மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

 

சிங்களச் சிறுகதை-  தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

 

“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.”

 

“நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.”

 

“பைத்தியமா அருண்? உனக்கு கல் மனசு.”

 

“அப்போ உனக்கு அப்படிச் சொன்ன அந்த மஞ்சுவுக்கு இருக்குறது இளகிய மனசோ? ஐயோ பேசாமப் போயிடு நிலூகா. நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு ஒண்ணா இருக்கீங்க.”

 

“உனக்கு எப்படிப்பட்ட ஆளைப் பிடிக்கும்?”

 

“எனக்கு எப்படிப்பட்ட ஆளையும் பிடிக்கும். உன்னோட அப்பாவுக்கு வழுக்கை தானே?”

 

“ம்ம்.”

 

“உனக்கு அந்த வழுக்கை மேலயும் பாசம் இருக்குதானே?”

 

“ஓஹ்.”

 

“மஞ்சுவுக்கு உன் மேல பாசம் இருக்குன்னா உனக்கு வழுக்கை விழுந்தாக் கூட அதை நேசிக்குற அளவுக்கு பாசம் இருக்கணும். நாங்க நேசிக்குற ஆட்களுக்கு இயல்பா என்ன அமைஞ்சிருக்கோ அதைத்தான் நேசிக்கணும்.”

 

“என்னதான் நீ இப்படிச் சொன்னாலும் கூட, நீயும் கூட இப்படியில்ல அருண்.”

 

“உன்னோட சுருண்ட கூந்தல் எனக்குப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க விரும்புறியா நீ?”

 

“தெரியல.”

 

“எனக்குப் பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன்.”

 

“நீ எல்லார்கிட்டயும் அப்படித்தான் சொல்றே.”

 

“ஓஹ். அது பொய்யில்ல. நிஜம்தான்.”

 

“நீ அஞ்சலியைக் காதலிச்ச காலத்துல பூர்ணிகாவையும் உனக்குப் பிடிச்சிருந்தது.”

 

“ஆமா. யார் இல்லன்னு சொன்னது. அது தப்புன்னு அடுத்தவங்கதான் சொன்னாங்களே தவிர நான் சொல்லலையே.”

 

“என்னாலன்னா அப்படி முடியாது.”

 

“பொய். அப்படீன்னா எதுக்கு மஞ்சுவுக்குத் தெரியாம திருட்டுத்தனமா என்னைப் பார்த்துட்டுப் போக இப்படி வீட்டுக்கு வர்றே?”

 

“தெரியல. கடைசியா எப்ப நீ முற்றத்தைப் பெருக்கினே?”

 

“எனக்கு ஞாபகமில்ல.”

 

“ஒரு மாசமாப் பெருக்கல போலக் கிடக்கு. கடைசியா நான் வந்தப்ப நான் பெருக்கினதோ தெரியாது. கை விடப்பட்ட வீடு போல இருக்கு உன் வீடு.”

 

“போன கிழமைதான் வீட்டைப் பெருக்கினேன்.”

 

“ச்சீ… சிரிச்சுட்டே சொல்றதைப் பாரு. இன்னிக்குக் காலையிலருந்து என்ன பண்ணின?”

 

“புத்தகம் வாசிச்சேன்.”

 

“காலைல சாப்பிட்டியா?”

 

“நேத்து அந்தி நேரம் சாப்பிட்டேன்.”

 

“நாங்க பகலைக்கு சாப்பிட ஏதாவது சமைப்போமா?”

 

“மணித்தியாலக் கணக்கா பாடுபட்டு சமைச்சு சில நிமிடங்கள்ல சாப்பிட்டு முடிக்குற வேலை எனக்குப் பிடிக்காது.”

 

“அப்படீன்னா சில நிமிடங்கள்ல சமைச்சு மணித்தியாலக் கணக்கா சாப்பிட்டிட்டிருப்போம்.”

 

“வேடிக்கையாச் சொல்லல. கடையால ஏதாவது கொண்டு வந்து உனக்குப் பசிக்கிறப்ப சாப்பிடலாம். மூணு வேளையும் நேரத்துக்கு சாப்பிட எனக்குத் தேவையில்ல. பசி வந்தா மட்டும் சாப்பிட்டாப் போதும்தானே. அதுக்கொரு நேரம் இல்லையே. பசி வந்தாலும் கூட சாப்பிடாம இருக்கவும் நேரும். பசியேயில்லாம சாப்பிடவும் நேரும். உனக்கு சாப்பிடணும்னா சொல்லு. முழு நாளும் இங்க இருந்துட்டுப் போகத்தான் வந்திருக்கியா?”

 

“அப்படியொண்ணும் திட்டம் போட்டுட்டு வரல அருண். நீ புத்தகம் வாசிச்சிட்டிரு. நான் இந்த முற்றத்தைப் பெருக்கிட்டு வரேன்.”

 

முற்றம் முழுவதிலும் பல நாட்களாக விழுந்து கிடந்த மா மர இலைகள், வெரலிக்காய் மர இலைகள், அழுகிய மாம்பிஞ்சுகள் பரந்து கிடந்தன. அவற்றோடு காய்ந்து விழுந்த தென்னோலைகள் இரண்டு. ஆங்காங்கே வளர்ந்திருந்த புற்பூண்டுகள்.

 

அருண் உள்ளே சென்று புத்தகமொன்றை எடுத்துக் கொண்டு வந்து விறாந்தையிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டான். நிலூகா விளக்குமாறைத் தேடியெடுத்துக் கொண்டு வந்தாள்.

 

” அருண், சரோஜா உன்னையே நினைச்சிட்டிருக்கா.”

 

“அதை நான் உணரவேயில்ல.”

 

“ஆனா சரோவுக்குப் பயமாயிருக்காம் அவள் தமிழச்சின்றதால.”

 

“அது ஒரு பிரச்சினையா?”

 

“உனக்குப் பிரச்சினையாகும்னு நினைக்கிறா போல.”

 

“தமிழ் அடையாளங்கள்தான் பிரச்சினையாகும்னு நினைச்சான்னா அதை அழிச்சிட்டு வரச் சொல்லு.”

 

“அதை அழிச்சுக்க முடியாதே.”

 

“ஏன் முடியாது? பொட்டையும், தலையில இருக்குற பூவையும், காது ஜிமிக்கியையும், மாலையையும், வளையலையும் கழற்றி வச்சுட்டு பெயரையும் மாத்திக்கிட்டு வரச் சொல்லு.”

 

“அவைதான் தமிழ் அடையாளங்களா?”

 

“இல்லன்னா வேற என்ன?  ரெண்டு பேரும் ஹோமோ சேப்பியன், ஹோமோ சேப்பியன்தானே.”

 

“அவளுக்கு சிங்களம் தெரியாது.”

 

“எனக்கும் கூடத்தான் தமிழ் தெரியாது. காதலிக்க மொழி அவசியமா?”

 

“ஏன் அவசியமில்ல?”

 

“மொழி ரொம்பத் தெரிஞ்சதாலதானா நீயும், மஞ்சுவும் அவ்வளவு சத்தம் போட்டு சண்டை பிடிச்சுக்குறீங்க? நானும், அவளும் சேர்ந்து ஒரு பொது மொழியை உருவாக்கிக்குவோம்.”

 

“இந்த வீட்டையும், முற்றத்தையும் பார்த்தா சரோஜாவுக்கு உன்னை வேணாம்னு போயிடும்.”

 

“ஏன் நான் மாத்திரம்தான் வேணும்னு அவள் சொல்லலையா?”

 

“இங்க வசிக்க அவளுக்கு அருவெறுப்பா இருக்கும்.”

 

“அப்புறம் நீ எதுக்கு வர்றே?”

 

“அருணோட மனசு நொந்திடுச்சா? ஐயோ… நான் அவ்வளவு தூரம் யோசிச்சு கதைக்கல.”

 

“நிஜமா நீ எதுக்கு வர்றே நிலூகா?”

 

“தெரியல. ஆபிஸுல கதைக்கக் கூட நேரமில்லையே.”

 

“ஆபிஸுல இருக்குற எல்லா ஆம்பளைகள் வீட்டுக்கும் நீ போறதில்லையே நிலூகா.”

 

“நாங்க நண்பர்கள் என்றதால இருக்கும்.”

 

“மத்தவங்களும் நண்பர்கள்தானே. நாங்க நண்பர்கள் மட்டும்தானா?”

 

“இல்லன்னு நினைக்கிறேன்.”

 

“சகோதர உணர்வு?”

 

“அதுவும் இருக்கு.”

 

“இல்லேன்னா நான் உன்னோட பாய் ஃப்ரண்டா?”

 

“பைத்தியமா?”

 

“இல்லேன்னா நான் உன்னோட புருஷனா?”

 

“புருஷன்தான் அங்க வீட்டுல இருக்கானே.”

 

“அப்போ நான் கள்ளப் புருஷனா?”

 

“அசிங்கமாப் பேசாதே அருண்.”

 

“அதாவது எங்களுக்கிடையிலான உறவுக்கு பெயரொண்ணு இல்ல. இப்படி, ஒரு மொழியால பெயர் சூட்ட முடியாத உறவுகள் நிறைய இருக்கு நிலூகா. மனுஷங்க, மனுஷங்களுக்கிடையிலான உறவுகளை ரொம்ப லேசா கோடு பிரிச்சு சட்டம் போட்டு வேறாக்கிப் பெயர் சூட்டினாலும் கூட, அதை அப்படிச் செய்றது சரிப்பட்டு வராது.”

 

“மாங்காயெல்லாம் வீணாகிப் போயிருக்கு அருண். பறிச்சு வித்திருக்கலாம். எங்களுக்காவது தந்திருந்தா மாங்காய்க் கறி செய்து சாப்பிட்டிருப்போம். இல்லன்னா ஊறுகாய் போட்டிருப்பேன்.”

 

“இதையெல்லாம் குரங்குகள், அணில்கள் வந்து சாப்பிட்டுப் போகும். எனக்கு அது போதும். உனக்கும் தேவைன்னா பறிச்சுக் கொண்டு போ. பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் வந்து பறிச்சுட்டுப் போனாங்க. இப்பல்லாம் நான் வேலை விட்டு வீட்டுக்கு வர்றப்போ சாப்பாடு வாங்கிட்டு வர்றதில்ல.”

 

“சோத்துக்குப் பதிலா, பழுத்து விழுந்த மாம்பழம் சாப்பிட்டேன்னா ஏதாவது வியாதி வந்தா அதைக் கண்டுபிடிக்கக் கூட முடியாமப் போயிடும். இந்த சுவர்ல இருக்குற பாசியையெல்லாம் வழிச்சுத் துப்புரவாக்கிட்டு நாம இதுக்கு பெயின்ட் பூசுவோமா அருண்?”

 

“எதுக்கு? பெயின்ட் பூசினாலும் இல்லேன்னாலும் இந்த வீட்டுக்குள்ள இருக்குறதைத்தானே செய்யப் போறேன்.”

 

“உனக்கு வேணாம்னா எனக்கென்ன?! நானா இந்த வீட்டுல இருக்கேன்?!”

 

“மஞ்சு இன்னிக்கு வீட்டுலயா?”

 

“நான் வர்றப்போ ஞாயிறு பேப்பரொண்ணைப் பிரிச்சு வச்சுக்கிட்டு வீட்டுல இருந்தான். லீவு நாள்லயும் நான்தான் சமையலறையில நாள் முழுதும் பாடுபட வேண்டியிருக்கு. அவர் விறாந்தையிலிருப்பார். இப்ப கம்ப்யூட்டருக்கு முன்னாடி உட்காந்துட்டிருப்பார். ஒண்ணு ஃபேஸ்புக். இல்லன்னா ஸ்கைப்.”

 

“அஷேன்?”

 

“மகன் ட்யூஷன் கிளாஸுக்குப் போயிருப்பான்.”

 

“அப்போ உனக்கு இன்னிக்கு வீட்டுல வேலையொண்ணும் இல்லையா?”

 

“ஏன் நான் இங்க வர வேணாமா? நான் வீட்டு வேலைதான் செஞ்சுட்டிருக்கணும்னு நீயும் நினைக்கிறியா? மஞ்சுவும் அப்படித்தான். பாத்திரம் கழுவி சமைக்குறது, சமைச்சு வாய்க்கு அருகிலயே கொண்டு போய் ஊட்டி விடுறது, வீடு, வாசல் பெருக்குறது, மூணு பேரோடயும் அழுக்குத் துணி மூட்டையைத் துவைக்குறது, மகனோட வேலைகளைப் பார்க்குறது. இதையெல்லாம் நான்தான் செய்யணும்னு மஞ்சுவும் நினைக்குறான். இதையெல்லாம் செய்றதோட நான் வேலைக்கும் போகணும். ஆனா மஞ்சு செய்றதெல்லாம் வேலைக்குப் போயிட்டு வாறது மட்டும்தான். நீயாவது நான் செய்ற வேலைகளைத் தீர்மானிக்க மாட்டேனுதான் நான் நினைச்சேன். இன்னிக்கு சமைச்சு வச்சுட்டு, துணி தோய்ச்சுக் காயப் போட்டுட்டு வந்தேன். மற்ற வேலைகள் எப்படியோ போகட்டும்.”

 

“அப்போ காலையில எத்தனை மணியிலருந்து முழிச்சிருக்கே?”

 

“உனக்கு அதுல வேலையில்ல.”

 

“வேலையில்லாம என்ன?! எனக்காகத்தானே வாறாய்.”

 

“ஐயோ இல்ல. நான் வாறது எனக்காக.”

 

“எத்தனை மணிக்குப் போகணும்?”

 

“இருட்டினதுக்கப்புறம்தான் மகன் வீட்டுக்கு வருவான் அருண்.”

 

“அப்போ நீ இந்த முற்றத்தைப் பெருக்குறத நிறுத்திட்டு, நான் இந்தப் புத்தகத்தை வாசிச்சு முடிக்குற வரைக்கும் உள்ளே போய் நல்லாத் தூங்கியெழும்பு நிலூகா. கிழமை நாட்கள்லயும் உனக்கு ஒழுங்காத் தூங்கக் கிடைக்காது, இல்லையா? லீவு நாள்லயும் எனக்காகக் கஷ்டப்படுறே.”

 

“நான் ஒரு தடவை சொன்னேன்தானே உனக்காக இல்லன்னு.”

 

“ரூமில தண்ணி நிறைஞ்சிருக்கும். நேத்து ராத்திரி மழை பெய்ஞ்சதுதானே. கட்டிலும் கொஞ்சம் ஈரமாகியிருக்கும்.”

 

“நீ கூரையில வெடிச்சிருக்குற ஓடுகளை மாத்தி புதுசா ஒண்ணும் போடலையா?”

 

“வெளியே மழை பெய்யுறதை வீட்டுக்குள்ளயும் உணர்றது எவ்வளவு இதமாயிருக்கும் தெரியுமா? ஆட்கள் வீட்டுக்கு மத்தியிலயும் நிலாமுற்றம் வச்சிருக்காங்க, கண்டிருக்கியா? படுத்துட்டிருக்கும்போது உடம்புல தூறல் விழுறது எனக்குப் பிடிச்சிருக்கு.”

 

“நான் தூங்க வரல. உன்னோட சேர்ந்து விழிச்சிட்டிருக்குறதுதான் எனக்கு வேணும். மஞ்சுவோ, அஷேனோ என்னோட கதைச்சிட்டிருக்க வர்றதில்லையே.”

 

“அதுக்குப் பதிலா இங்க வந்து என்னை வதைக்கிறியா நீ?”

 

“அப்போ அதுக்குப் பதிலா என்ன செய்றது?”

 

“அஞ்சு மணித்தியாலம் மட்டும் சந்தோஷமா வேலை பார்த்துட்டு, நல்ல சம்பளம் வாங்கிட்டு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்துக்கிட்டு, மிச்ச நேரம் முழுதும் நீயும், மஞ்சுவும், அஷேனும் சேர்ந்து அம்மாவோடயும், அப்பாவோடயும் ஓய்வா இருக்குறது. நீங்க பென்னம்பெருசா மாளிகை மாதிரி வீடு கட்டிட்டுக் குடி போனாப் பிறகு உன்னோட அம்மாவும், அப்பாவும் வயசு போன காலத்துல தன்னந் தனியா அந்தப் பழைய வீட்டுல இருக்காங்க.”

 

“அவங்களுக்கு பழைய வீட்ட விட்டுட்டு வர விருப்பமில்ல. எனக்கும் விருப்பமில்லதான். எங்களோட ஞாபகங்களெல்லாம் அந்த வீட்டுலதான் இருக்கு. மஞ்சுவுக்கு அந்த வீட்டோட தோற்றம் பிடிக்கல. புதிய வீட்டுக்கு அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வர அவர் விரும்பல. உன்கூட இருந்துட்டுப் போக எப்படி நான் வந்துட்டுப் போறேனோ, அது மாதிரியே நான் அந்த வீட்டுக்கும் போய் அவங்க கூடவும் இருந்துட்டு வரப் போறேன்தான். ஆனா எனக்கு அங்க அவ்வளவு கொஞ்ச நேரம் போதாமலிருக்கும். அருண், உனக்குக் கூட நான் தொந்தரவுன்னா, என் கூட ஒரு சொட்டு நேரம் கூட உன்னால நிம்மதியா இருக்க முடியலன்னா நான் போயிடுறேன்.”

 

“நீ வந்த நேரம் தொட்டு விளக்குமாறைத் தூக்கிப் பிடிச்சிட்டிருந்தா நிம்மதி எங்கிருக்கும்? பக்கத்துல உட்கார்ந்து அமைதியா கதைச்சிட்டிருக்கத்தான் வந்தீன்னா இப்படி வந்து உட்காரு.”

 

“தனியா இருக்காம யாரையாவது கல்யாணம் பண்ணிக்க உனக்குத் தோணலையா அருண்?”

 

“தனிமைக்குத் துணையா ஒருத்தரைத் தேடிக்குறதுதான் கல்யாணம் கட்டுறதா? கல்யாணம் கட்டாமலேயே ஒருத்தரோடு சேர்ந்திருக்க முடியாதா? நீ கல்யாணம் கட்டிட்டாய்தானே?! உன்னோட தனிமைக்குத் துணையா உன் புருஷன் இருக்கானா? மனுஷங்களும், சட்டங்களும் நம்ம மேல சுமத்தியிருக்குற உறவுகள்ல நாம தேடுற ஜீவிதம் இருக்குமா நிலூகா? பந்தங்கள் என்பது மனசுகள்லதான் இருக்கணுமே தவிர, கடதாசித் தாள்ல இல்ல.”

 

“எனக்கு இதையெல்லாம் கை விட்டுடணும்போல இருக்கு. எனக்கு சலிப்பும், களைப்பும் தோணுது. எனக்கு உன்னோட சேர்ந்து இளைப்பாறணும். படிச்சேன். வேலை பார்த்தேன். காதலிச்சேன். கல்யாணம் கட்டினேன். குழந்தை பெத்தேன். மஞ்சுவோட சேர்ந்து கடன் பட்டு வீடு கட்டினேன். வீடு நிறைய சாமான்களால நிறைச்சேன். வாகனமொன்று வாங்கினேன். வீட்டைச் சுற்றி பூந்தோட்டமொண்ணு அமைச்சிக்கிட்டேன். ஆனாலும் என்னால சந்தோஷத்தை உணர முடியல அருண். இவை ஒண்ணுமேயில்லாத நீ சந்தோஷமா இருக்கே. மாச சம்பளத்துல ஒண்ணு, ரெண்டு புத்தகங்களை வாங்கி வச்சுக்கிட்டு மாசம் முழுக்க சந்தோஷமா வாசிச்சுட்டிருக்கே. இப்படி திண்ணைப் படிக்கட்டுல உட்கார்ந்துட்டு எதையாவது மென்று கொண்டு குரங்குகளைப் பார்த்துட்டிருக்க உனக்கு நேரமிருக்கு.”

 

“ஆனா இது போதுமா? நான் ஆசைப்படுற உறவு எங்க? அதுக்கு நேரத்தை செலவழிச்சா இதுக்கு செலவழிக்க நேரமெங்க? உன் அளவுக்கு சலிச்சுப் போகலைன்னாலும் வேலைக்குப் போறதும் வீட்டுக்கு வர்றதுமாத்தான் இருக்கு என்னோட ஜீவிதமும்.”

 

“நான் கடைக்குப் போய் புத்தகமொண்ணு வாங்கிய காலம் கூட எனக்கு ஞாபகமில்ல. ஆனா துணிமணி வாங்க கடைக்குப் போக எனக்கு நேரமுமிருக்கு, காசும் இருக்கு. இதையெல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியல அருண்.”

 

“இதெல்லாம் உன்னோட தப்பு இல்ல நிலூகா. நீ எங்க போறேன்னு மஞ்சு கேட்குறதில்லையா?”

 

“முன்னாடின்னா கேட்டுப் பார்த்தார். அப்பல்லாம் அப்படிக் கேட்டுக் கேட்டு மூக்கை நுழைக்குறது எனக்குத் தொந்தரவா இருந்துச்சு. ஆனா இப்ப அவர் எதையும் தேடிப் பார்க்குறதில்லன்றது கூட கவலையாத்தான் இருக்கு அருண்.”

 

“இப்ப உன் மேல நம்பிக்கை வந்திருக்கும்.”

 

“இல்ல. இப்ப என்னைக் கண்டுக்குறதே இல்ல. நான் அவருக்கு ஒரு பொருட்டேயில்ல.”

 

“இதல்லாம வேற ஏதாவது காரணமிருக்கும்.”

 

“அருண் நீ தனியா இருக்காம அம்மாவையாவது கூட்டிட்டு வந்து கூட வச்சுக்கோயேன்.”

 

“எதுக்கு? நான் வேலைக்குப் போனா என்னோட நோயாளி அம்மா தன்னந்தனியா இந்த வீட்டுல இருக்க வேண்டியிருக்கும் அப்போ. அம்மா, தங்கச்சியோட வீட்டுல நல்லா இருக்கா.”

 

“நல்லா? உனக்கெப்படித் தெரியும்? நீ சமீபத்துல அங்க போனியா? இல்லையே. பிள்ளை பெத்து வளர்த்து, பிள்ளையோட பிள்ளையையும் வளர்த்து வளர்த்து, எல்லாருக்கும் சமைச்சுப் போட்டுப் போட்டே உருக்குலைஞ்சு போறாங்க அம்மாமார்.”

 

“உன்னோட நிலைமையும் எப்பவாவது அப்படித்தான் ஆகும். என்னோட அம்மாவை விட ஒரேயொரு வித்தியாசம், உனக்கு இதெல்லாத்தையும், தொழிலையும் பார்த்துக்கிட்டே செய்ய வேண்டியிருக்கும்.”

 

“ஒரு லீவு நாள்ல அவங்களையெல்லாம் பார்த்துட்டு வரப் போவோமா?”

 

“நீ யார்னு கேட்பாங்க.”

 

“இந்த உறவுக்கொரு பெயரில்லன்னு சொல்ல வேண்டியதுதானே.”

 

“அப்படிச் சொன்னா அவங்களே இதுக்கொரு பெயர் வச்சிடுவாங்க.”

 

“இதை ஒழுக்கம் கெட்ட தொடர்புன்னு சொல்ல யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இது ஒழுக்கம் கெட்ட தொடர்புன்னா, ஒழுக்கமான தொடர்புன்றது என்னது? கல்யாணப் பதிவு காகிதமா? அதுதான் என்னோட ஒழுக்கம் கெட்ட தொடர்பு அருண். இதுதான் என்னோட ஒழுக்கமான தொடர்பு.”

 

“இதை என்கிட்ட அல்லாம வேற யார்கிட்டயும் சொல்ல உனக்கு தைரியம் கிடையாது நிலூகா. நான் சரோஜாவுக்கு சம்மதம் தெரிவிச்சா உனக்குக் கவலை தோணுமா?”

 

“ஆமா.”

 

“ஏனது?”

 

“பிறகு எனக்கு இப்படி இங்க வந்து உன்னோட நிம்மதியா இருந்துட்டுப் போக முடியாமப் போகுமே.”

 

“எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும். நான் தேடுறது போன்ற ஆட்கள் யாருமேயில்ல. எனக்குப் பிடிச்ச மாதிரியான ஆள் கிடைக்கலன்னா, கிடைச்சவளை ஏத்துக்க என்னால முடியாது.”

 

“எங்கள்ல எவருக்குமே பிடிச்ச மாதிரியான ஆட்கள் யாருமேயில்லதான். ஆனா உனக்கு யாராவது வேணும்.”

 

“ஏன் இப்ப இல்லையா?”

 

“ஏன் இருக்காங்களா?”

 

“நீயிருக்கியே.”

 

“உனக்கு நக்கலா இருக்கு.”

 

“நக்கலிலில்ல.”

 

“நான் வர்றப்ப பக்கத்து வீட்டு ஆன்ட்டி முற்றத்தைத் துப்புரவாக்கிட்டு இருந்தா. அருண் கவலையோடு, வாழ்க்கை வெறுத்த மாதிரி தனியா இருக்குறதால நான் இப்படி எப்போவாவது வந்துட்டுப் போறதும் நல்லதுதான்னு அவ சொல்றா. என்னோட முகத்துக்கு நேரா அப்படிச் சொன்னாலும் கூட மத்தவங்கக்கிட்ட என்ன சொல்றாவோ தெரியாது.”

 

“நான் அப்படியிருக்கேன்னு அவ ஏன் நினைக்கணும்?”

 

“முற்றத்தைக் கூட்டிப் பெருக்காததால இருக்கும்.”

 

“இது ரெண்டுக்குமிடையே என்ன சம்பந்தமிருக்கு?”

 

“சம்பந்தத்தை உருவாக்கிக்க மனுஷங்களால முடியும் அருண்.”

 

“நீ கூட என்னைக் குறிச்சு அப்படி நினைச்சுத்தான் இங்க வந்து போறியா நிலூகா?”

 

“இல்ல. என்னைக் குறிச்சு அப்படி நினைக்கிறதாலதான் வந்து போறேன். ஆனா என்னோட வீட்டு முற்றத்தைப் பார்த்து எவரும் நான் இப்படித்தான்னு நினைக்க மாட்டாங்க. அருண், நீ பாழாகிப் போன முற்றத்துல நின்று கொண்டு மரத்துல இருந்து மாங்காய் பறிச்சு திங்குற குரங்குகளப் பார்த்து விசிலடிச்சு சந்தோஷப்படுறாய். மாங்காயெல்லாம் அநியாயமாப் போயிட்டிருக்கேன்னு நீ பெருமூச்சு விட்டுக் கவலைப்படல. எனக்கும் அப்படி வாழத் தோணுது அருண்.”

 

“உன்னால முடியாது நிலூகா.”

 

“ஏன் முடியாது?”

 

“நீ இங்க வந்தாக் கூட செய்றதெல்லாம் முற்றத்தைப் பெருக்குறதுவும், மாங்காய் ஊறுகாயை ஞாபகப்படுத்துறதுவும், மாங்காய் பறிச்சு விற்குறதைப் பற்றிச் சொல்றதுவும்தானே.”

 

நிலூகா விளக்குமாறை ஒரு புறம் வைத்து விட்டு வந்து அருணின் அருகிலேயே படிக்கட்டுத் தரையில் அமர்ந்து கொண்டாள்.

 

————————————————————————————————————-

 

 

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

 

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

 

இலங்கையில் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் எழுத்தாளரும், கவிஞருமான இவர் பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், நான்கு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

முந்தைய கட்டுரைமாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்
அடுத்த கட்டுரைதவளையும் இளவரசனும் [சிறுகதை]