வைரஸ் அரசியல்

கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  ஊடகவியலாளர் என்றால் நிருபர் அல்ல. சர்வதேச ஊடகவியலாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்.

 

கொரோனோ வைரஸின் பொருட்டு கேரள அரசு கிட்டத்தட்ட கேரளத்தையே மூடிவைத்திருக்கிறது. சபரிமலைக்கும் குருவாயூருக்கும் எவரும் வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.அனைத்து சுற்றுலா மையங்களும் வழியடைக்கப்பட்டுவிட்டு வெறுமைகொண்டிருக்கின்றன

 

கேரளம் வணிகசேவையையே முதன்மைத்தொழிலாகக் கொண்டுள்ள மாநிலம். அங்கே இதன் விளைவான இழப்புகள் கோடானுகோடி. சென்ற புயல்வெள்ள இழப்பைவிட இருபது முப்பது மடங்கு இழப்பு இருக்கக்கூடும். அரசுக்கு வரும் வருவாய் கடுமையாகக் குறையும். ஆகவே கொரோனோ வைரஸ் சார்ந்த நடவடிக்கைகளையே முறையாக எடுக்க நிதி இல்லாமல் ஆகும். அதாவது தனக்குத்தானே தீ வைத்துக்கொள்கிறது மாநிலம். “இந்த முழுமூடல் தேவையா? கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு நடைபெறுகின்றன? இன்னும் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டேன்.

 

இதழாள நண்பரின் கருத்து, ஐரோப்பா அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போதுகூட இந்தியாவில் , குறிப்பாக தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாகவே உள்ளன. அதற்கான காரணங்கள் பல. ஒன்று, இங்குள்ள அரசு மருத்துவசேவை மிகப்பெரிய அமைப்பு. தனியார் மருத்துவசேவையும் மிகப்பெரியது. மருத்துவர்கள், துணைமருத்துவ ஊழியர்கள் மாபெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அனேகமாக இந்த அளவுக்கு மருத்துவ ஊழியர்கள் உலகின் எப்பகுதியிலும் இல்லை. அவர்களும் தொடர்ச்சியாக நிறைய நோயாளிகளை சந்தித்த அனுபவம் கொண்டவர்கள். அதற்கெல்லாம் அப்பால் ஓர் அர்ப்பணிப்பு இங்கே உள்ளது – கேரளத்தின் வெவ்வேறு வைரஸ் தொற்றுக்களின் போது ஒரு ஊழியர் கூட பொறுப்பை விட்டு அஞ்சி ஓடவில்லை. ஐரோப்பாவின் மிகமுக்கியமான பிரச்சினையே மருத்துவ ஊழியர்கள் அஞ்சி நின்றுவிடுவதுதான்.

 

இறுதியாக ஒன்று, ஐரோப்பா போன்ற நாடுகளைப்போல அன்றி இங்கே மருத்துவத்துறை சட்டச்சிக்கல்களுக்குள் பின்னிக் கிடக்கவில்லை. நோயாளிகளின் உரிமை , காப்பீட்டு நிறுவனன்களின் வணிகம் என்னும் இரு அடிப்படைகளில் ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவத்துறை சிக்கி செயலிழந்திருக்கிறது. எந்த முடிவையும் மருத்துவர்கள் எளிதாக எடுத்துவிடமுடியாது. ஒவ்வொன்றும் வருங்காலங்களில் நீதிமன்றங்களில் விளக்கப்பட வேண்டும் என்னும் அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே தொடர்ச்சியான தாமதமும் தயக்கமும் பெரும் சிக்கலாக அங்குள்ள மருத்துவசூழலை ஆட்கொண்டிருக்கிறது.

 

இந்தியாவில் மருத்துவர் மீதான நம்பிக்கை ஆழமாக நிலைகொள்கிறது. மருத்துவம் ஓர் எல்லையில் வணிகம் என ஆனால்கூட இன்னொரு எல்லையில் அது இங்கே சேவையாகவே நிலைகொள்கிறது. ஆகவே உண்மையில் ஐரோப்பிய நோயாளிகளேகூட சென்னையிலோ பெங்களூரிலோ ஹைதராபாதிலோ திருவனந்தபுரத்திலோ கொரோனோ வைரஸ்க்கு மேலும் சிறந்த சிகிழ்ச்சையை விரைவாகப் பெறமுடியும்– இதுவே உண்மை நிலை.

 

நோயாளிகளை அடையாளம்காண்பது, தனிமைப்படுத்துவது,  சிகிழ்ச்சை செய்வது ஆகியவற்றில் மிகத்தரமான பொறுப்பான சேவையை இந்திய மருத்துவமனைகள் வழங்கிவருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகளின் சேவையை, அவற்றின் நிதிப்பற்றாக்குறை நெரிசல் ஆகியவற்றை கருத்தில்கொள்ளாமல் நோக்கினால்கூட, ஒருகுறையும் சொல்லமுடியாத நிலையே உள்ளது என்றார் நண்பர்.

 

எனில் ஏன் இந்த அச்சுறுத்தல்கள், இவை உண்மையாகவே தேவையா என்று நான் கேட்டேன். அவர் “உண்மையைச் சொல்லப்போனால் இந்த தடையாணைகள் எல்லாம் வெறும் பதற்றத்தை மட்டுமே உருவாக்குகின்றன, அவற்றால் எந்தப்பயனும் இல்லை. மக்களை ஓர் இடத்தில் கூடவேண்டாம் என்றால் இன்னொரு இடத்தில் கூடுவார்கள். கூடாமல் இருக்கவே முடியாது. இங்கே ஒவ்வொரு முச்சந்தியும் நெரிசலானது. ஒவ்வொரு பேருந்தும் நெரிசலானது.”என்றார். “இங்கே உறவினர்கள் கூடுவது, வெவ்வேறு சமூகநிகழ்வுகள் ஆகியவற்றை எவராலும் தடுக்கமுடியாது. குழந்தைகள் சேர்ந்து விளையாடக்கூடாது என்று எப்படித் தடுத்து வைக்கமுடியும்?”

 

“மேலும் எத்தனை நாள் இப்படி மூடிப்போடமுடியும்? முடிவில்லாமல் நாட்டையே மூடமுடியுமா என்ன? தொழிலும் வணிகம் அழிந்தால் உருவாகும் இழப்பு கடைசியில் சிகிழ்ச்சைக்கு நிதி ஒதுக்கமுடியாத நிலைக்கு அரசுகளைக் கொண்டுசென்று சேர்க்கும். ஒரே ஒரு ஆணையைக்கொண்டே இந்நடவடிக்கைகளின் சிக்கலைச் சொல்லலாம். குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்படமாட்டாது, மாறாக அதை வீடுகளுக்குக் கொண்டுசென்று சேர்ப்போம் என்கிறார் கேரள முதல்வர். மதிய உணவு உண்பவர்கள் ஏழைக்குழந்தைகள். அவ்வுணவை எப்படி கொண்டுசென்று சேர்ப்பீர்கள்?. அதற்கான அமைப்பு எங்கே? அத்தனை பெரிய அமைப்பை உருவாக்குவதா அல்லது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதா எதற்கு முன்னுரிமை?”

 

“அதாவது முதல்வர் சொல்வதைச் செய்யவேண்டும் என்றால் இன்று கேரளத்தில் உள்ளதைப்போல இருமடங்கு பெரிய  ‘கொரியர்’ சேவை அமைப்பை உருவாக்கவேண்டும். அத்தனை குழந்தைகளுக்கும் உணவு சென்று சேர்ந்ததா என உறுதிசெய்யவேண்டும். பல்லாயிரம் ஊழியர்கள் வீடுவீடாகச் செல்லவேண்டும். அவர்கள் கொரோனோ வைரஸ்ஸை பரப்பாமல் இருக்கவேண்டும். எவ்வளவு அபத்தம்?” நண்பர் சொல்லச்சொல்ல அதுவே உண்மை என்று தோன்றியது. கேரளத்தில் எங்குமே நெரிசல் குறையவில்லை. ஆனால் வணிகம் படுத்துவிட்டது.“அப்படியென்றால் செய்யவேண்டியது என்ன?” என்றேன்.

 

“எல்லா ஆலோசனைகளும் உரிய நிபுணர்களால் முதல்வருக்கு வழங்கப்பட்டுவிட்டன. சளியோ பிற அடையாளங்களோ கொண்ட அனைவரையும் ஒருவர்கூட விடாமல் உடனடியாக மருத்துவமனைகளில் கொண்டுசென்று சோதனை செய்யவேண்டும்.இந்தியாவில் சீனா போல வன்முறையை அதிகாரத்தை கையாளமுடியாது, இது ஜனநாயக நாடு. ஆகவே ஊக்கமூடுட்வதே ஒரே வழி. சோதனைக்கு எவர் வந்தாலும் ஊக்கப்பரிசாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ பணம் கொடுக்கவேண்டும்.கொரோனோ வைரஸ் தொற்று இருப்பவரை இலவசச் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவதுடன் அவர் ஒத்துழைத்தமைக்கு பரிசாக ஒருலட்சம் அல்லது ஐந்துலட்சம் ரூபாய் பரிசு அளிக்கவேண்டும்.  நோய்த்தொற்று உள்ளதா என ஊழியர்கள் வழியாக கண்காணிக்கவேண்டும். செய்தி அளிப்பவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பரிசளிக்கலாம், விளைவாக நோய்த்தொற்று உள்ளவர்கள் அனைவருமே மருத்துவ வட்டத்திற்குள் வந்துவிடுவார்கள்”.

 

“அரசு மருத்துவமனைகளில் இதற்கென கூடுதல் ஊழியர்களை அமர்த்தலாம். மேலும் பல்லாயிரம் தனியார் மருத்துவமனை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்கலாம். தனியார் மருத்துவமனைகளையே அரசு வாடகைக்கு எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக இது பெருஞ்செலவு வைக்கும் – ஆனால் இப்போது நாட்டையே முற்றாக மூடிவைப்பதனால் உருவாகும் இழப்பில் நூறில் ஒருபங்கே செலவாகும். இதுவே செய்யக்கூடிய மிகமிகச்சிறந்த வழிமுறை. நோய்த்தொற்று கொண்டவர்கள், நோய்த்தொற்றுக்கு வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிழ்ச்சை செய்வதுதான் எப்போதும் எல்லா நோய்க்கும் செய்யும் எதிர்ச்செயல். மொத்த ஊரையே மூடிவைப்பது எல்லாம் மூன்றாமுலக நாட்டில் இயல்வதே அல்ல. மிகையான பதற்றம் கொண்ட ஐரோப்பியநாடுகள் செய்வதை இங்கே செய்யமுடியாது” என்றார் நண்பர்.

 

“அப்படியென்றல் ஏன் இதைச் செய்கிறார்கள்?” என்று கேட்டேன். “அரசியல்,வெறும் அரசியல்” என்று நண்பர் சிரித்தார். “இங்கே அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அரசு செயலற்றிருக்கிறது என்று எதிர்ப்பாளர்களும் ஊடகங்களும் கூச்சலிடுவார்கள். அரசு மக்களை சாகவிடுகிறது என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரசே மக்களை கொல்கிறது என்ற நிலைவரை செல்வார்கள். எந்த நடைமுறையையும் சென்று பார்க்கமாட்டார்கள். எந்த தரவுகளையும் காணமாட்டார்கள். எல்லாவற்றையும் திரிப்பார்கள். அவர்களின் சாதி, மத, அரசியல் நிலைபாடுகளை ஒட்டி அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை முன்னரே சொல்லிவிடமுடியும்” என்று நண்பர் சொன்னார்.

 

“அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள் .காழ்ப்பையும் கசப்பையும் கொட்டுவார்கள். ஐயத்தையும் அச்சத்தையும் பெருக்குவார்கள். ஊடகங்கள் அவர்களுக்கே சாதகமானவையாக இருக்கும். ஏனென்றால் எதிர்மறையான செய்திகளுக்கே செய்தி மதிப்பு அதிகம். மக்கள் சாகிறார்கள், அரசு வேடிக்கை பார்க்கிறது என்று கூச்சலிட்டால் மக்கள் கொதிப்பார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அரசின் திட்டங்களையும் செயல்முறையையும் விளக்கினால் அது செய்தியே அல்ல, பிரச்சாரம் என்று தோன்றும்”

 

“இந்தக் காழ்ப்புப் பிரச்சாரத்தைக் காணும் மக்கள் உண்மையை அறிய மருத்துவமனைகளுக்குச் செல்லப்போவதில்லை, என்ன நிகழ்கிறது என்று பார்க்கப்போவது இல்லை. இந்நிலையில் மக்களின் அந்த அவநம்பிக்கையை எதிர்கொள்ள ஒரே வழி ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களையும் பாதிக்கும்படி மொத்தநடவடிக்கைகளை எடுப்பது.ஊரையே மூடிவிடுவது. அச்சத்தையும் பதற்றத்தையும் அரசுகளே உருவாக்குவது. அரசு ‘போர்க்கால’ நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற சித்திரம் எளிதில் உருவாகும். ஒருகட்டத்தில் மக்களே சலித்து நடவடிக்கைகள் போதும் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்” என்று நண்பர் சொன்னார்

 

“கேரளத்தின் செய்தி ஊடகங்களின் அவதூறு – திரிபுப் பிரச்சாரத்தை முறியடிக்கவே பிணராயி விஜயன் மிகையான அச்சத்தையும் கெடுபிடியையும் உருவாக்குகிறார்” என்றார் நண்பர். ‘அவ்வகையில் தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேர்மையான, சமநிலையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சிறுதொழில்களை நம்பி செயல்படுபவர்கள், ஒட்டுமொத்தமாக தமிழகத்தை மூடுவதெல்லாம் சாத்தியமல்ல என்று அறிந்திருக்கிறார். மருத்துவமனைகளை தயார்ப்படுத்துவதையே தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார். எட்டுமுறை தமிழகத்தின் மருத்துவநடவடிக்கைகளை வந்து பார்த்தேன். திருப்திகரமான செயல்பாடு. அமைச்சர் அறிவுஜீவி அல்ல, ஒரு சாதாரண வியாபாரி போல நடைமுறை அறிந்தவராக இருக்கிறார். நிபுணர்கள் சொல்வதை கேட்டுக்கொள்கிறார். சிறந்த அமைச்சர், பாராட்டுக்குரிய செயல்பாடு”

 

நான் சிரித்தேன். “இங்கே சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அரசு செயலற்றுவிட்டது என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். விரைவிலேயே விஜயபாஸ்கரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவார்கள். பிணராயி செய்ததை எடப்பாடியும் செய்யவேண்டியிருக்கும். தேவையே இல்லாமல் தமிழகப் பொருளியல் அழியும்”என்றேன். நண்பர் வருத்தமாக “ஆம், வேறுவழியே இல்லை. அவ்வாறுதான் ஆகும். எல்லாருக்கும் அரசியல் இருக்கிறதே” என்றார்.

 

நான் ஊடகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஊடகவீணர்கள் நாடுவது செய்திப்பரபரப்பை. அதற்காக சில ஆயிரம்பேர் செத்துக்குவிந்தால் அது ஒரு லாட்டரி என நினைக்கிறார்கள். அதில் சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை முதல் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வரை ஒரே நிலைபாடுதான். அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற ஊளை மட்டுமே. அதற்கு எந்த ஆதாரமும் தரவும் தேவையில்லை. இறுதியில் சில ஆயிரம்பேர் சாகவேண்டும், அதைக்கொண்டு அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கவேண்டும், அரசியலில் வெல்லவேண்டும், ஒரு செய்திக்கொண்டாட்டம் வழியாக தாங்களும் சற்றே சம்பாதிக்கவேண்டும்.

 

அடிப்படை பொறுப்பு இல்லை, எளிய மனிதாபிமானம்கூட இல்லை.  எங்கும் எதிலும் தங்கள் ஒற்றை அரசியலை, அதிகார வேட்கையின் நாணமற்ற இளிப்பை அன்றி எதையுமே இவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.இன்னும் சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் அமர்ந்து நஞ்சுகக்கும் இந்த கீழ்மகன்கள் மருத்துவ ஊழியர்களை இழிவுசெய்வார்கள், அவர்களின் சேவைகளை சிறுமைப்படுத்துவார்கள். நிரந்தரமான ஒரு கசப்பில் மக்களை வைத்திருப்பதே தங்களுக்கு உகந்தது என நினைப்பவர்கள். இவர்களிடமிருந்து நமக்கு இப்போதைக்கு விடுதலை இல்லை. உண்மையான கொடூரமான வைரஸ்கள் இவர்களே

 

முந்தைய கட்டுரைகோவிட்- கதை- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –3