“ஆனையில்லா!” [சிறுகதை]

செய்தி கேள்விப்பட்டு அப்பா ‘என்னது?”என்றார்.

“ஆமாம் ஏமானே, உள்ளதாக்கும். வந்து பாக்கணும் அந்த கெரகக்கேட்ட… உள்ளதச் சொல்லப்போனா தெருவுநாயெல்லாம் சுத்தி நிண்ணு பல்லக்காட்டிச் சிரிக்குது” என்றான் தவளைக்கண்ணன்.

அப்பா துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் நான் பின்பக்கம் வழியாக பாய்ந்து, தென்னந்தோப்பில் புகுந்து குறுக்குவழியாக ஓடி, ஓடையை பனந்தடிப் பாலம் வழியாகக் கடந்து, பாடச்சேரியை அடைந்து ,அப்பால் ஏறி எராளி ஐயப்பனின் வீட்டை அடைந்தேன். செய்தி உண்மைதான்.

கோபாலகிருஷ்ணன் எராளி ஐயப்பனின் வீட்டுக்குள் நுழைந்து நின்றிருந்தான். பாகன் ராமன் நாயர் வெளியே நின்று “ஆனை பொறத்தே! ஆனை பொறத்தே!” என்று கூவிக்கொண்டிருந்தார்.

கோபாலகிருஷ்ணனுக்கு வெளியே வரத்தான் விருப்பம். ஆனால் முடியவில்லை.செருகப்பட்ட ஆப்பு போல இறுகிநின்றிருந்தான் நான் வாய்பிளந்து மாமரத்தின் அடியில் நின்றேன்.

“எளவு என்னலே இது!” என்று எனக்குப் பின்னால் ஓடிவந்து நின்ற எசக்கியேல் சொன்னான். “எலிப்பொறியிலே பெருச்சாளி சிக்கின மாதிரில்லா நிக்குவு!”

உண்மைதான். கோபாலகிருஷ்ணனின் கரிய பெரிய புட்டம் குறிய வாலுடன் வாசல்கதவுக்கு வெளியே புடைத்திருந்தது. வால் பரிதவித்தது. ஐயப்பனின் மரத்தாலான வீடு சிறியது, அதற்குள் அது நுழைந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டிருந்தது.

நான் சுற்றிக்கொண்டு பின்னால் சென்று பார்த்தேன். வீட்டுப்பெண்களெல்லாம் வெளியே நின்று நரியைக் கண்ட கோழிகள் போல கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தக்கூச்சலில் சொற்கள் தனித்து கேட்கவில்லை.

யானை முகப்புக் கூடத்தில் நின்றிருந்தது. அதன் துதிக்கை பின்பக்கம் சாய்ந்து இறக்கப்பட்ட சமையலறைக்குள் நெளிந்துகொண்டிருப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இரு தந்தங்களில் ஒன்றும் சமையலறைக்குள் நீட்டியிருந்தது.

“எப்டிலே உள்ள போச்சு?” என்று எனக்குப்பின்னால் வந்த எசக்கியேல் கேட்டான்.

“ஏசுவே, மாதாவே, உலகம் அளியப்பட்ட நாளுல்லா வந்திருக்கு!” என்று எசிலிக் கிழவி சொன்னாள்.

அப்பா வந்துசேர்ந்தார். கூடவே அவருடைய நண்பர் தங்கையா நாடாரும் நேசையன் டீக்கனாரும் இருந்தனர். பெரிய மனிதர்கள் வந்ததும் பெண்கள் “எனக்க தெய்வமே, இந்தக் கோலத்த கண்டுதியளா! எனக்கு வய்யாமே! எனக்க சீவன் போகமாட்டேங்கே!” என்று கதறிக்கூச்சலிட்டு ஓடிவந்து நெஞ்சிலறைந்து அழுதனர்.

அப்பா “போரும்!”என்று அதட்டினார். ஐயப்பனின் மனைவி சந்திரி “ஓ!”என்று பணிவுடன் சொல்லி உடனே அழுகையை நிறுத்தி மூக்கை ரீச் என்று சிந்தி வேட்டி நுனியால் துடைத்தாள். கண்களை துடைத்துக்கொண்டு தன் மகள் நாராயணியிடம் “ஏம்டி, சட்டியும் கலமும் வச்ச இடத்திலே நிக்கச் சொன்னேனே. உள்ள அரிசியையும் பருப்பையும் இதுக்கு எடையிலே வல்ல அறுதலியும் வாரிக்கிட்டு போயிடுவாளுக… போடீ” என்றாள்.

என்னுடன் பள்ளியில் படிக்கும் நாராயணி என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு நெளிந்தாள். வீட்டுக்குள் யானை புகுந்தது பள்ளியில் அவளுக்கு பெருமை சேர்ப்பதா இழிவை கொண்டுவருவதா என்பதை அவள் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிந்தது.

ஐயப்பன் அப்பா அருகில் வந்து நின்றான். ”என்ன கைப்பள்ளியே, என்னவாக்கும் சங்கதி!” என்றார் அப்பா.

“வீட்டுக்குள்ள ஆன கேறிப்போட்டுது” என்றான் ஐயப்பன்.

“அதை இந்நா கண்ணு முன்னாலே காணுதோம்ல… ஏல, என்ன நடந்ததுண்ணு சொல்லுலே எரப்பாளி” என்றார் டீக்கனார்.

“காலம்பற நான் சந்தைக்குபோகணுமிண்ணு இவளுக்க கிட்ட சொன்னப்பம்…” என்று ஐயப்பன் தொடங்கினான்

சந்திரி இடைமறித்து “ஓ, இவரு இப்பிடியே சொல்லி விடிய வைப்பாரு… ஏமானே, வீட்டுக்குள்ள காலம்பற எண்ணை அரைக்கதுக்குள்ள கொப்பரத்தேங்காய கடவத்திலே வச்சிருந்தது…நாலஞ்சுநால் வெயிலிலே காஞ்சு நல்ல எண்ணப்பதம் வந்த கொப்பரையாக்கும். நாயரு நேத்து ராத்திரி ஆனையை அந்தால காலாயம்வீட்டு வெளையிலே கெட்டிருந்திருக்காரு. அது சங்கிலிய அவுத்துப்போட்டு மணம்பிடிச்சு வந்திருக்கு. வீட்டுக்குள்ள கேறிப்போட்டுது” என்றாள்

“முற்றத்திலே நிண்ணு அருமையாட்டு கைய நீட்டி கேட்டுது… ஏட்டி ஒரு கொப்பரையை குடுக்கட்டான்னு கேட்டேன். அதுக்கு இவ என்னைய நாறவாக்கு சொன்னா… இப்பம் என்ன ஆச்சு? கண்டியளா? கிண்ணத்திலே எலி விளுந்த கணக்காட்டு நிக்குது” என்றான் ஐயப்பன்

“வாய மூடும்வே… மோரையிலே வச்சு சாத்தீருவேன்.. ஆனைக்கு கொப்பர குடுக்கதுக்கு இங்க பொன்னு கூட்டியில்லா வச்சிருக்கு.. உள்ளது எட்டுகிலோ கொப்பரை. அதில காக்கா கொண்டுபோனது குருவி கொத்தினது போக மிச்சம் இருக்கப்பட்டது இம்பிடு… ஆனைக்கு கொப்பரை குடுக்காராம்…ஆனைய தூக்கி மடிமேலே வையும்வே… வாறாரு”

“நீ சும்மா கெடந்து கீறாதே… அவன் சொல்லுகதும் காரியமாக்கும்” என்றார் அப்பா.

“என்ன காரியம்? இந்த காலமாடன என்னையக் கெட்டினப்பம் எனக்க குடியிலே மூதேவி வந்து கேறினதாக்கும்.. இந்நா இப்பம் ஆனையும் வந்து கேறியாச்சு… ”

“ஆனை ஐசரியமாக்கும்டீ..”

“ஆமா, ஐசரியம்… ஏமானே இருக்கது இந்த மரப்பெட்டிவீடு. இதை உடைச்சு போட்டா பிறவு எங்கபோயி அந்தி உறங்குகது? தெருவிலே துணிவிரிச்சு கெடக்கணுமா? எனக்க மேலாங்கோட்டு பகவதீ, உனக்கு கண்ணில்லாம போச்சே… ”

“வாய சாத்துடீ… ஏலே உனக்க கெட்டினவள கூட்டிட்டுபோ. எளவு, ஆனைக்கு பீ எளகினது மாதிரில்லா வார்த்தைய போடுதா…”

“அவ எப்பமும் அப்டியாக்கும். கல்யாணத்திலே தாலிகெட்டுத மணையிலே வச்சு என்னைய நாயேன்னு சொன்னவளாக்கும்”

ஐயப்பனின் வீடு பழைய மரக்கட்டிடம். அந்தக்காலத்தில் கைப்பள்ளிகள் செயலாக இருந்தபோது கட்டியது. நல்ல உறுதியான தேக்கில் உத்தரங்கள், தேக்குப் பலகையால் ஆன சுவர்கள். பித்தளைக் குமிழ் வைத்த தடித்த கதவுகள். ஆனால் கதவும் சன்னலும் மிகச்சிறியவை. தட்டும்நிரையும் என்று அந்தவகை வீடுகளைச் சொல்வார்கள். யானை வசமாகச் சிக்கிக் கொண்டிருந்தது

”இப்பம் என்ன செய்யுகது?”என்றார் அப்பா. “யானை சிக்கில்லா நின்னிட்டிருக்கு”

ராமன் நாயர் அருகே வந்து “நான் நல்லா விளிச்சு பாத்தாச்சு. அவனால முடியல்ல… பயந்திருக்கான் பாத்துக்கிடுங்க”

“ஏம்வே ஆனை உள்ளே கேறியிருக்குல்லா? பின்ன எப்டி வெளிய வராம போவும்?” என்றார் டீக்கனார்.

“ஆனை பயந்தாலோ ,சீறினாலோ கொஞ்சம் உப்பி பெரிசாயிப்போடும் பாத்துக்கிடுங்க… அதாக்கும்”

“இதென்னவே புதிய கதையாட்டு இருக்கு. ஆனை என்னவே சுண்ணியா, பெரிசாகுததுக்கு?” என்றார் ஙகையா நாடார்.

அப்பா “நாம என்ன கண்டோம்…. அவன் ஆனைக்காரன்…” என்றபின் “நல்லா விளிச்சுப்பாரும்வே… வல்ல வாழைக்குலையோ கருப்பட்டியோ காட்டிப்பாரும்”

“பதிநாலு கருப்பட்டியும் ஏளு வாளைக்குலையும் குடுத்தாச்சு. தும்பிக்கை நீட்டி வாங்கி திங்குதான். அசைய முடியல்ல…”

“ஒருவேளை இப்டியே வீட்டோட நிக்கிலாம்னு ஐடியா இருக்கோ என்னமோ? ஒருநாளைக்கு பதினாலு கருப்பட்டீன்னாக்க நல்ல ஏவாரம்னு நினைச்சிருப்பான்’

”களியாக்கப்பிடாது தம்புரானே. அவன் ஆளு டீசண்டு பார்ட்டியாக்கும். இண்ணைக்கு வரை ஒரு வம்புக்கும் வளக்குக்கும் போனவன் இல்ல பாத்துக்கிடுங்க. ஆத்திலே பொம்புளையாளுக குளிக்குத எடத்தில எறங்க மாட்டான்…”

“ஆனா ஆம்புள குளிக்கப்பட்ட எடத்திலே  கலப்பைய காட்டிட்டு நிக்கது உண்டு” என்றான் லாரன்ஸ்

“லே, இது சிவன்கோயில் ஆனையாக்கும். வேதக்காரனுகளுக்கு என்னலே காரியம்?”

“வேதக்காரங்களுக்கும் அது கலப்பை காட்டுகதுண்டு… ”

“லே நீ போறியா இல்லியா?”

அப்பா யானையை கூர்ந்து பார்த்தபடி சுற்றிவந்தார். “ஒண்ணும் சொல்லுகதுக்கில்ல… எப்டி உள்ள போச்சுண்ணே தெரியல்லியே.. உள்ள போக முடியாதே… வாய்ப்பே இல்லியே”

‘உள்ள போயிருக்குல்லா… இந்நா கண்ணுமுன்னால தெரியுதே”

“எப்டிலே அதுக்கு தோணிச்சு உள்ள போகணும்னு?” என்றார் அப்பா “ஆனைக்கு அதுக்குன்னு ஒரு கணக்கு உண்டுல்லா?’’

ராமன்நாயர் “சில ஆனைக அப்ப்டியாக்கும். வளந்து போனதை சிலசமயம் மறந்துபோடும்”

ஆசாரி பிரமநாயகம் “மேலே அப்டியே வச்சு வீட்டை கெட்டினதுமாதிரி தோணுது” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதுமே எனக்கு யானை ஒரு பெரிய நத்தை போல தோன்றத் தொடங்கியது. “சின்ன வீடுதானே. அது ஆனைக்க மேலே அப்டியே இருந்தா என்ன?”என்றேன்.

“போயி சொல்லணும்… அப்பா கிட்ட சொல்லணும்” என்றான் ஸ்டீபன்.

“இல்ல”என்று தயங்கினேன். அவர்களின் கண்களைப் பார்த்தேன்.

“நல்ல ஐடியால்லா? ஆனைக்கு மளை நனையாது… போய் சொல்லிப்போடணும் கொச்சேமானே” என லாரன்ஸ் என்னை ஊக்குவித்தான்

நான் தயங்கி “அடிப்பாரு” என்றேன்.

ஸ்டீபனும் அவன் நண்பர்களும் சிரித்தனர். அப்பா திரும்பிப்பார்த்து முறைத்தார்.

“என்னமாம் வளியுண்டாவே ஆசாரி?”என்று டீக்கனார் கேட்டார்.

“நல்ல உறப்புள்ள பளைய தேக்குமரமாக்கும். பொளிச்சு எடுக்கணுமானாக்கூட குறே நேரமாவும்” என்றார் ஆசாரி.

”அய்யோ எனக்க பகவதியே!” என்று சந்திரி கூச்சலிட்டு தலையில் அறைந்துகொண்டாள்.

ஐயப்பன் “வீட்டை உடைக்கணுமானா..” என்று தயங்கினான்

அப்பா “ஏலே மோணையா. இப்பம் அதுவே உடைச்சுக்கிட்டு வந்திரும்… நாம உடைச்சா பலகையாவது மிஞ்சும்… இல்லேன்னா வெறகுல்லா?”என்றார்.

”வீட்டை உடைக்காண்டாம் ஏமானே. எனக்க வீட்டை உடைக்காண்டாம் ஏமானே” என்று சந்திரி அலறி அழுதாள்.

“ஏட்டி பொத்துதியா இல்லியா? கெட்டினவன் செத்தது மாதிரில்லா தொண்டைய தொறக்கா”

“ஆமா, இந்த மொண்ணையன் செத்தா நான் அளுதேன்… வேற சோலி இல்ல”

அப்பா அருகே சென்று பார்த்து “வெளியே வர முடியாதுண்ணுதான் தோணுது. நல்லா கார்க்கு மாதிரி இறுகியிருக்கு” என்றார்.

அதைக்கேட்டதும் எனக்கு அரிஷ்டக் குப்பியை மூடிய கரிய கார்க் நினைவுக்கு வந்தது. அப்பா முன்பு செய்ததுபோல ஏன் எண்ணை போட்டுப்பார்க்கக்கூடாது?. “எண்ணைபோடலாமே” என்றேன்.

‘என்னது?”என்றார் அப்பா. நான் தயங்க அப்பா “போடா, வீட்டுக்கு போடா. என்னாண்ணு தெரியாமலேயே எறங்கி வந்தாச்சு…” என்று கையை ஓங்கினார்

தங்கையா “அவரு சொல்லுகதிலே காரியமுண்டு… எண்ணைய போட்டுப்பாக்கலாம்…” என்றார்.

“அதுக்கிப்பம் எண்ணைக்கு எங்க போவ?”என்றார் அப்பா.

“வீட்டை உடைக்கத விட எண்ணை லாபமுல்லா…லே, எண்ணை ஒரு நாலு டின்னு வேணும். போங்கலே”

”எண்ணை உலந்துபோவும். கிரீஸாக்கும் நல்லது” என்று ஸ்டீபன் சொன்னான்

“ஓ” என்றார் அப்பா

“கிரீஸ் எளுப்பத்திலே உலராது…ஆனைக்க உடம்பிலே எண்ணை நிக்காதுல்லா?”

“அப்பம் ரெண்டு டின்னு கிரீஸு… லே தவளைக்கண்ணா, நீயும் லாரன்ஸும் ஸ்டீபனும் போங்க”

“எண்ணைண்ணா ஒரு புண்ணியமுண்டு.. ஆனை கணபதில்லா, எண்ணை அபிசேகம் நல்லதாக்கும்”என்றார் படுகிழவரான பாச்சுபிள்ளை.

அப்பா குழப்பத்துடன் அவரைப் பார்த்தார் “எதுக்கும் நீ இன்னொரு தடவை விளிச்சுப்பாருடே” என்றார்

ராமன்நாயர் யானையை “எனக்க செல்லம்ல? எனக்க மக்க இல்ல? வாடே… வெளியே வாடே… ஆனை புறத்தே… ஆனை புறத்தே” என்றார்.

“நீ இப்டி ஆனை புறத்தேன்னு சொல்லுகதினாலத்தான் பிரச்சினைன்னு நினைக்கேன். அதுக்கு புறத்தால வர முடியல்ல… ஆன வெளித்தேன்னு சொல்லு… அப்டியே முன்னாடி போய் வெளியே வந்திரும்” என்றார் அப்பா

ராமன்நாயர் “அடுக்களை இடிஞ்சிரும்லா?”என்றார்

“அடுக்களைதானே”என்றார் அப்பா

“அய்யோ எனக்க அடுக்களையே! பகவதியே, எனக்க அருமந்த அடுக்களையே!”

“சீ சும்மா கெடட்டி… லே, இவள கொண்டுபோய் அந்தால போடு…பாரச்சனி, கெட்ட கூப்பாடுல்லா போடுகா”

”ஆனை வெளித்தே!” ஆனை வெளித்தே!”

யானை பர்ரீங் என பிளிறி சற்றே அசைய வீடு திடுக்கிட்டது. பல இடங்களில் விரிசலோசைகள். விளிம்புகளில் இருந்து புழுதி உதிர்ந்தது

“ஏமானே எனக்க வீடு! எனக்க வீடு ஏமானே”

“இருடே, எலைக்கும் கேடில்லாம முள்ளுக்கும் கேடில்லாம எடுக்கணும்லா?”

யானை வாலைத்தூக்கி கூழ்போல கழித்தது. “பதினாலு கருப்பட்டி… ஏலே, ஒரு சாராயமணம் வருதுல்லா பிண்டத்திலே?”

கிரீஸ் வருவது வரை ராமன்நாயர் யானையை அழைத்துக் கொண்டிருந்தார். அது மெல்ல காலெடுத்து வைத்து முன்னால் நகர்ந்தது. வீடு கிரீச்சிட பயந்து நின்றது. பின்கால் எடுத்து வைத்தபோது அதுவே அஞ்சி நின்றது

“ஆடாம நின்னா ஆனை வீங்கிப்போகும்”என்றார் சுப்பு பிள்ளை

கிரீஸ் டப்பாக்களுடன் நான்கு சைக்கிள்கள் வந்தன. “நல்ல ஒரிஜினல் கிரீஸாக்கும். எதுக்கு இவ்ளவு கிரீஸ்னு நாகப்பன் கேட்டான். ஆனைக்கு குண்டியிலே பூசுகதுக்குன்னு சொன்னேன். நான் அவனை நையாண்டி பண்ணுதேன்னு நினைச்சு அடிக்க வாறான்…” என்றான் லாரன்ஸ்

“இப்பம் இது பளகி இவன் இனி நாளை முதல் குண்டிக்கு கிரீஸ் கேட்டா வலிய செலவுல்லாவே?”

“சத்தம் வேண்டாம்” என்றார் அப்பா “வே இதை ஆனைக் குண்டியிலே பூசும்வே”

“இல்ல… இதுவரை ஆனைக்கு நான் கிரீஸு போட்டதில்லை” என்றார் ராமன் நாயர்

“ஆனை இதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள கேறிட்டுண்டாவே?”

“இல்ல”

“பின்ன?”

”ஆனைக்கு பிடிக்கல்லேண்ணா…”

“பிடிக்கும்… லாரிக்கே போடுதோம் ஆனைக்கு என்ன? லே போங்கலே. போயி பூசி விடுங்கலே”

லாரன்ஸ், ஏசுவடியான், தாணப்பன், அணப்பன் வேலு, தவளைக்கண்ணன் ஆகியோர் முன்வந்தனர். கிரீசை அள்ளி யானையின் புட்டத்தில் பூசினர். அது பளபளப்பாக கருமையாக ஆகியது

”நல்ல மினுப்புண்டு… “என்றார் டீக்கனார்

“என்ன மினுப்பு? நம்ம மேக்கரை காளியம்மைக்க பிருட்டத்த நீரு பாக்கணும்” என்றார் தங்கையா

அப்பா என்னை பார்த்தார். நான் அப்பால் பார்த்தேன்

“மேலே வளிச்சு விடுங்கலே”

கிரீஸை யானையின் மேலிருந்தே கொட்டினார்கள். அதன்பின் யானையை பல்வேறு சொற்களால் ராமன் நாயர் அழைத்தார். அது முன்னும் பின்னும் அசைந்தது. ஆனால் வெளிவரமுடியவில்லை.

“நல்லா விளியும்வே..”

“ஆனை புறத்தே! ஆனை வலத்தே! ஆனை வெளித்தே!”

ஆனால் யானை பின்னடி எடுத்து வைத்தபோது கிரீஸில் கால் வழுக்கி திடுக்கிட்டு நிலைகொண்டு பர்ரோங் என ஓலமிட்டது. புட்டம்நடுங்க வால் சுழித்து அசையாமல் நின்றுவிட்டது

பூசாரி அப்பு வந்து அப்பாவிடம் “நம்ம கடுவா மூப்பிலை  விளிச்சா என்ன?”என்றார்

“என்னத்துக்கு? ஆனைக்கு தாயத்து ஜெபிச்சு கெட்டுகதுக்கா?” என்றார் அப்பா “வெள்ளியிலே அரைநாண் கெட்டணும்னு சொன்னான்னா பொத்திக்கிட்டு போவவேண்டியதுதான்”

“இல்ல, இனி மந்திரவாதத்திலே வல்ல வளியும் உண்டோண்ணு…”

“ஆனைய புகையாட்டு ஆக்கி அப்டியே வெளியே எடுத்திருவாரு.. .இல்லியாவே?”

“அவரு கடுவாதெய்வத்துக்க உபாசனை உள்ளவராக்கும்… தெய்வதோஷம் சொல்லக்கூடாது”

“போனவருசம் குளக்கரை கொச்சம்மிணி காசு குடுக்கேல்லண்ணு சொல்லி அவனுக்க மூணையும் சேத்து பிடிச்சு நிறுத்தினாள்லாலே, அப்பம் கடுவாதெய்வம் வந்து காப்பாத்தல்லியே?

”அதெல்லாம் வேற… ஆணுங்களுக்கு அப்டி பலதும் நடக்கும். அதெல்லாம் ஒரு ஐசரியமுல்லா? இது வேற.இது அவனால முடியும்”

நான் அப்பாவிடம் “குடைய மடக்குத மாதிரி ஆனைய மடக்கினா எளுப்பமாக்கும்” என்றேன்

“வீட்டுக்குப்போடா நாயே… அடிச்சு செவுள பேத்திருவேன்” என்றார் அப்பா.

நான் எனக்கு டீக்கனார் உதவுவார் என அவரைப் பார்த்தேன். அவர் சிரித்தார். “உள்ளதாக்குமே. ஆனை ஒரு கறுப்பு குடையில்லா?’ என்றபின் “ஆனா இது மடக்குகுடை இல்லை கேட்டுதா?”என்றார்.

தங்கையா “நான் என்ன சொல்லுதேண்ணா இப்பம் நாம இருக்கப்பட்ட நெலைமையிலே மந்திரம்ணா மந்திரம்…”

“மந்திரமா, வேய் பெருவட்டரே உமக்கு தலைக்கு சூடுண்டா வேய்? ஆனைய மந்திரத்திலே வெளியே எடுக்குததா? என சொல்லுதீரு?”

“என்னமாம் செய்யணும்லா?”

“அதுக்காக? வீட்டை உடைப்போம்… ஆசாரி வே வீட்டை ஒடையும்வே”.

“அய்யோ எனக்க வீடே! எனக்க வீடே! எனக்க பொன்னு பகவதியே!”

“இவள கெட்டி கொளத்திலே தாழ்த்துங்கலே… செவிய கீறுதாளே”

எனக்குப்பின்னால் ஓடிவந்து சேர்ந்துகொண்ட கோலப்பன் “என்னவாக்கும் காரியம்! அய்யோ, என்னலே இது!” என்றான்  “எப்பிடிலே?”

“ஐயப்பனுக்க வீட்டைக்கண்டு கோபாலகிருஷ்ணன் அது பிடியானைன்னு நினைச்சுப்போட்டு… அந்தாலே கேறி லாக் ஆகி நிக்குது” என்றான் லாரன்ஸ்.

“அய்யோ உள்ளதா?”

அப்பா வெறியேறி “போலே, லே தாயோளி அவனை வெட்டுலே” என்று கூச்சலிட்டார்

டீக்கனார் “நில்லும்வே பிள்ளைவாள்… பயக்க அப்டித்தான் நாக்க சுத்துவானுக… நாம செய்யவேண்டியதைச் செய்வோம்”

“என்னமாம் செஞ்சு எளவெடுங்கலே….நான் போறேன்” என்றார் அப்பா “ஆனா ஆனைக்கு ஒண்ணு நடந்தா பின்ன நம்ம ஊரு அளிஞ்சுபோயிரும் பாத்துக்கிடுங்க. ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டிலே கஜலச்சுமி போயிடுவா. அட்டலச்சுமியிலே ஒருத்தி போனா அவளுக மிச்ச ஏளுபேரும் கூடப்போயிருவாளுக. அவளுக ஒரு கூட்டமாக்கும்”

“மேரியும் ஒரு லெச்சுமியாக்கும்” என்றான் ஸ்டீபன் “ஒன்பதாம் லெச்சுமி”

‘லே, இந்த  தாயோளிய வெட்டுங்கலே! ஏலே வெட்டுங்கலே!”

ஸ்டீபன் கூ கூ என்று கூவிச் சிரிக்க , செயல்மறந்த அப்பா கண்ணீர் மல்கி நடுங்கினார்.

“பிள்ளைவாள் அடங்கணும்…சின்னப்பய அவனுக்க கிட்ட சண்டையப் போட்டுட்டு” என்றார் டீக்கனார் “இப்பம் இவருல்லா எலிப்பொறியிலே பண்டத்த விட்டுக்கிட்டமாதிரி துடிக்காரு… லே, கடுவாயை விளிலே.. போ… சைக்கிளிலே போங்க”

கடுவா மூப்பில் எனப்படும் சிண்டன் காணி எங்கள் ஊருக்கு அப்பால் மூக்கன்மலை அடிவாரத்தில் குடியிருந்தார். அவருடைய வீட்டைச்சுற்றி  பெரிய கரிய மலைப்பாறைகள். அவற்றின் இடுக்கில் கடுவா, கராளன், குட்டன் ஆகிய மலைத்தெய்வங்கள் மண்ணில் செய்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் பெரிய கண்களும் பெரிய வாயும் மிகப்பெரிய ஆண்குறியும் உண்டு. “கடுவா சாமிக்க பண்டத்தைக் கண்டாக்கும் மனுசன் கலப்பைய கண்டுபிடிச்சது” என்று என்னிடம் லாரன்ஸ் ஒருமுறை சொன்னான். கடுவா காட்டை உழுவது தன் பண்டத்தை வைத்துத்தான்.

அப்பா தளர்ந்து சென்று ஒரு கவிழ்க்கப்பட்ட தொட்டிமேல் அமர்ந்தார்.  இப்போது அந்த வட்டாரத்தில் செல்லக்கூடாது என்று நான் அறிந்திருந்தேன். அங்கிருந்த எவரையாவது அவர் அடிக்கமுடியும் என்றால் என்னைத்தான்.

சிண்டன் காணி வருவது வரை ராமன் நாயர் யானையிடம் மன்றாடி பார்த்தார். “லே மக்கா, மானத்தை வாங்காதலே. இந்தா பாரு ஆரு வந்திருக்குன்னு. ஆதாரமெளுத்து கரடிநாயரு வந்திருக்காரு… தங்கையா பெருவட்டரு உண்டு. நேசையன் டீக்கனாரு உண்டு… காலெடுலே செல்லம்!”

யானை எழுப்பிய சத்தம் சற்றே பெரிய பூனைச்சத்தம்போல் இருந்தது

கடுவா சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்து சேர்ந்தார். குள்ளமான உருவம். என்னளவே இருப்பார். ஆனால் நல்ல உறுதியான பெரிய தோள்களும் முண்டா புடைத்த கைகளும் கொண்டவர். தலையில் முடியே இல்லை. ஆனால் தாடி சடைக்கற்றைகள் கலந்து மார்பில் கிடந்தது. உரச்சாக்கு வெட்டித் தைத்த பையில் பூசைக்குரிய பொருட்கள்.

சைக்கிளில் இருந்து தெறித்து இறங்கி கொஞ்சதூரம் ஓடி, அதன் பின் நிதானமாகி கம்பீரமாக நடந்து பெருவட்டரிடம் வந்து ‘என்னவாக்கும்?”என்றார்

“பாத்தா தெரியல்லியா? ஆனைய வெளியே எடுக்கணும்”

“வீடு உடையுமே”

“வீட்டை உடைச்சு எடுக்க நீரு என்னத்துக்குவே?”

“பாப்பம் ,கடுவா என்ன சொல்லுதான்னு” என்றார் கடுவா.

பையை கீழே வைத்தபின் மோவாயை வருடியபடி சுற்றிவந்து யானையை கூர்ந்து பார்த்தார். திரும்பி வந்து “எடுத்துப்போடலாம்… ஒரு மந்திரம் உண்டு” என்றார்

“என்ன மந்திரமானாலும் ஆனைக்கும் வீட்டுக்கும் சேதம் வரப்பிடாது” என்றார் அப்பா

“நாயர்மார் விலகி நிக்கணும்… இது மலைதெய்வங்களுக்க வெளையாட்டாக்கும்”

“நாயர் கொஞ்சம் மலையெல்லாம் கண்டதுண்டுடே காணி”

“இது நாயர் கண்ட மலை இல்லை… அந்தாலே போவும்வே”

அப்பா “டேய்” என்று கையை ஓங்கினார். நேசையன் அவர் கையை பிடித்தார். “அவன் மந்திரவாதியாக்கும்… ஒண்ணுகெடக்க ஒண்ணுண்ணா ஆரு வச்சு ஊதுகது… விடும்வே”

அப்பா “உன்னைய எடுத்துக்கிடுதேம்லே, காணி” என்றபின் அப்பால் சென்று அமர்ந்தார்

“நான் பல நாயன்மாரையும் பிள்ளைமாரையும் இதேமாதிரி பொறியிலே இருந்து எடுத்து விட்டிட்டுண்டு…. கூவே, கரடி, கூவே…என்னவே நாக்கு கேறி அண்ணாக்கிலே வளைஞ்சு போச்சோ? வேய் கரடி…

அப்பா வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்

தங்கையன் “விடும்வே. வந்த வேலையப் பாரும்” என்றர்.

“இது எளுப்பம்… ஆனையை சுருக்கிச் சின்னதாக்கக்கூடிய மந்திரம் உண்டு…” என்றார் கடுவா

‘ஆனையச் சின்னதாக்குத மந்திரமா? என்னவே சொல்லுதீரு?”

“எல்லாத்தையும் சின்னதாக்கலாம், வேணுமானா பெரிசாக்கலாம். வேய், பெரிசும் சின்னதும் நமக்க கையிலே உள்ள கலையில்லா?”

“இவரு ஆனையப்பத்தித்தானே பேசுதாரு?” என்றான் லாரன்ஸ்

“லே, நீ அந்தாலே போ” என்றார் டீக்கனார்

கடுவா “இந்நா கரடி நாயரு இருக்காரு… நம்ம அப்பன் காலத்திலே நாம இப்டி ஒரு வார்த்த சொல்ல முடியுமா? வாள உருவிரமாட்டானுகளா? இப்பம் ரெத்தம் கிட்டாத்த அட்டைய மாதிரில்லா இருக்கானுக…”

“வேற உவமை உண்டு” என்றான் லாரன்ஸ்

“லே, உனக்க கிட்ட அந்தால போவச்சொன்னேன்”

‘ஆனைய சுருக்கலாம்.. சுருக்கிச் சுருக்கி இந்தா இந்த வண்டு மாதிரி ஆக்கலாம். நகத்திலே கிள்ளி எடுத்து உள்ளங்கையிலே வைக்கலாம். வைச்சு காட்டவா?”

“வேண்டாம்லே… உள்ளங்கையிலே ஆனைய வச்சா அதுக்க சொந்தக்கார ஆனை வந்து நம்மள குத்திக்கொன்னாலும் கொல்லும்… நீ இந்த ஆனையை வெளியே எடு பாப்பம்”

“இது எளுப்பம்லா… சின்ன வேல… இருங்க”

கடுவா தன் இடையில் செம்பட்டை கட்டிக்கொண்டார். தலையிலும் செம்பட்டு முண்டாசு. பூசாரி அப்பு அவருடைய உடுக்கையை எடுத்து நீட்ட வேண்டாம் என்று விலக்கினார். கையில் ஒரு பிரம்பை மட்டும் எடுத்துக்கொண்டார்.

கைசுட்டி ராமன் நாயரை அழைத்துக்கொண்டு அப்பால் சென்றார். அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.பின்னர் அவரிடம் விலகிப்போகும்படி ஆணையிட்டார். அவர் விலகி மிக அப்பால் சென்று மாமரத்தடியில் நின்றார். கடுவா கைவீசி டீக்கனாரை அழைத்து ஆணைகளை இட்டார். டீக்கனார் தலையசைத்தபின் திரும்ப ஓடிவந்தார். ஆள்கூட்டத்தை பார்த்து கைவீசி ஆணையிட்டார்.

“எல்லாரும் மாறி நிக்கணும்… நல்லா மாறிநிக்கணும். மந்திரம் வேலை செய்யுதது நூறடி வட்டத்திலேயாக்கும். நூற்றெட்டு அடி எடம் விட்டு மாறுங்க”

எல்லாரும் விலக, வட்டம் அகன்று விரிந்தது. வீடு தன்னந்தனியே நடுவே நின்றது

”என்ன செய்யுதான்?”என்றார் அப்பா

“மந்திரம் சொல்லுதான்”

யானையைச் சுற்றிச் சுற்றி வந்து கடுவா எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் யானையிடம் பேசுவதுபோலவும் ,யானையிடம் ஆணையிடுவது போலவும், அதை அழைப்பது போலவும், அதனுடன் கொஞ்சுவதுபோலவும் தோன்றியது.

“இவன் நம்மள மடையனாக்குதான்” என்றார் அப்பா

“நீரு சும்மா நில்லும்வே கரடி…”

நெடுநேரம் ஆகியது. கடுவா பொறுமையாக, சீராக யானையிடம் மந்திரம் போட்டுக்கொண்டே இருந்தார். யானையிடம் அவர் நீண்ட உரையாடலில் ஈடுபட்டிருப்பதுபோல தோன்றியது.

“யானை உள்ளதாட்டு கொஞ்சம் சின்னதா ஆயிட்டுதோ?”என்றார் டீக்கனார் “இல்ல எனக்கு அப்டி தோணுதா?”

”ஆனை சின்னதாவுதா? வேய்…”என்றர் அப்பா

தங்கையா பெருவட்டர் “ஆனை சின்னதாயிட்டே வருது… உள்ளதாக்கும்” என்றார்

“ஏசுவே! கர்த்தாவே!”என்று டீக்கனார் சொன்னார்.

“எனக்க மாதாவே, ஆனை சின்னதாகுத காலம் வந்துபோட்டே!” என்றார் ஞானகுருசு.

“நோவாவுக்க பெட்டகத்திலே சின்னதாக்கித்தான் ஏத்துவானுக…”

அப்பாவே கொஞ்சம் திகைப்புடன் பார்த்தார். கூட்டத்தில் அமைதி உருவாகியது. பலர் அதைச் சுட்டிக்காட்டி சொன்னார்கள்

யானையின் மத்தகம் தாழ்ந்தது. நன்றாகவே இடைவெளியை காணமுடிந்தது

“கோபம் வந்தாலோ பயந்தாலோ ஆனை நல்லா காலை நீட்டி முதுகை நிமித்தி நிக்கும்… இப்பம் அது நல்லா களைச்சு போட்டு. அதனாலே காலை கொஞ்சம் வளைச்சு முதுகை தாழ்த்துது, அவ்ளவுதான்” என்றார் அப்பா

“சும்மா இரும்வே…” என்றார் டீக்கனார். “அவனுக்க மந்திரம்லா?”

“எல்லாம் கடுவாய்க்க மாயம்னா நீரு வேதம் மாறி வாரும்வே… நீரு சத்ய கிறிஸ்தியானில்லா”

“அது வேற”

“என்ன வேற?”

“சும்மா கெடவும்வே… நாயரிலே இப்டி உண்டா  ஒரு எரணம்கெட்ட  நாயரு?”

யானை நன்றாக காலை மடித்து நிலத்தோடு வயிற்றை சேர்த்து தவழ்ந்து பின்னால் வந்தது. வீட்டின் கதவின் சட்டகத்திலேயே அதன் உடல் படவில்லை

மக்கள் ஆர்ப்பரித்தனர். பலவகையான கூச்சல்கள், கூவலோசைகள்

மேலும் மேலும் பின்னகர்ந்து வந்து அப்படியே மண்ணில் படிந்து அமர்ந்திருந்தது. துதிக்கை குளத்திலிருந்து நீர் இறைக்கும் ரப்பர் குழாய் போல கிடந்தது

“அந்தாலே ஆனையச் சுருக்கி ஒரு தவளை சைசுக்கு ஆக்கட்டா? என்ன சொல்லுதீரு?”என்றார் கடுவா

“வேண்டாம்வே, பாவம்லா” என்றார் டீக்கனார்

“வீட்டுக்குள்ள விட்டு வளக்கலாம். ராத்திரியிலே கரிச்சட்டியிலே போட்டு மூடி வைக்கணும்… நாய் எடுத்துக்கிட்டு போயிரப்பிடாது”

”வேண்டாம்வே” என்றார் தங்கையா பெருவட்டர் “என்ன இருந்தாலும் ஆனைக்கு ஒரு இது உண்டுல்லா? நாம அதை வச்சு ஒருபாடு வெளையாடக்கூடாது”

வீட்டுக்குள் இருந்து ஐயப்பனின் அம்மா நீலி உலர்ந்த முலைகள் தொங்க மெலிந்த கைகளை விரித்தபடி வெளியே வந்து “அய்யோ அய்யோ! ஆனை வந்துபோட்டே! ஆனை வீட்டுக்குள்ள வந்துபோட்டே!”என்று அழுதாள். அவள் ஓசை பெரிதாக எழவில்லை. அவளுக்குள் காற்று குறைவாகவே இருந்தது

“அது செரி, அப்ப கிளவி இதுவரை உள்ளயாக்கும் இருந்திருக்கு” என்றான் தாணப்பன்

“ஆனைக்க காலுக்க கீள இருந்திருக்கா! நல்ல யோகம்!” என்றான் தவளைக்கண்ணன் “கலப்பை நல்ல ஐசரியமுள்ள கணியாக்கும்”

”ஐயப்பா, லே, உனக்க அம்மையில்லா உள்ள இருந்திருக்கா… நீ சொன்னியாலே?’ என்றான் லாரன்ஸ்

“நான் மறந்துபோட்டேன்” என்றான் ஐயப்பன்

“லெச்சணம்தான்”

கடுவா கைகாட்ட ராமன் நாயர் யானையை நோக்கி ஓடினார். அவர் அருகே சென்றதும் யானை பிளிறியது. “எனக்க அப்போ, எனக்கு வய்யாவே” என்று அது கதறுவதுபோலிருந்தது

ராமன் நாயர் அதன் காதைப் பிடித்து ஆறுதல் சொன்னார். அதன் மத்தகத்தை தட்டினார். அவர் பலவாறாக ஆணையிட அது மெல்ல எழுந்தது. தனக்கு கால்கள் இருப்பதையே அப்போதுதான் உணர்ந்துகொண்டதுபோல மெல்ல தூக்கி வைத்தது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி எழுந்து நின்று தள்ளாடியது. பின்னர் காதுகளை முன்னால்கோட்டி துதிக்கையை வளைத்து நெற்றிமேல் வைத்து தலையை குலுக்கி சங்கொலி எழுப்பியது

“ராமன் நாயரே இது உள்ளதாட்டு ஆனையாக்குமா? கொஞ்சநேரம் முன்ன பூனைக்க சத்தமாக்கும் கேட்டுது” என்றான் லாரன்ஸ்.

”சீ, போலே நாயிக்கமோனே… வந்து தொட்டு பாருலே… ஆனைக்க வீரியம் என்னான்னு வந்து தொட்டு பாத்து சொல்லுலே…லே, அருகிலே வந்து பாருலே”

“தொட்டா என்னவே செய்வீரு? ஆனைய நான் ஓட ஓட வெரட்டினா என்ன தருவீரு?”

“பத்து ரூவா… ஏல, பத்து ரூவா பந்தயம்”

லாரன்ஸ் முன்னால் சென்று ஐயப்பனின் வீட்டுமுன் கிடந்த ஒரு கொப்பரையை எடுத்துக்கொண்டு யானையை நோக்கிச் சென்றான். கோபாலகிருஷ்ணன் துதிக்கை நீட்டி அதை மோப்பம் பிடித்தது. அதன் உடல் நடுங்கியது. புட்டத்தில் ஒரு விதிர்ப்பு. காதுகள் மடங்கின

துதிக்கையை இழுத்துக்கொண்டு லாரி ஆரன் அடிப்பதுபோல அலறியது. உடலை சுருட்டிக்கொண்டு பதுங்கி மறுபக்கம் நகர்ந்து மீண்டும் அலறியபடி ஓடியது

“டேய் கோபாலா நில்லு…. கோபாலா நில்லு” என்றபடி ராமன் நாயர் பின்னால் ஓடினார்

“ராமன் நாயரே பத்து ரூபா! பத்து ரூபா நாயரே! நாயரே கூ!” லாரன்ஸின் நண்பர்கள் கூச்சலிட்டார்கள். சிரிப்பு ஆர்ப்பாட்டம்

அப்பா “இவனுக நாட்டிலே ஒரு ஆனையை மானம் மரியாதையா ஜீவிக்க விடமாட்டானுக… விருத்திகெட்டவனுக” என்றார்

“நீரு வீட்டுக்குப் போவும் வேய்….நான் விளைக்கு போயிட்டு வாறேன்” என்றார் டீக்கனார்

கடுவா “எனக்கு ஒரு அம்பது ரூபாயும் கடுவாய்க்கு ஒரு கோளியும் வேணும்.. கோயிலுக்கு குடுத்தனுப்புங்க…:என்றபின் “எங்கலே சைக்கிளிலே வந்தவன்?”என்றார்

தாணப்பன் வந்து “ஏறுங்க மூப்பிலே” என்றான்

கடுவா அப்பாவைப்பார்த்து “நம்ம கையிலே நாயர்மாரை சுண்டுவிரல் சைசுக்கு ஆக்கப்பட்ட மந்திரமும் உண்டு… பின்ன நம்மாலே எதுக்கு? பாவப்பெட்ட கூட்டம்லா? ”என்றபடி சைக்கிளில் ஏறிக்கொண்டார்

“எரப்பாளி”என்றார் அப்பா அவர் போவதைப்பார்த்து

“ஆளு தெய்வகிருபை உள்ளவனாக்கும்.. கர்த்தாவான ஏசுவுக்கும் அவனை ஆளு தெரிஞ்சிருக்கும்”என்றார் டீக்கனார்.

தங்கையா பெருவட்டர் “ஐயப்பா உனக்கு யோகமுண்டு கேட்டியா… வீடு திரும்ப கிட்டியிருக்கு”

ஐயப்பன் “சந்தைக்கு போணும்” என்றான், பொதுவாக அவன் எதையும் முழுமையாக புரிந்துகொண்டிருக்கவில்லை. முயற்சி தொடங்கப்பட்டிருந்தது, அவ்வளவுதான்.

அப்பால் சந்திரி “அய்யோ எனக்க எட்டு பானையை உடைச்சுப்போட்டே… எளவெடுத்த ஆனை எனக்க பானைகள எல்லாம் உடைச்சுப்போட்டே… அய்யோ பகவதியே!”என்று ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தாள்

லாரன்ஸ் “கிரீஸுக்குண்டான பைசா?”என்றான்

“தாறம்லே… ஆருலே இவன்… கிடந்து துடிக்கான்!”

நான் யானைக்கு பின்னால் ஓடினேன். அது அப்பு பெருவட்டரின் தோப்புக்குள் சென்று தாழைப்புதர்கள் நடுவே ஒளிந்து நின்றிருந்தது. ராமன் நாயர் அதை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்

நான் அருகே சென்று “நல்லவேளை, ஆனைக்கு ஒண்ணும் ஆகல்ல” என்றேன்

“மயிரு… இதுக்க குண்டியிலே இருந்து கிரீசை களுவி எடுக்கணும்… அதுக்கு ஒரு வாரம் ஆகும்… என்னால முடியாது… அப்டியே விட்டுட்டு திற்பரப்பு போனா எனக்க மக எனக்கு அருமையாட்டு கஞ்சி ஊத்துவா”

“கடுவா என்னவாக்கும் கேட்டாரு?” என்றேன்

“என்ன?”

“உம்ம கிட்ட கேட்டாருல்லா?”

“அவரா? நாகப்பனுக்க எஸ்டேட்டிலே குட்டியானை இருக்குல்லா, கொச்சுகேசவன். அவனை எப்டி விளிப்பீருண்ணு கேட்டாரு. சொன்னேன்”

“ஆ!” என்றேன். “அவரு சொன்ன மந்திரம் அதாக்கும்!”

“என்ன மந்திரம்!”

“அவரு நம்ம கோபாலகிருஷ்ணனை பாத்து சின்ன குட்டிய விளிக்குத மாதிரி விளிச்சாரு… சின்னக்குட்டிக்கிட்ட பேசுத மாதிரி பேசினாரு… இவன் அதைக்கேட்டு அப்டியே நம்பி சுருங்கி சின்னக்குட்டியா ஆயிட்டான்”

ராமன் நாயர் திரும்பி கோபாலகிருஷ்ணனைப் பார்த்தார். அவன் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாழை மடலை துதிக்கையால் பற்றி சுருட்டிக்கொண்டிருந்தான். ராமன் நாயர் தன்னை முறைக்கிறாரோ என்று எண்ணி அதை அப்படியே விட்டுவிட்டு துதிக்கை தாழ்த்தி நல்லபிள்ளையாக செவிமடித்து நின்றான்.

“அப்டி விளிக்கலாமோ?” என்றார் ராமன் நாயர்

‘நீரு விளிக்கவேண்டாம். இவன் சின்னப்பிள்ளையா விளுந்து கெடந்தான்னா நீயாவே பீய அள்ளுவீரு?”

“அது உள்ளதாக்கும்”என்றார் ராமன் நாயர் “ஆன எடத்தே”

==========================================================================================================

முந்தைய கட்டுரைபுனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6