வருக்கை [சிறுகதை]

கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்” என்று சொன்னேன்.

சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?” என்றார்.

அதற்குள் அப்புப் பாட்டா என்னிடம் “பிள்ளை இஞ்ச வாரும்… தந்தியிலே பேச்சிப்பாறை வெள்ளம் என்ன மட்டம்னு பாத்துச் சொல்லும்” என்றார்.

நான் தந்தியை வாங்கிக் கொண்டேன். அது ஏற்கனவே பலரால் பலகோணங்களில் படிக்கப்பட்டு ஆறிப்போன அப்பளம் போலிருந்தது. ஒய்.விஜயாவின் முலைமேல் எவரோ வடையை வைத்திருந்தார்கள். அதன் உட்பக்கத்தில் சினிமாச் செய்திகளை புரட்டி ஒருமுறை பார்த்தேன்.

“பிள்ள வெள்ளத்தை பாத்துச் சொல்லணும்.”

“பாக்குதேன்” என்றேன்.

“வெள்ளம் எறக்காண்டாமா?” என்றார் மாசிலாமணி நாடார்.

நான் செய்திகளை மேலோட்டமாக பார்த்தேன். பேச்சிப்பாறையில் நீர்மட்டம் இருபத்திரண்டு அடி. அதைச் சொன்னேன். உண்மையில் ஊரில் தேவையான ஒரே செய்தியை வாசித்தாகிவிட்டது. மிச்சமிருக்கும் தேவையில்லாத செய்திகளை இனிமேல் வரிவரியாக வாசிக்கவேண்டும். விடமாட்டார்கள். குறிப்பாக மழை இல்லாத கோடைநாட்களில்.

“கருணாநிதிக்கு எம்ஜியார் மூக்கறுப்பு” என்று நான் வாசித்தேன்.

கொச்சு மூத்தான் “உள்ளதாக்குமா?” என்றார், ஆவலாக.

“இவனுக தினமும் அறுக்குகதுக்கு மூக்கு இந்திரனுக்கு சாமான் மாதிரி மேலெங்கும் காய்ச்சு தொங்குதாலே? நூஸ் போடுதான் பாரு..” என்றார் சுப்ரமணியநாடார். “மத்த நூஸை படியும்.”

நான் “நாளை முதல் கத்திரிவெயில்…” என்றேன்.

“அய்யோ, இவனுக சொல்லேல்லண்ணா நாளைக்கு மளையில்லா அடிச்சு நனைக்கப்போவுது. அறியாம கேக்கேன், இனியிப்பம் நம்ம வீட்டிலே மரச்சீனி மயக்கிட்டுண்டான்னு இவனுக எளுதி நாம வாசிப்போம்னுல்லா தோணுது…” என்றார் அருமைநாயகம்.

அப்போதுதான் கள்ளன் தங்கன் கடைநோக்கி வந்தான். “கள்ளனுக்க நடையப்பாருலே, எம்ஜியாருண்ணாக்கும் நினைப்பு…” என்றார் கொச்சு மூத்தான்.

“அவன் செமினில்லா”

எனக்கு தங்கனின் நடை ரவிச்சந்திரன் போல இருப்பதாக ஒரு நினைப்பு. கொஞ்சம் கோணலாக தோளைத் தூக்கியபடி நடப்பான். நிற்பதும் ஒசிந்துதான். எங்கோ ஒரு போக்கிரித்தனம் செய்தபின் போடா என்று எழுந்து நடந்துவரும் பாவனை. அவன் முகமும் ரவிச்சந்திரன்போல நீளம். நல்ல சிவப்பு. அவனுக்கு முப்பது வயது பக்கத்தில் இருக்கும், ஆனால் பூனைமுடிதான் மீசை. சிவந்த சிறிய உதடுகளுக்கு அது பொருத்தமாகவும் இருக்கும். கண்களில்  கொஞ்சம் பூனைச்சாயல் உண்டு. அதிலும் பக்கவாட்டில் நின்று பார்த்தால்.

தங்கன் “அம்மாச்சோ, நூஸ் என்னவாக்கும்?” என்றபடி பார்பர் ஷாப் திண்ணையில் அமர்ந்தான்.

“உன்னை போலீஸு பிடிச்ச நூஸு உண்டாண்ணு பாக்குதோம்” என்றார் அருமைநாயகம்.

“என்ன என்னத்துக்கு போலீஸு பிடிக்குது? நான் சோலி செய்து சீவிச்சுதவனாக்கும்.”

“வக்காவோளி, சோலீங்குத வார்த்தைய நீ சொல்லப்பிடாது. சவிட்டி கொடல எடுத்துப்போடுவேன்” என்று சுப்ரமணிய நாடார் சீறினார்.

“இங்கிண செய்தாத்தான் சோலியா? நான் நாலு ஊரிலே சோலி செய்யப்பட்டவன்” என்றான் தங்கன்.

“என்ன சோலி? ஏலே, சொல்லுலே என்னலே சோலி?”

அவன் என்னைப் பார்த்து கண்ணடித்து “பல சோலிகள்” என்றான்.

“என்ன ஜோலி, ஒரு சோலியச் சொல்லு பாப்பம்”

அவன் “சொன்னா மரியாதையா இருக்காது…. நாளைக்கு பின்ன நாம பாக்கணும்லா?” என்றான்.

“உன்னாலே இந்த ஊருக்குத்தான் கெட்டபேரு… ஏலே உன்னைத்தேடி எட்டுதடவ போலீஸு வந்தாச்சு. ஊருக்குள்ள திருடீட்டு கெடந்தே. இப்பம் கிட்டமட்ட ஊருகளிலேயும் சோலிய தொடங்கியாச்சு.”

தங்கன் “பிசினெஸு டெவெலெப் ஆகணும்லா?” என்றான்.

தங்கையா டீக்கனார் “இவன்கிட்ட பேசுததுக்கு சுவரிலே முட்டுகது மேலு” என்றார்.

அருமைநாயகம் “லே நீ திருடுகதுதான் திருடுதே. அந்தால சத்தம் காட்டாம போயி நாகருகோயிலு திருவனந்தபுரம்னு திருடினா என்னலே? அவனுக அங்க தள்ளில்லா கெடக்கானுக… உன்னை அவனுகளுக்கு தெரியாதுல்லா?” என்றார்.

அவன் தீவிரமான முகத்துடன் “ஏசு என்ன சொன்னாரு? வேய் டீக்கனாரு சொல்லும்வே. என்ன சொன்னாரு?  நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். சொன்னாரா இல்லியா?”

டீக்கனார் “அதிப்பம், ஏசு சொன்னாருண்ணு…” என்றார்.

“ஏசு சொன்னா கேக்கப்பிடாதா? நீரு கிறிஸ்தியானிதானே? வேய், சொல்லும்வேய். நீரு கிறிஸ்தியானிதானே? ஏசு சொன்னா கேக்கணுமா வேண்டாமா?”

அவர் மேலும் தழைந்து, துணைக்கு அழைப்பதுபோல அருமைநாயகத்தைப் பார்த்தபின் “கேக்கணும்” என்றார்.

அவன் என்னை நோக்கி “வயசாகுதே தவிர ஒரு விசுவாசம் இல்லை. கர்த்தராகிய ஏசு சும்மாவா சொன்னாரு? அதை ஒருத்தன் சோலிமெனக்கெட்டு பைபிளிலே எளுதியும் வச்சிருக்கான். அதை இங்க ஒரு பாஸ்டர் மளைகிட்டா தவளை மாதிரி கெடந்து ள்ளா ள்ளாணு ஞாயித்துக்கிளமை தோறும் விளிச்சு கூவுதான். ஒண்ணையும் மனசிலே நிறுத்துகதில்லே” என்றான்.

அவர் குற்றவுணர்வுடன் “நம்மால முடிஞ்சத செய்யுகதுதான்” என்றார்.

“முடிஞ்சா போதாது. ஏசுவ அடுத்து அறியணும். காணாமல் போன ஆடுகள் உள்ள ஊருக்கு ஏன் போகணும்னு சொல்லுதாரு? சொல்லும்வே. பைபிளை தூக்கீட்டு அலையுதீருல்லா?”

டீக்கனார் “பைபிளுக்க அர்த்தம் ஆழமானதாக்குமே” என்று பொதுவாகச் சொன்னார்.

“நான் இப்பம் ஒரு ஊரிலே ஒரு ஆட்டை திருடீட்டு வாறேன். அப்பம் அந்த ஊர என்னன்னு சொல்லுவேரு?” அவன் கேட்டான்.

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

“ஆடு காணாமல்போன ஊருண்ணுதானே?” அவன் கேட்டான்.

“ஆமா” என்றார் அவர்.

“பின்ன?” என்றான் தங்கன்.

“ஆமால்லா?” என்றார் டீக்கனார்.

நான் புன்னகைத்தேன். அவன் என்னை நோக்கிக் கண்ணடித்து  “எம்ஜியார் சினிமா வந்திட்டுண்டா? பாத்து சொல்லு பிள்ளே” என்றான்.

நான் “நினைத்ததை முடிப்பவன் ஓடுது” என்றேன்.

“அது நாலுமட்டம் பாத்தாச்சுல்லா? வேற?”

“வேறயா? இப்பம்தானே இது எறங்கிச்சு?”

“செமினி படம் உண்டோ?” என்றார் சுப்ரமணியநாடார்.

“டி.ஆர்.மகாலிங்கம் படம் எறங்கீட்டுண்டு” என்றான் தங்கன்.

“உள்ளதா? உள்ளதா பிள்ளே?” என ஆவலாக என்னிடம் சுப்ரமணிய நாடார் கேட்டார். நான் புன்னகை செய்தேன்.

“மகாலிங்கம் ஆளு என்னா ஒரு இது… நல்ல வாயிலே தாம்பூலத்த போட்டுக்கிட்டு ஐசரியமாட்டுல்ல இருப்பாரு…”

“எட்டுகட்டையாக்கும்” என்றார் சுப்ரமணிய நாடார்

“அவருக்க பேட்டரிய நீரு எங்கவே பாத்தீரு?”

“பேட்டரியா, வே சாரீரத்த சொன்னேன்”

”சாரீண்ணா?”

“உம்ம அம்மைக்க தேங்கா… போவும்வே”

அச்சு ஆசான் தடியூன்றி மெல்ல கடைக்கு வந்தார். “ஒரு கெட்டு பீடி வேணுமே சம்முகம்” என்றார்.

“பீடிக்கு விலைண்ணு ஒண்ணு உண்டு” என்றார் சண்முகம்.

“அது இல்லாமல் இருக்குமா? இந்த உலகத்திலே தெய்வத்துக்க ஞானம் மட்டும்தான் வெலையில்லாத்தது” அவர் என்னைப் பார்த்து “நீ கரடிநாயருக்க மகன்லா?” என்றார்.

நான் “ஆமாம்” என்றேன்.

“மிச்சம் உண்டெங்கி ஒரு அம்பதுபைசா குடும். அப்பா கேட்டா ஆசான் கேட்டாரு குடுத்தேண்ணு சொல்லும்”

நான் ஐம்பது பைசாவை சண்முகத்திடம் கொடுத்தேன். ஆசான் பணம் கேட்டால் கொடுத்துவிடலாம் என்று அப்பா சொல்லியிருந்தார். அவர்  பீடிச்செலவுக்கும் டீச்செலவுக்கும் மேல் கேட்பதில்லை. அவர் அடிமுறை ஆசான். மாட்டு சாஸ்திரமும் படித்தவர்.

ஆசான் பீடிக்கட்டை வாங்கி ஒன்றை உருவி கயிற்று அனலில் ஊதிப்பற்றவைத்து கன்னம் குழிவிழ இழுத்து புகையை மூக்குவழியாக விட்டபடி பழுத்த கண்களால் தங்கனை பார்த்தார். “லேய், நீ அருணாச்சலத்துக்க மகன்லா? உன்னைய போலீஸு தேடிச்சுண்ணு சொன்னாவ”

தங்கன் “ஆமா, ஏட்டு நம்ம ஆளாகும். கருங்கொரங்கு லேகியம்போட ஒரு நல்ல மூத்த கருங்கொரங்கு வேணும்னு கேட்டாரு”

அச்சு ஆசான்  “அதுக்கு இங்க கருங்கொரங்கு எங்க?” என்றார்.

“நீரு எப்டி வீட்டுக்குப் போவீரு? எந்த வளியாட்டு?” என்றான் தங்கன். “மூத்த கருங்கொரங்கு நெய்யெடுக்க நல்லதாக்கும்”

“ஆமா போறேன்… இனி நமக்கு ஒத்த வளியாக்கும்” என்று அச்சு ஆசான் கவனமில்லாமல் சொன்னார். நான் சிரித்தேன்.

ஆசான் என்னை புரியாமல் பார்த்துவிட்டு அவனிடம் “மக்கா திருடுகது செரி. நானும் நல்ல பிராயத்திலே நெறைய திருடீட்டுண்டு. அதுக்கு ஒரு இது வேணும்… அறைக்கல் வீட்டு வலிய நெலவறையை குத்தித்தெறந்து உள்ளபோயி எட்டு நிலைவிளக்க எடுத்து கொண்டுபோனேன். அஞ்சுமாசம் களிஞ்சு அதை கொண்டுபோயி அறைக்கல் வீட்டிலேயே வித்தேன். அம்பதுரூபா. அதை வச்சுக்கிட்டாக்கும் டி.ஆர்.ராஜகுமாரியப்பாக்க பட்டணத்துக்கு போனது. அவளுக்க மேக்கப்புகாரிய பாத்தேன், நம்ம வண்ணாத்தி ராஜம்மை மாதிரி இருந்தா. அதை விடு. என்னண்ணா எல்லாத்துக்கும் ஒரு பதம் வேணும் கேட்டியா” என்றார்.

“அது என்னத்துக்கு திருடினத அங்கிணயே வித்தீரு?” என்றார் தங்கையா டீக்கனார்.

“பின்ன பித்தள நெலவெளக்க வாங்குகதுக்கு உண்டான ஆளை இந்த ஊரிலே வேற எங்க போயி தேடுகது? வெளியே கொண்டுபோனா போறது நாலாளுக்கு தெரிஞ்சிரும்லா? அறைக்கல் அம்மச்சிக்கு அவங்களுக்க நெலவறையிலே என்ன இருக்குண்ணு தெரியாது. எங்கலே திருடினேன்னு கேட்டா. நான் பூதப்பெரை நாயருக்க வீட்டிலேன்னு சொன்னேன். நாலிலே ஒரு வெலையில்லா. வாங்கினா. அப்டி பதினெட்டு தடவை அவங்களுக்க நெலவறையிலேயே திருடி அவங்களுக்கே வித்தேன். ஒருதடவை அதிலே அவங்களுக்க குடும்பப்பேரு எளுதியிருந்தது. நமக்கென்ன எளுத்தா படிப்பா? அதை கொண்டுபோயி அவங்களுக்கு வித்தப்பம் பிடிச்சுப்போட்டாக. கெட்டிவச்சு அடி…”

அவர் பீடியை ஆழ இழுத்து “ஆனா அதுக்குப்பிறவாக்கும் இங்க ஊரிலே நமக்கு டிமாண்டு. ஒருமாதிரிப்பட்ட எல்லா பெண்டுகளும் நம்மள விளிச்சிட்டுண்டு…”

நான்  “எதுக்கு?” என்றேன்.

“ஏ? மச்சம் எண்ணுகதுக்கு” என்றார் ஆசான்.

நான் “மச்சத்தை ஏன் எண்ணணும்?” என்றேன்.

தங்கன் “கள்ளன் எண்ணினாத்தான் செரியா எண்ண முடியும்” என்றான். “கணக்கு நெறையணும்லா?”

“எதுக்கு எண்ணணும்?” என்றேன்.

தங்கன் “அதுவா, அது ஒரு சாஸ்திரம். ஒரு பொண்ணு அவளுக்க உடம்பிலே எம்பிடு மச்சமிருக்கோ அந்த அளவுக்கு ஆம்புளைங்கள அணைஞ்சாள்னா அதோட மோட்சமாக்கும்… அவளுக்க  ஆத்மா நிறையும். நேராட்டு சொர்க்கம். ஒண்ணு குறைஞ்சாலும் மறுஜென்மம் உண்டு”

சுப்ரமணிய நாடார் “மக்களே தங்கா, நீ இந்த ஆத்மான்னு சொல்லுகது எதையாக்கும்?” என்றார். அனைவரும் சிரித்தனர்.

“சின்னப்பையனைச்  சீரளிக்காண்டாம் கேட்டியா? ஏமான் வீட்டுக்குப் போகணும்” என்றார் டீக்கனார்.

சுப்ரமணிய நாடார் “ஆசான் அந்தக்காலத்திலே காத்துமாதிரி நுளைஞ்சு காத்துமாதிரி காணாம போயிருவார்ணு பேச்சு” என்றார்.

“அது சொல்லப்போனா, காத்தடிச்சாத்தானே நெல்லும் பலாவும் எல்லாம் சினைப்பிடிக்கும்? ஹெஹெஹெ!” என்றார் மூத்தார்.

“இல்லேண்ணாலும் கள்ளனைக் கண்டா பெண்ணடிகளுக்கு ஒரு இதாக்கும்” என்றார் தங்கையா டீக்கனார்.

“கிருஷ்ணன் கள்ளன்லா? ” என்றார் சுப்ரமணிய நாடார். “நல்ல வரிக்கைக் கள்ளன்.”

நான் எட்டுகரையானின் மளிகைக்கடை முன் காளை மாணிக்கம் உக்கிரமாக கைவீசி பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். தங்கையா டீக்கனார் குனிந்து பார்த்து “அது நம்ம காளை மாணிக்கம்லா?” என்றார்

டீக்கனார் “என்னண்ணு நிண்ணு சத்தம்போடுதான்? காலம்பற வெள்ளம் அடிக்க மாட்டானே?” என்றார்.

மூத்தார் “அவனுக்கு இண்ணு காளைச்சந்தை உண்டுல்லா?” என்று கேட்டார்.

காளை மாணிக்கம் மாட்டு வியாபாரி. வாரம் முழுக்க ஊரெல்லாம் சென்று காளை பசு எருமை கன்று ஆகியவற்றை வாங்குவான். வியாழக்கிழமை சாயங்காலம் மந்தையை ஓட்டிக்கொண்டு தொடுவட்டி காளைச்சந்தைக்குச் செல்வான். வெள்ளிக்கிழமை சந்தை முடிந்து சனிக்கிழமை காலையில் கிளம்பி மதியம் வந்துசேர்வான்.

“அவனுக்கு நேத்து காலிலே ஒரு ஆணி கேறிப்போட்டு. ஓட்டைக்கலம் மாதிரி ரெத்தம்… பப்பன் கம்பவுண்டர்கிட்ட ஊசி போட்டுக்கிட்டு வந்தான்” என்றார் டீக்கனார்.

காளை மாணிக்கம் நொண்டி நொண்டி பார்பர் கடை நோக்கி வந்தான். கண்மேல் கைவைத்து கடைத்திண்ணையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தான் நல்ல தடியன். காளை மாதிரி கனமான கழுத்து. சின்ன கண்கள்.

தங்கன் ”நல்ல மனுசனாக்கும்… நேத்தும் பாத்தேன்” என்றான். “ஆசானே ஒரு பீடி எடும்வே…”

ஆசான் கொடுத்த பீடியை அவன் பற்றவைத்தபோது காளை மாணிக்கம் அருகே வந்துவிட்டான். தங்கனைப் பார்த்தபின் கட்டுப்போட்ட காலை வீசி வீசி வைத்து நடந்துவந்தான். வரும்போதே “லேய், தங்கா. லே தாயளி, நில்லுலே. ஓடாதே. நில்லு… இண்ணைக்கு நாம கணக்கு தீத்திருவோம்லே” என்று கூவிக்கொண்டிருந்தான்.

தங்கன் “ஆமா, கணக்கு கணக்காட்டு இருக்கணும்லா?” என்றான்.

“நீ எதுக்குலே அந்த பாவத்துக்கிட்ட கணக்கு தொறக்குதே?” என்றார் சுப்ரமணிய நாடார்.

காளை மாணிக்கம் அருகே வந்து கையிலிருந்த அலுமினிய சம்புடத்தை நீட்டிக்காட்டி “லேய், வக்காவோளி, லேய், இது என்னலே? என்னலே சொல்லுலே…. ஆம்புளைன்னா சொல்லுலே” என்றான்.

தங்கன்  “போணில்லா” என்றான்.

“என்ன போணி… சொல்லு…. எனக்க முகத்தப்பாத்துச் சொல்லு. என்ன போணி?”

“அலுமினியப் போணி”

“அது தெரியும்… அது எப்டிலே எனக்க கையிலே வந்தது? சொல்லுலே”

சுப்ரமணிய நாடார் “லேய் காளை, கொஞ்சம் அமையும்வே… கெடந்து துள்ளுதீரு… சொல்லும். என்னவாக்கும் சங்கதி?” என்றார்.

காளை மாணிக்கம் “லேய்! நான் ஆளு வேறயாக்கும்… எனக்ககிட்ட களி வேண்டாம்” என்றான். ”எனக்க கிட்ட களிச்சா வச்சு கேற்றீருவேன்… வச்சு கொத்தீருவேன்… லேய்! லேய்!”

“சொல்லும்வே, என்னவாக்கும் சங்கதி?” என்றார் டீக்கனார். காளையிடம் “வே சும்மா இரும்… கேக்கேன்ல என்னாண்ணு.”

“அப்டி கேளுங்க. ஊரிலே நாலு பெரிய மனுசன் இருந்து கேளுங்க”

“கேக்கேன். நீரு சும்மா இரும்வே” என்றார் சுப்ரமணிய நாடார். “சொல்லுடே தங்கா என்னவாக்கும்?”

தங்கன் “ஒண்ணுமில்லை. அண்ணனுக்கு நான் நேத்து வரிக்கைச் சக்கை சுளை கொண்டுபோயி குடுத்தேன்… அதைச்சொல்லுதாரு”

“ஏன் ஓய், பலாப்பளம்தானே குடுத்திருக்காரு?” என்றார் பார்பர் கண்ணன்.

“நீ வாய நீட்டாதே. நீ பாண்டித் தமிளன்… வரத்தனுக்கு இதிலே வார்த்தை இல்லை” என்று காளை மாணிக்கம் கூவினான். “அண்ணா கேளுங்க, மாமா கேளுங்க. இந்த தாயளி எனக்கு வரிக்கச்சக்கச் சுளை கொண்டு வந்து குடுத்தான். உள்ளதாக்கும்”

”குடுத்தாச்சு செரி… நீ தின்னியா?

“ஆமா தின்னேன்”

“பிறவு என்ன?” என்றார் தங்கையா டீக்கனார்.

“எப்பம் குடுத்தான்? அதைக்கேளுங்க… இவன் எப்பம் கொண்டாந்து குடுத்தான்… அதைக்கேளுங்க” என்று காளை மாணிக்கம் கூச்சலிட்டான். “நடுராத்திரி… மாமா, கேளுங்க. நடூ ராத்திரி ஒருமணிக்கு. நான் பாயப்போட்டு கெடந்து உறங்குதேன். காலுவேதனையாலே நல்ல உறக்கம் இல்ல. அப்பம் ஒரு சத்தம். என்ன சத்தம்ங்குதீக? புறவாசல் கதவுக்கு புறத்தால ஆரோ நிக்குதான். கைய கதவுக்க மேலே விட்டு சுத்திச்சுத்தி கொண்டிய நீக்குதான்… நான் எந்திரிச்சுப்போட்டேன். ஆருலே இவன் எண்ணு நினைச்சு நிக்குதேன். கதவைத்திறந்து இவன் உள்ள வாறான். இந்த தாயளி…”

“பிடிச்சிட்டேரே” என்றார் மூத்தார்.

“பின்னே? நான் லைட்ட போட்டேன். இவன் என்னையக் கண்டு அப்டியே வெள்ளெண்ணு சிரிச்சுட்டு அண்ணா, சொவமா இருக்கியளா, இந்தாருங்க வரிக்கச் சக்கைச் சுளைன்னு சொல்லி இந்த போணிய நீட்டுதான். நானும் கொண்டாலேன்னு சொல்லி வாங்கிக்கிட்டேன். எங்கலே வாங்கினே பலாப்பளம்னு கேட்டேன். நம்ம மூலைக்கரை ஏமானுக்க விளையிலே நிக்கப்பட்ட பலாமரமாக்கும். நல்ல தேன்வரிக்கை. தின்னுங்கண்ணு சொன்னான். பிறவு வாறேன் அண்ணாண்ணு அருமையாட்டு சொல்லிட்டு அந்தாலே போனான். நானும் கதவ கொண்டிபோட்டுட்டு இருந்து சக்கைச்சுளையை தின்னேன். எனக்க பெஞ்சாதி அந்தால கெடந்து உறங்குதா. ஏட்டி, உனக்கு வேணுமாட்டி சக்கைச்சுளைன்னு கேட்டேன். அவ நல்ல உறக்கம். கண்ணே திறக்கேல்ல. செரீன்னு நான் அம்புட்டையும் தின்னேன்” என்றான் காளை மாணிக்கம்.

சுப்ரமணிய நாடார் “நல்ல ருசியாக்கும் இந்தமாதிரி சக்கைச்சுளைக்கெல்லாம்” என்றார். அருமைநாயகம் கெக் கெக் கெக் என்று சிரித்தார்.

“சத்தியமாட்டு மாமா, காலம்பற எந்திரிச்சு பல்லு தேய்க்கும்பம்தான் ஒரு நினைப்பு. எளவு, இவனுக்கு நம்ம வீட்டிலே பாதிராத்திரியிலே என்ன சோலி? நான் சந்தைக்கு போகாம வீட்டிலே இருப்பேண்ணு இவனுக்கு எப்டி தெரியும்? அந்தால போணிய எடுத்துட்டு வாறேன்.. இவன் ஆருண்ணு நினைச்சான்? என்னைய ஏமாத்திப்போடலாம்ணு நினைச்சனா? ஏலே வாலே, ரெண்டுலே ஒண்ணு பாப்பம்.. எறங்கி வாலே”

“சவம் தன் குண்டிய நோண்டி தானே மணத்துப் பாத்ததும் இல்லாம நம்மளையும்  மணத்துப் பாக்க வச்சிட்டானே” என்றார் தங்கையா டீக்கனார்.

தங்கன் “இப்பம் என்னவாக்கும்? எதுக்கு போட்டு செலம்புதீரு? ஒரு சக்கைச்சுளை கொண்டுவந்து குடுத்தா தப்பா? இல்ல தப்பா வேய்? சொல்லும்வே, தப்பா?” என்றான்.

அவன் கையை ஓங்கிக்கொண்டு செல்ல காளை மாணிக்கம் அறியாமல் பின்னடைந்து “தப்புண்ணாக்க… ராத்திரியிலே கொண்டாந்து குடுத்து…” என்றான்.

“நீரு எப்பம்வே வீட்டுக்கு வந்தீரு?”

“சாயங்காலம்”

“செரியா சொல்லணும்’

“ஏளு மணிக்கு”

“எப்பம் கஞ்சி குடிச்சீரு?”

“ஒம்போது மணிக்கு”

“கஞ்சி குடிச்சு எம்புடுநேரம் களிஞ்சு சக்கைச்சுளை திங்கணும்? வேய் ஆசான், சொல்லும் வேய்”

ஆசான் கன்னம் குழிய பீடியை இழுத்து “கஞ்சி குடிச்சா பிறவு ஒரு ரெண்டுமணிக்கூறெங்கிலும் ஆகணும் சக்கைச்சுளை திங்குததுக்கு” என்றார் “வாயுக்குத்து உள்ள ஐட்டமாக்கும்.”

“கேளும் வேய்… வயசும் பக்குவமும் உள்ளவரு ஆசான். நாலு எடத்திலே நட்டு வச்சவரு… அவரு சொல்லுதத கேளும். சும்மா மாட்டை ஓட்டிட்டு போனா செரியாவாது”

“இல்ல ராத்திரிலே…”

“ராத்திரியிலே சக்கைச்சுளை திங்கலாமா? ஆசான், வேய், சொல்லும் வேய்”

“தின்ன சோறு செமிச்ச பிறவு திங்கலாம்” என்றார் ஆசான்.

“பிறவென்ன? என்னவாக்கும் உமக்கு பிரச்சினை? எதுக்கு ரோட்டிலே கிடந்து சத்தம்போடுதீரு?”

“உனக்க சக்கைச்சுளை எனக்கு வேண்டாம்லே”

“செரி, அப்பம் பைசாவ குடுத்துப்போடும், அம்பிடுதானே?”

“பைசாவச் சொல்லு”

“ரெண்டுரூபா… ரொக்கம் ரெண்டு ரூவா.. இருக்கா.. இருக்காவே?  இருந்தா எடும் வேய்.. இப்ப எடும் வேய். ஆம்புளைன்னா பைசாவ வச்சுட்டு பிறவு பேசணும்.. மானம் மரியாதை இருந்தா கணக்க தீத்துட்டு நின்னு பேசணும்”

“லேய், ரண்டு ரூவா எனக்க மீசைக்க மயிராக்கும்.. நாலு உண்டை சாணிய வித்தா வரும்லே எனக்கு ரெண்டு ரூபா…. திருட்டுத் தாயோளி….  த்தூ… இந்தாலே உனக்க பைசா…எடுத்துட்டு ஓடுலே”

காளை மாணிக்கம் ரூபாயை மடியிலிருந்து எடுத்து தங்கனின் முகத்தில் வீசினான். அது கீழே விழுந்தது. தங்கன் கடும் கோபத்துடன் கையை ஓங்கிக்கொண்டு போய் கூச்சலிட்டான்.

“வேய், மகாலச்சுமிய மூஞ்சியிலே எறியுதியா? மூஞ்சியிலே மகாலெச்சுமிய எறியுதியா? ஆசான், இதைப் பாத்தேரா? பாத்துட்டு சும்மாவா இருக்கேரு? மகாலெச்சுமி இந்நா மண்ணிலே கெடக்கா… வேய் டீக்கனாரு, நியாயத்தச் சொல்லும்வேய்… என்ன வேய் , பிறவு என்ன மசுத்துக்கு ஊரிலே பெரிய ஆளுகண்ணு சொல்லி அலையுதீக?”

தங்கையா டீக்கனார் “லேய் தங்கா, எண்ணிப்பேசு. வார்த்தை மீறுது கேட்டியா?”

“எனக்கு மேலும் கீளும் இல்லை. என்னை இந்தா நடுரோட்டிலே வச்சு அவமானப்பெடுத்தியாச்சு… இந்தா லச்சுமி ரோட்டிலே கெடக்கா. எனக்க லெச்சுமியாக்கும்…”

”இப்பம் உனக்கு என்ன வேணும்? ஏன் கெடந்து செலம்புதே?” என்றார் டீக்கனார்.

“லே அடங்குலே” என்றார் சுப்ரமணிய நாடார்.

“ரோட்டில கெடக்குதது எனக்க மகாலெச்சுமியாக்கும்.. இப்பம் இவன் இந்த எடத்திலேயே இதை எடுத்து பொடிதட்டி எனக்க கையிலே தரணும்… எனக்க வலது கையிலே எனக்க மகாலச்சுமிய தரணும்”

“எனக்க நாயி எடுத்து தரும். போலேய். லேய், நீ என்னைய ஆள மனசிலாக்கல்லே. உனக்க வெரட்டலு எனக்க கிட்ட வேண்டாம் கேட்டியா?” என்றான் காளை.

“எடுத்து என் கையிலே குடுக்கல்லேண்ணா நீரு இந்த எடத்த விட்டு போகமாட்டேரு”

“இந்தா போறேம்லே… நீ ஆனத பாத்துக்க”

“போய் பாரும் வேய்.. போய்ப்பாரும் வே”

“இந்நா போறேன்… நீ என்னைய நொட்டுவே”

“போய்ப்பாரும் வே…”

“இந்நா போறேன்லே… நீ என்னை மசுத்துவே”

”நீரு போனா உனக்க பைசா இந்தா இங்க கிடக்கும்… நான் தொடமாட்டேன்”

“நீ தொடல்லேண்ணா நாயி திங்கட்டும்… போலே. உனக்க மிரட்டலுக்கு வேற ஆளப்பாரு… இந்தாலே உனக்க போணி”

சம்புடத்தை வீசி எறிந்துவிட்டு காளை மாணிக்கம் திரும்பி நடந்தான்

தங்கன் அந்த இரண்டு ரூபாயை எடுத்து சுருட்டி காதில் வைத்துக்கொண்டு “வேய், இந்நா இந்த ரூபாயை எடுக்கேன். எனக்க கையாலே எடுக்கேன்… வேய், அம்மை சத்தியமாட்டு உலக்கை மாடசாமி சத்தியமாட்டு சொல்லுதேன், இந்த ரெண்டு ரூபாய்க்கு சமானமா நீரு இருபது ரூபா எனக்கு குடுப்பீரு… எனக்க வலதுகையிலே எண்ணி எண்ணி குடுப்பீரு” என்றான்

“லே நீ சுணையுள்ள ஆம்புளைன்னா எனக்க கையிலே இருந்து ரெண்டு பைசாவ வாங்கிப்பாருலே…. ஏல வாங்கிப்பாருலே”

“வாங்குதேம்வே… பாரும்வே”

“நீ நொட்டுவே… நீ இதுவரை ஆம்புளைங்கள பாத்ததில்ல… போலே”

“வந்து ரூபாய தருவீரு, பாரும்வே வருவீரு”

“போலே மயிராண்டி… வாறாக…. நீ  வளியப்பாத்துட்டு இருந்துக்கோ… மாமா நீங்க சாட்சி. இந்த நாயி எனக்கு மசிருக்கு சமானமாக்கும்”

“ஏய் என்னவே சொன்னீரு?”

“நீ திருட்டுத் தாயோளீன்னு சொன்னேன்லே… என்னலே செய்வே”

தங்கன் சீறி முன்னால் சென்றான்.

“லே தங்கா வேண்டாம்… லே வேண்டாம்… வயசுக்கு மூத்தவனாக்கும்” என்றர் சுப்ரமணிய நாடார்

”வயசப்பாத்து விடுதேன்… போவும்வே”

“ஆ, அப்ப பயம் இருக்குல்லா? திருட்டுநாயே… அந்தாலே அடங்கி இருந்துக்கோ… வாறான். நம்மகிட்டையாக்கும் வெளையாட்டு… த்தூ”

காளை மாணிக்கம் சென்றபின் ஆசான் கெக்கெக் என்று சிரித்தார்.

தங்கன் ”அவ நல்ல குட்டியாக்கும் ஆசானே” என்றார்.

ஆசான் “நல்ல குட்டிகளுக்க சொபாவமாக்கும் அது” என்றார்.

“ஆசானுக்கு ஒரு பீடிக்கெட்டு” என்றபின் தங்கன் என்னிடம் திரும்பி “பிள்ளே, பிள்ளை காளை அண்ணனுக்க வீட்டு வளியாட்டுல்லா போவுதது?” என்றான்.

“ஆமா”

“அப்பம் இந்த போணிய அவருக்க வீட்டிலே குடுத்திருங்க…”

“போணி கோமதியக்காவுக்க வீட்டிலே உள்ளதா?”

”ஆமா, குடுங்க”

சண்முகத்திடம் ஜிண்டான் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு நான் நடந்தேன்.

முக்குத் திருப்பத்தில் காளை மாணிக்கத்தின் வீடு. திண்ணையில் அமர்ந்து அவன் பனைநாரால் மூக்கணாங்கயிறை முறுக்கிக்கொண்டிருந்தான்.

நான் கொல்லைப் பக்கம் போய் ஓலைப்படல் வழியாக எட்டிப்பார்த்தேன். அம்மியில் ஏதோ அரைத்துக்கொண்டிருந்த கோமதியக்கா என்னைப் பார்த்தாள். “என்ன பிள்ளே?” அவளுடைய இரட்டை மூக்குத்தியில் கற்கள் உப்புப்பரல்கள் போல ஒளிவிட்டன. சிறிய மூக்கு. மிகச்சிறிய வாய், உருண்டையான முகம். நெளிநெளியான கூந்தல். எனக்கு கோமதியக்காவை பிடிக்கும். அவளுக்கும் என்னை பிடிக்கும்.

“இந்த போணிய இங்க குடுக்கச் சொன்னாரு”

“ஆரு?”

“அவரு”

“கள்ளனா?”

அதைச் சொன்னபோது அவள் முகம் ஏன் அப்படிச் சிவக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

“ஆமா” என்றேன்.

அவள் சம்புடத்தை வாங்கித் திறந்து மணம்பிடித்தாள்.

“வரிக்கச் சக்கைச் சுளைக்க மணம்” என்றேன்.

அவள் மேலும் சிவந்து, கண்கள் சுருங்கச் சிரித்து, “ஆமா” என்றாள்.

========================================================

முந்தைய கட்டுரைசக்தி ரூபேண- கடிதங்கள்-1
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7