அக்ஷயபாத்திரம் உணவு
அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
அஷ்யபாத்திரம் -உணவு கட்டுரையை மன நெகிழ்வோடுதான் வாசித்தேன் .அதுவும் “ஆகவே எவர் எதன்பொருட்டு சோறிட்டாலும் அதை ஆதரிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன்பொருட்டே இஸ்கானின் இந்த உணவுக்கொடையை முழுதுளத்துடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.” என்னும் வரிகளை வாசிக்கும்போது கண்ணில் கண்ணீர் பொங்கியது.
எனது 21 வயது வரை ஒரு கத்தோலிக்க அநாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன்.சாப்பிட்டேன்.அப்போது வெங்காயம் போடுகிறார்களா? பூண்டு போடுகிறார்களா? என நான் எண்ணியது கூட இல்லை. சோறு போடுகிறார்களே என சந்தோஷத்தோடு தான் சாப்பிட்டேன். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு போலியாக கத்துபவர்களுக்கு உண்மையிலே பசி என்றால் என்ன என்று தெரியுமா?
இஸ்கான் உணவை சாப்பிட்டு படிக்கும் குழந்தைகளில் ஒருவராவது ஒரு நாள் நன்றியோடு உங்களுக்கு கடிதம் எழுதுவார்கள்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
அன்புள்ள ஜெ,
இஸ்கான் அமைப்பின் அட்சய பாத்திரம் உணவு உதவி பற்றி நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன்.
சென்னையில் இருக்கும் ஒரு அரசு பள்ளியிலிருந்து, எங்கள் அமைப்புக்கு நான்கு வருடங்கள் முன்பு, ஒரு உதவி கேட்டு விண்ணப்பம் வந்தது. பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளி முடிந்த பின்பு சிறப்பு வகுப்புகள் எடுக்க தயாராக, ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், பள்ளியில் இரவு தங்கி பயிலவேண்டுமென்றால், இரவு உணவு ஏற்பாடு செய்யவேண்டும். பொதுதேர்வு நெருக்கத்தில் அதாவது, பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, உணவு வழங்கிட முடியுமா, என்றார்கள். ஏழ்மையான பின்னணியில் உள்ள மாணவர்கள் என்பதால், இந்த உணவு உதவி அவர்களுக்கு பெரும்துணையாக இருக்கும் என்றார்கள். ஆசிரியர்களின் நோக்கத்தை கண்டு, அந்த உதவியை நண்பர்கள் துணையுடன் செய்யதொடங்கினோம். அந்த வருடமே, தேர்ச்சி சதவிகிதம் எழுபதிலிருந்து தொண்ணூறு ஆனது. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பங்களிலிருந்து படிக்கவரும் அந்த மாணவர்கள், பள்ளி இறுதிவகுப்பில் தோல்வியடைந்தால், பெரும்பாலும் முடிவடைவது குற்றசெயல்களில்தான் என்கிற சூழலில், இந்த உதவி எத்தகையது என்பதை உணர முடிந்தது. இன்று வரை அந்த உதவியை செய்துவருகிறோம். தமிழ் நாட்டின் தலைநகரிலேயே, இதுதான் அரசுபள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சூழல்.
இந்த சூழலில், இஸ்கான் என்றல்ல, எந்த அமைப்பு உணவிட முன்வந்தாலும், அதை என்னால் குறை சொல்ல இயலாது. அதை வரவேற்பதே கடமை என்று நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு என்று இருக்கும் விதிகளின்படி தானே, அந்த உணவு இருக்கும்?. தவிர, இஸ்கான் அமைப்புக்கு தானம் தரப்படுவதாக சொல்லப்படும் இடம், இந்த உணவை தயாரிக்க தானே தவிர, கோவில் கட்ட அல்ல. மொத்த உணவு செலவில் இருபது சதவீகிதத்திலிருந்து முப்பது சதவீகிதம் வரையே அரசு தர இருக்கிறது. எழுபது சதவீகித பணத்தை இஸ்கான் அமைப்பே தருகிறது. இந்த சூழலில் டெண்டர் விட்டு, வியாபர நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாமே என்பதெல்லாம் அபத்தமின்றி வேறு என்ன?
இப்படி பூண்டு வெங்காயமின்றி, ஒருவேளை உணவு கொடுப்பதுமூலம், பெரிய சதி செய்கிறது இஸ்கான் என்று கருதினால், அந்த சதியை மாலை சிற்றுண்டியாக தந்தூரி சிக்கன் பீஸ் ஒன்று கொடுப்பது மூலம் சரி செய்யலாமே, இதர அமைப்புகள்? அல்லது நல்ல வெங்காயம் போட்ட ஒரு ஆம்லெட் இதை நிகர் செய்துவிடும்தானே?
எப்படியாவது குறைகூறி, ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்பது தான் வேண்டுகோள்.
ரா.செந்தில்குமார்.
—
– Senthilkumar, Tokyo
http://www.manavelipayanam.blogspot.com
அன்புள்ள ஜெயமொகன்,
அக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தேன். ஒவ்வொருவரும்தனக்கு வசதியான,இசைவான,லாபகரமான கோணத்தில் மட்டுமே ஒவ்வொருபிரச்னையையும் பார்க்கிறார்கள்.நீங்கள் அவர்களுடைய கோணம் உட்பட எல்லாகோணங்களிலும் யோசிக்கிறீர்கள் என்பதே என்னை ஈர்த்த முதன்மையான ஒன்று.
நிறைய உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள்.குழந்தைகளின் கோணத்தில் இந்தபிரச்னையை அணுக வேண்டும் என்பது முக்கியமான கருத்து.காலை உணவு சாப்பிடாமல்பள்ளிக்கு வரும் குழந்தைகளை நான் அறிவேன்.(15 ஆண்டுகளுக்கு முன் காலை ஒன்பதுமணிக்கு பள்ளிகள் தொடங்கிய காலத்தில் பல குழந்தைகள்– சாப்பிட வாய்ப்புள்ளவர்கள்உட்பட–காலி வயிற்றுடன் தான் பள்ளிக்கு வந்தனர்.) காலி வயிறு கல்வி பெற உகந்ததல்ல.சத்துணவு ஏழைக் குழந்தைகளுக்கு பெரும் வரப் பிரசாதம் என்பதில் மறுப்பில்லை.ஆனால் தரத்தை உத்தரவாதமாக சொல்ல முடியாது.சில பள்ளிகளில் சிறப்பாகவே இருந்தது.சில மாணவர்கள் பாதி சோற்றை கீழே கொட்டி விடுவதை சற்று முயன்றால் யார்வேண்டுமானாலும் காண முடியும்.ஒரு பள்ளியில் கீரையோடு புல் இருந்தது கண்டு அதிர்ந்துபோனேன். மக்கள் இதை சரி செய்ய முடியும். எதையும்.தலைமை ஆசிரியர்களால் ஒருஅளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.அரசியல் தலையீடு யாரையும் எதுவும் செய்யஅனுமதிக்காது.
மதிய உணவைப் போலவே காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம்.பத்து ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மடத்தின் பள்ளியைச் சேர்ந்தஒரு ஸ்வாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு காலையில் தரமான உணவு மடத்தின் சார்பில் வழங்குவதாக சொன்னார்.அதைக்குறிப்பிட்டு காலை உணவு வழங்குவதன் அவசியம் குறித்து இயக்குநர் நடத்திய கூட்டத்தில்குறிப்பிட்டேன்.அதுவே என்னால் இயன்றது.
இஸ்கான் காலை உணவு வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ளது.உள் நோக்கம் கொண்டஎதிர்ப்புகளால் அது சிறிதும் தொய்வடையாமல் மேலும் சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டும்.
சாந்தமூர்த்தி.
மன்னார்குடி.
அன்புள்ள ஜெ
அக்ஷய பாத்திரம் குறித்த தங்கள் கட்டுரை வாசிக்கும்போது மனம் நெகிழ்ந்தது. என்னவோ தெரியவில்லை; குழந்தைகளின் பசி பற்றி யோசிக்கும் போது அழுகை வந்து விடுகிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும்போது நம் மேலேயே சலிப்பும் கோபமும் வருகின்றன.
ஒரு நற்செயல் நடைபெறும்போது உள்நோக்கங்களைக் கற்பித்து எதிர்க்கும் கயமை அதிர்ச்சி தருகிறது. வெங்காயம், பூண்டு கலந்த உணவோ ,ஹலால் முறையான உணவோ , தேவனுக்கு நன்றி தெரிவித்தபின் தரப்படும் ரொட்டியோ , பகுத்தறிவு முறையில் சுடப்பட்ட அப்பமோ எதுவாயினும் குழந்தைகளுக்கு உணவு தருவதை எதிர்க்க எவருக்கும் உரிமை இல்லை
“ கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதும் இன்றிக் கெடும்” என்னும் குறள் நினைவுக்கு வந்தது. வள்ளுவரின் அறச்சீற்றம் பி பி சி முதலிய ஊடகங்களுக்கு என்றுமே புரியாது.
தங்கள் எழுத்தின் சிறப்பு தகவல்களை இணைத்துக் கொள்வது. இஸ்கான் – சைதன்யர்- அவரது தென்னாட்டுப் பயணம். – அவர் தங்கள் திருவட்டாறில் முன்னோரின் இல்லத்திற்கு அருகில் தங்கி இருந்த செய்தி என்று, தகவல்களை இணைத்து தரிசனமாக ஆக்கிக் கொள்வது சிந்தனைப் பயிற்சியாக இருக்கிறது
“ஆகார சுத்தௌ சத்வ சுத்தி” என்னும் சாந்தோக்ய உபநிடத சூத்திரத்திற்கு ராமானுஜர் “உண்ணும் உணவே மனதைச் செம்மை செய்கிறது “ என்பதால் உணவை கவனிக்க வேண்டும் என்று பொருள் சொன்னார். (ராமானுஜரின் தாக்கம் சைதன்யரின் கொள்கையில் இருந்தது என்று நினைக்கிறேன்). சங்கரர் “மனதிற்கு உணவாகிய எண்ணங்களை கவனியுங்கள்” என்றார்.
எல்லாவற்றையும் சமன்வயப்படுத்திக் கொண்டு தான் கண்ணுக்குத் தெரியாத நதியாக இந்துமதம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது
பிராமணராகிய ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு சார்ந்த அகந்தை வந்துவிடக்கூடாது என்பதால் துப்புரவுத் தொழிலாளரின் வீட்டுக் கழிவறையை (அவர் தடுப்பார் என்பதால் ) இரவு நேரத்தில் சுத்தம் செய்து தன் நீண்ட தலைமுடியால் துடைத்தார். இதை பெருமிதத்துடன் சுவாமி விவேகானந்தர் பறை சாற்றுகிறார்.
காயஸ்த குலத்தைச் சேர்ந்த விவேகானந்தர் (இன்றைய அளவுகோலில் பிற்படுத்தப்பட்ட பிரிவு) தனது குருநாதரின் அழைப்பை ஏற்று துறவு மேற்கொள்கிறார். தந்தை இறந்தவுடன் கொடும் வறுமை. ஞானிகளுக்கும் வீட்டை விட்டு தவத்திற்குள் செல்லும் காலம் கொடிய நினைவுதான்.
குருதேவர் இருக்கும் காளி கோயிலுக்கும் வீட்டிற்கும் வந்து போய்க்கொண்டிருக்கும் இடைக்காலத்தில் ஒரு நாள் வீட்டில் அன்னை தான் உண்ணாமல் நரேன் உண்பதற்காக எடுத்து வைத்திருந்த மான் கறியை உண்டதைப் பதிவு செய்கிறார். (ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்) பின்னர் அலையும் துறவியாக இந்தியா முழுவதும் சுற்றி வருகையில் கொடிய பசியில் ஒரு முஸ்லிம் முதியவர் வழங்கிய வெள்ளரிக்காயை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
பசியை உணர்ந்து, தற்காலத் தேவையை அறிந்த விவேகானந்தர் –மரபின் கெட்டித் தன்மையை உடைக்கவும் மனித நேயத்தை மதத்தில் கலக்கவும் சக்தியை ராமகிருஷ்ணரிடம் இருந்து பெற்றார். ராமகிருஷ்ண இயக்கம் பிரம்ம சமாஜத்தை உட்கிரகித்து செரித்து விடவில்லை என்றால் தேசத்தின் போக்கு வேறு மாதிரி ஆகி இருக்கலாம். அனைத்து மத சமரசத்தை ராமகிருஷ்ணர் சுய அனுபவத்தில் நேருக்கு நேர் பயிற்சியின் மூலம் நிரூபித்தார். அன்பின் அடிப்படையில் பரப்பினார்.
வங்கத்தில் உணவு முறை வேறுபட்டது. ராமகிருஷ்ணர் அன்னை காளிக்கு அர்ப்பிக்கப் பட்ட ஆட்டுக்கறியை கொஞ்சமாக எடுத்துக் கொள்வார். (சாத்விக உணவிற்கு உடல் பழக்கப் பட்டு விட்டதால் அதிகம் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்.) ராமகிருஷ்ணரின் துணைவி தூய அன்னை சாரதைக்கும் அவருக்குமான தூய உறவு அக்காலத்தில் ஒரு பெண்ணுரிமைப் புரட்சி. சாரதையும் சாதிக் கொடுமைகளை உடைத்தார். மிகக் குறுகிய அறையில் தலைக்குமேல் தொங்கும் உரியில் குருதேவருக்கு சமைப்பதற்காக வைத்திருக்கும் மீன்கள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பதிவு செய்கிறார்.
துறவிகள் சாதி- வர்ணம் கடந்தவர்கள். துறவிகளின் சாதிப் பின்னணியைப் பேசும் அறவீழ்ச்சியை தற்கால விவாதங்கள் ஏற்படுத்துகின்றன.
புல்லுணவு – புலால் உணவு என்று பிரிந்து அடித்துக்கொள்பவர்கள் அறிமையில் ஊறிக் களிப்பவர்கள். குரு நித்யா உங்களிடம் ஒரு விவாதத்தில் ஒரு பக்க வாதத்தை நீங்கள் ஆவேசத்துடன் முழங்கியவுடன் “இப்போது அப்படியே எதிர் தரப்பின் சார்பில் பேசு” என்று பணித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேலும் ஈரோடு விவாதப் பட்டறையில் “ஒரு கருத்து உள்ளே போகும்போதே அதன் எதிர்க் கருத்தும் சேர்ந்து புகுந்து விடுகிறது” என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை!
நீங்கள் பகவத் கீதையை பக்தி மட்டுமே சார்ந்து பரப்புவதில் இஸ்கான் தரப்பை மறுதலித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு நற்செயல் நிகழும்போது அதன் தரப்பை முழுதும் உணர்ந்து முன் வைப்பதும் அதே சேவையை பிற மதத்தார் செய்தால் வரவேற்பதாக நிலை எடுப்பதும் மறைந்த சோ அவர்களை நினைவு படுத்துகிறது.
லயோலா கல்லூரியில் அவர் படித்த நாட்களில் மதம் பரப்பப் படவில்லை என்றும் அவர் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுவதை கிண்டல் செய்து எழுதி இருந்த கட்டுரையை கடுமையாக பேராசிரியர் கண்டித்ததையும் பதிவு செய்திருந்தார். மதம் இறுகிப் பிடித்துக் கொண்டு விடாமல் இருக்க நம்பிக்கையாளர்களின் முயற்சி அதிகப் பலன் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அனைவரும் நிறைநிலை அடையும் மறைச்சொல்லை தான் வீழ்ந்தாலும் பரப்ப வேண்டும் என்று திருக்கோட்டியூர் அஷ்டாங்க விமான கோபுரத்தில் ஏறிய ராமானுஜரின் கருணை சைதன்யர் வழியே இஸ்கான் மூலம் கசிகிறது.
எளியவர்கள் எழுச்சி பெறவேண்டும்; சமூகத்தின் நற்செயல்கள் மனதின் குறுக்கல் விகாரத்தால் கூம்பி விடக்கூடாது என்னும் ஆதங்கம் சுவாமி விவேகானந்தர் – டாக்டர் பல்பூ- சட்டாம்பி சுவாமி – நாராயண குரு – நடராஜ குரு –
(சென்னையில் தத்துவப் பேராசிரியராக இருக்கும்போது கல்லூரியை விட்டு வெளியேறி குடிசைப்பகுதியில் சென்று வாழ்ந்த) நித்ய சைதன்ய யதி என்று மகான்களால் அருளப் பட்டது. அந்த ஆன்மிக -சமூக அக்கறையின் ஒரு துளி உங்கள் மூலம் வெளிப்பட்டதற்கு நன்றி.
ஆர் ராகவேந்திரன்
கோவை
அன்புள்ள ஜெ
அக்ஷயபாத்ரம் விவகாரம் பற்றிய விவாதங்களைக் கவனிக்கிறேன். ஒரு ஆசிரியர், நல்லவர் , இப்படி ஒரு பதிவு எழுதுகிறார். இரு வேறு சம்பவங்களில் மாணவிகள் தேர்வு அறையிலும் வகுப்பிலும் மயங்கிக்கிடக்கிறார்கள். ஏனென்றால் காலையுணவு சாப்பிடாமல் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவியதைப் பற்றிச் சொல்கிறார். அங்கே சென்று உருகி உருகி எதிர்வினையாற்றியவர்கள் உடனே அக்ஷயபாத்திரம் திட்டம் நிறுத்தப்படவேண்டும், எங்கள் பிள்ளைகள் பிச்சைக்காரர்கள் அல்ல என்கிறார்கள். வேறு ஒன்றுமே இல்லை. சென்னையில் அதிமுகவுக்கு ஒரு பத்தாயிரம் ஓட்டு கூடிவிடும் என்ற பதற்றம். இந்துக்கள் சோறுபோடுகிறார்களே என்ற பேச்சு எங்குமே வந்துவிடக்கூடாது என்ற மதவெறி
பரிதாபமான பிறவிகள்
சந்திரமௌலி
அன்புள்ள நண்பர்களுக்கு
இந்த அக்ஷயபாத்திரம் விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் விவாதம் என்றபேரில் இங்கே அளிக்கும் இடத்தை அவதூறுகளைப் பதிவுசெய்யும் வாய்ப்பாகவே பலர் நினைக்கிறார்கள். நேர்மையானவர்கள் என நான் நினைக்கும் நண்பர்கள் உட்பட எதிர்க்கருத்து கொண்டவர்கள் எவருக்கும் அணுவளவுகூட என் சொற்கள் சென்றுசேரவில்லை. அவர்களின் மனசாட்சியை துளிகூட என்னால் தொட முடியவில்லை. அதே காழ்ப்பு. அதே அவதூறுகள், அதே அடிப்படை அற்ற ஐயங்கள், அதே தரவுத்திரிப்பு விளையாட்டுக்கள்.
அரசியல்நிலைபாட்டை ஒரு வகையான இறுக்கம் என்ற அளவிலேயே முன்பு கண்டிருந்தேன், இன்று அது ஒருவகை உளச்சோர்வுநிலை என்றாகிவிட்டிருக்கிறது. அப்படி இருக்கிறது சூழல். ஒருவர் ஒரு செய்தியைப்பற்றி என்ன சொல்வார் என்பது அச்செய்தியை அவர் அறிவதற்கு முன்னரே நம்மால் உறுதிசெய்யக்கூடுவதாக உள்ளது. என்னதான் விளக்கினாலும், ஆதாரம் காட்டினாலும், அறச்சார்பை முன்வைத்தாலும் அவர் மாறப்போவதில்லை. சரி, அது அவர்களின் கருத்து, அவ்வளவுதான்.
இந்த விஷயத்தில் எனக்கு சற்று ஒவ்வாமை அளிப்பது ஒன்றே. அக்ஷயபாத்ரம் அமைப்பு அளிக்கும் உணவுக்கொடைக்கு நன்கொடை அளிப்பவர்களில் முதன்மையானவர்கள் மான்சாண்டோ நிறுவனம் போன்றவை. அவற்றின்மேல் எனக்கு ஐயமும் மறுப்பும் உண்டு. ஆனாலும்கூட உணவென இங்குவந்து ஏழைக்குழந்தைகளுக்கு கிடைக்குமென்றால் நன்று என்றே நினைக்கிறேன். இன்று காழ்ப்புக்கூச்சலிடுபவர்களில் சிலரேனும் சீண்டப்பட்டு எஞ்சிய குழந்தைகளுக்கு, எஞ்சியவேளைகளில் உணவிடுவார்கள் என்றால் மேலும் நன்று குறைந்தபட்சம் தமிழகத்தின் மதிய உணவுத்திட்டத்தை சிலரேனும் சென்று பார்ப்பார்கள் என்றால், அந்த உணவில் கொஞ்சமேனும் தரமேம்பாடு வருமென்றால்கூட நல்லதுதான்.
ஜெ