‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 4

எந்தச் சொல்லுடன் அரசி ருக்மிணியை சென்று பார்ப்பது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. அரண்மனையின் இடைநாழியில் தயங்கியபடி நடந்து கொண்டிருக்கும்போது என்னை இரு ஏவலர்கள் வந்து சந்தித்தனர். சொற்களாலும் விழிகளாலும் என்னை பற்றிக்கொண்டனர் என்று சொல்வதே சரி. “துவாரகையின் அரசர் தங்களை அழைக்கிறார்” என்றனர். அச்சொல் என்னை எரிச்சல்படுத்தியது. துவாரகையின் எல்லைக்குள் அரசர் என்ற சொல்லை ஒருவருக்கன்றி பிறருக்கு பயன்படுத்தலாகாதென்று என் அகம் உணர்வதுண்டு. “இங்கே அரசர் ஒருவரே. அவர் இப்போது நகருக்குள் இல்லை. நீங்கள் கூறும் அரசர் எவரையும் எனக்குத் தெரியாது” என்று நான் சொன்னேன்.

காவலர்தலைவன் “தாங்கள் வருவது நன்று. துவாரகைக்கும் யாதவநகரிக்கும் இன்று அரசர் ஒருவரே. அரசர் பிரத்யும்னனின் ஆணை இது. தாங்கள் மறுத்தால் படைக்கலம் நீக்கி சிறைசெய்து அழைத்துச்செல்ல வேண்டியிருக்கும், எங்களுக்கான அரசாணை அது” என்றான். அந்த ஆணையிலிருந்த அறியாமை என்னை புன்னகைக்க வைத்தது. “நன்று!” என்றபின் அவர்களுடன் சென்றேன். அவர்கள் சிறு நிறைவை அடைந்தனர். அவர்களும் பூசலை விரும்பவில்லை. ஏனென்றால் பூசல்கள் ஒவ்வொன்றும் துவாரகையில் உடனடியாக வளர்ந்தன. அதில் ஈடுபட்டவர்கள் பின்னர் நெடுநாட்களுக்கு அதிலிருந்து விடுபட முடியாது.

அரண்மனையின் அப்பகுதி மகரக்கொடிகளுடன் திகழ்ந்தது. பிரத்யும்னன் தனக்கென முதலையை அடையாளமாகக் கொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் அனைத்து நுழைவாயில்களுக்கு மேலும் முதலைமுத்திரை இருப்பதையும், துவாரகையின் கொடி அங்கே தாழ்ந்தே பறப்பதையும் விந்தையாகவே பார்த்தேன். பலமுறை துவாரகையின் அரண்மனைக்குள் வந்து சென்றிருந்தாலும்கூட அவ்வாறு ஒரு அரண்மனையே பல நாடுகளாக பிரிந்திருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. அதற்கும் சேர்த்தே அவ்வரண்மனையை அத்தனை பெரிதாக நீங்கள் படைத்தீர்கள் என்று எண்ணியபோது உண்மையில் சிரிப்புதான் வந்தது. அகன்ற படிகளில் ஏறி மேலே சென்றோம். முதல் மாடத்திற்கு மேலிருந்த இளஞ்சிவப்புப் பளிங்காலான அவைக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். அழைப்பு வந்து நான் உள்ளே சென்றேன். அங்கே பிரத்யும்னனும் தம்பியரும் அமர்ந்திருந்தனர்.

நான் தலைவணங்கி “இளவரசருக்கு வணக்கம். என்னை அழைத்து வரும்படி சொன்னதாக அறிந்தேன்” என்றேன். சுதேஷ்ணன் எரிச்சல் தெரிய “இங்கு அனைவரும் அரசர் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்” என்றார். “நானும் பயன்படுத்துகிறேன். முறைப்படி முடிசூடிய பின்னர். இந்நகர் துவாரகையின் அரசருக்குரியது, அவர் தொட்டு எடுத்துச் சூட்டும் மணிமுடியே முறைமைகொண்டது” என்று நான் சொன்னேன். சுதேஷ்ணன் மேலும் ஏதோ சொல்வதற்குள் பிரத்யும்னன் கைநீட்டி அவரைத் தடுத்து “நாம் இப்போது பூசலிட வேண்டியதில்லை. நிகழ்ந்தது அனைத்தையும் நாங்கள் அறிவோம். எங்கள் ஒற்றர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்” என்றார். நான் “அறிவேன்” என்றேன். “தாங்கள் அன்னையை சந்திக்கப் போகிறீர்கள் அல்லவா?” என்றார் பிரத்யும்னன். “ஆம், அதற்கு ஏதும் தடை உண்டா?” என்றேன். “தடையில்லை, தாங்கள் சந்திக்கலாம்” என்றார் பிரத்யும்னன்.

“ஆனால் அன்னையிடம் கூறுக, அரசர் இங்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம் என்று! அதில் எங்களுக்கு எந்தத் தடையுமில்லை. அதை எங்கள் சொல்லில் இருந்து பெற்று அவரிடம் சொல்லவேண்டும் என்பதற்காகவே தங்களை இங்கு அழைத்தோம்” என்று பிரத்யும்னன் சொன்னார். “நன்று, பிறகென்ன?” என்று நான் சொல்லி எழப் போனேன். இளையவரான சாரகுப்தன் “சற்று பொறுங்கள். ஆனால் அரசியிடம் சொல்லவேண்டியவை மேலும் சில உள்ளன. தந்தை இங்கு வரட்டும், ஆனால் அவர் வருவது ஒரு செயலின் பொருட்டே என்றிருக்கவேண்டும். முறைப்படி துவாரகையின் அரசரென மூத்தவர் பிரத்யும்னன் முடிசூட வேண்டும்” என்றார். நான் புன்னகைத்து “நான் அவருக்கு அந்த ஆணையை முறைப்படி பிறப்பிக்க வேண்டும் அல்லவா?” என்றேன்.

“ஏளனம் புரிகிறது. ஆனால் ஆணைதான் அது. எங்கள் ஆணை அல்ல, வேதமரபின் ஆணை. பாரதவர்ஷத்தின் நெறிகளின் ஆணை. நாங்கள் ஷத்ரிய குடிப்பிறந்தவர்கள், மண்ணாளும் உரிமை ஷத்ரியர்களுக்கு வேதங்களால் வழங்கப்பட்டுள்ளது. தன்னை எதிர்ப்பவர் அனைவரையும் வென்று மண்ணைக் கொள்ளும் உரிமையும் பொறுப்பும் ஷத்ரியனுக்கு உண்டு. அவன் அதில் தவறினால் பழி வந்து சேரும். எங்கள் அன்னை யாதவ அரசரால் மணம்கொள்ளப்பட்டபோது இந்நிலம் அவர் வயிற்றில் பிறந்த மைந்தர்களுக்குரியது என்று இயல்பாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. அன்று அதை எவரும் மறுக்கவில்லை. இங்கு அரசியர் எண்மர் இருந்தபோதிலும்கூட பெரும்பாலும் அரசர் அமர்ந்த அவைக்கூடங்கள் அனைத்திலும் பட்டத்தரசியென எங்கள் அன்னையே அமர்ந்திருக்கிறார் என்பதே அதற்குச் சான்று. என் அன்னைக்குரியது இந்த நிலம், ஆகவே எங்களுக்குரியது.”

“இதை குருதி உரிமையின் அடிப்படையில் எதிர்க்கிறார்கள் யாதவர்கள். எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்க்கிறார்கள் அசுரக்குருதி கொண்டவர்கள். அது எப்போதும் அப்படித்தான், இங்கே ஷத்ரியர்கள் வெல்ல வேண்டியவர்கள் யாதவர்களும் நிஷாதர்களும் அசுரர்களுமாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களின் மேல் எங்கள் கோல் நின்றாக வேண்டும். அதற்குரிய ஆற்றல் எங்கள் கோலுக்கு இருக்கிறதா என்று அறியும் பொருட்டே இவ்வாறு நிகழ்ந்ததென்று கொள்கிறோம். அன்னையிடம் கூறுக, அவர் தந்தை இங்கு வரவேண்டுமென்று சொல்லளிப்பாரென்றால் எதன்பொருட்டென்றும் ஒரு சொல் அதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்!” என்றார் பிரத்யும்னன். “இந்த அரசின் பொறுப்பை என்னிடம் பலமுறை அரசர் அளித்ததுண்டு. பல களங்களில் அரசரின் வாள்துணைவனாக நின்றவன் நான். மரபால் மணிமுடியும் வீரத்தால் உடைவாளும் எனக்குரியவை.”

எவ்வுணர்வையும் வெளிக்காட்டாமல் “நான் இவ்வாணையை அரசியிடம் தெரிவிக்கிறேன்” என்றேன். “ஆம், இது ஆணையேதான். துவாரகையின் செங்கோலை நான் கையிலெடுத்துவிட்டேன், மணிமுடி என் அருகேதான் இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள இணையரசர்கள் பன்னிருவர் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நக்னஜித்தியின் மைந்தர்கள், மித்ரவிந்தையின் மைந்தர்கள், பத்ரையின் மைந்தர்கள், லக்ஷ்மணையின் மைந்தர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் எவருக்கும் பணியவேண்டிய தேவையில்லை.” நான் “இல்லையே, லக்ஷ்மணையின் மைந்தர்கள் நிலைபாடு கொள்ளவில்லை என்றல்லவா அறிந்தேன்?” என்றேன். “அவர்கள் இங்குதான் வருவார்கள். வேறுவழியில்லை. சிம்மனும் பலனும் பிரபலனும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். ஊர்த்துவாகனும் ஓஜஸும் மகாசக்தனும் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மூத்தவர் பிரகோஷனுக்கு சில ஐயங்கள் உள்ளன. அவை பேசித் தீர்க்கப்படவேண்டியவை மட்டுமே.”

“ஆகவே சென்று கூறுக, எங்கள் வெற்றி உறுதி என! பெரும்படையுடன் ருக்மி இந்நகருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார். எத்தருணத்திலும் விதர்ப்பம் துவாரகையுள் நுழைந்து துவாரகையை வென்று மணிமுடியை எனக்கு அளிக்க முடியும். அதை எதிர்க்கும் ஆற்றல் இன்று அஸ்தினபுரிக்கோ பிற நகர்களுக்கோ இல்லை. விருஷ்ணிகள் பெரும்பாலானவர்கள் போரில் அழிந்திருக்கிறார்கள். இங்கு எஞ்சுபவர்களில் பெரும்பாலானோருக்கு படைக்கலப் பயிற்சி கிடையாது. ஆனால் விதர்ப்பம் குருக்ஷேத்ரப் பெரும்போரில் இடம் பெறவில்லை, நடுநிலைகொண்டது. பின்னர் முற்றாக ஒதுங்கிக்கொண்டது. ஆகவே அப்படைகள் அழியாமல் அவ்வண்ணமே எஞ்சியுள்ளன. துவாரகையுடன் கணக்கை முடிக்கும்பொருட்டே மாதுலர் ருக்மி அந்நிலைபாட்டை எடுத்திருக்கிறார். இன்று திரண்டு சென்றால் அஸ்தினபுரியை கைப்பற்றவும் விதர்ப்பத்திற்கு படையாற்றல் உண்டு.”

“மாதுலர் ருக்மி வஞ்சினம் கொண்டிருக்கிறார். அனல்வண்ண மகாருத்ரர் எனத் திகழ்கிறார். அவருடைய படைகள் அவரைப்போலவே வெறிகொண்டிருக்கின்றன. அவரை இந்நகருக்குள் நுழையவேண்டாம் என்று நான் தடுத்து வைத்திருப்பது ஒன்று கருதி மட்டுமே. என் தந்தை உருவாக்கிய நகரம் இது. அதை அவரது எதிரி வென்றார் என்ற பழி உருவாக நான் வழிவகுக்கக்கூடாது என்பதனால். துவாரகைக்குமேல் விதர்ப்பத்தின் கொடி பறக்கலாகாது என்பதனால். விதர்ப்பத்தின் அளிக்கொடையென துவாரகை என் கைக்கு வந்தால் அது எனக்கும் சிறுமை. ஆனால் இங்குளோர் உண்மையுணராது இவ்வண்ணமே பூசலிட்டுக்கொண்டிருப்பார்கள் எனில் எனக்கு வேறு வழியில்லை என்றாகும்.”

“அன்னையிடம் கூறுக, அவருடைய கொழுநர் உருவாக்கிய இப்பெருநகரை அவர் தமையர் வெல்வது அவருக்கு உகந்ததா என்று! அவ்வழிவை கொண்டுவந்தவர் அவர் என்று காலம் சொல்லலாகும். ஷத்ரிய அரசி யாதவரை முற்றழித்தார் என்று சூதர் நாச்சொல் உரைக்கக்கூடும். அவ்வாறு நிகழாமல் தடுக்க வேண்டுமெனில் தந்தை வந்து எங்களுக்கு மணிமுடி சூட்டுவதே வழி என்று அவர் உணரட்டும். யாதவ அரசிபோல முத்திரை மோதிரம் அல்ல, தெளிவாக எழுதப்பட்ட ஓர் ஓலையையும் அவர் அளிக்கட்டும். எங்களை சந்தித்த பிறகே அவரை சந்திக்கச் செல்கிறீர்கள் என்பது அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். நாங்கள் கூறியதென்ன என்று அவர் கேட்பார். நாங்கள் கூறியதை அவரிடம் கூறுக!” என்றார் பிரத்யும்னன். அவருடைய இளையவர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். அவை அவர்களின் சொற்கள் என விழிகள் காட்டின. சாருசந்திரன் மெல்லிய உறுமலோசை எழுப்பினார்.

நான் “இவற்றை ஏற்கெனவே நீங்கள் அரசியிடம் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன். “பலமுறை பேசியிருக்கிறோம். அவர் எங்கள் சொற்களை செவிகொள்வதாகவே தெரியவில்லை. இப்போதெல்லாம் அரசுசூழ்தல் குறித்து பேசுவதற்கு எங்களுக்கு ஒப்புதலும் கிடைப்பதில்லை. மாதுலர் ருக்மியின் படைகள் வந்து அவந்தியின் எல்லைக்கு மிக அருகே பாலையில் தங்கியிருக்கும் செய்தி அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே உங்களை அனுப்புவது இதற்குரிய தருணம். நீங்கள் தந்தையின் பெயரை சொல்லும்போது அவர் உள்ளம் திறக்கலாம். அப்போது இச்செய்தியை அவரிடம் சொல்க, அவர் நிலைமையை புரிந்துகொள்ளட்டும்” என்றார் சுதேஷ்ணன். “உங்களுக்கும் வேறுவழியில்லை, சொல்லியே ஆகவேண்டும்” என்றார் பிரத்யும்னன்.

“வேறேதும் உண்டா?” என்றபடி நான் எழுந்துகொண்டேன். “நீங்கள் எங்களை எளிதாக எண்ணிவிட்டீர்கள். ஐயம் தேவையில்லை, உடன்குருதியினரே ஆயினும் முடிக்கு எதிராக எழுவார்கள் என்றால் கொல்வதற்கு ஷத்ரியர்களுக்கு உரிமை உண்டு. யாதவர்களையும் அசுரக்குருதி கொண்டவர்களையும் முற்றிலும் கொன்றொழித்து முடிசூடுவது என்றாலும் எனக்கு எவ்வகைத் தயக்கமுமில்லை. ஒருகணமும் பிறிதெண்ணாமல் நாங்கள் அதை செய்வோம். எண்ணுக, ஷத்ரியரே அதை செய்யமுடியும், யாதவரால் அவ்வண்ணம் தங்கள் எல்லைகளைக் கடந்து எழமுடியாது! எதற்கும் தயங்காதவர்களுக்குரியது மணிமுடி என்கின்றன நூல்கள். எதற்கும் தயங்காத மாதுலரும் எங்களுடன் உள்ளார்” என்றார் பிரத்யும்னன். நான் புன்னகைத்து “எதற்கும் தயங்காத மாதுலர்கள் எழுந்தபடியே இருக்கிறார்கள்” என்றேன்.

சுதேஷ்ணன் சீற்றத்துடன் “முட்பேச்சுக்கள் தேவையில்லை. எங்கள் மாதுலர் சூழ்ச்சி சொல்பவர் அல்ல, வாள்கொண்டு படைதிரட்டி களமெழ வந்து நிற்பவர்” என்றார். “இந்நகருக்குள் பெரும்புகழ் கொண்ட இளைய யாதவரின் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் வெட்டி உயிர்துறந்தனர் என்றாகவேண்டாம் என்பது ஒன்றே என்னை கட்டுப்படுத்துகிறது” என்றார். பின்னர் அமர்ந்துகொண்டு “அதற்கப்பால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். நான் “இவ்வனைத்தையும் ஊழ் நிகழ்த்துகிறதென்றால் உங்கள் தந்தை வந்து என்ன செய்யமுடியும்?” என்றேன். “இங்கு சிலரிடம் இன்னமும் திகழ்வது அவரது சொல். அவர்களின் மேல் படைக்கலவெற்றியை நான் ஈட்ட முடியும், ஆனால் அதற்குமுன் அனைத்து வழிகளையும் அரசன் என நான் உசாவவேண்டும்” என்றார் பிரத்யும்னன்.

“இன்று நான் முடிசூட தந்தைசொல் தேவையில்லை. ஆனால் நாளை ஒருநாள் என் கொடிவழியினரை எதிர்ப்பவர்கள் தந்தைசொல் இன்றி சூடப்பட்ட முடி என கூறக்கூடும். என் கொடிவழியினரே அவ்வாறு சொல்லி பூசலிடக்கூடும். ஆகவே அவர் சொல் தேவையாகிறது. அதற்காகவே அவர் வருவதை விழைகிறேன். என்னை அரசமர்த்தும் சொல்லுடன் அவர் வரட்டும்” என்று பிரத்யும்னன் தொடர்ந்தார். எழுந்து என் அருகே வந்தார். அருகே வந்தபோது அவர் தோற்றமளித்த அளவுக்கு உறுதியுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். அவர் உடலும் அசைவும் உறுதியைத்தான் காட்டின. ஆனால் என் அகம் அவருடைய நிலைகொள்ளாமையை, நடுக்கத்தை உணர்ந்தது. அவர் எப்போதும் அந்நிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

“யாதவர்கள் இங்கே என்னை முதன்மையாக எதிர்க்கிறார்கள். அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் அவர்கள் அமைக்கும் புறநாடுகளை துவாரகை ஏற்கும் என்னும் சொல்லுறுதியே போதும். யாதவர்களுக்கு இந்நகரமே தேவை. அவர்களை இங்கு நிலைநிறுத்துவது ஒன்றுதான். மதுரையை ஆளும் மூத்தவர் பலராமர் சத்யபாமையின் மைந்தர் ஃபானுவையே முடிசூட்ட விரும்புகிறார். விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் ஒன்றே என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பலராமரும் அவருடைய அணுக்கர்களும். விருஷ்ணிகளில் ஒருவர் முடிசூடினால் அந்தகர்களுக்கும் போஜர்களுக்கும் அரசுமீது எவ்வுரிமையும் இல்லை என்று சொல்லி பரப்பி அவர்களுக்கிடையே நாங்கள் பூசலை உருவாக்கி வைத்திருக்கிறோம். அப்பூசலே இங்கே ஒரு அசைவின்மையை உருவாக்கியிருக்கிறது.”

“ஆனால் ஒருவேளை பலராமர் இங்கு வருவார் என்றால், ஓர் அவையில் அனைவரையும் அமரச்செய்வார் என்றால், அவரது ஆணையை அவர்கள் தலைக்கொள்ளக்கூடும். அவர்கள் ஒருங்கிணைந்தால் நாங்கள் அஞ்சவேண்டிய ஆற்றல்தான் அது. அப்போது மாதுலர் ருக்மி கோசலநாட்டுப் படையும் அவந்தியின் படையும் துணைக்க நகர்நுழையாமல் இம்முடியை நாங்கள் கொள்ள இயலாது. துவாரகையின் நிலத்தில் அதன் குடிகளாகிய யாதவர்கள் கொன்று ஒழிக்கப்படாமல் இங்கு ஒரு மணிமுடி நிலைகொள்ளவும் இயலாது. யாதவரின் நலம்நாடும் நீங்கள் இதை யாதவர்களிடம் சொல்லுங்கள். இந்நிலைமை இங்கு உருவாகவேண்டாம் என அரசியிடமும் கூறுங்கள்.”

“ஆம், நான் அரசியிடம் அனைத்தையும் சொல்கிறேன்” என்று சொல்லி எழுந்துகொண்டேன். வெளியே செல்கையில் என்னால் சிரிக்காமல் இருக்க இயலவில்லை. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை முன்னரே அறிந்திருந்தாலும்கூட அது அவ்வளவு தெளிவான சொற்களாக எழுந்து வந்து கண்முன் நிற்பதைக் கண்டபோது திகைப்புக்கு மாறாக சலிப்பும் நகைப்புமே தோன்றியது. உண்மையில் சென்று அரசியை பார்க்கவேண்டுமா, அதனால் ஏதேனும் பயனுண்டா என்றே எண்ணினேன். நான் எடுத்த செயல் முறையானதுதானா? ஆனால் இனி அதை தவிர்க்க இயலாது. மேலும் அரசியின் உளநிலை என்னவாக இருக்கும் என்பதை அறிய விரும்பினேன். அரசியை காணவேண்டுமென்று ஏவலனிடம் சொல்லி அனுப்பினேன்.

 

ஒழிந்து ஆகவே பொடிபடிந்து கிடந்த இடைநாழியினூடாக அரசி ருக்மிணி தங்கியிருந்த மாளிகையை நோக்கி சென்றேன். கிழக்கு நோக்கி அமைந்திருந்த அந்த மாடம் அரண்மனையிலிருந்து தனித்து பிரிந்து சென்ற பாதையால் ஆனது. அதனூடாக நடந்து செல்கையில் பலநூறு விழிகள் என்னை பார்ப்பதை உணர்ந்தேன். துவாரகையின் ஏவலரும் சேடிப்பெண்டிரும் அமைச்சர்களும் அனைவருமே அங்கு என்ன நிகழ்கிறதென்று அறிந்திருந்தனர். குடிகளும் அறிந்திருக்கலாம். முதலில் இவ்வண்ணம் தங்களுக்குள் பூசலிடுவது அவர்களுக்கு அளித்திருந்த பதற்றமும் உளக்குழப்பங்களும் மறைந்து ஒவ்வொருவரும் அந்த நாற்களமாடலில் ஒரு பகுதியை விரும்பி ஆடத்தொடங்கிவிட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் களத்தில் காய்கள் இருந்தன. ஒவ்வொருவரும் கதைகளை புனைந்து கொண்டிருந்தனர். வென்று தோற்று வெறிகொண்டு எழுந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கதை ஒன்றை புனைவது ஏன் என்று எண்ணிப்பார்த்தேன். தங்களுக்கும் வரலாற்றில் ஒரு பங்குண்டு என்று ஒவ்வொருவரும் எண்ண விழைகிறார்கள். அத்தனை பேரும் தங்களுக்கு அணுக்கமான ஒருவர் அரண்மனையின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார் என்றும், அவர் தன்னிடம் தனியாக இதை சொன்னார் என்றும் சொல்லிக்கொண்டார்கள். பிற எவருக்கும் தெரியாத மந்தணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. எண்ணி நோக்குகையில் சொல்லிச் சொல்லி பெருக்கப்பட்ட பொய்யான அரசியலையே மெய்யான அரசியல் தயங்கித் தயங்கி பின்தொடர்கிறது என்று தோன்றியது. சூழ்ச்சிகள், அடிவெட்டுகள், எண்ணாத திசைக்கு எழுந்து சென்று அமரும் தாவுதல்கள், எண்ணி எண்ணி எழும் அச்சங்கள், பெருக்கிப்பெருக்கி வானில் நிறுத்தும் ஐயங்கள். அவையே வரலாறு. அவை நுரையென அடங்கியபின் எஞ்சும் வண்டலென நாம் அடையும் சென்றகாலத்துச் செய்திகள் அல்ல.

மானுட உள்ளம் இங்கு நிகழும் வாழ்க்கையை நோக்கிக்கொண்டிருக்கிறது. அது பொருட்களால் நிகழ்கிறது, உயிர்களால் இயற்றப்படுகிறது. அவர்களுக்கு அது போதவில்லை. ஒளியாலும் காற்றாலும் காலத்தாலும் அது நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவை அனைத்தையும் இணைத்து சொல்லால் அவற்றை நிகழ்த்திக்கொள்கிறார்கள். கற்பனையால் மேலும் பெருக்கிக்கொள்கிறார்கள். அரசே, அரசியலென்பது குடிகளின் கண் முன் நிகழும் மாபெரும் கூத்து, குடிகளின் முன் வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் அக்கூத்தில் ஈடுபடுகிறார்கள். குறைந்துவிடலாகாது என்று, ஆணவம் தாழ்ந்துவிடலாகாது என்று, நாளை வரலாறு சொல்லும் என்று, இன்று குடிகள் என்ன எண்ணுகிறார்கள் என்று, இழிபெயர் வந்து அமையும் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவ்வாறு எண்ணும் ஒவ்வொருவரும் தங்களை நடிகர்கள் என்றே உணர்கிறார்கள்.

நடிகர்கள் அறியாத ஒன்று உண்டு, எந்த நாடகத்தையும் வடிவமைப்பவர்கள் பார்வையாளர்களே. அவர்களின் பாராட்டும் சலிப்பும் எதிர்பார்ப்பும் பெருவிசையென எழுந்துவந்து நடிகனின் கால்களை பற்றிக்கொள்கின்றன. அவனை நடிக்க வைக்கின்றன. சொல் கூட்டச் செய்கின்றன. எழவும் விழவும் ஆணையிடுகின்றன. நானும் நடிகனே என்று உணர்ந்தபோது உண்மையில் என் உளம் அங்கிருந்து விலகி ஓடிவந்துவிட்டது. ஒருகணமும் அங்கு இருக்கலாகாது என்று தோன்றியது. ஆனாலும் நான் அந்த நாடகத்தை நடித்தே ஆகவேண்டும் என்று உணர்ந்தேன்.

அவையிலிருந்து பின்னால் எவரோ என்னைத் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். காலடியோசை கேட்டு நின்றேன். என்னைத் தொடர்ந்து வந்த காவலன் மூச்சுவாங்க நின்று “ஒரு சொல் தங்களிடம் பேசவேண்டும் என இளவரசர் விழைகிறார்” என்றான். “யார்?” என்றேன். “இளவரசர் சாருதேஷ்ணன். அவர் உங்களை அழைத்துவரச் சொன்னார்.” நான் எதையோ மணம்பெற்றுவிட்டிருந்தேன். ஆகவே உடன் சென்றேன். சிற்றறைக்குள் இளவரசர் சாருதேஷ்ணனும் சாருசந்திரனும் விசாருவும் இருந்தனர். நான் தலைவணங்கி முகமன் உரைத்தேன். அமர்க என அவர் கைகாட்டினார். நான் அவர் பேசுவதற்காக காத்திருந்தேன்.

அவர் என்னிடம் பேச சொற்கூட்டிக்கொண்டிருந்தார். பின்னர் முதற்சொல்லை எடுத்தார். “மூத்தவர் அங்கே பேசியவற்றை கேட்டேன். நன்று! அங்கே நீங்கள் உரைத்தவையும் நன்றே” என்றார். “ஆம்” என்று பொதுவாக சொன்னேன். “நான் ஒன்றை மட்டும் சொல்ல விழைகிறேன். அங்கே பேசியபோது மூத்தவர் அசுரர்களைப் பற்றி ஒரு நற்சொல் உரைத்ததை கேட்டிருப்பீர்கள்” என்றார் சாருதேஷ்ணன். “ஆம்” என்றேன். “அவர் அவ்வாறுதான் சொல்லமுடியும். ஏனென்றால் இளமையிலேயே அவர் சம்பராசுரரால் கொண்டுசெல்லப்பட்டவர். சம்பராசுரரின் அரண்மனையில் வளர்ந்தவர். இன்றும் சம்பராசுரரை தன் தந்தையின் இடத்திலேயே வைத்திருக்கிறார். அசுரகுலத்தைச் சேர்ந்த வஜ்ரநாபரின் மகள் பிரபாவதியை மணந்தவர். பிரபாவதியின் மைந்தர்கள் வஜ்ரபாகுவும் வஜ்ரகீர்த்தியும் இன்றும் வஜ்ரநாபரின் அரண்மனையிலேயே வளர்கிறார்கள்.”

நான் “ஆம்” என்றேன். அவர் செல்லும் திசை எனக்கு புரிந்துவிட்டது. “அவர் மைந்தன் அனிருத்தனோ பாணாசுரரின் மகள் உஷையை மணந்திருக்கிறான். உஷையின் மைந்தன் வஜ்ரநாபனை தன் முதன்மைப் பெயரனாக சடங்குசெய்து அமர்த்தியும் இருக்கிறார்” என்று சாருதேஷ்ணன் சொன்னார். “எண்ணும் திறன்கொண்ட எவரும் உய்த்துணரும் வினா ஒன்று உண்டு. பாரதவர்ஷத்தில் என்றும் ஷத்ரியர்களுக்கு முதன்மை எதிரிகள் அசுரர்களே. ஷத்ரியர்களின் மண்ணையும் முடியையும் கொள்ள நினைப்பவர்கள் அசுரர்கள். அசுரக்குருதியுடன் இவ்வண்ணம் இணைந்துள்ள ஒருவர் எப்படி ஷத்ரிய குடியின் அரசர் என்று ஆகமுடியும்? எதை நம்பி அவரை ஏற்கமுடியும்?” என் விழிகளை நோக்கியபோது அவர் விழிகள் சற்று பதறின. “இதை நான் கேட்கவில்லை. இங்குள்ள ஷத்ரியர்கள் கேட்கிறார்கள்.”

“இதை நீங்களே உங்கள் மூத்தவரிடம் சொல்லலாமே?” என்றேன். “சொல்லும் காலம் வரவில்லை. இதை முதலில் உணரவேண்டியவர் மாதுலராகிய ருக்மி. அவர் ஷத்ரியப் பெரும்படையுடன் அரசமையச் செய்யவிருப்பது அசுரர்களுக்கு உகந்த ஓர் அரசரை என அவரிடம் சொல்லியாகவேண்டும்” என்று சாருதேஷ்ணன் சொன்னார். “ஆனால் நெடுங்காலம் இவ்வுண்மையை அவரிடமிருந்து மறைக்க முடியாது. இப்போதே ஷத்ரியர்களிடம் பேச்சுக்கள் தொடங்கிவிட்டன.” நான் “இதில் நான் செய்வதற்கு என்ன உள்ளது?” என்றேன். “நீங்கள் ஒன்று செய்யலாம். அன்னையிடம் சொல்லுங்கள், அரசர் இங்கே வரும்போது அவர் கையால் முடிசூட்டப்படவேண்டியவர் எவர் என முன்னரே அவர் அறிவிக்கவேண்டியதில்லை என. அவர் தன் விருப்பத்தை அவைகூடி அனைவருடைய ஒப்புதலையும் பெற்றபின் அறிவிக்கட்டும்.”

“ஆனால் உங்கள் மூத்தவரின் ஆணை அதுவல்ல” என்றேன். “ஆம், அதை நான் அறிவேன். மைந்தரில் ஒருவருக்கு முடிசூட்ட அரசர் இங்கே வரவேண்டும் என அன்னை சொல்லட்டும். அது மூத்தவர் என்று உட்குறிப்பு உள்ளது என அவர் நினைக்கட்டும். அரசர் வந்தபின் அவையில் ஷத்ரியர் எழுந்து தங்கள் ஐயத்தை சொல்லட்டும். யாதவக்குருதியின் கொடிவழியில் அசுரக்குழவி பிறந்தால் அது யாதவர்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொள்வது அல்லவா?” என்றார் சாருதேஷ்ணன். “இளவரசே, கார்த்தவீரியர் அசுரக்குருதி கொண்டவர். இளைய யாதவரே லவணகுலத்து மரீஷையின் குருதியிலிருந்து வந்தவர்” என்றேன். “ஆம், ஆகவேதான் தூய ஷத்ரியக்குருதியே அவர்களை மேம்பாடுகொள்ளச் செய்யும் என்கிறேன். வேதத்துணை அவர்களுக்கு அவ்வாறுதான் அமையமுடியும். இங்கே நாற்குலங்களும் ஷத்ரியர்களாக ஆகவே முயல்கின்றன. மேலெழுந்து வந்த யாதவகுலம் ஏன் கீழிறங்கி அசுரர்களாகவேண்டும்?”

“நான் இதை அரசியிடம் சொல்கிறேன்” என்றேன். “அவருக்கும் இது புரியும். அனைத்துக்கும் அடியில் அவரும் ஷத்ரியர்தான்” என்று சாருதேஷ்ணன் சொன்னார். “அவரை எந்தை மணந்ததேகூட யாதவக்குருதிக்கு ஷத்ரியத்தூய்மை அமையட்டும் என்றுதான். கலங்கிய நீரை நன்னீர் கலப்பு தெளியவைக்கும்.” நான் புன்னகைத்தேன். “இன்று என்னுடன் கேகயத்து அரசி பத்ரையின் மைந்தர் சங்க்ரமஜித்தும் அவந்தியின் அரசி மித்ரவிந்தையின் மைந்தர் விருகனும் இணைந்திருக்கிறார்கள். கோசலத்து அரசி நக்னஜித்தியின் மைந்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கே தூய ஷத்ரியக்குருதி நிலைகொள்வதே உகந்தது என அனைவரும் எண்ணுவார்கள்…” நான் நீள்மூச்சுடன் “இதையும் அரசியிடம் சொல்கிறேன், இளவரசே” என்றேன். “ஆகுக!” என அவர் சொன்னார்.

முந்தைய கட்டுரைதவளையும் இளவரசனும் [சிறுகதை]
அடுத்த கட்டுரைவருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்