…”
நத்தானியேல் குத்துவிளக்குகளை கொண்டுவந்து கொடுத்தான். ‘எல்லாம் ஆச்சு ஏமானே”
“செரி… நீ இந்த வாரியல எடுத்து ஒரு சுத்து சுத்தீட்டு வா” என்றார் கேசவன் தம்பி
“இவன் என்னண்ணு இங்க ஒட்டடை அடிப்பான்!” என்றாள் அம்மச்சி
‘ஒட்டடை அடிக்கணுமானா எட்டாளு வேணும்.. நான் சும்மா நடக்குத வளியிலே முகத்திலே படுத ஒட்டடைய அடிக்கச் சொன்னேன்.. “
அவர் விளக்குடன் கீழே இறங்கிச்சென்றார். அம்மச்சி “பாத்து அடிடே… குடுக்கையெல்லாம் அறுந்தாக்கும் நிக்குது. தலையிலே விளுந்திரும்” என்றபடி அவளும் இறங்கிச் சென்றாள்
நத்தானியேல் துடைப்பத்தை சுழற்றியபடி சென்றான். உடைந்து கிடந்த முக்கோணக் கூரைமுனையில் ஏதோ அசைவு தெரிந்தது. பூனை மீண்டும் வந்துவிட்டது. அவன் “ஏய் போ” என்றபடி முன்னால் நடந்து திகைத்து நின்றான். அது ஒரு சிறுத்தை.
அவன் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருந்தது. சட்டென்று அழுகை வந்தது. அதை கைநீட்டி சுட்டிக்காட்டி “ப்புள்ளி…ப்புள்ளிப்புலி!” என்றான்.
அது மஞ்சள்நிறமாக இருந்தது. செவிகளை முன்கோட்டி மீசை விடைக்க அவனை நோக்கி பற்களை காட்டியது. அது சிரிப்பது போல அவனுக்கு தோன்றியது
”ய்யம்மோ புள்ளிப்புலி! ய்யம்மோ புள்ளிப்புலி!” என்று நத்தானியேல் சொன்னான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
சிறுத்தை அவனை நோக்கி முகம் சுளித்தது. காதருகே பறந்த ஒரு ஈயை வாய் சுழற்றி கவ்வ முயன்றபின் முன்னங்காலை நீட்டி படுத்து உள்ளங்காலைத் தூக்கி நக்க ஆரம்பித்தது. அதன் நாக்கு அத்தனை நீளம் என்று அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது. பின்பக்கம் ஏதோ தனியாக அசைந்தது. அவன் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தான். அது சிறுத்தையின் வால். அவன் அசைந்தபோது நக்குவதை நிறுத்தி அவனை ஏறிட்டு பார்த்த சிறுத்தை பழுதான ரேடியோ போல ஓர் ஒலியை எழுப்பியபின் மறு காலை தூக்கி நக்க தொடங்கியது.
நத்தானியேல் அழுதுகொண்டே இறங்கி வந்தான். கேசவன் தம்பி கையில் ஒரு ரூபாயுடன் நின்றிருந்தார்.
“ஏம்லே? ஏம்லே அளுதே?”
“ப்ப்புலி… ப்புள்ளிப்புலி… அங்க மேலே” என்று நத்தானியேல் கைசுட்டி விசும்பினான்
கேசவன் தம்பி காற்றுபோல ஒலியெழுப்பி கறைபடிந்த பல்லைக்காட்டிச் சிரித்தார். “மச்சிலே புலியா? கொள்ளாம்… அக்கா, கேட்டியா, புலிய பாத்துட்டானாம்.. புள்ளிப்புலி”
“சின்னப்பயடே அவன்… அவன் கண்டானா புலியும் பூனையும்? உள்ள பைசாவ குடுத்து அவனை அனுப்பு”
“உள்ளதாக்கும்… புள்ளிப்புலியாக்கும்… நான் கண்டேன்”
“எலி பிடிக்க நாங்க வளக்குத புலியாக்கும் அது… “ என்றார் கேசவன் தம்பி
“பய பயந்துட்டானே…. பூனையப் பாத்து பயருத பயலா இருக்கானே….” என்றாள் உள்ளிருந்து வலிய அம்மச்சி
அம்மச்சி ”கேசவா அந்த பூனை கொஞ்சம் பெரிசாக்கும் கேட்டியா? பய பயருததிலேயும் காரியம் உண்டு… நீ போயி ஒரு கம்பெடுத்து அதை தட்டி விரட்டீட்டு வாடே”
”எத்தனமட்டம் அடிக்குதது? இந்தால போனா அந்தால வந்திரும்… இப்பம்தானே நீ அதை செம்பாலே அடிச்சே.. இந்நா மறுபடி வந்து சின்னப்பயல பயமுறுத்தியிருக்கு”
நத்தானியேல் கண்ணீருடன் கோயிலுக்கு திரும்பிச் சென்றான். அங்கே முக்குக்காட்டு ஐயப்பனும், தங்கையா நாடாரும், டீக்கனாரும்,வயக்கவீட்டு கரடிநாயரும் வந்திருந்தனர். ஐயப்பன் “ஏம்லே அளுவுதே?” என்றான்
போற்றி ”ஏம்டே? டேய் நத்து, என்னலே மக்கா? போத்தில்லாடே கேக்கேன். சொல்லுடே” என்றார்
“வல்லவனும் மண்டையிலே தட்டியிருப்பான்… தாயில்லா பிள்ளையில்லா” என்றான் ஐயப்பன்
‘இங்க கிடக்குத பயலாக்கும்… பயலுக்கு என்ன தீனமோ…ஏலே சொல்லுலே. தீனம்னா மருந்து வாங்கித்தாறேம்லே” என்றார் டீக்கனார்
நத்தானியேல் “அங்க புள்ளிப்புலி!” என்றான்
“புள்ளிப்புலியா? வாற வளியிலயா? எங்க பாத்தே?”
“அவிய வீட்டிலே, மச்சிலே”
“வீட்டு மச்சிலேயா? புலியா? மியாவ்னு சத்தம் போட்டிருக்குமே?” என்று தங்கையா நாடார் சொன்னார்.
“இல்ல மஞ்சநெறமாக்கும்… பெரிய புலி… என்னையப் பாத்து சிரிச்சு, கண்ணடிச்சுது” நத்தானியேல் மீண்டும் அழ ஆரம்பித்தான்
”புலி கண்ணடிச்சுப் போட்டே…நம்ம நத்துக்க மானம் போச்சே” என்றார் டீக்கனார்.
“இருடே… அவன் நல்ல பயலாக்கும். அறிவுள்ளவன்…டேய் நீ என்ன பாத்தே? சொல்லு”
நத்தானியேல் “புலி” என்றான்
“என்ன நெறம்? சொல்லு”
“மஞ்சநெறம்… இந்தா இந்த மஞ்சரளி பூவுக்க நெறம்”
”ஓ, எம்பிடு சைசுலே?”
”இம்பிடு…”
“ஐயப்பா, பய சொல்லுகது உள்ளதுண்ணுல்லா தோணுது”
“ஆமா வீட்டுலே புலி கேறுது… ஏமான் என்ன சொல்லிட்டிருக்கு”
“இல்லலே அவன் அப்டி சொல்ல மாட்டான். அவன் ஆளு கிண்ணனாக்கும்… லே, அது பூனை இல்லல்ல? உறப்பாத்தானே சொல்லுதே?”
“பூனை செவப்பாட்டா இருக்கும்…?” என்று நத்தானியேல் சீறினான்
“வே, கேட்டா இவன் புலி மாதிரில்லா சீறுதான்” என்றார் டீக்கனார்.
”போய் பாத்திருவோமே” என்று கரடி எழுந்துகொண்டார்
“அங்கயா போறீய? அந்த தம்பி கடுவன்பூனைல்லா… கடிக்கல்லா வருவான்”
“வே, அவர புலி அடிக்கப்பிடாதுன்னாக்கும் நாம போறது… லே வாலே”
டீக்கனார் “நீங்க போங்க. நான் வந்தா செரிப்படாது” என்றார்.
அவர்கள் நடந்தபோது வழியில் தங்கையா நின்று திரும்பி நத்தானியேலிடம் “லே நத்து, அது புலிதானே? இஞ்சபாரு, மானம் போயிரும்”
“பூனைய கண்டா எனக்கு தெரியாதா?”
“கண்ண வேற அடிச்சு காட்டியிருக்கு” என்றார் போற்றி, திரும்பிப் பார்த்து சிரித்தபடி
நத்தானியேல் மீண்டும் அழத்தொடங்கினான்
“லே ,சும்மா வா… டேய், இனி அவன ஆரும் பயப்படுத்தப்பிடாது…”
அவர்கள் அறைக்கல்வீட்டு முற்றத்தை அடைந்தனர்.கேசவன் தம்பி உள்ளிருந்து கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி வந்தார். வேட்டியை அள்ளி அக்குளில் செருகியிருந்தார். எச்சில்கோடாக வெற்றிலை முகவாயில் வழிந்தது.
“ம்ம்? என்னவாக்கும்? டொனேசன் தர முடியாது… பணமில்லை”
“டொனேசனுக்கு பிறவு வாறம்… உங்க மச்சிலே புள்ளிப்புலி இருக்குண்ணு இவன் சொல்லுதான்”
“டேய் ஐயப்பா, உனக்கு அறிவிருக்காடே? வீட்டுமச்சிலே புள்ளிப்புலியா? பூனையப் பாத்துட்டு சின்னப்பய சொல்லுதான்… போவும்வே… டேய் பாகுலேயா, உனக்கு என்னடே தீனம்?”
கரடிநாயர் “இல்ல, பாத்திருவோமே… வீடு ஒதுங்கினா மாதிரி இருக்கு”
“இருந்தா? புலி வீட்டிலே வந்து புளிச்சமோரும் சோறும் திண்ணுட்டு போகுதாக்கும்? வேற சோலிய பாருடே”
“ஒரு தடவ பாத்திருவோமே… அப்பிடி ஆணையிட்டு சொல்லுதானே”
”வேற சோலி இல்ல… டேய் அது பூனை. நான் நூறுதடவை கம்ப வச்சு அடிச்சு விரட்டியிட்டுண்டு. இண்ணைக்கு கூட அக்கா செம்ப எடுத்து எறிஞ்சா… பயந்து ஓடீரும்”
“செம்ப எடுத்தா?” என்றார் கரடி நாயர்
“வாலப்பிடிச்சு தூக்கி கொண்டுவந்து காட்டுதேன். பாக்குதியா?”
“செரி பூனைதான். இருந்தாலும் பாத்துப்போடுவமே”
“அப்ப நான் சொன்னா உனக்கு விலையில்ல?”
”இல்ல தம்பிசாரே, வந்தாச்சுல்ல, பாத்திருவோம்” என்று கரடிநாயர் உள்ளே போனார். “லே ஐயப்பா வாடே”
“போற்றி உமக்கும் அறிவில்லாம போச்சே”
“அறிவிருந்தா ஏன் கோயிலிலே பூசை பண்ணுதோம்?” என்றார் போற்றி, அங்கே அமர்ந்தபடி.
அம்மச்சி “டேய் கேசவா, என்னடே?” என்று குனிந்து ஆடியபடி வந்தார். “ஆரு போற்றியா? தெச்சிணை இப்பம்தானே குடுத்தம்? யட்சிக்கு பூசை வைச்சப்ப?”
”நம்ம வீட்டு மச்சிலே இருக்குத பூனைய புலியாட்டு ஆக்க வந்திருக்காங்க” என்றார் தம்பி
”அந்த பய பேச்ச கேட்டுட்டா? நல்ல கதை….அந்த பூனைக்கு நான் குடுக்காத அடியா? சவம் நனைஞ்ச துணியாட்டுல்லா இருக்கும்… அறிவும் இல்ல..”
நத்தானியேல் கடைசியாக மச்சின் படிகளில் ஏறினான்
”எங்கலே?”
“அங்க… அந்த மூலையிலே”
”அந்த கூட்டுமூலைப் பலகை விளுந்துபோட்டு. பலாமரக்கிளை வழியாட்டு கேறி உள்ள வந்திருக்கு”என்றான் ஐயப்பன்.
”இருடே இருடே முதல்ல ஐட்டத்த பாப்பம்”
“எங்கலே நத்து?”
“இந்நா இங்கிண”
“இங்க எலிப்புளுக்கையில்லா கெடக்கு?”
“ஏமானே அது வௌவ்வாலு புளுக்கையாக்கும்”
“இங்கதான் பாத்தியா?”
“ஆமா.. இந்நா இங்க”
“புலிய பாத்தே?”
“ஓ, சத்தியமாட்டு பாத்தேன்”
”செரி, இனி புலி வரும்பம் பாப்பம்… ஐயப்பா வாடே”
“ஏமானே, பய சொல்லுகதிலே காரியமுண்டு…இந்த தடம் பாத்தியளா?”
“என்னது?
”பொடியிலே கால் பதிஞ்சிருக்கத பாருங்க”
“பெரிசா இருக்கு… காட்டுப்பூனையா இருக்குமோ”
“காட்டுப்பூனைக்கு இவ்ளவுபெரிய காலா?”
“அப்பம்?”
“சிறுத்தைதான்…”
“உள்ளதாலே?”என்றார் தங்கையா நாடார்.
“சந்தேகமே இல்லை… சாதனம் அதுதான்”
“டேய், சிறுத்தைய வீட்டுலே வச்சுக்கிட்டா கண்ணும் பிடியும் காணாத்த மூணு கிளடுகள் வாள்ந்திடிட்ருக்கு……”
“ஒருவேளை அதுக்கும் கண்ணும் பல்லும் போயிருக்குமோ? வயசான சிறுத்தை இங்க வந்து சேந்திருக்கோ?”
“நீ போடே, வெறும்வாக்கு சொல்லிட்டு”
“இல்ல ஏமானே. அவரு சொல்லுகதப் பாத்தா இந்த ஐட்டம் கொஞ்சநாளாட்டு இங்க இருக்கு… அவரு கம்பாலே அடிச்சேன் செம்பால எறிஞ்சேன்னு சொல்லுகது உண்மையாக்கும். அடியும் வாங்கிட்டு இங்கிண இருக்கு”
“டேய் எனக்கு என்னமோண்ணு வருதுடே… நல்லா பாரு. கொஞ்சம் மூத்த காட்டுபூனையாட்டு இருக்கும்”
”ஏமான், நான் காட்டுகிருஷி செய்யுதவனாக்கும்… நான் பாக்காத சிறுத்தையா?”
“அந்நா நிக்குவு” என்றான் நத்தானியேல்
“என்னலே?”
“அந்நா நிக்குவு”
“என்னது?”
“அது”’
அவன் சுட்டிய திசையை பார்த்த ஐயப்பன் “யம்மா! ஒரிஜினல் சாதனம்லா?” என்றான்
சிறுத்தை பலாக்கிளைக்கு தாவி மறைந்தது
“வங்கெளடு” என்றார் தங்கையா நாடார். “வயறு தளந்து தொங்கிட்டிருக்கு”
“இங்க இருந்து நாம பேசுதத கேட்டிருக்கு” என்றான் ஐயப்பன். “எளவு இங்க ஆனை மறைஞ்சு நின்னாலும் தெரியாதுல்லா?”
“என்னடே செய்யுதது?”
“ஆளக் கொண்டுவந்து பிடிப்போம்” என்று ஐயப்பன் சொன்னான். “கண்ணி வச்சு பிடிக்கதுக்கு நல்ல ஆளுண்டு… பேச்சிப்பாறை வரை போகணும்”
“எப்டி இருந்த வீடு…டேய் ஐயப்பா அந்தக்காலத்திலே இந்த கேசவன்தம்பிக்க அப்பா பல்லக்கிலே போவாரு. நான் கண்டிட்டுண்டு… முற்றத்திலே எட்டு ஆனை நிக்கும்”
“அப்பம் ஆனைப்பிண்டம் நாறி அங்க இருக்கமுடியாதே”
“அதொரு ஐசரியம்டே… அது மனசிலாக்கணுமானா நீ நாயரா இருக்கணும்”
“இப்பம் ஒருநேரம் பயத்தங்கஞ்சி வச்சா மூணாளும் மூணுநேரம் குடிச்சுட்டு இருந்திருவாங்கண்ணு காளி சொன்னா”
மேலே கேசவன் தம்பி ஏறிவந்தார். ‘என்னடே இங்கே? டேய்…என்ன செய்யுதீக?”
“சொல்லுதேன்… வாருங்க”
அவர்கள் கீழே வந்தனர். கேசவன் தம்பி “அங்க என்னடே எடுத்தீய? போற நேரத்திலே மூணாளும் மடிய காட்டீட்டு போகணும், சொல்லியாச்சு”
“ஆமா. அங்க பூதம் காக்குத பொதையலுல்லா இருக்கு?”
“என்ன இருந்தாலும் அது எங்க முதலு… கண்டவன் கைய வைக்கவேண்டாம்… மடியக் காட்டுங்கடே”
”கேசவா இவனுகளுக்கு வேற என்னமோ உத்தேசம் உண்டு” என்றாள் பெரிய அம்மச்சி.
“நான் சொல்லுகத சொல்லிடுதேன்… அங்க மேலே சிறுத்தை இருக்கு” என்றார் கரடி.
“அப்ப வேலை அதாக்கும்… சிறுத்தைய பிடிக்க ஆளக்கூட்டிட்டு வருவே. மச்சுலே கண்டவன் கேறி கைய வைப்பான்…எங்களுக்கு வயசாச்சுண்ணு நினைப்பு… அதுவேண்டாம்… நாங்க சீவனோட இருக்கிற வரைக்கும் ஒருத்தன் அறைக்கல் வீடு வீட்டுக்குள்ள நுழைஞ்சிர மாட்டான்.. ஆகா, அந்த வரைக்கும் வந்தாச்சா?”
“தம்பிசாரே, உள்ளதாக்கும். நான் கண்ணாலே பாத்தேன்”
“உன்னை நான் பாத்தாச்சுடே… வேண்டாம். போ. மூணுபேரும் படியெறங்குங்க”
“கேசவா போலீசிலே கேசு குடுடே… போலீஸை விளிடே”
உள்ளிருந்து மூத்தம்மச்சி “என்றே பகவதீ… காட்டுகள்ளன்மாரு வீட்டில் கேறியல்லோ… காத்து ரக்ஷிக்கணே தேவீ” என்று கூச்சலிட்டாள்
“நான் சொல்லியாச்சு. ஒரு பொருளு காணாம போனா நீதான் பொறுப்பு. பாகுலேயா, நீ சர்க்கார் ஆளாக்கும். நான் உனக்க ஆபீஸிலே விளிச்சு சொல்லுவேன்” என்றார் தம்பி.
“சார், நான் சொல்லுகத கேக்கணும்… புள்ளிப்புலியாக்கும்”
“புள்ளிப்புலிக்கு நான் பயத்தங்கஞ்சி குடுத்து வளக்குதேன்…டேய் போடே… வெளியே போ….போங்க முதல்ல… போத்தி நீரும் எறங்கும்”
“இந்த நாயாக்கும் சொன்னது… இவனுக்கும் கண்ணும் காணாது…டேய் நீ பாத்தியாடே?”
“ஆமா அம்மச்சி, கண்ணாலே பாத்தேன்”
அம்மச்சி கையிலிருந்த டம்ளரை வீசி ‘எரப்பாளி பொய்யா சொல்லுதே” என்றாள்
டம்ளர் உருண்டு ஓட நத்தானியேல் விலகிக்கொண்டான்
“நத்து ;லே வாலே”
வெளியே போனதும் போற்றி “டேய் கரடி, நமக்கு என்னத்துக்குலே இதெல்லாம்? தேவையில்லாம நாம எதுக்கு ஒரு இதிலே தலையிடணும்?” என்றார்
“அதிப்பம்…” என்றார் கரடி.
”உனக்கு அது புலி, அவங்களுக்கு அது பூனை.நாம என்னத்துக்கு இன்னொருத்தருக்க பூனைய புலியாக்கணும்? இல்ல கேக்கேன்?”
”இல்ல, கடிச்சுப்போட்டுதுன்னா?”
“ஏன் பூனை கடிக்காதோ”
“அது செரிதான்”
கேசவன் தம்பி வெளியே எட்டிப்பார்த்து “வேய், இந்நா இப்பம் அக்கா மேலே போயி அந்த பூனைய கம்பவச்சு அடிச்சு வெரட்டீட்டு வந்திருக்கா… பேசவந்திருக்கீரு…”
ஐயப்பன் “செரி போட்டு, ஒரு குளப்பம் நடந்துபோச்சு” என்றான்
“குளப்பத்துக்க வேரு என்னான்னு எனக்கு தெரியும்டே.. அறைக்கல் வீட்டு மச்சிலே கைய வைக்க இனியொருத்தனும் கணக்கு போடவேண்டாம்… போ போ…போடே”
திரும்பி நடக்கையில் போற்றி “மக்கா நத்து, நான் உனக்கு போனதும் தெரளியப்பம் தருவேன். நீ மச்சிலே என்னலே பாத்தே, சொல்லு” என்றார்
நத்தானியேல் “பூனையாக்கும்’ என்றான்.
“ஆகா, பய படிச்சுப்போட்டானே…” என்றார் போற்றி.
===============================================================================