இரண்டு கவிப்பிரகடனங்கள்

கடலூர் சீனு

இனிய ஜெயம்

சமீபத்தில் இரு கவிப் பிரகடனங்கள் வாசிக்கக் கிடைத்தது. குறிப்பிட்ட பிரகடனங்கள் மீது [அக்கவிகளும் அவர்களின் கவிதைகளும் தவிர்த்து] ‘இன்றைய சூழல்’ சார்ந்த சில சிந்தனைகளை இந்த இரு பிரகடனங்களும் கிளர்த்தின. முன்னோடிகள் மூத்த கவிகளின் பிரகடனங்கள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ, புதிதாக எழுத வருபவர்களின் கருத்துக்களை ‘முன்முடிவுகளை’ உருவாக்கும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. பின்னர் அத்தகு முன்முடிவுகள் தங்களை வழிதவற வைத்து விட்டன என்பதை அறிமுக படைப்பாளிகள் காலம் கடந்து அறிய நேர்கையில் அவர்களின் படைப்பாற்றல்காலம் உட்பட பல சாதக அம்சங்கள் அவர்களின் கைநழுவி சென்றிருக்கும்.

முதல் பிரகடனம் தடம் இதழில் ஒரு கவிஞரின் நேர்காணல் சார்ந்து அவர் சொன்னவற்றில் தேர்ந்த தலைப்பு.

கவிதை காலம் கடந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது பிரகடனம் சமீப சர்ச்சையில் நிகழ்ந்த கவிஞரின் தன்விளக்கத்தில் கண்டது.

என் கவிதைகள் ட்ரெண்டிங்ல் இருக்கிறது.

இந்த இரு பிரகடனங்களும் கவிதைக்கு அதன் செயல்களம் சார்ந்து கூறும் நிலைகள் அதன் அடிப்படையிலேயே பிழையான ஒன்று.

முதல் பிரகடனத்தை விவாதித்தால். கவிதை காலம் கடந்து நிற்கவேண்டும் என்பது வாசகனின் கோரிக்கை அல்ல. அது தன்னளவில் சிறந்த கவிதைகளின் இயல்தன்மை. அதை ஒரு வாசகன் எதிர்பார்ப்பது கலை மீதான ரசனைப் பாசிசம் அல்ல. அடுத்ததாக ஒரு கவிஞன் தனது கவிதையின் காலத்தை நீட்டிக்க போதம் கொண்டு தொழில் நுட்பமாக செய்வதற்கு ஏதொன்றும் இல்லை. காலம் கடக்கும் சிறந்த கவிதை என்பது படைப்பாளியின் காலம் சார்ந்த அபோத மனத்தின் கருத்து நிலையிலிருந்து விடுபட்ட அந்தரங்கமானதொரு வலிமையான விழிப்பில் கவிதை எழுகையில் நிகழ்வது.

உதாரணமாக பசுவைய்யா எழுதிய நோவெடுத்து சிரம் இறங்கும் வேளை கவிதை. பசுவைய்யா அந்தரங்கமாக உணரும் ‘காலத்தின் முன் நான்’ எனும் பிரக்ஞ்சையில் எழுந்த கவிதை அது. அதன் முன் ‘கவிதையே காலம் கடந்து நிற்க வேண்டிய அவசியம் எதுவும் உனக்கு இல்லை’ என்று சொல்வதை விட, அக் கவிதை அந்த நிலையை அடைந்ததின் பின்புல கூறுகளை அணுகிப் பார்ப்பதே கலை கொண்ட ‘சாராம்சமான’ ஒன்றினை அறிய முயலும் வகைமையாக இருக்கும்.

சிறந்த கவிதையாக நிலைபெற்றுவிட்ட கவிதைகள் [அல்லது புனைவுகள்] அடிப்படையான ஆறு கூறுகளை கொண்டிருப்பதை காணலாம்.

  1. உண்மையின் தீவிரத்தின்எழுச்சி
  1. பிறிதொன்றில்லாத தன்மை.
  1. மொழியால் வெளிப்பாட்டால் வடிவத்தால் அது கொண்டிருக்கும் புதுமை.
  1. அது கிளர்த்தும் அர்த்த சாத்தியங்கள்
  1. மீண்டும் மீண்டும் ஈடுபட்டுதோயவைக்கும் தன்மை.
  1. ‘இன்றைய காலத்தில்’ உழலும் உணர்வுகளில் இருந்து எழுந்து’என்றுமுள்ள காலத்தில்’ உறைந்திருக்கும் உணர்வுகளை தொட்டு உன்னதம் கொள்ளும் தன்மை.

சிறந்த கவிதையில் ‘இவை வந்தமைவது’ எதனால்? ஒரு படைப்பாளி தனது உணர்கொம்பால் தனது படைப்புகளுக்காக அவன் தொட்டெடுக்கும் கச்சாப் பொருட்கள் எல்லாம் இந்த வாழ்வுக் குவியலில் இருந்து வருவதாலும்,அந்த வாழ்வுக் குவியல் ‘காலத்தில்’ கிடப்பதாலும் என்பதை கொண்டு அதை அறியலாம். கிமு இரண்டாயிரத்து இருபது கி பி இரண்டாயிரத்து இருபதுடன் தொடர்பின்றி அந்தரத்தில் நிற்கும் ஒன்றல்ல. அன்றும் இன்றும் ஞானியும் பைத்தியமும் உண்டு. காதலும் வன்புணர்வும் உண்டு, அதிகாரம் நோக்கிய விருப்புருதியும் அடிமைத்தனமும் உண்டு, காரணிகள் மட்டுமே சமகாலத்தால் மாறுபடும். அன்றைய பைத்தியம் ஒரு போதும் மெய்நிகர் சைபர் வெளியால் நிகழ்ந்திருக்காது என்பதைப் போல. ஆக எத்தனை பலவீனமான படைப்பு முயற்சி எனினும் அதன் கச்சாப்பொருள் எப்போதும் என்றுமுள்ள காலத்துடன் உரையாடும் கூறுகளைக் கொண்ட ஒன்றே.

கவிதை என்பது கையில் உள்ள முள் போல, காலில் தைத்த முள்ளை நீக்கிவிட்டால் அதன் பணி முடிந்தது.

இது எதிர்கவிதைகளின் காலம்.

கோட்பாடுகள்.

‘மக்களை’ சென்றடையும் நோக்கிலான இடதுசாரி திராவிட பின்புல கருத்தியல்கள் இப்படி பல அம்சங்கள் வழியே மேற்ச்சொன்ன ஆறு கூறுகளை மறுத்து வாதிடலாம். ஆனால் அந்த வாதங்களுக்கு கலையில் எந்த மதிப்பும் இல்லை. ஒரு படைப்பாளி தனது படைப்பைக் கொண்டு எந்நிலையிலும் சமூக ஆழ்மனதுடன் உரையாடுபவனே. அப்படி உரையாடுவதன் வழியே ஒரு காலக்கட்டத்து சமூகத்தின் ஆழ்மன பிரக்ஞ்சை நிலையில் ஒரு மாற்றத்தை உயர்வை கொண்டுவருபவனே.

ஆக கலையின் இந்த அடிப்படை இயங்கு தளத்தை செயல்களத்தை மறுக்க, கவிதை காலம் கடந்து நிற்கவேண்டியது இல்லை எனும் பிரகடனத்தை விட ‘எனது கவிதை காலம் கடந்து நிற்காது’ எனும் சுய விளக்கமே சரியானது. இத்தகு மோஸ்தர்களின் வரவேற்பரைதான் இந்த சமூக தள ட்ரெண்டிங் கலாச்சாரம்.

ட்ரெண்டிங் கலாச்சாரத்தின் வரவேற்ப்பறைக் கவிஞராக ஒருவர் இருப்பது எந்தப் பிழையும் இல்லை. சமூகத்துக்குத் தேவை என்ற வகையில் நிகழும் கூறுகளில் ஒன்றுதான் அதுவும்.

ஆனால் கவிதையின் ரசனைக் கலாச்சாரம் என்பது வேறு ட்ரெண்டிங் கலாச்சாரம் என்பது வேறு. ரசனைப் பகிர்வில் வாசகன் என்ற தனிமனிதன் மட்டுமே உண்டு. ட்ரெண்டிங் கலாச்சாரத்தில் சுயம் அற்ற ‘மக்கள்’திரள் மட்டுமே உண்டு. ஒரு தனி மனிதனின் பகிர்வில் அவனது அழகியல் நோக்கு,ரசனைக் கூறு, வாழ்வு சார்ந்த அவனது நோக்கு இவை உண்டு.இதில் கவிதை மட்டுமே இடம்பெற முடியும். ட்ரெண்டிங் கலாச்சாரத்தில் இன்று கவிதை,நாளை நயன்தாரா புடவை, அதன் பின் வடிவேலு மீசை,நாய் வால் எதுவும் இடம்பெற முன்னிலை பெற முடியும். கவிதைப் பகிர்வில் நிகழ்வது ‘தோய்தல்’ எனும் உவகைக்கான அழைப்பு. ட்ரெண்டிங் என்பது எந்த நிலையிலும் முற்ற முழுதான ‘நுகர்வு’ மண்டலம் மட்டுமே. ஆகவேதான் மக்கள் மத்தியில் புழங்கும் தனது கருத்தின் பெரும் சர்ச்சையின் போதுகூட ஜெயகாந்தன் போன்ற சுந்தரராமசாமி போன்ற ஆளுமைகள் ‘வாசகனுக்கு ‘புரியும் எனும் பதத்தை பயன்படுத்துகிறார்கள் .

ஆக உண்மையின் தீவிரத்துக்குப் பதிலாக தன்முனைப்பின் தீவிரம், தனித்தன்மை தவிர்த்த ‘பொதுத்’தன்மை நோக்கிய சார்பு, மொழியால் வடிவத்தால் வெளிப்பாட்டால் தன்னைத் தானே நகலெடுக்கும் தேய்வழக்கு ,இன்னபிற கொண்ட கலையாகாத கவிதைகளை புனையும் வரவேற்பறை கவிஞனை ட்ரெண்டடிங் கலாச்சாரம் பொருட்படுத்தலாம், அதன் சிகரம் தொட அக் கவிஞனும் குருதி சிந்தலாம். ஆனால் கவிதையும் இலக்கிய செயல்பாடும் முற்றிலும் இதற்கு மாறானது. கவிஞனும் அவனது கவிதையும் கவிதை வாசகனும் ஒரே உடலின் மூளை இதயம் குருதி போல, ஒன்றின்றி ஒன்று இல்லை எனும் வகையில் பிணைத்து கிடப்பவர்கள். மக்கள் திரளில் இவர்கள் தனித்த உடல். சுருக்கமாக ‘வாசகன்’ மக்களில் ஒருவன்தான் ஆனால் அவன் உள்ளுரையால் மக்களில் ஒருவன் அல்ல. அவனது அகம் கொள்ளும் கவிஞனும் அதேதான். எனவே எழுத வந்து திசை தேற முயலும் புதிய படைப்பாளிகள் மேற்கண்ட இரண்டு பிரகடனங்கள் எனும் வழிகாட்டிப் பலகைகளை கண்ணை மூடி கடந்து விடுவதே சாலச் சிறந்தது.

பயணம் ஒன்றில் நண்பருடன் உரையாடியபடியே சென்ற விஷயங்களை தொகுத்துக் கொள்ளும் முகமாக எழுதியது இது. :)

கடலூர் சீனு

——————————————————————

கடலூர் சீனு கவிதைபற்றிய கட்டுரைகள்

மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு

இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு

பழைய யானைக்கடை -கடலூர் சீனு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

கவிதை மொழியாக்கம் -சீனு

சிவசக்தி நடனம் – கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைஇரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-10