கோடையின் சுவை
‘கோடைச் சுவை’ அருமையான ஒரு அனுபவக் குறிப்பு. நான் இப்போதிருக்கும் வீட்டின் முற்றத்திலும் பெருநிழல் தரும் ஒரு மாமரமிருக்கிறது. யாழ்ப்பாணத்துக் கருத்தக் கொழும்பான் இவ்வாறு நாட்டின் மத்தியில் முளைத்திருப்பதாலோ என்னமோ காலமில்லாக் காலமெல்லாம் பூத்துக் கிடக்கிறது. நிலமெல்லாம் முசுறுக் கூட்டம் போல பூக்கள் உதிர்ந்திருக்கின்றன. அணில்களும், கொண்டைக் குருவிகளும் மரத்தை ஆக்கிரமித்துக் கொள்கையில் மா இலைகளில் ஒட்டியிருக்கும் ஏதேதோ சிறு பூச்சிகள் சடசடவென ஓசையெழுப்பிப் பறக்கின்றன. பேய் மரமேறும் அந்தி மஞ்சள் வெயில் நேரத்தில் மாமர நிழலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்துதான் புத்தகங்களை வாசிக்கிறேன்.
இலங்கையில் சிங்கள மக்களிடையே ஒரு சொல்லாடல் வழமையிலிருக்கிறது. பால்ய காலத்திலிருந்து எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரியும் இரண்டு தோழர்களை ‘மாம்பழத் தோழர்கள்’ என்றழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது மாம்பருவக் காலம் கடந்தும், மாம்பூக்கள் எப்போதும் மரத்திலிருப்பதாலாகவும் இருக்கலாம். நேற்று ஒரு சிங்களச் சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்து முடித்தேன். உங்கள் அனுபவக் குறிப்பு, அதன் உள்ளடக்க அர்த்தங்களை யோசிக்க வைத்தது. சிறுகதையின் தலைப்பே ‘மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மற்றுமொரு நாள் தொடங்கியது’ என்கிறது. மாங்காய்ப் பருவ காலத்தில் முற்றத்தைப் பெருக்காத, பசி வரும்போதெல்லாம், சமைக்காமல் மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் மாம்பழங்களைச் சாப்பிட்டவாறு, புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதியின் ஒரு நாள் அனுபவமே இச் சிறுகதை. எழுதியிருப்பவர் பெண் எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி.
எனது ‘அயல் பெண்களின் கதைகள்’ தொகுப்பில் எழுதியுள்ள பெண் எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்களச் சிறுகதைகளை ஒரு முழுத் தொகுப்பாக்க வேண்டி தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலுள்ள இச் சிறுகதையை உங்களதும், உங்கள் வாசகர்களதும் பார்வைக்கு இணைத்திருக்கிறேன். உரையாடல் வழியே நீளும் இச் சிறுகதையில் காணப்படும் உறவுகள் குறித்த வாசகர்களின் பார்வையை அறிய விரும்புகிறேன். தனித்திருக்கும் இலக்கியவாதியும், வீட்டுக்கு வந்து போகும் பெண்ணும்தான் பிரதான கதைமாந்தர்கள். இது முறையற்ற உறவென்றால், இந்த உறவுக்குப் பெயரென்ன என அவர்களே கேட்கும் கதையிது. வாசகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களெனத் தெரியவில்லை. மாமரங்கள் எப்போதெல்லாம் பூக்குமென குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்ன?!
ரிஷான் ஷெரீஃப்