அன்புள்ள ஜெமோ,
தினமும் காலையின் முதல் அகவல், தங்களின் பதிவுகளை வாசிப்பதுதான். தினசரி தங்கள் வாசகர்களின் கேள்வியும் தங்களின் பதிலும் படித்துவந்துள்ளேன். பலவருடமாக பதில் எழுதும் உங்களுக்கு காலம் மாற மாற வாசகர்களின் கேள்வியின் தரம் எவ்வாறாக உள்ளது? தங்களின் அவதானிப்பை தெறிந்துகொள்ள விருப்பம்.
மிக்க நன்றி.
பேரன்புடன்
ரகுநாத்
பெங்களூரு
***
அன்புள்ள ரகு,
கேள்விகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதற்கு முதன்மையான தூண்டுதல் நான் மறுமொழி அளிக்கிறேன் என்பது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசிலரே அதைச் செய்திருக்கின்றனர். நான் அறிந்தவரை சென்ற தலைமுறையில் சுந்தர ராமசாமி, வண்ணதாசன், கி.ராஜநாராயணன் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள் தொடர்ந்து வாசகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அன்றிருந்த அச்சு ஊடகத்தில் அவற்றில் ஒரு சிறுபகுதியே வெளிவந்திருக்கிறது.சுந்தர ராமசாமி சுஜாதா இருவருமே எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தும் எழுதியிருக்கிறார்கள்.
இந்தக்கடிதங்கள் இரண்டு வகை. ஒன்று உருவாகி வரும் எழுத்தாளர்களால் எழுதப்படுவன. அவர்களுக்கு தங்கள் எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ள ஒரு தொடக்கமாக இந்தக் கடிதங்கள் அமைகின்றன. தங்கள் எண்ணங்களை தொகுத்துக்கொள்கிறார்கள். அவற்றின் மதிப்பென்ன என்று உசாவி அறிகிறார்கள். அரிதாக எழுதுவதில் உள்ள சிக்கல்கள், எழுத்தாளனாக வாழ்வதன் சிக்கல்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இன்னொரு சாரார் வாசகர்கள். அவர்கள் எழுதுவது எழுத்தாளன் அவர்களுக்கு மிக அணுக்கமானவன் என்பதனால். எழுத்து எழுத்தாளனின் ஆழுள்ளத்தை அவர்களுக்கு அருகே கொண்டு வருகிறது. வேறெந்த மனிதரிடமும் பகிரமுடியாத சிலவற்றை பகிரச்செய்கிறது. படைப்புகளில் இருந்து வாழ்க்கை நோக்கி நீளும் ஒரு தேடலாக அக்கடிதங்கள் அமைகின்றன. ஒருவகையில் இலக்கியப்படைப்பு பற்றி நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த எதிர்வினைகள் இப்படி வாழ்க்கையிலிருந்து எழும் கருத்துக்களே.
இவர்களில் எழுத்தாளராக விழைபவர்கள் என்று எனக்கு தெரிந்தவர்களை அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களுடன் புகைப்படங்களுடன் முன்வைக்கிறேன். அவர்கள் கவனிக்கப்படவேண்டும், கவனிக்கப்படுவதன் சிக்கல்கலை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் வாசகர்கள் அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டால், கவனிக்கப்பட்டால் சூழலின் எதிர்மறை அழுத்தத்தை அறிகிறார்கள். அவர்களின் இயல்பான நிலை இல்லாமலாகிவிடுகிறது [சுவாரசியமான ஒன்று, என் தளத்தில் மிக சம்பிரதாயமான ஆண்பெயரில் எழுதும் இருவர் பெண்கள்]
நான் எழுதவந்தபோதிருந்தே வாசகர் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. இணைய ஊடகம் அமைந்த பின்னர் நிறைய கடிதங்கள். இப்போது எண்ணும்போது எந்தெந்த கோணங்களில், எந்தெந்த பேசுபொருட்கள் அக்கடிதங்களில் வெளிப்பட்டுள்ளன என்று பெரும் வியப்பு உருவாகிறது.
தொடக்ககாலக் கடிதங்கள் வெவ்வேறு மொழிநடை கொண்டவை. நிறைய கடிதங்கள் ஆங்கிலத்தில் இருந்தன- அன்று தமிழில் தட்டச்சிட பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பலருக்கும் நான் தமிழில் தட்டச்சிடுவதற்கான வழிகளைச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.இன்று எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் உட்பட பலர் அன்று வாசகர்கடிதம் எழுதியவர்களே.
ஆங்கிலக் கடிதங்களை நான் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன். ஆங்கிலம் தமிழ் கலந்த கடிதங்களை தமிழில் செம்மையாக்கம் செய்வதுண்டு. முக்கியமான கடிதம், ஆனால் தெளிவில்லாதது என தெரிந்தால் சற்று மறு ஆக்கமும் செய்வேன். எல்லா கடிதங்களிலும் கலைச்சொற்களை அமைப்பேன். அவ்வாறு செம்மை செய்யப்படாத கடிதங்கள் தொடக்ககாலத்தில் மிகக்குறைவே
ஆனால் மிக விரைவாகவே வாசகர்கள் மொழிநடையை, கலைச்சொற்களைக் கற்றுக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் இந்தத்தளத்தை தொடர்ந்து படிப்பது முதன்மையான காரணம். தமிழிலக்கிய வரலாற்றில் பிறிதெப்போதும் ஓர் எழுத்தாளரை அன்றாடம் படிப்பதற்கான வாய்ப்பு அமைந்ததில்லை. ஓரிருமுறை ஒரு வாசகரின் கடிதம் திருத்தியமைக்கப்பட்டால் அதன்பின் வரும் கடிதம் அந்த திருத்தப்பட்ட மொழியில் அமைந்திருப்பதை காண்கிறேன். இன்று நல்ல கடிதங்கள் எழுதுபவர்கள் பலர் அப்படி மொழிக்குள் வந்தவர்கள்..
பலர் என்னுடைய மொழியின் செல்வாக்கு கொண்டவர்கள் என்பது இயல்பே. அவர்களில் எழுத்தாளர்களாக ஆனவர்கள் அச்செல்வாக்கிலிருந்து வெளியே சென்றுவிட்டார்கள். அதுவும் இயல்பான வளர்ச்சியேதான்.
முன்பு இலக்கிய அடிப்படைகளைப் பற்றிய வினாக்கள் மிகுதியாக இருக்கும். இப்போது அவை குறைந்துவிட்டன- பலவற்றைப்பற்றி ஏற்கனவே இந்த தளத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. இலக்கியத்தில் தரம் என ஒன்று உண்டா, இலக்கியவிமர்சனத்தின் தேவை என்ன, வணிக எழுத்து ஏன் இலக்கியமாக ஆகக்கூடாது என்பதுபோன்ற கேள்விகள் இப்போது வருவதில்லை.
ஆனால் இன்றுவரும் கேள்விகள் பல என்னுடைய, இந்த தளத்தின் செல்வாக்கு பற்றியவை . இதன் ஆதிக்கத்தில் இருக்கிறோமா, தனியான சிந்தனை உருவாகாது போய்விடுமா என்றெல்லாம். இவை நம் சூழலில் சிந்தனை உருவாகும் முறை பற்றி எந்த அறிதலும் இல்லாத கூட்டத்தவரால் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கேலிகளில் இருந்து எழும் ஐயங்கள்.
இன்றும் புதிதாக உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகவே இளம்வாசகர்களுக்குரிய ஐயங்களும் அலைக்கழிப்புக்களும் கொண்ட கடிதங்கள் நிறைய வருகின்றன. சில அடிப்படைகள் திரும்பத்திரும்ப தலைமிறை தலைமுறையாகச் சொல்லப்படவேண்டியவை. சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
இன்றுள்ள புதிய சிக்கல் கூகிள் எழுதுகருவியில் செல்பேசியில் தட்டச்சு [தொட்டச்சு என்று சொல்லவேண்டுமோ?] செய்வதனால் வருபவை. ஏராளமான எழுத்துப்பிழைகள், எழுத்துமாறாட்டங்கள் கொண்ட கடிதங்கள். அவற்றை பெரும்பாலும் திருத்தியே வலையேற்றம் செய்யவேண்டியிருக்கிறது.
இன்னொன்று சில கூகிள் பக்கங்களில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் பக்கத்தில் வெட்டி ஒட்டப்படும் கடிதங்களை என் தளத்தில் அப்படியே வலையேற்றம் செய்யும்போது பக்க வரியமைப்பில் சிக்கல் உருவாகிறது. வரிகள் நீண்டு பக்க எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகின்றன. அவற்றை வரிவரியாக மறு அமைப்பு செய்யவேண்டியிருக்கிறது
ஊக்கம் அளிப்பது இன்றைய வாசகர்களின் கடிதங்களில் உள்ள நல்ல மொழிநடை, தெளிவான பார்வைகள். இத்தகைய வாசகர்கடிதங்கள் முன்பு எழுதப்பட்டதே இல்லை என்றே நினைக்கிறேன். பழைய வாசகர்கடிதங்களைச் சென்று பார்க்கையில் அந்த பயிலாநடை எப்படி இன்றைய கூரியநடையாக மாறியிருக்கிறது என்பது வியப்பூட்டுகிறது. இந்தத் தளம் ஒரு பெரிய பயிற்சிக்களமாக அமைந்துள்ளது என்பது பெருமிதம் அளிக்கிறது.
இந்த வாசகர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம்வழி கற்றவர்கள். தமிழ் ஒரு பாடமாக மட்டுமே இருந்திருக்கிறது. வெண்முரசை வாசிக்குமளவுக்கு அவர்கள் தமிழ்த்தேர்ச்சி அடைந்திருப்பது, எழுதுவது ஒரு சமகாலப் பெருநிகழ்வு.
ஜெ
***