அரசியலும் இலக்கியமும் -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – 2020

அன்புள்ள ஜெ,

என் நண்பர் ஒருவர் ஈரோடு இளையவாசகர் சந்திப்பு நிகழ்ச்சி பதிவில் நீங்கள் இலக்கியமும் இலக்கியவாதிகளும் நேரடியாக அரசியல் பேசுவதன் சிக்கல்களைப் பற்றி எழுதியிருந்ததை எனக்குப் பகிர்ந்திருந்தார். வழக்கம்போல ‘இந்த நெருக்கடியான நேரங்களில்கூட அரசியல் பேசக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?” என்ற கேள்வி. நெருக்கடியான நேரம் எப்போது இல்லாமலிருந்தது? சுதந்திரப்போராட்டத்தின்போதா? என்று நான் கேட்டேன். அவர் கடுமையாக ஏதோ எழுதினார்

நான் கேட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெ தளத்தில் என்னென்னவோ செய்திகள் வந்துள்ளன. இலக்கிய விமர்சனம், கதைகள், கவிதைகள், பண்பாட்டுச் செய்திகள்… நாளுக்கு ஒரு கட்டுரை வந்தபடியே இருக்கிறது. எதைப்பற்றியாவது நீங்கள் எதையாவது எழுதியிருக்கிறீர்களா? உங்கள் சமூகஊடகத் தளத்தின் நண்பர்கள் யாராவது வேறெந்த விஷயங்களையாவது பகிர்ந்ததோ எதிர்வினையாற்றியதோ உண்டா?

கிடையாது. முழுக்கமுழுக்க அரசியல். ஜெவேகூட அரசியல்பேசினால் மட்டும்தான் நீங்கள் கவனிப்பீர்கள். ஆகவேதான் அத்தனை எழுத்தாளர்களும் அரசியலையும் சினிமாவையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வாழ்க்கையில் அரசியலுக்கு உள்ள இடம் என்ன? உங்கள் வாழ்க்கையிலேயே அரசியலுக்கு மிகமிகச் சிறிய இடம்தான். முதலீடு ,சேமிப்பு, வேலை ஆகியவற்றைப் பற்றித்தான் தொண்ணூறு சதம் பேசுகிறீர்கள். அதன்பின் உறவுச்சிக்கல்கள் பற்றி. ஆனால் இலக்கியம் மட்டும் அரசியல் பேசவேண்டும், அரசியல் பேசினால் மட்டும்தான் கவனிப்பீர்கள் இல்லையா? அரசியல் பேசாவிட்டால் வசைபாடுவீர்கள். அரசியல் பேசுவது முதன்மையானது அல்ல என்று சொன்னால் கூச்சலிடுவீர்கள். இல்லையா?

ஆனால் என் பேச்சு அவருக்குப் புரியவில்லை.  ‘இந்தப்பேச்சே ஒரு அரசியல்தான்’ என்றார். இது ஒரு சிம்பிளான டெம்ப்ளேட் மட்டும்தான். “எல்லாத்திலும் அரசியல் இருக்குங்க’ ‘இந்த நெருக்கடியான நேரத்திலே அரசியல் பேசியாகணும்’ இந்த இரண்டு வரிகளும் இவர்களுக்கு எங்கிருந்தோ கிடைத்தவை. இவற்றை வைத்துக்கொண்டு இவர்கள் தங்களுக்கு இலக்கியம் தெரியாது, அழகியல் நுண்ணுணர்வு கிடையாது, தெரிந்ததெல்லாம் அன்றாட அரசியலின் கட்சிநிலைபாடுகள் மட்டும்தான் என்பதை மறைத்துக்கொள்கிறார்கள்

அது எக்கேடோ போகட்டும். ஆனால் மற்றவர்கள் வேறு எதையாவது பேசுவதையும் தடுக்க நினைக்கிறார்கள். அதை கண்டிக்கிறார்கள், கேலிசெய்கிறார்கள், அது ஏதோ பெரிய அறவீழ்ச்சி என்று காட்ட முயல்கிறார்கள். மனித உறவுகளை, வாழ்க்கையின் அர்த்தங்களை, பண்பாட்டை பேசினால் உடனே அதெல்லாம் டிராஷ், அரசியல் மட்டுமே அவசியம் என ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது இதுவும் விஜய் படம் பார்க்கும் மனநிலைதான். எனக்கு ஸ்டண்ட், பாட்டு, ஸ்டைல்தான் பிடிக்கும். அது இருந்தால்தான் சினிமா. நான் மற்ற சினிமா பார்க்கமாட்டேன், பார்ப்பவர்களை அசடுகள் என்று கேலியும் செய்வேன். இந்த பாமரத்தனம் சமூக வலைத்தளங்களால்தான் பெருகுகிறது. ஏனென்றால் இவர்களே மெஜாரிட்டி. இவர்கள் இதைச் சொல்லிச் சொல்லி பெருக்கிப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதிலிருந்து கொஞ்சமாவது வெளியே வந்தால்தான் இலக்கியம் வாசிக்கமுடியும். வெளியே வராதவர்கள் வாசிப்பது இலக்கியம் அல்ல. எதை வாசித்தாலும் கட்சியரசியலாக ஆக்கிக்கொள்பவர்கள் வாசிக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நல்லது

ஆர்.மோகன்

***

முந்தைய கட்டுரைபித்தனின் பத்துநாட்கள்
அடுத்த கட்டுரைஞானி-8