எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம் பிக்‌ஷனைஸ் பண்ணப்பட்டிருக்கும். அதுகூட டிரமட்டைஸ் பண்ணப்படாமல் ஒரு உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு மேலே முடிவோ கருத்தோ சொல்லாமல் நின்றுவிடும்.

 

இருவர் அப்படிப்பட்ட ஒரு கதை. தேவதை நினைவுக்குவரும்  இன்னொரு கதை. சமீபத்தில் பேசப்பட்ட நீரும்நெருப்பும் கூட அப்படிப்பட்ட கதைதான். எண்ண எண்ணக் குறைவது -ம் அப்படிப்பட்ட கதைதான்.

 

என்னால் உண்மையான கதாபாத்திரங்களை முழுக்க ஊகிக்க முடியவில்லை. ஆனால் ஓரளவு மலையாளம் வாசிப்பவன் என்ற முறையில் கதையின் நாயகனை ஊகிக்க முடிகிறது. எம்.ராய், இ.எம்.எஸ் என்ற இரண்டு க்ளூவும் உள்ளது. அவருடைய கடைசிநாள். அது தற்கொலையாக இருக்கலாம். ஏன் தற்கொலை செய்துகொண்டார்? ஒரு பாஸிட்டிவான தற்கொலை இன்றைய சூழலில் சாத்தியமா? சாத்தியம் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?

 

மேலைநாட்டுச் சிந்தனையில் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். பல எழுந்த்தாளர்களும் சிந்தனையாளர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதுகூட தற்கொலை எதிர்மறையாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. டிப்ரஸிவான முடிவுதான் அது. அந்த டிப்ரஸிவான முடிவுதான் மனிதர்களுக்கு இயல்பானது, அதுதான் உண்மையானது எனேன்றால் வாழ்க்கை அப்படி டிப்ரஸிவானதுதான் – இப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

 

நேர்மாறாக வாழ்க்கையின் நோக்கம் முடிந்ததும் முடித்துக்கொள்வதும் நிறைவானதாக பாஸிட்டிவானதாக இருக்க முடியும் என்பது ஒரு இந்தியச் சிந்தனை. இஸ்லாமியம் கிறிஸ்தவம் ஆகிய இரு மத அடிப்படையாலும் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு சிந்தனையாளனின் சிந்தனையின் முடிவாக தற்கொலையைப் பார்க்கமுடியுமா என்பது இந்தக்கதை எழுப்பும் கேள்வி என நினைக்கிறேன்.

 

இயல்பான உரையாடல்கள் வழியாக ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்து அப்படியே முடிகிறது இந்தக்கதை

 

பாஸ்கர் எம்

 

அன்புள்ள ஜெ,

 

எண்ண எண்ணக் குறைவது கதை சமீப காலத்தில் ரொம்பவே தொந்தரவு படுத்திய கதை. ஏனென்றால் அது எழுப்பிய கேள்வி எனக்கும் உள்ளது. நம்முடைய நவீன மருத்துவம் நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பது என்னவென்றால் வாழ்க்கையின் கடைசிக்கணம் வரை வாழ்வதற்காக போராடிக்கொண்டே இருக்கவேண்டும். விட்டே கொடுக்கக்கூடாது. மனிதனின் வாழ்க்கை என்பதே சாவுடன் போராடுவதுதான் இந்தக் கொள்கையால்தான் இங்கே மனிதர்களில் 90 சதவீதம்பேரும் கிழட்டுப்பருவத்தில் பூமியில் பெருஞ்செலவில் நிலைநிறுத்தப்படுகிறார்கள். அதற்கான தேவை என்ன என்று எனக்குப் புரியவில்லை  ஆனால் அந்த ஆசை உயிரின் அடிபப்டையான will. அதை கடந்துவிடமுடியும் என்றும் படவில்லை.  இந்தக்கதை நிறைவான ஒரு முழுமையாக சாவை காண்பதைப் பற்றிச் சொல்கிறது. யோகிகளாக வாழ்ந்தவர்கள் அல்லாமல் எவருக்கும் நிறைவான மகிழ்ச்சியான முதுமை சாத்தியமில்லை என்று சொல்கிறது. பலகோணங்களில் குழம்ப வைத்த சிறுகதை

 

சந்தானகிருஷ்ணன் டி.எம்

முந்தைய கட்டுரைகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7