அன்புள்ள ஜெ
தேவதேவனின் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அறிமுகங்களை அவருடைய கவிதைகள் மீதான ரசனையாகவே முன்வைத்திருந்தது அழகாக இருந்தது. அக்கவிதைகள் ஏன் கவிதையாக ஆகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக ஏராளமான புனைகதைகளைப் படிப்பவர்களுக்குக் கூட கவிதைகள் பிடிகிடைப்பதில்லை. கவிதைகளிலும் எளிமையான அரசியலைத்தான் பெரும்பாலானவர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். அதற்கு அப்பால் சென்று அவருடைய கவிதைகளை சரியான படி வாசிக்கவும் ரசிக்கவும் இந்தக்குறிப்புக்கள் உதவின
பொதுவாக நீங்கள் சொல்வதைப்போல கவிதைகளுக்கு காண்டெக்ஸ்ட் அமைப்பதுதான் வாசகனின் பெரிய பொறுப்பு. அவனுக்கு கற்பனை தேவையாகிறது அங்கேதான். அதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த காண்டெக்ஸ்டை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதைக் காட்டின உங்களுடைய குறிப்புக்கள். மற்ற கவிதைகளை எப்படி நாம் அர்த்தப்படுத்திக்கொள்வது என்பதையும் காட்டின. அதோடு இன்றைய கவிதை வாசிப்பில் உள்ள பல்வேறு போக்குக்களையும் அடையாளம் காட்டின. நன்றி
செந்தில்குமார்
***
எங்குமென நின்றிருப்பது
இளங்கனிவும் முதிர்கனிவும்
சொட்டும் கணங்கள்
கவிஞனின் கைக்குறிப்புகள்
***
அன்புள்ள ஜெ
நலம்தானே? தேவதேவனின் கவிதைகளைப் பற்றிய நான்கு அறிமுகக்குறிப்புக்களும் இன்று கவிதையை வாசிப்பவர்களுக்கு மிகமிக உதவியானவை. பொதுவாக கவிதை பற்றிய எழுத்துக்களில் கவிதையை எப்படி வாசிப்பது என்பதே இருப்பதில்லை. வாசிப்பதற்கான ஒரு தொடக்கம். வாழ்க்கையனுபவங்களுக்குள் கவிதையைக் கொண்டு வந்து அதை பொருத்தி அதற்குரிய நுட்பமான அர்த்தங்களை எடுக்க முடிகிறது . வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் முடிவில்லாத ஏதோ அர்த்தம் நோக்கி திறப்பதுதான் கவிதையாக ஆகிறது என்பதை இந்தக் குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டேன்.
அன்றாட வாழ்க்கையிலேயே கவிதையின் தருணங்கள் அமைந்திருக்கின்றன என்பது ஒரு பெரிய புரிதல். வழக்கம்போல நானும் கவிதைக்கு நுட்பமான அழகான அபூர்வமான தருணங்கள் தேவை என்றுதான் நினைத்திருந்தேன். நெகிழ்ச்சியான காட்சிகளை கவிதை என்று நினைத்திருந்தேன். சாலையில் மயங்கிக்கிடக்கும் ஒருவரிடம் அட்ரஸ் கேட்கும் போலீஸை வைத்தே ஒரு கவிதை எழுதிவிட முடியும் என்பது ஒரு அற்புதமான விஷயம்தான்
எஸ்.சத்யராஜ்