வைரஸ்- கடிதம்-1

வைரஸ் அரசியல்

 

அன்புள்ள திரு.ஜெயமோகன்..!

 

மிகுந்த அயர்ச்சியுடன் இதை எழுதுகிறேன்..! நீங்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் , குறிப்பாக அரசுகளுக்கும், வாசிக்கும் பாராட்டு பத்திரம் வியப்பாக இல்லை.. தொடர்ச்சியாக இந்த அரசை விமர்சிப்பவன் என்பதால் நானும் நீங்கள் வரையறுக்கும்  பரபரப்பிற்காக அலையும் ஆட்கள் பட்டியலில் வருவேன் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது..

 

நான் தொடர்ச்சியாக வழக்கம்போல தமிழகத்தின் பொதுசுகாதாரக்கட்டமைப்பு மீது பெரும் நம்பிக்கையையும், மரியாதையையும், பதிவு செய்கிறேன்.. “நீட்” நுழைவுத்தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக தமிழக பொதுசுகாதாரத்துறை சார்ந்து சற்று விரிவாகவே படித்தும், நேரடியாக பார்த்தும், தமிழகத்தின் மருத்துவத்துறை முன்னோடிகளுடன் உரையாடியும், நான் அடைந்த புரிதலால் இந்த நிலைப்பாட்டை  எப்போதும்  வெளிப்படையாகவே முன்வைத்தும் வருகிறேன்.. தமிழகத்தின் மருத்துவக்கல்வி கட்டமைப்பு ஒப்பீட்டளவில் மேம்பட்ட சமூகநீதி இயல்பு கொண்டது என்பதையும், “நீட்”போன்ற ஒரு நுழைவுத்தேர்வு தமிழகத்தின் இந்த இயல்பான முன்னிலையை கீழிறக்கும் என்றும் தொடர்ச்சியாக பேசியும் வந்திருக்கிறேன்..

 

நாங்கள் முன்வைக்கும் அவநம்பிக்கை ஆளும் அ.தி.மு.க அரசின் தரம்தாழ்ந்த மூடிமறைக்கும் இயல்புகளை ஒட்டியது. கடலூர் புயல், சென்னைப்பெருவெள்ளம் ஆகியவற்றை ஒன்றுமே நடக்காதது போல் சித்தரித்து செல்வி.ஜெயலலிதா பேசியது இன்னும் பொதுவெளியில் இருக்கிறது.. பலநாள் கழித்து  தனது சொந்தத்தொகுதியான ராதாகிருஷ்ணன் நகருக்கு பார்வையிடச்சென்ற ஜெயலலிதா தனது பேச்சை வாக்காளப்பெருமக்களே.. என தேர்தல் பரப்புரை மனநிலையில் ஆரம்பித்ததும் எல்லோரும் கண்ட ஒன்றுதான்.. ஏனெனில் அவரைப்பொறுத்தவரை வெகுமக்கள் என்பவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தோடு ஐந்தாண்டுகளுக்கொருமுறை இணைய வேண்டிய வாக்களிக்கும் இயந்திரங்கள்தான்..

 

நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு பல மாதங்கள் என்ன நிலையிலிருக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. தொடர்ச்சியாக நாங்களும், தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கேட்டதற்கு பதிலைத்தவிர எல்லாமே சொல்லப்பட்டது. கடைசியில் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை தி.மு.க கூட்டணி எம்.பிக்களால்  எழுப்பப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின் இந்த சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் தரவில்லை என்பதை தமிழக அரசும் மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.. பலமாதங்கள் ஒரு சட்டப்பூர்வமான விசயத்தை கூட தனது அரசியல் நலன்களுக்காக மூடிமறைத்த அரசுகளின் லட்சணத்திற்கான ஒரு சோற்றுப்பதம் இது..

 

நீட் குறித்து நீங்கள் புகழாரம் சூட்டும்  அமைச்சர் விஜயபாஸ்கர் அவிழ்த்துவிட்ட பொய்மூட்டைகளும் பொதுவெளியில் அவரின் நம்பகத்தன்மைக்கு சான்றாக நின்று கொண்டிருக்கிறது..

 

ஆனால் இதுகுறித்தெல்லாம் தெரியாதது போலவே இருந்துகொண்டு தேர்ந்தெடுத்தாற்போல் பெயர்சொல்லி சில ஊடகங்களை விமர்சகர்களை குரூரமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கிறீர்கள்..

 

இன்று நீங்கள் விதந்தோதும் தமிழக சுகாதாரத்துறையின் மருத்துவர்கள் சில முக்கியக்கோரிக்கைளை முன்வைத்து பலகட்டமாக வலியுறுத்தி இறுதியாக பணிப்புறக்கணிப்பு நடத்தியபோது மலினமாக அவர்களை சமூகவிரோதிகளாக சித்தரித்த அரசும் அதன் ஆதரவாளர்களும்தான் இன்றைக்கு அந்த மருத்துவர்களின் நிழலில் ஒண்டிக்கொண்டு வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. போராட்டத்தில் முன்நின்ற சமூகப்பொறுப்புமிக்க மருத்துவர்கள் இஏடம்மாறுதல், காத்திருப்பு என அலைக்கழிக்கப்பட்டார்கள். இன்றைக்கு வெட்கமின்றி அவர்களுக்கு பின்னால் ஔிந்து கொள்பவர்களை விட விமர்சகர்கள் யாரும் இழிந்தவர்கள் ணணண..

 

எனது நண்பரான திரு.ப்ரகாஷ் தஞ்சையில் அரசு அறுவைசிகிச்சை நிபுணர்.. அவர் ஒரு எளிய குடும்ப  பின்னணியுயை சிறுவனுக்கு ஒரு பெருங்குடல்சார்ந்த பிரச்சனை காரணமாக மலம் வெளியேறாமல் போய் அதற்காக அறுவைசிகிச்சையும் தொடர் சிகிச்சையும் அளித்து குணமானது பற்றி எழுதிய பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு ஊடகங்களாலும் செய்தியாக்கப்பட்டது.. மிகவும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளைஞரான அவர் மருத்துவர்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கும் N95 முகக்கவசம் கூட இல்லாத நிலையில்தான் பணிபுரிவதாக சொல்கிறார்.. விஜயபாஸ்கர் சொல்லும் தயார்நிலையின் லட்சணம் இதுதான்.. இந்த லட்சணத்தை நீங்கள் கேரள சுகாதாரத்துறையோடு ஒப்பிட்டு பாராட்டுகிறீர்கள்.. அவர்கள் நிபா வைரஸ் பரவலை வெற்றிகரமாக முறிடித்த அனுபவமும் பொதுவெளியில் உள்ளநிலையில்  எப்படி இந்த ஒப்பீட்டை செய்கிறீர்கள் எனத்தெரியவில்லை..

 

நீங்கள் சொன்னதில் உண்மைக்கு நெருக்கமான ஒரே விசயம் விஜயபாஸ்கர் ஒரு வியாபாரியைப்போல் இருக்கிறார் என்பதுதான்.. ஐயமின்றி அவர் அரசியல் வியாபாரிதான்.. ஆனால் ஒரு பேரிடரை நிர்வகிக்கக்கூடிய அதுவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மனிதாபிமானியாக இல்லாமல் வியாபாரியாக இருக்கிறார் என்றெல்லாம் அகம்மகிழும் நண்பர்கள் நீங்களாகத்தான் இருக்க முடியும்..

 

நிச்சயம் சீனா போல அமெரிக்கா போல ஐரோப்பிய நாடுகளைப்போல நாம் செயல்பட இயலாத நடைமுறை இடர்பாடுகளும், சமூக இயல்புகளும் இங்கு இருக்கின்றன. அவர்களின் நவீன தொழில்நுட்ப வசதிகளை நாம் ஒரே நாளில் அடைந்துவிடவும் இயலாதததுதான்.. மேலும் அனைவர்க்குமான அடிப்படை மருத்துவத்தை எந்த நிபந்தனைகளுமின்றி ஏறத்தாழ பெருமளவு இலவசமாக வழங்கும் நமது பொது மருத்துவகட்டமைப்பின்  மனிதாபிமான நோக்கும் பிரம்மிக்கத்தக்கதுதான்..

 

ஆனால் ஆளுகின்றவர்களின் தடித்தனத்தை இந்த நேர்மறை அம்சங்களைக்கொண்டு பூசிமெழுகுவது அபாயகரமானது மட்டுமல்ல.. அறக்கேடானதும் கூட..

 

தேவையற்ற பயமும், பதற்றமும் தமிழகத்தின் சிறுதொழில்சூழலை பாதிக்கும் என்கிறீர்கள்.. அதை ஏற்கனவே நீங்கள் விதந்தோதிய பணமதிப்பு நீக்கமும், தாறுமாறான வரிவிகிதங்களும் பாடையில் ஏற்றி பலகாலம் ஆகிவிட்டது.. நீங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும் பரவும்  வதந்திகளால் அதிகம் பாதிக்கப்பட்டது கறிக்கோழி உற்பத்தித்தொழில்தான்.. அதன் சரிவைத்தடுக்க ஏதேனும் செய்திருக்கிறதா இந்த அரசு..? குறைந்தபட்சம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரும்,

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கறிக்கோழி பண்ணையாளர்களுடன் இணைந்து பொதுவெளியில் ஊடகங்கள் முன் கோழிக்கறி உணவுகளை உண்டு காணொளிகள் வழியாக பரப்பினால் குறைந்தபட்சம் இது வதந்தி என்பதாவது புரிந்து நிலைமை சற்று மேம்படலாம்..

அப்படி ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஒரு முன்னெடுப்பேனும் செய்யப்பட்டதா..?

 

மாறாக ஒரு கொள்ளைநோய்ப்பரவலை மூடிமறைத்து பெருமை கொள்வது மாபெரும் சாதனையா என்ன..? டெங்கு இருப்பதை மறைக்க உருவான மர்மக்காய்ச்சல் போல புதியதொரு சொல்லை கண்டடடையலாம்.. மர்மங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை.. அதுவும் தங்களை ஆட்டுவித்த தனிப்பெரும் தலைவியே எப்போது எப்படி இறந்தார் என்பதை ஆணையம் அமைத்து மர்மமாக பராமரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மந்தைகளைப்போல இறக்கும் உதிரி மனிதர்களின் மரணங்களை மர்மமாக மறைப்பதா கடினம்..?

 

அதுவும் உங்களைப்போல படைப்பாளிகளின் ஆதரவும் இருக்கையில் ஜமாய்த்துவிடுவார்கள்..! உங்கள் புண்ணியத்தில்  ஒருவேளை உலகின் தலைசிறந்த பின்நவீனத்துவ ஆட்சியாராக எடப்பாடி  வரலாற்றில் இடம்பெறவும்  கூடும்..

 

அன்புடன்,

இரா.முருகானந்தம்,

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –3
அடுத்த கட்டுரைவைரஸ் அரசியல்- கடிதங்கள்2