கால்டுவெல் -கடிதங்கள்

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

அன்புள்ள ஜெ,

கால்டுவெல் பற்றிய கட்டுரை மிக சுருக்கமானதாகவும் சமநிலை கொண்டதாகவும் இருந்தது. வரலாற்றை அணுகுவதில் எப்போதுமே இப்படி ஒரு வழிமுறையை வைத்திருக்கிறீர்கள். இங்கே தூக்கி வைப்பதும் போட்டு உடைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து நிறைகுறைகளை நாடி ஒரு கருத்தைச் சொல்பவர்கள் மிகக்குறைவு. அந்நிலைபாடும்கூட வழக்கமாக எப்படி இருக்கும் என்றால் சம்பந்தப்பட்டவரின் மதம் ஏது, சாதி ஏது என்பதைத்தான் கொண்டிருக்கும்.

கால்டுவெல்லின் ஆய்வுப்பணிகள்தான் தமிழகவரலாற்றையும் மொழியையும் அப்ஜெக்டீவாக மெதடாலஜியுடன் ஆய்வுசெய்தவை. அது அவருடைய கொடை. அவர்தான் அதில் முன்னோடி. அதை இங்கே பிராமன ஆய்வாளர்கள் ஒருத்தர்கூட சொன்னது கிடையாது. அவர்கள் கால்டுவெல் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவர், மதமாற்ற வந்தவர் என்றுதான் சொல்வார்கள். இங்கே இன்றிருக்கும் வரலாறும் பண்பாட்டு ஆய்வும் கால்டுவெல் தொடங்கியவை. அதை நீங்கள் தெளிவாகவே சொல்கிறீர்கள்

அதேசமயம் கால்டுவெல்லுக்கு ஐரோப்பிய மேட்டிமைநோக்கு இருந்தது என்கிறீர்கள். அது இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். அது ரேஸிசம் அல்ல. அது தாங்கள் பண்பாட்டில் ஒரு படிமேல் என்ற எண்ணம். அது இருந்தமையால்தான் அவர் இத்தனை தூரம் இங்கே வந்து சேவை செய்கிறார். அவருடைய மதம் உயர்ந்தது உண்மையானது என்ற எண்ணம் இருந்ததனால்தானே அவர் மதத்தைப் பரப்ப இங்கே வருகிறார். ஆனால் இந்த எண்ணம் இருக்கும்போது என்ன ஆகிறதென்றால் ஆய்விலே சில அடிப்படையான பிழைகள் உருவாகிவிடுகின்றன. நாடார்களின் சரித்திரத்தை அவர் எழுதியபோது அவர்களை பண்பாடில்லாக் கூட்டமாக எண்ணியது அதனால்தான். அவருடைய பார்வையில் எது பண்பாடோ அது அவரிடம் இல்லை. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

ஆனால் கால்டுவெல்லை தூக்கிப்பிடிப்பவர்கள் இந்த மேட்டிமை அம்சத்தைச் சொல்வதில்லை. அதை மறைத்துவிடுவார்கள். கடந்துசெல்வார்கள். அதையும் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த வகையான நிதானமான அணுகுமுறைதான் நமக்கு இன்றைக்குத்தேவை என நினைக்கிறேன்

சிவக்குமார் மாணிக்கம்

***

அன்புள்ள ஜெ,

கால்டுவெல் இங்கே சேவை செய்ய வந்தார், சேவை செய்தார், அவருக்கு பெரிய பண்பாட்டுக்கொடை இருக்கிறது அறிவுக்கொடை இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் நாம் காணவேண்டிய ஓர் உண்மை உண்டு. அவருடைய பார்வை ஒட்டுமொத்தமாக அன்றைக்கிருந்த காலனியாதிக்கவாதிகளின் பார்வை. கீழைநாட்டு மக்களை இழிவாக, குறைவாக பார்ப்பது அது. அவர்கள் பண்பாடற்றவர்கள் என்று பார்ப்பது. ஆகவே அவர்களை அடக்கி ஆட்சிசெய்யவேண்டும் என்றும் அந்த உரிமை ஐரோப்பியர்களுக்கு உண்டு என்றும் சொல்வது.

அவருக்கு காலனியாதிக்கம் பற்றிய பார்வையே இல்லை. அதன் சுரண்டலை எல்லாம் அவர் இயல்பாகவே கண்டார். அவர் அதில் ஒரு பகுதியாகவே இருந்தார். சொல்லப்போனால் அந்தச் சுரண்டலுக்கான ஐடியாலஜிக்கல் பேஸ் உருவாக்கவே அவர் இங்கே வந்தார். அந்த நோக்கம் அவருக்கு நேரடியாக இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அவர் அந்த நோக்கத்தின் ஒரு பகுதி. அது காலனியாதிக்கவாதிகளின் கலெக்டிவ் கான்ஸியஸ்னெஸ். அதை மறந்துவிட்டு அவரை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.

அது அந்தக்காலம் என்று சொல்லலாம். ஆனால் அவர் அந்தக்காலத்திலே உருவாக்கிய அடிப்படைகளைத்தானே இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறோம். அதையும் சேர்த்துத்தானே பேசவேண்டும். அமெரிக்காவுக்குச் சென்ற ஐரோப்பிய பாதிரியார்களுக்கும் சுரண்டல் நோக்கமும் காலனியாதிக்க ஐடியாலஜியும் இருந்தது. அதை அங்கே பேசுகிறார்கள். அவர்களின் கொடை பற்றிப் பேசும்போது அதையும் சேர்த்தே சொல்கிறார்கள். இங்கே மட்டும் நாம் ஏன் இடக்கரடக்கலாகவே பேசிக்கொண்டிருக்கிறோம்?

ஆர்.மகாதேவன்

***

முந்தைய கட்டுரைஅருள்,ஏதேன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-2