யா தேவி! – கடிதங்கள்-14

 

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘யா தேவி’ பல்வேறு வாசிப்பு சாத்தியங்களைக் கொண்ட கதை.

இக்கதையில் வெறும் உரையாடல் மூலமாகவே ‘எல்லா’வின் பாத்திரம் மிக அழகாக unfold ஆகிறது. ஸ்ரீதரனைப் பற்றி வரும் வர்ணனைகள் (அவனின் காலடியோசை எவருக்கும் கேட்காது போன்றவை கூட) கதையைப் புரிந்து கொள்வதில் முக்கியமான pointers. வார்த்தைகள் துளி கூட மிகாத lean-ஆன படைப்பு. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு purpose-க்காக போடப்பட்டுள்ளது.

அவளைப் போன்றே இருக்கும் பொம்மைகள்-பெண் போன்றே இருப்பினும் ஆன்மா இல்லாதவை. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டு, ஒரே போன்ற செய்கைகளைச் செய்து கொண்டிருப்பவை. இந்த உருவகம் மிக முக்கியமான ஒன்று. இத்தொழிலுக்கு இவை போதும் என்று உணர்ந்து கொண்டு பொம்மைகளை வடிவமைத்து அவள் பொருளாதார விடுதலை அடைகிறாள். அதன்பின்னரே தன் ஆன்ம விடுதலைக்காக பல்வேறு விதங்களில் முயல்கிறாள். முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் அவள் உழிச்சல் செய்து கொள்ள வருகிறாள்.

அனைத்துப் பொருட்களிலும் இருக்கும் ஆற்றலை பெண்ணாக, தேவியாக ஸ்ரீதரன் பாவிப்பதாக அவள் அறியும் போது, அவளுக்குள் ஒன்று ஆசுவாசம் கொள்கிறது. ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் வந்ததாக நம்பும் மதத்தைச் சேர்ந்தவள் அவள். அவளை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவள் பெண்ணே, தேவியே என்ற சாக்த தரிசனம் மீட்கிறது. தூக்கமின்றி இருந்தவள், தூங்கச் செல்கிறாள். அவள் மீண்டு விட்டதாகத் தான் கதை காட்டுகிறது.

அவளுடைய பெயர் ’elle’ (French meaning ’she’) என்று இருப்பதும், அவளுடைய patron saint ‘Sebastian’ என்பதும், ஸ்ரீதரனின் பெயர் ’பெண்ணைத் தாங்குபவன்’ என்றிருப்பதும், அவன் தொடுகை பெண்ணின் தொடுகையைப் போல் இருப்பதாக அவள் உணர்வதும், ஆண்கள் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருப்பதும், போன்ற புள்ளிகள் கதையில் அவளின் மற்றொரு dimension-ஐ வெளிக் கொணர்கிறது.

இக்கதையை முதன்முறை வாசித்த போது, பெண்ணை அன்னையாகக் காணும் வழமையான கதை என்றே எண்ணிக் கடந்தேன். இந்தக் கதைக்கு வந்த முதல் கடிதம் என்னை மறுமுறை வாசிக்கத் தூண்டியது.

நன்றி,

கல்பனா ஜெயகாந்த்.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

அன்று, மனம் அமைதி அற்று கிடந்தது. என் அன்னையின் இழப்பிற்கு பின், என் மனதை, என் எண்ணங்களை கொட்டி தீர்ப்பது என் கணவரிடமே. பெண் தோழிகள் மிக நெருக்கமாக எவரும் இலர். பெண்களிடம் பகிர்தல் இல்லாதது தான் என் மன சிக்கல்களுக்கு காரணம் என குழம்பி இருந்தேன். அப்போது என் கணவர் “யாதேவி ” சிறுகதையின் லிங்க் அனுப்பி இருந்தார். நானும் படித்தேன்.

ஒவ்வொரு ஆணிடமும் உள்ள பெண் தன்மை மிக அழகானது. ஒவ்வொரு பெண்ணிடமும் உள்ள ஆண்தன்மை மிக வலிமையானது என்ற கருத்து உள்ள பெண் நான். இதையே அந்த சிறுகதை எனக்கு மீண்டும் நினைவூட்டியது.

 

குழம்பாமல் மறுபடியும் என் கணவரிடம் உரையாட தூண்டியது.

ஒரு சிறுகதையின் அழகு என்பதே, அது படிபவரின் நிலைக்கு ஏற்ப கருத்துகளை, மன தெளிவை தரும் என்று நினைப்பேன். இந்த நிமிடம் எனக்கு மிக ஆழமான கருத்து புரியாமல் போனாலும், மறுமுறை வாசித்து பார்த்தால் இன்னும் புரிய வாய்ப்பு அதிகம் என்றே நினைக்கிறேன்.

 

இன்று மட்டும் அல்ல, பல சமயங்களில் என் மன குழப்பங்களுக்கு உங்களுடைய எழுத்து துணை நின்றது.

 

அன்புடன்,

நிஹிதா பிரகாஷ்.

யாதேவி கடிதங்கள் 14

யாதேவி கடிதங்கள் 13

யாதேவி கடிதங்கள் 12

யாதேவி கடிதங்கள் 11

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி- கடிதங்கள்-9

யாதேவி -கடிதங்கள்-8

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி – கடிதங்கள்-5

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்1

 

முந்தைய கட்டுரைஇறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்
அடுத்த கட்டுரைஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்