கோடை மழை

 

கோடைகாலம் தொடங்குவதற்குள்ளாகவே இங்கே கோடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்ற பிப்ரவரி இருபதாம் தேதி நல்ல மழை. அன்று சிவராத்திரி. எவனோ சுங்கான்கடை மலையடிவாரத்தில் தீயிட்டுவிட்டான். காய்ந்த புல் பற்றிக்கொண்டு மேலேற மலை நின்றெரிந்தது. இரவில் வானில் தழல்கொடி. பகலில் புகைமூடியிருந்தது பாறைமுடிகளை. ஆனால் உடனே மழைபெய்து தீ அணைந்துவிட்டது

அதன்பின் இன்று. நேற்றே கருமைகொண்டிருந்தது தெற்குவானம். சவேரியார் குன்றின்மேல் கரும்புகைப்படலம். மலைப்பாறைகள் தெளிந்து அருகிலென வந்து நின்றன. பறவையோசைகள் மாறுபட்டன. சிறிய ஈ ஒன்று வந்தமர்ந்து கடித்துச் சென்றது. மழை மழை என எல்லா இலைகளும் அசைந்தன. ஆனால் மழை வரவில்லை. கொடித்துணிகள் தவித்ததுதான் மிச்சம்

இன்று காலையில் திடீரென்று இருண்டது. “மழையா?” என்று அருண்மொழி கேட்டாள். “ஒருவேளை பெய்யலாம்” என்றேன். கோடைமழையைப் பற்றி எதுவுமே சொல்லமுடியாது. அது மண்ணின்மேல் உருவாகும் வெப்பத்தால் கொண்டுசெல்லப்படுவது. எங்கே மண் சுட்டுப்பழுத்திருக்கிறதோ அங்கே காற்று விரிந்து மேலே செல்லும். அந்த அழுத்தமின்மையை நோக்கி முகில்நிறைந்த காற்று வந்து குவிந்து சுழன்று மழைபொழியும். கோடை மழை ஓரிரு கிலோமீட்டர் வட்டத்திற்குள் பெய்வது. பார்வதிபுரத்தில் கொட்டிக்கொண்டிருக்கும், மணிமேடையில் வெயில் சுடர்கொண்டிருக்கும்.

வேளிமலைக்கு அப்பால் பாண்டிநாட்டில் இனிமேல் நவம்பரில்தான் மழை. ஜூன்மழை நல்லூழ் இருந்தால். இங்கே இனிமேல் ஏப்ரலில் நாலைந்து மழை உண்டு. மே இறுதியில் தென்மேற்குப் பருவக்காற்றின் பெருமழைக்காலம். மழையை அறிந்தவை இந்த மலைகள். மழையின் ஒருபகுதியென ஆகும் கலை அறிந்தவை. இங்குள்ள எல்லா மரங்களும் மழைமேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவை. இல்லாவிட்டால் இந்த எழுகோடையில் பசுந்தளிர்விடத் துணியுமா என்ன?

மழை பெய்யத்தொடங்கியபோது உச்சித்துயிலில் இருந்தேன். மழையின் ஓசைகேட்டு விழித்துக்கொண்டேன். இடியோசைகள், சாளரம் கடந்து வந்து அறையை ஒளிர்ந்து அதிரச்செய்த மின்னல்கள். மழைச்சரடுகள் சுழன்று பறக்கும் காற்று. இரண்டுமணிநேரம் மழை நின்று பொழிந்தது. பின் உடனே மறைந்தது. நீராவி அறைக்குள் நிறைந்தது. காற்று அசைவற்றிருக்கையில் மெல்லிய வெம்மை, காற்று வீசுகையில் குளிர்

மாலையில் மழைநனைந்த மலையடிவாரச் சாலையில் நடை சென்றேன். பாறைகள் கழுவப்பட்டு புதியனவாக நின்றன. செம்மண்ணில் நீர் ஓடிய தடம். மலையாளக் கவிஞர் வைலோப்ப்ள்ளி அவற்றை சூல்கொண்ட பெண்ணின் வயிற்றில் தோல்விரியும் தடங்கள் போல என்கிறார். கருமென்மைகொண்ட வரிகள். செவ்வரிகள். விரிசல்கள். தொலைவில் வேளிமலை மழைப்பொழுதுக்கே உரிய கருநீலவண்ணம் கொண்டு நின்றிருந்தது. சுடரும் பசுமை கொண்ட இலைகள்

கால்வாயில் செந்நிற மழைநீர். செம்மண் பரப்பெங்கும் கண்ணாடிப் பதிப்புகள் போல நீர்ப்படலங்கள். காற்றில் அலைபாயும் ஒளி. குளிர்ந்த காற்று மலைகளிலிருந்து வந்தது. மண்ணும் குளிர்ந்திருந்தது. ஆனால் செவிமடல்களில் நீராவியின் வெம்மையை எவ்வண்ணமோ உணர்ந்துகொண்டுமிருந்தேன். நுரையீரல் நிறைய மண்மணத்தை நீர்க்குளிரை நிறைத்துக்கொண்டு திரும்பிவந்தேன்

முந்தைய கட்டுரைஅவரவர் ஒளி
அடுத்த கட்டுரைசெயல்யோகத்தின் சுவடுகள்