ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5

 

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

 

பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

வணக்கம். புதிய வாசகர் சந்திப்பு குறித்த அறிவிப்பை நமது தளத்தில் கண்டவுடனே பெரும் விருப்பையும் அதற்கிணையாகவே தயக்கம் துணைக் கொண்ட பயத்தையும் அடைந்தேன். உங்களுடன் இரு நாட்கள் தங்கும் வாய்ப்பு என்பதே தயக்கத்தை உடைத்திடப் போதுமானதாக இருந்தது.

சனிக்கிழமை காலை ஏறத்தாழ 9 மணியளவில் காஞ்சிக்கோவிலில் இருக்கும் பண்ணை வீட்டை அடையும் போதே, உங்கள் குரல்தான் வரவேற்றது. மாடிப்படிக்கருகில் நின்று நீங்கள் பேசிக்கொண்டிருக்க, உடம்பே காதுகளாக சுற்றிலும் வாசகர்கள். வந்திருந்த பெரும்பாலான வாசகர்கள் அன்றாடம் நமது இணையதளத்தைப் படிப்பவர்கள், ஆகவே இந்த சந்திப்பும் உரையாடலும் ஒருவிதமான தொடர்ச்சி என்று அக்கணம் எனக்குத் தோன்றியது. நீங்கள் கல்வி முறைகள் மற்றும் கல்வியில் கலைக்கான இடம் குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். அக்கணம் துவங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் கட்டித்தழுவி விடைதந்த தருணம் வரை, என் உலகில், உங்கள் சொற்கள் மட்டுமே நிறைந்திருந்தன.

கலைச்சொற்களை சரியாக பயன்படுத்த வேண்டியதன் தேவை, இலக்கிய சந்தேகங்கள், வாசகனுக்கு ஒரு படைப்பில் இருக்க வேண்டிய இடம், ஒரு விவாதத்தில் பங்கு பெறும் முறைமை, புதிய வாசகர்களது படைப்பின் மீதான விமர்சனங்கள் என ஒரு எளிய வாசகன் தன்னை தகவமைத்துக் கொள்ளத் தேவையான அனைத்து விசயங்களையும் நீங்கள் சொன்னவிதம் அற்புதமான பாலபாடம். கதை எழுதுவதற்கான கரு இருப்பவர்கள் அதைச் சொல்ல, அதன் மீதான உரையாடல்கள் வழியே அதன் போதாமைகளை விவரித்த விதம், உரையாடல்கள் திசைமாறிச் செல்ல நேர்கையில் அதை நீங்கள் தவிர்த்த பாங்கு என நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்றுத்தந்து கொண்டே இருந்தீர்கள்.

இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று மொத்தக் குழுவும் கிளம்பிச்சென்ற மாலை நடை. (இதிலும் உங்கள் சொல் கேட்கும் தூரத்திலேயே வந்துகொண்டே இருந்தேன், ஒரு சொல்லையும் தவற விடக்கூடாதென்று) முக்கியமானதொரு பேரனுபவம். எவ்வித தளைகளும் இல்லாத கட்டற்ற உங்களது பேச்சு, மாலை அந்தியாகி பின்னர் இரவாகும் தருணம், தென்னை மரத்தின் ஓலைகளாய் அமைந்த மின்மினிப்பூச்சிகள் என நல்லிசை கேட்ட நிறைவு எனக்கு. அதற்கிணையான அம்சமாக நான் கருதுவது இறுக்கமின்மை. வந்திருந்த அனைவருமே உங்களுடன் அணுக்கமாக உணர்ந்திருப்பார்கள். சமீபத்தில் இவ்வளவு சிரித்ததேயில்லை என எண்ணும்படி அமைந்தது உங்கள் அனுபவங்களிலிருந்த நகைச்சுவை.

சந்திப்பு அற்புதமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தங்குவதற்கான ஏற்பாடுகளும், உணவின் தரமும் இச்சந்திப்பின் பின்னாலுள்ள உழைப்பை உணர்த்தின. வாய்ப்புக்கும் வசதிகளுக்கும் ஈரோடு கிருஷ்ணன் அண்ணா, பாரி, மணவாளன், அந்தியூர் மணி அண்ணா, செந்தில் அண்ணா அனைவருக்கும் நன்றிகள் !

சந்திப்பு முடியும் தருவாயில், உங்கள் ”நலமறிதல்” நூலையும், வினோபா பாவே காலண்டரையும் அன்பளிப்பாகத் தந்து நெகிழ வைத்த தன்னறம்/குக்கூ சிவராஜ் அண்ணாவுக்கு நன்றி !

மொத்தத்தில், என்னுடைய வாழ்வில் மறக்கவே முடியாத இரு தினங்கள் எனக்கு வாய்த்தது என் நல்லூழ்.

என்றைக்குமான நன்றிகளுடன்,

காளீஸ்வரன்.

 

அன்புள்ள ஜெ

 

ஈரோடு இளையவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வர விரும்பியவர்களில் நானும் ஒருவன். வந்தவர்களில் ஒருவர் வீட்டில் பொய்சொல்லிவிட்டு வந்தவர்கள் யார் என்று கேட்டபோது பலர் அப்படிச் சொன்னதாகச் சொல்லியிருந்தார். அதுதான் என் சிக்கல். வந்தால் எந்தப் புகைப்படத்திலும் இடம்பெறாமல் ஒளிந்திருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்ததற்கே நான்கைந்துநாட்கள் அழுகை அடம் கண்ணீர் என்று சிக்கல்கள். நம் குடும்பங்களைப்போன்ற பெரிய சுமை வேறில்லை. லௌகீகம் தவிர வேறேதும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

 

அது ஒருவகையில் நல்லதுதான். லௌகீகம் என்பது ஒரு ஸ்டேண்டேர்ட் . நம்மை அதில் இவை கட்டிவைக்கின்றன. ஆகவே பெரிய அளவிலான அல்லல்கள் ஏதும் இல்லாமல் இருந்துவிடுகிறோம். அலைச்சல்கள் குழப்பங்கள் இல்லை. அதோடு குழந்தைகள் நம்மை அதற்குள்ளும் ஒரு ஸ்பிரிச்சுவலான அனுபவத்தில் திளைக்கவைக்கின்றன. ஆனால் இந்தியாவில் குடும்பங்களில் இருந்துகொண்டு எதையுமே சாதிக்க முடியாது. பணமீட்டுவதை தவிர எதையுமே செய்யமுடியாது. ஆனால் நமக்கு லௌகீகம்தான் முதலில் தேவையாகிறது. மிச்சமெல்லாம் அவ்வப்போது கொஞ்சம்போல தேவை. ஆகவே வேறுவழியே இல்லை. என்றைக்காவது நானும் வருவேன் என்று நம்பவேண்டியதுதான்

 

எஸ்

 

ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –2
அடுத்த கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5