அக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2

அக்ஷயபாத்திரம் உணவு

அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்

அன்பின் ஜெ..

அக்‌ஷய பாத்திரம் கட்டுரை படித்தேன்.

எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.

முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முறை.

அக்‌ஷயப்பாத்ரா தமிழகத்தில் செய்யப்போகும் திட்டத்தின் விவரங்கள் வெளிப்படையாக இல்லை. க்ரீம்ஸ் சாலையில் ஒரு இடம் அவர்கள் சமையல் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட உள்ளன என்கிறார்கள். ஆளுநர் 5 கோடி தனிநிதியை, தன் அதிகாரத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

உண்மையிலேயே இவர்களுக்கு, இதன் மீது கரிசனம் இருந்திருந்தால், தமிழகமெங்கும் இலவசமாகக் காலை உணவைக் கொடுக்கும் ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கலாம் – 1950/60 கள் போன்ற நிலையில்லை இன்று தமிழகத்தில். பல இடங்களில் தனியார் (ஷாந்தி சோசியல் சர்வீஸஸ், கோவை) பொதுநலச் சேவைகளை செய்துவருகிறார்கள். இத்திட்டத்தின் வரைவை மக்கள் முன்வைத்து முன்னெடுத்திருந்தால், பல பெரும் நிறுவனங்கள் முன்வந்திருக்கும்.  ஆளுநர் என்னும் மத்திய அரசின் கைப்பாவை, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலையிடுவது, (இது முதல் முறையல்ல என்றாலும்), மிகவும் ஆபத்தான விஷயம். இதற்கு முன்பு கலாம் இதைச் செய்ய முயன்றார். உண்மையான ஆர்வத்தோடு – Providing Urban Amenities in Rural Areas என்னும் ஒரு திட்டத்தை முன்வைத்து, அரசுகளை முன்னெடுக்க் வற்புறுத்தினார். கலாம் தன் ஆளுமையின் முழு வசீகரத்தைப் பயன்படுத்தி அதை முன்னெடுக்க வைத்தார் – அந்தத் திட்டம், நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், வெற்றி பெறவில்லை. பன்வாரி லால், கலாம் இல்லை.

இரண்டாவது, இது போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது என்னும் வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தின் வருவாய் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி. வரவு செலவுத் திட்டம், 2.5 லட்சம் கோடி. சத்துணவுக்காக ஒதுக்கப்படும் நிதி 5800 கோடி – வருமானத்தில் 3%.  அதிலும் 50% மத்திய அரசு கொடுக்கிறது. (மத்திய அரசும் தன் நிதியில் இருந்து அள்ளி வழங்கிவிடவில்லை. தமிழகத்தில் இருந்து வசூல் செய்யும் மத்திய வரியில், 40% மட்டுமே திருப்பித் தமிழகத்துக்குத் தருகிறது. தமிழகம் உலகின்  50 ஆவது பெரிய பொருளாதார அலகு). இந்தச் செலவினம் தமிழக அரசின் மிகப் பெரும் பாரம் என்பது போன்ற ஒரு தவறான கருத்து வேறில்லை.

மூன்றாவதாக, டாஸ்மாக் நிதியினால் தான் அரசு இதற்குச் செலவு செய்கிறது என்னும் வாதம்.   தமிழக அரசு சென்ற ஆண்டு செய்த மதுவிற்பனை 31 ஆயிரம் கோடி. இதில் இருந்து, 26 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. (கர்நாடக வருமானம் கிட்டத்தட்ட 18000 கோடி) அரசு வருமானத்தில் 14%.

ஜி.எஸ்.டி என்னும் மையப்படுத்தப்பட்ட வரித்திட்டத்துக்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்ட காரணமே, சாராயம், மற்றும் பெட்ரோல்/டீஸலின் மீதான வரிகளை விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுடன் இருக்கும் என்னும் பேரத்தின் மீதுதான். எனவே, தமிழகம் மட்டுமல்ல, நாட்டின் எல்லா மாநிலத்துக்குமே, சாராயத் தொழிலின் மீதான வரி ஒரு முக்கியமான வருமான வழி. சாராயத்தின் மீதான மாநிலக் கலால் வரியும், விற்பனை வரியும் மிக அதிகம் – கலால் வரி 60 முதல் 220% வரை. விற்பனை வரி 14.5%

தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இங்கே அரசே மதுவை நுகர்வோருக்கு நேரடியாக விற்கும் தொழிலைச் செய்கிறது. வழக்கமாக, சில்லறை விற்பனை லாப விகிதம் 15-20% வரை இருக்கும் – இதை அரசே செய்வதன்மூலம், வருடம் 5-6 ஆயிரம் கோடி உபரி நிதியை உருவாக்குகிறது.  டாஸ்மாக் இல்லையெனில், இந்த உபரி அரசுக்குக் கிடைக்காது. தனியாருக்குச் செல்லும்.

With or without midday meal scheme, liquor is an important source of income for states. Even if midday meals scheme is withdrawn, the state governments will not give up this source of income. இரண்டையும் இணைத்து அறச்சீற்றம் கொள்வதில் பிழையில்லை, ஆனால், இதுதான் உண்மைநிலை..

மூன்றாவது தமிழக மதிய உணவின் தரமின்மை – தமிழக மதிய உணவின் விலை ஒரு நபருக்கு ரூ.6.71 (இதில் முட்டை மட்டுமே ரூபாய் 4).  அக்‌ஷயப்பாத்ரா சைவ உணவின் விலை ரூ.11.42 – அதாவது தமிழக அரசின் சைவ உணவின் விலையான (முட்டையைக் கழித்து), ரூ.2.71 ஐயும், அக்ஷய பாத்திராவின் உணவு, ரூபாய்.11.42 ஐயும் ஒப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். சத்துணவில் முட்டை சேர்க்கப்பட்டது, இத்திட்ட வரலாற்றில் முக்கியமான முன்னெடுப்பாகும். தமிழகம் போன்ற மாநிலங்களில், வாரம் ஐந்து முட்டை கொடுக்கப்படுகிறது. இந்தியாவில், குழந்தைகள் நலக்குறியீடுகளில், மிகக் கீழ்மட்டத்தில் இருக்கும் மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், குஜராத், போன்ற மாநிலங்களில், பெரும்பான்மைப் பயனாளிகள் புலால் உண்பவர்களாக இருந்தும், முட்டை அளிப்பதில்லை. முட்டை, மிக விலை குறைவான, முழுமையான உணவு. இது போன்ற திட்டங்களில், ஊழல் அதிகமில்லாமல், எளிதில் வழங்கிவிடக் கூடிய ஒன்று எனத்தெரிந்தும், அதிகார வர்க்கத்தில், சைவ உணவு வெறியாளர்கள் நிரப்பப்பட்டிருப்பதால் கொடுக்கப்படுவதில்லை. முட்டைக்கெதிராக பல நிறுவனங்கள் கோர்ட் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கின்றன – கலாச்சாரத் திணிப்பாம். நீங்கள் சொல்லும், தரம் குறைந்த உணவும் முட்டையும் இணைந்தால் அது, அக்‌ஷயப்பத்திரம் தரும் தரமான சைவ உணவை விட மேலான சத்துக்களைக் கொண்டது.  தமிழகம் புலால் உண்ணாத குழந்தைகளுக்கு பழங்கள் தருகிறது.  புலால் உண்ணாதவர்களுக்கான மாற்று உணவைத் தர மறுப்பதில்லை.

ஜெயலலிதா அவர்கள் முன்னெடுத்த அம்மா கேண்டீன்கள், அவர் உயிருடன் இருக்கும் வரை, மிகத் தரமாக நடத்தப்பட்டன. உணவின்மைக் கொடுமையை  நேரடியாக எதிர்கொண்ட உலகின் மிக முக்கியமான திட்ட முன்னெடுப்பு. இன்று கேரள அரசுப் பள்ளிகளில், மிகத் தரமான உணவு வழங்கப்படுகிறது. அதன் மேலாண்மையில் உள்ளூர் ஆட்சி அலகுகள் இணைந்துள்ளன. நீங்கள் சொல்லும் தரவிவகாரம், கொஞ்சம் அதிக நிதியும், கவனமான நிர்வாகமும் இருந்தால், சரிசெய்யப்படக் கூடிய விஷயம்தான்.

சத்துணவுத் திட்ட வேலைக்கான ஊழல். சத்துணவு சமைக்கும் பணியாளருக்கு வழங்கப்படும் ஊதியம்  மாதம் 5000 ரூபாய். அமைப்பாளருக்கான ஊதியம் மாதம் 10000 ரூபாய். இதில் ஊழல் இருக்கிறது என் எழுதியிருந்தீர்கள். உண்டு. ஆனால், இதில் அமர்த்தப்படுபவர்கள், உள்ளூரில், இருக்கும்  படிக்காத/ அதிகம் படிக்காத பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள்.

இன்று அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும் தான். இன்றும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இருக்கும் இறுதி ஜனநாயக அமைப்புகள் அரசுப்பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும்தான்.

இதற்கு மாற்றாக நீங்கள் முன்வைக்கும் முறை – 400% அதிக செலவு பிடிக்கக்கூடியது. அதன் நிர்வாகம் இன்றைய அரசின் சமூக நீதிக்கு வெளியே உள்ள அமைப்பு. 27 ஆண்டுகள் தனியார் துறையில் வேலை செய்த அனுபவத்தில் (இதற்கான முறையான தரவுகள் இல்லாததால், எனது அனுபவத்தில் சொல்ல வேண்டியுள்ளது), தனியார் துறையின் ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் தாண்டி, தாழ்த்தப்பட்டவர்கள் 0.5% கூட இல்லாத, ஜனநாயகம் துளியும் இல்லாத சனாதன அமைப்புகள். இதை நியாயப்படுத்த, சத்ய சாய்பாபா – கருணாநிதி உதாரணத்தைச் சொல்லியிருந்தீர்கள். நன்கொடை வேறு. நிர்வாகம் வேறு. இங்கே இந்த நிறுவனம், பின்வழியே நிர்வாகத்துள் நுழைகிறது. நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு  கட்டிக் கொடுத்தோம் – 40 வீடுகள். திட்டத்தின் வடிவமைப்பு அரசினுடையது. நாங்கள், அனைத்துப் பொருட்களையும், கட்டிட வேலையாட்களையும் அளித்தோம். இலவசம் என்பதால், எங்கள் வடிவமைப்பைத்தான் உபயோகிக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் போடமுடியாது. ஏனெனில், அது அரசின் திட்டம்.

இன்று இருக்கும் திட்டத்தில் குறைகள் இருக்கின்றன. அதைக் களைந்து மேம்படுத்தக் குரல் கொடுக்கவேண்டுமே ஒழிய, கவர்மெண்ட்னாலே ஊழல், அதனால எல்லாத்தையும் தனியார்கிட்ட கொடுக்கணும் என்னும் வாதம் உண்மை போலத் தோற்றமளிக்கக் கூடிய, வலதுசாரி உயர் வர்க்க வாதம். 70 ஆண்டுகளுக்குப் பின்னும், சாதாரண மனிதர்களின் குரலும், உரிமைகளும், அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கப்படாமல் இருக்கும் அவலம்.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெமோ,

 

இந்த  அக்ஷயபாத்திரம் காலை உணவு வழங்கலை நான் ஏற்கிறேன். என் நண்பர்கள் அரசு திட்ட்ங்கள் என்பது இந்த மதம் சார்ந்த ஆச்சாரங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது கொள்கையளவில் சரிதான். ஆனால் நான் அதை அரசு நேரிடையாக செய்யும் ஒன்றில் கட்டயமாகவும், அரசு-தனியார் என்ற கூடடமைப்பில், குறிப்பாக அரசு செய்யம் அடிப்படைகளுக்கும் மேலதிகமான ஒன்றில், அந்த தனியாரின் “குறிப்பிடட” கொள்கைகளுக்கு ஓரளவு இயைந்து போகலாம் என்றே நினைக்கிறேன். சாலையோர பூங்காக்களை பராமரிக்க தனியார் உதவி பெரும் அரசு அவர்களது சிறிய விளம்பர பலகைகளை அங்கு வைத்துக்கொள்ள அனுமதிப்பதுபோல. எனவே இன்றையநிலையில் ISKON  இதை செய்யாவிடில் அரசு காலை உணவையும் செய்யுமா என்று பார்த்தால், அதை அவர்கள் எப்போதும் செய்ய மாடடார்கள். ISKON தவிர வேறு யாரும் இதை செய்ய இப்போது இருக்கிறார்களா என்றால், இல்லை என்றே நினைக்கிறேன் (அப்படி சாத்தியமா என்று இந்த அரசு முயன்று பார்த்ததா என்று கூட தெரியவில்லை).

 

எனவே இதை இப்போது ஏற்பதே சரி. இந்த திடடத்தை எது சார்ந்தும் விமர்சிக்கலாம், பொருளாதார அடிப்படையில்  அரசு வழங்கும் பணம், செலவுகள், போன்றவற்றை சத்துணவுக்கு இப்போது ஆகும் செலவோடு ஒப்பிட்டு என்று ஏதன் அடிப்படையிலும் விமர்சிக்கலாம். ஆனால் வெங்கயம், பூண்டு போடாமல் சமைப்பது சார்ந்து விமர்சிக்க முடியாது ஏனெனில் அது அவர்கள் கொள்கை, அவர்கள் நம்பிக்கை, அதை மாற்றி  அவர்களை இதை  செய்ய நிர்பந்திக்க முடியாது.

 

எதிர்காலத்தில் ஒருவேளை  வேறு நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பு திறம்பட செய்ய முன்வந்தால் அவர்களுக்கு வழங்கலாம் ஏனெனில் அரசு சார்ந்த ஒன்று “நான் கொடுக்கிறேன் வேண்டியவர்கள் சாப்பிடுங்கள், வேண்டாதவர்கள் சாப்பிடாதீர்கள்” என்ற போக்கை கொள்ள முடியாது. திமுக அரசு முட்டையை சத்துணவில் அறிமுகப்படுத்தியபோது, அசைவம் என்று முட்டை  சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கவேண்டும் என்ற அரசாணையையும் போட்ட்து.

நிற்க,

என் அப்பா ஒரு ஆசிரியர், எனவே எங்களது குடும்ப நண்பர்கள் பெரும்பாலும்  பள்ளி சார்ந்தவர்களாகவும் எனது சிறுவயது முதலே நான் அவர்கள் சூலவே இருந்தேன். இன்று எனது அக்கா, அண்ணி, அத்தை  என்று என்று நெருங்கிய சொந்தங்களில் மற்றும் நண்பர்களில் ஒரு 20 பேராவது 20 வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியப்பணியில் உள்ளனர். ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் இந்த பள்ளிகளுக்கு செல்வது என்பது நான் விரும்பி செய்யும் ஒன்று. ஒன்று அவர்களை பார்க்க மற்றும் பள்ளி சார்ந்து, பிள்ளைகளுடன் பேச என்று, இது வரை ஊருக்குவந்து ஒரு முறைகூட ஏதாவது ஒரு பள்ளிக்கு செல்லாமல் திரும்பியதில்லை, ஒருமுறைகூட.

 

இந்த முறை ஊருக்கு சென்றபோது கூட பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு  கீழச்சேவல்பட்டி எனும் ஊர் பள்ளிக்கு சென்றேன். நான் ஐந்தாவது படிக்கும் வரை பள்ளியில் சத்துணவுதான் சாப்பிடடேன். எனவே இயல்பாகவே நான் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் இப்ப எப்படி இருக்கிறது என்ற ஒப்புநோக்குதல் ஆர்வம் துண்ட ஒவ்வொரு பள்ளிக்கூடம் செல்லும்போதும் அங்கு சத்துணவு கூடத்தை பார்ப்பது, இப்ப என்ன என்ன சாப்பாடு போடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், எவ்வளவு பேர்கள் சாப்பிடுகிறார்கள் என்று சத்துணவு அமைப்பாளரிடம் பேசுவது என்பது எனக்கு ஆர்வமான ஒன்று. இதுவரை  எந்த ஒரு பள்ளி சத்துணவும் என்னை ஏமாற்றியதில்லை. இங்கு அரசு வழங்கும் பணத்துக்கு ஏற்ற உணவு தரம் இல்லாமல் இருக்கலாம், அதன் தரத்தில் மாறுபாடு இருக்கலாம், ஒரு கிலோ பருப்பு போடவேண்டிய சாம்பாரில் 800  கிராம்தான் போடுவார்களாக இருக்கலாம், ஆனால் அந்த சாப்பாடுகள் எந்தவிதத்திலும் சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடும் சுவைக்கு தரத்துக்கு குறைவானது இல்லை என்பதை பல்வேறு பள்ளிகளில் சுவைத்து பார்த்த என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

 

இங்கு நான் தவறாமல் பேசசுவாக்கில் கேட்க்கும் இரண்டு கேள்விகள், ஒவ்வொரு நாள் மீந்து போகும் உணவை என்ன செய்கிறார்கள், அங்கு வேலைபார்க்கும் ஆசிரியர்கள் என்றாவது சத்துணவை சாப்பிடுகிறீர்களா என்பது. இந்த இரண்டு கேள்விகளின் நோக்கம், மோசமான காய்கறிகள், அல்லது சுத்தமில்லாமல் செய்யப்படும் சமையலாக இருந்தால் இவர்களே அதை உண்ணமாடடார்கள் என்ற எண்ணத்தில் அதை அறிந்து கொள்வதற்குத்தான். மீந்துபோகும் சிறுபகுதி உணவை அந்த அமைப்பாளர் அல்லது சமைக்கும் ஆயா இரவு உணவுக்கு எடுத்துப்போதல் சாதாரணமான ஒன்று. ஒரு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சத்துணவை அந்த பள்ளி ஆசிரியர்களே (என் சொந்தக்காரர்கள்) சாப்பிடுகிறார்கள்.  சமையலறையை பார்வையிடும்போது “சாப்பிட்டு பாருங்க தம்பி” என்று அவர்கள் வேலை சார்ந்த ஒரு பெருமிதத்துடன்தான் அதை நம் முன் வைக்கிறார்கள், உண்டு பார்க்க வற்புறுத்தி நாம் என்ன சொல்கிறோம் என்பது சார்ந்து அறிய விரும்புகிறார்கள்.(இந்த முறை திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளி சத்துணவு அமைப்பாளருடனான சந்திப்பு சுவாரஸ்யமான ஒன்று :-) )  இந்த சத்துணவு அமைப்பாளர்கள் அல்லது ஆயாக்களுடன் சும்மா பேசிப்பார்க்கும்போது நான் உணர்ந்தது  இந்த “குழந்தைகளுக்கு” “உணவிடுதல்” என்ற செயல்பாடு இவர்களுக்கு உணர்வுபூர்வமான ஒன்றாக இருக்கிறது, அதை நமது அன்னமிடுதல் என்ற மரபின் தொடர்சியாகவே கணிக்கிறேன். அத்தனை குழந்தைகளுக்கும் தானே உணவிடுவதான ஒரு எண்ணம் இவர்களிடம், எளிய மக்களாயிருந்து தாம் செய்வதை ஒரு பள்ளியின் கல்வி செயல்பாடோடு இணைத்தே இதை முன்னெடுக்கிறார்கள்.

 

இவ்வளவு பரந்துபட்ட ஒவ்வொரு நாளும் தயாரித்து வழங்கும் இந்த உணவு வழங்கல் செயல்பாட்டில் இதுவரை பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிகழ்வுகள் என்று பெரிதாக ஏதும் இல்லை.  முறைகேடுகள் இல்லையா என்றால், அப்படி எவரொருவரும் சொல்லிவிட முடியாது.  கண்டிப்பாக இருக்கும், இன்று எந்த ஒரு துறையையும் முறைகேடு இல்லாத துறை என்று சொல்லிவிட முடியாது. ஒரு துறை கூட அப்படி இல்லை.   இதோ போன மாதம்  மிக கண்டிப்பும்,அதீத கண்காணிப்புக்குள்ளும், கடுமையான தண்டனைக்கும் உள்ளாக கூடிய இராணுவத்துறையில், இந்திய ஆர்மி-நேவியை சேர்ந்த 11 பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், வெளிநாட்டுக்காக உளவுபார்த்து ரகசிய செய்திகளை கடத்தியதற்காக. எனவே இந்தியா முழுவதும் எந்த ஒரு துறையையும் முறைகேடுகள் அற்ற துறை என்று சொல்லமுடியாது. ஆனால் அதைஎல்லாம் மீறியும் சத்துணவு திடடம் ஒரு அரசின் முன்னெடுப்பாக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதே என் அனுபவம் மூலம் நான் உணர்வது.

 

 

இதில் உண்மையிலேயே என்னுடைய குழப்பத்தை சொல்லிவிடுகிறேன். இது என் குழப்பம்தான், எந்த இறுதியான முடிவும் எனக்கு தெரியவில்லை. எது சரி, எது தவறு அல்லது தவிர்க்கப்பட வேண்டியது என்பது சார்ந்தும் எனக்கு தெளிவில்லை, நீங்கள் சொன்னதுபோல் சத்துணவு சார்ந்து  மோசமான நடைமுறைகள் இல்லையா என்றால் அப்படியும் இருக்கும்தான். பாய் பெஸ்ட்டி கவிதைகளில் எனக்கான பிரட்ச்சனை அது கவிதையாக இருக்கிறதா இல்லையா என்பது அல்ல, (ஒரு கவிஞனின் ஒரு கவிதை தொகுப்பில் 10 கவிதைகள் கவிதைகளாக இருந்தாலே அது எனக்கு போதுமானதாக இருக்கிறது, அவ்வளவு மட்டுமே என் அதிகபட்ஷ  எதிர்பார்ப்பும்)

 

 

பாய் பெஸ்டி கவிதை பெண்களின் நண்பர்கள் சார்ந்து ஒரு பொது பிம்பத்தை கடடமைக்கிறது, அந்த பிம்பம் ஒரு பிரபல நபரால், அறிவார்ந்தவராக பொதுவாக ஏற்கப்படும் ஒருவரால் பொதுவெளியில் சொல்லப்படும்போது அது ஒரு கருத்துருவாக்கத்தை நிகழ்த்துகிறது, பின்  அது ஒரு பிம்பமாக, axiom ஆக  அப்படியே ஏற்கப்பட்டு தொடர்ந்து கொண்டு செல்லப்படும், அது பெண்களின் பொதுவெளி செயல்பாடுகள், அவர்களின்  ஆண் நட்பு சார்ந்து ஒரு தடையை பொது வெளியில் உருவாக்குகிறது,  பெண்களின் ஆண் நண்பர்கள் சார்ந்த ஒரு எதிர்மறை சித்திரத்தை உருவாக்குகிறது, அவர்கள் புழங்கும் வெளியை மேலும் முடக்குகிறது. அப்படி கவிதை பேசும் பாய் பெஸ்டிகளே நிதர்சனத்தில் இல்லையா என்று தர்க்கத்துக்குள் செல்ல முடியாது, அப்படி இருந்தாலும் அது ஒரு கருத்துருவாக்கமாக நிலைபெறுவது சரியானது அல்ல என்பதே அந்த கவிதையை விமர்சிப்பதற்கான காரணம்.

 

பெண்களுக்கு எதிரான இந்த பாய் பெஸ்டி பொது பிம்ப உருவாக்கம் எப்படி கூடாது என்று நினைக்கிறேனோ அதே அடிப்படையிலேயே பொதுவாக சிறுபான்மையினர், தாழ்த்தப்படட சமூகத்தினர், விளிம்புநிலை மனிதர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட எந்த ஒரு பகுதியினர் சார்ந்தும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.ஏனெனில் அது ஒரு சிறு பகுதியினருக்கெதிரான ஒற்றைப்படையான கருத்துருவாக்கமாக சமூகத்தில் நிலைபெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறேன். அது சரியானது அல்ல.

 

 

அக்ஷயபாத்திர உணவு ஆதரவாளர்கள் தமது நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்க உங்களது  உங்களது இந்த அக்ஷயபாத்திரம் உணவு பதிவின் அரசு சத்துணவு தயாரிப்புக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்களுக்கு சத்துணவு திடடத்துக்கு எதிரான எதிர்மறை பிம்ப உருவாக்க அளவு,  அக்ஷயபாத்திரத்துக்கான ஆதரவாக ஆகும் என்று நினைக்கிறார்கள். எப்போது இந்த சத்துணவை சாப்பிட்டிர்கள் அல்லது எப்போது நேரில் சென்று பார்த்திர்கள் என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை, ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு  தேவையும் இல்லை. இலவசமாக கொடுக்கும் அரசு சத்துணவு என்றாலே அது சார்ந்த கற்பிதங்கள், பிம்பங்கள் அவர்களிடம் ஏற்கனவே உண்டு. அப்படி நம்புவதற்கு அடிப்படை எல்லாம் தேவையில்லை. அரசு ஊழியர்கள் என்ற பொதுவான விமர்சனம் கூட ஒருவகையில் எனக்கு தவறாக தெரியவில்லை, ஆனால் அதில் குறிப்பிடட அமைப்பு அதிகார பலம் குறைவாக உள்ள ஒரு பிரிவினர் சார்ந்து குறிப்பிடட விமர்சனம் சரியா என்று தெரியவில்லை.

 

நான் இதன் ஆரம்பத்தில் சொன்னது போல் எனக்கு சரி, தவறுகள் இதில் தெரியவில்லை. குழப்பம் மட்டும்தான்.   முன்பு டைப்பிஸ்ட், மலையாள நர்ஸ் என்றாலே ஒரு பொது  பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று அரசு ஊழியர்கள் என்றாலே வேலை செய்யமாடடார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவை எல்லாம் ஏற்கனவே நிரூபிக்கப்படட உண்மைகள்.  இதை எதையும் விவாத்தளத்துக்குள் கொண்டுவரமுடியாது. இதில் யாரையும் தர்காக்கவும் முயலவில்லை, அதுமுடியவும் முடியாது,  நான் சொல்லுவதை நிரூபிக்க முடியும், அதே கணத்தில் இதற்க்கு எதிரானவைகளையும் இன்னொருவரால் நிரூபிக்க முடியும், எதையும் பெரும்பான்மை என்று நிரூபிக்க யாருக்கும் அவ்வளவு பரந்த அனுபவங்களோ ஆய்வுக்கருவிகளோ இல்லை. எனவே இதுவும் ஒரு தரப்பாக இங்கு இருக்கட்டும், உண்மையான ஆர்வம் கொண்டவர்கள்  கற்பிதங்களைத்தாண்டி பள்ளிகளுக்கு சென்று அறிந்து அவர்களுக்கான உண்மைகளை அவர்கள் அறியட்டும்.

 

அன்புடன்
சரவணன் விவேகானந்தன் 

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1
அடுத்த கட்டுரைஎங்குமென நின்றிருப்பது