ஒரு செயலைத் தொடங்கும்போது அதை தொடர்ச்சியாக, ஓர் இயக்கமாக, நடத்தவேண்டும் என்ற திட்டம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இருபத்தைந்தண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் குரு நித்யா இலக்கிய அரங்கு, பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த இணைய தளம், பத்தாண்டுகளாக நடந்துவரும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எல்லாமே ஓர் உற்சாகத்தில் தொடங்கியவை. எதிர்காலத்தை நெடுந்தொலைவுக்கு எண்ணும்போது ஒரு மலைப்பும், பெருஞ்சுமையோ என்னும் தயக்கமும் உருவாகிவிடும். அப்போதைய ஊக்கத்தைக் கொண்டே தொடங்குவதும், மேலும் மேலும் ஊக்கத்தை உருவாக்கியபடி தொடர்வதும் என் வழக்கம். வெண்முரசும் அவ்வாறே. எங்கேனும் முற்றாகவே ஆர்வம் வடிந்துபோனால் அதை தொடர்வதும் இல்லை.
புதியவாசகர் சந்திப்பு அவ்வாறுதான் தொடங்கியது. பெரிய திட்டமிடலெல்லாம் இல்லை, எனக்கு என்னைச் சந்திக்க விரும்பும் வாசகர்களின் கடிதங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. நண்பர் சென்னை செந்தில் ஈரோடு காஞ்சிகோயிலில் ஒரு பண்ணைவீடு வாங்கினார். சரி, ஒரு சந்திப்பை அமைப்போம் என முடிவுசெய்து அறிவிப்பை வெளியிட்டோம். வந்த விண்ணப்பங்கள் மும்மடங்கு ஆகவே ஊட்டியிலும் நாமக்கல்லிலும் சந்திப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இது நாலாவது ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதியவாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவே ஒர் இயக்கமாக நீண்டு செல்கிறது
இச்சந்திப்புகளில் நான் அடையும் ஊக்கம் என்பது நான் வாசகர்களை, இளைய படைப்பாளிகளை நேரில் சந்திக்கமுடிவதுதான். முந்தைய ஆண்டுகளில் இளம்வாசகர்களாக வந்தவர்கள் பலர் இப்போது படைப்பாளிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள், நெருக்கமான நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்று என்ன நடக்கிறது, எப்படி எழுதுகிறார்கள், என்னென்ன தனிவாழ்க்கைச் சிக்கல்கள் உள்ளன என்பதெல்லாம் எனக்குத் தெரியவருகிறது. அத்துடன் நான் அறிந்தவற்றை மீண்டும் தொகுத்து எனக்கே சொல்லிக்கொள்ளவும் முடிகிறது. கற்பிப்பதே சிறந்த கல்வி என்று ஒரு சொல்லாட்சி உண்டு- நித்யாவுக்கு மிகப்பிடித்தமானது
இச்சந்திப்புகளின் உடனடிப் பயன் என்ன? இங்கே இலக்கியவாசகர்கள் தற்செயலாக இலக்கியத்திற்குள் வந்தவர்கள். தொட்டுத்தொட்டு படித்துக்கொண்டிருப்பவர்கள், இணைமனம் ஒன்றை சந்திக்கவே வாய்ப்பற்றவர்கள். பல தருணங்களில் மிக எளிமையான இலக்கிய அடிப்படைகளைக்கூட பல பிழைகள், குழப்பங்களுக்குப் பின் அவர்களே கண்டடையவேண்டிய நிலையில் இருப்பவர்கள். இத்தகைய சந்திப்புகள் அப்படி பலநூறு அடிப்படை ஐயங்களை தெளிவுபடுத்துகின்றன. ஏராளமான குழப்பங்களுக்கு விடையளிக்கின்றன. அடிப்படைகளை கற்றுத்தருகின்றன. படைப்பூக்கம் அந்த ஆளுமையில் இருந்து வரவேண்டும். படைப்புவடிவம் அவரே கண்டடையவேண்டும். படைப்புக்கருக்கள் அவருடைய வாழ்வுச்சூழலில் முளைக்கவேண்டும்.
எனில் இங்கே கற்பவை எவை? படைப்புச்செயல்பாட்டின் தொடக்கநிலையில் இயல்பாக உருவாகும் சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள், சில கருத்துநிலைகள் படைப்பியக்கத்தை தேக்கநிலையில் நெடுங்காலம் நிறுத்திவிடும். அவற்றை மறுபரிசீலனை செய்யவைக்கலாம், அதனூடாக ஊற்றின்மேல் அடைத்திருக்கும் கல்லை எடுத்துவிடலாம். சில கேள்விகளுக்கு முன்னரே எளிதான பதில்கள் இருக்கும், அவற்றை அறியாமல் உழைப்பும் பொழுதும் வீணாகலாம். இவை தொடக்கத்திலேயே திருத்தப்படுவது மிகமிக தேவையானது. அதன்பொருட்டே உலகமெங்கும் இத்தகைய பட்டறைகள், சந்திப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.
ஆனால் இவற்றை தகுதியான எழுத்தாளர்களே செய்யமுடியும், செய்யவேண்டும். பொதுவாக எழுத்தாளர்களில் ஒரு சாராருக்கே கற்பிக்கும் தன்மையும் ஆர்வமும் இருக்கும். சிலர் அவ்வாறு இயல்பும் திறனும் இல்லாதவர்கள். உதாரணமாக, சுந்தர ராமசாமியும் ஞானக்கூத்தனும் தேவதச்சனும் மிகச்சிறந்த முறையில் கற்பிப்பவர்கள். தமிழின் தலைசிறந்த கவிஞரான தேவதேவனால் அது இயலாது.
இன்னொன்று, இலக்கிய அறிமுகம் என்றபேரில் இலக்கிய அரசியலை, இலக்கியத்திற்குள் செயல்படும் காழ்ப்புநிலைகளை இளம்வாசகர்களுக்குள் புகுத்திவிடலாகாது. அது அவ்வாசகர்களுக்குச் செய்யும் பெரும் தீங்கு. சிலசமயம் அவர்கள் அவ்வாறு உருவாகும் தவறான புரிதல்களைக் கடந்து மீள பல ஆண்டுகளாகும். கடக்கமுடியாமலேயே ஆகும். அது மிகப்பெரிய இழப்பு- அதற்கு இத்தகைய வழிகாட்டி எழுத்தாளர்களைச்ச் சந்திக்காமலேயே இருக்கலாம்.
மூன்றாவதாக, ஓர் எழுத்தாளர் அவர் எழுதும் எழுத்துமுறை அல்லது அவருடைய அழகியல்நம்பிக்கைகளை மட்டுமே ஒரே இலக்கிய முறை என இளையோருக்கு அறிமுகம் செய்வது. அதுவும் வாசகர்களை எழுத்தாளர்களை ஒரு சிறைக்குள் அடைத்துவிடுவது. இரண்டையும் செய்யும் எழுத்தாளர்கள் சிலர் இன்றிருக்கிறார்கள்.
கடைசியாக, அரசியல் அமைப்புக்கள் நிகழ்த்தும் இலக்கியப் பயிலரங்குகள் வாசிப்பை எழுத்தை சிறுமைப்படுத்தி சிமிழுக்குள் அடைப்பவை. அது எந்த அரசியலாக இருந்தாலும். இடதுசாரி அரசியலோ திராவிட அரசியலோ இந்துத்துவ அரசியலோ எதுவானாலும். அவை இலக்கியத்தை தெரிந்துகொள்வதற்கு முன்னரே, தேடலும் குழப்பமும் கொண்ட பருவத்திலேயே, வாசகர்களுக்கு அறுதியான கருத்துக்களை உருவாக்கி அளித்துவிடுகின்றன. அக்கருத்துக்கள் வழியாகவே அனைத்தையும் பார்க்கச் செய்துவிடுகின்றன. கடைசிவரை அந்த இரும்புச் சட்டகங்களில் இருந்து வெளிவரவே முடியாதபடி ஆகிவிடுகிறது.
முன்பு இடதுசாரி கட்சிகளின் கலையிலக்கிய அமைப்புக்கள் இவ்வாறு வாசகர்களை ஒன்றாம்வகுப்பிலேயே பாறாங்கல்லை தலைமேல் தூக்கியபடி நிற்கச் செய்தன. மிகச்சிலரே சில ஆண்டுக்கால உழல்தலுக்குப்பின் தாங்களே அந்த பாறாங்க்கல்லை வீசிவிட்டு வெளியேறி இலக்கியத்தின் எல்லையில்லா வழிகளைக் கண்டடைந்தார்கள். அவர்களும் சுந்தர ராமசாமி போன்ற எவரையேனும் தற்செயலாகச் சந்தித்து, புறங்கழுத்தில் அடிவாங்கி, கதிகலங்கி தெளிந்தவர்களாகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் அங்கேயே நின்றனர். அப்படி எத்தனையோ அரிய உள்ளங்கள் வீணடிக்கப்பட்டன.
ஏனென்றால் அரசியலியக்கங்கள் எவையாயினும் அவற்றுக்கு இலக்கியம் முக்கியமே அல்ல, அரசியலே முக்கியம். அவை இலக்கியவாசகனையோ எழுத்தாளனையோ உருவாக்க முயலவில்லை, அரசியல் தொண்டனை உருவாக்கவே முயல்கின்றன. இந்த அத்தனை அரசியல்தரப்புகளும் ஏதோ ஒரு புள்ளியில் எழுத்தாளனிடம் “இப்ப எழுத்தா முக்கியம்? நாடு எரிஞ்சிட்டிருக்கு, வீதிக்கு வாங்க!” என்று சொல்லாமலிருப்பதில்லை. இலக்கியவாசகனை முளையிலேயே ஈர்த்து இலக்கியம்மீதான அவநம்பிக்கையை உருவாக்குவதையே இவை செய்கின்றன.
சமீபத்தில் தமிழகமெங்கும் பல்வேறு இளம் இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்துக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட வாசகசாலை என்னும் இலக்கிய இயக்கம் சற்றே வேர்விட்டதுமே திராவிட இயக்க அரசியல்பிரச்சார மேடையாக தன்னை மாற்றிக்கொண்டு எளிமையான மேடைக்கூச்சல்களை போட ஆரம்பித்தது. இது என்றும் நிகழ்கிறது. இதற்கு எதிரான ஒரு விழிப்புநிலை இளைய வாசகர்களுக்குத் தேவை.
இக்காரணத்தால்தான் இந்த இளம்வாசகர் சந்திப்புகளில் நான் அரசியல் பேசுவதில்லை—நானே எழுதும் அரசியல்சார்பான கட்டுரைகளைச் சார்ந்துகூட பேசுவதில்லை. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு தரப்பை முன்வைப்பதில்லை – நானே ஏற்று எழுதும் அழகியல்முறைமைகளைக் கூட. எந்த எழுத்தாளர்மேலும் விமர்சனங்களை முன்வைப்பதில்லை. இது எப்போதுமே வாசிப்பு – எழுத்து ஆகியவற்றில் கண்டடையவேண்டியவை களையவேண்டியவை குறித்த விவாதம் மட்டுமே
உதாரணமாக, எல்லா சந்திப்புக்களிலும் பேசப்படுவது ஒரு அரட்டைக்கும் உரையாடலுக்கும் இடையேயான வேறுபாடு. அரட்டையின் தாவித்தாவிச் செல்லும் தன்மை, முறைமையின்மை ஆகியவற்றுக்கு மாற்றாக முறையான சீரான விவாதத்தை எப்படி அமைக்கவேண்டும் என்பது. எப்படி ஒரு கருத்தை முன்வைப்பது, அதை மறுப்பது என்பது எப்போதுமே பேசப்படும். ஒரு கதையின் கரு என்றால் என்ன, கதைக்கட்டு என்றால் என்ன, அதன் வடிவம் என்றால் என்ன, தரிசனம் என்றால் என்ன, அதன் வாசக இடைவெளி என்றால் என்ன என்பதும் எப்போதும் பேசப்படுகிறது.
பெரும்பாலான அமர்வுகளில் தேய்வழக்குகளைப் பற்றிய விரிவான விவாதம் இருக்கும். ஏனென்றால் இன்று நம் சூழலில் இருந்து நமக்கு வந்துசேர்பவை தேய்வழக்குகள். ஊடகப்பெருக்கம் தேய்வழக்குப்பெருக்கத்தையே உருவாக்குகிறது. அவற்றை களையவேண்டியது பயிருக்கு களைபறிப்பதற்கு நிகரான அடிப்படைச் செயல்பாடு.
இந்த அரங்கிலும் பேச்சு இந்த அடிப்படைகளைச் சார்ந்தே நிகழ்ந்தது. வந்திருந்தவர்கள் தங்கள் உள்ளங்களின் கருக்களை, கருத்துக்களைச் சொன்னார்கள். அவற்றை மற்றவர்கள் விவாதித்தனர். நான் என் தரப்பைச் சொன்னேன். வேடிக்கையும் சிரிப்பும் கலந்தே எந்த நல்ல உரையாடலும் நிகழமுடியும் என்பது என் எண்ணம். அன்றும் அவ்வாறே. வழக்கம்போல் மாலையில் எட்டு கிலோமீட்டர் நடை. இரவில் பேய்க்கதைகள். நெருக்கமான அறைகளில் படுத்துக்கொள்ளுதல். மறுநாள் பம்ப்செட் குளியல் என ஒரு சிறிய சுற்றுலா அனுபவம்.
மீண்டும் மீண்டும் முகங்களைச் சந்திக்கிறேன். புதியவர்களின் கலக்கங்களும் தயக்கங்களும் கொண்டவர்கள். புதிய கனவுகள் கொண்டவர்கள். இன்றைய சூழல் ஒரு விந்தையான நிலையை நமக்கு அளிக்கிறது- நம்மைப்போன்றவர்களை நமக்கு தேடித்தருகிறது. நாம் அவற்றை விரும்புவோம் என அது நினைக்கிறது- நாம் அவற்றில் சிக்கிக் கொள்கிறோம் என்பதே உண்மை. நாம் உளச்சோர்வு கொண்டவர்கள் என்றால் உளச்சோர்வுள்ளவர்கள் மட்டுமே நம்மைச் சூழ்ந்து நிறைகிறார்கள். குடிகாரர்கள் என்றால் குடிகாரர்களை நமக்கு அளிக்கின்றது சூழல். பூசலிடுவோர் என்றால் பூசல்காரகளை. அரசியல்சழக்கில் திளைப்பவர் என்றால் சகசழக்கர்களை. முகநூலும் கூகிளும் அதை செய்கின்றன.
இது ஒரு நோய்க்கூறான தன்மை. அதை உடைத்துவெளியேற இந்தச் சந்திப்புகள் உதவுகின்றன. ஒருவகையான புதிய காற்று என்னுள் நிறைகிறது, ஒவ்வொரு சந்திப்புக்குப்பின்னரும். வழக்கமான அரசியல் கூச்சல்கள், மிகையுணர்ச்சிகள், வம்புகளுக்கு அப்பால் சென்று எழும் தலைமுறையின் கனவுகளை அருகே காண்பது பெரும் நம்பிக்கையை அளிப்பது
நண்பர் ஈரோடு கிருஷ்ணன் ஒருங்கிணைக்க அந்தியூர் மணி, பாரி, மணவாளன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். சென்னை செந்தில் வந்திருந்தார். பழைய சந்திப்புகளில் வந்துகலந்துகொண்டிருந்த சிலரும் வந்திருந்தனர். நினைவில் அரியநாட்களைக் கோத்துக்கொண்டே இருக்கிறோம். இந்நாள் ஓர் அருமணி
***