அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம்
நான் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன். அதன் உந்துதலால் ஒரு சிறுகதை ஒன்றை எழுதி இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் கருத்துக்களையும்/விமர்சனங்களையும் நான் மிகமுக்கியமானதாக உணர்கிறேன், கதையும் நானும் தேறுவோமா என்று தெரியவில்லை. தங்களின் கருத்துக்களை பகிருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த கதையை ஜெயமோகன் அவர்களுக்கும் ஒரு சிறிய கடிதத்தோடு அனுப்பியுள்ளேன்.
எழுத்துப்பிழைகளை பொருத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றியுடன்,
இல. கோகுலரமணன்
ஆசிரியருக்கு,
இது ஒரு தீவிர இலக்கிய வகைமைக்குள் நிற்கும் நல்ல சிறுகதை. எனக்கு பிடித்திருந்தது. இது போல புலன் ஆகாத மெல்லிய விந்தை நிகழ்வை தொட்டு காண்பிப்பதும், பருப்பொருளின் மனித தன்மையை பரிசீலிக்க வைப்பதும் ஒரு சிறுகதை நிகழக் கூடிய களம் தான்.
இந்த ஜோடி கற்கள் படிமமாக மனதில் வளரும் வாய்ப்புண்டு, தன்னளவிலேயே இது ஒரு வலிமையான படிமம். சமையல் அறையில் இருந்து செப்டிக் டேங்க் தொழிலாளி வீடு வரை ஒரு நகர்வு உள்ளது. இது கனவில் தோன்றுவது ஒரு நுண்ணிய அனுபவம்.
இக்கதையில் இணையான வாழ்கை நிகழ்வு இல்லாததால் இந்த கற்கள் வளரும் படிமமாவதில்லை.
ஆனாலும் ஒரு நல்ல கதையை படித்த நிறைவு எனக்குள்ளது.
இவர் இந்த ஆண்டு ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு நிகழ்வுக்கு வந்து சென்ற பின் எழுதியது. இது கோகுல் ரமணன் எழுதிய முதல் கதை. சாத்தியமென்றால் நமது தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
அன்புள்ள கிருஷ்ணன்
ஒருவரின் முதற்கதை இது என்றால் இது மிக முக்கியமான படைப்பு. இரண்டு கூறுகள். ஒன்று அறிந்த, கேட்ட யதார்த்தத்தை ‘அப்படியே’ எழுதத்தான் பெரும்பாலான புதிய படைப்பாளிகள் முயல்வார்கள். படைப்பின் அடிப்படை கற்பனை. அது இக்கதையில் உள்ளது
இரண்டு, இவ்வாறு கதை எழுதத் தொடங்கும்போது முடிவை அளிப்பதிலும் சரி தொடங்குவதிலும் சரி, உரையாடல்கள் வழியாக ஒரு செய்தியைச் சொல்வதிலும் சரி ஒரு ‘பழகிப்போன’ பாதை இருக்கும். அது முழுமையாகவே இக்கதையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுவும் நன்று
கதை ஒரு கவித்துவத்தை அடையத்தான் செய்கிறது. அந்த பிளப்பு. அதைவிட கதையில் சொல்லப்படாத ஒன்று நிகழும் அந்த முடிவு. கற்பனையைத் தூண்டும் நல்ல படைப்பு
ஜெ