ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர் சந்திப்பு 2020. கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளை மனம் அசைப்போட்டபடி லயித்திருக்கிறது .உங்களுடனும் வாசகர் சந்திப்புக்கு வந்த நண்பர்களுடனும் கழித்த கடந்த 2 நாட்கள் என் வாழ்வில் மறக்கமுடியாதவை ஜெ.
அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியதிலிருந்து நேற்று மாலை பெங்களூருக்கு திரும்பும் வரை பேச்சுக்களும் விவாதங்களும் இலக்கியத்தை சுற்றியே இருந்தன , ஒரு புத்தகத்தை படித்தவுடன் அதைப்பற்றி முகநூலில் எழுதிவிட்டு அதற்கு எந்தவிதமான எதிர்வினைகளோ கருத்துக்களோ வரமால் இருப்பதை பார்த்து கவலையடைந்துகொண்டிருந்த எனக்கு, நான் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என நினைப்பதே ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது …
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டிய வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் யார் முதலில் அறிமுகம் செய்துகொள்வது என ஒருவிதமான இருக்கத்துடன் இருந்தபோது ஒரு நண்பர் திடீரென ” யாரெல்லாம் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்திருக்கீங்க ” என்று கேட்டார் . இன்ப அதிர்ச்சியாக கிட்டத்தட்ட எல்லாருமே திருமணம் , சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு போவதாக சொல்லிவிட்டு வந்திருந்தனர்.நானும் அப்படிதான் சொல்லிவிட்டு வந்திருந்தேன் .வரும்வழியில் தேநீர் குடித்துக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் இன்று ஜெ இணையதளத்தில் தேநீரைப்பற்றி ஒரு பதிவுபோட்டிருக்கிறார் என சொல்லியதும் காலையில் துயில் எழுந்ததும் உங்கள் இணையதளத்தை வாசிப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளனர் என புரிந்துகொண்டேன்.
“Nature makes you happy ” என்னும் வாசகத்தைப்போல இயற்கை சூழ்ந்த பண்ணை வீடு மிக ரம்மியமாக இருந்தது . பண்ணை வீட்டின் வாசலுக்கு வந்ததும் உங்களின் சிரிப்பு சத்தம் எங்களை வரவேற்ப்பதைப்போல் இருந்தது .எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டவுடனே உரையாடல் ஆரம்பமானது.கொரொனா வைரஸ் , மேற்கத்திய இசைக்கலைஞர்களின் தற்கொலை , இந்திய , ஜப்பானிய, மேற்கத்திய கல்விமுறை என உரையாடல் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே இருந்தது. உங்கள் இணையதள அமைப்பும் உங்கள் மூளையும் கிட்டத்தட்ட ஓரே மாதிரியாக செயல்படுவதைப்போல எனக்கு கடந்த இரண்டு நாட்களும் தோன்றிக்கொண்டே இருந்தது.
உங்கள் இணையதளத்தில் எப்படி ஒரு பதிவை சொடுக்கியவுடன் அதற்கு தொடர்புள்ள செய்திகள் தயாராக இருக்குமோ அதே மாதிரி உங்களிடம் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலும் அதற்கு தொடர்புள்ள ஒரு செய்தி அல்லது தகவல்களை உடனே சொன்னது ஆச்சர்யமளித்தது. உதாரணமாக : அழகிய மணவாளன் என்னும் பெயர் எனக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்ததால் , அது அவருடைய இயற்பெயரா அல்லது புனைப்பெயரா என கேட்டவுடனே இயற்பெயர்தான் என சொன்னதோடு நிறுத்தாமல் , அந்த பெயருக்கான பின்புலத்தைப்பற்றியும் , அழகிய மணவாளரைப் பற்றிய அறிமுகத்தோடு சொன்னது.
நாங்கள் கேட்ட சில மொண்ணைத்தனம் நிறைந்த கேள்விகளுக்கும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதிலளித்தது என கடந்த இரண்டு நாட்களாக உங்களின் ஆளுமையக்கண்டு வியந்துகொண்டே இருந்தேன் . கடந்த இரண்டு நாட்களாக சிரித்ததைப்போல சமீபத்தில் நான் சிரித்து மகிழவில்லை, இந்த சந்திப்பின் மூலம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய திறப்பு என்பது நாம் அடைய விரும்பும் ஒரூ விஷயத்திற்கோ கற்றுக்கொள்ள நினைக்கும் ஒன்றின் மீது நாம் காட்டவேண்டிய எல்லைகளற்ற ஈடுபாடும் , அதற்கான பித்து நிலையை அடைவது எவ்வளவு அவசியமானது என்பது. அதற்காக நீங்கள் சொன்ன உதாரணங்கள் ஒவ்வொன்றும் உத்வேகம் அளிப்பதாக இருந்தன
தீவிர வாசிப்புடன் எழுத வேண்டும் ஆசையும் வெகுவாக எழுகிறது. அதைப்பற்றி கனவு மட்டும் காணாமல் அதை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது… கடந்த இரண்டு நாட்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . மற்றும் கடந்த இரண்டு நாட்களை என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களாக மாற்றியதற்கும் , வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான திறப்புக்களை அளித்ததற்கும் உங்களுக்கு நான் என்றும் கடைமைப்பட்டவன் . சந்திப்பு முடியும் நேரத்தில் தன்னறம் அமைப்பினர் கொடுத்த அன்பளிப்பு நெகிழவைத்தது :)
அன்புடன்,
பாலசுப்ரமணி மூர்த்தி