கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

வேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி

வில்லியம் மில்லர் விக்கி 

அன்புள்ள ஜெ

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் என்ற உங்களுடைய கட்டுரையில்தான் வேத்நாயக சாஸ்திரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குறிப்பான ஒரு நோக்கம் இல்லாமலேயே எனக்கு அவர் மேல் ஓர் ஈடுபாடு வந்தது. ஏன் என்று யோசித்துப்பார்த்தும் தெரியவில்லை. அவரைப்பற்றி செய்திகளை தேடிக்கொண்டிருந்தேன். நான் வெளிநாட்டில்  இருப்பதனால் இணையத்திலேயே செய்திகளை தேடி அறிய வேண்டியிருந்தது. நான் ஆரம்பத்தில் இவரை முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பிறகுதான் தெளிவு அடைந்தேன்.

வேதநாயகம் சாஸ்திரியாரைப் பற்றி ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் கீற்று இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஏராளமான செய்திகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை நகரில் 1772இல் பிறந்தவர் வேதநாயகம் சாஸ்திரியார். தந்தை அருணாசலம் பிள்ளை. அவர்  கத்தோலிக்க சமயத்தை 1760இல் தழுவினார்ர். தேவசகாயம் பிள்ளை என்று பெயரை மாற்றிக்கொண்டார். வேதநாயகம் பிள்ளை பின்னாளில் வேதநாயகம் சாஸ்திரியார் ஆக மாறினார்.

நெல்லைக்கு வந்த சுவார்ட்ஸ் என்ற பாதிரியாரால் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேதநாயகம் சாஸ்திரியார் அங்கே சரபோஜி மன்னரின் சகமாணவராக கல்விகற்றார். அதன்பின் சரபோஜி மன்னருடைய அவைப்புலவராகவே இருந்தார். ஏராளமான கிறித்தவ கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். ஆ.சிவசுப்ரமணியம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். தீண்டாமை போன்றவற்றைக் கடுமையாக கண்டித்து எழுதிய வேதநாயகம் சாஸ்திரியார் எல்லா சாதியினருக்கும் ஒரே இடத்தில் கல்லறை அமைக்கவேண்டும் என்று வெள்ளைக்கார பாதிரியார்கள் சொன்னபோது கடுமையாக சினம்கொண்டு ஏராளமான கண்டனங்களை எழுதியிருக்கிறார் [ஆனால் வெள்ளையர்களின் கல்லறைகளின் அருகே கருப்பர்களின் கல்லறைகள் அமைக்கப்படவேண்டும் என வெள்ளைய பாதிரியார்கள் வலியுறுத்தவில்லை]

தற்செயலாக யூடியூபில் வேதநாயகம் சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைக் கண்டுபிடித்தேன். ஆச்சரியமாக இருந்தது. இன்றைய செய்தியுகத்தில் எல்லாமே எங்கோ கிடைக்கிறது. யூடியூப் விக்கிப்பீடியா போன்றவை பெரும் களஞ்சியங்கள். ஆனால் யாரேனும் குறிப்பிட்டுச் சொல்லாமல் யாரும் எதையும் படிப்பதில்லை. ஆகவேதான் இதை எழுதினேன்

வேதநாயகம் சாஸ்திரியாரின் பாடல்கள் இன்று கேட்கும்போது வித்தியாசமாக ஒலிக்கின்றன. சம்ஸ்கிருதக் கலப்புள்ள மொழிநடை. பெரும்பாலும் துதிகள். கவிதைநயம் என ஏதுமில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தை அவற்றில் கேட்கமுடிகிறது

அருள் செல்வநாயகம்

***

அன்புள்ள அருள்,

நன்றி. நீங்கள் குறிப்பிடாவிட்டால் நான் கவனித்திருக்கமாட்டேன். வேதநாயகம் சாஸ்திரியார் காலகட்டத்தில் ஒரு முக்கியமான உளநிலை இங்கே நிலவியது – எதையுமே பாட்டால் சொல்வது. காரணம் அன்று உரைநடை வளர்ச்சி அடையவில்லை. அன்று எளிய செய்திகள் கூட பாட்டாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.

பேச்சு அன்றாடப்புழக்கத்திற்கு. எதையாவது நினைவில் நிறுத்தவேண்டும் என்றால், குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், எவரிடமாவது எதையாவது கச்சிதமாகத் தெரிவிக்கவேண்டும் என்றால் செய்யுள்தான். செய்யுள் பாடலாகவே கருதப்பட்டது. ஆகவே இன்று ஒரு செய்திக்குறிப்பாகவோ, ஒரு நகைச்சுவைத்துணுக்காகவோ சொல்லப்படவேண்டியவைகூட பாடலாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஆகவே அன்று எழுதப்பட்ட இசைப்பாடல்கள்கூட சாதாரணமான பேச்சுக்களையே பாட்டாக பாடுகின்றன. நூறாண்டுகளுக்கு முந்தைய நாடகப்பாடல்களைப் பார்த்தால் தெரியும், அவை பேச்சின் பாட்டு வடிவங்கள் முன்சீப் வேதநாயகம் பிள்ளை எழுதிய பொதுவான கீர்த்தனைகள்கூட அன்றாடப் பேச்சுக்கள்தான்.

கிறிஸ்தவ கீர்த்தனைகள் உருவானமைக்கு ஒரு பின்னணி உண்டு. தொடக்கத்தில் கிறிஸ்தவ மதம் இங்கே வேறெந்த மதத்தையும்போல உயர்மட்ட மதமாகவே வந்தது. இரேனியஸ் போன்றவர்கள் இந்துதுறவிகள்போல உடையணிந்து, அய்யர் என்று பெயர் வைத்துக்கொண்டு மதப்பரவல் செய்ய முயன்றனர். பதினேழாம்நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அரசகுடியினரை மதமாற்றம் செய்ய பலமுயற்சிகள் நடைபெற்றன.அவற்றை ஜே.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மான்வல் நூலிலேயே பார்க்கலாம்.

கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்து உயர்தளத்தில் மதமாற்ற முயற்சியை தொடங்கியபோதே இந்துமதத்தின் தரப்பிலிருந்து கூரிய எதிர்விமர்சனங்கள் நூல்வடிவில் உருவாகிவிட்டன. தமிழில் உருவான  ‘கிறிஸ்துமத கண்டன’ நூல்களை எவரேனும் ஆராய்ந்து தொகுக்கலாம். அவை ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு நிகழ்வை காட்டுவன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவை என ஐம்பது  ‘கிறிஸ்துமத நிராகரண’ நூல்களாவது வந்திருக்கும். தத்துவ விவாதக் கோணத்தில் அறிவார்ந்த விவாதம் முதல் கிறித்தவர்கள் முன்வைத்த வசைகளுக்கான எதிர்வசைகள் வரை அவற்றின் இயல்புகள் பல.

ரெவெரெண்ட் மீட், ரிங்கல்தௌபே போன்ற பிற்கால கிறிஸ்தவப் பாதிரியார்கள் இங்கே உயர்மட்டத்தில் கிறிஸ்தவமதத்தை கொண்டுசெல்ல முடியாது என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். இந்துமதத்தவர் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்று, அவற்றை தங்கள் மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முயல்கிறார்களே ஒழிய இந்துமதத்தை துறந்து மறுத்து கிறிஸ்து நோக்கி வருவதில்லை என மீட் பதிவுசெய்கிறார். ஜி.யூ.போப் போன்றவர்கள் இந்துமதத்தின் தத்துவ –இலக்கியக் கூறுகளால் கவரவும்பட்டனர். பலர் திருக்குறள் முதலிய நூல்களில் ஆர்வம்கொண்டனர். இந்துமதத்தின் இந்த உள்ளிழுத்தல் முயற்சி மிக அபாயகரமானது, ஆகவே அவர்களுடன் விவாதங்களை தவிர்ப்பதே நல்லது என்கிறார்.

ஆகவே அடுத்த கட்டத்தில் தத்துவ விவாதங்களுக்கு பதிலாக சேவை மதப்பரப்புதலுக்கான வழியாக கொள்ளப்பட்டது. கிறிஸ்தவமதம் கீழ்மட்டத்து மக்களுக்கானதாக மாறியது. இன்றும் அது அவ்வாறே நீடிக்கிறது. அந்த முதற்காலகட்டத்தில்தான் வேளாளர்கள் மிகுதியாக மதம் மாறினார்கள். குமரிமாவட்டத்தில் வடக்கன்குளம், ராஜாவூர் போன்ற ஊர்கள் வேளாளக் கிறிஸ்தவ ஊர்களாகவே நீடிக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் தொடக்கத்திலேயே நுழைந்த வேளாளர்கள் இன்றும் கத்தோலிக்க அமைப்புக்குள் மிகச்சிறுபான்மையினராக இருந்தாலும் வலுவானவர்களாக திகழ்கிறார்கள்.

இந்த தொடக்க காலகட்டத்தில் அரசவைகள், செல்வந்தர்கள் போன்றோருக்கான மதமாக கிறிஸ்தவம் திகழ்ந்தபோதுதான் கீர்த்தனைகளுக்குரிய பின்புலம் அமைந்தது. தேவாலயங்களில் பாடப்படுவதற்கான இசைப்பாடல்கள் மேலைமெட்டுகளில் வெள்ளையராலேயே உருவாக்கப்பட்டன. அவை வழக்கமான ‘கோயர்’ இசையாகவே இருந்தன- இன்றும் அவ்வாறே நீடிக்கின்றன. சீகன்பால்கு போன்றவர்கள் எழுதியவை இத்தகையவையே. இவற்றுக்கும் கீர்த்தனைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஞானசந்திர ஜான்சன் கருத்தில்கொள்ளவில்லை என்று படுகிறது.

கர்நாடக இசையின் ராகங்களை ஒட்டி முறையான கீர்த்தனைகளை வீரமாமுனிவரே தொடங்கிவைக்கிறார். பின்னர் வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை போன்றவர்கள் அதை ஓரு பண்பாட்டு இயக்கமாக ஆக்கினார்கள். தமிழில் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவக் கர்நாடக இசைப்பாடல்கள் உருவாகியிருக்கின்றன. குறுகிய காலம் அவை செல்வாக்குடனும் திகழ்ந்திருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் அடித்தளமக்களுக்குரிய மதமாக மாறுந்தோறும் கர்நாடக கீர்த்தனைகளுக்கு கிறிஸ்தவத்தில் உள்ள இடம் இல்லாமலாகியது.

பின்னர் உருவான கிறிஸ்தவப் பாடல்களில் கர்நாடக இசைமெட்டுக்கள் கொண்டவை குறைவே. பெரும்பாலானவை மேலையிசை மெட்டுக்களுக்காக எழுதப்பட்டவை. ‘தந்தானை துதிப்போமே’ போன்றவை உதாரணம். நெடுங்காலம் அவை ‘பள்ளிபாட்டு’ என்று சொல்லப்படும் தனியடையாளத்துடன் நீடித்தன. தூய மேலையிசை மெட்டுக்கு தமிழ்ச்சொற்கள் உடைக்கப்பட்டு உட்செலுத்தப்பட்டிருக்கும். அவற்றில் கவிதைத்தன்மை மிகக்குறைவாகவே இருக்கும். கிறிஸ்தவ மதத்தின் வழக்கமான பக்திக்கருத்துக்கள் எளிய சொற்றொடர்களாக மெட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும். எபிரேயப் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும்

அந்த அன்னியத்தன்மை கீர்த்தனைகளில் இருப்பதில்லை. தமிழ்மொழி கர்நாடக இசையின் ராகங்களுக்குள் எளிதில் அமைகிறது, ஏனென்றால் அந்த ராகங்கள் பழந்தமிழ் பண்ணிசையில் இருந்து வந்தவை. வேதநாயகம் சாஸ்திரியாரின் இந்தப்பாடல்களைப் பார்த்தால் அவை இந்து பக்திப்பாடல்களின் அதே வடிவில், அதே புகழ்மொழிகள் வாழ்த்துரைகள் வர்ணனைகளுடன் அமைந்துள்ளன என்பதைக் காணலாம். தெய்வத்தின் பெயரும் அடையாளமும் மட்டுமே மாறியிருக்கிறது –இயல்புகள் எல்லாம் அப்படியே எந்த இந்து தெய்வத்திற்கும் உரியவை.

‘ஏதமேதும் இல்லாய் சரணம், இறையே பொறையே நிறையே சரணம்’ போன்றவரிகளில் தெய்வ விவரணை கூட இல்லை. சரணம் என்றால் அடிபணிதல்.அதற்கும் கிறிஸ்தவத்திற்கும் இறையியல்ரீதியான தொடர்பும் இல்லை. இந்த வரிகள் அன்றைய கிறிஸ்தவ உயர்சாதியினருக்கு உவப்பானவையாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவ கீர்த்தனைகளில் பெரும்பாலானவை இந்து –சைவ பக்திமரபுக்குள் பெரும்பாலும் பொருந்துபவையாகவே உள்ளன. காரணம் அவை மதம்மாறிய சைவ உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டவை.

இப்பின்னணியிலேயே புதிதாக மதம் மாறிவந்த தாழ்ந்த சாதியினருடன் சேர்த்து கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதை வேதநாயகம் சாஸ்திரியார் கொதிப்புடன் பார்த்ததை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சாதி மேன்மை அழிந்ததை வேதநாயகம் சாஸ்திரியார் மிகவும் துயருடன் பதிவுசெய்கிறார். நெல்லையில் தேவாலயங்களின் உள்ளே வழிபடுவோரை சாதிரீதியாக பிரிக்கும் சுவர்கள் அமைந்திருந்த காலம் அது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆ.சிவசுப்ரமணியம் அவர்களின் கிறிஸ்தவமும் சாதியும் என்னும் நூல் விரிவாக இதைப் பேசுகிறது.

கிறிஸ்தவ பாடல்கள் இன்றும் மேலையிசை மெட்டுடனேயே பெரும்பாலும் ஒலிக்கின்றன என்றாலும் அவற்றில் நாட்டாரிசைக்கூறுகள் பெருவாரியாக உள்ளே வந்தது கத்தோலிக்ககளும் தென்னிந்திய திருச்சபையும் அல்லாத உதிரிச் சபைகள் உருவானபோதுதான். முன்னரே நாட்டார்ப்பண்களில் அமைந்த பல பாடல்கள் இருந்தன. ஆனால் இந்த சிறிய சபைகளும் ஒலிப்பதிவுக்கான எளிமையான வழிமுறைகளும் உருவானபோது நேரடியாகவே நாட்டாரிசை கிறிஸ்தவப் பாடல்களில் இடம்பெறலாயிற்று.எனக்கு ஃபாதர் பெர்க்மான்ஸ் ஒரு நாட்டார்ப்பாடகர் என்றே செவிகளுக்குக் கேட்கிறார்

கிறிஸ்தவ இசைப்பாடல்களில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை மூவரையும் முக்கியமாகச் சொல்லலாம் என்று அவர்களின் சில பாடல்களில் இருந்து தோன்றுகிறது.

ஓர் உருவகமாக கிறிஸ்தவத்தில் உள்ள மூன்று பண்பாட்டுக்கூறுகளை இந்த மூன்று இசைமரபுகளும் குறிப்பதாகக் கொள்ளலாம். கிறிஸ்தவத்தில் உள்ள மேலைப்பண்பாட்டு அம்சம், அதன் தொடக்கத்தில் உள்ளே நுழைந்த உயர்சாதி அம்சம், பின்னர் உருவான அடித்தளச்சாதி அம்சம்.

ஜெ

***

கிறிஸ்தவமும் சாதியும் ஆ சிவசுப்ரமணியம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

செயல்யோகத்தின் சுவடுகள்

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

முந்தைய கட்டுரையானைப்படுகொலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82