பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 9
லக்ஷ்மணை அன்னையின் அழைப்பு வந்தபோது நான் அனிலனுடன் இடைநாழியின் அருகிருந்த சிறிய பூங்காவின் நடுவே கற்பீடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது அனிலனும் எழுந்தார். நான் அவரிடம் “நீங்களும் வரலாம்” என்றேன். “நான் எதற்கு?” என்றார். “இது ஏதோ அரசுசூழ்தல் நிகழ்வு என ஆகிவிட்டிருக்கிறது. இதை தொடங்கும்போது நான் இவ்வண்ணம் எண்ணவில்லை. இப்போது ஒவ்வொருவரும் தங்கள் காய்நகர்வுகளை செய்கிறார்கள். தங்கள் தரப்பை பதிவு செய்தாகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் இருப்பே இல்லாமலாகிவிடும் என்றும் எண்ணுகிறார்கள். இந்த அரசியலாடல் எனக்கு சலிப்பை அளிக்கிறது. நீங்கள் வரக்கூடுமென்றால் ஒருவேளை இதை இம்முறை எளிதாக நான் கடந்துசெல்லமுடியும்” என்றேன்.
அனிலன் சிரித்து “இதை சொல்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு இங்கே ஒரு சிறுபூசல் எழுந்தது. அரண்மனையிலிருந்த யானை ஒன்று முதுமையால் உயிர்துறந்தது. அதை எம்முறையில் மண்மறைவு செய்வது என்று பேச்செழுந்தது. யானை மண்மறைவு செய்யப்படவேண்டும் என்றால் மண்ணாளும் அரசரின் செங்கோல் அங்கே வரவேண்டும். அவ்வகைச் சடங்குகளுக்கு கொடுத்தனுப்ப இங்கே ஒரு வெள்ளிச் செங்கோலும் உள்ளது. மூத்தவர் ஃபானு இயல்பாக அதற்கு ஒப்புதல் அளித்தார். செங்கோல் சென்றபோது அதை பிரத்யும்னனின் இளையவர் தடுத்தனர். அரசர் என அந்த எரிநிலையில் பிரத்யும்னனின் பெயரே சொல்லப்படவேண்டும் என்றனர். செங்கோலை பிடுங்கிக்கொண்டு வந்தனர். சாம்பன் தலையிட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னார்கள். இறுதியில்… என்ன சொல்ல! ஏழு நாட்கள் இங்கே அந்த யானைச்சடலம் கிடந்தது. அதை புதைக்கவும் முடியவில்லை. அழுகி நாற்றமெடுத்தபோது எவரோ அதன்மேல் விறகையும் அரக்கையும் உமியையும் கொட்டி அங்கேயே எரியூட்டினர். அது பாதி வெந்த பின்னரே செய்தி தெரிந்து அனைவரும் ஓடிச்சென்றனர். எரிந்துகொண்டிருந்த யானைக்கு மூன்று தரப்பினரும் தனித்தனியாக மீண்டும் எரியூட்டினர்” என்றார்.
லக்ஷ்மணையின் அரண்மனை முகப்பில் எங்களை எதிர்கொண்டவர் அவர் மைந்தர் சகன். அவர் அனிலனைக் கண்டதும் திடுக்கிட்டதுபோல தெரிந்தது. ஆனால் மறைத்துக்கொண்டு முகமன் உரைத்தார். அவர் உள்ளே சென்றபோது குழப்பத்தில் நடையும் அலைபாய்ந்தது. அவருடன் நாங்கள் அக்கூடத்திற்குள் நுழைந்தபோது எவரும் அனிலனை பார்க்கவில்லை, எதிர்பார்க்காத ஒன்றை நாம் சில கணங்கள் பிந்தியே பார்க்கிறோம். நான் ஓஜஸைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முதற்கணமே அனிலனை பார்த்துவிட்டிருந்தார். எங்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவரை நான் புரிந்துகொண்டதை அவர் புரிந்துகொண்டார். அவரிடம் எழுந்த சீற்றம் எனக்கு வியப்பையும் பின்னர் சிரிப்பையும் அளித்தது. சூழ்ச்சித்திறன் கொண்டோர் அவைமுன் நிறுத்தப்பட்டால் தோற்றுவிடுகிறார்கள். அவைமுன் நின்று சூழ்ச்சி செய்தவர் அஸ்தினபுரியின் சகுனி மட்டுமே.
பிரகோஷன் அமர்ந்திருக்க அவருடைய இளையவர்களான காத்ரவானும், சிம்மனும், பலனும், பிரபலனும் அருகே அமர்ந்திருந்தனர். சற்று பின்னால் ஓஜஸ் அமர்ந்திருந்தார். ஊர்த்துவாகனும் மகாசக்தனும் சகனும் அபராஜித்தும் பின்னால் நின்றனர். வழக்கம்போல அவர்கள் அனைவரின் விழிகளும் ஒன்றுபோலவே தோன்றின. நான் பிரகோஷனை வணங்கி முகமன் உரைத்தேன். அவரும் என்னை வணங்கி பீடம் அளித்தார். நான் சற்று எரிச்சல்கொண்டிருந்தேன். “இளவரசே, நான் தங்களை அல்ல சந்திக்க விழைந்தது. தங்கள் அன்னையை. தங்கள் அவையில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றேன். பிரகோஷன் “என்னிடம் சொல்லாத எதையும் அன்னையிடம் நீங்கள் சொல்ல இயலாது” என்றார். “அன்னையரை ஆளும் மைந்தரை இப்போதுதான் பார்க்கிறேன், நன்று” என்றேன்.
“எங்கள் அன்னையே இந்நகரில் எங்களுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு” என்றார் பிரகோஷன். “நாங்கள் மலைமக்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை மத்ரநாட்டில் கழித்தவர்கள். எங்கள் மலைக்கூட்டமைப்பு சிதறி அழிந்துவிட்டிருக்கிறது இன்று. மீளச் செல்ல நிலமில்லாதவர்கள். இங்கே எங்கள் இடமென்ன என்று இன்னும் முடிவாகவில்லை. எங்கள் அன்னையை இந்நகரின் தலைவர் மணந்தார் என்பதன்றி எங்கள் அடையாளம்தான் என்ன?” என்று பிரகோஷன் சொன்னார். “எங்கள் அன்னை எளிய மலைமகள். அரசியல் சொற்கூட்டல்கள் அவருக்குத் தெரியாது. அவரிடமிருந்து ஒரு சொல்லைப் பெற்று எங்களை இங்கிருந்து துரத்திவிட்டுவிட முடியும்.”
“தந்தையின் அறச்சொல்லை நீங்கள் நம்பவில்லை அல்லவா?” என்றேன். “இல்லை, நம்பவில்லை” என்றார் பிரகோஷன். “ஏனென்றால் அது இப்போது இங்கே திகழவில்லை. அதன் இடமென்ன என்பதே எவருக்கும் தெரியவில்லை.” நான் பெருமூச்சுவிட்டு “நன்று. நீங்கள் ஐயுற வேண்டியதில்லை. உங்கள் அன்னையிடமிருந்து தன் கொழுநர் இந்நகருக்கு திரும்பிவர அவர் விழைகிறார் என்ற ஒரு சொல்லை மட்டுமே நான் கோருகிறேன்” என்றேன். “அதை அளிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை” என்று பிரகோஷன் சொன்னார். “ஆனால் நோக்குக, நீங்கள் சொல் நாடி வருவதிலேயே இங்கிருக்கும் சிக்கலின் வடிவம் உள்ளது! நீங்கள் முதலில் தேடிச்சென்றது யாதவ அரசியை. அதன் பின்னர் ஷத்ரிய அரசியை. அதன்பின் நிஷாத அரசியை. இறுதியாக எங்களை.”
“நான் அவ்வண்ணம் திட்டமிடவில்லை. உங்களை ஷத்ரியக்கூட்டில் ஒரு பகுதி என்றே கருதினேன்” என்றேன். “நாங்கள் அக்கூட்டில் ஒரு பகுதி அல்ல என்று எவருக்கும் தெரியும். அவ்வண்ணம் ஓர் எண்ணம் எங்களுக்கிருந்தது. ஆனால் அவர்கள் எங்களை அவ்வண்ணம் நடத்தவில்லை. அவந்தியில் இருந்து வந்தவர்களுக்கு நிகராகக்கூட நாங்கள் அவையமர்த்தப்படவில்லை. எந்த அரசுசூழ்தல் செய்திகளும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” என்றார் பிரகோஷன். “அங்கே ஏவலர் என்றே கருதப்பட்டோம். ஏவல்பணிக்கு ஏன் இத்தனை அல்லல்படவேண்டும் என்று எண்ணி அகன்றோம். அகன்றதை அவர்களுக்கு இன்னமும் முறையாக அறிவிக்கவில்லை.”
அனிலன் “அவந்தியினர் அங்கே அவைமதிப்புடனேயே நடத்தப்பட்டனர். அங்கே எங்களுக்கு இருக்கும் இடமல்ல எங்கள் கோரிக்கை. நாளை துவாரகையை பிரத்யும்னன் ஆளும்போது எங்கள் நிலம் எதுவாக இருக்கும் என்பதுதான்” என்றார். அந்த ஊடுபுகல் பிரகோஷனை எரிச்சல்கொள்ளச் செய்தது. நான் ஓஜஸை பார்த்தேன். அவர் ஏதேனும் சொல்வார் என எண்ணினேன். பிரகோஷன் “நான் பேசிக்கொண்டிருப்பது வேறு. இது எளிய அவை மதிப்பைப் பற்றிய பேச்சு அல்ல” என்றார். “நானும் என் கொடிவழியினரும் இங்கே எந்நிலையில் வைக்கப்படுவோம் என்று கவலைப்படுகிறோம். அதற்குரிய சொற்களையே எதிர்பார்க்கிறோம். எங்களுக்கான இடம் வரையறை செய்யப்படவேண்டும். அதுவே எங்கள் கோரிக்கை.”
அனிலன் அந்தக் குறிப்பை புரிந்துகொள்ளவில்லை. “அக்கோரிக்கையை நீங்கள் இன்னமும் பிரத்யும்னனின் அவையில் முன்வைக்கவே இல்லை, மூத்தவரே” என்றார். “அதை முன்வைக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு இன்று எங்கள் தேவை உள்ளது. விதர்ப்பம் ஒன்றும் தூய ஷத்ரிய நாடு அல்ல. அது நளன் ஆண்ட தொன்மையான நிஷாத நாடுதான். நிஷாதர்களே அங்குள்ள குடிகளில் பெரும்பகுதியினர். ஆகவே அவர்கள் எங்களை ஒதுக்கிவிட முடியாது” என்றார். நான் பேசுவதற்குள் அனிலன் உரக்க “ஆனால் உங்களாலும் பிரத்யும்னனை தவிர்க்கமுடியாது. அவர் உங்களுக்குத் தேவை” என்றார். பிரகோஷன் சீற்றத்தை அடக்குவது தெரிந்தது. “ஏன்? எங்களுக்கு சாம்பனும் நிகர்தான். அங்கே மேலும் இடம் எங்களுக்கு அமையலாம்” என்றார்.
நான் அனிலன் பேசுவதற்குள் முந்திக்கொள்ள முயன்றாலும் அவர் பேசிவிட்டார். உரக்க “அமையக்கூடும். ஆனால் சாம்பனின் கீழே நீங்கள் அவையமர வேண்டியிருக்கும். மலைஷத்ரியர்கள் நிஷாதருக்குப் பணிந்திருப்பதைவிட தூய ஷத்ரியர்களுக்குப் பணிந்திருப்பது மேல்” என்றார். நான் ஓஜஸை பார்த்தேன். அவர் அப்போதும் பேசவில்லை. எப்போது பேசப்போகிறார் என்று நோக்கிக் கொண்டிருந்தேன். பிரகோஷன் “நாங்கள் எங்கும் பணியவேண்டியதில்லை. எங்கள் உதவி தேவைப்படுபவர்கள் பணிந்தால் போதும்” என்றார். அனிலன் நகைத்து “இங்கே சொல்லலாம். ஆனால் பிரத்யும்னனின் அவையிலும் சாம்பனின் அவையிலும் இதை சொல்லமுடியாது” என்றார்.
நான் அனிலனை பார்த்தேன். அவருடைய உணர்வுகள் என்ன என்று என்னால் உணரக்கூடவில்லை. சற்றுமுன் அந்த அவைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கையில் தெரிந்தவர் அல்ல அவர். முற்றிலும் இன்னொருவர். நான் அவைக்கு அழைத்துவந்தது அவரைத்தான். அவைக்குள் நுழைகையிலேயே அவருடைய நடை மாறிவிட்டது. அவைக்கூடுகைகளில் மானுடர் ஏன் மாறுகிறார்கள்? உண்மையில் தங்கள் கற்பனையில் அவைகளில் மானுடர் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். மெய்யான அவைகளில் தோன்றும் வாய்ப்பற்றவர்கள் மேலும்மேலும் அகத்தே நடிக்கிறார்கள். அந்நடிப்பு பெருகி வீங்கி பொருளின்மையின் விளிம்பை அடைந்துவிட்டிருக்கும். ஓர் அவையில் வாய்ப்பு கிடைக்கையில் அவர்கள் அந்த விளிம்பிலிருந்தே தொடங்குகிறார்கள். அவர்கள் அகத்தே சென்றுவிட்டிருக்கும் அந்தப் பயணம் என்ன என்று நமக்குத் தெரியாது என்பதனால் அந்தப் புதியவரைக் கண்டு நாம் திடுக்கிடுகிறோம்.
நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “நாம் இங்கே பேசவேண்டியது இவற்றைப் பற்றி அல்ல. நான் கோருவது அன்னையின் ஓலையை மட்டுமே” என்றேன். “அதை அளிப்பதில் தடையில்லை. அதைத்தான் சொல்லவந்தேன். நீங்கள் இதை இங்குள்ள அரசியலின் ஒரு பகுதியாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே எங்கள் தரப்பை நான் முழுமையாகச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. நாங்கள் அனுப்பும் ஓலையை எப்படி கொண்டுசெல்வது என்பது உங்கள் தெரிவு. ஆனால் அதை நீங்கள் இங்குள்ள மூன்று குலத்தொகைகளில் எதனுடனும் சேர்க்கலாகாது. அது எங்கள் அன்னையின் செய்தியாக மட்டுமே இருந்தாகவேண்டும்.” நான் “அவ்வண்ணமே அது அமையும்” என்றேன்.
அனிலன் “எங்கள் அன்னையின் செய்தியும் அவ்வண்ணமே செல்லவிருக்கிறது. அதுவே நன்று. இங்கே மூன்று குலக்குழுக்கள் உள்ளன என்பதே ஒரு பொய். எங்கள் மூத்தவர் முற்றிலும் வேறு. எங்களிடமும் எண்ணிக்கையில் மிகுதியானோர் உள்ளனர்” என்றார். பிரகோஷன் பேசுவதற்குள் நான் “ஆம், குழுக்களின் எண்ணிக்கையை இப்போதே எவரும் சொல்லிவிடமுடியாது. யாதவர் மூன்று குழுக்கள். ஷத்ரியர்களில் நீங்கள் இருவரும் தனிக் குழுக்கள். அன்னை ருக்மிணியின் மைந்தர்களிலேயே சாருதேஷ்ணன் இன்னொரு குழுவை கொண்டிருக்கிறார்” என்றேன். அனிலன் திகைத்து “சாருதேஷ்ணனா? எவர் சொன்னது?” என்றார். “அவரே என்னிடம் சொன்னார்” என்றேன். “அவரா? அவர் ஒருமுறைகூட…” என்றபின் அனிலன் அமைதியானார்.
அவர் சொல்லடங்கிவிட்டார் என்று உணர்ந்ததும் நான் பிரகோஷனிடம் சொன்னேன் “நான் அன்னை லக்ஷ்மணையை சந்திக்கலாம் அல்லவா?” பிரகோஷன் “எவர் வேண்டுமென்றாலும் சந்திக்கலாம். தடையென ஏதுமில்லை. அரசுமுறைச் சந்திப்பில் என்ன நிகழ்கிறது என நாங்கள் நுண்ணோக்குகிறோம், அவ்வளவுதான். நீங்கள் சந்திக்கலாம். அன்னை அளிக்கவேண்டிய ஓலையை நாங்களே அமைத்துள்ளோம். அதை உங்களிடம் அளிக்கிறோம். அன்னையிடம் பேசி அதை அவரிடம் அளித்து ஒப்பம் பெறலாம்” என்றார். “அவர் அந்த ஓலையை ஒப்பவேண்டும் என என்னால் சொல்ல முடியாது” என்றேன். “வேண்டியதில்லை, நாங்களே சொல்கிறோம். எங்கள் உடன்பிறந்தவர் ஒருவர் உடன் வருவார்” என்றார் பிரகோஷன்.
“அன்னை அச்சொற்களை மறுத்தால்?” என்றேன். “மறுக்கப்போவதில்லை” என்று பிரகோஷன் சொன்னார். “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் ஒருவேளை மறுக்க நேர்ந்தால்… ஆகவேதான் கேட்டேன்” என்றேன். அதுவரை பேசாமலிருந்த ஓஜஸ் “அவர் மறுத்தால் அவரிடமே நீங்கள் ஓலை வாங்கலாம்” என்றார். நான் அவரை பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. மிக மிக வழக்கமான சொற்கள். அந்த இடத்தில் அவ்வண்ணம் அவர் உள்ளே நுழைவதற்கு எந்தத் தேவையும் இல்லை. நா தவறி பேசிவிட்டாரா? அவ்வண்ணம் நா தவறுவதென்றால்கூட அது இப்படி ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில்லை. நான் அவருடைய இறந்தவை போன்ற கண்களை பார்த்தபின் “ஆம், எனில் நன்று” என்றேன்.
பிரகோஷன் அவை முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக தலையசைத்தார். நான் எழுந்து வணங்கினேன். “என் இளையோன் சகன் உங்களை அன்னையிடம் அழைத்துச்செல்வான்” என்றார். நான் மீண்டும் தலைவணங்கினேன். சகன் எழுந்து அவை வணங்கி என்னுடன் வந்தார். அனிலன் எழுந்து அவைவணக்கம் செய்து தொடர்ந்து வந்தார்.
அவைக்கூடத்தில் இருந்து வெளியே வந்ததும் அனிலன் “நான் எண்ணியதுபோலவேதான். தாங்கள் இருக்கும் நிலை என்ன என்பதை இவர்கள் உணரவே இல்லை” என்றார். நான் “எவர்தான் உணர்ந்திருக்கிறார்கள்?” என்று சொன்னேன். என் சொற்களை அவர் உளம்கொள்ளவில்லை. தன் வாழ்க்கையின் முதல் அவைவெற்றியை அடைந்த திளைப்பில் இருந்தார் என்று தோன்றியது.
“அன்னை லக்ஷ்மணை தனக்கென தனி எண்ணங்கள் அற்றவர். மைந்தர் சொல்லையே அவரும் சொல்வார், ஐயமே இல்லை” என்றபடி அனிலன் என்னுடன் வந்தார். “ஆகவேதான் இவர்கள் இத்தனை துணிவுடன் இருக்கிறார்கள்.” நான் ஓஜஸ் ஏன் அதை சொன்னார் என்னும் எண்ணத்தை அடைந்தேன். ஒருவேளை அனிலன் அவரை பிழையாக எண்ணியிருக்கக் கூடுமோ? தோற்றம்கூட அதற்கு அடிப்படையாக இருக்கலாம். ஆனால் அவருடைய கண்களை நான் சந்தித்தேன். அவை கூரியவை, அத்தகைய கூரிய கண்கள் கொண்டவர் பேரறிஞராக, கவிஞராக, கலைஞராக இருக்கலாம். இல்லையேல் அவர் சூதாடியேதான்.
அதை எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அனிலன் “ஓஜஸ் நம் உரையாடலை முடித்துவைத்தார். ஏனென்றால் அன்னையிடம் முரண்தென்பட்டால் என்ன செய்வது என்னும் வினா நோக்கி நீங்கள் சென்றீர்கள். அவர்களை நிலைகுலையச் செய்யும் சொல் அது. அந்தச் சொல்லாடல் மேலும் சென்றிருந்தால் பிரகோஷன் மீறி எதையேனும் சொல்லியிருப்பார். அது உங்கள் உள்ளப்பதிவாக எஞ்சியிருக்கும். ஒருவேளை நீங்கள் அதை தந்தையிடம் சொல்லவும்கூடும்” என்றார். அது முற்றிலும் உண்மை என அக்கணம் உணர்ந்தேன். ஓஜஸ்தான் நான் சந்தித்த துவாரகையின் இளவரசர்களிலேயே கூரியவர், நஞ்சுநிறைந்தவர் என்று தெளிவடைந்தேன்.
நான் சகனை பார்த்தேன். அனிலன் அவரை கூடவே அழைத்துச்செல்கையில் அவ்வண்ணம் பேசுவது விந்தையாக இருந்தது. ஆனால் சகன் “ஆம், நீங்கள் வருவதற்கு முன்புகூட மூத்தவரிடம் ஓஜஸ் என்னென்ன பேசலாகாது என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். மூத்தவர்கூட என்ன இது, என்னென்ன பேசலாம் என்று சொல்லாமல் இதை சொல்கிறாய் என்றார். ஓஜஸ் சொல்வதற்கு ஒருசில சொற்றொடர்களே உள்ளன, சொல்லாமல் ஒழிவதற்கு கடலளவு என்றார்” என்றார். சற்று திகைப்புடன் அவர் கணகளை பார்த்தேன். அங்கிருந்தது பிறிதொரு ஒளி. எந்தச் சிக்கல்களுக்குள்ளும் செல்லாத வெள்ளை நெஞ்சுகளுக்குரியது.
அவரை நான் புரிந்துகொண்டதை உணர்ந்த அனிலன் “அவனை அறிந்தே ஓஜஸ் அனுப்பியிருக்கிறார். நாம் சொல்வதையும் அங்கே சென்று சொல்வான்” என்றார். சகன் புன்னகைத்து “ஆம், நான் எங்கே சென்று வந்தாலும் என்னிடம் அங்கே என்ன நடந்தது என்று கேட்பார்கள். நான் எதையுமே மறக்கமாட்டேன். எல்லாவற்றையும் சொல்வேன்” என்றார். நான் புன்னகைத்தது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. “நீங்கள் விருஷ்ணிகுலத்தவர் என்று ஓஜஸ் சொன்னார். விருஷ்ணிகுலத்தவர்களுக்காகவே நீங்கள் அறுதியில் நிலைகொள்வீர்கள். அவ்வாறல்ல என்று உங்களுக்கு நீங்களே ஆணையிட்டுக்கொள்வீர்கள். ஆனால் வேறுவழியே இருக்காது என்றார். நான் அப்போது அருகே நின்றிருந்தேன்.”
அனிலன் சிரித்தார். நானும் சிரித்து “இருக்கலாம்” என்றேன். லக்ஷ்மணையின் அரண்மனை முகப்பை அடைந்தோம். அங்கே நின்றிருந்த ஏவற்பெண்டிடம் நான் அவரைப் பார்க்க வந்திருக்கும் செய்தியை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே எந்த அறிவிப்பும் இன்றி சகன் உள்ளே சென்றார். நான் என்ன செய்வதென்று திகைத்து நின்றிருந்தேன். சற்றுநேரத்தில் சகன் வெளியே வந்து “அன்னை ஒப்புதல் அளித்துள்ளார், வருக!” என்றார். நான் அனிலனிடம் “நீங்கள் இங்கே நில்லுங்கள். நான் சென்றுவிட்டு உடனே வருகிறேன்” என்றேன். அவர் விழிகள் மாறின. நான் அதை பொருட்படுத்தாமல் சகனுடன் நடந்தேன்.
நாங்கள் உள்ளே நுழைகையில் சகன் “முதலில் சென்று எதன்பொருட்டு என்று சொல்லிவிடும்படி என்னிடம் ஓஜஸ் சொன்னார்” என்றார். நான் ஓஜஸின் நோக்கம் என்ன என்று எண்ணிக்கொண்டேன். இவரை என்னுடன் அனுப்பியதன் வழியாக அவர் எதை நிகழ்த்துகிறார்? அல்லது நான் இவ்வாறு எண்ணிக் குழம்பவேண்டும் என்றுதான் எண்ணுகிறாரா? உள்ளறை முன் ஏவற்பெண்டு என்னை அறிவிக்கும்பொருட்டு நின்றிருக்கையில் ஓர் எண்ணம் வந்தது, அவர் அனுப்பப்பட்டது அன்னை எந்தக் கோரிக்கையையும் முன்வைத்துவிடலாகாது என்பதற்காக. பெரும்பாலும் அவர் மட்டுமே லக்ஷ்மணை அன்னையை சந்திக்கிறார். அவர் வழியாக ஆணைகள் மட்டுமே அவருக்கு வருகின்றன. அவரிடம் அன்னை எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.
உள்ளறையில் லக்ஷ்மணை ஒரு சிறுபீடத்தில் அமர்ந்திருந்தார். மிக மெலிந்திருந்தார். தலை நன்கு நரைத்திருந்தது. மலைமகள்களின் வழக்கப்படி ஏழு புரிகளாக குழலை தொங்கவிட்டிருந்தார். நெற்றியில் மலைக்குடிகளுக்குரிய கரிய பொட்டு. கைகளை மடியில் கோத்து உணர்வற்ற கண்களுடன் அமர்ந்திருந்தார். அவரை எவரும் ஓர் அரசியெனச் சொல்லிவிட முடியாது. எளிய மலைமகன் ஒருவனை மணந்து நீடுநாள் வாழ்ந்து பசி, தனிமை, சாவு என அனைத்து துயர்களினூடாகவும் கடந்து முதுமையை அடைந்தவர்போல் தோன்றினார். அவரால் அரசியலை புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அவர் என் வருகையை உணர்ந்திருக்கிறாரா என்றே ஐயம் கொண்டேன்.
நான் “அரசி, இன்றைய சூழலை அறிந்திருப்பீர்கள்” என்றேன். அவர் விழிகளில் எந்த மாறுதலும் இல்லை. “அரசி, நான் துவாரகையின் அரசரைத் தேடி செல்லவிருக்கிறேன். எட்டு அரசியரின் அழைப்பையும் ஏந்திச்சென்றால் அவரை அழைத்துவந்துவிடலாமென்று எண்ணுகிறேன். தங்களின் ஓலை தேவை” என்றேன். அவர் விழிகள் தழைந்தன. மடியில் விழிநீர்த்துளிகள் உதிர்ந்தன. “அரசி, ஓலையை தங்கள் மைந்தர்கள் எழுதிவிட்டார்கள். அதில் நீங்கள் ஒப்பு முத்திரை அளித்தால் மட்டும் போதும்” என்றேன். அரசி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தார். நான் சகனிடம் ஓலையை அளிக்கும்படி சொன்னேன். அரசி அதை வாங்கி நோக்காமலேயே தன் கணையாழியை அழுத்தி திரும்ப அளித்தார்.
நான் மேலும் ஏதேனும் சொல்ல விழைந்தேன். ஆனால் அரசி விழிநீர் பொழித்துக்கொண்டு அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் உள்ளத்தில் நிகழ்வதென்ன என்று அறியவே முடியாது என்று தோன்றியது. நான் தலைவணங்கி வெளியே நடந்தேன். சகன் என்னுடன் வந்தபடி “தந்தையைப் பற்றிப் பேசினாலோ தந்தையை நினைவூட்டும் எதையேனும் பார்த்துவிட்டாலோ இதேபோல அழுவார். நெடுநேரம். ஒரு சொல்லும் உரைப்பதில்லை. அழுதழுது அவரே ஓயவேண்டியதுதான். ஏவற்பெண்டுகள் எவரும் அவரிடம் பேசுவதில்லை” என்றார். நான் அவ்வாறன்றி வேறேது இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன்.
வெளியே காத்திருந்த அனிலன் “வாங்கிவிட்டீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “நன்று, நான் சொன்னேனே. அன்னை எதையுமே நினைவுகூரவில்லை. அவர் இவர்கள் சொல்வதை செய்வார்” என்றார். சகன் “ஆம், என்னிடம்தான் எல்லாவற்றையும் சொல்லி அனுப்புவார்கள். நான் சொல்வதை அன்னை மறுப்பதே இல்லை” என்றார். “நன்று இளவரசே, நான் இனி ஒரே ஒரு அரசியை மட்டுமே சந்திக்கவேண்டும். ஓலை பெற்றேன் என்னும் செய்தியை என் பொருட்டு தங்கள் மூத்தவரிடம் சொல்லுங்கள்” என்றேன். சகன் “நான் சொல்கிறேன். நானே ஓலையை பெற்றுக்கொடுத்தேன் என்று சொல்கிறேன்” என்றபின் சென்றார்.
அனிலன் “எளிய உள்ளம்” என்றார். “ஆனால் இத்தகையோரை பயன்படுத்தி எந்தத் தீங்கையும் செய்ய முடியும்” என்றார். தன்னை ஒரு சூழ்ச்சிக்காரராக உருவாக்கிக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை அனிலன் பெற்றுவிட்டார் என்று தோன்றியது. இனி ஒவ்வொன்றையும் நுட்பமாக்கிக் கொள்வார். சூழ்ச்சிகளை கண்டடைவார். சூழ்ச்சிகளை உள்ளத்துக்குள் செய்து பார்ப்பார். அரிதாக வெற்றிகளையும் அடைவார். “நன்று, நான் காளிந்தி அன்னையையும் சந்திக்கவேண்டும்” என்றேன். “நான் அதற்கும் ஒருங்கமைக்கிறேன். அவர் இருக்குமிடத்தை அறிவேன்” என்றார் அனிலன். “இல்லை, அவர் சாம்பனின் கூட்டமைவில் இருப்பவர். நீங்கள் வருவதை அவர்கள் விரும்ப வாய்ப்பில்லை” என்றேன். “ஆம், அது உண்மை” என்றார் அனிலன்.
“மீண்டும் சந்திப்போம். தங்கள் மூத்தவரிடம் என் உசாவலை சொல்க!” என்றபடி நான் விடைபெற்றுக்கொண்டேன். “நான் ஒட்டுமொத்தமாக ஒன்று சொல்கிறேன், யாதவரே. இப்பூசல் தந்தை வந்தாலும் முடியாது. ஏனென்றால் இவர்களெல்லாம் இவ்வண்ணம் ஆடியும் எதிர்நின்றாடியும் சுவை கண்டுவிட்டார்கள். உள்ளத்துள் பலநூறுமுறை ஆட்சியை நடித்துவிட்டார்கள். திரும்பச் சென்று மீண்டும் எளிய இளவரசர்களாக அமர எவராலும் முடியாது” என்றார் அனிலன். அது உண்மை என்று தெரிந்தாலும் என் அகம் எரிச்சலுற்றது. “பார்ப்போம். நான் அவர் ஆற்றலை நம்புபவன்” என்றேன்.
“ஆம். தந்தை அளவிலா ஆற்றல் கொண்டவர். ஆனால் நாங்கள் எண்பதின்மரும் அவருடைய வடிவங்களே. இதோ செல்லும் இந்த நுண்ணிலிகூட. அவரால் எங்களை எதிர்கொள்ள முடியாது. எங்களை அஞ்சியே அவர் விலகிச்சென்றார். நாங்கள் எங்கள் அன்னையரை இப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதேகூட நாங்கள் தந்தையின் மாற்றுருக்கள் என்பதனால்தான்” என்றார் அனிலன். “ஒருவேளை அன்னையரின் ஓலையுடன் செல்கையில் நீங்கள் தந்தையை அறச்சிக்கலுக்குள் இழுத்துவிடுகிறீர்கள். அன்னையரின் சொல்லை மறுக்க முடியாமல் வரவும் விரும்பாமல் அவர் துயருறக்கூடும்.”
நான் எரிச்சலை வெளிப்படையாகவே காட்டி “நான் அதை கருதவில்லை. இது என் பணி” என்றேன். “ஆம், கடமையை நாம் செய்யவேண்டியதுதான்” என்றார் அனிலன். அவர் பேசிக்கொண்டே இருக்க விழைபவர்போலத் தோன்றினார். நான் தலையசைத்து விடைபெற்று விலகிநடந்தேன்.