‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 5

அமைச்சவையின் சிறுகூடத்தில் காத்திருந்தபோது அரசி ருக்மிணி என்னை அவைக்கு வரச்சொன்னார் என்று ஏவலன் வந்து சொன்னான். நான் எழுந்து ஒளிபட்டு நீர்மையென மின்னிக்கொண்டிருந்த பளிங்குச்சுவரில் என் ஆடையை பார்த்தேன். ஓர் அரசவையில் புகுவதற்கான ஆடையை நான் அணிந்திருக்கவில்லை. தாடியையும் குழலையும் கைகளால் நீவி முடிச்சிட்டு ஓரளவுக்கு நேர்படுத்திக்கொண்டு கீழே உப்புத்துளி நிறைந்த காற்றில் என் மீது படிந்திருந்த வெண்தடங்களை கைகளால் தட்டிக்கொண்டேன். அந்த ஈரத்தில் குளிரில் மூத்த அரசி இயற்றும் தவம் அப்போது என்னை திகைக்கச் செய்தது. அவர் உயிர்விடவே விழைகிறார் என்று தோன்றியது. உப்பென கரைய விரும்புகிறார். உப்பு எப்போதுமே நீர்மை பரவி உருகுநிலையிலேயே உள்ளது.

அரசி ருக்மிணியின் அவைக்குள் நுழைந்தபோது நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். துவாரகையின் ஷத்ரியப் பேரரசியின் விரிந்த அவைக்கூடம் பாரதவர்ஷத்தின் பல அரசுகள் வந்து கொலுவிருந்தது, விருந்துகளும் கொண்டாட்டங்களும் நிகழ்ந்திருந்தது. அன்றும் சிறப்பாக அணி செய்யப்பட்டிருந்தது. அனைத்து இருக்கைகளிலும் செம்பட்டுகள் புதிதென விரிக்கப்பட்டிருந்தன. அரியணை சற்று முன் செய்து கொண்டுவந்து வைத்ததுபோல் பொன் துலங்கி, மணிகள் மின்னியது. நான் அங்கிருந்த பீடத்தில் அமரவைக்கப்பட்டேன். என்னைச் சூழ்ந்து அந்த அவை ஒழிந்து காத்திருந்தது. நெய்விளக்குகளில் சுடர்கள் எரிந்து நின்றன. இளங்காற்றில் உலைந்தன செம்பட்டுத் திரைச்சீலைகள்.

அங்கு முன்பு நிகழ்ந்தவை ஒவ்வொன்றும் எழுந்து வந்து என்னை அறைந்தன. தாள முடியாத உளஏக்கம் எழ உருகி விழிநீர் மல்குவது போலானேன். கடந்தவை இல்லையோ கனவோ என்று எத்தனை விரைவாக மாறிவிடுகின்றன! துவாரகையில் பிறிதொரு பொலிவு நிகழக்கூடும். ஆனால் சென்ற நாட்களின் ஒரு சாயலேனும் மீண்டெழுமா? இழந்தவை என்ன என்று இக்குடிகளுக்கு சற்றேனும் அறிதல் உள்ளதா? இத்தருணத்தில் கையிலிருக்கும் காய்களை வைத்து களமாடுவதற்கு அப்பால் நினைவென்றும் கனவென்றும் ஏதேனும் அவர்களுக்குள் இருக்கிறதா? எத்தனை சிறியவர்கள் மானுடர்கள்! சிறியவர்கள், மிகச் சிறியவர்கள். தங்கள் சிறுமையை உணரும் அளவுக்குக்கூட அறிவற்றவர்கள்.

சங்கொலி எழுந்து, வாழ்த்துக்களுடன் ஒலித்தது. மங்கலத்தாலங்களுடன் சேடியர் முன்னால் வர, கொடியுடன் ஏவலன் பின்னால் வர, பேரரசி ருக்மிணி அவை நுழைந்தார். அவருடன் அரசியர் பத்ரையும் நக்னஜித்தியும் வந்தனர். அவர்கள் எனது வருகை நோக்கத்தை முன்னரே அறிந்திருந்திருக்கிறார்கள் என்பது முகங்களின் இறுக்கத்திலிருந்து தெரிந்தது. பேரரசி முழுதணிக்கோலத்தில் இருந்தார். ஆனால் களைத்திருந்தார். களைத்து, அதை மறைக்கும்பொருட்டு உடலை எழுப்பி நடக்கும் நடைகளை நான் போர்க்களத்திலேயே கண்டிருக்கிறேன். நான்காம்நாள் போர்க்களத்தில் அர்ஜுனன் அவ்வாறுதான் இருந்தார். கண்களைச் சூழ்ந்த கருவளையங்கள். வாயைச் சுற்றி வரிகள். தடித்த இமைகள். கைவிரல்கள் நிலையில்லாமல் ஆடையை சுழற்றிக்கொண்டிருந்தன. நக்னஜித்தியின் விழிகளில் கூர்மை இருந்தது. அவருடைய ஆடிப்பாவைபோல் இருந்தார் பத்ரை.

அவைமுறைமைகள் நடைபெற்றன. ஓர் அரசனுக்குரிய அவை ஏற்பை எனக்கு அவர்கள் அளிக்கிறார்கள் என்று உணர்ந்தேன். வெள்ளிக்கோலுடன் வந்த நிமித்திகர் “பேரரசி அவையமர்கிறார்!” என்று அறிவித்தார். மூன்று அந்தணர்கள் வணங்கி அரசியை அழைத்துச் சென்று அரியணைப் பீடத்தில் அமரவைத்தனர். இருபுறமும் பீடங்களில் ஷத்ரிய அரசியர் அமர்ந்துகொண்டனர். நான் எழுந்து தலைவணங்கி முறைமை வாழ்த்துகளை தெரிவித்தேன். என்னை அமரும்படி ஆணையிட்டார். நான் அமர்ந்தபின் இன்நீரும் வாய்மணமும் கொண்டுவரப்பட்டது. இயல்பாகவே அந்தச் செயல்கள் என் செயல்களை வகுத்தன. நான் அரசனுக்குரிய எல்லாவற்றையும் செய்தேன்.

“ரிஷபவனத்தின் அரசரும் சத்யகரின் மைந்தருமான யுயுதானன் அரசியை சந்தித்து முகம்காட்டும் பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்று நிமித்திகர் அறிவித்தார். அப்போதுதான் நான் துவாரகையின் குடிமகன் அல்ல, தொலைநிலமாகிய ரிஷபவனத்தின் அரசன் என்று அங்கே கருதப்படுகிறேன் என்று புரிந்துகொண்டேன். ஒருகணத்தில் எனது பணி முற்றிலும் மாறிவிட்டது. அயல்நாட்டு அரசன் ஒருவன் துவாரகையை ஆளும் அரசியிடம் பேசும் நிலை அங்கு வகுக்கப்பட்டுவிட்டது. அங்கு நான் பேசுவதற்கு ஓர் எல்லையுண்டு. அறைகூவ இயலாது, மன்றாட இயலாது, அந்தத் திருப்பம் எனக்கு வேடிக்கையாகவே இருந்தது. அனைத்தும் வெறும் நடிப்புகள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்நடிப்புகளிலேயே அத்தனை மடிப்புகளும் சுருக்கங்களும் இயல்வது என்பது விந்தையே.

நான் எண்ணுவதை உணர்ந்து “கூறுக!” என்று ருக்மிணிதேவி சொன்னார். “பேரரசி இன்று துவாரகை இருக்கும் நிலை தங்களுக்கு தெரியும். மூன்று தரப்புகளாக இளைய யாதவரின் மைந்தர்கள் பிரிந்திருக்கிறார்கள். ஷத்ரியர்களும் யாதவர்களும் நிஷாதர்களும் மூன்று கோன்மைகளாக நிலைகொள்கிறார்கள். யாதவர்கள் முக்குலங்களாக திரண்டிருக்கிறார்கள்” என்றேன். நக்னஜித்தி இடைமறித்து “திரளவில்லை, பிரிந்திருக்கிறார்கள். அந்தகர்கள், விருஷ்ணிகள், போஜர்கள் என்று பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். “ஆம், அது அவர்களுக்குள் உள்ள உட்பிரிவு. ஆனால் நம்மை எதிர்த்து அவர்கள் ஒன்றாகிறார்கள்” என்றேன். “நம்மை என்கிறீர்கள், நன்று!” என்று பத்ரை கூறினார். “ஆம், நம்மை என்று கூறுகையில் பிற அனைவரையுமே எண்ணுகிறேன்” என்றேன். “நம்மை என்ற சொல் நம் அனைவரையும் ஆளும் இளைய யாதவரை மட்டுமே குறிக்கிறது” என்றேன்.

சற்றே ஒவ்வாமையுடன் ருக்மிணிதேவி “கூறுக!” என்றார். “இந்நகர் முன்னரே சாம்பனின் ஆட்சியில் உள்ளது. அரசர் நகர்விட்டுச் செல்லும்போது ஆட்சி அவரிடம் வந்தது” என நான் தொடங்கும்போதே நக்னஜித்தி உரக்க “ஆம், ஏனென்றால் அப்போது மூத்தவராகிய பலராமருடன் பிரத்யும்னன் கானேகியிருந்தார்” என்றார். “ஆம், ஆயினும் நகரை அவர் ஆட்சி செய்தார். அன்றே நகரில் அவருடைய காவலும் கோன்மையும் நிகழ்ந்துவிட்டது. இன்று நகரைச் சூழ்ந்திருக்கும் படைவல்லமை அவர்களிடம் உள்ளது. மேலும் மேலும் அசுரர் இந்நகருக்குள் நுழைந்து அவர் தரப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். இடைமறித்த பத்ரை “நமது தரப்பை நாம் மேலும் வலுப்படுத்த முடியும். எல்லைக்கப்பால் விதர்ப்பப் பெரும்படையுடன் ருக்மி காத்திருக்கிறார்” என்றார். “அதை நான் அறிவேன்” என்றேன். “நான் சொல்லவருவது அதைத்தான்.” நக்னஜித்தி “பாரதவர்ஷத்தின் கண்ணில் பிரத்யும்னனே அரசரின் மைந்தர்” என்றார்.

“பொறு” என்று அவரிடம் கைகாட்டிவிட்டு ருக்மிணி என்னிடம் “அரசியல் சூழலை விளக்கவேண்டியதில்லை தாங்கள். தூதின் நோக்கம் என்ன என்று மட்டும் சொல்க!” என்றார். “பேரரசி, இங்கே எக்கணமும் பூசல் வெடிக்கும். எளிதில் எவரும் வெல்ல முடியாது. எவர் வென்றாலும் குருதியே பெருகும்… இதோ அஸ்தினபுரியில் நம் கண்ணெதிரே உடன்பிறந்தார் பூசலிட்டு முற்றழிந்த கதை உள்ளது” என்றேன். நக்னஜித்தி மீண்டும் ஊடுருவி “எவர் முற்றழிந்தனர்? எதிரியை அழித்து பெருஞ்சிறப்புடன் நாடாள்கிறார்கள் பாண்டவர்கள். பரிவேள்வியும் அரசவேள்வியும் செய்து பொன்றாப் புகழ் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கொடிவழியினருக்கு செல்வமும் புகழும் சேர்த்திருக்கிறார்கள்” என்றார்.

நான் மேற்கொண்டு என்ன சொல்வதென்று அறியாமல் சலிப்புற்றேன். ஆயினும் “ஆம், அரசி. அவ்வண்ணமே ஆயினும் அங்கே அழிந்தவர்கள் பல லட்சம்” என்றேன். “அழிவில்லாமல் வெற்றியும் புகழும் இல்லை” என்று நக்னஜித்தி சொன்னார். “குருக்ஷேத்ரப் பெரும்போர் காட்டும் உண்மை அதுவே. வெற்றியும் புகழும் பெரிதாகவேண்டும் என்றால் அழிவும் அதற்கிணையாக இருந்தாகவேண்டும். வென்றவர் பாரதவர்ஷத்தையே ஆள்கிறார் என்றால் பாரதவர்ஷமே அவரிடம் தோற்றாகவேண்டும். பாரதத்தை ஆளும் அறம் எழவேண்டும் என்றால் பாரதவர்ஷமே குருதி சிந்தியாகவேண்டும். ஆகவேதான் அதை இன்று மாபாரதப்போர் என்று சூதர்கள் பாடத்தொடங்கியிருக்கிறார்கள்.” நான் அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவருடைய முகத்திலெழுந்த அந்த தெய்வம் எனக்கு மிகப் புதியது.

“அரசி, நான் அப்போரில் ஈடுபட்டேன். என் மைந்தர் பதின்மரை இழந்தேன். அப்போருக்கு இப்படியொரு பொருள் அளிக்கப்படும் என இன்றுதான் தெளிவுகொண்டேன்” என்றேன். “ஆம், அப்போரில் இழந்தவர்கள் அவ்விழப்பைக் கொண்டே அதை மதிப்பிடுவார்கள். இழந்தவர்கள் சிலரே, எஞ்சியவர்கள் அனைவருமே எதையேனும் ஈட்டியவர்கள். அவர்கள் தாங்கள் ஈட்டியன கொண்டே அப்போரை மதிப்பிடுவார்கள். இனி அவ்வண்ணமே அது வரலாற்றில் நினைவுகூரப்படும்.” நான் பெருமூச்சுவிட்டேன். பின்னர் சிரித்து “ஆம் அரசி, மெய்தான். இப்போது அப்போர் பற்றி பேசுபவர்கள் அதை காணாதவர்கள். இனி பேசவிருப்பவர்கள் அனைவரும் அதை காணாதவர்களே. இனி அப்போர் அதை முற்றிலும் அறியாதவர்களால் வரையப்படும். அவர்கள் தாங்களறிந்த போர்களையே புனைவார்கள்” என்றேன்.

“போரின்றி வெற்றி இல்லை, வெற்றி இன்றி அறமில்லை” என்று பத்ரை சொன்னார். “மாபாரதப்போரின் செய்தி என்பது அதுதான். குருதியால் நிலைநிறுத்தப்படுவது அறம். சிந்தப்பட்ட குருதியால்தான் அது மதிப்பிடப்படவேண்டும்.” நான் நம்பிக்கையிழந்தேன். தலையை அசைத்து “இவ்வண்ணமே நிகழும் என அறிந்திருந்தேன், இத்தனை விரைவாக அல்ல” என்றேன். நக்னஜித்தி “இந்தப் போரிலிருந்து ஷத்ரியர் சிலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நெறி, மரபு எனுமிரண்டால் அவர்கள் கட்டப்பட்டிருந்தார்கள். நெறியின்பொருட்டும் மரபின்பொருட்டும் பூசலிட்டுப் போரிட்டு ஆற்றலிழந்தார்கள். ஆகவே அவர்கள் குருக்ஷேத்ரப் பெரும்போரில் தோற்கடிக்கப்பட்டார்கள்” என்றார். “ஆனால் அவர்கள் முற்றழியவில்லை. அவ்வாறு அழிபவர்களும் அல்ல. தந்தையரும் மைந்தரும் கொல்லப்படலாம், அன்னையரின் கருவறைகள் எஞ்சியிருக்கின்றன.”

“அந்நெறிகளும் மரபுகளும் துவாபர யுகத்திற்குரியவை. கலியுகத்தில் விழைவும், அதன்பொருட்டு கூர்கொண்ட ஒற்றுமையும் மட்டுமே முதன்மையானவை. கலியுகத்தில் கூட்டே ஆற்றல் என சொல்லியிருப்பவர் புதுவேதம் வகுத்த துவாரகையின் அரசரேதான். இனி மூத்தோர் சொல் அல்ல வெற்றியே அறத்தை முடிவுசெய்கிறது. அதை அறிய இத்தனை பெரிய விலையை ஷத்ரியர் கொடுக்க நேர்ந்தது. ஆனால் அதுவும் நன்றே. அத்தகைய பெரிய விலையே அப்பாடத்தை அத்தனை பெரிதாக ஆக்கமுடியும். இனி எழும் தலைமுறைகள் முழுக்க அந்தப் பாடம் நிலைகொள்ளும். கலியுகத்தை ஆள்வதெப்படி என ஷத்ரியர் குருக்ஷேத்ரப் படைநிலத்திலிருந்து கற்றுக்கொண்டுவிட்டார்கள்” என்று நக்னஜித்தி சொன்னார். நான் பெருமூச்சுடன் கைகளைக் கோத்துக்கொண்டேன்.

ருக்மிணிதேவி “அவர் பேசட்டும்” என்றார். அவ்வரசியரின் சொற்களை அவரும் ஏற்கிறார் என்று தெரிந்தது. நான் “அரசியரிடம் நான் கேட்கவிழைவது ஒன்றே. அஸ்தினபுரியில் நிகழ்ந்ததுபோல் ஒரு உடன்பிறந்தார்க்கொலை இங்கே துவாரகையின் முற்றத்தில் நிகழ ஒப்புவீர்களா?” என்றேன். “அதை அன்னையர் எவரும் ஒப்பார்” என்று நக்னஜித்தி சொன்னார். “அதை தவிர்க்கவே எண்ணுகிறோம். ஆகவே இங்கே முடிநிலைக்கவேண்டும். அதற்குரியவை என்ன என்பதையே பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று, ஒரு சிறு கைவீச்சில் ஷத்ரியப் படைகள் நகரில் நுழைந்து யாதவர்களையும் அசுரர்களையும் முற்றழித்துவிடமுடியும். இங்கே முழு வெற்றிகொண்டு அரியணை அமர முடியும். ஷத்ரியர்களுக்கு நெறிகள் ஆணையிடுவதும் அதுவே. எழும்காலங்களில் பிறிதொரு சொல்லின்றி நிறுவப்படும் கோன்மை அவ்வண்ணமே உருவாக இயலும். ஆயினும் நாங்கள் பொறுத்திருப்பது இங்கே குருதி பெருகலாகாதென்பதனாலேயே.”

“ஆனால் அதை எங்களால் முடிவெடுக்க இயலாதென்றே நிகழ்வுகள் காட்டுகின்றன. குருதியின் பாதையை குருதியே வகுத்துக்கொள்கிறது, இம்மண்ணில் குருதி வீழும்” என்று அவர் தொடர்ந்தார். அவருடைய முகத்தைக் கண்டபோது அது நான் எங்கோ கண்ட முகமெனத் தோன்றியது. அத்தனை அனல்கொண்ட முகத்தை பெண்களில் நான் அதற்கு முன் கண்டதுமில்லை. “குருதியின் மேல்தான் உறுதியான முடிவுகள் உருவாகுமென்றால் எழுக குருதி! குருதியே மேலும் குருதியை தடுக்குமென்றால் அது எதிர்க்குருதி என்றே கொள்ளப்படும். இதோ யாதவரும் நிஷாதரும் வந்து வந்து முந்துகிறார்கள். போர் போர் என நின்றிருப்பது அவர்களே. அவர்கள் கொன்றொழிக்கப்பட்டால் அதற்கு அவர்களே முழுப் பொறுப்பு.” நான் “அரசி, சாம்பன் எளிய வீரர் அல்ல. உங்கள் குடியிலும் சாவு நிகழலாம்” என்றேன்.

சீற்றம் மிக்க குரலில் “நிகழ்க! என் மைந்தர் களம்படுவார்கள் என்றால் அதுவும் ஏற்புடையதே. சாவுக்கு அஞ்சினால் வெற்றி இல்லை” என்று அரசி சொன்னார். “அறிக, என்றும் ஷத்ரியர் அசுரரையும் நிஷாதரையும் எதிர்த்து போரிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்! இன்னும் நெடுங்காலம் இப்புவியில் அது தொடரும்.” எழுந்து என் அருகே வந்து “பகைத்திறன் சொல்லி ஷத்ரியர்களை அச்சுறுத்துகிறீர்களா என்ன? கோசலம் எவரால் புகழ்பெற்ற நாடென்று அறிவீர்களா? அவுணர் குலம் முடித்து இலங்கைச் செருவென்று முடிசூடி அமர்ந்த ராகவராமனின் நிலம் எங்களுடையது. எங்கள் மூதன்னை ஒருத்தி அவனை ஈன்றாள், அந்த வயிறே என்னுடையதும். என் மைந்தரிடம் நான் எப்போதும் சொல்வது அதுவே. அவர்கள் முக்கண்ணனின் வில்லேந்திய ராகவராமனின் கொடிவழியில் வந்தவர்கள். அவன் பெயர் சொல்லி களம்நிற்க வேண்டியவர்கள்” என்றார்.

நான் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். நக்னஜித்தி சென்று அமர்ந்துகொண்டார். ருக்மிணிதேவி “உங்கள் செய்தியை சொல்லுங்கள், யாதவரே” என்றார். “அரசி, நீங்களே இங்கு கண்டீர்கள். போர் எழும் சூழல் உருவாகியிருக்கிறது. இளைய யாதவரின் குருதியினர் தங்களுக்குள் போரிட்டு அழியலாகாது. அதை தவிர்க்கும் ஆற்றல் கொண்டவர் அவர் மட்டுமே. அவர் படைத்த பெருநகர் இது. இதை காக்கும் பொறுப்பும் அவருக்கே உண்டு. அவரை இங்கு கொண்டுவருவது அவசியம். இளைய யாதவர் நுழைவதொன்றே இன்று நாம் செய்யக்கூடுவது. அவர் வந்து அரியணையில் அமரட்டும். அவர் ஆணைப்படி குடிப்பேரவை கூடட்டும். அங்கு எவர் முடிசூடவேண்டும் எவர் துணைநிற்கவேண்டும் என்று அவர் கூறட்டும். இங்கு யாதவருக்கோ அசுரகுலத்திற்கோ பிறருக்கோ கோரிக்கைகள் உண்டு என்றால் அதை அவரிடம் அவர்களே கேட்கட்டும். அவர்களுக்குரியதென்ன தகுதியானதென்ன என்று அவர் முடிவு செய்யட்டும். அவர் ஆணையை மீறிச் செல்பவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளட்டும், விளைவுகளை சந்திக்கட்டும். இன்று இப்போது மீறப்படாத ஆணை என எதுவும் எழவில்லை என்பதனாலேயே இத்தனை சிக்கல்கள் எழுந்துள்ளன. அரசர் நகர்புக வேண்டுமெனில் இங்கிருந்து அழைப்பு செல்லவேண்டும்” என்றேன்.

“இது அவர் நகரம். நாம் அழைத்தாலன்றி அவர் நகர்புக மாட்டார் என்று உங்களிடம் யார் சொன்னது?” என்று ருக்மிணிதேவி கேட்டார். “இங்கிருந்து அவர் கிளம்பவேண்டியிருந்தது என்பது உண்மை. இங்குள்ள குடிகள் அனைவரும் சேர்ந்து அவர் நகர்நீங்க வேண்டுமென்று கூறினோம். நம் வெறுப்பே அவரை நீங்கச் செய்தது” என்றேன். “இல்லை, அது அவருடைய மூத்தவரின் ஆணை” என்றார் நக்னஜித்தி. “ஆம், அவரது உடன்பிறந்தாரின் சொல் அவருக்கு இருந்தது. ஆகவே அவர் இங்கு மீண்டும் வரவேண்டும் என்று ஒரு சொல்லேனும் நம்மிடமிருந்து எழவேண்டும். அவரே வந்தால் விழைவுகொண்டு வந்தார் எனப் பொருள்படும். அழைக்காமல் எழுவதில்லை தெய்வங்கள். அரசி, அவ்வழைப்பை எழுப்பும் தகுதி கொண்டவர்கள் அவருடைய துணைவியர் நீங்கள்.”

“நீங்கள் எண்மரும் இணைந்து ஒரு சொல்லெடுங்கள். எங்கள் மைந்தருக்கு உரியவற்றை வகுத்தளியுங்கள் என்று கோருங்கள். அச்சொல்லை ஏற்கெனவே யாதவ அரசி அளித்துவிட்டார். தங்களிடம் இருந்தும் தங்கள் உடனிருக்கும் அரசியரிடமிருந்தும் அவ்வழைப்பு எழுமெனில் ஜாம்பவதியிடமிருந்தும் காளிந்தியன்னையிடமிருந்தும் அழைப்பை பெற்றுக்கொண்டு நான் கிளம்பிச்செல்வேன்” என்றேன். ருக்மிணிதேவி “எங்கள் சொல் எப்போதும் உள்ளது. இங்கு அவர் இல்லை என்பதை கணந்தோறும் உணர்ந்து காத்திருப்பவர்கள் நாங்கள். அவர் வரட்டும், அவரது ஆணை தலைக்கொள்ளப்படும். அதற்கப்பால் ஒரு சொல்லும் எழாது” என்று சொன்னார். “நீங்கள் விழைவது என் ஓலை என்றால் அதை நான் அளிக்கிறேன். இவர்களும் அளிப்பார்கள்.”

“தங்கள் மைந்தர்கள் சொல்லி அனுப்பியதென்ன என்பதையும் நான் கூறியாகவேண்டும். இளைய யாதவர் வந்தால் பிரத்யும்னனே முடிசூட்டப்படவேண்டும் என்றும், அதன்பொருட்டு மட்டுமே இளைய யாதவர் நகர்நுழையவேண்டும் என்றும் உங்கள் ஓலையில் சொல்லப்படவேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது” என்றேன். ருக்மிணி விழி சுருக்கி “அரசருக்கு ஆணையிட்டானா அவன்?” என்றார். “ஆம்” என்றேன். “அறிவிலி! இப்புவியில் எவரும் அவருக்கு ஆணையிட இயலாது” என்றார் அரசி. “அவர் வரட்டும், வந்து அவர் உகந்த முடிவை எடுக்கட்டும். அவர் சுட்டுவது எவராயினும் அவரே இந்நகரின் அரசர். என் மைந்தருக்கு ஒருதுளி பொன்னும் ஒருபிடி மண்ணும் இல்லையென்று கூறினாலும் அது எனக்கு முழு ஒப்புதலே” என்றார் ருக்மிணி.

“ஆனால் அது இங்குள்ள யாதவர்களுக்கோ அசுரர்களுக்கோ இயல்பான உரிமை இல்லை. அவர்களிடம் தோற்று என் மைந்தர் இந்நகரிலிருந்து செல்லக்கூடாது. அவர்களுக்கு அடங்கி இங்கிருப்பதும் ஒவ்வாது. அது ஷத்ரியர்களுக்குரிய பண்பல்ல” என்றார் ருக்மிணிதேவி. நக்னஜித்தி “எழுதவேண்டியது அதைத்தான். ஷத்ரியர் ஒருபோதும் பிறருக்குப் பணிந்து வாழமுடியாது” என்றார். “தந்தை அளிப்பதை அவர்கள் மறுக்கப்போவதில்லை, பிறரும் தந்தைசொல்லை மறுக்கக்கூடாது. அது ஒன்றே நான் வேண்டுவது” என்றார் பத்ரை. ருக்மிணிதேவி “ஆம், அவருக்கு முற்றளித்தோர் நாம். நம் மைந்தர் நமக்கு அவர் வடிவே. நம் மைந்தர் பொருட்டு நாம் கவலைகொள்வதும் அவர் புகழுக்கு மாற்றுக் குறையலாகாது, அவர் கொடிவழி சிறக்கவேண்டும் என்பதன் பொருட்டே. நாம் அவருக்கு எதையும் கூற வேண்டியதில்லை, நம் விழைவையோ ஐயங்களையோகூட. அவரே முடிவெடுக்கட்டும். அம்முடிவுக்குப் பின் நம் உணர்ச்சிகளைக்கூட அவரிடம் காட்டலாகாது. அவர் வரட்டும், அதன்பின் இங்கே சிக்கல்களே இல்லை” என்றார்.

“அதில் மாற்றில்லை அரசி, நான் விழைவதும் அதுவே” என்று கூறி “அவ்வண்ணமெனில் தங்கள் ஓலை ஒன்றை தருக! நான் பிற அரசியரை பார்க்கிறேன்” என்றேன். நக்னஜித்தி “எங்கள் ஓலை பிறரிடம் காட்டப்படுமா? சத்யபாமை அளித்த ஓலையின் செய்தி என்ன?” என்றார். “அரசி சத்யபாமை ஓலையென எதையும் அளிக்கவில்லை. அவருடைய கணையாழி ஒன்றே அளிக்கப்பட்டது” என்றேன். பத்ரை “ஒருவேளை ஜாம்பவதி அளிக்கும் ஓலையில் அரசருக்கான கோரிக்கை இருந்தால்?” என்றார். நக்னஜித்தி “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றார். “அதை நாம் எண்ணவேண்டியதில்லை. அவர் வரவேண்டும் என்பது நம் விழைவு. எவ்வண்ணமாயினும், எதற்காகவாயினும். அதுவே நம் ஓலையில் இருக்கட்டும்” என்றார் ருக்மிணி.

“ஆம் அரசி, தங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பதும் அது மட்டுமே” என்றேன். பேரரசி எழுந்துகொண்டு என்னிடம் “என்னிடமிருந்து அவருக்குச் செல்லவேண்டியது குலமுத்திரை அல்ல” என்றபின் தன் செவியருகே இருந்து பொன்மலர் ஒன்றை எடுத்து நீட்டி “இதை அவரிடம் கொடுங்கள்” என்றார். அதில் ஒரு மென்மயிர் சுற்றியிருந்தது. நான் அதை எடுக்கப்போனேன். “அது இருக்கட்டும்” என்று ருக்மிணிதேவி சொன்னார். “நானும் நக்னஜித்தியும் பத்ரையும் மித்ரவிந்தையும் சேர்ந்து ஓர் ஓலையை அளிக்கிறோம். அதை கொண்டு செல்க!” நான் தலைவணங்கினேன். நக்னஜித்தி வெறுமனே என்னை நோக்கியபடி நின்றார். “விடைகொள்கிறேன் அரசி, என் பணி எளிதாகிக் கொண்டிருக்கிறது” என்றேன். ருக்மிணிதேவி புன்னகைத்தார். நக்னஜித்தி ஒன்றும் சொல்லவில்லை.

நான் அக்கூடத்தைவிட்டு வெளியே வந்தேன். மீண்டும் ஒரு தனிமை வந்து என்னை சூழ்ந்துகொண்டது. அந்நகரில் எனக்கு எவருமே துணையில்லை என்பதுபோல. அங்கே ஒருகணமும் தங்கலாகாது என்பதுபோல. மெய்யாகவே அங்கிருந்து அப்படியே கிளம்பிச் சென்றுவிடவேண்டும் என்றுதான் எண்ணினேன். அரசியின் முகத்திலும் அந்தச் சலிப்பை பார்த்தேன் என உணர்ந்தேன். அவரும் அவ்வண்ணமே கிளம்பிச் சென்றுவிடவேண்டும் என பலமுறை எண்ணியிருக்கக் கூடும். அரசே, பின்னர் ஒன்று உணர்ந்தேன். கோசல அரசி நக்னஜித்தியின் முகத்தில் நான் கண்டது தங்களை. என்றோ எங்கோ கண்ட ஒரு கணம் அவ்வண்ணம் நினைவில் பதிந்திருக்கிறது. அது உங்கள் முகத்தோற்றமேதான்.

முந்தைய கட்டுரைஅங்கி [சிறுகதை]
அடுத்த கட்டுரைதவளையும் ராஜகுமாரனும் – கடிதங்கள்