பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்

 

அப்பா விழித்தது முதலே அமைதியின்மையுடன் காணப்பட்டார். அம்மா காப்பி கொண்டுவந்து கொடுத்தபோது ராத்திரி தூக்கமே இல்ல சொப்பனமே சரியில்ல என்றார். அம்மா நேத்திக்குமா என்றாள்.

ஒரு வாரமாவே தூக்கம் இல்ல அதே திரும்பி திரும்பி கனவுல வருது

பழையது மோடையா ?

ஆமா, அந்த கல்லு ரெண்டையும் கட்டிண்டு தூங்கறா மாதிரி அப்பறோம் அதுல ஒன்ன மட்டும் கட்டிண்டு அழறேன்.அந்த அழுகை இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு .நிஜத்துல அழுதாமாதிரி இப்போகூட தேம்பறது  . முந்தாநாள் என்னடானா ஒன்னு எரியர்து ஒண்ணுலேர்ந்து தண்ணி வருது. அத தலைல வச்சிண்டு எங்கியோ போறேன் .

என்னால முடியல.

அய்யய்யோ இது என்ன வம்பா போச்சி. நேத்திக்கும் சொன்னிங்க .ரொம்ப அத பத்தி யோசிக்காதிங்க. நீங்க தானே செட்டியாருக்கு குடுத்தீங்க இப்போ என்னடானா கனவு வருது சொப்பனம் வருதுண்றீங்க.

அது ரொம்ப காலமா நம்மாத்துலயே இருந்தது. எங்கப்பா ஒக்கரை வாத்தியார்டேந்து  வாங்குனது.

சரி நான் இன்னைக்கு செட்டியார போய் பாத்து அத திருப்பி எடுத்துண்டு வந்துடறேன்.

ஐயோ அவரு என்ன நெனைப்பாரு

அத நான் பாத்துக்கறேன்.

 

பழையது மோடை என்பது இரண்டு கருங்கற்கள் , அச்சு வெல்லத்தை கவிழ்த்து வைத்தது போன்ற உருவம் கொண்டவை . ஆமாம்  அச்சு வெல்லத்திற்கு எது மேல் பக்கம் எது அடிப்பக்கம்.

முதல் கல்லில் பக்கவாட்டில் வரிவரியாக கோடுகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் இரண்டாவதில் வளையங்கள். இரண்டு கல்லிலுமே மேல் பரப்பில்  அழகான சிறிய குழி செதுக்கப்பட்டிருக்கும்( பாத்திரம் நிற்பதற்காக ).அவற்றிக்கு இடையில் ஒரு இன்ச் கூட இடைவெளி இருக்காது.அப்படிதான் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.

எங்கள் வீட்டு சமையலறையில் ஒரு ஓரமாக அவ்விரண்டு கற்களும் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டு நிற்கும். அதில் தான் முந்தையதினம் மீந்து போன

பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதை சுற்றி தரையில் எறும்பு பௌடர் போடப்பட்டிருக்கும். இந்த முழு அமைப்பிற்கும் பெயர் தான் பழையது மோடை.

 

அவற்றை தொட்டாலோ அல்லது அருகில் சென்றாலோ சர்வ நிச்சயமாக கை அலம்பவேண்டும்.கூடுமானவரை மிச்சம் மீறாமல் பார்த்துக்கொண்டாலும் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அதில் சாதம் குழம்பு கரியமுது அதாவது பொரியல் ஏறிவிடும். ஒரு கல்லில் சாதம் ஒரு கல்லில் குழம்பு அதிகப்படியான நாட்களில் நிறைய மிச்சம் என்றால் அம்மா அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக  அடுக்கி வைத்திருப்பாள் ..அவற்றை விரத நாட்கள் அல்லாத அதாவது சனி, அம்மாவாசை ஏகாதசி போன்ற தினங்களை தவிர்த்து அப்பா சாப்பிடுவர் எப்போதும் அம்மாவும் நாங்களும் சாப்பிடுவோம்.பாட்டி அந்த பக்கமே வருவதில்லை.நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் இல்லையென்றால் அனைத்தும் ஊசி போயிருக்கும் ஒன்று நன்றாக இருந்து ஓன்று கெட்டுப்போனதாக இருந்ததே இல்லை.அதனால் அம்மா ஒரு பதார்த்தத்தை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு எல்லாவற்றையும் பரிமாறுவாள்.தனித்தனியாக சோதிப்பதில்லை.

 

இருபது நாட்களுக்கு முன்பு நாங்கள் பழைய வீட்டை காலி செய்து புதிய வாடகை வீட்டிற்கு வந்தோம்.இது கொஞ்சம் சிறிய வீடு எங்களுக்கு கொஞ்சம் பொருட்கள் ஜாஸ்தி.அதனால் சிலவற்றை கழித்து கட்ட முடிவு செய்தோம்.அதில் ஒரு மர பீரோவும் இரண்டு தகர ட்ரம்கள் ஒரு பாதி உடைந்த மர செல்ப் மற்றும் இந்த கற்களும் அடங்கும்.அம்மாவிற்கு மனதே இல்லை. ஆனால் அப்பா புதிதாக பார்க்கப்பட்டிருத்த வீட்டில் சமையலறை சிறியது அதில் இதை எல்லாம் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று வாதம் செய்தார்.

வீடு காலி செய்யப்போவதற்கு முதல் நாள் அப்பாவின் நண்பர் மளிகை கடை செட்டியார் செல்வேந்திரன் வந்திருந்தார்.நீண்ட நேரம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.சாமான்களை பார்த்துவிட்டு

 

ஒரு டெம்போ பத்தாது போலிருக்கே.நம்ம சரவணன் வண்டி சொல்லிக்கலாம் அது கூண்டு வச்ச வண்டி கொஞ்சம் பெருசு. ஆனா அந்த வீடு உங்களுக்கு பத்துங்களா முரளி கொஞ்சம் சின்னதா இருக்காப்ல இருக்கே

 

ஆமா என்ன பண்றது பள்ளிக்கூடத்து பக்கதுல வேற வீடு கெடைக்கல. இந்தாள் வேற காலிபண்ண சொல்லிட்டான். இதுல பாதி சாமான் எங்க அப்பா காலத்தது. அதான் கொஞ்சம் கழிச்சி கட்டலாம்னு இருக்கேன். இந்தா இந்த பீரோ அப்பறோம் இந்த செல்ப் இந்த மோடை

 

என்னது மோடையா

 

ஆமா அது பேர் அதான்

என்று பேசிக்கொண்டே வந்து மீண்டும் சேரில் அமர்ந்தார்கள்.

 

ஒரு சிறிய மௌனம் பரவியது

 

நான் வேனா இந்த ஒரு கல்ல எடுத்துக்கவா

 

ஒரு சிறிய அதிர்ச்சியுடன் அப்பா அவரை பார்த்தார், அவர் மனதில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை.

 

சரி எடுத்துக்கோங்க நான் அப்டியே விட்டுட்டு போய்டலாம்னு நெனச்சேன். யாருக்காவது பயன்பட்டால் சரி.

 

ஓகே நான் வரேன் முரளி.நாளைக்கு சரவணன் வண்டிய அனுப்பிச்சிட்டு நானும் பின்னாடி வறேன். சாமான் தூக்குற ஆளுங்கள பத்து மணிக்கு வர சொல்லிருக்கேன்

 

சரி செட்டியாரே பாப்போம்.

 

மறுநாள் முழுவதும் வீடு மாற்றும் படலம் நடந்தது அப்பா அணுக முடியாதவராக காணப்பட்டார்.செட்டியார் ஏறக்குறைய அன்று முழுவதும் எங்களோடே இருந்தார் அவர் கிளம்பும்போது அப்பா

 

செட்டியாரே இந்த கல்லு வேணும்னு கேட்டிங்களே எடுத்துட்டு போங்க என்றார்.அவரும் அந்த கோடு போட்ட கல்லை ஒரு பெரிய நாயை தூக்கி செல்வது போன்று எடுத்துச்சென்று அவர் ஸ்கூட்டியின் முன்னாள் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

அதுவரை வாயே திறக்காமல் இருந்த பாட்டி அது ஒரு ஜோடி டா என்றார்.

 

அம்மாவின் நீண்ட பிடிவாதத்திற்கு பிறகு அப்பா அந்த ஒரு கல்லை எடுத்துவர சம்மதித்தார்.அதை நன்றாக கழுவி தற்போது

இந்த வீட்டில் அது பாத்திரம் தேய்க்கும் இடத்திற்கும் கிரைண்டருக்கும் இடையில்  வைக்கப்பட்டது. மாவு அரைத்துவிட்டு குழவியை அதில் இறக்கி பின்பு அதிலிருந்து தேய்க்கும் இடத்திற்கு அம்மா கொண்டு செல்கிறாள்.

 

இந்த நிலையில் தான் அப்பாவிற்க்கு தொடர் கனவுகள் வந்துகொண்டிருந்தன.

 

அது எங்க அப்பா காலத்துதா அதான் ஒரு மாதிரி இருக்குபோல என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.மளமளவென குளித்து விட்டு சட்டையை மாட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தார்.

 

அம்மா, செட்டியார்ட்ட கேக்க போறிங்களா என்றாள் .

 

ஆமா கேக்க போறேன் அவரு ஒன்னும் நினைச்சுக்க மாட்டாரு.

 

சரி இவனையும் கூட்டிண்டு போங்க அவரு வண்டில கொண்டுபோய்ட்டாரு நீங்க எப்புடி கொண்டுவருவீங்க இவன பின்னாடி உக்காரவச்சி புடிச்சிக்க சொல்லுங்க.

 

அதுவே சரியான வெயிட்டு இதுல இவன் வேற வந்தான்னா மிதிக்க முடியாது என்றார்.

 

 

 

என்ன நினைத்தாரோ தெரியவில்லை சரி வரட்டும் என்றார். நானும் அப்பாவும் செட்டியார் கடைக்கு சென்றோம். அவர் அங்கே இல்லை. கடை ஆளிடம் அப்பா விசாரித்தார் சாப்பிட சென்றவர் இன்னும் வரவில்லை என்றார் அந்த ஆள்.

 

நேராக செட்டியார் வீட்டிற்கு சென்றோம் இரும்பு கேட் சாற்றியிருந்தது. அதை திறக்கும்போது பூதாகாரமாக ஒலி எழுப்பியது. அவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். கேட் சத்தம் கேட்டவுடன் திரும்பி வாங்க முரளி சாமி என்றார். வீட்டிற்கு உள்புறம் திரும்பி முரளி சாமி வந்திருக்காங்க பார் தண்ணி கொண்டா என்றார்.

 

சற்றுநேரம் ஏதேதோ பேச்சுகள் ஓடின யார் வாழ்கிறார்கள் யாரெல்லாம் நொடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பல. பின்பு அப்பா மெதுவாக ஆரம்பித்தார்

 

அந்த கல்லு எடுத்துட்டு வந்திங்கள்ள அத என்ன செஞ்சிங்க

 

அதுவா சாமி அது ஒரு கத, அத நான் தண்ணி பானை வச்சிக்கலாம்னுதான் தூக்கிட்டு வந்தேன்.அதுல பாத்தீங்கன்னா பான ஒக்காறவே இல்ல. கல்லு நொடிச்சிகிட்டே இருந்துச்சி. வச்சி வச்சி பாத்தேன் அப்பறோம் ஒன்னும் சரிவர்லனு வீட்டுக்கு வெளில வச்சிருந்தேன்

 

அப்பறம்

 

நாம்ம செந்தில் இருக்கான் பாருங்க

 

யாரு

 

அதான்க ஓட்ட செட்டி செந்தில், இந்த செப்டிக் டேங்க் கிளீன் பண்ணுவானே நாம்ம ஊட்டுக்கு கூட ஒருதரம் அனுப்புச்சேன்.

 

ஆமா ஆமா சொல்லுங்க

 

அவன் அன்னைக்கு கிளீன் பண்ண வந்தான், முடிச்சிட்டு போறப்ப இது என்ன கல்லுனு கேட்டான், நான் உள்ளத சொன்னேன்.அவன் இப்போ இது உங்களுக்கு தேவபடலியானு கேட்டான், ஆமான்னேன் அப்ப நான் எடுத்துக்கவான்னு கேட்டான் கொஞ்சம் யோசனையா இருந்துச்சி அப்பறோம் எடுத்துக்கடாடேன். தூக்கிட்டு போய்ட்டான்.

 

அப்பாவின் முகம் கூம்பியது ஆனால் எதுவும் பேசாமல் அமர்திருந்தார்.

 

ஏன் முரளி என்ன ஆச்சி என்று அப்பாவை கேட்டார் அப்பா தனக்கு வரும் கனவுகள் பற்றி சொன்னார் செட்டியார் மிரண்டுவிட்டார்.

 

அதான் முரளி ரொம்ப காலமா இருந்த பொருள்லாம் யாருக்கும் குடுக்கக்கூடாது.அது வீட்ல ஒரு ஆள் மாதிரி அது தேவையோ இல்லையோ ஒரு ஓரத்துல கெடக்கட்டும்னு விட்டுரனும். சரி இப்போ என்ன பண்றது.

 

தெரியல

 

சரி நம்ம ஒன்னு பண்ணுவோம், நாம ரெண்டுபேரும் செந்தில் வீட்டுக்கு போவோம் அவன்ட கேட்டு தூக்கிட்டு வந்துருவோம். அவனும் அவன் சம்சாரமும் எங்கயாவது வேளைக்கு போயிருத்தத்தான் பிரச்சனை. ஒரு எட்டு போய் பாப்போம் இல்லனா நாளைக்கு போவோம்.

 

செந்தில் வீட்டுக்கு போவது என்று முடிவாகி அப்பாவும் நானும் செட்டியாருட்டம்மா கொடுத்த கொய்யா துண்டங்களில் சிலவற்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வெளியே வந்தோம்.

 

செட்டியார் ஸ்கூட்டியில் என்னை ஏற்றுக்கொண்டு  முன்னாள் செல்ல அப்பா பின்னால் வந்தார்.நிறைய சந்துகள் தாண்டி சென்றோம் ஒரு வழியாக செந்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

அந்த கல் அவர் வீட்டின் முன்னாள் உள்ள காவேரி பைப்புக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. நிறைய கற்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் இந்த கல் நின்றுகொண்டிருந்தது .அந்த தண்ணி பைப் டிஸ்கவரி சேனலில் காட்டிய கிங் கோப்ரா போல விரைப்பாக  நின்றுகொண்டிருத்தது .இப்போது அப்பாவிற்கு முகம் சற்று இளகியது ஆனால் என்ன நினைக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை .

 

செட்டியார் வீட்டின் அருகே சென்று செந்திலு ஏய் செந்திலு என்றார். லுங்கியும் முண்டா பனியனுமாக செந்தில் வெளியே வந்தார் உள்ளே ஏதோ சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

 

வாங்க அண்ணே

 

இந்தப்பாரு சாமி வந்துருக்காப்டி

 

வாங்க சாமி, என்னண்ணே இவ்ளோ தூரம் அதுவும் சாமியோட நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க

 

அது ஒன்னும் இல்ல, நான் ஒனக்கு ஒரு கல்லு குடுத்தேன்ல அது சாமியோடதுதான். அவருக்கு இந்த கல்லு ஏதோ கனவுல  வந்து அழுவுதான் அதான் அத எடுத்துட்டுபோலாம்னு வந்தோம்.

 

அதுக்கென்னங்க எடுத்துட்டு போங்க நான் இந்த பைப்புக்கு கீல போட்ருக்கேன் கொடம் வச்சி புடிக்க . கொடத்த கொண்டாந்து வச்சா நீக்கவே மாட்டேங்கிது அப்பறோம் கொஞ்சம் மண் அடிச்சி ஊண்டி வச்சிருக்கேன்.

 

சரி வுடு , நீங்க எடுத்துக்கோங்க சாமி என்றார் செட்டியார், அப்பா சற்று நேரம் முழித்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் இந்தோ நானே வந்து எடுத்து தரேன் சாமி என்று செந்தில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு முன்னாள் வந்தார். பைப்பிற்கு கீழே இருந்து செந்தில் அந்த கல்லை தூக்கினர். காலுக்கடியில் இருந்து ஏதோ வழ வழவென்று தட்டுப்பட செந்தில் அந்த கல்லை திடீர் என்று கீழே போட்டார் நாங்கள் அனைவரும் பயந்து பின்னால் இரண்டடி வைக்க நான் ஓட எத்தனித்தேன். கடைசியில் அது ஒரு சிறிய தவளை.அனைவரும் அசடுவழிந்து பின் செந்தில் அந்த கல்லை தூக்க முற்பட்டபோதுதான் எல்லோரும் கவனித்தோம் அந்த கல் இரண்டாக உடைந்து கிடைத்தது. சரியாக அந்த கோட்டு வரியில் உடைத்திருந்தது.

 

செட்டியார் டேய்  என்றார். அப்பாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிர்ந்துவிட்டார் .

சற்றுநேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

 

அது நமக்கில்லைன்னு முடிவாய்டிச்சி போல செட்டியார் வாங்க போலாம் என்று சைக்கிளை நோக்கி அப்பா வேகமாக சென்றார் பின்னால் செட்டியார் செந்திலை திட்டுவது கேட்டது நான் அப்பா பின்னாலேயே ஓடினேன். உட்காரு என்று ஒரே சொல். சைக்கிளை கிளைப்பிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தார்.

 

புதுவீட்டின் முன் அப்பா சைக்கிளை நிருத்தி பூட்டினார். உள்ளிருந்து  அக்கா ஓடிவந்தாள்

 

அப்பா சமையக்கட்டுல வந்து பாரேன்…..

 

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6
அடுத்த கட்டுரைசக்தி ரூபேண! [சிறுகதை]