எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

என் கல்லூரியில் ஓர் உரையாடலில் ராமன் சரயுவில் மூழ்கி உயிரிழந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனே ஒருவர் தற்கொலைசெய்துகொண்டவர் எப்படி தெய்வமாக முடியும் என்று கேட்டார். நான் கொலைசெய்யப்பட்டவர் தெய்வமாக முடியும் என்றால் இதுவும் முடியும்தான் என்று சொன்னேன்

 

தற்கொலை என்பதிலுள்ள கொலைதான் பிரச்சினை. நாம் முன்னால் ஜலசமாதி, வடக்கிருத்தல் என்றெல்லாம்தான் சொல்லிவந்தோம். தற்கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியதுமே அர்த்தம் மாறிவிட்டது. இந்தச் சொல் தினத்தந்தியால்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

 

எண்ண எண்ண குறைவது ஆழமான அந்தக் கேள்விகளை எழுப்புகிறது. அதில் எம்கே பேசும் இடங்களெல்லாமே முக்கியமானவை. அவர் முதுமையின் பயனற்றதன்மையைப் பற்றி பேசுகிறார். மூன்று பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று, நம்மிலிருந்து முளைத்தவை எல்லாம் நம்மைக் கடந்துசென்றிருக்கும். முளைக்காதவற்றை நாம் வைத்திருப்போம். இரண்டு, நாமே நம் சாதனைகளைச் சொல்லிக்கொண்டிருப்போம். கடந்தகாலத்திலேயே வாழ்வோம். மூன்று, நாம் நாமே உருவாக்கியவற்றை நம்முடைய பலவீனத்தால் அழிப்போம்

 

சாமானியர்கள் எவருமே முதுமையில் கனிவதில்லை. கர்மயோகிகளால் மட்டுமே அது முடியும் என்கிறார் முக்கியமான வரி அது. தொடர்ச்சியாக யோசிக்க வைத்தது. அறிஞர்களால் முதுமையை எதிர்கொள்ளவே முடியாது. ஏனென்றால் எந்த மனிதனின் ஆயுளும் சிந்தனையின் ஆயுளைவிட கூடுதலானது. ஆகவே அவன் அவனே உருவாக்கிய சிந்தனைகளையும் அவன் காலகட்டத்து சிந்தனைகளையும் காலம் கடந்துசென்றிருக்கும். அவன் அங்கேயே உட்கார்ந்திருப்பான்

 

கதையில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு, பி.ஸி.ஜோஷி இருவரைப்பற்றிய குறிப்பும் வருகிறது. நான் இதேபோல சந்தித்த சில கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தவரையும் நினைத்துக்கொள்கிறேன். உண்மை உண்மை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது’

 

ஆர். ராஜசேகர்

 

அன்புள்ள ஜெ,

 

எண்ண எண்ணக் குறைவது கதையில் அந்த சிந்தனையாளரின் மாணவர்கள் வழியாகவே அவருடைய இயல்பு வெளிப்படுவது அருமை. அவர்கள் எதையும் ரேஷனலாகவே பார்க்கிறார்கள். ஆகவே கொஞ்சம் நையாண்டியுடன் பேசுகிறார்கள். தங்களைத் தாங்களே நையாண்டிசெய்யவும் அவர்களால் முடிகிறது. தமிழ் எழுத்தாளப்பையனிடம் [நீங்கள்தானே?] மலச்சிக்கலேதானா என்று கேட்கும் வரியில் வெடித்துச் சிரித்துவிட்டேன்.

 

எம்கே அன்பே இல்லாதவர் என்ற வரியும் முக்கியமானது. அவருடைய மாணவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கவிதையையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள். Silly romanticism த்துக்குத்தான் எதிரானவர்களாக இருக்கிறார்கள். எம்கே கவிதை எழுதாத கவிஞர். ஒரு தத்துவ ஞானி. சங்கரர் மத்வர் எல்லாம் கவிஞர்கள் என்ற வரியையும் ஒரு திகைப்புடன் மட்டுமே வாசிக்கமுடிந்தது

 

ஒட்டுமொத்தமாக ஒரு அடிப்படையான தத்துவக் கேள்வியையும் ஒரு முழுமையான அறிவுவட்டத்தையும் அறிமுகம் செய்யும் கதை

 

மகேஷ்

 

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9
அடுத்த கட்டுரைசக்திரூபேண- கடிதங்கள்-2