ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு 2020, இலக்கியத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.
Plagiarism, தனிநபர் பத்திரிக்கைகள், இலக்கியத்திற்கும் அரசியல், சினிமா, ஓவியம் போன்ற துறைகளுக்கும் உள்ள தொடர்பு, படைப்புத் திறனை ஊக்குவிக்கும் கல்விமுறை போன்ற உரையாடல்கள், இலக்கியம் பற்றிய அறிவை விசாலமாக்கும் வகையில் இருந்தன.
சிறுகதைகளின் பொதுவான வடிவம், கனவை அடிப்படையாகக் கொண்ட கதைகள், பேய்க்கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளில் இருக்க வேண்டிய நுட்பம், கவிதைகள் எழுதும் முறைகள், படைப்புகளை மதிப்பீடு செய்யும் முறைகள், உவமை, உருவகம், படிமம், ஆகியவை பற்றிய தெளிவும் கிடைத்தன.
திசைதவறி செல்லும் உரையாடல்கள், அற்பமான பார்வைகளை தவிர்ப்பதில் இருக்க வேண்டிய கவனம், ஒற்றைச் செயலும் அதன் தொடர்ச்சியால் கிடைக்கும் நிபுணத்துவமும், பன்மைத் தன்மையால் கிடைக்கும் புதிய தரிசனங்கள், நுட்பமான தருணங்களை தவறவிடும் பொருத்தமற்ற ஒப்பீடுகள், அரசியல் மற்றும் சினிமா சாயலற்ற இலக்கியத்தின் அவசியம், கலைச் சொற்களை சரியாக பயன்படுத்த வேண்டிய அவசியம். போன்ற விவாதங்கள் ஒரு சாதாரண வாசகனை உளவியல் ரீதியாக விழிப்படையச் செய்து அடுத்த கட்டமான எழுத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்தன.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நிகழ்ந்த, அறிவை விசாலமாக்கும் விவாதங்களும், நண்பர்களின் கனிவான உபசரிப்புகளும், வெடிச் சிரிப்புகளும் இந்த இரண்டு நாட்களை என்றும் நினைவில் நிறுத்தும்.
நன்றியுடன்,
சுப்ரமணியம் குருநாதன்.
அன்புள்ள ஜெ
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு பற்றிய கடிதங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. தொடக்கத்தில் நீங்கள் சொல்லும்ப்போது எந்த முன்னேற்பாடுகளும் பேசுபொருள் வரையறுப்புகளும் இல்லாமல் வாசகர்களை சந்திப்பது பற்றித்தான் சொல்லியிருந்தீர்கள். சும்மா பேசிக்கொண்டிருப்பதுதான் நோக்கம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது இத்தனை நிகழ்ச்சிகள் வழியாக என்னென்ன பேசப்படவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதெல்லாம் ஓரளவு தெளிவாகி வந்துவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது ஒரு இலக்கியப்பட்டறை போலவே இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்
அருண் சுப்ரமணியம்