யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
இனிய ஜெயன்,
சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.
”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்”
இது புரிந்த பின் அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைதான்.
ஒரு மூலிகைக் குளியல் போல் கதை மனசுக்கு மிக இதமாக இருந்தது.
நன்றி ஜெயன்.
அன்புடன்
சந்தானகிருஷ்ணன்.
அன்புள்ள ஜெயமோகன்,
எத்தனை கோணங்களில் யா தேவி விரிகிறாள். இலக்கியமும் ஒரு பராசக்தி. கடிதம் ஒன்பதுவரை படித்துவிட்டேன். மீதி கடிதங்களை படிப்பதற்குமுன் என் எண்ணங்களையும் சொல்லிவிடுகிறேன்.மீதி கடிதங்களை படித்தபின் அவள் எப்படி விரிவாளென பார்க்கும் அவளுண்டு. உடல்தான் தான் என்ற எண்ணம் பத்துவயதில் எல்லாவிற்குவந்திருக்கும். அதற்குப்பின் தன் உடலின் வல்லமை, அதைக்கொண்டு ஆணின்மேல் செலுத்தும் அதிகாரம், ஆண்தரும் முக்கியத்துவத்தின் ஆணவம் எல்லாம் அவளை கட்டமைத்துவிட்டது.
பாலியல் நடிகையாய் அவளை பலபேர் பார்க்கும்போது, ஆணின் வெறியை அறியும்போது அவள் ஆணவம் பெருகிக்கொண்டே செல்கிறது. தன் உடலை ஆணின் ரசனைக்கென்ற மாற்றி மாற்றி தன் ஆணவத்தை பெருக்குகிறாள். முதல் முறை அவள் பொம்மை விற்கும்போது அதை பலபேர் புணர்வார்களென்ற எண்ணம் அவளுக்கு கிளர்ச்சியை தந்திருக்கும். பொம்மையாயிருந்தாலும் அவள் உடலில்லையா.அந்த கிளர்ச்சியின் விளைவாய் அடுத்த இரண்டு பொம்மைகளையும் விற்க அனுமதிக்கிறாள். அவள் உடலின் ஆணவம் உச்சத்திலிருந்த காலங்கள்.பாலியல் படங்களில் நடைத்தவரை அவள் உடல் அவள் வசம். ஒரு புள்ளியில் உணர்ந்திருப்பாள் பொம்மை என் உடல் ஆனால் அதன்மேல் உரிமையில்லை. தன் உடலை அடுத்தவர் கட்டுப்படுத்துவதைப்போல வேற துயரமுண்டா?. அந்த துயரை தன் கற்பனை மூலம் வளர்த்துக்கொள்கிறாள்.அந்த உச்சியிலிருந்து சரிகிறது அவள் ஆணவம்.
வழிதெரியாதவர்கள் செல்லும்பாதை போதை. போதையில் எதற்கும் வழியில்லையென்று அகத்தின் குரலுக்குத் தெரியும். அந்தக் குரல் வலுவாய் ஒலிக்கும்போது உழிச்சில் சிகிச்சைக்கு வருகிறாள்.அவளுக்கு முதலில் தேவை கலைந்த உள்ளத்தை கட்டமைப்பது. ஸ்ரீதரன் அவளுக்கு அளிப்பது நீ உடல்மட்டுமல்ல. இறங்கிய சரிவை அப்போதுதான் முதலில் உணர்கிறாள். உன் பொம்மைகள் உன்னிலிருந்து உதித்த அவதாரங்கள். ஆனால் நீ முழுமுதல். எவ்ளோ பெரிய விடுதலை.
பொம்மைலிருந்து மீண்டாலும் அவளுடல் இன்னும் அவளோடதுதான் உள்ளது. அதற்க்கு இன்னும் வல்லமையுள்ளதாவென அவன் மூலம் சோதிக்கிறாள். ஸ்ரீதரன் சக்தி மந்திரத்தை அப்போது சொல்லியதாய் கேட்கும்போது நிறைவடைகிறாள். மூன்று உணர்தல்கள் : உடல்தான் நீ, உடல்ல நீ, உடலும் சேர்ந்தது நீ.
பிற்சேர்க்கை : எல்லா சிகிழ்ச்சைக்கு வராமல் கிருஷ்ணனை பார்த்திருந்தால், அவளைமீட்டு பொம்மை தன் வாழ்வின் ஒருபகுதி, தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிகழ்வென உணர்த்தியிருப்பான்.கூடவே அதை வேடிக்கை பார்க்கவும் கற்றுக்கொடுத்திருப்பான்.அவளும் பொம்மையின் அடுத்த பாதிப்பை கொண்டுவந்திருப்பாள்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
அன்புள்ள ஜெ
எல்லா ஆன்ஸெல் தமிழ்ச் சிறுகதையின் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரமாக ஆகிவருகிறாள். முதல்கதையில் அவள் ஒரு கருவிதாந் அவள் மூலமாக ஸ்ரீதரன் கண்டுகொண்டதுதான் முக்கியமானது. இரண்டாம் கதையில்தான் நாம் அவளைக் கண்டு கொள்கிறோம். இந்த உலகுடன் சம்பந்தப்படாத ஒரு கதாபாத்திரமாகவும் இங்கே எல்லா இடங்களிலும் இருக்கும் கதாபாத்திரமாகவும் எல்லா தோற்றமளிக்கிறாள்.
இதுவரை நம் மனதைக் கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் மனுசிகள். இவள் ஓரு ஐக்கான் மாதிரி இருக்கிறாள். நாம் கொடுக்கும் அர்த்தங்களை எல்லாம் அவளே ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கென ஒன்றுமே இல்லாமலிருக்கிறாள். இந்த வாசிப்புகள் எல்லாமே எல்லா ஆன்ஸெலின் பொம்மைகள் மாதிரித்தானே?
ஸ்ரீனிவாசன்