நிலம், பெண், குருதி
அன்புள்ள ஜெ,
நிலம் பெண் குருதி ஒரே வரியில் பூலன் தேவியின் வரலாற்றைச் சொல்கிறது. நானும் அந்நூலை வாசித்தேன். அந்நூலில் மிகப்பெரிய பிரச்சினையாக எனக்கு தோன்றியது அந்த கிராமங்களின் பாரம்பரிய கிராமத்தலைவர்களின் அதிகாரம்தான். போலீஸ் அவர்களை நம்பித்தான் இருக்கிறது. போலீஸ் அவர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது. அதோடு அவர்கள் பிரச்சினைகளை அவர்கள் அளவில் தீர்ப்பதனால் போலீஸுக்கும் வேலை இல்லை. போலீஸும் அவர்களும் ஒரே சாதியினர். ஆகவே மொத்தமாகவே ஒரே ஆட்சி
அங்குதான் தலித் போன்றவர்களின் நரகம் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த பிறகும்கூட அவர்களுக்கு எந்த விதமான ஜனநாயக உரிமைகளும் இல்லை. ஒரு நவீன ஜனநாயக அரசு அளிக்கும் பாதுகாப்புகளே இல்லை. அந்த நிலைதான் இங்கே தமிழ்நாட்டிலும் ஐம்பதுகளில் இருந்தது. புதுமைப்பித்தனின் நாசகாரக் கும்பல் போன்ற கதைகளில் பட்டாமணியம் , பண்ணையார்கள் போன்றவர்கள் எப்படியெல்லாம் மக்களை கட்டிவைத்து அடித்தார்கள் என்று பார்க்கிறோம்
அந்நிலையை மார்றியவர்கள் காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்டுகளும். இங்கே நாற்பது ஐம்பதுகளிலேயே அடித்தளத்திலே மாற்றம் வந்துவிட்டது. கடைசியாக எம்.ஜி.ஆர் பாரம்பரிய கிராமநிர்வாகிகள் என்ற பணியை ஒழித்தார். அதோடு நிலைமை வேறுவகையாக ஆகிவிட்டது. அந்த மாற்றம்தான் உபியில் நடக்கவே இல்லை என நினைக்கிறேன்
தண்டபாணி
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
பூலான்தேவி பற்றிய கட்டுரை ஆழமானது. பல தெளிவுகளை அளிப்பது. பூலான் தேவி தலித். எப்படியெல்லாம் அவர்கள் சுரண்டப்பட்டார்கள் எப்படியெல்லாம் அவர்கள் போராடினார்கள் என்று காட்டுவது. பூலான்தேவி முதல் மாயாவதி வரை அரசியலில் ஒரு நீண்ட காலகட்டம் இருக்கிறது. மாயாவதி பதவிக்கு வந்தது ஒரு பெரிய பாய்ச்சல். ஆனால் ஊழலால் நேர்மையின்மையால் வரலாறு அளித்த வாய்ப்பை அவர் நாசமாக்கிக்கொண்டார். அதேபோல வரலாறு அளித்த எல்லா வாய்ப்புகளையும் யாதவர்களும் அழித்துக்கொண்டார்கள். இன்றைக்கு அதே ஆதிக்கவாதிகளிடம் மீண்டும் அதிகாரம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை அக்கட்டுரையில் சொல்கிறீர்கள்.
சரவணன் எம்
***