வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது. தமிழகம் கொரொனாவை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது அல்லது அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறது. கடந்த காலத்தை நோக்கினால் இரண்டாவது காரணம் உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
தமிழக அரசின் பல நடவடிக்கைகள் பீதியை கிளப்புகிறதே தவிர நீங்கள் குறிப்பிடுவது போல் பதற்றத்தை தணிக்க பயன்படவில்லை. இக்கடிதத்தை எழுதும்போதே தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. நேற்றுதான் இது எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு வந்தது. இன்று ஒரேநாளில் தலைகீழ் அதிரடி. முதலில் அரசிற்கு உண்மையிலேயே இக்கொள்ளை நோயை கட்டுப்படுத்தும் நோக்கம் இருக்குமானால் நேற்றே இவ்வறிப்பு தமிழகம் முழுவதும் பொருந்தும் எனச் சொல்லியிருக்கும். அது என்ன எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் திரையரங்கு, மால்களை மூடச் சொல்லி உத்தரவு? மக்கள் என்ன மாட்டு வண்டியிலா பயணம் செய்து இரண்டுநாள் கழித்து உள்புற மாவட்டங்களை அடைவார்கள். பக்கத்து மாவட்டத்திற்கு பஸ் பிடித்து சென்று படம் பார்க்க மாட்டார்களா? தமிழகம் போன்ற சினிமா கிறுக்கு பிடித்த மாநிலத்தில் இதெல்லாம் சகஜமாக நடக்கும், இது கூடவா அரசுக்குத் தெரியாது. தொடர் வண்டியில் மக்கள் கேரளத்திலிருந்து தினசரி ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வந்து இறங்குகிறார்கள். அவர்கள் சென்னையிலுள்ள மால்களுக்கும், தியேட்டர்க்ளுக்கும் செல்ல மாட்டார்களா? இது என்ன சாதிக்கலவரமா சில மாவட்டங்களுக்கு மட்டும் தடையுத்தரவு போட்டு தடுத்து நிறுத்த!? உங்கள் நண்பர் சொல்லிய லாஜிக் தமிழகத்திற்குத்தான் அதிகம் பொருந்தும். //மக்களை ஓர் இடத்தில் கூடவேண்டாம் என்றால் இன்னொரு இடத்தில் கூடுவார்கள். கூடாமல் இருக்கவே முடியாது. // அரசே பக்கத்து மாவட்டத்தில் தியேட்டர்களை திறந்து வைத்துள்ளது எனச் சொல்லி பஸ் பிடித்து அங்கு செல்வார்கள். பஸ்ஸிலும், தியேட்டரிலும் பிறரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்குவார்கள். இது நடக்கவே சாத்தியம் அதிகம். என் பார்வையில் தமிழக அரசு செய்வது பெருந்தவறு. இதன் மூலம் இந்த அரசு தமிழகம் பாதுகாப்பாக உள்ளது என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் அடுத்த தேர்தலில் ஆதாயம் தேடவுமே முயன்றதாக நான் சந்தேகம் கொள்கிறேன். இப்போது நேற்றைய அறிவிப்பை மாற்றியதின் மூலம் மக்கள் பதட்டப்பட மாட்டார்க்ளா? நேற்றே இவ்வாறு அறிவித்திருந்தால் இந்தப் பதட்டம் இருக்காதல்லவா? ஏற்கனவே பல மாநிலங்களும், சீனாவுட்பட பிற நாடுகளும் இவ்வாறு செய்திருப்பது தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? ஏன் முதலில் நாங்கள் கோரொனாவை வென்றுவிட்டோம் என்ற ரீதியில் கொக்கரிப்பது, பின்னர் பம்முவது. இந்த விளையாட்டுதான் இம்மாதிரி கொள்ளை நோய் பரவும் காலத்தில் மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமல்ல முதலில் எல்.கே.ஜி, யு.கே.ஜி களுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துவிட்டு, பின்னர் உடனே அதை திரும்பப் பெற்றுவிட்டு மறுநாள் ஐந்தாம் வகுப்புவரை என அறிவிப்பது, அதற்கடுத்த நாளே எல்லா வகுப்புகளுக்கும் விடுமுறை என அறிவிப்பது என பல குளறுபடிகள். இவைதான் பதற்றத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
முதலில் இவ்வாறு கொள்ளை நோய்கள் பரவும் காலத்தில் மக்கள் நலன் நாடும் அரசுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்களை வெல்லமுடியும். டெங்குவினால் மரணமே இல்லையென முதல்வரோ/அமைச்சரோ சொல்லியபின், டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று உண்மையை சொன்னதற்காக மாநகர பொதுசுகாதார மருத்துவரையே ஒரிரவில் வீட்டிற்கு அனுப்பிய அரசாங்கம் தானே. உண்மையில் தமிழகத்தில் ஒரே ஒரு கோவிட்-19 நோயாளிதாம் உள்ளார் அவரும் குணமாகிவிட்டார் எனச் சொல்வதே எங்கோ இடிக்கிறது. நாம் இன்னும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களையே சோதித்துக் கொண்டிருக்கிறோம். அந்த ஒரே நோயாளியும்? இச்சோதைனையில் தப்பி வீடு சென்று சில நாட்கள் கழித்து குறி குணங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவருடன் தொடர்பு கொண்டவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என அரசு சொல்கிறது. கொள்ளை நோய்களின் நோய்பரவல் (Epidemiology) விதிகளின்படி இன்னேரம் நாம் சமூக பரவலை (community transmission) கொண்டிருப்போம். ஆனால் அவர்களை கண்டுபிடித்து சோதனை செய்யாதவரை நோயர் எண்ணிக்கை ஒன்றில்தான் இருக்கும். இந்த சமூக பரவலை தடுப்பதற்குத்தான் பல்வேறு அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வளவு அதி தீவிர நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஏனெனில் சமுகப் பரவல் மிகக் குறுகிய காலத்தில் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். சீனா அதை சற்றே காலம் தாழ்த்தி உணர்ந்து பின்னர் (அதற்கான விலைகொடுத்து) விழித்துக்கொண்டது. நாம் சீனா அல்ல. ஆகவே வருமுன் காப்பதே நம்முன் உள்ள ஒரே வாய்ப்பு. உண்மையில் நாம் எல்லோரும் கரோனாவினால் பாதிக்கப்படத்தான் போகிறோம். ஏனெனில் நமக்கு அதற்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. ஆனால் அதைக் கூடியவரை தள்ளிப்போடுவதின் மூலம் ஒரே மாதத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடுவதை தடுக்கமுடியும். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மேலும் பலர் மரணிக்கக்கூடும். இது வெறும் கற்பனை அல்ல. நோய்ப்பரவியல் (epidemiology) விதிமுறைகளின் படி கணிக்கப்பட்டது. அறிவியல்பூர்வமானது. மேலும் இது பயமுறுத்துவதல்ல. இந்த யதார்தத்தை புரிந்துகொண்டால் கொள்ளை நோயத்தடுப்பை செய்யமுடியும். ஆம் தடுப்பதற்கும் ஒரு விலை கொடுத்துதான் நாம் ஆகவேண்டும். ஏனெனில் அவ்வாறு தடுக்காவிட்டால்/தள்ளிப்போடாவிட்டால் நாம் கொடுக்கப்போகும் விலை அதனினும் மிகப்பெரிதாக இருக்கும்.
உண்மையில் ஒவ்வொரு கொள்ளை நோயும் ஒவ்வொருவிதம். இதே கரோனோ வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ்களால் தொற்றிய சார்ஸ், மெர்ஸ் போன்றவை இன்றைய கொரோனாவை விட பல மடங்கு வீரியம் (Virulence) கொண்டவை, ஆனால் குறைந்த நோய்த் தொற்று விகிதம் (Pathogenicity) கொண்டவை. அதாவது அவற்றின் இறப்பு விகிதம் அதிகம், ஆனால் எளிதில் தொற்றாது. அதனால்தான் நாம் அவற்றை இன்றைய கரொனாவைவிட எளிதில் கட்டுப்படுத்த முடிந்தது. சார்ஸ் நேரடியாக நுரையீரலை தாக்கக்கூடியது. அது 26 நாடுகளில் 8000 பேரை பாதித்தது. 796 பேர்களுக்கு (10%) மரணத்தை ஏற்படுத்தியது. மெர்ஸ் 24 நாடுகளில் 2500 பேரை பாதித்து 860 பேருக்கு (35%) மரணத்தை ஏற்படுத்தியது. இன்றைய கொரோனாவின் தொற்று விகிதம் அதிகம், ஆனால் வீரியம் மிகக் குறைவு. இது ஒரே நேரத்தில் நுரையீரலையும், சுவாசப் பாதையையும் பாதிக்கக்கூடியது. இக்கடிதம் எழுதும்போது இவ்வைரஸ் 148 நாடுகளில் பரவி 1,68,019 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி 6610 (4%) பேரை கொன்றிருக்கிறது. ஆகவே, சார்ஸ், மெர்ஸ் உடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனாவின் பேருருவம் தெரியும். 4% மரணம் என்பது சாதாரணமானதல்ல. இந்தியா போன்ற நாட்டில் 4% என்பது 5 கோடியே 40 லட்சம் மரணங்கள். 1% என்று வைத்துக்கொண்டாலும் ஒன்றரைக்கோடி மரணங்கள். அதுபோக பல மடங்கு கோடி பேர்கள் மருத்துவமனைகளின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் குறுகிய காலத்தில் சேர்க்கப்படுவர். நம்மிடம் அத்தனை தீவிர சிகிக்சை பிரிவுகள் கிடையாது. சீனா மாதிரி 15 நாட்களில் மருத்துவமனைகளைக் கட்ட முடியாது. ஆகவே ஒரே வழி அசாதாரணமான தடுப்பு முறைகளை கையாள்வது அதன் மூலம் நோய்பரவலை முடிந்த அளவு தள்ளிப்போடுவது. அதற்கும் நமக்கு சீனாவே வழிகாட்டியுள்ளது. நாம் வெப்ப மண்டல நாடு என்பதாலும், கோடை காலம் ஆரம்பிக்கிறது என்பதாலும் ஓரளவிற்கு வைரஸ் பரவல் விகிதம் இயல்பாகவே குளிர் பிரதேச நாடுகளை விட சற்று குறைவாக இருக்கும் என ஊகிக்கலாம். நோய் பரவவே பரவாது என்று சொல்லவில்லை. மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் நோய் என்பதால், மக்களை கூட்டங்கூடாமல் ஒரு மாதகாலம் தவிர்க்க வைப்பதின் மூலம் நோய்பரவல் கண்ணிகளை உடைக்கமுடியும். இந்த அறிவியலின் அடிப்படையிலேயே அரசுகள் இத்தகைய அசாதாரணமான தடுப்புமுறைகளை கையாள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன.
// இறுதியாக ஒன்று, ஐரோப்பா போன்ற நாடுகளைப்போல அன்றி இங்கே மருத்துவத்துறை சட்டச்சிக்கல்களுக்குள் பின்னிக் கிடக்கவில்லை. நோயாளிகளின் உரிமை , காப்பீட்டு நிறுவனன்களின் வணிகம் என்னும் இரு அடிப்படைகளில் ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவத்துறை சிக்கி செயலிழந்திருக்கிறது. எந்த முடிவையும் மருத்துவர்கள் எளிதாக எடுத்துவிடமுடியாது. ஒவ்வொன்றும் வருங்காலங்களில் நீதிமன்றங்களில் விளக்கப்பட வேண்டும் என்னும் அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே தொடர்ச்சியான தாமதமும் தயக்கமும் பெரும் சிக்கலாக அங்குள்ள மருத்துவசூழலை ஆட்கொண்டிருக்கிறது.//
நீங்கள் சொல்வது ஒரு பொது நடைமுறைக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், இம்மாதிரி பொது சுகாதார அவசர காலங்களில் அந்நாடுகள் செயலாற்றும் விதமே வேறு. நாம் இன்னும் பொது சுகாதார கட்டமைப்பிலும் (கேரளமும், தமிழகமும் எவ்வளவோ மேல் என்றாலும்), கொள்ளை நோய் காலங்களிலும் செய்யவேண்டிய பாலபாடத்தையே கற்றுக்கொள்ளவில்லை. நாம் மருத்துவமனைகள் கட்டுவதற்கு காட்டும் ஆர்வத்தை, பொது சுகாதாரத்திற்கும் கொடுத்திருந்தால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, காசநோய் போன்ற நோய்களை வருடா வருடம் பரவாமல் தடுத்திருக்கலாம். அதுபோன்றே கோரொனாவில் ஏற்படும் கோவிட்-19 நும் நடந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் இத்தனை பிரயத்தனம்.
இறுதியாக – நமது அரசாங்கங்கள் ஒன்றும் மீடியாவையோ, சமூக ஊடகங்களையோ பார்த்து பயப்படவில்லை. அவற்றை எப்படி கையாள வேண்டும் என்ற டெக்னிக்கை தெரிந்து வைத்திருக்கின்றன. கேரளம் அறிவியல்பூர்வமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது ஊடகத்திற்கு பயந்து அல்ல. இருக்கும் அரசுகளில் ஓரளவேனும் மக்கள் நலம் நாடும் அரசு கேரளம் என்றே நான் எண்ணுகிறேன்.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்
ஏராளமான எதிர்வினைகள். முக்கியமானவற்றை இன்றே வெளியிட்டுவிட்டு இந்த உரையாடலை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதைப்பற்றிய பேச்சுக்கள் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. ஊடகங்கள் அனைத்திலும் இதுதான். அதோடு வந்துகொண்டே இருக்கும் வழக்கமான அரசியல் வசைபாடல்கள்.
திட்டமிட்டிருந்த சந்திப்புகள், பயணங்கள் எல்லாமே ரத்தாகிவிட்டன. இன்னும் சிலநாட்கள் வீட்டிலேயேதான் இருக்கவேண்டியிருக்கும். தேவையில்லாமல் என்ன உளச்சோர்வு என்று படுகிறது.
ஆகவே நாளை முதல் இந்த நோய் பற்றிய எந்த விவாதமும் எந்தப்பேச்சும் இல்லை என முடிவெடுத்திருக்கிறேன்
எழுதிய ஒரு கதையும் [எண்ண எண்ண குறைவது] உளஅழுத்தத்தையே அளித்தது. யாதேவி தொடரின் மூன்றாவது கதையும் [சக்தி ரூபேண] அப்படியே. ஆகவே நாளை மறுநாள் அதையும் வெளியிட்டுவிட்டு மகிழ்ச்சியான காதல்கதைகள் நகைச்சுவைக்கதைகள் மட்டுமே படிப்பது, எழுதுவது என்ற முடிவில் இருக்கிறேன்
ஜெ