’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 3

அர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில் நான் கிளம்பிய ஓரிரு நாட்களுக்குப் பின்னர் மூத்தவர் பீமசேனன் அவ்வாறே வடதிசை நோக்கி சென்றுவிட்டதை அறிந்தேன். அவர் வெள்ளிப் பனிமலை அடுக்குகளின் எல்லையை கண்டுவிட்டார், அதைக் கடந்து அப்பால் செல்லாது அவரால் அமைய இயலாது. அவர் பீதர் நாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பார், அங்கு அவர்களுடன் இயல்பாகக் கலக்க அவரால் இயலும், ஒருவேளை மீண்டு வராமலே ஆகக்கூடும்.

மேலும் சில நாட்களுக்குப் பிறகு சகதேவன் தெற்கு நோக்கி சென்றான் என்னும் செய்தியை அறிந்தேன். நகுலன் மேற்கு நோக்கி என்று பின்னர் கேட்டேன். மூத்தவர் அவர்களை வாழ்த்தி அனுப்பியிருப்பார். அவர்கள் மூவரும் முன்னரே அவர்கள் சென்ற பயணத்தையே மீளவும் செல்கிறார்கள். கொடியும் படையும் கொண்டு சென்றபோது தவறவிட்டவற்றை தன்னந்தனியாக சென்று தொட்டெடுக்க விழைகிறார்கள் போலும். மூத்தவர் யுதிஷ்டிரனும் அவ்வண்ணமே, அவர் சென்ற பயணங்களில் பிறிதொருவராக மீண்டும் செல்கிறார். எனில் நானும் கிழக்கு நோக்கித்தானே செல்ல வேண்டும்? கிழக்கே செல்லவே என் உள்ளம் விழைந்தது. என்றும் கிழக்கே என் திசை. என் தெய்வத்தந்தைக்குரியது அது.

மாளவத்திலிருந்து தெற்கு நோக்கி வரும்போது காட்டில் ஒரு சூதனை கண்டேன். அந்த மரத்தடியில் அவனுடன் ஏழெட்டு வணிகர்கள் மட்டும் இருந்தனர். தன் கிணையையும் யாழையும் மீட்டிப் பாடிய அவன் அஸ்தினபுரியின் பெருவேள்வியின் கதையை சொன்னான். அவன் அதை முடித்தபோது சொன்ன கதை அதுவரை கேட்டிராதது. அஸ்தினபுரியிலிருந்து கதைகள் கிளம்பி நாடெங்கும் சென்றுகொண்டிருந்தன. யாதவரே, இன்று அஸ்தினபுரிக்கு நாடெங்கிலுமிருந்து கதைகள் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வண்ணம் கூறப்பட்ட ஒரு கதை அது. பாதி பொன்னுடலான ஒரு கீரியின் கதை. அதை நான் அப்போதுதான் அறிகிறேன். அஸ்தினபுரியை கதைகளின் வழியாக திரும்பத் திரும்ப கண்டடைந்துகொண்டே இருக்கிறேன்.

அவன் அக்கதையை சொல்லி முடித்து வணங்கினான். சூழ்ந்திருந்தவர்கள் அஸ்தினபுரியைப் பற்றி பேசலாயினர். அப்பெரும்போரை, அதில் திரண்டெழுந்த வேதத்தை. பாற்கடல் கடைந்த அமுதென்று எழுந்தது அது என்றார் ஒருவர். யாதவரே, நான் கேட்டது பிறிதொரு போர். தெய்வங்கள் ஆட மானுடர் அவற்றின் கையில் திகைத்து அமர்ந்திருந்தனர் அதில். அனலைச் சூழ்ந்து அனைவரும் படுத்துக்கொண்ட பின்னர் நான் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அரைத்துயில் வந்து என்னை மூடியபோது என் உள்ளம் எழுந்து அக்கதை காட்டிய வழியினூடாகச் சென்று அம்முதுமகள் அனல் மூட்டிய அடுப்பை வந்தடைந்துவிட்டது. அந்த அடுப்பின் அருகே ஒரு சிறுகுடிலில் தாங்கள் அமர்ந்திருந்தீர்கள்.

“எவ்வண்ணம்?” என்று இளைய யாதவர் கேட்டார். அர்ஜுனன் புன்னகைத்து “யாதவரே, தாங்கள் ஒருவயதுக் குழந்தையாக இருந்தீர்கள். பூழியில் விளையாடி மண்மூடிய உடல்கொண்டிருந்தீர்கள். மண்ணில் இருந்து ஒரு விதையை என ஒரு முதுமகள் தங்களை தூக்கி எடுத்தாள். நீங்கள் கால்களை உதறி திமிறிக் கூச்சலிட்டுத் துடிக்க பற்றி இழுத்து தூக்கிச்சென்றாள். குடிலுக்குப் பின்புறம் வெந்நீர் கலத்தின் அருகே கொண்டுசென்று நிறுத்தி இரு கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து உங்களை நீராட்ட முயன்றாள். நீங்கள் கூச்சலிட்டு துள்ளிக்கொண்டிருந்தமையால் ஒரு காலால் உங்கள் இரு கால்களையும் சேர்த்துப் பிடித்து நிலத்தோடு பதித்தபின் வலக்கையால் மரக்குடுவையில் அள்ளி இளவெந்நீரை உங்கள் மேல் ஊற்றினாள்” என்றான்.

நீங்கள் அந்த நீரை வாயில் உறிஞ்சி அவள் மேல் துப்பி கூச்சலிட்டு அழுதீர்கள். அவள் அதை மகிழ்ந்து சிரித்து ஏற்று நீரை அள்ளி விட்டு உங்களை கழுவினாள். நீர் உடலில் விழுந்து சற்று நேரம் கழிந்ததுமே நீங்கள் அதில் மகிழ்ந்து அவள் கையை உதறி மீண்டு அத்தோண்டியை வாங்கி நீங்களே நீரள்ளிவிட்டு குளிக்கத்தொடங்கினீர்கள். உங்கள் சிரிப்பை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மேல்வாயில் இரு பால்பற்கள். அகன்ற செவ்விதழ்கள். தலையில் சூட்டப்பட்ட பீலியில் நீர்த்துளிகள். முதலில் அது அனிருத்தனின் மைந்தன் வஜ்ரநாபன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பின்னர் அறிந்தேன், அது தாங்களே என்று. யாதவர்களில் தலையில் பீலிவிழி சூடுபவர் தாங்கள் ஒருவரே. புழுதியிலாடி மறைந்திருக்கையிலும் பீலி நீலச்சுடர் எனத் தெரிந்ததை எண்ணினேன். எங்கும் அப்பீலியைக்கொண்டே உங்களை அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் என்னை நோக்கி கைநீட்டி “விளையாட வா!” என்றீர்கள். நானும் அப்போது அதே அகவை கொண்ட குழவியாக இருந்தேனா? தெரியவில்லை. “விளையாட வா!” என்று மீண்டும் அழைத்தீர்கள். உங்கள் சொற்களை கேட்டேன். “என்ன விளையாட்டு?” என்று நான் கேட்டேன். “இங்கே விளையாட்டு…” என்றீர்கள். விழித்துக்கொண்டேன். இருளை நோக்கி படுத்திருந்தேன். ஒளிரும் நீல விண்மீன் ஒன்று மிக அருகே என தொங்கிக்கொண்டிருந்தது. அதை நோக்கிக்கொண்டிருக்கையில் நான் துயரற்றிருந்தேன். இனிமையே என ஆகிவிட்டிருந்தேன். இழந்தவை அனைத்தையும் கடந்து மறுகரையில் நின்றிருந்தேன்.

சூதனின் ஆடையின் ஓசை கேட்டு நான் எழுந்து அமர்ந்தேன். அனலுக்கு அப்பால் அச்சூதனும் எழுந்து அமர்ந்திருந்தான். என்னை நோக்கி புன்னகைத்து “ஒரு கனவு” என்றான். “எவரிடம் சொல்ல என எண்ணினேன், விழித்துக்கொண்டேன்.” நான் “கூறுக!” என்றேன். “அங்கே அன்னத்தால் வேள்வி நிகழ்ந்த அடுப்பருகே நான் மகாருத்ரனை கண்டேன். நெற்றியில் அனல்விழி எழுந்த கோலம். விழிமணி மாலைகள். முப்புரி வேல். நஞ்சுண்ட கழுத்து. ஆனால் விந்தை, ஓர் அகவை மட்டுமே கொண்ட சிறுவனென அமர்ந்திருந்தார் சங்கரன். புலித்தோலாடை அணிந்து இடையில் உடுக்கை தொங்க. விந்தையான கனவு என கனவுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன், எழுந்தேன்” என்றான். “எண்ணி எண்ணி குழைகின்றேன். எவ்வண்ணம் இக்கனவை பொருள்கொள்வேன்?” என்றான் சூதன். “பொருள்கொள்ளாச் சொற்கள் சூதர்களிடம் இருக்கலாகாது என்பார்கள்.”

நான் அவனிடம் “அவ்விழி சென்ற யுகங்களில் பகை முடிக்க, அறம் திகழ, இறையருள் பொலிய வெங்கனல்கொண்டு திறந்தது. இது கலியுகம். ஒவ்வொருவரும் தங்கள் நன்மைகளினூடாக, கனிவினூடாக கற்றுக்கொள்ளும் காலங்கள் அவை. பிழைகளினூடாக, வஞ்சத்தினூடாக கற்றுக்கொள்ளும் ஒரு காலம் எழுந்துள்ளது. இக்காலத்திற்குரிய தோற்றம் பிறிதொன்று. அந்த நுதல்விழி இன்று வண்ணம் பெற்று பீலிவிழி என்றாகியுள்ளது போலும்” என்றேன். நான் கூறியது அவனுக்குப் புரிந்தது என்று அவன் விழிகள் காட்டின. எழுந்து “வாழ்த்துக, சூதரே!” என்று அவன் கால் தொட்டு வணங்கினேன். “வெல்க!” என்று அவன் கூறினான். அந்த மரத்தடியிலிருந்து இங்கு வந்தேன்.

இளைய யாதவர் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். “இங்கு வரும்போது ஏன் வருகிறேன் என்று தெளிவுகொண்டிருக்கவில்லை. இங்கு வந்தபின்னும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கிருந்தும் செல்லவே வந்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது எதற்காக? மீளவும் என்னிடம் எதையேனும் கேட்க விழைகிறாய் என்றால் நான் கூறியனவற்றை நீ மறுக்கிறாய், அன்றி கடந்துசெல்கிறாய்” என்றார் இளைய யாதவர். “உனக்குரிய சொற்கள் அனைத்தையும் நான் முன்னரே உரைத்துவிட்டேன். அவை உன்பொருட்டே சொல்வடிவானவை.”

அர்ஜுனன் “ஆம், இங்கு வரை வரும்போது நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்னும் ஏதேனும் நீங்கள் கூற இயலுமா என்று. நீங்கள் எனக்குரைத்தவை என்றுமென நின்றிருக்கும் சொற்கள். அவை வளர்பவை, காலம் நீளும் தோறும் முடிவிலாது பெருகுபவை. வேதங்களென, மெய்நூல்களென, காவியங்களென நிறைபவை. இங்கு என்றும் அவை நின்றிருக்கும், வடமாமலைகளைப்போல. எனினும் அச்சொற்கள் என்னை வந்தடைந்தபின்னர் நான் எவ்வண்ணம் அவற்றை எதிர்கொண்டேன்? விண்ணிலிருந்து செம்முகிலொன்று பொற்குவையென மாறி விழுந்து கையை அடைந்ததுபோல் வந்தது இறைப்பாடல். ஆனால் அக்கணத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக நான் இழக்கத்தான் தொடங்கினேன்” என்றான்.

குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் பதினெட்டு நாட்களில் எனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் நான் முற்றிலும் இழந்தேன். பதினெட்டாவது நாள் போர் முடிவில் வெற்றி வெற்றி என பெருமுரசம் ஒலித்தபோது ஒரு சொல் எஞ்சா உள்ளத்துடன் அங்கு நின்றிருந்தேன். உளமேங்கி அழுதேன். ஒரு சொல்லின் இறப்பென்பது அவ்வளவு எளிதல்ல. யாதவரே, ஒரு சொல் முடிவிலா பொருள் கொள்ளும் தகைமை கொண்டது. அதுவே அதன் உயிர். பொருளை அளிக்கும் தன் திறனை அது இழக்கையிலேயே சொல் உதிர்கிறது. வைரமென திரும்பித் திரும்பி பல்லாயிரம் பட்டைகளைக் காட்டி ஒளிவிடுகிறது, இழந்து கல்லாகிறது. அத்தனை சொற்களையும் இழந்தவன் தீயூழ் கொண்டவன். தெய்வங்களால் கைவிடப்பட்டவன். தன்னை தானே கைவிட்டவன்.

அங்கிருந்து நான் அஸ்தினபுரிக்கு மீண்டபோது என் உள்ளமெங்கும் சொல்லின்மை நிறைந்திருந்தது. உங்களுடன் பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. திசைவெற்றிகாக என்னை பணித்தார் மூத்தவர். நான் கிழக்கு நோக்கி கிளம்பியபோது “இந்திரனின் திசை நோக்கி செல்கிறாய். உன் தந்தை விரித்த கைகளுடன் அங்கு உன்னை எதிர்பார்த்து காத்திருப்பார். செல்க!” என்றார். “ஆம்” என்று நான் உரைத்தேன். “இந்திரனை வென்றவன் துணை உன்னுடன் இருக்கட்டும்” என்றார் மூத்தவர். அத்தருணத்தில் ஒரு விந்தையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிற்றிளமையில் நீங்கள் இந்திரனை வென்று மந்தரமலையைத் தூக்கி குடையாக்கினீர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு, யாதவ நிலமெங்கும் இந்திர ஆலயங்கள் இல்லாமல் ஆயிற்று. மந்தரமலையே தெய்வமென ஆக்கப்பட்டது. வென்ற இந்திரனை தோழனென ஆக்கி உடன் வைத்துக்கொண்டீர்களா? அவனுடன்தான் அத்தனை நாள் விளையாடிக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் கூறிய அத்தனை சொற்களும் இந்திரனுக்குரியவையா?

அன்று உங்கள் மேல் அடைந்த சினமும் கொந்தளிப்பும் நினைவுள்ளது. உங்களிடம் வாழ்த்து பெறாமலே கிழக்குத்திசை வெல்ல கிளம்பினேன் என்பது நினைவுக்கு வந்தது. செல்லும்போது உங்களிடம் இருந்து எப்போதைக்குமென கிளம்பிச்செல்கிறேன் என்றே தோன்றியது. இனி அஸ்தினபுரிக்கு திரும்பி வரக்கூடாது என்றே எண்னினேன். ஆனால் நகர் எல்லையைக் கடந்ததுமே தனிமைகொள்ளத் தொடங்கினேன். மேலும் மேலும் என வந்தமைந்த வெறுமையால் உடல் வீங்கிப்பெருத்து எடைகொண்டு அசைவிலாதாகியது. தேரில் வெற்றுச் சடலமென என் உடல் அமைந்திருந்தது. முற்றிலும் உயிர் இழந்துவிட்ட ஓர் இரவு சூழ்ந்திருந்தது.

அன்று என் உடலிலிருந்து பிரிந்து நான் என்னை பார்த்துக்கொண்டிருந்தேன். தேரிலிருந்து அசைந்துகொண்டிருந்த வீங்கிப்பெருத்த அவ்வுடலிலிருந்து புழுக்கள் நெளிவதுபோல் தோன்றியது. உடலின் பெரும்பகுதி அசைவை இழந்தது. என் சுட்டுவிரலை நான் பார்த்தேன். அதில் சற்று உயிர் இருந்தது. அவ்விரலை என் கைகளால் இறுகப் பற்றினேன். உடலெங்கும் உயிர் பரவ கண்விழித்து எழுந்து என்னை நோக்கி புன்னகைத்து “யாதவரே, என்னுடன் இருங்கள்” என்று என் உடல் கூவியது. “நான் உன்னுடன் இருப்பேன், நீ விழைந்த வடிவில்” என்றபடி அவ்வுடலின் அருகே நான் அமர்ந்தேன். விழித்துக்கொண்டபோது என் முகம் புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

தேர் சென்றுகொண்டிருந்தது. என்னருகே உங்களை உணர்ந்தேன். அருஞ்சொல் ஆற்றியமைந்த கோலத்தில் அல்ல. தேரோட்டியாகவும் அல்ல. நாம் முதலில் கண்டபோது இருந்த அந்த இளந்தோழனாக. பொருளற்ற சொற்களை அள்ளி ஒருவரோடொருவர் இரைத்து விளையாடி மகிழ்ந்திருந்த காலங்களில் இருந்த அந்த முகத்துடன், அவ்விளமைச் சிரிப்புடன். கூச்சல்கள், கொந்தளிப்புகள், இளமையின் மந்தணங்கள், களியாட்டுகள், இளிவரல்கள். யாதவரே, நான் விடுபட்டேன். அப்பயணம் முழுக்க நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். வழிகாட்டினீர்கள். இளைஞனென கீழ்த்திசை சென்றேன். வென்று மீண்டபோது பிறிதொருவனாக இருந்தேன்.

யாதவரே, மீண்டும் அஸ்தினபுரி வந்து உங்களை அணைந்தபோது இருந்தவன் அவ்விளைஞன். நீங்கள் அளித்த மெய்மையின் ஒரு சொல் கூட எஞ்சாதவன், எனில் உங்களை அணுக்கன் என உணர்ந்தவன். இன்று அங்கிருந்து கிளம்பியவனும் அவனே. இப்போது உங்களை உடன் கொண்டுசெல்ல விரும்புகிறேன். உங்கள் ஒரு சொல், ஒரு பொருள் எனக்குத் தேவை. அது உடனிருக்குமெனில் இந்த நீள் பயணம் எனக்கு ஒன்றும் இடர் கொண்டதல்ல. நாளும் புத்தொளியுடன் விரிவது, புதியவை தேடிவருவது. எனக்கென ஒரு சொல் உரையுங்கள், பெற்றுக்கொண்டு நாளை காலையில் இங்கிருந்து கிளம்புகிறேன்.

இளைய யாதவர் நகைத்து “இங்கு நான் வெற்றிருப்பென அமர்ந்திருக்கிறேன். எவரிடமும் பெற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் அளிப்பதற்கும் எதுவும் இல்லை. இப்புவியில் நான் எழுந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இயற்றுவதற்கொன்றுமில்லை. காத்திருப்பதற்கே ஒன்றுள்ளது” என்றார். அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “தங்கள் சொற்கள் பெரும்பாலும் எனக்கு புரிவதில்லை. எனினும் என்றேனும் இது புரியுமென்று எண்ணிக்கொள்கிறேன்” என்றான். பின்னர் சிரித்து “நான் இங்கு வந்தபோது எண்ணிவந்த ஒன்று உண்டு. வெறும் அறிவின்மை என இப்போது படுகிறது” என்றான். “என்ன?” என்றார் இளைய யாதவர். “இளிவரலாகிவிடும், வேண்டாம்” என்றான் அர்ஜுனன்.

“சொல்” என்றார் இளைய யாதவர். “நீங்களே அறிவீர்கள்” என்றான் அர்ஜுனன். “நான் உங்கள் அழியாச் சொல்லை மீண்டும் எனக்கெனச் சொல்லமுடியுமா என்று கேட்க விழைந்தேன். நீங்கள் எனக்குக் காட்டிய அப்பேருருவை மீண்டும் காண ஏங்கினேன்.” இளைய யாதவர் நகைத்து “அதை மீண்டும் சொல்லிவிட்டேன். பேருருவையும் பார்த்துவிட்டாய்” என்றார். அவன் அவர் சொல்வதென்ன என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வாயிலில் அச்சிற்றூரின் மூன்று சிறுமியர் வந்து நின்றிருந்தனர். தயை மூங்கிலைப்பற்றி காலை ஊசலென ஆட்டியபடி “உங்கள் இருவரையும் அன்னம் கொள்வதற்கு அழைத்து வரும்படி அன்னை சொன்னாள்” என்றாள். இன்னொரு பெண் எலிபோல் குரலெழுப்பி “அதற்குள் வானில் விண்மீன் எழுந்துவிடும், ஆகவே பிந்தவேண்டாம் என்று சொல்லச் சொன்னார்கள்” என்றாள். தயையை சுட்டிக்காட்டி “இவள் அதை மறந்துவிட்டாள், நான்தான் சொன்னேன்” என்றாள். இன்னொரு பெண் முன்னால் வந்து உள்ளே எட்டிப்பார்த்து “நல்ல அன்னம் இனிப்பானது. தேன்!” என்றாள்.

“இதோ வருகிறேன்” என்று இளைய யாதவர் எழுந்துவிட்டார். அர்ஜுனனும் எழுந்து அப்பெண்கள் அருகே சென்று அவள் தோளில் கைவைத்து “இங்கே தேன் எங்கிருந்து கிடைக்கிறது?” என்றான். “அங்கே உயர்ந்த மலைமீது… அங்கே கனிகளாக காய்த்துத் தொங்குகிறது. இங்கிருந்து பார்த்தால் தெரியும்” என்றாள் தயை. இன்னொருத்தி வந்து “அது பசுவின் அகிடுபோல மலையின் அகிடு என்று என் பாட்டி கூறினார்” என்றாள். “தேன் விண்ணவரின் உணவு. கந்தர்வர்கள் சிறகுடன் பறந்து தேனை அருந்துகிறார்கள்” என்றாள் தயை.

அவர்களுக்கு உணவிட ஒரு சிறு குடில் ஒருக்கப்பட்டிருந்தது. இரவானதால் தேன் கலந்த கஞ்சியும் பழக்கூழும். இளைய யாதவர் ஒவ்வொரு துளியையாக சுவைத்து தலையை அசைத்து உண்டார். இல்லத்து இளம்பெண் அவருக்கு அன்னம் அளிக்கையில் உளம் நெகிழ்ந்து விழி கனிந்து உடலெங்கும் ஓர் ஒளி பரவி நிற்பதுபோல் தோன்றினாள். உள்ளிருக்கும் அனலால் உருகும் பொன் என்று எங்கோ ஒரு சூதன் பாடியதை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். அவர் உண்டு முடித்து “நன்று, இனிமை என் உடலெங்கும் நிறைந்துள்ளது. இவ்விரவெங்கும் என் உடன் நிற்பது இது” என்றார். அவள் விழி தாழ்த்தி பெருமூச்சுவிட்டாள். இளைய யாதவர் நிலம் தொட்டு வணங்கி எழுந்துகொண்டார்.

சொல்லமைந்து அரையிருளில் அவருக்குப் பின்னால் நடந்த அர்ஜுனன் தன் புரவியை எண்ணி புல்வெளியை பார்த்தான். எங்கோ அது தன் சுற்றத்துடன் சேர்ந்திருக்கும் என்று எண்ணி திரும்பியபோது திடுக்கிடல்போல் ஓர் உணர்வு எழுந்தது. அவனருகே அவரில்லை என்று. விழிக்கு முன் பருவுடலுடன் அவர் தோன்றிக்கொண்டிருந்தார். ஆனால் உள்ளம் அவர் இல்லை என்றே உணர்ந்தது. அந்த மாயை அவனை திடுக்கிடச் செய்ய அவன் அவர் அருகே மேலும் நெருங்கி சென்றான். அவர் குடிலுக்குள் நுழைந்து தன் பாயையும் மரவுரியையும் எடுத்து விரித்து மரத்தாலான தலையணையைப் போட்டு கைகூப்பியபடி மல்லாந்து படுத்தார். “தேவி!” என்றார். உடனே முற்றிலும் அணைந்து துயில்கொண்டார்.

எப்போதுமே இரு கைகளையும் இருபுறமும் வைத்து உடலை நேராக்கி விழிகள் மேல் நோக்கி திறந்திருக்க மெல்ல இமை மூடி அக்கணமே துயில்வது அவர் வழக்கம் என அவன் எண்ணிக்கொண்டான். சீரான மூச்சு வந்துகொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை என்ற உணர்வையே மேலும் மேலும் உள்ளம் உணர்ந்தது. கை நீட்டி அவர் உடலை தொட்டால் அங்கு இன்மையையே உணரமுடியும் என்று தோன்றியது. அவன் அவர் அருகே கண்மூடி படுத்துக்கொண்டான். கண்களை மூடிய பிறகு அவ்வுடலும் அங்கு இல்லை என்றாயிற்று. திடுக்கிட்டு எழுந்து ஒருக்களித்து மீண்டும் அவரை பார்த்தான். சீரான மூச்சுடன் அவர் அங்கு துயின்றுகொண்டிருந்தார். அந்த இன்மை உணர்வை அகற்றவே இயலவில்லை.

அவன் கண்களை மூடிக்கொண்டு நெடுநேரம் படுத்திருந்தான். அவ்வப்போது எழுந்து அவரை பார்த்தான். முற்புலரியில் எழுந்து ஓசையிலாது வெளியே சென்று முகம் கை கழுவி வந்தான். வாசலில் நின்று துயின்றுகொண்டிருந்த அவரை பார்த்தான். பின்னர் நடந்து சென்று ஒற்றையடிப்பாதையில் நின்று மெல்லிய சீழ்க்கை ஓசை எழுப்பினான். விழியொளித் துளிகளாக புல்வெளியில் நிறைந்து நின்றிருந்த புரவிகளின் கூட்டத்திலிருந்து கனைப்பொலி எழுப்பியது அவன் புரவி. புல்நடுவிலூடாக குளம்படி ஓசையுடன் அவனை நோக்கி வந்தது. அவன் உடல்மேல் தன் உடலை உரசி தலையை தோளின் மேல் வைத்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி காதுகளைத் தட்டி அசைத்த பின்னர் சேணத்தை மாட்டி கடிவாளத்தைப் பொருத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்து “செல்க!” என்றான். வந்த வழியே அது சீரான காலடி ஓசைகளுடன் கடந்து சென்றது. இம்முறை தன்னந்தனியாக ஒரு பயணம் செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைதனிமையின் புனைவுக் களியாட்டு
அடுத்த கட்டுரைகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்