வெறியாட்டெழுந்த சொல்

1991ல் ஊட்டியில்  ஒருநாள் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தபோது நான் தமிழ் கவிதை ஒன்றை தமிழிலேயே சொன்னேன். மலையாளக் கவிஞர் ஒருவர் பின்னாலிருந்து எழுந்துவந்து ஆர்வத்துடன் ‘என்ன சொன்னார்?” என்று என் அருகிருந்தவரிடம் கேட்டார். “கவிதைபற்றி என்னவோ சொன்னார்” என்று இவர் சொன்னார். “நான் சொன்னது கவிதை” என்று சொன்னபோது அவர்கள் இருவரும் நான் கேலிசெய்கிறேன் என்று நினைத்து ஒருவரோடொருவர் கண் தொட்டுக்கொண்டார்கள். நான் “மெய்யாகவே இது கவிதை” என்றேன்

பின்னர் அதை யுவன் சந்திரசேகரிடம் சொன்னபோது அவன் “பாவம் கொஞ்சம் பாடிக்காமிச்சிருக்கலாமே” என்றான். நாங்கள் அன்று மலையாளக் கவிதைகளின் இசைத்தன்மையை எண்ணிச் சிரித்தோம். ஆனால் இன்று எண்ணுகையில் ஒரு மெல்லிய துணுக்குறலுடன் நான் உணர்வது ஒன்றுண்டு, சற்றேனும் இசையொருமை கூடாத கவிதைவரிகளை நான் ஒரு கருத்து- துணுக்கு- குறிப்பு ஆகவே நினைவுகூர்கிறேன். சொல்கிறேன்.

ஊட்டியில் நிகழ்ந்த கவிதையுரையாடலில் ஒரு கவிதையை நினைவுகூர்ந்து யுவன் சொன்னபோது பி.ராமன் கேட்டார். “அந்தக் கவிதையைச் சொல்லுங்கள்”. யுவன் சந்திரசேகரால் சொல்ல முடியவில்லை. “அது இப்டி வரும்…” என்று அவன் சொன்னதும் பி.ராமன் “இது அந்தக் கவிதையின் ஐடியா. அந்தக் கவிதை என்ன?” என்றார்.

யுவன் “கிட்டத்தட்ட இதுதான் அந்தக் கவிதை” என்றான். “அந்த ஐடியா அந்தக் கவிதை இல்லைதானே?”என்றார் பி.ராமன். யுவன் “கண்டிப்பா இல்லை. கவிதைங்கிறது அந்தச் சொல்லடுக்குதான். அந்தச் சொற்கள் அப்டியே இருக்கிறதுதான்” என்றான். “அப்ப ஞாபகத்திலே வெறும் ஒரு ஐடியாவா பதிவாகிறது கவிதையா தோற்றுப்போகிறதுதானே?”என்றார் பி.ராமன்.

அன்றுமாலை நடைசெல்லும்போது நான் யுவனிடம் “ஒருவகையிலே அவர் சொல்றது உண்மை. நான் உன்னோட கவிதையிலே ‘ஜ்வாலையின் நாட்டியம் அழைக்கிறது என்னை’ ங்கிற வரியை அப்டியே ஞாபகம் வச்சிருக்கேன். அந்த வரி என்னை எப்பவுமே தூண்டி எழுப்புது. மத்த எல்லா கவிதைகளுமே கவிதையோட கருத்தாத்தான் ஞாபகத்திலே வருது” என்றேன். யுவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனும் தேவதச்சன் –  சுந்தர ராமசாமி பள்ளியின் பள்ளியின் பிற மாணவர்களும் கவிதையை சற்றும் இசையம்சம் இல்லாத ‘பேச்சுவடிவ’ ‘குறிப்புவடிவ’ வரிகளாக ஆக்குவதை முழுமூச்சுடன் செய்துகொண்டிருந்தார்கள் அப்போது

உண்மையில் அது அன்று சற்று கூர்மையான உரைநடைவெளிப்பாடாகவும் தோன்றியது. நானே அதற்காக வாதாடி எழுதியிருக்கிறேன். மலையாளத்தில் இசைத்தன்மை அற்ற வரிகளே கவிதை என வாதாடி நாலைந்து கட்டுரைகளை எழுதி தொடர்விவாதத்தை உருவாக்கியும் இருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு தமிழில் எழுதிக்குவிக்கப்படும் வெற்று உரைநடைத் துண்டுகள்மேல் பெரும் சலிப்பு உருவாகியிருக்கிறது.

ஓரிருவர் தவிர எவருக்குமே தனித்தன்மை கொண்ட சொல்லாட்சியோ நடையோ இல்லை. அத்தனை கவிதைகளும் ஒரேநடையில் ஒரே வடிவில் அமைந்திருக்கின்றன. அத்தனைபேரின் பேசுபொருட்களும் ஒன்றே.[வாழ்வின் அபத்தம், அன்றாடத்தின் வன்முறை, சமகாலத்திற்கு எதிரான கலகம், அவ்வளவுதான்] அத்தனைபேரும் கவிதையில் முன்வைக்கும் தங்களைப்பற்றிய ஆளுமைப் புனைவும் ஒன்றே. கவிதைகளை பெயரில்லாமல் தொகுத்துவைத்தால் மிகமிகச் சில கவிஞர்களின் கவிதைகளை மட்டுமே பிரித்து அவர்களுடையது என சுட்டிக்காட்டமுடியும். மற்றபடி ஒரே மொழிப்பிண்டத்தின் வெவ்வேறு துண்டுகள்.

அதோடு இன்று பலவகையிலும் அறியப்படும் சில கவிஞர்களின் மொழி என்பது பயிற்சியோ உள்ளொருமையோ இல்லாத குழம்பிய சொற்குவையாக உள்ளது. தமிழில் கவிஞர்களுக்கான இடங்கள் எளிதாக உருவாகிவிடுகின்றன- தொடர்ச்சியாக கவிதை சார்ந்த எல்லா கூட்டங்கள், கும்மியடித்தல்கள், குடிக்குழுக்களிலும் தென்பட்டுக்கொண்டே இருந்தால்போதும், கவிஞராக அறியப்படலாம்.. கவிதைவாசிப்பவர்கள் மிகக்குறைவு, பெரும்பாலும் அவர்கள் கவிதை எழுதுபவர்கள், ஆகவே இந்தச்சின்ன வட்டத்திற்குள் கொடுத்து வாங்கி மெல்ல அமர்ந்துவிட முடியும். இந்த வகைக் கவிதைகள் மீதான தீர்மானமான மறுப்பு அடுத்த தலைமுறையில் உருவாகாமல் இங்கே கவிதைபற்றிய தெளிவே எழமுடியாது.

கவிதையில் இசையை, ஓசையை முற்றாகத் தவிர்த்துவிடமுடியுமா? கவிதைக்கு இசை அல்லது ஓசை அழகை, ஒருமையை, கூர்மையை அளிக்குமென்றால் அதை ஏன் தவிர்க்கவேண்டும். அதற்கு முந்தைய தலைமுறையினர் இசையை ஓசையை கையாண்டார்கள் என்பதே அடுத்த தலைமுறை அதை தவிர்ப்பதற்கான காரணமாகுமா என்ன? கவிதை சொல் சொல்லென நினைவில் நின்றிருக்கவேண்டும் என்றால் அதில் இசை, ஓசையொழுங்கு இன்றியமையாதது. சொல் சொல்லென நினைவில் நின்றிருக்காத கவிதை கவிதையென்னும் வடிவின் பணியில் சிறுபகுதியையே ஆற்றுகிறது.

ஏனென்றால் ஒரு கவிதை அதன் முழுவடிவில் நமக்குத் திறப்பது அது எதிர்பாராதபடி நம் நினைவில் எழுகையில்தான். ஓரு வாழ்வனுபவத்தின்போது வந்து ஒட்டிக்கொண்டு நம்முள் பேருருக்கொள்ளும் கவிதை தெய்வமெழுவது போன்ற ஒரு தரிசனம். பல குறள்வரிகள் அவ்வாறு தோன்றி என்னை பித்தெழச் செய்திருக்கின்றன. கண்ணீர் மல்கிச் செயலறச் செய்திருக்கின்றன. பாரதியின் பிரமிளின் தேவதேவனின் அபியின் வரிகள். இரண்டு நாட்களுக்கு முன் பசுவய்யாவின்  ‘மூடுபல்லக்கில் இல்லை மங்கை’ என்ற வரி ஒருநாள் முழுக்க ஆட்கொண்டிருந்தது. அதன் இசைத்தன்மையே அவ்வாறு அதை பேருருக் கொள்ளச் செய்தது. அதை ஒரு கவிஞன் ஏன் தவிர்க்கவேண்டும்?

அத்தனைக்கும் அப்பால் ஒன்று உண்டு,  ‘அழகிய பொருளின்மை’ என்பது கவிதையின் தனியழகுகளில் ஒன்று. புனைகதையில் மிக அரிதாக, வடிவத்தால் உணர்வெழுச்சியால் ஏற்கனவே உச்சம் நிகழ்ந்துவிட்டபின் அதன் நீட்சியாக மட்டுமே அத்தகைய பொருளின்மை வெளிப்படமுடியும். கவிதையில் அப்பொருளின்மை நிகழ மிக உகந்தது இசை, அல்லது ஓசையொழுங்கு. சொல்லப்போனால் கவிஞனை ஆட்கொண்ட ஓசையொழுங்கு அல்லது தாளம் மொழியை அதிரவைப்பதன் விளைவு அது.

அந்தவகையான சொல்வெளிப்பாடு மானுடனின் கவிமரபில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதை உச்சாடனத்தன்மை என்று வெங்கட் சாமிநாதன் சொல்கிறார். தொல்குலத்து மந்திரவாதி தாளத்தால் சன்னதம் கொண்டு சொல்லை அதிரச்செய்து மந்திரமென்று ஆக்கிய சடங்கிலிருந்தே முதற்கவிதை எழுந்திருக்கக்கூடும். அந்த உச்சாடனத்தன்மை கவிதையின் பிறவியிலேயே உள்ளதென்பதனால் ஒருபோதும் கவிதை அந்த முதற்தனித்தன்மையிலிருந்து வெளியே சென்றுவிட முடியாது.கவிதையில் என்றும் ஒரு வெறியாட்டுக் கூறு இருந்துகொண்டேதான் இருக்கும்.

இளங்கோ கிருஷ்ணனின் இக்கவிதை அதன் தலைப்பினூடாக தன்னை கொஞ்சம் விலக்கிக்கொள்ள முயன்றாலும் கூட கவிதையில் நேராக வெளிப்படுவது சொல்கடந்து தாளம் எழும் ஓர் உணர்வுநிலையைத்தான். இதிலுள்ள தாளக்கட்டும், தாளம் சுழன்று சுழன்று மீளும் அழகுமே முதன்மையாக இதன் கவித்துவத்தை உருவாக்குகின்றது. இதன் பொருள் பொருட்படுத்தப்படவேண்டியது அல்ல. இது ஓர் உச்சாடனம். ஆகவேதான்  பல்லிக்குப் பிடித்துத் தரும் என்றவரியில் மட்டும் சற்றே தாளம் பிழைபடுவது நமக்குள் உரசலை உருவாக்குகிறது

ஒரு காதல் கதைக்கான குறிப்புகள்

அக்காட்டில் ஒரு செடியுண்டு
யாரும் வரா சிகரங்களில்
வான் பார்த்து காமுற்று
பூவாய் புன்னகைத்து
விண்மீனை புவிக்கழைக்கும்

இக்கடலில் ஒரு மீனுண்டு
உடல் சிலுப்பும் நடனத்தில்
இணை நோக்கி வசியமிட்டு
தரைக் கடலில் புணர்ந்து கொல்லும்

இம்மரத்தில் ஒரு கனியுண்டு
உடலெங்கும் மது நிரப்பி
எறும்புக்குத் தசை கொடுத்து
பல்லிக்குப் பிடித்துத் தரும்

இம்மனதில் ஒரு பாட்டுண்டு
உயிர் பூட்டி சுதி மீட்டி
விழி கசியும் நேரத்திலே
வேறொருவர் வீடு செல்லும்

கவர்ந்து புணர்ந்தாடி பலிகொண்டு விட்டகலும் காதலின் நான்கு நிலைகளைப் பற்றிய சொற்ச்சன்னதம் இக்கவிதை. இன்றைய கவிதை உருவாக்கும் மொழிச்சலிப்புக்கு மாறாக இக்கவிதை புத்துணர்வுடன் நாவில் மீளமீள நின்றிருக்கிறது. தரைக் கடலில் புணர்ந்து கொல்லும் என்னும் வரி அதன் பொருள்கடந்து வெறும் சொல்லென்றே ஆகி நாவில் நின்றிருக்கிறது

சுந்தர ராமசாமியின் கவிதைகள் எல்லாமே பேசுபொருளால் ஆனவை.  ‘அவரால் ஒரு நல்ல கட்டுரையாக எழுதமுடியாத எதையும் அவர் கவிதையாக எழுதிவிடவில்லை’ என்று நான் முன்பு கூறியதுண்டு. விதிவிலக்காக அமையும் கவிதை மூடுபல்லக்கு. ஏதோ ஒரு மனநிலையில் வெறுமே பொருளற்ற வெறுமை ஒன்றை உணர்ந்து அதன் வெறும் தாளமாகவே வெளிப்படுத்தியது அக்கவிதை என அவர் சொல்லியிருக்கிறார்

மூடுபல்லக்கு

மூடுபல்லக்கு
உள்ளே இல்லை மங்கை.
ஒற்றைக் குதிரை வீரன்
வாளுருவி முன்னேக
பதின்மர் தோள்சரிய
ஈரக் கருமை
முதுகு படர்ந்து ஓடிவழிய
மேல் மூச்சு வாங்க
பின்குதிரை வீரன்
அந்தரத்தில் சொடுக்கி
துரிசம் கூட்ட
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

மான் கூட்டம்
மருண்டு மதியிழந்து நிற்க
இமைகள் விரிந்து
விழியோரம் கிழிய
நிமிர்ந்த நீள்செவிகள்
திசைதிசையாய்ச் சுழன்று வர
பாய்ந்தொன்று ஆரம்பம்கூட்ட
பதினாயிரம் பின்தொடர்ந்து ஓட
ராக்ஷஸ சிலந்தி
ஓரம் விட்டகன்றோடி
மையம் புகுந்து
காய்ந்து சுருங்க

தாழைக் காட்டோரம்
முயல்கள் பம்மிப் பதுங்க
புற்றுவாய் தோறும்
தென்றல் சுகித்திருக்கும்
மூக்குக் கண்ணாடிகள்
பின்னகர்ந்து உள்மறைய
பதின்மர் மூச்சுத் தெவங்க
ஓடிவரும் துளிகள்
தாடையோரம் முத்துமுத்தாய்க் கூடி
விளைந்து உதிர
ஒற்றைக் குதிரை வீரன்
புறங்கழுத்தில்
அகந்தை வீற்றிருக்க
சொடுக்கும் சவுக்கு
அதிகாரம் கெக்கலிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

அப்பாலுக்கு அப்பால்
அடிவானத்துக்கு அப்பால்
மலைமறைக்கும் திசையினிலே
பேருடம்பின் ஒக்கலிலே
மல்லாந்து சரியும்
குறும்புக் குதலையென
அந்தரத்தில் முன் பாய்ந்து
காலின்றித் தவஞ்செய்யும்
விதான மண்டபத்தில்
நிலவுக்குக் கைகாட்டும் கண்களுடன்
கால்பாவா நிலைநின்று
நிலைகொள்ளக் கதியின்றி
சரசம் மீதூற
குருதி அழுத்த
நாளங்கள் புடைக்க
கலவிக் களியாம்
நாடகத்தின் ஒத்திகைகள்
மனத்திரையில் விரிந்துவர
ஊதுவத்தி குறுகிவர
பொழுதும் தேய
பூக்கள் கட்டவிழ்ந்து புன்னகைக்க
பஞ்சணையில்
கவிழ்ந்து கண்புதைத்து
குளம்போசைக்குக்
குதித்தெழுந்து நின்று
தெருபார்க்க நிலைகுத்தி
நிலைகுலையும் நிலைநிற்கும்
பீதாம்பரப் பெட்டகத்தான்
நின்று படபடக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

ஒற்றைக் குதிரை வீரன்
வாளுருவி முன்னேற
சொடுக்கும் சவுக்கு
குதிகால்கள் புண்ணாக்க
அட்டகாசம் விசைகூட்ட
தோள்மாற்றித் தோள்மாற்றி
மேலேற்றம் கிடுபள்ளம்
புற்றரை
முட்காடு
வனாந்தரம்
வழிநீள வழிநீள
கால்பின்னக் கண்ணிருள
சொடுக்கும் சவுக்கு
புண்பிடுங்க
தெருத் தெருவாய்
கதவோரம் பெண்டிர்
ஒருக்களித்து ஊடுருவ
வயலோரம் உறங்கும்
தவளைக் கூட்டங்கள்
நீர்நிலை சாடிக் குதிக்க
வெட்டுக்கிளிகள்
திடலோரம்
தத்தி அகன்றோட
அரைமுடிக் குட்டிகள்
அதிசயம் பார்த்து நிற்க
சின்னஞ் சிறுவர்
வாடைக் காற்றில்
சுருங்கி உள்ளுறையும்
குஞ்சுக் கருமொக்கின்
கௌதுகம் காட்டி நிற்க
சொடுக்கும் சவுக்கு
குருதி குடிக்க
பின்வீரன் கொக்கரிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

பின்வீரன் கொக்கரிக்க
பீதாம்பரப் பெட்டகத்தான்
நின்றுநிலை சரிய
பஞ்சணையில் உடல்புரள
பதின்மர் துவண்டாட
பூக்கள் வாட
எழும் நிலவு
கைகொட்டிச் சிரிக்க
புரவிகள் கால்சோர
பூ என்ன
புகை எள்ள
சொடுக்கும் சவுக்கு
அறுந்து தொங்க
செம்பில் பாலாற
தூக்கு விளக்கின்
தீபச் சுடர்
பின்னிறங்கிச் செல்ல
கல்லொன்று விழ
மனக்குளத்தில்
வானத்துச் சித்திரங்கள்
மடிந்து மடிந்து கலைந்தாட
பீதாம்பரப் பெட்டகத்தான்
பொறை இழந்து ஆடிக் குதிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

 

முந்தைய கட்டுரைஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74