கொரோனா

 

ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள். “சார் வருந்நுண்டோ? கொறோணயல்லே? கொறோணயாணே!” நான் “எந்து கொறோணா?” என்றேன். ‘கொறோணயாணே!” நான் வருவதாகச் சொன்னேன். அவருக்கு சந்தேகம். கொறோணா இருப்பதனால்தான் வருகிறேன் என்று சொல்கிறேனா? என்ன இருந்தாலும் மலையாளி அல்லவா?. “ஞங்ஙள்கு கொறோணா இல்ல…” என்றார். நான் “எனிக்கும் இல்ல… பின்னெந்து பிரஸ்னம்?” என்றேன். “ஆ, பின்னெந்தா பிறஸ்னம்?” என்று சொல்லிவிட்டு “ஏதாயாலும் வேண்டா. நமுக்கு ஏப்ரல் கழிஞ்ஞிட்டு காணாம்” என்றார்

மலையாளிகளைப்போல கொரோனோவை அஞ்சி, பீதி கிளம்பியிருப்பவர்கள் வேறு எவருமில்லை. முக்கியமான காரணம் ஊடகப்பெருக்கம். நாளிதழ், தொலைக்காட்சி, கணினி,சமூகவலைத்தளங்கள், வாட்ஸப், குறுஞ்செய்தி, பக்கத்துவீட்டு பார்கவியக்கா, சாயாக்கடை சாந்தப்பன் என சகலவழிகளிலும் செய்திகளை சேகரித்துக்கொண்டே இருக்கும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. அத்துடன் செய்திகளை மிகைப்படுத்திக் கொள்வார்கள். மிகைப்படுத்திய செய்தியை சுடச்சுடப் பகிர்ந்து அதை மற்றவர்கள் மிகைப்படுத்த வாய்ப்பும் அளிப்பார்கள்.  “சங்கதி ஒந்நுமில்லா” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்கள். “வலிய சேதம் ஒந்நுமில்ல, தலைய காண்மானில்ல” என்பது அவர்களின் பாணி.

சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நான்குநாட்கள் கேரளத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நான்குநாட்களும் மொத்த ஊடகப் பரப்பிலும் ஒரே செய்திதான்.. ஒர் அமைச்சரின் மனைவி அவர் தன்னை அடித்துவிட்டார் என்று மணமுறிவு கேட்கிறார். அவர் அங்கே அழுகிறார், இவர் இங்கே நடக்கிறார், இவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்களுக்கு ஏன் ஒன்றும் சொல்வதற்கில்லை, என்ன நினைக்கிறது கற்றறிந்த கேரளம், என்ன நடக்கிறது இங்கே? இப்படியே. மறுநாள்காலை கேரளம் இருக்குமா இருக்காதா என நான் பதற்றப்பட்டேன். மொத்தக் கேரளத்திலும் அதைப்பற்றி அதிகம் பதற்றப்படாதவர்கள் அந்த அமைச்சரும் மனைவியும்தான் என தொலைகாட்சி காட்சித்துளிகள் காட்டின. மலையாளிகளுக்கு அன்று வேறெதிலும் ஆர்வமில்லை. கேரளத்தில் பலாக்காய் ‘சீசனில்’ கூட்டு, கறி ,குழம்பு ,களி, வறுவன், பொரியல், அவியல் ,துவரன் என எல்லாமே பலாக்காயாக இருக்கும். அது அவர்களின் பண்பாடு.

இப்போது கொரோனோ. பிணராயி வேறு பள்ளிகளுக்கு விடுப்பு விட்டுவிட்டார். சினிமா அரங்குகள் மூடப்படவேண்டும் என்று சொல்லிவிட்டார். பகவதிகளுக்கும் சாஸ்தாக்களுக்கும் கொஞ்சநாள் திருவிழா இல்லை. தர்ணா, ஊர்வலம், சாலைமறியல், பொதுக்கூட்டம் உண்டா என்று தெரியவில்லை. கேரளம் தொடங்கியபின் இதுவரை ஒருநாள், ஒருமணிநேரம்கூட, வர்க்கப்போராடம் இல்லாமலிருந்ததில்லை. ஓர் ஆறுமாதம் இல்லாமலிருந்தால் இங்குலாப் சிந்தாபாத் மறந்து போய்விடாது?

ஆனால் பிவரேஜ் கார்ப்பரேஷன் சுறுசுறுப்பாக இயங்குகிறது.  அதை மலையாளிகள் மறப்பதில்லை. மரபணுக்களில் ஏற்கனவே ஏறிவிட்டது.  “மலையாளியுடே ஆவரேஜ் எந்நால் பிவரேஜா” மிமிக்ரி நெல்ஸன். ஏனென்றால் சாராயம் நல்ல கிருமிநாசினி. குடியனாகிய ஐயப்ப பைஜுவின் ஆலோசனை.  “ஏன் சார், மொத்தக் கேரளத்தின் மொத்த ஜனங்களையும் ஒரேநாள் ஒரே வேளையில் நல்ல பொள்ளாச்சி ஒரிஜினல் எரிசாராயத்தால் முழுமையாக குளிப்பாட்டிக் கழுவிவிட்டோம் என்றால் கொறோணோ போய்விடுமல்லவா?” அவர் ஏற்கனவே அதைக்கொண்டு மும்முறை கழுவிக்கொண்டு தூய்மையாகத்தான் இருக்கிறார். “எதுக்கு கையை கழுவணும்? நான் ஃபுல்லா கழுவிடுவேன். உள்ளும் புறமும்”

கேரளத்தில் ஏற்கனவே ஏராளமான வைரஸ்கள். கம்யூனிஸம், சபரிமலை போல எளிதில் தொற்றுபவை மிகப்பழையவை. ஏற்கனவே அங்கே பறவைக்காய்ச்சல் உக்கிரமாக இருக்கிறது. பன்றிக்காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா, சார்ஸ் எல்லாமே முதலில் கேரளத்திற்குத்தான் வரும்.ஏனென்றால் அங்கே எல்லாருக்குமே நோய்ப்பயம். நோய் பற்றிய ஊடகப்பயம். இன்னொருபக்கம் மிதமிஞ்சிய மருத்துவ வசதி. ஒரு சிற்றூர் முச்சந்தியில் பொதுவாக இரண்டு டீக்கடை, நான்கு பீடாக்கடை, ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் ஆகியவற்றுடன்  ஐந்து டாக்டர்களும் போர்டு மாட்டி கண்ணாடிமாட்டி அமர்ந்திருப்பார்கள். எந்த நோய்க்கும் எடுத்த எடுப்பிலேயே அந்த நோயின் சிறப்புநிபுணரையே நாடுவார்கள் மல்லுக்கள். வலக்கண்ணுக்கு வலக்கண் நிபுணர். இடதுசாரியின் இடதுகண்ணுக்கு தீவிர இடதுசாரி நிபுணர்.

ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரை மயிரிழையில் முந்தியாகவேண்டும். அப்போதுதான் பெயர் பரவும். “நேற்று கைகால் ஒருமாதிரியாக இருந்தது. ஒரு மூச்சுப்பிடிப்பு. டாக்டர் குஞ்ஞுசெந்தாமராக்ஷனை போய்ப் பார்த்தேன். ஒரு டோஸ் மெதில்ப்ரிட்னிஸோலோன். பிரேக் சவுட்டியதுபோல நின்னுட்டுது”. அதற்கு “டாக்டர் மாத்தன் மத்தாயியை சும்மா போய் பார்த்தாலே போதும். பிரேக் அதுவே சவிட்டிக்கொள்ளும்” என்று பதில் வந்தாகவேண்டும். ஆகவே எங்கும் எதற்கும் ஸ்டீராய்ட். இந்தியாவின் ஸ்டீராய்ட் உற்பத்தியே கேரளத்தை நம்பித்தான். பொதுவாக வைரஸ்களுக்கு ஸ்டீராய்ட்தான் மருந்து. கேரளத்திற்கு வரும் வைரஸ் சாயங்காலமானால் சோம்பல் முறித்து புன்னகையுடன் “எந்தருடே அளியா, வைந்நேரம் ஒரு நல்ல ஸ்டீராய்டொக்கே வேண்டே மோனே?” என்று மோகன்லால் குரலில் நம்மை கேட்கும்.

கூட்டமான இடங்களுக்கு போகாமலிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் எங்கேதான் கூட்டம் இல்லை. டவுன்பஸ்கள் என்பவை மக்கள் ஒருவரோடொருவர் எறும்புப்பந்து போல கவ்விக்கொண்டு செல்வதற்கான அடிப்படைச் சட்டகத்தை மட்டும் அளிப்பவை. கேரளத்தின் மக்கள்நெரிசலைக் கருத்தில்கொண்டு நாலைந்துபேர் சேர்ந்து அமர்ந்து மலம்கழிக்கும் கழிப்பறைகளை அமைக்கலாம் என்றுகூட ஓர் யோசனைகூட சொல்லப்பட்டது. அவசரத்தில் மற்றவருக்கு கழுவி விட்டுவிடமாட்டோமா என்று ஐயமும் எழுந்தது. சொல்லப்போனால் வீடுகளேகூட நெரிசலானவைதான். துபாயில் சம்பாதித்து காசு அனுப்ப  ‘கெட்டியோன்’ உள்ள பெண்டிர் வீட்டிலேயே இருக்கலாம். மற்றவர்கள் என்ன செய்யமுடியும்?

அடிக்கடி கைகழுவவேண்டும் என்கிறார்கள். ஆனால் அடிக்கடி தண்ணீர் கிடைக்கவேண்டும். சிறுநீர் கழித்து அந்த நீரிலேயே கையை கழுவிக்கொள்ளலாம் என்று இயற்கை மருத்துவமுறை உண்டா? சிறுநீரும் கிருமிநாசினிதானே? கைகுலுக்கலாம், அந்தக்கைக்கும் நோய்ப்பாதுகாப்பு கிடைக்கிறது. இந்தியாவின் முடிவில்லா நடைமுறைச் சிக்கல்கள், பண்பாட்டுப்பழக்கங்கள் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் வேறு நாடு போல. காலைநடை செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீறி கனைத்து பிளிறி உறுமி முனகி மூக்கு சிந்தியும் துப்பியும் செல்கிறார்கள். தெருநாய்களுக்குக்கூட கொரோனோ வருவதற்க்கு வாய்ப்பு. ஓடும்பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டி சர்ர் என மூக்கு சிந்தி பின்னால் பைக்கில் வருபவனை உபசரிப்பவர்கள் நாம்.

ஆகவே கவலைப்படவேண்டியதில்லை என்ற முடிவை எடுத்தேன். மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் நடத்தும் இலக்கியக் கூட்டங்கள் கொரோனோ வைரஸால் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஆனால் விஷ்ணுபுரம் இளம்வாசகர் சந்திப்பு அடாத கொரோனோவிலும் விடாது நடைபெறும். நேற்று குடும்பத்துடன் நாகர்கோயில் சக்ரவர்த்தி திரையரங்குக்குச் சென்றிருந்தோம். [கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்—அதுவே கொரோனோவுக்குரிய தலைப்பு] கழிப்பறைகளில் எங்கும் கைகழுவ நீர் இல்லை. கைகழுவும் இடமே இல்லை. மொத்தத்தில் தண்ணீரே இல்லை. இதுதான் தமிழகம் முழுக்க நிலைமை, கோடை வேறு வந்துவிட்டது. தண்ணீர் தண்ணீர் வசன மாதிரியில் “இங்கே குடிக்கவே தண்ணியில்ல. கொரோனோவுக்கு குண்டிகழுவ தண்ணி கேக்கறானுக”

முப்பது ரூபாய்க்கு ஒரு குடிநீர் புட்டி வாங்கி யை கழுவினேன். ஆனால் கைகழுவாத நூறுபேர் தொட்டுத்திறந்த கதவைத்தான் நான் தொட்டுத்திறக்கவேண்டும். முகத்தில் அந்தக் கையை வைக்காமலிருக்கலாம். அடப்பாவி என்ற உணர்வு எழும்போது கையை வேறு எங்கேதான் வைப்பது? அந்த உணர்வு நமக்கு அரைமணிக்கு ஒருமுறை வந்துகொண்டும் இருக்கிறது.

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2
அடுத்த கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3