சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஒரு பெண்ணின் பல உருவங்கள் என்ற ஒற்றை வரி அளிக்கும் உணர்வுகளைச் சூழ்ந்தே இருகதைகளும் இருக்கின்றன. அந்தக் கரு அளிக்கும் திகைப்புதான் முதல் கதை. எத்தனை உருவங்கள் என்ற வியப்பு மட்டும். இரண்டாவது கதை அத்தனை உருவங்களுக்கும் மையமாக ஒரு மாறா உருவம் இருக்கக்கூடுமா என்பது. அதைப்புரிந்துகொள்கையில் அக்கதை விரிவடைகிறது. சர்வஃபூதேஷுவை வாசிக்கையில் அவளை அறிய காமம் அல்லது அறிவு வழியல்ல எளிமையும் அர்ப்பணிப்புமே வழி என்று தோன்றுகிறது. மாதவாகவோ தேவியாகவோ வந்துவிடுவாள். குழந்தையே அன்னையை மிக அணுக்கமாக அறியமுடியும். அவள் தன்னை முழுமையாகக் காட்டுவதும் அதற்குத்தான். பூதாகரமான குழந்தையாகிய மாத்தன் மிக எளிதாக அவள் அருகே சென்றுவிடுகிறான்

 

பலவகையான நிலைகுலைவுகளை உருவாக்குகிறது, வெவ்வேறு கோணங்களில் சிந்தனைசெய்யவைக்கிறது என்பதே இந்தக்கதைகளிலிருந்து வரும் அனுபவம். கதை என்ற அனுபவம் பெரிதாக இல்லை. ஒரு நிகழ்ச்சியை வாசித்ததுபோல் இருக்கிறது. வாசித்து முடித்ததுமே ஒரு வகையான எரிச்சலோ ஒவ்வாமையோ உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதெல்லாம் அடங்கியபின்னர் நாம் கதையை மிக ஆழமாக யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

 

இரண்டு வகையான யோசனைகள். இந்தக் கதாபாத்திரங்களை ஆசாபாசங்கள் கொண்ட மனிதர்களாக எடுத்துக்கொண்டு இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் வாசிக்கப்போனால் ஒரு எளிமையான வாசிப்பே கிடைக்கிறது. இவற்றை தத்துவவிவாதத்தின் துளிகளாக எடுத்துக்கொண்டு வாசித்தால் வேறுவகையில் கதை விரிகிறது. புதிய புதிய கேள்விகள் எழுகின்றன. பெண்ணின் தோற்றங்கள் விரிவதும் நாம் அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வதும் ஒரு பக்கம். பெண்ணை நாம் பலவாகப் பிரித்து அறிகிறோமா என்பது இன்னொரு பக்கம். பெண்ணே இப்படியெல்லாம் விளையாடுகிறாளா என்று தோன்றும். அப்படித்தானே அத்தனைபேரும் விளையாடுகிறோம் என்று பார்க்கும்போது இது உறவுகளின் மாயங்களைத்தான் சொல்கிறதா என்றும் படுகிறது

 

சுவாமி

 

ஜெ,

 

சர்வ  ஃபூதேஷு கதையையும் வாசகர்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலச ஆரம்பித்து விட்டார்கள். என் பங்குக்கு ஒரு சிறு கல்லை இந்த பானைக்குள் போடவே இந்தக் கடிதம்.

 

இது வரை வந்த கடிதங்கள் மாத்தனையும், எல்லாவுடனான அவனது உறவின் பரிமாணங்களையும் பேசுகின்றன. ஆனால், எனக்கு அதையும் மீறி என் வாசிப்பில் முக்கியமாகப் பட்டது கதை சொல்லியாகிய வைத்தியர் ஸ்ரீதரினின் ஆளுமையில் வந்துள்ள மாற்றம். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு “missing the forest for a tree” என்று. ஒருவேளை என் வாசிப்பிலும் அது தான் சம்பவித்ததோ என்னமோ, ஆனாலும் அதைப் பற்றி சில வரிகள்.

 

‘யா தேவி’-யில் நாம் கண்ட ஸ்ரீதருக்கும் இப்போது நாம் காணும் ஸ்ரீதருக்கும் பல வித்தியாசங்கள். எல்லாவை முதலில் சந்திக்கும் போது வைத்தியர் மிக நிதானமான மனிதர். தான் எடுத்த நோன்பில் சற்றும் பிறழாதவர். தான் இவ்வுலக இச்சைகளுக்கும் மேலே சென்று விட்டதை உணர்ந்தவர். அதற்குரிய கர்வமும் கொண்டவர்.

 

இப்போதும் அவர் அப்படித்தான். ஆனால் அவரது ஆளுமையில் ஒரு சிறிய ஊசலாட்டம் கதை முழுவதும் காணக் கிடைக்கிறது. கதை முழுவதும் அவருக்கு எல்லாவுடன் ஒரு உரையாடல் கூட இல்லை. ஆனால் மாத்தனுடனான உரையாடல்கள் மூலமாகவும், அவரது எண்ண ஓட்டங்கள் மூலமாகவும், எல்லாவைக் குறித்த அவரது உணர்வுகள் சிறிது சிறிதாக மாறி வருவது போன்ற ஒரு பிரமை. அது இரக்கமா, பொறாமையா, காதலா, காமமா, அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா என்று வரையறுக்க முடியவில்லை.

 

மாத்தனை அவனது மனக்குழப்பங்களிலிருந்து  விடுபட அவர் சரியான ஆலோசனைகள் சொல்லும் போதும், அவரது சொல்லிலும் செயலிலும்  சற்று நாரதத்தனம் (அல்லது வில்லத்தனம்?!) உள்ளது போன்ற ஒரு உணர்வைத் தடுக்க முடியவில்லை. காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல், என் மனதில் உள்ள காமாலை தான் இப்படிப் பார்க்க வைக்கிறதோ?!

 

ஆனால் வைத்தியரின் நோய்க்கு இங்கு நோயாளியாகிய மாத்தன் வைத்தியம் பார்க்கிறான், அவனது வெள்ள்ந்தியான குணத்தால். எனக்கு ஒரு விதத்தில் மாத்தன் கடல் திரைப்படத்தில் வரும் பியாட்ரீஸை ஞாபகப் படுத்துகிறான். அவன் எல்லாவின் நகல் பொம்மையான ஆலீசைப் புணர்ந்தவன் ஆனாலும், தன் குழந்தைத் தனத்தால் எல்லா வேறு, அவள் போட்ட வேடம் வேறு என்று எளிதில் புரிந்து கொள்கிறான். வைத்தியருக்கு எல்லா முதலில் ஒரு பாலியல் நடிகை, பிறகு தான் மற்றவை (அதை மாத்தனிடம் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சொல்லவும் அவர் தயங்குவதில்லை). ஆனால் மாத்தனுக்கோ, அவள் அன்னை மேரியின் வடிவம், அவனது இறந்து போன தாயைப் போன்ற ஒரு பெண். அவள் எப்படிச் சீரழிந்து போயிருந்தாலும் அவளுக்குள் இருக்கும் அன்னை மரியை அவனால் எளிதில் கண்டு கொள்ள முடிகிறது.

 

கடைசி காட்சியில் எல்லா மடியில் மாத்தன் தூங்கும் காட்சி, எனக்கு அன்னை மரியின் மடியில் மரித்துக் கிடக்கும் மனித குமாரனை ஞாபகப்படுத்தியது. ஒரு வேளை ஸ்ரீதரன் கண்டதும் அதைத் தானோ? அது தான் அவர் மனமாற்றத்துக்குக் காரணமோ?

 

கடைசியாக, நான் எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை. ஒரு குருவும், அவரது சீடனும் யாத்திரை போகிறார்கள். வழியில் ஒரு காட்டாறு குறுக்கிடுகிறது. கரையில் ஒரு இளம்பெண், ஆற்றைக் கடக்க வழி தெரியாமல் கலங்கி நிற்கிறாள். பிரம்மசாரிய விரதம் பூண்ட குருவோ, சற்றும் யோசிக்காமல், அவளை தன் தோளில் ஏற்றி ஆற்றைக் கடந்து இறக்கி விட்டுப் போகிறார். சீடனுக்குக் கேட்க பயமாயிருந்தாலும், சில நாழிகைகள் கடந்த பின் பொறுக்க முடியாமல் கேட்டே விடுகிறான், எப்படி ஒரு பிரம்மசரிய விரதம் பூண்ட குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டு தூக்கலாம் என்று. அதற்கு குருவின் பதில், “நான் அந்தப் பெண்ணை ஆற்றைக் கடந்த போதே இறக்கி விட்டு விட்டேன். நீ ஏன் இன்னும் அவளை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறாய்?”

 

சற்று தொடர்பில்லாத கதை தான். ஆனால் என்னமோ இந்தக் கதையில் மாத்தனை குருவாகவும், ஸ்ரீதரனை சீடனாகவும் மனம் கற்பனை பண்ணிப் பார்க்கிறது!

 

பல நாட்கள் அசைபோட மீண்டும் ஒரு அருமையான படைப்பைத் தந்ததற்கு நன்றி!

 

அன்புடன்,

 

சிஜோ

அட்லாண்டா.

முந்தைய கட்டுரைஎண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபழையது மோடை – கடிதங்கள்