இரு இளம்பெண்களுக்கு…

அன்புக்குரிய ஆர்,

ஓர் ஆசிரியனின் உள்ளத்துடன் இணைந்து செல்ல ஒரு நீண்ட பழக்கம் தேவையாகிறது. அது நிகழ்ந்தாலொழிய அந்த ஆசிரியனின் படைப்புக்களை நம்மால் முழுமையாக உணர முடியாது. படைப்புக்கள் அடையாளங்கள், அல்லது பாதைகள். அவற்றினூடாக ஆசிரியனைச் சென்றடைவதே வாசிப்பு. நிறைய தருணங்களில் நாம் ஆசிரியனைச் சென்றடைவதே இல்லை. அந்தப்படைப்பின் அமைப்பு- மொழி- செய்திக்குள் நின்றுவிடுகிறோம்.

நீண்டகால உணர்ச்சிபூர்வமான ஈடுபாடே நம்மை ஆசிரியனை நோக்கிக் கொண்டுசெல்கிறது. மெய்வாழ்க்கையில் மனிதர்கள் பல்வேறு பாவனைகள் வழியாக வாழ்கிறார்கள். ஆகவே எவருடைய ஆழுள்ளத்திற்குள்ளும் நம்மால் செல்ல முடியாது. அவர்களின் சொற்கள் செயல்கள் வழியாக அவர்களை நாம் ஒருவாறாகத் தொகுத்துக்கொள்கிறோம். எழுத்தாளனிடம் மட்டுமே ஆழுள்ளத் தொடர்பு இயல்வதாகிறது.

ஆகவே , அந்த தொடர்பு இனியதாக உயர்ந்ததாக இருக்கவேண்டியதில்லை. வசதியானதாக இருக்கவேண்டியதில்லை. ஆழுள்ளம் என்பது கடலின் அடித்தட்டு போல. வெளியே மூழ்கியவை எல்லாம் சென்றடையும் ஆழம் அது. அதுவே ஒவ்வொன்றுக்கும் மெய்யான பொருளை அளிப்பது. ஒவ்வொன்றையும் முழுமையாக்குவது. ஆனால் அது அனைவருக்கும் உரிய அறிதல் அல்ல. அனைவரும் அறிந்தாகவேண்டுமென்பதும் அல்ல. அறிவதற்கான தகுதியும் விழைவும் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. அதுவே இலக்கிய ஆசிரியனின் பணி

உங்கள் எழுத்துக்களைச் சீரமைத்துக்கொள்ள தொடர்ந்து அதை நீங்களே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தால் போதும். என்னென்ன விஷயங்கள் உங்கள் மொழியை கீழே இழுக்கும்?

அ.தேய்வழக்குகள் [க்ளீஷேஸ்] பலர் சாதாரணமாக பயன்படுத்தும் சொல்லாட்சிகள் நமது தனித்தன்மையை இல்லாமலாக்கிவிடுகின்றன. அவற்றை தவிர்க்கவேண்டும். நமக்கே உரிய சொற்களை, சொற்றொடர்களை நாம் கண்டடையவேண்டும்.

ஆ. மிகையான உணர்ச்சி வெளிப்பாடுகள். உணர்வுகளை சரியாகச் சொல்லவேண்டுமே ஒழிய கூடுதலாகச் சொல்லிவிடக்கூடாது என்னும் உணர்வு நமக்குத்தேவை.

ஒரு நாவலில் எது நமக்குப் பிடித்திருக்கிறது, எது நமக்கு கிளர்ச்சியை உருவாக்கியது, எது நமக்கு பிடிக்கவில்லை என எழுதுவது நாம் எழுதிக்கொள்ளும் குறிப்பு மட்டுமே.அதை நாம் ஆசிரியருக்கு அனுப்பவும் செய்யலாம், கடிதமாக. ஆனால் விமர்சனம் என்பது அது அல்ல. அப்படைப்பை நாம் அறிந்த வாழ்க்கையுடன் இணைத்து நம் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதலை அடைதல். அந்தப்புரிதலைக்கொண்டு அந்தப்படைப்பை மேலும் புரிந்துகொள்ளுதல். அந்த படைப்பில் இருந்து நாம் அடைந்த சிந்தனைகளை முன்வைத்தல். அச்சிந்தனைகளைக்கொண்டு ஒட்டுமொத்தமாக அந்தப்படைப்பை மதிப்பிடுதல் ஆகியவையே விமர்சனம். அவைதாம் நாம் செய்யவேண்டுவன என அறிந்தால் போதும் மெல்லமெல்ல அவற்றை செய்யத் தொடங்கிவிடுவோம்

உங்கள் கடிதம் உண்மையான உணர்வுகளுடன் உளம்திறந்து படைப்புக்குள் நுழைவதாக இருந்தது. அது ஒரு பெரிய தகுதி. இளமையிலேயே அது இயல்வதாகிறது. தன்னை சிறந்தவாசகி என அடையாளப்படுத்திக்கொண்டு இலக்கியச் சூழலில் ஓர் ஆளுமையாக கற்பனைசெய்ய தொடங்கும்போது மெல்லமெல்ல மறைந்துவிடும் இயல்பு அது. அந்த உளம்திறந்த தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு புனைவு மெய்யான உணர்வுகள் கொண்ட நிகர்வாழ்க்கை ஒன்றை வாழச்செய்தால் அது நம்மை வந்தடைந்துவிட்டது என்றே பொருள். அதை அறிவார்ந்து மதிப்பிடுவதும் எழுதுவதுமெல்லாம் அடுத்தபடிகள் மட்டுமே

ஜெ

***

அன்புள்ள எஸ்,

எழுதுவது என்பது ஒரு பழக்கம், பழக்கத்தால் கைவரும் திறன்கள் மொழியின் ஒழுக்கு கூர்மை ஆகியவை. சிறந்த உரைநடை என்பது என்ன? எது நம் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் மொழியோ அதற்கு மிக அணுக்கமான மொழி ஒன்றை உருவாக்கிக்கொள்ளுவதுதான். அதற்குத் தடையாக ஆவது எது?புறத்தே இருந்து நம்மை வந்தடையும் மொழிநடைகளும் சொற்களுமே.

புறத்தே இருந்து நம்மை பலவகையில் மொழி வந்து சேர்கிறது. செய்திமொழியே அவற்றில் முதன்மையானது. நாளிதழ்களில் சமூகவலைத்தளங்களில் புழங்கும் மொழி. அன்றாடப்பேச்சுமொழி இரண்டாவது. இவை இரண்டுமே அனைவருக்கும் பொதுவானவை. ஆகவே தேய்ந்துபோன சொல்லாட்சிகள் நிறைந்தவை. இவற்றை நாம் பயன்படுத்தினால் நமது மொழி பழகிப்போனதாகத் தெரியும்

புறத்தே இருந்து நம்மை வந்தடையும் மொழிகளில் அடுத்த படியில் இருப்பது புனைவுமொழி. அதில் பேரியக்கமாக இருப்பது வணிக எழுத்து. நாம் இயல்பாக அதில்தான் தொடங்குகிறோம். ஏனென்றால் நம்மைத்தேடி வருவது அதுதான். அது உணர்வுகளை மிகையாக்குகிறது. சிலவகையான தேய்வழக்குகளை உருவாக்குகிறது. நாம் இன்னொருவரின் குரலில் பேசத்தொடங்குகிறோம். பாலகுமாரனைபோல சுஜாதாவைப்போல நம் மொழி அமைகையில் அது நம் ஆழத்தை வெளிப்படுத்துவதில்லை

சரி, அப்படியானால் வெளிப்பாதிப்பே இல்லாமல் அகமொழியை நம் மொழிநடையாக ஆக்கிக்கொள்ள முடியுமா? முடியாது. ஏனென்றால் உரைநடை என்பது புறவயமான ஒரு கட்டுமானம். புறப்பயிற்சியே இல்லாவிட்டால் ஒருவர் இளமையில் எதை சூழலில் இருந்து இயல்பாகப் பெற்றுக்கொண்டாரோ அதுதான் மொழியாக வெளிப்படும். அது முதிர்ச்சியற்றதாக, பொத்தாம்பொதுவானதாகவே இருக்கும்

எனவே புறத்தே இருந்து மொழியை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் வாசிப்பு. ஒருவர் எழுத முற்படும்போது அதுவரை எழுதப்பட்டு அவருக்கு சூழல் என கிடைக்கும் உரைநடையில் மிகச்சிறந்தவற்றை பயிலவேண்டும். அவற்றில் ஒருவருக்கு மிக அணுக்கமானது எதுவோ அதை மேலும் தாகத்துடன், வெறியுடன் சென்றடையவேண்டும்.

ஒருவருக்கு லா.ச.ராவின் மொழி அணுக்கமானதாக இருக்கலாம். இன்னொருவருக்கு அசோகமித்திரனின் மொழி அணுக்கமாக இருக்கலாம். அது அவரவர் அகஇயல்பையும் உணர்வுநிலையையும் பொறுத்தது. அந்த மொழியை அத்தனை ஆவேசத்துடன் தொடர்ந்து சென்றால் அன்றி ஒருவர் தன்மொழியை கண்டுகொள்ள முடியாது.

முதலில் அந்த மொழியை முதலில் அவர் அப்படியே ‘நகல்’ எடுக்க ஆரம்பிப்பார். அது ஒரு தொடக்க நிலை. பின்னர் அதிலிருந்து தனக்கு அணுக்கமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை உதிர்த்துவிடுவார். தனக்கு அணுக்கமானவற்றை மீண்டும் மீண்டும் வளர்த்தெடுப்பார். அவ்வாறு தன் நடையை வந்தடைவார். அது அவருடைய அகமொழியை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துவதாக அமையும்

ஏனென்றால் அகம் உள்ளே நிகழ்கிறது. அது சரியாக சென்றுபடியும் சொற்களை, நடையை வெளியேதான் கண்டடையவேண்டியிருக்கிறது. ஒரு குழந்தை ஒரு பெரிய நகரத்தைக் கற்பனை செய்கிறது. கையில்கிடைத்த பொம்மைகள், காண்டிகள், கோப்பைகளைக்கொண்டு அதை உருவாக்குகிறது.

ஆகவே சில உளநிலைகளுக்காக வருந்தவேண்டியதில்லை. அவற்றைப்பற்றிச் சொல்லப்படும் மேலோட்டமான கருத்துக்களை கருத்தில்கொள்ளவேண்டியதில்லை

முதன்மையாக, ஒர் எழுத்தாளன் மேல் கொள்ளும் பித்து, அவனையே இரவும்பகலுமென எண்ணிக்கொண்டிருத்தல், அவன் மொழியை பின்தொடர்தல், அவன் அகத்துடன் அணுக்கமாக இருத்தல்.

இலக்கிய வாசிப்பு குறித்து அறியாதவர்களே ‘எல்லாத்தையும் வாசிக்கணும், எல்லா தரப்பையும் தெரிஞ்சுக்கணும்’ என்பார்கள். அது மேலோட்டமான, தகவல்சார்ந்த வாசிப்புக்கே இட்டுச் செல்லும். நம் ஆழத்துக்கு உகந்த ஓர் எழுத்தாளரை நாம் கண்டடைகிறோம். ஒரு பெருங்காதல் போல அவனை தொடர்ந்து சென்றாலொழிய அவனுடைய ஆழத்தை கண்டடையமுடியாது. அவனுடைய மொழி நம்மில் ஊற முடியாது. அவ்வாறு அவனைக் கண்டடைந்தபின் அவனில் நம்மை கண்டடைகிறோம். அவனில் இருந்து எழுகிறோம்.

ஓர் எழுத்தாளனின் எழுத்தில் அவன் சென்றடைந்த அனைத்து நுட்பங்களுக்கும் நீங்கள் சென்றடைய முடியுமா, அவனுடைய எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள் அடையமுடியுமா, அவன் எழுதுவதை நீங்களே எழுதியது என உணரமுடியுமா? எனில் நீங்கள் அவனை அறிந்திருக்கிறீர்கள். அது ஒரு தவம். அது ஓர் உச்சவாசிப்பு நிலை. அவ்வண்ணம் அனைவருக்கும் ஒரு படைப்பாளி இருப்பார்—அவனுடைய மொழியிலேயே. அந்த அளவு தீவிரத்துடன் இன்னொரு எழுத்தாளரை பின்தொடர்ந்து அறிய முடியாது. அதற்குரிய உளநிலை அமையாது.

ஆகவே பித்து என்பது ஓர் எல்லை அல்ல, குறைபாடு அல்ல. அது ஒரு பெரும்பாதை, ஒர் ஆற்றல். பித்துகொண்டு கற்பனவற்றைத்தான் நாம் மெய்யாகவே கற்கிறோம். பித்தில்லாமல் கற்பன நம் ஆழத்தைச் சென்றடைவதில்லை

இரண்டாவதாக, ஓர் எழுத்தாளனின் எழுத்துநடையின் செல்வாக்கு குறித்து பதற்றம் கொள்ளவேண்டியதில்லை. அது இயல்பானது, அதுவே எழுதுவதற்கான ஒரே வழி. அவ்வண்ணம் ஒர் எழுத்துநடையின் செல்வாக்கு இல்லாதவர்கள் பொதுநடையின், செய்திநடையின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். அவர்கள் ஒருபோதும் தனக்குரிய தனி மொழியை உருவாக்கிக்கொள்ளப் போவதில்லை

அந்த எழுத்துநடையின் செல்வாக்கிலிருந்து நீங்கள் இயல்பாக வெளியே வரவேண்டும். எழுதி எழுதி கண்டடைந்து நீங்களே விலகவேண்டும். செயற்கையாக எண்ணி அதை விலக்கக் கூடாது . இன்னொருவர் அதைச் செய்யக்கூடாது. அதாவது அந்த முன்னோடி எழுத்தாளரிடமிருந்து நீங்கள் விலகுவது உங்கள் உண்மையான ஆளுமையின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். நாலுபேர் என்ன சொல்வார்கள் என்று நினைத்து செய்யும் பொய்யான செயலாக அமையலாகாது

அதுவே அந்த முன்னோடி எழுத்தாளரின் கருத்துக்களில் இருந்து விலக்கம் கொள்வதும். இயல்பான, தவிர்க்கவே முடியாத விலக்கம் உருவாகலாம். உருவாகியே ஆகவேண்டும் என்றில்லை. அழகியலில், அறவியலில், மெய்யியலில் அப்படி முற்றிலும் மாறுபட்ட கருத்துநிலைபாடுகள் இல்லை. எல்லாமே தொடர்ச்சிதான்.

கடைசியாக உங்கள் கேள்விக்கு மறுமொழி. உங்கள் எழுத்து பயிற்சியற்றதாக உள்ளதா? மிகையாக வெளிப்பாடு கொண்டுள்ளதா? ஆம். அதைக் கடக்கும் வழியையே மேலே சொன்னேன்.

ஆகவே தொடர்ச்சியாக எழுதுங்கள். எழுதிக் கண்டடையுங்கள். எழுதி உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். வெளியே இருந்து ‘நாலுபேர்’ உங்களை வரையறை செய்யவேண்டியதில்லை நீங்களே வளர்ந்தெழுங்கள்.

ஆங்கிலம் வழி கல்வி கற்ற இளம்பெண்கள் தமிழில் எழுத விழைவது, அதிலும் இலக்கியம் எழுத எண்ணுவது நிறைவை அளிக்கிறது. இங்கே உடனடி வெற்றிகள் இல்லை. எளிய புகழும் இல்லை. ஆனால் எய்துவதன் நிறைவு உள்ளது.

ஜெ

***

முந்தைய கட்டுரைசிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15