இரு காந்திகள்.
சுதந்திரத்தின் நிறம்
ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…
வணங்குதல்
எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
வள்ளலார்.
அது ஒரு கனவு. நாம் எனும் மகத்தான கனவு. அந்தக் கனவின் அழைப்பைக் கேட்டு முதல் அடி எடுத்து வைக்கிறார் ஒருவர். தமிழகத்தில் வயலூர் என்றொரு கிராமம். அக்கிராமத்தில் பாதி நிலம், ராமகிருஷ்ண ரெட்டியாருடையது. கொஞ்சம் குறு விவசாயியின் நிலங்கள். ஊரில் பிறர் அந்த நிலத்தில் உழைக்கும் பிற்படுத்தப்பட்டோர். இந்த கிராம நிலம் மொத்தமும் இனி கிராமத்துக்கே சொந்தம். நிலவுடமை இனி இல்லை. கிராமிய கூட்டுறவு அது மட்டுமே இங்கே உண்டு. ஆண்டை இல்லை அடிமை இல்லை. அனைவரும் சேர்ந்து உழைப்போம் அனைவரும் சேர்ந்து வாழ்வோம். அழைப்பை செவி கொண்டது இதயம். ரெட்டியார் முன்னின்று செயல்படுகிறார். ஒரே ஒருவர் பிற்படுத்தப்பட்டவர் தனது ஒரே வாழ்வாதாரமான ஒரு ஏக்கர் நிலத்தை தர மறுக்கிறார். ஊர் மொத்தமும் ஒரு பக்கம். இவர் ஒருபக்கம். கிராமம் மொத்தமும் கூடி தனக்கெதிராக எதோ சதி செய்கிறது என திகைக்கும் சுப்பனை என்ன பேசியும் நம்ப வைக்க முடியவில்லை.
அப்போதுதான் இது நடக்கிறது. ஊரின் பெருநிலக்கிழார் ராமகிருஷ்ண ரெட்டியார் சுப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட மனிதன் காலில் சாஷ்டாங்கமாக விழுகிறார். ஊருக்காக. நாம் எனும் கனவுக்காக. சுப்பன் கனிகிறான். நம்புகிறான். கிராமிய கூட்டுறவு வாழ்வில் இணைகிறான். குறிப்பிட்ட நாள் வருகிறது. எல்லோரும் தங்களது நிலத்தை, உரிமையாளர் கொண்டு கிராம பொது சொத்தாக தத்தமது நிலத்தை கிரையதானம் செய்கிறார்கள். இறுதியாக ரெட்டியார் முறை. நிலத்தின் உரிமைகள் யாவும் ரெட்டியார் சம்சாரம் கையில். அவர் நிலத்தை கொடையளிக்க மறுக்கிறார். இருப்பதை எல்லாம் இழப்பதன் வழியே கிடைக்கும் சிறந்த எதிர்காலத்தை அவரை நம்பவைக்கும் எந்த முகாந்திரமும் அவர்வசம் தரப்படவில்லை. ரெட்டியார் கேட்டும் அவர் மசியவில்லை. சரி போ என்றுவிட்டு ரெட்டியார் அக்கணமே உண்ணா நோன்பில் அமர்ந்து விடுகிறார். பொழுது செல்ல செல்ல, மனைவிக்கு ரெட்டியாரின் தீவிரம் உறைக்கிறது. கதறி அழுதபடி உண்ணாநோன்பை கைவிடக் கேட்கிறார். ரெட்டியார் பதிலுக்கு நிலக்கொடை செய்ய சொல்கிறார். ரெட்டியார் வெல்கிறார். அவர் கனவு வெல்கிறது. நிலக்கொடை நிகழ்கிறது. அந்த கிராமம் மொத்தமும் கூட்டுறவு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. ஒரே பேராவில் நூலுக்குள் வந்து போகும் ஒரு சம்பவம் இது.
லாரா கோப்பா தொகுத்த காந்தியர்கள் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் தம்பதியர் வாழ்வனுபவங்கள் மீதான சுதந்திரத்தின் நிறம் நூல், அத்தம்பதியர் சொல்லும் இத்தகு பலநூறு சம்பவங்கள் மனிதர்கள் வழியே சுடர்விடும் லட்சியவாதக் கனவை தனது பக்கங்கள் தோறும் பொதிந்து வைத்திருக்கிறது. இந்த வாழ்க்கைக் கனவை சுடர் பொருத்தியவர் வினோபா பாவே. காந்தியின் முக்கிய சீடர். காந்திய யுகத்தின் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இறுதிப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒரூவர். காந்தியின் மறைவுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவின் உருவாக்கத்தில் எந்தப் பங்களிப்பும் செய்யாமல் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி இருந்தவரை, பொது வாழ்வுக்குள் இழுத்து வந்தது,சுதந்திர இந்தியாவில் தலைதூக்கிய, உழைப்பவருக்கே நிலம் என்று நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய பொதுவுடமைப் போர்.
நிலமற்றவன், நிலம் வேண்டி ஏன் நிலச்சுவாந்தார்களை குருதி சிந்த வைக்க வேண்டும்? மாற்றுவழி உண்டு. வினோபா சொன்னார் நாம் அவர்களின் நல்லெண்ணத்துடன் பேசுவோம். அவர்களிடம் கேட்போம் அவர்கள் தருவார்கள். நிலத்தின் பொருட்டு பொதுவுடமையின் பெயரால்,புரட்சியின் பெயரால் குருதி விழுந்து கொண்டிருக்கும் தெலுங்கானா நிலத்தில். தனது கனவுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தபடி நடைபயணம் மேற்கொண்டார். ஐம்பத்தி ஒன்று, ஏப்ரல் பதினெட்டு ராமச்சந்திர ரெட்டி அளித்த நூறு ஏக்கர் நிலக் கொடை வழியே, உலகம் இதுவரை இப்படிஒன்றை கேள்விப்பட்டிராத அந்த புரட்சி வினோபாவின் கனவு வழியே துவங்கியது.
மைய அரசு ஏவிய ராணுவத்தால் சாதிக்க முடியாதது, வினோபா எனும் காந்திய லட்சியவாதத்தின் பெயரால் சாதிக்கப்பட்டது. பொதுவுடைமை வன்முறையை புறம்தள்ளி, இவ்வியக்கம் பத்து ஆண்டுகள்.பாரதம் முழுக்க பெற்ற நிலக்கொடை நாற்பது லட்சம் ஏக்கர். எல்லாமே ஆண்டைகள் அடிமைகளுக்கு அளித்தது. இனி ஆண்டை அடிமை இல்லை எனும் கனவின் மேல் எழப்போகும் லட்சிய சமுதாய வாழ்வுக்கு அளித்தது. இந்தியா பாகிஸ்த்தான் எனும் பெயரில் நிலத்தின் பொருட்டு மதத்தின் பொருட்டு கொன்று மாய்ந்து குருதி மழை பெய்த அதே நாட்டில்தான் இதுவும் நிகழ்ந்தது. இந்த நிலக் கொடை இயக்கத்துக்கு தமிழ் நிலம் சார்ந்து தலைமை தாங்கியவர்களே, காந்தியர்கள் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் தம்பதியர். அவர்களின் வாழ்வு சமூகப் பணி குறித்து அவர்கள் வசமே நூலாசிரியர் லாரா கோப்பா கதை போல் கேட்கப்பட்டவற்றின் எழுத்து வடிவே இந்த நூல்.
இந்திய செல்வவளம் என்பது, மெய்யாகவே கற்பனை செய்துகூட முழுமையைக் கண்டு விடக் கூடிய ஒன்றாக இருந்திருக்கவில்லை. பேரரசுகள் எழுத்த காலத்தில் உலக செல்வ வளத்தில், உபரி மதிப்பில் உலகில் உள்ள மொத்த செல்வத்தில் எட்டில் ஒரு பங்கு பாரத நிலத்தில் இருந்திருக்கிறது. படையெடுப்புகள் வழியே ஐந்து நூற்றாண்டுகள் தொடர் கொள்ளைக்குப் பிறகும் இந்தியாவின் செல்வவளம் எப்படி இருந்தது என்பதை, டொம்னிக் லேப்பியர் எழுதிய நள்ளிரவில் சுதந்திரம் நூலில் ஆங்கிலேய அதிகாரம் அனுபவிக்கும் [குளிர்பதன வசதி அந்தக் காலத்திலேயே] உயர்ரக கார்கள் வீடுகள் போன்ற சொகுசுகளின் சித்தரிப்பு வழியே அறியலாம். தொடர் சுரண்டல்கள் பஞ்சங்கள். இன்று கண்ட பத்மநாப சாமி கோவில் புதையல் போல பல மடங்கு,செல்வம் பாரதத்தின் உபரி என்பதே மெய்.
அன்றைய உலகின் முதல் கார்பரேட் கொள்ளையர் என கிழக்கிந்திய கம்பனியை வகுத்தால்,அங்கே துவங்கி இங்கு இந்த இரண்டாயிரத்தில் இந்தியாவை மலைப்பாம்பு போல மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும் இன்றைய கார்பரேட் யுகம் வரை நீளும் ஒரு மிக நீண்ட நெடிய கால போராட்ட வரலாற்றின் பின்புலத்தில் அமைந்தது கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் தம்பதியரின் வாழ்வு. அந்நியத் துணியை பகிஷ்கரிப்போம் என்று சொன்ன காந்தியின் குரலே அப்பாவுக்கு [நூலுக்குள் எல்லோரும் ஜகன்னாதன் அவர்களை அவ்வாறே அழைக்கிறார்கள்] பால்யத்தில் முதல் வழிகாட்டி. அம்மாவுக்கு கல்யாணப் புடவையாக அவரே ராட்டையில் நூற்ற நூல் கொண்டு நெய்த சேலையைத்தான் பரிசளிக்கிறார். பள்ளி இறுதியிலேயே ரங்கோனில் வாழும் அப்பாவின் சம்பாத்தியத்தில் வாழும் சொகுசு வாழ்வை உதறிவிட்டு, தீன் சேவா சங்கம் எனும் ஆசிரமத்தில் சேர்ந்து, தலித்களின் முன்னேற்றத்துக்கு களப்பணியாற்ற சென்று விடுகிறார். அங்கே பல அனுபவங்கள். பாரதம் முழுக்க,தானம் பெற்று வாழும் துறவி போல நடந்தே திரிகிறார். இமயம் முதல் குமரி வரை. காந்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பி காந்தியை சந்திக்கிறார். அவர் வழிகாட்டுதல் வழியே,பல போராட்டங்கள் சிறை அனுபவங்கள்.
காந்தியுடன் தொடர்பில் இருந்ததான பிணக்கில் அவர்கள் இருக்கும் அமெரிக்க மிஷனரியில் இருந்து விலக்கப்படுகிறார் ரெலே கெய்தான். அந்த கேய்தானுடன் இணைந்து மதுரையில் தலித் மாணவர்களுக்கான மேம்பாட்டுக்கான விடுதி ஒன்றை துவங்குகிறார் அப்பா. இந்தப் பயணத்தில் வாழ்க்கைத் துணையாக வந்து இணைகிறார் அம்மா. முப்பத்தி இரண்டு வயதில் கணவனை இழந்த க்ரிஷ்ணம்மாளின் அம்மாவுக்கு,பன்னிரண்டு பெற்று அதில் எஞ்சிய அறுவரில் ஒருவர் கிருஷ்ணம்மாள். டாக்டர் சவுந்தரம் அவர்களின் சேவை அமைப்பு அம்மாவை அரவணைக்கிறது. கல்வி வழங்குகிறது. காந்தி வசம் அம்மாவை ஆற்றுப் படுத்துகிறது. இந்தப் பாதை வழியாகவே சமூக வாழ்வுக்குள் வரும் அம்மாவும் அப்பாவும் தம்பதி சமேதராக அவர்களின் களப்பணி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
பரந்துபட்ட அவர்களது அக்கரைகளின் பின்புலத்தை, பன்முக களப்பணிக் களனைப் பின்தொடர ஒரு புரிதலுக்காக கீழ்க்கண்டவாறு ஒரு அடிப்படைச் சரடனைக் கொண்டு அவற்றை கோர்க்கலாம். ஒவ்வொரு தனிநபர் நிலையிலும் கல்வி மற்றும் தற்சார்பால் நிகழும் மாற்றம்.அவர்கள் குடும்பத்துக்கு ஒரு வீடு. அவர்கள் உழைத்து வாழ கொஞ்சம் நிலம். இப்படி வாழ்வோர் சேர்ந்து வாழும் ஒரு கூட்டுறவு வகைமை.இந்த கூட்டுறவு அலகாக அவர்கள் வசிக்கும் கிராமம். இந்த நிலைக்கு வர எதிர்படும் தடைகளை கடந்து,ஒரு சுயசார்பு வாழ்வை அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் காந்திய வழிமுறை. இந்தப் பின்புலத்தில் நிகழ்கிறது தம்பதியரின் வாழ்நாள் களப்பணி.
சிறைவாசம், கொலைவெறி தாக்குதல்கள் [குறிப்பாக பொதுவுடைமை புரட்சியாளர்களின் தாக்குதல்கள்] இவற்றைக் கடந்தே இமயம்முதல் குமரி வரை நிலக்கொடை இயக்கத்தில் பங்கு கொண்டு அந்த நிலத்தை நிலமற்றோருக்கு பங்கு போட்டு தருகிறார்கள். சூதாக நிலம் சுரண்டப்புடும் இடத்தில், அந்த சுரண்டலுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இங்குதான் வினோபாவே வுடன் முரண்படுகிறார்கள். நடைமுறை சார்ந்த எளிய அசைவையும் கூட, சூழலை சுயநலம் கொண்டு வளைக்க முனையும் வன்முறை என்றே வினோபா கொள்கிறார். தூய இலட்சியவாதியாக மட்டுமே திகழ்கிறார். நடைமுறை யதார்த்தம் மீது எந்த செயலையும் செய்ய அனுமதிக்காதவராக இருக்கிறார். நடைமுறை மாற்றமும் பின்னர் வரும் அதுவரை இம் மனிதர்களின் நல்லெண்ணம் மீது நம்பிக்கை கொள்ள சொல்கிறார்.
நூலுக்குள் அப்பாவின் சொல்லாக வரும்,குமாரப்பா விநோபா பிரிந்து செல்லும் சித்திரம் அடிநாவை துயரால் துவர்க்கச் செய்யும் ஒன்று. குமரப்பா நிலப்பதிவு சார்ந்து சொல்லும் அத்தனையும் மறுக்க இயலா நடைமுறை உண்மை. இந்த உண்மையை கண்டு கொள்ளத் தவறியமையே நிலக்கொடை இயக்கத்தின் தோல்விக்கு காரணம். நிலம் சார்ந்த எந்த ஒரு ஆவணமும், இந்தியாவுக்குள் பல்வேறு அடுக்குகளால் அமைந்த சிடுக்கான சட்ட சிக்கல்களை கொண்டவை. முறையாக அவற்றை பதியாவிட்டால் ‘சுதந்திர’இந்தியாவில் எதையுமே செய்ய முடியாது. பொது நிலத்தைப் பதிவது ஊழல் நிறைந்த சுதந்திர இந்தியாவின் அமைப்பு முன்வைக்கும் அடுத்த சிக்கல். இந்தப் பொது நிலம் கொண்டு, [அடமானம் வைக்க இயலா சொத்து என்பதால்] அரசு கடன் போன்றவை பெறுவது அடுத்த சிக்கல், இதில் வளமான நிலங்கள் குறைவு,உபயோகமற்ற நிலங்கள் மிகுதி இது அடுத்த சிக்கல்.இந்த சிக்கல் மீதான எளிய நடைமுறை செயல்பாடு நோக்கி கூட வினோபா நகரவில்லை. நிலங்கள் இயக்கத்தின் கையிலிருக்க, வெளியே எமர்ஜன்சி போன்ற போராட்டங்கள் எழுந்து, இயக்கம் இந்தப் பாதையை விடுத்து எரியும் அந்தப் பிரச்னை நோக்கி திரும்புகிறது. இப்படி பல்வேறு காரணிகள் கொண்டு தோல்வியுற்ற பூதான் இயக்கத்தில் , கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் பங்குபெற்று போராடி வாங்கித் தந்த நிலங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கு உண்மையாக உதவும் வண்ணம் அமைந்தது. அதற்க்கு அம்மா மேற்கொண்ட நடைமுறை சார்ந்த செயல்கள் எந்தக் களப்பனியாளனுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது.அந்த களப்பணிகளே அதன் நடைமுறை நோக்கே வினோபா சங்கத்திலிருந்து அவர்களை துண்டிக்கவும் செய்கிறது.
ஒரு கிராமம். பண்ணையார் மாட்டை மேய்க்கிறான் ஒருவன். மாடு தொலைந்து போகிறது. மாட்டுக்கு ஈடாக பல நூறு மாட்டுக்கு இணையான அவன் நிலத்தை அடமானம் பிடித்துக் கொள்ளுகிறார் பண்ணையார். அவன் அம்மா வசம் முறையிடுகிறான். அம்மா வங்கி வழியே அவனுக்கு பணம் ஏற்பாடு செய்கிறார். பணத்துடன் நிலத்தை மீட்க பண்ணையார் வீடு செல்கிறான் அவன். நிலத்தை மீட்க அவன் பணத்துடன் வருவான் என்பதை பண்ணையாரால் நம்ப இயலவில்லை. பண்ணையாரின் மனைவி ஆங்காரம் கொண்டு ஓடி வருகிறாள். அவனை மிருகம் போல அடித்து வெளுக்கிறார். செத்தே போகிறான் அவன். இதுதான் சூழல் இந்த சூழலுடன் போராடித்தான் அம்மா ஒவ்வொருவருக்கும் வாழ்கையை உருவாக்கித் தருகிறார்.
கீழ்வெண்மணி வரலாறு நாமறிவோம். நாமறியாத மாற்று வரலாறு ஒன்றின் சாட்சியம் இந்த நூல். எரிந்தடங்கிய அந்த நாற்பது பேரை முதன் முதலாக அங்கே சென்று பார்ப்பவர் அம்மா. மிச்சம் அங்கே எழுபத்தி ஐந்து தலித் குடும்பங்கள். அனைவருக்கும் அம்மா காவலாக விளங்குகிறார். அவர்களின் மறுவாழ்வுக்கு பணியாற்றுகிறார். கூலி உயர்வு கேட்டு எரிந்து அடங்கிய தலித் மக்கள். ஒரே ஒருவரை கூட தண்டிக்காத நீதி அமைப்பு. மூல குற்றவாளியை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்த வன்முறைப் பொதுவுடைமை.இவர்கள் மத்தியில் பணியாற்றி அந்த கிராமத்தின் எழுபத்தி ஐந்து தலித் குடும்பத்துக்கும் தலா ஒவ்வொரு ஏக்கர்நிலத்தை உரிமைப் பதிவுடன் வாங்கித்தருகிறார் அம்மா. இன்றைய ஜிந்தாபாத் கூச்சல் வரலாற்றுக்கு வெளியே நிற்கும் மௌனமான சபால்டைன் வரலாறு இது. இப்படி காமராஜர் காலம், அவசரநிலைக் காலம் குறித்தெல்லாம் எளிய ஆனால் வலிமையான சபால்டைன் வரலாற்றுக் குறிப்புகள் நூலுக்குள் உண்டு. இந்த களப்பணி வாழ்வில் இந்த தம்பதியரைப் போலவே இவர்களின் உடன் நின்ற ஆளுமைகள் அத்தனை பெரும் இந்தப் பணியில் தளி சுயநலமும் இன்றி தம்மைக் கரைத்துக் கொண்டவர்களே . இவர்களில் ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் ப்ரிடானியர்கள் ஜெர்மானியர்களும் உண்டு.
தம்பதியரின் காந்தி கிராமத்துக்கு வந்து, அவர்களுடன் நேரடியாக உரையாடி,தம்பதியர் ஒருவர் விட்ட இடத்தில் மற்றவர் தொடர நிகழும் உரையாடல் வழியே லாரா கோப்பா கட்டமைத்திருக்கும் இந்த வாழ்க்கைக் கதை நூல் ஒரு செவ்வியல் புனைவு போல, கலை வெற்றி கொண்ட ஒரு புனைவை வாசிக்கும் அனுபவம் போன்ற ஒன்றை அளிக்கிறது. தம்பதியர் போராட்டங்களில் உடன் நின்ற வழக்கறிஞர் மாரியப்பன், தம்பதியரின் வாரிசுகள் சத்யா,பூமி இருவரின் அனுபவங்கள், சுந்தர்லால் பகுகுணா,குக்கூ சிவராஜ் இவர்களின் பதிவுகள், டேவிட் h ஆல்பர்ட்,லாரா கோப்பா இவர்களின் இந்தியா குறித்த பார்வை,இறுதியாக இணையும் ஜகன்னாதன் அவர்களின் உரை இவை கூடி, ஒரு காலக்கட்டத்தின் இந்திய வாழ்வின் உரைகல்லாக நின்று கனவின் களப்பணியின் தீவிரமான சித்திரம் ஒன்றை தீட்டிக் காட்டுகிறது இந்நூல்.
நூலுக்குள் சிற்சிறு சித்திரங்கள் வழியே புத்தம் புதிதாக பிறந்து வந்தவர் போல எழுந்து வருகிறார் வினோபா. காந்தியவாதியாக இலட்சியவாதியாக களப்பணியாளராக அறியப்படும் வினோபாவின் வேறொரு சித்திரம் நூலுக்குள் வருகிறது.கீதையை,பைபிளை,குரானை அதன் மூல மொழி வழியே வாசித்தறிந்தவராக இருக்கிறார் வினோபா.இந்திய மொழிகள் பலவற்றை சரளமாக பேசுகிறார். குயவர் கிராமம் ஒன்றில் தங்க நேர்கையில், ஜகன்னாதன் கற்றுத் தர,பானை வனையக் கற்றுக் கொள்ளுகிறார் வினோபா. நடக்கத் துவங்கி விட்டால்,மழையோ வெய்யிலோ,கவலையே இன்றி இலக்கு சேரும் வரை நடப்பவராக இருக்கிறார். உணவாக கோப்பை தயிரும் கொஞ்சம் தேனும் மட்டுமே கொள்பவராக இருக்கிறார். நாளொன்றுக்கு பலமுறை [தாடியில் சொட்டும் வண்ணம்] தயிர் அருந்துபவராக இருக்கிறார்.இப்படிப் பல.
குமரி முனையில், புலரிவானின் பின்புலத்தில் எழுஞாயிறு தலைக்குப் பின் ஒளிவட்டம் அமைக்க,நிழல்வெட்டு சித்திரமாக நிற்கும் வினோபாவின் சித்திரம் நான் ஜென்ம ஜென்மமாக தொடர்ந்து காணும் கனவு போல இப்போது என்னுள் விழுந்து கிடக்கிறது.
கனன்றெரிந்து, கரியாகி, உப்பாகி, மண்ணில் மறைவர் மாந்தக் கோடிகள்.அவர்களுள் ஒளிகொண்டு மீள்வோர் சிலரே. அவர்களை, எரிமலரிதழ் நடுவே இலங்கும் இறைவடிவமென்பார் அறவோர். ஆம். அவ்வாறே ஆகுக.
கொற்றவை.
இக்கணம் மானசீகமாக,
முன்னறி இறைவடிவம் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களின் மலரடி என் சென்னிசூடி வணங்குகிறேன்.
கடலூர் சீனு
***