யா தேவி! – கடிதங்கள்-15

அன்புள்ள ஜெ,

யா தேவி சிறுகதை கடிதங்கள் அதைப் பலவேறு கோணங்களில் நுணுகி அலசிவிட்டன.  மறுவாசிப்பு செய்யும் போது இன்னொரு பகுதி புலப்பட்டது.  கதையின் ஓட்டத்தில் பல நுண்ணிய ஆயுர்வேதக் குறிப்புகள் உள்ளதைக் கவனிக்க முடிகிறது.  ஆயுர்வேதத்தின் உன்னதம் பல இடங்களில் நிலை பெறுகிறது.  குறிப்பாக பாதங்களில் முடியும் நரம்பு முனைகளில் மீட்டுவதன் மூலம் பல நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பது இந்திய மரபு மருத்துவத்தின் மகத்துவம். மேலும் நஞ்சாகிய உணவு மற்றும் அதனால் ஏற்படும் கால் எரிச்சல், குடலின் பெருந்தன்மை, சகச்சராதி தைலம் போன்ற குறிப்புகள் வாசகனுக்குப் பாடமாகின்றன.  மேலும் காம ஒறுப்புக்கான தென்னிந்திய வழிமுறை, கடுமையான உணவுக்கட்டுப்பாடுகள் அற்ற எளிய குருவழிக் கற்றல் முறை போன்றவை காட்டப்படுகின்றன.  தாயின் எழிலை சக்தியின் வடிவமாகக் கண்டு வணங்குதல் போன்ற நுண்ணிய குறிப்புகள்.  பல வடிவங்கள் காட்டும் பராசக்தி போல சிறுகதை பல கோணங்களில் பெருகிப் பெரும் ஆறாகிறது.

நன்றிகளுடன்

நாரா.சிதம்பரம்.

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

யாதேவி கதையில் ஒரு பகுதி,

“அப்படியென்றால் காமம் கொண்டிருக்கிறாய். அடக்கிக்கொண்டிருக்கிறாய்”

“இல்லை”

“நான் உன் உடலை தொட்டுப்பார்ப்பேன்”

“தேவையில்லை, என் கண்களை மட்டும் பார்த்தால்போதும்”

அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்

“நான் மருத்துவன்”

இதில்,

“என் கண்களை மட்டும் பார்த்தால்போதும்” … “அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். ” 

இந்தவரிதான்  இந்தக் கதையில் என்னை ஆட்கொண்ட பகுதி.

அவன் எப்படிப் பார்த்தான் என ஜெயமோகன்  வெளிப்படையாக எழுதவில்லை.  இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி,  அவன் பார்த்திருக்கக் கூடிய  பார்வையை மனதுக்குள்  கற்பனை செய்து பார்க்கிறேன்.

அன்பான… கனிவான… தாய் பார்ப்பது போன்ற ஒரு பார்வை.   இல்லை… தாயினும் சாலப் பரிந்த ஒரு பார்வை.  ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்குகிற ஒரு பார்வை.

அந்தப் பார்வை அவளது மனதை நெகிழ்த்திவிடுகிறது.  வியக்கிறாள்.

அவன் இவ்வாறு இருக்க இயல்வதற்குக் காரணம் அவன் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யை விரதம் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், அந்த விரதங்கள் மட்டும் இதைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை.

பெண்களை அவன் பராசக்தியாகக் காண்பது காரணம் என்று தோன்றலாம்.

ஆனால்,  அப் பெண்ணின் இடத்தில்,  ஒரு ஆண் இருந்திருந்தால் கூட,  அந்த ஆணு க்கு இவன் மேல் பகை இருந்தால் கூட, ஸ்ரீதரனின் பார்வை  மாறியிருக்காது என்றுதான் நினைக்கத்  தோன்றுகிறது.

இந்த விரதங்கள்,  பராசக்தி, இவையெல்லாம்  அவனது இலக்குக்குப் பாதை வகுத்துக்  கொடுத்திருக்கலாம்.

அவற்றுக்கெல்லாம் மேலான,  அவனது  ஆழமான மானுட அன்பு … அந்த  தரிசனத்தைத் தான் ஆசிரியர் சொல்லாமல் நமக்கு வழங்குகிறார்.   இப்படித்தான் இதை நான் உள்வாங்கிக்  கொள்கிறேன்.

வி. நாராயணசாமி

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு

 

சிறுகதை  கடவுள் போலத்தான் போலிருக்கிறது.. அவரவர் தமதமதறி வறிவகை வகை அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்

 

என் வரையில் கதை கிழக்கும் மேற்கும்  சந்திக்கும் புள்ளி. பொருளை துய்த்து துய்த்து  வெறுப்பின் வெறுமைக்கு செல்லுதல் மேற்கின் இயல்பு.அதிக ஆண்களை துய்த்ததினால் ஆண்கள் என்றாலே எல்லா சீறுகிறாள் .கெட்ட வார்த்தையில் விறைப்பான தசை என்று திட்டுகிறாள் .எல்லோரும் கேட்க முடியாத ஸ்ரீயின் காலடி ஓசையை பயத்தின் உச்சத்தில் எல்லா கேட்கிறாள் .ஆ னால் அவள் சிறுமியை இருந்தபோது  அவள் பெண்மை தேடிய ஒன்றை தேடி கொண்டுதான் இருக்கிறாள்

 

அவளின் பெண்மை தேடும் ஆண்மை எது ?பெண்மையை நிறைவு செய்யும் ஆண்மை எது ?

 

சாக்தம்  தான்  அனைத்து பொருட்களோடும் சரியான உறவை மேற்கொள்ளும் வழி சொல்கிறதோ .அவனால் ஒரே கணத்தில் அவளின் விலை மதிக்க முடியாத சிறுமி மனநிலையை தர முடிகிறது . மீண்டும் அவள் தேடலை துவங்கும் வாய்ப்பை தருகிறான். இம்முறை அவளால் உணவு இனியது காமம் இனியது  உலகம் இனியது என்ற புரிதலை அடைய முடியலாம்

 

பேராசையும் தவறு.ஆசையின்மையும் ஆணவம்.இயல்பான நிலையே பேரின்பம்  – சாக்தம் சாக்தம்  பற்றிய என் புரிதல்

 

அன்புடன் சரவணகுமார்

கோவை

 

முந்தைய கட்டுரைவரையறுத்து மீறிச்செல்லுதல்
அடுத்த கட்டுரைகணக்கு