என் வீட்டுக்கு நேர்முன்னால், எதிர்வீட்டு வளைப்புக்குள் ஒரு மாமரம் நிற்கிறது . அதற்கு ‘சீசன்’ எல்லாம் பொருட்டல்ல. பெரும்பாலும் ஆண்டு முழுக்க ஓரிரு காய்களாவது இருக்கும். அது ஓர் ஆச்சரியம் என்று வேளாண்துறை நண்பர்கள் சொன்னார்கள். சீசன் தொடங்குவதற்கு முன்னரே காய்த்துக் குலுங்கும். சீசன் முடிந்த பின்னரும் “என்னது, முடிஞ்சிருச்சா? அதுக்குள்ளயா?” என்று காய்களுடன் நின்றுகொண்டிருக்கும்.
நான் சின்னவயசில் சில அக்கா, மாமிகளை இப்படிப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கையில் இடையில் வயிற்றில் குழந்தைகள் இருந்துகொண்டிருக்கும். இந்த மாமரம் எனக்கு ஏராளமான நினைவுகளை அளிப்பது. ஆகவே ஒரு தனிப்பட்ட உறவு உண்டு. கௌரவமெல்லாம் பார்ப்பதில்லை, நான் அந்த மாமரத்தைக் கடந்துசெல்லும்போதும் வரும்போதும் ஒரு மாங்காய் என் கையில் இருக்கும்
என் வீட்டில் நான் மட்டுமே பச்சை மாங்காய் தின்பவன். கோடையில் எனது முதன்மையான மகிழ்ச்சியே மாங்காய்தான். நடைசெல்லும் இடத்தில் ஒரு மாமரம் உண்டு. அதுவும் காய்நிறைவதுதான். பச்சை மாங்காயை பல வடிவங்களில் சாப்பிடுவேன். கொட்டை முதிரா மாங்காய் முதல் அரைக்கனிவரை. அந்த அளவுக்கு எனக்கு மாம்பழம் மீதுகூட ஆர்வம் இல்லை.
அதிலும் இந்த இரு மரத்து மாங்காய்களும் மென்மையான இதமான புளிப்பு கொண்டவை. வெள்ளரிப்பதம் என எங்களூரில் சொல்வார்கள். சில மாங்காய்கள் பொட்டில் அறையும் புளிப்பு கொண்டவை. அவற்றை வாயில் வைத்தால் குடல் உலுக்கிக்கொள்ளும். உப்பை அள்ளி அள்ளிச் சேர்த்தால் மட்டும்தான் அவற்றை சாப்பிட முடியும். அவையெல்லாம் நம்மீது கொஞ்சம் பகை கொண்டவை. இந்த மாங்காய்கள் நமக்காக உளம் கொண்டவை
இந்த ஆண்டு மாங்காய் காய்த்துவிட்டது. ஆனால் எனக்குச் சிக்கல். என் கடைவாய்ப் பற்களை பத்தாண்டுகளுக்கு முன் பிடுங்கியிருந்தேன். அவற்றில் பல்லை பொருத்தலாம் என்றார் டாக்டர். ஆகவே சிலநாட்களுக்கு முன் ’பல்லாஸ்பத்திரி’ சென்றேன். என் வாயை கிளிப் போட்டு திறந்து மல்லாத்தி வைத்து நான்கு பெண்கள் நீர் இறைக்கும் வாளி உள்ளே விழுந்துவிட்ட கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பதுபோல பார்த்து என்னென்னவோ செய்தார்கள்
ஈறை அறுத்து எலும்பைத் துளைத்து நான்கு திருகாணிகளை பொருத்தியிருக்கிறார்கள். அவை எலும்பின் கால்சியத்துடன் இணைந்து ஊறி எலும்பின் இரும்புமுனை என ஆக மூன்றுமாதம் ஆகும். அதுவரை கடுமையாக எதையும் சாப்பிடக்கூடாது. சிக்கன் மட்டன் பட்டாணி எதுவும். கடுமையான பழங்கள் காய்கறிகள்கூட. குழைந்த சோறுதான் பெரும்பாலும் உணவு. ஆகவே இவ்வாண்டு பச்சை மாங்காய் இல்லை. எனக்கு பல் பொருத்தப்படும்போதும் இந்த மாமரத்தில் காய் எஞ்சியிருக்கவேண்டும்
ஒவ்வொருமுறை சென்று மீளும்போதும் கையெட்டும் தொலைவில் பசுமையின் ஒளியுடன் தெரியும் மாங்காய்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு திரும்பி வருகிறேன். அதை பார்க்கக்கூடாது என்று மறுபக்கம் திரும்பிக்கொள்வேன். ஆனால் பார்த்துவிட்டிருப்பேன். அது கடந்துசென்றபின் கண்ணில் அப்பசுமைக்காய்கள் எஞ்சியிருப்பதிலிருந்து தெரியும்.
நேற்று ஒரு கனவு. பச்சைமாங்காயை உப்புடன் சாப்பிட்டபடி வெயிலைப் பார்த்துக்கொண்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். விழித்துக்கொண்டபோது ஒரு பரவசம், அந்த மாங்காய் அத்தனை சுவையானது. உண்மையில் அதை எங்குமே சாப்பிடமுடியாது.