அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்

அக்ஷயபாத்திரம் உணவு

அன்புள்ள ஜெ

 

முகநூலில் படித்தது இது. ஒரு திமுக பிரமுகர் எழுதியது.

 

ஆசான் ஒரு இந்து. அவர் எண்ணம் இப்படி கீழ்த்தரமாக இருப்பதில் ஆச்சரியம் என்ன.இழிவாகக் கருதும் குணம்,உணவை வைத்து பாகுபாடு செய்வதை உயர்வாக என்னும் மனநிலை இல்லாவிட்டால் இந்துவாக இருக்க முடியாதே

 

மதிய உணவுத் திட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத சாதிவெறி சார்ந்த உணவினை திணிக்க நினைக்காத சர்வதேச நிறுவனங்கள் உதவி இருக்கும் வரலாறு தெரிந்தால் அறிவுள்ளவர்களுக்கும் ,கருணை உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதர்களுக்கும் குற்ற உணர்ச்சி வரும்.இந்துக்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது என்றாலும்..

 

-அக்ஷயபாத்ரம் என்னும் உணவுக்கொடை ஏன் எதிர்க்கப்படுகிறது என்றால் இதற்காக மட்டுமே. இந்துக்களைப் பற்றி இப்படிச் சொல்லும் ஒரு ஃபாஸிஸ்ட் வேறு எப்படிச் எண்ண முடியும்? இதிலுள்ள காழ்ப்பு எந்த உண்மையையும் காண மறுக்கும். எந்த தகவலையும் திரிக்கும். இதை எழுதிய ஆத்மாவுக்கு உங்கள் உணவுப்பழக்கம் என்ன, சென்றகாலங்களில் நீங்கள் உணவு குறித்து சொன்னவை என்ன, எதுவுமே தெரியாது.  

 

இரண்டுவகையான மனிதர்களால் இங்கே காழ்ப்புகள் மட்டுமே அரசியலாகக் கொட்டப்படுகின்றன. திமுக லேபிலில் மறைந்துகொண்டு இஸ்லாமிய- கிறித்தவ மதவெறிகள் காழ்ப்பை கொட்டுகிறார்கள். அரசியலை ஒருவகையான நரம்புநோயாக கொண்டுள்ளவர்கள் எந்த உண்மையையும் செவிகொள்ள மறுத்து எல்லாவகையான பொய்த்தகவல்களையும் நம்பி, எல்லா செய்திகளையும் திரித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

 

நீங்கள் சொல்வதுபோல இந்தக் காழ்ப்புக்கு அறியாமல் செவிகொடுக்கும் சில இந்துக்களாவது இதைவாசித்தால் சரி

 

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

அக்ஷயபாத்திரத் திட்டம் பற்றி வாயில் எச்சில்தெறிக்க ஒரு திமுக அனுதாபி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது இரண்டு குற்றச்சாட்டுக்கள். ஒன்று, அவர்கள் கர்நாடக அரசு கொடுத்த அரிசியை பிளாக்கில் விற்று பிடிபட்டிருக்கிறார்கள். இரண்டு அவர்களுக்கு தமிழக அரசு ஐநூறுகோடி ரூபாய் நிலத்தை சும்மா கொடுத்துள்ளது. இரண்டுமே அபத்தமான அவதூறுகள் என்று நான் ஆதாரங்களுடன் காட்டினேன்.

 

முதல்செய்தி உடனடியாக காவல்துறையாலும் அந்த செய்திவெளியிட்ட இதழாலும் மறுக்கப்பட்டது. அதன்பின்னரும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கர்நாடக அரசு அக்ஷயபாத்திரம் நிறுவனத்துக்கு கொடுப்பது 10 சதவீதம், அதுவும் அரிசியாக. அந்த அரிசியை விற்று அக்ஷயபாத்திரம் என்ன லாபம் சம்பாதிக்கும்? தமிழக அரசு அளிப்பது ஐந்தாண்டு குத்தகைக்கு – பத்தாண்டு குத்தகைக்கு கேட்டுக்கொண்டும்கூட அது அளிக்கப்படவில்லை. அது அக்ஷயபாத்திரத்தின் சமையலுக்கான இடம். அங்கே அக்ஷயபாத்திரம் அமைப்பு நிரந்தரக் கட்டுமானங்கள் அமைக்கமுடியாது. அமைத்தால் அது அரசுக்கு ஒப்படைக்கப்படவேண்டும்.

 

நான் கடைசியாகக் கேட்டேன். சென்னையில் திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் நூறாண்டு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களின் பட்டியல் தெரியுமா? சென்னையில் இன்றிருக்கும் எத்தனை தனியார் கல்விநிறுவனங்கள், சுற்றுலாவிடுதிகள், கிளப்புகள் அப்படி அரசுநிலத்தில் கட்டப்பட்டுள்ளன என்று தெரியுமா? அவற்றின் சந்தைமதிப்பு எப்படி என்று தெரியுமா?

 

உடனே அவர் என்னை சங்கி என்று சொல்லி வசைபாட ஆரம்பித்தார். நான் காங்கிரஸ்காரன் என அவருக்கே நன்றாகத் தெரியும். நீ விபூதிபோட்டிருக்கிறாய், ஆகவே நீ சங்கி என்றார். நான் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. அவர் சென்றபின் என் அட்டெண்டர் சொன்னார், அவர் பெயர் அருண் என்று மட்டும் அல்ல கூடவே ஒரு பின்னொட்டும் உண்டு.\ அவர் கிறித்தவர். திமுக என்பது பாவனைதான். “அவர் வேறெ என்னசார் சொல்லுவார்?” என்றார்

 

திமுகவுக்கு வேறு வினையே வேண்டாம்

 

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள செல்வக்குமார், ஸ்ரீனிவாஸ்,

 

நான் இன்று வளர்ந்துவரும் இந்துத்துவவெறி குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறேன். அக்கவலை  மேலும் மேலும் வளர்ந்து வருகிறது- இருமுனைகளில். ஒன்று அது இங்கிருக்கும் ஜனநாயகத்தை அழிக்கிறது. சமூகங்களுக்கு இடையே ஐயங்களை கசப்புகளை வளர்க்கிறது. அதன்விளைவாக பொருளியலை அழிக்கிறது. இயல்பான பலமுனைகொண்ட ஜனநாயகம் நிகழமுடியாமல் செய்கிறது. இன்னொரு பக்கம் இந்து மெய்மரபை ஒற்றைப்படையானதாக ஆக்குகிறது. அது ஒர் அரசியல்தரப்பு மட்டுமாக, ஒருவெறி மட்டுமாக ஆக்குகிறது.

 

ஆனால் இந்த இந்துத்துவ அரசியல் வெற்றிடத்தில் இருந்து உருவாகவில்லை- அதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறேன். சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகம் என்றபேரில், மதச்சார்பின்மை என்னும் மேலொட்டில், இந்துமதம் மீதும் இந்துமக்கள் மேலும் கொட்டப்பட்ட கடும் காழ்ப்பும், அவர்கள் மேல் செய்யப்பட்ட அவதூறுகளும், அவர்களின் நம்பிக்கைகளும் வாழ்முறைகளும் இழிவுசெய்யப்பட்டமையும்தான் சாமானிய இந்து இந்த இந்துத்துவ அரசியலை நோக்கி திரும்ப வழிவகுத்தது.

 

இன்று உண்மையில் மொத்த இந்தியாவுமே இந்துத்துவ அரசியலை நோக்கி திரும்பிவிட்டிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் போன்றவற்றில் முதன்மை எதிர்க்கட்சியாகிய காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்றவைகூட எப்படி அடக்கிவாசித்தன என்பதை பார்த்தால் இந்தியாவின் உளவியல் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை, அதை அனைவரும் உணர்ந்திருப்பதை நாம் காணலாம்.

 

இந்துத்துவ அரசியலுக்கு வேர்நீராக அமைபவை இந்துமதம் ,இந்து அமைப்புக்கள், இந்துவிழுமியங்கள் மேல் இன்றைய மதவெறியர்கள் மற்றும் அரசியல்காழ்பாளர்கள் செலுத்தும் வன்முறைதான். அதை ஜனநாயகம்,முற்போக்கு, மதச்சார்பின்மை என்றெல்லாம் முத்திரை குத்திக்கொண்டு செய்கிறார்கள். நேரடிக் காழ்ப்புகொட்டல் ஒருபக்கம். மென்மையான ,தகவல்திரிப்புகளால் ஆன ,அறிவார்ந்த காழ்ப்பு இன்னொரு பக்கம்.

 

மக்கள் இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு தாக்குதலும் பல்லாயிரம் இந்துக்களை இந்துத்துவ அடிப்படைவாதம் நோக்கி தள்ளுகிறது. அன்று இஸ்கான் துறவிகள் சென்றதுமே என் ஓட்டுநர் சொன்னார் “இந்துக்கள் இங்க மக்களுக்கு சோறுபோட்டா மத்தவனுகளுக்குப் பொறுக்காது சார்.ஒழிச்சிருவானுக, பாருங்க” இதுதான் சராசரி மனநிலை. தடுக்கில் கோலத்தில் பாயும் தர்க்கங்களுடன் சொன்னாலும் காழ்ப்பு காழ்ப்புதான். அதை எளிய உள்ளங்கள் உடனே அடையாளம் கண்டுகொள்ளும்

 

காழ்ப்பாளர்களிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை- ஆனால் சிலர் நண்பர்கள். அவர்களிடம் மட்டும் சொல்வதற்கு இருக்கிறது. நண்பர்களே , தலைக்குமேல் வெள்ளம் போன சூழலிலாவது கொஞ்சம் மனவிரிவு கொள்ளுங்கள். உங்கள்  மதக் காழ்ப்புகளில் இருந்து, அரசியல் காழ்ப்புகளில் இருந்து வெளியே வாருங்கள்.

 

ஜெ

முந்தைய கட்டுரைகடத்தற்கரியதன் பேரழகு
அடுத்த கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020